“ஹோட்டல்ல தங்கியிருக்கப்ப கூட இவங்க வாக்கிங்க மறக்குலபாரு"
போகி றபோக்குல நடைப்பிரியர்கள் கூட்டம் சொல்லிக்கொண்டே எங்களைக் கடந்து சென்றது சந்தோஷமாய் இருந்தது..
விசாலமான ஹோட்டல்........
அதற்கேற்றமாதிரி வெளியே விசாலமான ரோடு. ரேஸ் கோர்சாய் இருந்து அண்ணா ஸ்டேடியமாய் மாறிவிட்ட அரங்கம் ஒரு பக்கம் மற்றொரு பக்கம் அரசு அலுவலகங்கள், மரங்கள்நிறை பெரிய அலுவலர்களின் பங்களாக்கள்.
இன்னும் அசோகர் கட்டளையை மீறாமல் சாலையின் இரண்டு பக்கங்களும் மரங்கள் நட்டிருந்தார்கள்!!
இதைவிட என்ன வேண்டும் நடைப் பிரியர்களுக்கு?!
"இந்த பங்களாவில் குடியிருந்தால் ஜோரா இருக்குமில்ல" என் பகிர்வு " அப்பப்பா..... எவ்வளவு கொள்ள மரம்.........!!
" சரிம்மா...... ரிட்டயர் ஆன கையோட ஃப்ளாட்டு நெருக்கடியையும் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்க" யதார்த்தமாய் அவர் பதில்
நடந்தவர்கள் முக்கால்வாசிப்பேர் தலையை மூடி இருந்தார்கள். குறைந்த பட்சம் காதடைப்பானாவது போட்டிருந்தார்கள். ஓட்டமும் நடையுமாகப்போகிற வருங்கால விளையாட்டு வீரர்கள் இதில் சேர்த்தியில்லை. “ம்ம்ம்... இது என்னா பெரிய பனி...... சென்னையைவிடவா?” என மதர்ப்பாக நாங்களும் அதில் சேர்த்தியில்லை.
புர்க்கா போட்ட பெண்மணிகளும் ரோட்டில் போட்டி போட்டு நடந்தார்கள்.
" வணக்கம் நாயகத்தம்மா எப்டி இருக்க?" ஒரு முஸ்லிம் முதியவர் தஞ்சாவூர் புர்க்கா போட்ட வயசான அம்மாவுக்கு காலை வணக்கம் தெரிவித்தார். பக்கத்தில் சென்ற எனக்கும் கூட ஒரு வணக்கம் கிடைத்தது!!
இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஒரு பொது நியதி உண்டு. தலை நிமிர்ந்து இருக்கவேண்டும்,ஒரு நிமிடத்திற்கு 100 அடிகள் எடுத்து வைக்க வேண்டும், கால் எடுத்து வைக்கும் வேகத்திற்கு இரு கைகளும் வீசப்பட வேண்டும் இன்ன பல
ஆனால் எல்லா நியதிகளுக்கும் மேற்பட்ட செயல் உலகத்தில் நடந்து கொண்டுதானே இருக்கிறது!!
இடது கையையும் இடது காதையும் ஒருக்களித்துக் கொண்டு தாங்களாகவே சிரித்துப்பேசி செல்பவர் அங்கு ...........நிறையவே!
பொதுவாக தமிழர் நமக்கு கதை கேட்பதும் பாட்டுகேட்பதும் பிடித்தமான காரியங்கள். "நாங்கள் அசல் தமிழர்களே" என வாக்மேனில் “சுப்ரபாதமோ, செந்தமிழ் தேன் மொழியாளோ" கேட்டு….. சுகமடைந்தவரும் அங்கு.....நிறையவே!
சின்ன அலுவலகத்தின் போர்டு கண்ணில் படுகிறது. நிமிட சிரிப்பை எங்களால் அடக்கத்தான் முடியவில்லை. "டெல்லி வரி" என்று உரக்கச்சொன்னது அந்த போர்டு!!
பழைய காலத்து பட்டயதார்கள் போல டில்லிக்கு திருச்சியிலிருந்து விசேஷ வரி வசூலிப்பவர்களோ இவர்கள்?!!
