அது ஒரு விநோதமான நட்பு. இதை கவிஞர் பிசிராந்தையார்
மன்னன் கோப்பெருஞ்சோழனின் காணா நட்பு போல என்னலாமோ? ச்சீ......... பெரியவர்களையெல்லாம்
அநாவசியமாக இழுக்கக்கூடாது! ஒரு தலை நட்போ? அப்படியும் தெரியவில்லை.ஆனால் இந்த நட்பு
இதற்கெல்லாம் அப்பாற்பட்டு வினோதமான ஒன்றாய்த்தான் தோன்றுகிறது. 1999ல் சிங்கப்பூர் நாங்கள் இருவரும் சிங்கப்பூர் எம் டி எல் லில் நிலைகொண்டபோது ஆபீஸ் நண்பர் ஜாக்கி படித்துப்பாருங்கள்
உங்களுக்குப்பிடிக்கும் எனக் கூறி அந்நாட்டு பிரதமர் லீ எழுதிய “தெ சிங்கப்பூர் ஸ்டோரி” என்ற புத்தகத்தை பரிசாக
அளித்தார். நானோ ஒரு கதை விரும்பி. சுய சரித்திரங்கள் மேல் அதுவும் ஒரு நாட்டின் சுயசரித்திரத்தின்
மேல் அதுவும் அந்நாட்டு பிரதமராலேயே எழுதப்பட்ட ஒன்றில் எனக்கு நாட்டமில்லை. இருந்தாலும்
அன்பளிப்பின் மரியாதைக்காக புத்தகத்தைத் திறந்தேன். பேய் பிடி எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
லீ குவான்யூ எழுதிய அந்த சிங்கப்பூர் கதை முதல் பக்கம் தொடங்கி கடைசி வரி முடிய என்னை
சிக்கு சிக்கு எனப் பிடித்தாட்கொண்டது உண்மையிலும் உண்மை!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக ( இந்தியாவில் தமிழ்
நாடு போல்) சிங்கப்பூர் சேர்ந்து சில வருடங்களே ஆகியிருந்தன. ஆனால் மலேசிய பிரதமர்
கணக்குப்படி சிங்கப்பூர் ஒரு வேண்டாத விருந்தாளியாகவேதான் இருந்தது. ஒரு நல்ல நாளில்
மலேசியா நீ தனியாகவே போய்விடு என அதை வெட்டி எறிந்துவிட்டது 1965ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்
9ம் நாள் சிங்கப்பூர் ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.
மலேசியா இயற்கை வளங்களும் கனிமங்களும் கொண்ட ஒரு நிலப்பரப்பு. இவ்வளவு நாட்களாக சிங்கப்பூர் மலேசியாவின் வர்த்தக வியாபார
முனையமாகத்தான் செயல் பட்டு வந்தது. தனக்கென்று சொல்லிக்கொள்ளும் வகையில் அந்த நாட்டில்
வளம் ஒன்றும் இல்லை.இதை வைத்துக்கொண்டு என்னால் என்ன செய்ய இயலும் என மனம் குன்றி நின்றார்
அந்நாட்டுப் பிரதமர் லீ. சுதந்திர தினத்தன்று நடைபெற்ற பத்திரிக்கையாளரின் நேரடிக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த அவர் உணர்வுகளை
அடக்க முடியாமால் 20 நிமிடங்களுக்கு நிலை குலைந்துதான்
போனார். புத்தகத்தின் முதல் அதிகாரம் இப்படித்தான் மனதைத்தொட்டுத் தொடங்கியது. மற்ற
அதிகாரங்களும் முதற்றுக்கு நாங்கள் ‘இளைப்பில்லை காண்’ என மனதைத் தடவிய வண்ணமே பின்
தொடர்ந்தன!
ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த சிறிய மூன்றாந்தர
நாட்டை 65% சீனர்களையும் 18% சதம் இந்தியர்களையும் 17% மலேயர்கள் மற்றும் இந்தோனேசியா
போன்ற அண்டை நாட்டரையும் மக்களாகக் கொண்ட இந்த
நாட்டைக் கட்டுக்கோப்பாக ஒன்றிணைத்து தன்னுடைய தொலை நோக்காலும், அரசியல் சாணக்கியத்தாலும்
உலகின் முதன்மை நாடுகளில் ஒன்றாக ஆக்கிக் காட்டிய
இந்த நிபுணனுக்கு நான் என்ன மரியாதை செய்யக்கூடும் என்று எனக்குள் பெரும் யோசனை.
தெரிந்தவர் வழியே அவரைப்போய் பார்த்து நன்றி கூறலாமா? அது ஒரு நடிகரை நான் சந்தித்து
நீங்கள் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று கூறுவது போலத்தான் இருக்கும்.
நான் சொல்ல ஆசைப்படும் செறிவோ இல்லை நிறைவோ அதில் இருக்காது.
