Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Friday, 2 October 2015

அம்புட்டு தூரம் போனியே ராணியோடு கை குலுக்குனியா

1961 பி.ஏ. இரண்டாவது வருடம். பொருளாதாரத்திற்கு துணையாக படிக்கவேண்டிய கிளை உலக அரசியல். எங்கள் விரிவுரையாளருக்கு நாங்கள் சூட்டியிருந்த பட்டப்பெயர் “மழை மனிதன்”. எங்கள் காலேஜின் அறைகள் பிரமாண்டம். விரிவுரையாளர்கள் நிற்கும் தளமும் நல்ல உயரத்தில் கெத்தாக இருக்கும். ஆனால்

இந்த மனிதரோ கீழே இறங்கி வந்து மாணவர்களோடு மாணவர்களாக  நின்று அபிநயம் பிடித்து உணர்ச்சிவசமாகத்தான் பாடம் நடத்துவார். நடத்தும் பாடமோ அவருக்கு அத்துப்படி. அவர் வாயினின்று இறங்கி வரும் மழையும் இதில் சேர்த்தி!
“முதல் டெஸ்க்குகளும் உங்களுக்குத்தான் சொந்தம்.” விகல்பமில்லாமல் அவர் சொன்னாலும் தற்காப்பு கருதி ஒரு சிரிப்போடு அவரை கழற்றி விடுவோம். இடுக்கி முடுக்கி உட்கார்ந்தாலும் முதல் மூன்று டெஸ்க்குகளையும் அவருக்கே சாசனமாக்கிவிடுவோம்.

அந்த ஜனவரியின் பாடம் இங்கிலாந்தின் எழுதப்படாத அரசியல் சாசனம் பற்றியது. இதை உலகத்திலேயே மிகப்பெரிய எழுதப்பட்ட இந்திய  அரசியல் சாசனத்தோடு ஒப்பிட்டு சொன்ன அவர். “ இந்திய  அரசியல் சாசனத்தை முழுதுமாகப் படித்திருக்கும்  நம் அரசியல் வாதி ஒருவரை நீங்கள் காட்டினால் என் சொத்து முழுவதும் உங்களுக்கே” என சூளுரைப்பார். ஆனால் எழுதப்படாத தொன்று தொட்டு வரும் அரசியல் சாசனம் எவ்வளவு நுணுக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை அவர் விளக்குகையில் நாமும் அதை தொடரக்கூடாது என்ற ஏக்கமே நமக்கு வந்துவிடும்.

“இங்கிலாந்தின் அரசி அந்த நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.  இரண்டாம் எலிசெபெத் ராணி பதவிக்கு வந்த கதை உங்களில் யாருக்காவது தெரியுமா?
ராஜா தேசிங்கு மாதிரி உள்ளூர் சரக்கு ஏதாவதைக் கேட்டிருந்தால் ஒரு வேளை  நாங்கள் யாராவது சொல்லும் ஏதுக்கள் இருந்தது. ஏழு கடல் தாண்டி ஏழாயிரம் மைலுக்கு அப்பால் உள்ள கதையை அவர்தான் சொல்ல வேண்டும். எங்கள் பதிலுக்குக்காக அவர் நிற்கவில்லை. அரசி மேல் கொண்டிருந்த  அபரீத  அன்பின் காரணமாய் தொடர் மழையோடு கதையைத் தொடர்ந்தார் 
“ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவும் அப்போது
இந்தியாவைப் போலவே இங்கிலாந்தால் ஆளப்பட்டது. அங்கு உல்லாசப்பயணமாக சென்ற இளவரசி மரத்தில் கட்டப்பட்டிடிருந்த வீடு ஒன்றில் தங்கி மகிழ்ந்திருந்தார். மரவீட்டிற்குள் சென்ற போது அவர் ஓர் இளவரசிதான்..... ஆனால்  வெளியே வந்த போதோ  இங்கிலாந்தின் மகாராணி ஆகிவிட்டார் பாருங்கள்” என புளங்காகிதம் அடைந்து போனார் அவர்
எலிசெபெத்தின் அப்பா  நான்காம் ஜார்ஜ் அரசர் இறந்து போன செய்தி எங்கள் விரிவுரையாளருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.........  அந்த 1953ல் இளவரசி மகாராணியான விந்தையை அவர் சிலாகித்துக்கொண்டே இருந்தார்.
“அரசர் இறந்துவிட்டார்... அரசர் நீடுழி வாழ்க” என்ற வாக்கியத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதும் அவரே. தங்கு தடங்கல் இல்லாமல் தொடர்ந்து நீடிக்கும் அரச தலைமையைப்பற்றியும் விளக்கினார்

