வா மனு.. வா வா....... உக்காரு..... சும்மா வர்ர ஆளு இல்லியே நீ..... என்னா விசேஷம் வீட்ல..?
ஆண்ட்டி எங்க வீட்ல இந்த வருஷமும் திரும்பவும் சர்ச்ச..... நீங்க
பலகாரம் அனுப்பிச்சவொடனே அது ஆரம்பமாகிப்போவுது.......
வருஷா வருஷம் இந்த மனுஷி அதையேதான் அனுப்புது... இவுங்களுக்கு
அந்த நெய்யுருண்ட முறுக்கு அதிரசம் வுட்டா வேற எதுவும் புதுசாத்தெரியாதாண்ணு பேசிக்கிட்டிங்களாக்கும்.......
ஐய்யயோ... ஆண்ட்டி.....தயவுபண்ணி ஒங்க மெனுவ மட்டும் மாத்திராதிங்க...
இந்த மூணு அயிட்டமும் எப்படா வரும்முண்ணு பாத்துகிட்டு இருக்க ஆளுங்க நாங்க..... சர்ச்ச
வெஷயமே வேற... ஒங்க ஏரியாவுக்கு நாங்க வந்து 5 வருஷமாவுது...... இந்த அஞ்சு வருஷத்லயும்
நீங்க பலகாரம் அனுப்புற பையி ஒங்க அயிட்டங்களாட்டமே மாறவே இல்ல.... லல்லு சொல்லுது இந்த பைக ஏதோ நிண்ணு போன கலியாணத்தோட தேங்கா பழம்
பையாட்டம் இருக்கு... யாரு கண்டா...? வரதஷண பிரச்னயா இல்ல காதல் விவகாரமா... இப்படித்தான்
ஏதாவது இருக்கும். ஆண்ட்டியும் அந்த கல்யாணம் பண்ணுனவங்களும் நண்பர்களா இருந்திருக்குணும்
இவுங்க ப்ளாஸ்டிக்க பைய உபயோகிக்கமாட்டாங்க..... அதனால இந்த நல்ல பை வீணாப்போகுதேண்ணு
நெறய பைய உபயோகிக்கிற அவுங்ககிட்ட இதயெல்லாம் குடுத்துருப்பாங்க.. அந்த வகையிலதான்
நமக்கு அஞ்சு வருஷமா அதே பை வருதுங்குது அந்த துப்பறியும் பொண்ணு!
“நீ என்னப்பா சொன்ன?”
நான் சொன்னேன் “நீ சொல்ரதெல்லாம் சரியாவே இருக்கட்டும்.. ஆனா நீ சொல்றமாரி
நிண்ணு போன கலியாணமா மட்டும் இருக்காது.... அந்த மாரிப்பைய யாரும் குடுக்கமாட்டாங்க....கல்யாண
ஏற்பாட்ட கவனிச்சுகிட்ட ஏதோ ஒரு சொந்த பந்தம்
மானாவாரியா பைகள வாங்கி தள்ளியிருக்குணும்.
இந்த விஷயம் வருஷாந்திர பட்ஜெட் மாதிரி எங்குளுக்கு வருஷாந்திர
வாக்குவாதமா போயிருது....... சரி அரிச்சிகிட்டே கெடக்குற இந்த சந்தேகத்தை இண்ணைக்கி
பைசல் பண்ணிடணும்னுணுதான் ஒங்கள அநாவசியமா டிஸ்டர்ப் பண்ணுறேன்..”
“நீ எங்க வீட்டுக்கு எப்ப வந்தாலும் சரி எப்டி வந்தாலும் சரி
எங்குளுக்கு சந்தோஷம் தான் மனு... என்னா ஒண்ணு லல்லுவும் வந்திருந்தா நான் சொல்லப்போற
கதய எல்லாரும் பச்ச டீ குடுச்சுகிட்டே இன்னம் ஸ்வாரஸ்யமா ஆக்கியிருக்கலாம்....”
“வாழ்க்கையில பல பேர் கொள்கப் பிடிப்போட வாழுறாங்க.. அதனாலதான்
வழிகாட்டியா இருக்காங்க..... நான் சொல்லப்போற பையனோட குடும்பம் ரொம்ப சாதாரணமானது...... இந்த சாதாரண பையன் ஒரு சாதாரண
தேங்கா பை வழியா நமக்கு ஒரு பெரிய கொள்கயயில்ல வெளிக்காட்டியிருக்கான்..... கதயக்கேளு.”