சின்ன சின்ன விஷயங்களில் கூட தீர்க்கப்பார்வை கொண்டவர்
லீ. அவர் சொல்கிறார் கேளுங்கள் “ சுதந்திரம் பெற்ற பின் சிங்கப்பூரில் ஏதாவது மற்றவர்கள்
பார்வையை ஈர்க்குமாறு என்ன செய்யலாம் என்ற யோசனை எனக்குள். இந்த நாட்டை பச்சை மயமாக்கினால் ஆக்கினால்
மூன்றாந்தரத்தில் இருக்கும் என் நாட்டை இந்த மாற்றங்கள் வித்தியாசப்படுத்திகாட்டும்.
இதுதான் நாட்டு முன்னேற்றத்தின் முதற்படி. அதிக செலவில்லாமல் நாட்டிற்கு வளமை சேர்க்கும்
வழி ”
மரங்கள் நடுவதை வாழ்வின் முக்கிய அங்கமாகக் கொண்ட
லீயை செல்லமாக ‘சிங்கப்பூரின் முதல் தோட்டக்காரர்’ என்ற பட்டப் பெயர் கொடுத்து மகிழ்ந்தனர்
அந்நாட்டு மக்கள்!
இவருடைய மரங்களின் வளமையை முழுமையாக அனுபவித்தவர்கள்
நாங்கள்! கணவருடைய வேலை 10 நாட்கள் சென்னையிலும் 20 நாட்கள் சிங்கப்பூரிலும் என இருந்ததால்
ஏர்போர்ட்டிலிருந்து ஆரஞ்சு குரோவ் ரோடிலிருக்கும்
வீட்டிற்குச் செல்ல டாக்சியில் ஏறி உட்கார்ந்தோமானால் எங்கள் டாக்சி ரதமாக மாறிவிடும்.
ராஜாவும் ராணியுமாக அமர்ந்திருக்கும் எங்களுக்கு கட்டியம் கூறி வரவேற்க இருபுறமும்
காற்றிலே கலந்து சின்ன சுகந்தத்தை அள்ளித்தரும் மரங்களும் செடிகளும்கொடிகளும்! இந்த
பெரும் வரவேற்பை எங்கள் மலர்ந்த முகங்கள் எம்பங்கு பரிசாக அக்கட்டியக்காரர்களுக்கு
அள்ளிக்கொடுத்துவிடும்!
திரும்பவும் இந்த லீ க்கு நான் என்னத்தைக்கொடுத்து
மரியாதை செய்ய முடியும் என்ற அலை பாய்ந்த மனதிற்குள் ஒரு அருமையான கரு உருக் கொண்டது.
“தெ சிங்கப்பூர் ஸ்டோரியை” தமிழாக்கம் பண்ணுவோமா? உடனடியாக ஆரம்பித்த என் பேனாவை என்னாலும்
நிறுத்த முடியவில்லை. லீயின் அடுத்த புத்தகம் “மூன்றாந்தர நாட்டிலிருந்து முதன்மை நாடாக”
வெளியே வந்ததும் வாங்கிய முதல் கூட்டத்தினுள் நானும் ஒருத்தி! அதற்கும் அதே எழில்மிகு
தமிழ்ப் பரிசுதான் காத்து நின்றது! ஆமாம், இதையெல்லாம் புத்தமாக வெளியிடப்போகிறீர்களா?
பக்கம் பக்கமாக ‘ராம ஜெயம்’ எழுதுபவர் அதை வெளியிடப்போகிறாரா
என்ன? எனக்கும் அந்த ஆதி அந்தமில்லாதவனுக்கும் உள்ள ஒரு பெருந் தொடர்பின் சிறு வெளிப்பாடே அது என அவர் உரைப்பார்.
“சேசுவே இரட்சியும் மரியே வாழ்க” என எழுதுபவர்களின் நோக்கும் அதுதானே?
அது போலவே அரியதொரு நட்புக்கு சிறு அடையாளமாகவே
இந்த தமிழாக்கத்தை நான் கருதுகிறேன்.
2015 மார்ச் 23ம் தேதி இறந்து போன லீகுவான் யூவிற்கு
மலர் வளையங்கள் குவிந்து கொண்டிருக்கும். மக்கள் முகப்புத்தகம் மற்றும் பல வகைத் தொடர்புகள்
வழியே இம்மாமனிதனுக்கு தங்கள் அன்பை, நன்றியை தெரியப்படுத்திகொண்டே இருப்பார்கள். பல்வேறு
நாட்டுத்தலைவர்கள் அருமைத் தலைவருக்கு மரியாதை செய்ய வந்து கொண்டிருப்பர் அவைகளோடு
கூட எனது எழுத்தாணி மலர்கள் என் மானசீக நண்பனுக்கு சமர்ப்பணம் ஆகட்டும்!