Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Sunday, 18 January 2015

காலத்தினாற் செய்த உதவி

வாடகைக்கு நாங்கள் புதிதாக வந்த வீட்டில்   அறையே கட்டும் அளவுக்கு ஒரு வெராண்டா உண்டு. படிப்பதும்தலை வாருவதும், அரட்டை அடிப்பதும், தெருவை வேடிக்கை பார்ப்பதும் அங்கு நடக்கும் அன்றாட வேலைகள்.

தினம் தோறும் காலையில் கறுத்த நிறத்தில் ஒரு சாரீரமான மனிதர் சோலா தொப்பி போட்டுக்கொண்டு சைக்கிளில் பயணம் செய்வதைப்பார்ப்பது  தெருவில் உள்ள அனைவருக்கும் ஒரு பொழுது போக்கு . ‘சர்க்கஸ் யானைஎன்று கலாட்டா பண்ணும் பிழைப்பில்லாத பொடிசுகளும் அதில் சேர்த்தி. அந்த வாகனத்தையும்  வாகன ஓட்டியையும்இவர்களால் இது எப்படி முடிகிறது' என அதிசயமாக  பார்க்கும் ஜாதியில் நான் சேர்த்தி!

எங்களுக்கு சென்னை புதிது. எதெது எங்கெங்கே இருக்கிறது என்ற   தேடல் பருவத்தில்  இருந்தோம் . அன்று காய்கறி மார்கெட்டிற்கு செல்வதாக முடிவு. நடந்து செல்லக்கூடிய தூரம்தான். காய்கறி விற்கும் சூப்பர் மார்க்கெட்டெல்லாம் அப்போது இல்லை. மார்க்கெட்டில் ஒரு பழக்கடைக்கு முன்னால் பெரிய கூட்டம். சகாயமான விலையில் விற்பனை நடக்கிறதோ? உள்ளே எட்டிப்பார்க்கிறேன். கூட்டத்தின் நடுவே  நம் சைக்கிள் வாகன ஓட்டி பரிதாமாக நின்று கொண்டிருந்தார். பழக்கடைக்காரன் கன்னாபின்னாவென்று அவரை சத்தம் போட்டுக்கொண்டிருந்தான். "இருக்கிற பழத்துல பொறுக்கு பழமா பொறுக்கி எடுக்கில கொறச்சல் ஒண்ணும் இல்ல, மொத போணி........ பைசாவ குடுய்யாண்ணா  பர்ச எடுத்துகிட்டு வரல்லியாம். பழத்தில கய வக்கிறத்துக்கு முன்னால இந்த அறிவு வாணாம் இத்தே பெரிய மனுசனுக்கு? போணியே இப்டிண்ணா வியாபாரம் இண்ணைக்கி அம்பேல்தான்."  எடுத்த பழத்தை திரும்ப வைப்பதற்கும் வம்பு பண்ணிக்கொண்டிருந்தான்அவன். சென்னை பாஷையில் அவன் வசவுகள் சூடேறிக் கொண்டே  இருந்தது. நான் அவர் பக்கத்தில் சென்றேன் " அங்கிள் நான் பைசா கொடுக்கட்டுமா" என்றேன். " உன்னை முன்னே பின்னே எனக்குத்தெரியாது, அந்த உதவியெல்லாம் வேண்டாம்." என்றார் அவர்."அங்கிள் உங்களுக்கு என்னைத்தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களை நம் தெருவில் பார்த்திருக்கிறேன். நானும் அங்கேதான் குடி வந்திருக்கிறேன். நான் உங்களுக்கு இனாமாக கொடுக்கவில்லை வீட்டில் வாங்கிக்கொள்கிறேன் நான் உங்கள் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளிதான் நாங்கள் இருக்கிறோம்.” என்றேன்

நினைக்கவே வலி தரும் இந்த ஒரு சந்தர்ப்பம் எங்களுக்கிடையே ஒரு பெரும் உறவை ஏற்படுத்தும் வலிமை கொண்டது என்ற நினைப்பே  யார் வாழ்விலும்  அற்புதங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்ற உண்மையை நிதர்சனமாக்கி  நின்றது. டாக்டர் B.W.X. பொன்னையா தோட்டக்கலையில் ஒரு எமிரட்டஸ் விஞ்ஞானி என்பதை பின்னர் தெரிந்து கொண்டோம்.

அன்றொருநாள் இரவு .... நல்ல மழை...... எப்போதும் போல கரண்ட் கட்டாகிப்போனது. இன்வெர்ட்டரோ  இல்லை…. குறைந்த பட்சம் எமர்ஜென்சி லைட்டோ கண்டறியா நாட்கள் அவை.     பிள்ளைகள் புத்தகங்களை மூடிவிட்டால் அப்பா அம்மா எரிச்சல் படாமல் மெழுகுவத்தியை சுற்றி உட்கார்ந்து கோண்டு கதை பேசும் அற்புதமான நேரம்!!   இந்த சின்ன சுகத்தில் கேட் தட்டப்படும் சத்தம் யார் காதிலும் விழாததில் தப்பொன்றும் இல்லை. பாம்பு காது கொண்ட என் கணவர் மட்டும் யாரோ கேட்டைத்தட்டுகிறார்கள் என்று மெழுகுவத்தியை எடுத்துக்கொண்டு வெளியே போனார். அங்கே குடை ஒரு கையிலும் ஒரு பூக்கொத்து இன்னொரு கையிலுமாக அங்கிள் நின்று கொண்டிருக்கிறார்கள். குடையெல்லாம் மீறி அவர் சஃபாரி சூட் தொப்பலாக........
"என்னா அங்கிள் மழையில இப்டி நனைஞ்சுகிட்டு........ இந்த இருட்டுல
அண்ணைக்கி நான் தெருவில நிண்ணப்ப நீ ஓடி வருலியாம்மாஎன்றவர்அம்மா இந்த ஜெருசலேம் லில்லி மழை நேரத்திலதான் பூப்பாள்...... வாசனையால ஆள கிறங்க வச்சுடுவாள்........ நீங்களும் இத அனுபவிக்கணுமில்ல.." மகிழ்ச்சியில்பூரித்துதான் போனார் அவர்! ஹால் முழுவதும் வாசனை....... எங்களுக்கு என்ன செய்வது ……எப்படி இவருக்கு ...........இவர் மகிழ்ச்சிக்கு..... நன்றி சொல்வதென்றே தெரியவில்லை."அங்கிள் இந்த பூவோடு உங்களை ஒரு போட்டோ பிடிக்கிறேனே" என்றார் இவர். " இல்லப்பா என் அழகான பேத்தியோடதான் இந்த அழகான பூக்களை நீ படம் புடிக்கணும் " என்றார் அவர் எங்கள் பெண் அனுவை சுட்டிக்காட்டியபடியே!!

"காலத்தினால் செய்த உதவி ஞாலத்தின் மாணப்பெரிதுஎன சொல்லாமற் சொல்லுகிறார் அந்த நனைந்துபோன பெரிய மனிதர்!


இந்த அருமையான மனிதரைப்பற்றி, இன்னொரு கட்டத்தில் இன்னும் சொல்கிறேன்.

No comments :

Post a Comment