அவனோட அம்மா ஒரு விதவ..... கஷ்ட ஜீவனம்....அதோடயே தன் பையன எஞ்சினியரிங் டிப்ளமா படிக்க வச்சிது.... டிப்ளமா
முடிச்சதும் வேலைக்கி பொயிருவாண்ணு பாத்தா டிகிரி பண்ணிப்புடுறம்மா...... அத பண்ணிபுட்டா
சுலபமா நெறயா சம்பளத்தோட வேல கெடச்சிரும்முண்ணான்.... கடன ஒடன வாங்கி படிச்சிட்டா வேலைக்கி
போன ஒடன வட்டியும் மொதலுமா அடச்சிப்புடலாமுண்ணும் சொன்னான். தன் பையனப்பத்தி அம்மாவுக்கு
நல்லாவே தெரியும். தொல்லதராத ஒரு பிள்ள..... வீட்ல பழய சோறு கெடந்தாக் கூட
பேசாம தின்னுட்டு போறவன்....... அம்மா பையன படிக்கவச்சுது.....மூணு வருஷம் பல்ல
கடிச்சிகிட்டு கட்டுசெட்டா இருந்து டிகிரிய கையல வாங்கியாச்சு. ஆனா சரளமா இங்கிலிஷ்
வராத அவனுக்கு வேல கெடைக்கிறது சுலமாயில்ல... இந்தம்மாதான் தெரிஞ்சவங்க கொண்டவங்க காலப்புடிச்சி
சுமாரான வேல ஒண்ணும் வாங்கிகுடுத்துடுச்சு... அடுத்தது கலியாணம்.....
கலியாணத்துக்கு முந்தின நாளு சாய்ங்காலம் வீட்ல தேங்கா பை வந்து
எறங்குது...... அவனோட பிரண்டு பசங்கள்ளாம் பை போடுறதுக்கு கூட்டமா
உக்காந்திருக்கானுக.... பையன் கட்ட அவுக்குறான்... பையில “தங்கள்
நல்வரவுக்கு நன்றி”ங்கிற வார்த்தைக்குக் கீழ அவனோட சித்தப்பா சித்தி பேரு அடிச்சிருந்தது.......
“அம்மா இங்க வா...” கொரல் ஓங்கிக்கெடந்துச்சு
“என்னாப்பா..?”
“இது என்னா வேல பண்ணியிருக்க....?
பையத்தூக்கி அம்மாகிட்ட
காட்டுறான்.
“ஏம்ப்பா... தேங்கா பையிதான்....... பையி அழகா இருந்துச்சு......கொஞ்சம் வெல கூட.....
பரவால்லண்ணு வாங்கிபுட்டேன்........நீதான் பத்திரிக்கையே வேணாமுண்ணுட்ட... கம்பீட்டர்ல்
அனுபுச்சுபிடலாமிண்ணுட்ட…. சொந்த பந்தத்துக்கெல்லாம் பழங்காலம் மாதிரி நேரிடையா வெத்தல
பாக்கு ஓல குடுத்துட்டோம்.. நீயி இம்புட்டுகொள்ள கஸ்டப்பட்டு படிச்சிருக்கியே அது ஊரு
ஒலகத்துக்கு தெரியவாணாமா...? ஒனக்கு வாய்க்கப்போறவளும் பெரிய படிப்பில்ல படிச்சிருக்கா......இந்த
படிப்பயெல்லாம் கலியாணப்பையில போடம நானு எங்குட்டுபோடுவேன்? சரி சரி அதுக்கு போயி இந்த
நேரத்துல வேகப்படாத...... செலவப்பத்தியும் கவலப்படாத.........அம்மா ஜமாளிச்சிருவேன்....”
அவனுக்கு கோவம் இன்னம் பொத்துகிட்டுவந்துச்சு.....
“வெல கூட குடுத்து வாங்குன பையப்பத்தி நான் பேசுல எம் படிப்பப்பத்தியும்
பேசுல...... அதுல வேற என்னா அச்சடிசிருக்க.......?”
“ஏம்ப்பா சித்தப்பா சித்தி பேருதான் ஒன் அப்பாவோட கூட பொறந்தவரு
அவுரு ஒண்டிதான கெடக்காரு....”
