ஆரம்பிக்கும்போதே ஒரு கும்மாங்குத்து போட்டாரே பாருங்கள்,
கத்தோலிக்கர் அதிர்ந்துதான் போய்விட்டனர். மனுஷன் 2013 மார்ச் 13 போப்பாக பதவி ஏற்கிறார்.
28 ந்தேதி பெரிய வியாழன் கால் கழுவும் திருநாள். வத்திகானின் ஆடம்பரமான மாளிகையில்
வெள்ளை வெளேரென்று உடுப்பு போட்டுக்கொண்டு சம்மனசுக்களை ஒக்க வரிசையில் உட்கார்ந்திருக்கும்
12 பல நாட்டு குருமார்களுக்கு, கலை நுணுக்கத்தோடு கூடிய தங்க மூக்கு சொம்பிலிருந்து
தண்ணீர் ஊற்றி டர்க்கித்துவாலையால் கால் கழுவித்துடைக்கும் பொறுப்பு அவரது! ஆனால் இந்த
மனுஷனோ “இருங்கப்பா இதவிட முக்கியமான ஒரு இடத்துக்கு நான் கால் கழுவப்போகணும்”ணு துண்ட ஒதறித் தோளுள போட்டுகிட்டு இளைஞர்கள் சிறைக்கில்ல
கெளம்பிட்டாரு! அங்க பொம்பளைக ஆம்பளைகண்ணு அவுரு பாக்குல.சகட்டுமேனிக்கு எல்லார் காலையும்
கழுவி முத்தம் குடுத்தாரு.
“நான் மக்களை ஆளுவதற்கு வரல,அவுங்களுக்கு தொண்டு
செய்யறதுக்காக மட்டுமே இவ்வளவோ பெரிய பதவியில வத்திகான்ல உக்காந்திருக்கேன்.” என்று
சொல்லாமல் சொல்லிய எங்கள் அருமைப் பாப்பானவர் ஃபிரான்சீஸ் பதவிக்கு பெருமை சேர்க்கும்
ஒரு சீராளன்!
போப் ஃபிரான்சீஸ்
சவாலான இந்த காரியத்தை செய்வதற்கு பல வருடங்கள் முன்னால் ஒரு குரு இதே வேதாந்தத்தோடு
இதே காரியத்தை செய்தபோது,
“பொம்பளைங்களுக்கு ஒரு சாமியார் கால் கழுவுவதா?”
ஊரே அல்லோகலப்பட்டது! காரித்துப்பியவர் மக்கள் மட்டுமல்ல சில பல குரு மரபினரும் இதில்
கூட்டு! மேலிடம் அவரைக் கூப்பிட்டுக் கண்டித்தது. முறையாக அவருக்கு வர வேண்டிய பெரிய
பதவி அனந்த காலத்திற்கும் தள்ளிப்போடப்பட்டது.
இந்த அருமை மனிதர் என் மாமா மெத்தப் படித்தவர்.
ஆனாலும் போப் ஃபிரான்சீஸ் போலவே
“நர சேவை நாராயணன் சேவை” என்பதில் உறுதியானவர்.” “ நீ உன்னை அன்பு செய்வது போல மற்றவரையும் அன்பு
செய்”! இறைமகனின் ஒற்றைக் கட்டளையின் அடிமை!
சின்னப்பையனாக கிராமத்தில் திரியும் போதே தபசு காலத்தில் ஒவ்வொரு வீட்டு பெரியவர்களும் ஒவ்வொரு வியாழனும்
முறை போட்டு கொண்டாடும் கால் கழுவும் திருநாளை இவன் பார்த்திருக்கின்றான்..
