அசைவ விருந்து
நடக்கும் பல கல்யாணங்களில் சைவக்காரார்கள் பாடு சவலப்பிள்ளைகள் மாதிரிதான்
“ரொம்பப்போனா
பத்து பேருதான் சைவ சோத்த தொடுவானுக
...... கடையிலேர்ந்து வாங்கிக்கிலாம்...... வேல மெனக்கட்டு அதுக்கு ஆள் வக்காதீங்க....
சாப்பாடு மீந்து போய் சீப்பட்டுக்கெடக்கும்.........”
அசைவ கல்யாணங்களில்
சைவ விருந்து “ஏனோ தானோ யாருக்கு வந்த விருந்தோ?” தான்.......
அனுபவ ரீதியாகக்
கண்டறிந்த உண்மை இது........உங்களில் சிலரும் இது போன்ற அல்லது இதைவிட மோசமான நிலையை எதிர் கொண்டிருப்பீர்கள்.
ஒரு கலியாணத்திற்குப்போயிருந்தோம்......
“சைவ சாப்பாடா…?
மேல போங்க.......” கை கும்பிட்டு எங்களை வரவேற்றார்கள்
சிரிப்பு
ஒன்றை உரித்தாக்கிவிட்டு மேலே போனோம் ஹாலைத்தேடி….
அங்கே........சமையல்கட்டுக்குப்
பக்கத்தில் இரண்டு மேஜைகள் சைவ சாப்பாட்டுக்கு தயார் ஆகிக் கொண்டிருந்தன! எரிந்து போன
... விறகுகளை வெளியே எடுத்து வைத்ததில் அங்கு புகை மண்டிக்கிடந்தது...... கரண்ட் கட்...வேறே......
கீழே மட்டும் ஜென்செட் சத்தம் கேட்கிறது... ஒண்ணுகுத்தலாய் வெந்த சோறு... ( எனக்குள்
ஒரு பெரிய சந்தேகம் கல்யாண சமையலில் சோறு ஒன்று குத்தலாகவோ அரை வேக்காடாகவே இருப்பது
ஏன்?) வேர்க்க விறு விறுக்க அள்ளிப்போட்டுக்கொண்டு
வெளியே வந்தோம்.
இன்னொரு
கல்யாணம்........ அசைவத்திற்கும் சைவத்திற்கும் சரி சமமாக அழகான ஏற்பாடு... பொண்ணு
மாப்பிளையை வாழ்த்திவிட்டு
தெரிந்தவர்களையும்
விசாரணை பண்ணிவிட்டு வந்த எங்களுக்கு அந்த அழகான இடம் மட்டுந்தான் காத்திருந்தது...
சாப்பாடு..... அது என்றைக்கோ தீர்ந்து போயிருந்தது!!
இன்னொரு
கல்யாணம்... எப்போது போல அசைவக்ககூட்டம்தான் பெரியது பெரிய ஹாலில் அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் சரியான ஒன்றே.
சைவ சாப்பாட்டிற்கும் அழகாக சாமியானா போட்டு ஆங்காங்கே பெரிய ஃபேன்கள் வைத்திருந்தார்கள்.
குறைவில்லாமல் தினுசு தினுசாய் அயிட்டங்கள்.......வரிசை வைத்து வந்தன. சட்டை போடாமல்
அக்கிளிலே விளையாடும் பரிசாகர்களைப்பார்க்காததே எங்களுக்குப் பெரிய சந்தோஷமாய் இருந்தது. முக்கியமான கல்யாண வீட்டுக்காரர்களின் முகம் மலர்ந்த
உபசரிப்பு வேறே.......... நிறைய யோஜனை பண்ணித்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்! ஆனால்
காலுக்குக் கீழே......... மண் தரை....... பறிமாறும் ஆட்கள், உட்கார்ந்து எழும் விருந்தாளிகள்
ஓடிப் பிடித்து விளையாடும் குழந்தைகள் என அந்தப்பகுதியே புழுதிப்படலமாய்.......வாயில் சுவையான பண்டங்களோடு நொய் மண்ணும்.........!!
இனி அசைவக்கல்யாணங்களில் சைவ சாப்பாட்டு பக்கம் போகக்கூடாது என்பதற்கு நாங்கள்
சில பல திட்டங்கள் தீட்டியிருக்கிறோம்.
