Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Saturday, 6 June 2015

யாருப்பா இந்த ப்ஃளக்ஸ்?

ரொம்ப நாள் சந்தேகம் எனக்குள்ளே......... இதை எப்படி தீர்த்துக்கொள்வது? மண்டையைப் பிய்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். பிராந்து புடிக்கிறமாரி அப்படியாக்கொண்ட பெரிய சந்தேகம் என்ன மனசுக்குள்ளே....... நாங்கள்ளாம் இல்லியா ? அத தீத்து வைக்க மாட்டோமா?
ஒண்ணுமில்லிங்க இந்த ப்ஃளக்ஸ் கலாச்சாரத்தின் பூர்வோத்ரம் எனக்குத்தெரிஞ்சே ஆகவேண்டும். இது எங்கதான் ஆரம்பிச்சதுண்ணு தெரியில... ஆனா எங்க தமிழ் நாட்ட பேயா புடிச்சு ஆட்டி வைக்கறது முட்டும் எனக்குக் கண்கூடாத் தெரியுதுங்க.......
என்னாம்மா நீ இவ்வளோ பெரிய மக்கா....... இல்ல மக்கு மாதிரி நடிக்கிறியா......? கைப்புண்ண பாக்கறதுக்கு ஒனக்குக் கண்ணாடி வேணுமா? நம்ம அரசியல் வாதிகளின் பூர்வோத்ரம் சினிமாதான். அப்பல்லாம் புதுப்படம் வெளிய வரையில வரைஞ்சு விளம்பரப்பலகை வப்பாங்க. இந்த சினிமாக்காரங்கள்ளாம் அரசியல்ல நொழஞ்சி ஆட்சிய புடிக்கிறப்ப விளம்பரப்பலகைங்கிற பெரிய அஸ்திரத்த கையோட தூக்கிகிட்டு வந்துட்டாங்க. இந்த மகா சக்தி வாய்ந்த அஸ்திரந்தான் தொழில் நுட்ப வளர்ச்சியடைஞ்சி விளம்பர பலகையையெல்லாம் தூக்கி  அடிக்கிற மாதிரி அத விட ரொம்ப சீப்பா அதவிட அழகா ஜம்முண்ணு ப்ளக்ஸா நிக்குது!
தமிழ் நாட்டு மக்கள் நாம யாரு........? பெரிய சினிமாரக்கார குடும்பந்தானே? அவங்க வெளம்பர காலாச்சாரமும் விக்கிரமன் கதயில வர்ர வேதாளம் மாரி  நம்மள ந்செம புடியால்லா புடிச்சிகிடுச்சு! தாலியில்லாம கலியாணம் இல்லாதமாரி இண்ணைக்கி ப்ஃளக்ஸ் இல்லாம ஒரு வைபவமும் தமிழ் நாட்ல கெடையவே கெடையாது!
விளாவாரியாக விவரம் சொன்ன நண்பர் குழாமிடம் என் பிழை பொறுக்க வேண்டி நின்றேன்.
சென்னை திருச்சி பை பாசில் அடிக்கடி பயணம் செய்யும் எங்களுக்கு ஒரு ஊர் வரப்போகிறது என்றாலே திக் திக் என்று இருக்கும். நீங்களும் இந்த திக் திக்கை உங்கள் பயணத்தில் அனுபவித்திருப்பீர்கள்!
பெரியதொரு ப்ஃளக்ஸ்.......  தப்பறை கொட்டி நிற்கிறது..... அங்கே பால் வடியும் முகத்துடைய ஒரு பெண்......... அதற்கு பூப்பெய்திய கொண்டாட்டமாம்........... மஞ்சள் நீராட்டுகிறார்களாம். அந்த முகத்தில்..... செங்கொரங்கு மாதிரி ரெண்டு கன்னங்களிலும் ரவுஜ்..... கண்களுக்கு மேல் பச்சை ரோஸ் கலர் மஸ்காரா, பென்சிலால் புருவம் திருத்தி கண்களுக்குள் கொள்ளாத மையிட்டு, டிவியின் உபயமாக பெங்காலி கலியாணப்பெண்கள் இடும் வெள்ளைப்பொட்டுகளின் வளைவோடு....... மலயாளப்பெண்களின் சந்தனப் பொட்டையும்  சேர்த்து...... இதோடு விட்டுவார்களா........? ம்ஹூம்.....  பரத கலாச்சாரத்தின் விளைவாக சூர்ய பிறை சந்திர பிறை ராக்கொடி நெத்திச்சுட்டி இன்ன பிற தலை சாமான்களோடு பூச்சடையும் தைத்து.......