ஓகோ வெஷயம் அப்புடிபோவுதோ......? அந்த அப்பா செத்தப்பறம் நம்மள
பிச்சக்காரங்களா ஒதுக்கி வச்சாரே அவுரு பேரு.....
நான் காலேஜுக்கு போரதப் பாத்து கரிச்சிக்கொட்டினாரே அவுரு பேரு...... நீ இந்த வேல தான்
ஒஸ்தி இந்த வெல மட்டம்ணு பாக்காம எனக்காக ஒழச்சப்ப
காறித்துப்பினாரே அவுரு பேரு..... என் கலியாணத்தில தேங்கா பையில இண்ணைக்கி ஏறி நிக்குணும்......
இல்ல......
நீ ஒம்பேர போட்டுல்ல அடிச்சிருந்திருக்குணும்.”
“இல்லப்பா...... அதுதான் மொற....... எம்பேரு மங்களமான
இந்த காரியத்துல...... வரப்புடாது”
“ஒம்மொறயத்தூக்கி குப்பையில போடு...... ஒம்பேர போடுறதுதான் எனக்கு
மொறம்மா......மங்களம்மா....... இங்க பாரு இந்த
தேங்கா பைய நீ குடுக்கத்தான்போறண்ணா எனக்கு இந்த கலியாணமே வேணாம்... பேசாம பொண்ண கூட்டிகிட்டி
போயி ரெஜிஸ்டர் கலியாணம் பண்ணிகிட்டு வந்துருவேன்” பையன் உறுதிபடச்சொன்னான்...
நண்பர்களோ “பரவால்லப்பா...
அம்மா மனச கஷ்டப்படுத்தாதே ......இத ஏன் பெருசு பண்ற? கொஞ்சம் உட்டுக்குடுத்து
தான்போயேண்ணு” சொன்னதெல்லாம் அவன் காதில் ஏறவேயில்லை... ஒரே புடியாத்தான் நிண்ணான்.
அம்மா உடனடியாக அவங்களுக்கு வேண்டியப்பட்டஒருத்தருக்கு போன்
பண்ணி இதைப்பற்றி புலம்ப “பையன் சரியாத்தாம்மா சொல்றான்.. சரி சரி கவலப்படாத.... நான்
பாத்துக்குறேன்...” என்றவர் உடனடியாக பாரிசில் ஆண்டர்சன் தெருவுக்குப்போய் (சென்னை)
பொத்தாம் பொதுவுல ”நன்றி” ண்ணுமட்டும் போட்டிருக்கிற பைய வாங்கிட்டு வீட்டுக்கு வந்தவரு நண்பர்களைப்பார்த்து “மடமடண்ணு பை போடுற வேலயப்பருங்கப்பா..”
என்ற கட்டளையைக்கொடுத்துவிட்டு “தம்பி ஒங்களோட ஒசந்த எண்ணங்கள மனசார பாராட்டுறேன்..... ஒங்க எடத்துல நானே இருந்திருந்தாக்கூட இந்த மாதிரியான
ஒரு முடிவ எடுத்திருப்பனாங்கறது சந்தேகந்தான்...... இந்தப் பைகள என்னுடைய கலியாணப்பரிசா ஒங்குளுக்கு குடுக்குறண்ணு சொல்றதவிட
இந்தபை வழியா எனக்கு நீங்க பெரிய வாழ்க்கைப்பரிசு குடுத்துருக்கீங்க.........ரொம்ப சந்தோஷம்.” என்றார். பையன் அவர் காலைத்தொட்டுக்கும்பிட்டான். நிறைந்த
மனதுடன் அவரது பைகள் கலியாணத்தில் கலந்துகொண்டன. அச்சடித்த ஒசத்திப்பைகள் இன்று என்
வசம்... போதுமா கத......!?
“அப்பறம் மனு......
ஒரு விஷயம்.........இந்தப்பைகள் தீருறமுட்டும் ஒரு சாதாரணப்பையனின் அந்த கொள்கை பறைசாற்றுப்பை
உங்களுக்கு வந்து கொண்டேதான் இருக்கும் .... ஆட்சேபணை ஒன்றும் இல்லையே?!!
நான் சிரித்தேன்!!
உணர்ச்சிவசப்பட்டுப்போனான்
மனு!!
No comments :
Post a Comment