இந்த நல்ல
நிகழ்வில் “யாருக்கும் உடம்பு சரியாயில்லை” மருத்துவ மனைக்கு உடனடியாக செல்ல வேண்டும்
என்பது போன்ற வருத்தமான உத்திகளைத் முதலில் தவிர்த்துவிட்டோம்.
1. பொண்ணு
மாப்பிள்ளையை வாழ்த்தி பரிசையும் எங்களையும் விடியோவிற்கும் போட்டோவிற்கும் ஆஜர் கொடுத்துவிட்டு
சொல்லாமல் கொள்ளாமல் அப்படியே வெளியே வந்துவிடலாம்.
அப்படி
முக்கியமான ஆட்களிடம் மாட்டிக்கொள்ள நேர்ந்தாலும் திட்டங்கள் கைவசம் இருந்தன.
2 .“சாப்பாடு
ஜோர் வெத்ல பாக்கு எங்கே?“ கேட்டுக்கொண்டே முழுப்பூசனிக்காயை சோற்றிலே மறைத்துவிடலாம்.
அது பண்ண
இயலாத நேரங்களில்
3 .“இண்ணைக்கி
இன்னொரு விசேஷம், நாங்க இல்லாட்டி ஒண்ணுமே
நடக்காது....... வெவரம் அப்பறம் சொல்றோம்....“ காலில் சுடு தண்ணி ஊற்றிக்கொண்ட அந்த
அஸ்திரத்தோடு ஓட்டமும் நடையுமாய் வெளியேறிவிடலாம்.
இப்படியாக
எங்கள் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான் பையனிடமிருந்து ஒரு போன்.......
“அப்பா நீங்களும் அம்மாவும் கட்டாயம் சீவச்சன் கல்யாணத்துக்கு
பொயிட்டு வந்திடுங்கப்பா..... அவன ஞாபகம் இருக்கா என் கல்யாணத்தில உழுந்து உழுந்து
எல்லாத்தயும் உபசரணை பண்ணிகிட்டு கெடந்தானே......... அவனே இங்கேருந்து லேட்டாதான் கெளம்புறான்..
அவுங்க அப்பா வந்து உங்களுக்கு பத்திரிக்கை
வப்பாங்க... வேற யாரையும் அனுப்புச்சிடாதிங்க ப்ளீஸ்.....” ஒபாமாவின் நாட்டிலிருந்து
இது உத்தரவாகத்தான் வந்தது. ஒரு இந்தியப்பெற்றோருக்கு வரும் வேண்டுதல் மாதிரி இல்லை!
சிவகங்கைப்பக்கம் அந்த கல்யாணம்.......... வழியைத் தவற விட்டு டயரில் காத்துப்போய் பொட்டை வெயிலில் அசந்து போய்
மதிய சாப்பாட்டு நேரத்திற்குப் போனவர்களை நல்ல வேளையாக தெரிந்த ஒரே முகமான அப்பா எங்களை
வரவேற்று “ பொண்ணு மாப்பிளையெல்லாம் அப்பறம்
பாத்துக்கலாம்” என்று நேராக பந்திக்குக்கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். தாட்டு இலைகளில்
அயிட்டங்கள் குவிந்து கொண்டே போகிறது. முதலில் விழும் இனிப்புக்காக மனசு ஏங்குகிறது.
அதேசமயம் எங்கோ ஒரு நெருடல்..... தினுசு தினுசாக அசைவ அயிட்டங்கள் அல்லவா இலையில் விழுந்திருக்கின்றன முக்கனி வைத்துப்பறிமாறும் பெருங்கல்யாணம் போல ஆட்டுக்கறி
பொரியல், எரால் பொரியல் கோழி வறுவல் முட்டை தொக்கு சகிதம் மட்டன் பிரியாணி....... கிள்ளிய
வயிற்றுப்பசிக்கு கொக்கும் நரியும் விருந்து வைத்துக்கொண்ட கதையாகிப்போயிற்று எங்கள்
நிலை!! நீட்டுப்பந்தியிலிருந்து மெல்ல கழன்று
கொள்ள முயல்கிறோம் “ உக்காருங்க உக்காருங்க கோச்சுகாதிங்க..... வாப்பா...... வாப்பா....... நிண்ணு கவனிங்க” சொந்தக்காரர்கள் முடுக்கிக்கொண்டு
நிற்கிறார்கள் என்ற எண்ணம் பந்தி உபசரிப்புக்காரருக்கு. இதற்குள் நண்பரும் அங்கு வந்துவிட்டிருந்தார்.