கழுத்தை ஒட்டி  நெக்லேஸ் பூத்தாலி டாலர் செயின் மல்லிகை மொக்கு ஆரம் காசு மாலை....... இதோடு விட்டுவார்களா........? ம்ஹூம்......
பிறந்த வீட்டு புகழ் சாற்ற வேண்டாமா...... என்ன? மாமன் சீர் பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவையை அவள் மேலே மூச்சுத் திணறத் திணற ஏற்றி அந்த பாலகியை பெரும் வேஷாதாரியாக  மஞ்சள் நீராட்டுவிழாவின் பலியாடாக........... 
நாம் அனைவரும் வெட்கப்பட்டு தலை குனிந்து நிற்கவேண்டிய ப்ஃளக்ஸ் விளம்பரம் இது!
 பைபாஸ் வராத அந்தக்காலத்தில் ரோடுகளில் ஆங்காங்கு எச்சரிக்கைப் பலகைகள் வைத்திருப்பார்கள். அதில் ஒன்று எச்சரிக்கை அதி பயங்கர வளைவு என்று சொல்லும். அந்த பாணியிலேயே புதிய பைபாசில்  நான் அதி பயங்கர ப்ஃளக்ஸ் ஒன்றைக் கண்டேன் .
ஐய்யனாரப்பனுக்கு கெடா வெட்டுதலும் குழந்தைகளுக்குக் காது குத்தலும்
ப்ஃளக்ஸின் ஒரு பக்கத்திலே குதிரைமேலே உருட்டு முழிகள், விரித்துப்போட்ட தலையில் ஒரு கிரீடம், கெடா மீசை சகிதம்  பெரியதொரு பட்டாக்கத்தியை வீசிக்கொண்டு ஐய்யனாரப்பன்.......... நான் சொன்னால்  நீங்கள் நம்பப்போவதில்லை ப்ஃளக்ஸின் மற்றொரு பக்கத்திலே பயந்து போய்  நிற்கும் மூன்று மழலைகள்.... !! ஐய்யானரைப்பார்த்து குழந்தைகள் பயந்து போனதாக  நான் சொல்லவில்லை... ப்ஃளக்ஸில் குழந்தைள் போட்டோ தனி... என்பது நாம் அறிவோம்..... ஆனாலும் இரண்டும் கூட்டு சேருகையில் குழந்தைகள் ஐய்யானாரைப்பார்த்துதான்  நடுங்கி நிற்கின்றன என்ற உணர்வைக் கொடுக்கின்றது 
அவசியந்தானா......... ?  நம் வீட்டு விசேஷங்கள் வரும்பொழுது இதைக்குறித்து கட்டாயம் யோசிப்போம்
ஊருக்குப்போயிருந்தேன். தென்கச்சி (தென்கச்சிபெருமாள் நத்தம்கொள்ளிடத்தில் ட்ராக்டர் கொள்ளா ஜனங்களுடன் இட்டிலி கேசரி சகிதம் தண்ணிக்குள் உட்கார்ந்து ( ஆமாம் உட்கார்ந்து குளிக்கும் தண்ணீர்தான்! இந்த கோடையில் கொள்ளிடம் கரை புரண்டா ஓடும்? மேலும் பலா டவுணிலிருந்து வந்திருக்கும் பலா தரப்பட்ட குட்டிப்படைகளை மேய்க்க இந்த அளவு தண்ணிர்தான் சரியானது!) கதை அளந்து கொண்டிருந்தோம்
  என்னாப்பா கட நல்லா ஓடுதா? தண்ணீரில் படுத்துக்கொண்டு மாமா பையனைக்கேட்கின்றேன். அதை ஏன் கேக்குறிங்க அத்தாச்சி? அமாவாசை பவுர்ணமிண்ணா கோயில் கொளங்கள்ளதான் கூட்டம் மொய்க்கும். இப்ப என்னடாண்ணா கட்சி கூட்டங்க கட்சி மகாநாடுகள்தான் ஜே ஜேண்ணு நடக்குது....... எந்த பாவத்த கழுவறதுக்குண்ணுதான் தெரியில.... முந்தா நாளு பாருங்க நம்ம கடைக்கி நேரா அடச்சு ஃபிளக்ஸ் போஸ்டர் ஒட்ட குழி