இந்தக் கால் கழுவும் சடங்கு குருக்களுக்கே உரித்தானது
இது எப்படி உங்கள் ஊரில் குடும்ப மக்களுடைய சடங்காயிற்று? உங்கள் மனசுக்குள் கேள்வி
ஒன்று எழலாம். முந்தைய முந்தைய சந்ததியில் சாமியார் இல்லாத ஒரு காடாம்பரத்தில் இவர்கள்
வாழ்ந்திருக்கலாம். சாமியார் இந்த தவசு காலத்துல சிலுவப்பாதைய தவுத்து வேற என்ன பண்ணச்சொல்லாம்ணு
நெனச்சு பாத்து ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு வாரம் கால் கழுவுங்கண்ணு சொல்லியிருக்கலாம்.
கோயில்கள் பக்கத்தில் வந்தப்பறமும் இதை செய்யாவிட்டால் சாமி குத்தம் எதுவும் ஆயிடுமோ
என்ற அடுத்த தலை முறையார். அதற்குப்பின்னால்
“இது எங்களுடைய மூதாதையர் பழக்கம்” எனப் பெருமையாக பின் வந்த சந்ததி. இப்படித்தான்
இருக்கலாம் என்பது என் யூகம்.
இந்த கிராமத்தின் கால் கழுவும் திரு நாளில் கால்கழுவப்படுவது
அந்த தெருவில் இருக்கும் பையன்களுடைய ஏகபோக உரிமை. பெண்களைப்பற்றி யாரும் நினைப்பது
கூட கிடையாது. மற்ற சாதி சனம் வேடிக்கை பார்க்க மட்டுமே சேர்த்தி. வருடந் தவறாமல் இதையெல்லாம்
பார்த்துக்கொண்டிருக்கும் நமது பையனுக்குள் சின்ன சின்னதாக பல கேள்விகள்.
அந்தப்பையன் ஒரு நாள் பங்கு சாமியார் ஆனபோது ஒரு
யோசனை அவருக்குள். “இந்த பெரிய வியாழனன்று நம் பங்கில் 6 பெண்களுக்கும் 6 ஆண்களுக்கும்
நான் கால்கழுவுவேன். கோயிலின் முக்காலே மூன்று பகுதி பெண்கள்தானே” என முடிவெடுத்தார்.
அந்த துணிகர செயல்தான் அந்த ஊர் அல்லோகலத்தின்
காரண கர்த்தா!
கால் கழுவுந் திருநாள் ஆன்மீகத்தையும் லௌகீகத்தை
தன்னுள் சேர்த்தடக்கிய விழா!.
சின்னதுகளாகிய எங்களுக்கு தபசு காலம் என்ற 40 நாள்
பாலைவனத்தில் அது ஒரு பாலைவனச்சோலை.7 வாரத்தின் 7 வெள்ளிக் கிழமையும் விரதம், (காலை
சாப்பாடு கிடையாது அவ்வளவேதான்!) 40 நாட்களுக்கும் சைவ சாப்பாடு, தினப்படி காலைபூசை
முடிந்தவுடன் சின்ன சிலுவைப்பாதை வெள்ளிக்கிழமைகளில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் செல்லும்
பெரிய சிலுவைப்பாதை அதுவும் விரத வயிற்றோடு. சேசுவின் பாடுகளை தியானிக்கையில் வயிறு
அது பாட்டுக்கு பாடாய்ப்படுத்தும். எடங்கண்ணியில் எங்கள் வீட்டு முறை 4 வது வாரம்.
பொதங்கிழம கருக்கலங்காட்டியும் மாட்டு வண்டி வீட்டுக்கு வந்துடுச்சுண்ணா எங்களை யாரும்
கையில புடிக்கமுடியாது.ரெண்டு நா ஸ்கூலுக்கு லீவு, போறவழியிலமதனத்தூர்பொதார்களிலசொச்சம் மிச்சம்எலந்தபழங்கஉட்டு
கிட்டு பொயிருக்காண்ணு பீராஞ்சுபாக்கலாம்.எடங்கண்ணி நண்பிகளோடு கொளைத்திலகும்மாளம்போடலாம்.