மெள்ள எங்கள் சைவ நிலையை விளக்கினோம். ஒரு குறையுமிருக்கக் கூடாது என நாப்பது ஆடு வெட்டி, வெசைப்படகு எரால் வாங்கி பண்ணைக்கோழியை
வெலை பேசி தட்டுதட்டாக முட்டைகளைக் குவித்து விமரிசையாக கலியாணம் நடத்தி கொண்டிருந்த
அவர் கையைப்பிசைந்தார். வெகு தூரத்திலிருந்து வந்திருக்கும் நண்பர்கள் பந்தியிலிருந்து
எழுந்திரிக்க வேண்டிய சூழ் நிலையில் அவர் ஆடித்தான் போய்விட்டார்.
“நீங்கள்ளாம்
அசைவம்ணுல நெனச்சுகிட்டு இருந்தேன்?”
“வீட்ல
எல்லாரும் அசைவந்தான்…….. எங்க ரெண்டு பேரத் தவிர”
பொதுவாக
எங்க கிராமப்பக்கங்களில் எவ்வளவு பெரிய கலியாணமாக இருந்தாலும் கலியாண சாப்பாடு மட்டும்
சைவச்சாப்பாடுதான்.மருவுக்கு அழைக்கும்போதுதான் கவிச்சை சேர்ப்பார்கள்.
“வாங்க
வாங்க நீங்க கூடத்துக்கு வாங்க............. நிமிசத்துல எல்லாம் ரெடி பண்ணிடுரேன்.......
யப்பா பர்ஸ்ட்டு ஓடிப்போயி ரெண்டு கலர் வாங்கிகிட்டு ஒடியா”
“கலர் குடிக்கமாட்டோம்ணு”
வாய் வரை வந்தது எங்கோ காணாமல் போய்விட்டது! அவர் மனசை எவ்வளவுதான் நோகடிக்கப்பது.......?
குக்கிராமத்தில்
சாப்பாட்டுக்கடைகளா இருக்கும்....?. வண்டி சிவகங்கை ஓடியிருக்க வேண்டும். பசியெல்லாம்
அம்சை அடங்கிப்போன நேரத்திற்கு ஒண்ணு குத்தலா வெந்த சோறு, காரசாரமா ஒரு சாம்பாரு, அதே
காரத்திற்கு பேர் சொல்லத்தெரியாத ஒரு காய், புளியாமரத்திலிருந்து இறக்குன ரசம் மொடாத்தண்ணி
மோரு........பதத்து செவந்துபோய்க் கெடக்கும் அப்பளம்........... “ஏண்டா ராசப்பன் கடையிலதான
வட பாயாசத்தோடு சாப்பாடு எடுத்துகிட்டு வரச் ஒன்னேன், எங்கயோ போய் பாடாவதி சோத்த வாங்கிகிட்டு
வந்துருக்க?”
“ஐயா........
நம்ம கலியாணத்துக்கு வரணுமுண்ணு ராசப்பண்ண இண்ணைக்கி அவுக கடைய மூடிட்டாக........”
“என்னங்க
சாப்பாடு சுமாரா இருக்கா...? ராசா சாப்பாடு சாப்பிட வேண்டிய நீங்க....... இந்த வெத்த
சோத்த திங்கிறிங்க ....... எப்பயுமே கறி மீனு திங்கறது இல்லியா?” விஷயம் கேள்விப்பட்டு
விழுந்தடித்து வந்த நண்பரின் அப்பா, பையனின் தாத்தா.......
“இல்லங்க
நடுப்பறதான் உட்டுட்டோம்...”
“அதல்லாம்
பண்ணாதிங்க... ஒடம்பு சத்தத்துப்பொயிரும்....... இந்த பருப்பு சோத்த திண்ணா வெறுமனத்த
வாழ்வுதான் (வாய்வு) மிச்சமாவும். வெள்ளிக்கெழமயிலயும் அமாவாசையிலயும் அத திங்கறதுக்குள்ள
எங்குளுக்கு ஏம்பாடு ஓம்பாடு ஆயிப்போவுது......... ! பக்கத்தில ஒரு கச்ச கருவாடாச்சும்
கெடந்தாத்தேன் சோறு தொண்டைக்குள்ள எறங்குது......”
