அக்டோபர் முதல் நாள் பேப்பரை வாசிக்கையில் “உங்களுக்குப் பிடிக்காத விஷயம் என்ன?” என்று ஒரு
நடிகையிடம் கேட்கப்பட அவர்கள் இவ்வாறு பதில் சொன்னார்கள் “ பாட்டி என்று என்னை யார் கூப்பிட்டாலும்
எனக்குப்பிடிக்காது... நான் வயசானவள்தான்..... ஒத்துக்கொள்கிறேன்..... ஆனால் பாட்டி
என்ற சொல்லுக்கு ஒண்ணுக்கும் உதவாதவள் என்றுதானே நம் வழக்கில் பொருள் படுகிறது?”
பேட்டியின் எல்லாக் கேள்விகளுக்கும் சந்தோஷமாக பதில்
சொன்ன சுப்புலஷ்மி என்ற 80 வயது பெண்மணி இந்த பதிலை மட்டும் மிகுந்த வருத்தத்தோடு சொன்னார்.
இந்த வயதிலும் அவர் வெகு சுறு சுறுப்பாக ‘அம்மணி’ என்ற படத்தின் நடு நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்!
பாட்டி......
என்று கூவிக்கொண்டு பேரப்பிள்ளைகள் ஓடி வருகையில் ஆனந்தம் மனசுக்குள்ளே துள்ளி விளையாடுகிறது!!
ஆனால் தெருவில் போகிறவன் வருபவனுக்கெல்லாம் இந்த உரிமை இருக்கிறதா என்ன?
அது சரி
வயசான ஆண்கள் கடைக்கு வருகையில் “ வாங்க தாத்தா என்று யாராவது கூப்பிடுகிறார்களா? இந்த
ஆணாதிக்க இந்தியாவில் ஆண்களிடம்தான் எல்லா பவரும் இருப்பதை உள்உணர்ந்த இந்த சமூகம்
அவர்களுக்கு வேண்டிய மரியாதை கொடுப்பதில் இம்மியளவும் குறை வைப்பதில்லை!
ஒரு மருத்துவ மனையில் நடந்த நிகழ்ச்சி இது. அதிக
ரத்த அழுத்தம் காரணமாக ஒரு பெண் அங்கே அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அறைக்குள் வந்த
நர்ஸ் அவர்களை சந்தோஷப்படுத்தும் எண்ணத்தில்
சிரித்துக்கொண்டே “என்ன பாட்டி எப்டி இருக்கிங்க?” என்று கேட்ட பொழுதில் ஐவி ஸ்டேண்டோடு
ஆங்காரமாய் எழுந்து நின்ற அந்தப்பெண்மணி நர்சை கையை நீட்டி நீட்டி சரமாரியாகத் திட்டிய
வேகத்தில் அப்படியே மயக்கம் போட்டு தடாலென கீழே விழ ஒரு எமர்ஜென்சி சூழ் நிலையில் டாக்டர்கள்
ஐசியூவிற்கு அவரை துரிதமாக எடுத்துச் செல்ல
அவர்கள் உயிர் பிழைத்தது அந்த ஆஸ்பத்திரி செய்த போன ஜென்மத்துப்புண்ணியம் என்றே அங்கிருந்தவர்
அனைவரும் நம்பினர்!
அன்று சாயங்காலம் எல்லா ஊழியர்களும் கொண்ட அவசர
மீட்டிங் ஒன்று மருத்துவமனையில் கூட்டப்பட்டது. “உங்கள் பாசத்தைக்காட்ட யாரும் தயவு
செய்து யாரையும் உறவு முறையில் கூப்பிடாதீர்கள். இந்த நிமிடத்திலிருந்து மருத்துவமனையின்
வாசலில் நிற்கும் செக்யூரிட்டி முதல் ஸ்பெஷலிஸ்டுகள்வரைமேடம் என்ற வார்த்தையைத்தவிர
வேறு எந்த சொல்லையாவது உபயோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...... இதைக்குறித்து
வரும் சர்க்குலரில் நீங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டு கையெழுத்து இட வேண்டும்.”
இதைப்போன்றே இன்னொரு இடத்திலும்.......
ஓரு பெரிய ஜவுளிக்கடை....... சுறு சுறுப்பான காலை
நேரம்
கிட்டத்தட்ட ஐம்பது வயதான விற்பனையாளர் உள்ளே நுழைந்த
ஒரு பெண்மணியை “வாங்க பாட்டிமா” என்று வரவேற்றார். “என்னா பொடவ வாங்க வந்திருக்கிங்களா?”
என்று சொல்லிக்கொண்டே வயதானவர்கள் கட்டும் புடவையை எடுத்துப்போட ஆரம்பித்தார். மேல்
ஷெல்ஃபில் இருக்கும் புடவைகளை எடுத்துக் காட்டச்சொல்கையில் “ அதெல்லாம் ஒங்களுக்கு
சரிப்பட்டு வராது பாட்டிமா..... அதெல்லாம் சின்னவயசு பிள்ளைக கட்டுறது......”
அந்தம்மாவுக்கு அவர் வரவேற்ற முறையே சரியாகப்படவில்லை......