அழிஞ்சிப்பழங்க பறிக்கலாம். நேரங்கெடச்சா ரெண்டு ஆட்டம் சொங்கு கூட அம்மா கண்ணில படாம
போடலாம்.(தவசு காலத்தில இதெல்லாங்கூட ஒறுத்தல்அம்மா கணக்கில்!)
எடங்கண்ணி போய்ச்சேரயில சாங்காலம் ஆயிரும்.
கோயில்ல ஜெபம் சொல்லி முடிச்சிட்டு அவங்கவங்க வீட்டுக்குப்போய்
சாப்பிட்டு சின்னாச்சிகளும் அத்தைகளுமா அருவாமணைகள தூக்கிகிட்டு வீட்டுக்கு வந்துருவாங்க.
காய்கறிக அம்பாரமா கூடத்துல இருக்கும்.300 பேருக்கு விருந்து; யேசுவோட பன்னெண்டு அப்போஸ்தலர்கள
குறிக்கிறமாதிரி பன்னெண்டு தினுசு காய்கறி நாளைக்கி ரெடியாவுணுமில்ல. காய்கறிகள தண்ணியில
அலசி மூங்கி தட்டு கூடைகள்ள தண்ணியெல்லாம் வடியிறத்துக்கு வச்சுடுவாங்க. சின்னதுகளாகிய
எங்களுக்கு காலம்பரகாட்டியும் ஊற வச்சிருக்க மொச்சகொட்ட பிதுக்குறதுதான்வேல, நட்ட நடுவுல
ஒரு சட்டிய வச்சுகிட்டு கட்டவிரலுகும் ஆள்காட்டிக்கும் நடுவுல கொட்டய வச்சு பிதுக்கினா
அந்த பருப்பு எவ்வளோ ஒயரத்துக்குப்போய் சட்டிக்குள்ள உழுதுங்கிறதில ஒரே போட்டிதான்! வெள்ள வெளேர்னு இருக்க அந்த மொச்சபருப்பும் முருங்கக் காயும் போட்டு சோம்பு
சின்ன வெங்காயம் பச்சமொளகா தாளிச்சு அம்மா பண்ணுற கூட்டு........ம்ம்ம்ம்! பூசணிக்காய்
பறங்கிக்காய் இதுகளை பொளக்கறத்துக்குத்தான் ஆம்பள ஆளுக வருவாங்க பரங்கிக்காய் வெட்டும்போது
எங்க ஆள்ல ஒருத்த உள்ள இருக்கறத எடுத்துக்கிறத்துக்கிண்ணே தயாரா நிப்போம். பறங்கி விதைகள்
சிக்குவலமாதிரி இருக்கும் சத சத சதைக்குள்ள மாட்டிகிட்டு அவதி பட்டுப்போய் கெடக்கும்.
அதையெல்லாம் அலசிபுடிச்சி வழுக்கிகிட்டு போற கொட்டைகள கடவா பல்லுல செங்குத்தா வச்சு
அமுக்கி பறங்கிப்பருப்ப காய்கறி அரியிற அம்ச அடங்குறமுட்டும் தின்னுகிட்டேதான் கெடப்போம்.
காலையில அம்மாவும் அப்பாவும் விரதம். நாங்கள்ளாம்
விதி விலக்கு. தோட்டத்து பக்கத்துல ஆம்ளயாளுக நெட்டுக்கு குழி வெட்டி அடுப்பு ரெடி
பண்ணிடுவாங்க. சோறு பருப்பெல்லாம் இந்த அடுப்புகள்ளதான். உள்ளயும் வெறவு அடுப்புதான்
இங்க வறுவல் கூட்டு பாயசமெல்லாம் சின்னாச்சிகள் அத்தைகள் அம்மாவோட சேர்ந்து ரெடி பண்ணுவாங்க.