“இந்த பெருமதிப்பிற்குரிய மாகாராணி அடுத்த மாதம் இந்தியா வருகிறார். அவர் மெட்ராசுக்கு விஜயம் செய்வது நமக்கு எவ்வளவு பெரிய பெருமை! இது பூர்வ ஜென்ம பலனாய்த்தான் இருக்க வேண்டும்......”.
தொடர்ந்து அலை வாரியாக அடித்த ‘ராணி சுனாமியில்’ திக்குமுக்கு ஆடிப்போன நாங்கள் ஒரு திட்டம் போட்டோம்.
வகுப்பில் நாங்கள் 9 பெண்கள். இதில் 3 பேருக்கு மெட்ராசில் நெருங்கிய சொந்தங்கள் உண்டு. நெருங்கிய சொந்தங்கள் வீட்டுக்கே வயசுப் பெண்களை அனுப்பாத கட்டுப்பட்டிக் காலம் அது. அதனால் மீதி 6 பெண்களுக்கு கிஞ்சித்தும் மெட்ராஸ் செல்லும் வாய்ப்பு கிடையாது.
காலேஜில் கூட ஒவ்வொரு மணி நேரத்துக்கும் வகுப்புகள் மாறிச்செல்கையில் விரிவுரையாளர் வகுப்புக்கு வரும் வரை பெண்கள் நாங்கள் வெளியே காத்து நிற்போம். அது போல வகுப்பு முடிந்தபின் விரிவுரையாளர் நாங்கள் வெளியே செல்லும் வரை காத்திருப்பார்.

அந்த மாதிரியான ஒரு சூழ் நிலையில்தான் என் வீட்டில் இந்த சம்பாஷணை
‘மெட்ராசுக்கு இங்கிலாந்து ராணி வர்ராங்க......’
‘ம்ம்ம்ம்ம்ம்........’
‘அவங்களப்பத்தி எங்குளுக்கு பாடம் இருக்கு....’
‘ம்ம்ம்ம்ம்ம்ம்.......’
‘அவங்களப்போய் பாக்குணுமுண்ணு ஆசயா இருக்கு....’
‘அதெல்லாம் வேணாம்’
‘இந்த ஒரு தடவ.......’
‘யாரெல்லாம் போறா...... பையங்களா...?’
‘இல்ல இல்ல.... நாங்க மூணு பொம்பளப்பிள்ளக........ அவுங்களுக்கும் சொந்தக்காரங்க வீடு இருக்கு ஒரு தந்தி அனுப்பினா அவங்கவங்க ஸ்டேஷன்ல வந்து கூட்டிகிட்டு பொயிடுவாங்க. பொம்பளைங்க கோச்ல பொயிட்டு அதுலய திரும்பி வந்துடுவோம்.’
‘திட்டமெல்லாம் வலுவாத்தான் போட்டிருகாப்ல இருக்கு..... அந்த பிள்ளக அம்மா அப்பா சம்மதிச்சிட்டாங்களா........’
‘ஏகமாகத்தலையாட்டினேன்...... பொய்தான்... வேறே வழி.....!’
அதுகளும் என்னைப் போலவே அல்லாடிக் கொண்டிருப்பதையா சொல்லமுடியும்........?
‘நீங்க வேணாண்ணா...........’
கடைசி அஸ்திரம் அது.....
உபயோகப்பட்டது..... ஹா.......ஹா!
‘மெட்ராசு கெட்டு போய் கெடக்குற சினிமாக்காரன் ஊரு..... நீ பாட்டுக்கு தனியா பொயிராதே.... அக்கா கூட இல்ல அத்தான் கூடத்தான் வெளிய போவணும்......’