தோண்டுறாங்க. அப்பா இந்த பக்கம் பஞ்சாயத்து வெட்டுன குழி ஜன்மமா அப்புடியே கெடக்குநீங்க இங்குட்டு ஃபிளக்ஸ் வச்சா சின்ன கடக்காரங்க எங்குளுக்கு ரெண்டு நா பொழப்பே இல்லாம பொயிரும் கொஞ்சம் தள்ளி வைக்கப்பாருங்கண்ணு கொரல ஒசத்தாமத்தான் சொன்னேன். கிராமங்கள்ளே முன்னாடியெல்லாம் பதில் சொல்லையில ஒரு மரியாத இருக்கும்அப்புடிங்களாண்ணு.... நிதானிச்சி ஆரம்பிப்பாங்க. இந்த மெட்ராஸ் கலாச்சாரம் எங்குட்டும் பரவி இங்க பாரு வெடத்த காட்டி குழிதோண்டச்சொல்லிதான் எனக்கு உத்தரவு மேல என்னாச்சும் இருந்தாக்க கேக்க வேண்டியவங்கள கேட்டுக்க. மட்டு மரியாதி இல்லாம பேசினவன் பெரிய கடப்பாரய ணங்குண்ணு சாச்சுட்டுட்டு எங்குட்டோ பொயிட்டான்.
என்னய்யா என்னுமோ தகரால் பண்ணுறியாமில்ல.......? எங்க தலைவர் மெஜால்ட்டியா ஜெயிச்ச வெடம் இதுண்ணு ஒனக்குத் தெரியாதா? அவுரு ப்ஃளக்ஸ ஒங் கடைக்கி மின்னாடி வப்போம்…….. கெழக்காண்டை வப்போம்……  மேக்காண்ட வப்போம்………  ஐயா பெரிய  டுபாயி சூப்பரு மார்க்கெட்டு வச்சிருக்காருல்ல...... அத இழுத்து கூட மூடிப்புடுவோம். ஒன்னால முடிஞ்சத பாத்துக்க.
இவன் நிச்சயமா உள்ளூரு கட்சிக்காரன் இல்லண்ணு எனக்குத்தெரிஞ்சி போச்சு....... அவங்கண்ணா வச்சி பேசுவாங்க.... நீக்கு போக்கா நடந்துகுவாங்க...... இவன் பந்தாவக் காட்டுறத்துக்குண்ணே வந்திருக்கான். வாய தொறக்காம வண்டிய எடுத்துகிட்டு வெளிய கெளம்பிட்டேன்.
அப்பறம்....?
அப்பறம் என்னா... எங்கடைக்கி துக்குளி சந்து உட்டுபுட்டு அடுத்த கடைய அடச்சிப்பிட்டான்!
  இதுண்ணாச்சும் ஒரு நா கூத்துப்பா......... எங்க ஊர்ல இந்த வெறுமனத்த  ப்ஃளக்ஸ் படுத்துன பாட்ட கேட்டீங்கண்ணா............ வெளியூர் சித்தப்பா ஆரம்பித்தார்
அண்ணைக்கி  நம்ம ஊர்ல பொண்ணூட்டு கலியாணம். மாப்புள ஊட்டு சனங்கள்ளாம் பஸ்கள்லருந்து திமு திமுண்ணு வந்து எறங்குதுவ. புள்ளியார் கோயில்லேருந்து பொண்ணழைக்கிறதா ஏற்பாடு......... பரிசம் போடுறதுக்கு எல்லாம் ஜரூரா நடந்திகிட்டு இருக்கு...... இந்த சமயத்துல பாத்து மாப்புள ஊட்டு  பக்கம் ஒரே கசாமுசா..........
இந்த கசா முசா பெரிய சத்தமாப்போயி நடு கூடத்து  நச்சத்திரமா வந்து நிண்ணுபோச்சு. வெறுமனத்தாளெல்லாம் கொத்து சங்கிலி போட்டுகிட்டு பல்ல இளிச்சிகிட்டு நிக்கையில் நாங்க என்னா எளச்சி போன சாதியா....... ஒத்த சங்கிலி போட்டாவ தெருவில ஒட்டில்ல என் குடும்பத்த அவமானப்படுத்துறானுக.......  பாருங்கடி சனங்களா....... போட்டாவ...... அந்த பக்கத்து மாமியா மருமவகளுக்கு  களுத்து கொள்ளாத நவ...