சரியா 12 மணிக்கெல்லாம் 12 அப்போஸ்தல பையங்க பாப்பா
கொளத்துல குளிச்சிட்டு நல்ல சட்ட டவுசர் போட்டுபவுடர் அடிச்சு ரெடியா நிப்பானுக. அப்பாவும்
குளிச்சிட்டு கோயிலுக்கு
வந்திருப்பாங்க. இதுக்கு முன்னாடி நாங்க பாப்பாகொளத்து
மேக்கித்திக்கரையில இருக்க புள்ளியார் கோயில் நந்தவனத்திலேர்ந்து அரளி, செம்பருத்தி
ஸ்வர்ண புஷ்பம்ணு பறிச்சிகிட்டு வந்து ஒரு தட்டில லேசா பிச்சுப்போட்டுட்டு வேண்டிய தண்ணி ஸ்டூலு மணக்கட்டை எல்லாத்தையும் தயார்பண்ணிடுவோம்
ஒரு சின்ன ஜெபம் சொன்னவொடனே இந்த சடங்க ஆரம்பிப்பாங்க. ஒவ்வொரு பையனா ஸ்டூல்ல வந்து
உக்காந்து மணக்கட்டையில கால வச்சிக்கணும். சரியான அறுந்த வாலு கூட அண்ணக்கி கும்புட்ட
கைய எடுக்காம பயபக்தியா இந்தப்பூனையும் பால் குடிக்குமாண்ணு உக்காந்திருக்கறத பாத்தா
சிரிப்பு வந்துடும். அப்பா முழங்கால் போட்டுகிட்டு செம்பிலேர்ந்து தண்ணிய காலுல ஊத்தி
அவுங்க துண்டால தொடைப்பாங்க. அப்புறம் பூ தூவி கால்ல முத்தம் குடுப்பாங்க. இத இவங்க
பண்ணும் போது கோயில்ல இருக்கவங்க எல்லாம் சேந்து
இதுக்குண்ணு பாடுற பாட்ட( சீர் பெருகும் நரேன் இறைவன் நமதேசு சீஷர்கள் முன் கால் கழுவவும்)
பாடுவோம். ஆனா இந்த பாட்ட எங்கயோ தொலச்சுபுட்டோம்.யாராவதுஞாபகம் வச்சுருக்காங்களாண்ணு
பாத்தா ஒடஞ்ச ரெகார்டு மாதிரி இந்த வரியதான் பாடுறாங்க. கால் கழுவிய தண்ணிரை கோயிலில் எல்லோருக்கும் காட்டுவார்கள் .தொட்டு சிலுவை
போட்டுக்கொண்டு பூவோடு இருக்கும் தண்ணீரை பாப்பா கொளத்தில் ஊற்றிவிடுவோம். பெரிய கோயில்களில்
கால் கழுவிக் கொள்பவர்களுக்கு வண்ணக் காகிதத்தில் சுற்றிய பரிசு கொடுப்பார்கள். ஆனால்
நம் அப்போஸ்தலர்களுக்கோ ராஜாங்க வரவேற்புடன்
பெரும் விருந்தல்லவா காத்து நிற்கிறது!!
அப்பா பன்னெண்டு
பேரையும் வீட்டுக்கு கூட்டிகிட்டு வருவாங்க. உள்ள நொழயும் போதே ஒரு ஈரத்துண்டை அப்பாவிடம்
குடுப்பார்கள். கூடத்தின் நடுவில் ஒரு பாதை விட்டு இரெண்டு பக்கமும் தலை வாழை இலை போட்டிருப்பார்கள். ஆனால் சாப்பாடு
ஒன்றும் இருக்காது எல்லோரும் உட்கார்ந்தவுடன் இலைகளில் சாதம் போட்டு கடைந்த பருப்பும்
நெய்யும் ஊற்றுவார்கள். அதற்குள் கூடத்து நடுவில்
அப்பா முழங்காலில் இருந்து துண்டை விரித்து பிச்சை கேட்பார்கள். பிசைந்து வைத்திருக்கும்
சாதத்தை ஒவ்வொருவரிடமிருந்தும் முழங்காலிலேயே நகர்ந்து போய் வாங்குவார்கள். சில பசங்களுக்கு இதைபண்ணும் போது அழுகையை அடக்கமுடியாது.