அவர் புடவை காட்டின வகையும் சரியாக இல்லை “ இது சின்ன வயசு பிள்ளைக கட்டுறது..” என்று
அவன் வாய் திறந்ததுதான் தாமதம்........ அவர் பொங்கி வெடித்துவிட்டார்..” ஏண்டா நானும் பேசக்கூடாது பேசக்கூடாதுண்ணு வந்ததிலேர்ந்து
வாயப்பொத்திகிட்டு நிக்கிறேன். ன் நீ எகிறிகிட்டே
போய்க்கிட்டு இருக்க...... இங்க பாரு.......எம்
பெரிய பேரனுக்கே 16 வயசுதான் ஆவுது...... அம்பது வயசு ஆளு நீயி..... என்ன பாட்டி கூட இல்ல எதுக்குடா பாட்டிமாண்ணு கூப்புடுற....?
நான் இன்ன பொடவதான் கட்டுணுமுண்ணு சொல்றத்துக்கு நீயி ஆருடா......? எம்புருஷனே அதச்
சொல்லமாட்டாரு....... தலயில மையத்தடவிக்குணு வந்தா மேடம் மேடம்ணு குழைவிங்க... என்ன
பாத்தா ஒனக்கு எளக்காரமா இருக்குல்ல...........
போ..... போ..... இண்ணைக்கி ஒனக்கு ஒரு வியாபாரமும் தக்காது....... ஒன்ன வேலய உட்டே
தூக்கச்சொல்லுறேன் பாரு.......கத்திக்கொண்டே கடையை விட்டு வெளியே போனவரை மற்றவர்கள்
மன்னிப்புக்கேட்டு நிறுத்த வந்த முயற்சி விழலுக்கு இறைத்த நீராய்த்தான் ஆகிப்போனது!
சில சமயங்களில் தனியாக கடைக்குச்செல்லும் வயசானவர்களை
வம்பிழுப்பதற்கென்றே அந்த ‘பாட்டி’ வார்த்தையை உபயோகிக்கிறார்கள்.
இதெல்லாம் பெருசா என்னத்த வாங்கி கிழிச்சிடப்போவுதுண்ணு
ஒரு அனாவசியமாகக்கூட இருக்கலாம். நடிகை சுப்புலக்ஷ்மி சொல்வது போல வயசான பெண்கள் செல்லாக்காசாய்த்தான்
கருதப்படுகிறார்கள்.
ஆனால் பத்திரிக்கைகளில் வயசானவர்களை ஈர்ப்பதற்கென்றே
வசீகரமான விளம்பரங்களைக் கொடுக்கிறார்கள். குழந்தைகள் கடமையெல்லாம் முடிந்து அக்கடா
என்று கை நிறையக்காசுடன் இருக்கும் வயதானவர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு செலவு பண்ணக்கூடிய
நிலையில் அல்லவா இருக்கிறார்கள்?! வாழ்க்கை பூராவும்தான் உழச்சு ஒழச்சு மாண்டு போனோம்.
கடைசி காலத்திலாவது சுகமாக இருக்கலம் என்ற
எண்ணம் அவர்களிடையே. அவர்களுக்குவேண்டிய வசதிகளை அள்ளித்தரும் சொகுசு வீடுகளுக்குத்தான்
எத்தனை விளம்பரங்கள்?! டாக்டர் வயதானவர்களை அணைத்தெடுத்து “ நான் உங்களுக்கு நல்ல மருத்துவம் மட்டுமல்ல அதை அரவணைப்புடன் அன்புடன் தருவேன் வாருங்கள் எங்கள்
மருத்துவ மனைக்கு.” என கட்டிப் பிடி வைத்தியக் காட்சிகள் கொண்டமுழுபக்க தகவல்களாக.....
ஆனால் இந்த மனப்பாங்கை உபயோகப்படுத்திக் கொள்ளத்தெரியாத
சிலதுகள்தாம் இதைப் போல அவர்கள் மனசைப் புண்படுத்துகின்றன.
தமில் பெண்களை அழைப்பதற்கெண்று ஒரு அழகான வார்த்தை
உண்டு. யார் மனதையும் புண்படுத்தாத இந்த வார்த்தையை இன்றே பிறந்திருக்கும் பெண்குழந்தைக்கும்
படுத்த படுக்கையாய் கிடக்கும் வயதானவர்களை அழைக்கவும் உபயோகப்படுத்தலாம். அம்மா என்ற
அந்த சொல் பிரபஞ்சத்தில் உறையும் எல்லா அன்பின் பிரதிபலிப்பு. “ பாட்டி பாத்து போ”
என்றால் “எங்கயும் உழுந்துந்தொலஞ்சிறாதே”என்ருதான் அர்த்தம் “பாத்து போங்கம்மா” என்றால்
அது அக்கறைவெளி நாடுகளிள் நம்மை யாரும் உறவு முறையில் கூப்பிடுவது இல்லை. நம்மைப்பெயரிட்டு
அழைப்பது முதலில் நமக்கு அதிர்ச்சியாய் இருந்தாலும் நாளடைவில் நமது தனித்துவத்தை அது
உணர்த்துகிறது என மகிழ்ச்சி கொள்கிறோம்.
வட இந்தியாவில் கூட கடைகளில் நம்மை பஹன்ஜி அல்லது
மாஜி என்று அழைப்பார்களே தவிர நானிஜி (பாட்டி) என யாரும் அழைப்பதில்லை.
வயதானவர்களுக்குத்தரும் மரியாதை மனம் புண்படாவண்ணம்
அழைப்பதுவும்தான்!
No comments :
Post a Comment