ராணியைக்கண்டேன் மூன்று இடங்களில்..... அண்ணா சாலை..... எக்மோர் குழந்தைகள் மருத்துமனை... ஆனால் இதற்கெல்லாம் சிகரம் வைத்தது செக்ரடேரியட்தான்! அத்தானின் நண்பர் ஒரு மந்திரியின் காரோட்டி. அந்த கிருபையில் நிதானமான ராணியின் தரிசனம்....... சிரித்துக்கொண்டே கையுறை போட்ட கை ஆட்டிக்கொண்டே பூ வைத்த  தொப்பியில் தேவதை போல......
ஊரில் நிற்பவர் பார்ப்பவர் அனைவருக்கும் ராணி கதைதான்....... அலுக்கவேயில்லை எனக்கு
வீட்டில் பொடிசு பொட்டுகளெலாம் வாயைப்பிளந்து கதையை வாங்கிக்கொண்டார்கள்.
“சரி ஆத்தா....... கையி நெறயா காசு போட்டு ரயிலில ஏறி அம்புட்டு தூரம் மெட்ராசுக்குப் போனியே அந்தம்மாவைப் பாத்தியே....... கெட்டிக்காரியா இருந்தா நீயி ஒரு வெசயம்ல பண்ணியிருக்கணும்......அந்த தொரசாணி கைய குலுக்கினியா...?”
ராணிக்கதை மதர்ப்பில் இறுமாந்திருந்த எனக்கு நடு மண்டையில் நச்சென ஒருகுட்டு....... வீடு பெருக்கும்  செல்லி ஆயா.....

எப்போது ராணியை நினத்தாலும் எனக்கு மெட்ராஸ் கதையெல்லாம் மறந்து போய் மனதில் பதிந்து போன அந்த கெழவி சொன்ன ஒரே வரி
“அம்புட்டு தூரம் போனியே..... அந்த தொரசாணி கைய குலுக்குனியா....?”
வருடங்கள் பல உருண்டு இரண்டு குழந்தைகளுடன் ஓடியாடிதில் பக்குவமும் வேதாந்தமும் மனசு  நெறைய....... அந்த நாள் விடலைப்பருவத்தின் கிறுக்குத்தனத்தை நினைத்து அவ்வப்போது சொந்தமாக சிரித்துக்கொள்ளுவேன். அரசியும் நம்மைப்போல் ஒரு மனுஷிதானே..... என்ற விவேகம்.

1997களில் ஆபிசில் நிர்வாகப்பொறுப்பு....... இண்டர்காமில் இவரிடமிருந்து ‘கொஞ்ச நேரம் வர்ரியா’ என்ற அழைப்பு.......
எந்த மாதிரியான இக்கட்டு எந்த ரூபத்தில் ஆபீஸ் கேட்டில் இன்று நிற்கிறதோ தெரியவில்லை.........
 உள்ளூர் அரசியல்வாதிகள்.... .......... லேபர் இன்ஸ்பெக்டர்......  பொல்யூஷன் கண்ட்ரோல்,,,,,,இன்னபல........இன்னபல
“இந்தா” என என்னிடம் ஒரு கார்டை நீட்டினார்
பிரிட்டிஷ் எம்பசி முத்திரையுயன் கூடிய ஒரு இன்விடேஷன் அது. இங்கிலாந்து ராணி  இரண்டாம் எலிசெபெத் சென்னைக்கு வர இருப்பதாகவும் எங்கள் இருவரையும் சந்திப்பது அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இது எப்படி சாத்தியமானது? பிரிட்டிஷ் எம்டிஎல்லும் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்த அந்த இந்திய எம்டிஎல் அமோகமாக சென்று கொண்டிருந்ததால் எங்களுக்கு இந்த வரவேற்பு!
 அன்று எம்பசி மக்கள் வரிசை முடிந்ததும் சி ஐ பி வரிசையில் நாங்கள் முதன்மையாக கை குலுக்கினோம். நமது ஜாயிண்ட் வென்ச்சரைப்பற்றி இவர் சொன்னதை கூர்ந்து கேட்ட அரசி  இன்னும் வளம் பெற வாழ்த்தினார்கள்.

தொடராய் என் மனசிலே ஒரு கூவல் “ஏ கெழ செல்லி ஆயா.... அண்ணைக்கி என் மூக்க ஒடச்சில்ல.........இந்தா புடி.... ஒன் தொரசாணியோட இண்ணைக்கி கை குலுக்கிட்டேன்....... கை குலுக்கிட்டேன்... எந்த லோகத்துல நீ இருந்தாலும் காதில வாங்கிக்க.... வாங்கிக்க....”


செப்டம்பர் 9,2015 இரண்டாவது எலிசெபெத் அரசி விக்டோரியா அரசியை மிஞ்சி 63 வருடங்கள் 216 நாடள் ஆட்சி புரிந்துள்ளார் இன்னும் தொடர்கிறார் என்ற பத்திரிக்கை செய்தியை இங்கிலாந்தின் நார்விச் நூலகத்தில் நான் வாசித்தபோது இந்த பழைய நினைவுகள் மத்திட்ட வெண்ணையாய் திரண்டு வர அதையே உங்களுடன் இன்று பகிர்ந்து மகிழ்கிறேன்!

No comments :

Post a Comment