ஞானத்தை தனியாகப்பிட்டு ஞானஉபதேச வகுப்பு ஒன்று நடத்தாமலேயே ஊரின் சிறந்த பெரிய தலைகள்
சிறுவர்களின் பாதங்களைக்கழுவுவதும் முழங்காலில் இருந்து பிச்சை எடுப்பதும் “தலைவனாய் இருக்கிறவன் முதலில் வேலைக்காரனாய் இருக்க
வேண்டும்” என்ற கடவுளின் உயரிய வாக்குக்கு உதாரணம் கொடுத்து மனதுக்குள் மதிப்பீடுகளை
பதியச் செய்வது அரியதொரு செயல் இல்லையா?!!
இந்த சடங்கு முடிந்த பின்தான் விருந்து ஆரம்பிக்கும்.
பிச்சையாக வாங்கின அந்த சாதத்தை பந்தியிலிருக்கும்
எல்லா இலைகளிலும் பிரசாதமாக வைப்பார்கள். பன்னிரெண்டு பேரும் சாப்பிட்ட இலைகளைத் தனியாக
கூடையில் எடுத்துக்கொண்டு போய் எருக்குழியில் ஒரு பள்ளம் தோண்டி போட்டுமூடிவிடுவார்கள்.
கூடவே கடவுளுக்கு ஒரு பெட்டிஷனும் “அடுத்த வருஷ வெளச்சலும் அமோகமா இருக்குணும் சாமி”
இரவு தெரு ஜனங்களுக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் விருந்து!
மீதியான எல்லா அயிட்டங்களையும் பலா பட்டரையாக் கலந்து அரை அண்டாவில் கொதிக்கவிட்டு
அதோடு சாதத்தைப்போட்டு பிசைந்து பெரிய பெரிய உருண்டைகளாக பழூர் குளத்தில் பறித்த தாமரை
இலைகளில் அள்ளிப்போடுவார்கள். அமிர்தம்....! அது அமிர்தமேதான்........
பல தலைமுறைகள் செய்து வந்த இந்த அருமையான பண்டிகை நடுவிலே தொலைந்து போனது. கிராமத்தை
விட்டு நகர் நோக்கிய படையெடுப்பு ஒன்று என்றால் அங்கு இருப்பவர்களுக்கும் இதில் ஈடுபாடு
இல்லாமல் போயிற்று.
மாமாவின் ஞாபகம் மட்டுமல்ல அவர்களுடைய எடங்கண்ணிக்
கனவை நிறைவேற்றும் வகையிலும் நாங்கள் தபசு காலத்தின் 5வது வியாழன் இதை சில வருடங்களாக
செய்ய ஆரம்பித்திருக்கிறோம். மாமா ஆசைப்பட்ட மாதிரியே ஆண் பெண் பாகுபாடின்றி சாதி சமய
வேறுபாடின்றி அழகான ஒரு கூட்டுக்குடும்பத்திற்கு இந்த பண்டிகையை அர்ப்பணம் செய்கிறோம்.
சூப்பர் மேடம் , மனதை நெகிழவைத்த பதிவு .
ReplyDeleteமனிதன் மனிதனுக்கு பண்ணியதை படிக்கும்போதே இவ்வளவு உருக்கமாய் இருக்கிறது என்றால் , நம் ஆண்டவர் தம் சீடர்களுக்கு இதையே பண்ணினார் என்று நினைக்கும் போது, மனது கனக்கிறது .எப்பேர்ப்பட்ட முன் உதாரணம் .
இங்கே நியூயார்க்கில் தமிழ் கோவிலில் ஓரிருமுறை முயற்சித்தோம் .
நன்றி ஆல்ஃப்ரட்போன வாரம் கிராமத்தில்தான் இருந்தோம்.மு.புத்தகத்தில் படங்களைப்பாருங்கள்
ReplyDeleteபார்த்தேன் அதிசயித்துப்போனேன்.தகவலுக்கு நன்றி மேடம்
Delete