எங்களுடைய
சைவத்திற்கு ஈடு கட்டும் வகையில் பிரியாணி இன்னபிற அயிட்டங்களும் வீட்டில் இருப்பவர்களுக்கு
பார்சல் கட்டப்பட்டது.
”ரெண்டு
நாளைக்கிக்கெடந்தாக்கூட கெட்டுப்போவாது... செட்டி நாட்டு சமயக்காரனுவ பதுமையா பாத்துப்பாத்துப்பண்ணுவானுங்க.....
பிள்ளைங்களயாவது நெறவா சாப்புடச்சொல்லுங்க.........” பார்சல்களை வண்டியில் வைக்கும்
வரை தாத்தாவின் பதனமான கவனிப்பில் திக்கு முக்காடி விட்டோம்.
அசைவ இடங்களில்
காய்கறி சாப்பிடுபவர்களை ஒரு பாவப்பட்ட ஜந்துக்களாகவே நினைக்கிறார்கள்.பிரதமர் மோடி
ஜூன் முதல் வாரத்தில் பங்களாதேஷ் போயிருந்தபோது அந்த நாட்டு ஜனங்கள் “ ஐய்யோ பாவம்.........
மீன் சாப்பிட மாட்டாரா, இரால் சாப்பிடமாட்டரா.......இதெல்லாம் நீர் வாழைக்காய்தானே....?
வேறு என்னத்தைதான் அவருக்குக்கொடுப்பது?“ அங்கலாய்த்துத்தான் போய்விட்டார்கள்!!
வண்டி கிளம்பும்
நேரத்திற்கு தாத்தா கண்ணாடியில் எட்டிப்பார்க்கிறார். திறக்கிறோம்... ஐயா.... நீங்கள்ளாம் மெத்தப்படிச்சவங்க....
இருந்தாலும்
வயசானவன் ஒண்ணு சொல்றேன் “ நடுவால உட்டது திலும்ப நடுவால வந்து சேந்துகறதுல தப்பு ஒண்ணும்
இல்லிங்க......செத்த இந்த செவகங்கக்காரன் சொல்றத
கொஞ்சம் ரோசன பண்ணிப்பாருங்க......... சரிங்களா......பத்தரமா பொயித்து வாங்க..........
கும்பிட்டுக்கொண்டே
நின்ற தாத்தாவின் அசைவ அன்புக்கும் அடைக்கும் தாழ் இல்லாமற் போய் எங்கள் கண்களில் நீர்
மல்கிப் போயிற்று!
எனக்கும் அதே கதிதான் , நானோ சைவப்பிரியன், என் மனைவியோ சுத்த அசைவம் .கிடந்து அல்லாடுறேன் போங்க .
ReplyDeleteஅது சரி மேல படத்தில உள்ள இலைச்சாப்பாடு எங்கே கிடைக்கும்னு சொல்லலியே மேடம் .
அத்திபூத்தார் போன்ற கல்யாண விருந்துகள் வேறே தினப்படிக்கு நீர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வேறே.... ஒரே வழிதான் இதற்கு... பேசாமல் ஜோதியில் கலந்துவிடும்!!
ReplyDeleteதலை வாழை இலை சாப்பாட்டை பார்க்க வேண்டுமெனில் கூகிள் இமேஜ்....... உண்டு களிக்கவென்றால் திருவான்மியூர் வீடு என்றும் திறந்திருக்கும்!!
அன்புடன்
அத்திபூத்தார் போன்ற கல்யாண விருந்துகள் வேறே தினப்படிக்கு நீர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வேறே.... ஒரே வழிதான் இதற்கு... பேசாமல் ஜோதியில் கலந்துவிடும்!!
ReplyDeleteதலை வாழை இலை சாப்பாட்டை பார்க்க வேண்டுமெனில் கூகிள் இமேஜ்....... உண்டு களிக்கவென்றால் திருவான்மியூர் வீடு என்றும் திறந்திருக்கும்!!
அன்புடன்
ஆஹா , நினைக்கும்போதே நாவில் நீர் ஊருகிறது.நிச்சயம் அடுத்த ஆண்டு வருகிறேன் மேடம் .
ReplyDelete