நம்மளப்பாரு.... நாம  பிச்சக்காரங்களா என்னா......? ஏம் பேரன் படுச்சிருக்க படிப்புக்கும் வாங்குகிற சம்பளத்துக்கும் ஆயிரம் பேரு ஏன் வாசப்படியில தவமா தவங்கெடந்தாளுக......... இண்ணைக்கி பாரு..........இந்த மருவாத கெட்ட சென்மங்கள் கிட்டல்ல மாட்டிகிட்டு கெடக்கோம்………… ஐயா
மாரிமுத்து………. இன்னம் பரிசம் போடுல.......... பொண்ணழைக்கில...... கை நனைக்கில........ அப்புடியே கெளம்பிடுவோம். அதே முகூர்த்தத்தில நம்மூரு கலிய பெருமா பொண்ண முடிச்சிபுடுவோம் ஒரு செல்லப்போட்டு கூப்புடு.......அவன... தங்கமுண்ணு தாங்குவான்.... ஏலம்ணுல்ல ஏந்துவான்  நம்ம சம்பந்தத்த  நம்ம கொலக்கோயிலு அஞ்சு மொவப்புல அளவு சிந்த நிக்கும் விருத்தாசலத்து விருத்தீஸ்வரர் கோயிலுல மொத முகூர்த்தத்தில நம்ம புள்ள கலியாணத்த முடிச்சிருவோம்......அப்பறம் ஊர வளச்சி ஓல அனுப்பி இவனுக பிச்சாத்து ப்ஃளக்ஸ்ஸெல்லாம் தூக்கி அடிக்கிறமாரி ஊர்வோல வழி நெட்டுக்கு பெரும் ப்ளஃக்ஸா அடிச்சி ஒட்டிப்புடுவோம்.......... ஆங்காரமயிருந்தார் அப்பாயி!! துணை சகோதரிகளும் தயார் நிலைதான்!
 பெண் வீட்டு பாட்டி கழுத்தில் கொள்ளை நகை………. மாப்பிள்ளை பக்கத்து அப்பாயி கழுத்தில் ஒத்த வடம்.
 இதெற்கெல்லாம் காரண கர்த்தா நம்ம மாப்பிள்ளைப் பையன்தான். ப்ஃளக்சில் போட பெண்வீட்டார் போட்டோ கேட்டபோது முகங்கள் தெளிவாக இருக்கிறதா என்று பார்த்தானே தவிர அவர்கள் கழுத்து நிறைய  நகை நட்டுக்கள் போட்டிருக்கிறார்களா என்பதைப் பார்க்கவேயில்லை. இப்போது அப்பாயின் ஆத்திரம் இவ்வளவு ருத்திரமாய் வெடிக்க ஆடித்தான் போய்விட்டான். அதற்குக்காரணம் அப்பாயி வீட்டில் மிகு செல்வாக்கு உடையது.அது வார்த்தை எங்கும் நிற்கக்கூடிய சக்தி கொண்டது.
பையன் இருதலைக்கொள்ளி எறும்பாக துடித்தான். துடிப்பில்  வெகு முக்கியமானது என்று ஒன்றும் இருந்தது. இந்த கல்யாணம் பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட ஒன்றாய் இருந்தாலும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக செல் போன் சாட் ஸ்கைப் என உறவு பல்கிப்பெருகி  நிச்சயிக்கப்பட்ட ந்த கல்யாணம் இன்று அவனது காதல் கவிதையாகவல்லோ ததும்பி நிற்கிறது.
ஒண்ணும் கவலப்படாதீங்க அப்பாயிய மட்டும் நான் இருக்கிற ஏர் கண்டிஷன் ரூமுக்குக்கூட்டிகிட்டு வந்து உட்டுடுங்க கவலை தோய்ந்த அவனுடைய போனுக்கு அரு மருந்தாக அப்பியது அந்தப்பக்கத்திலிருந்து பெண்ணின் பதில்!