காத்து சிலுசிலுப்பில் கையைவீசிக்கொண்டு இவரைவிட ஒரு தப்படி முன்னே சென்ற என்கால்கள் திடீரெனெ பிடறின;
வீசிய என்கைகள் இவர் கையை இறுக்கின! பின்னால் ஒளிந்து போனது என்வீர நடை! பழைய காலத்து நாய்க்கடி தழும்பு சிலிர்த்து உயிர் பெற்றது!....... 15 க்குக் குரையாத நாய்கள் ஒரு இடத்தில்... ஒரே குழுவாய்...........
"இது என்ன திடீர் பாசம்......கை இறுக்கல் பாசம்....?" என அதிசயித்த கணவர் நாய்களைப்பார்த்தவுடன் "ஓ இதுதான் சங்கதியா" என சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
"முன்னால் முப்பது பேர் போராங்கள்ள, அவங்கெள்ளாம் முட்டாள்களா? அதுக பாட்டுக்கு செவனேண்ணு தியானத்துல இருக்குக; ஒங்கூட நடக்கிறத விட நல்ல வேல செஞ்சுகிட்டு இருக்குக .... நீ பாட்டுக்கு சைட்ல பாக்காம நேரா நட....
தர்க்கம் எதுவுமில்லாமல் அந்த ஒரு முறை அந்த உத்தரவைக் கடைப்பிடித்தேன்!
முக்கில் திரும்புகிறோம்..........கைலி கட்டிக்கொண்டு இருவர் தலை நிமிராமல்பேசிக்கொண்டுசிறு நடையாய் செல்கிறார்கள்
"ஏம்ப்பா இடிச்சிகிட்டு உடம்புல ஒரு காயம் பட்டுடுச்சுண்ணா அத போட்டு குத்திக் குத்தி ரணமாக்குவியா இல்ல மருந்து போட்டு செத்த நேரம் ஆறுறதுக்கு வுடுவியா......? அதே மாரிதான் நம்ம மனசும். பிரச்சனை வந்துருக்கு.....அத ஊதி ஊதி பெரிசாக்கிறாதே.......
அந்த நெனப்ப கொஞ்சம் தள்ளிவுடப்பாரு, கோயில் கொளங்களுக்குப்போ.. மனச அமைதிப்படுத்துற வழியப்பாரு... நான் கெளம்புறேன் கட தொறக்க நேரமாச்சு.... இனிமே நாள மக்யா நாளுதான் இங்கிட்டு வருவேன்….. ரெண்டு முகூர்த்தம்……. ஒண்ணு கரிய மாணிக்கம்…….. இன்னொண்ணு வெராலிமல”
வேதாந்தம் புஸ்தகத்தில் படிப்பது ஒருபுறம், ஆனால் வாழ்க்கையே வேதாந்தமாக....... இது எல்லோராலும் முடியும் ... அருமையாக சொல்லிப்போய்விட்டார் அந்த கடைக்காரர்!
நடக்கையிலேயே தெரிஞ்ச செடியாக இருக்கிறதே என்று உற்றுப்பார்க்கிறேன்.
ஆகா துண்ணுத்திப்பச்சிலை.......... குனிந்து அதன் சின்னக்கதிர்களை உருவி எடுக்கிறேன். அவருக்கும் பங்கு கொடுக்கிறேன். கையில் வைத்து நிமிண்டுகிறோம்........ வாசனை.... சுகமாக முகத்தில் அப்பிக்கொள்கிறோம்.........
தொப்பிகள் மஃப்ளர்கள் போதாதென்று ஹெல்மட் அணிந்த நடைப்பிரியர் எதிர்த்தாற் போல!
பனிக்கு போட்டிருக்கிறாரா இல்லை ஹெல்மட்டின் பத்திரத்திற்குப் போட்டிருக்கிறாரா.....!?
மக்கள் தலையை மூடிக்கொண்டு நடந்ததன் தாத்பர்யம் சென்னைக்கு நாங்கள் அரிய பரிசுகளாக சளி, இருமல், சின்ன காய்ச்சலோடு திரும்பிய போதுதான் புலனாயிற்று!!
" திருச்சி கெந்தக பூமி, இந்த ஊர் பனி பொல்லாதது, என்னா வேல பண்ணினீக நீங்க? ஒடம்ப பாத்துகுங்க" திருச்சி செல்போன் ஒன்று உரிமையோடு எங்களுக்கு அறிவுறுத்தியது!
No comments :
Post a Comment