அப்பாயி உள்ளே நுழைந்துதான் தாமசம்  கல்யாணப்பொண்ணு அவுங்க கால்ல நெடுஞ்சாங்கடையா உழுந்துடுச்சு. அப்பாயி திக்கு முக்காடிப்போயி அந்த புள்ளய அப்புடி தூக்கி புடுச்சு நல்லா இரு தாயிண்ணு சொல்ல வாய எடுக்கையில அது கழுத்தப்பாக்குது. துக்குளியோண்டு ஒத்த சங்கிலிதான் அது கழுத்துல கெடக்கு. நீங்கதான் அப்பாயி எங்குளுக்கு முக்கியம் ஒத்த சங்கிலியில கலியாணம் பண்ணிக்கண்ணு சொல்லுங்க அதுதான் எனக்கு தேவ வார்த்த. நாங்க கலியாணம் பண்ணி சென்னைக்கி போகையில எங்குளுக்குத்தொணையா எங்களோடயே வந்து இருந்துடுவிங்களா அப்பாயி?"
 பூரிச்சி போயி நிண்ண அப்பாயிக்கி ப்ஃளக்ஸ்செல்லாம் மறந்து போச்சு கொத்து சங்கிலியும் மறந்துபோச்சு ஒத்தயும் மறந்து போச்சு
ஆயா பொண்ணழைக்க நேரமாவுது....... போயி நவ நட்டெல்லாம் எடுத்து போட்டு கிட்டு சம்முண்ணு வா?
இந்தப்பக்கம்  மனோதத்துவ ரீதியில கல்யாணப்பெண்அண்ட் கோ அப்பாயி அண்ட் கோவை மகிழ்ச்சியில் ஆழ்த்திக்கொண்டிருக்க கல்யாணத்தை நிறுத்தக் கூடிய அதி சக்தி வாய்ந்த ப்ஃளெக்ஸ் பூகம்பம்  வெகு தீவிரமடைந்து பெண்ணின் அப்பா முன்னும் நின்றபோது அவர் தன் நண்பர்களைக்கூப்பிட்டு யப்பா  நட்புக்குண்ணு நீங்க பத்து ஃப்ளக்ஸ் வச்சீங்க. ஆனா இந்த ப்ஃளக்ஸே  என் பொண்ணு வாழ்க்கைக்கி ஒல வச்சுறும் மாரி இருக்கு. இப்ப  நீங்க என்னா செய்வீகளோ ஏது செய்வீகளோ அந்த ப்ஃளக்ஸுங்க அங்கன நிக்கப்புடாது. காதும் காதும் வச்ச மாரி  அந்த வேல நடந்தாவுணும். இது நம்ம பொண்ணோட கட்டளை சொல்லிபுட்டு அவர் தலய பிச்சுகிட்டு ஓடுனாரு
கெட்டிகாரனுவதாம்பா அந்த தோழமக்காரனுவ! எம்புட்டு ஆளுகள புடுச்சாந்தானுகளோ தெரியில, எம்புட்டு  வாழக்கொல்லைய அழிச்சானுவளோ தெரியில பொண்ணழப்பு மண்டபத்துக்கு வரங்காட்டியும் நெட்டுக்கும் கொலை தள்ளிய வாழ மரங்களா நட்டு சீரியல் செட்டை அது மேல பின்னிவுட்டு.......  ப்ஃளக்ஸா.......... அப்புடின்னா என்னாங்கண்ணு........ கேக்குற அளவுக்கு அந்த வெடங்கள சோடன பண்ணி அமக்களப்படுத்திட்டானுவ.....
தான் பேச்சு மெஜால்ட்டியா நிண்ணுபோனதுல மருமவ பேத்தியோட உறவாடி மகிழ்ந்ததுல அப்பாயி  எல்லாத்தையும் மறந்து ஒரு நெலக்கி வந்துடுச்சு!
அந்த  விருத்தாசலத்து விருத்தேஷ்வரரும் ஒரு பொண் பாவத்திலிருந்து அண்ணைக்கி தப்பிச்சிகிட்டாரு போ!!!!!!
அவருடைய ஹாஹா ஹோ ஹோ சிரிப்பில் மட்டுமல்ல பக்கெட் கரண்டி சகிதம் அங்கு உலா வந்த கேசரி இனிப்பிலும் ப்ஃளக்ஸ் கலாச்சாரம் நமக்கில்லை காண் என்ற உறுதியிலும் அன்று கொள்ளிடத்து.தண்ணியில் கும்மியடித்தே மகிழ்ந்தோம்!!  

No comments :

Post a Comment