ஆண்டுக்கணக்காய் வீட்டோடு ஆள் என்ற சுகானுபவத்தில் திளைத்து
இருந்துவிட்ட நான் திடீரென ஒரு நாள் ஆளே இல்லாத வீட்டில் இருப்பதை முதல் நாள் பெரிதாக
எடுத்துக்கொள்ளவில்லை...... இதுவும் ஒரு சுகந்தானோ?!
இருடி செல்லம்.... ஒனக்கு செமத்தியாய் இருக்குல்ல…..
ஆட்டி வைக்கப்பட்டிருந்த மாவில் காலையில் இட்லி சுட்டது
பெரிசாக இல்லை..... பழைய சாம்பாரில் கதை முடிந்துவிட்டது..... கை கழுவியவுடன் கதை அடிக்க
வெராண்டாவுக்கும் போய் முடித்தாயிற்று.
வீடெல்லாம் கூட்டி துடைத்து முடித்து விட்டு என் ஆளிடம்
இருந்து “என்னாம்மா சமைக்கலாம்?” என்ற கேள்வி வரும் வரை வரும் வரை கம்ப்யூட்டரில் ப்ளாக்,முகப்புத்தகம்,சுடோக்கு என்ற வரிசையில்
கலக்கல்......!! .மெனுவை சொல்லி முடித்துவிட்டால் இன்னொரு பாட்டம்!!
இன்றைக்கோ அந்த ஆளில்லை.......மணியைப் பார்க்கிறேன் உடம்பை
முறித்துக்கொண்டே எழுந்து உள்ளே போகிறேன்......
பாத்திரப்பூதங்கள் அடுப்பாங்கரையில் உட்கார்ந்திருந்தன.
மாவு தூக்கு,இட்லி சட்டி இட்லி மூடி இட்லி தட்டுகள் காபி பாத்திரங்கள் காபி
மக்குகள் தண்ணீர் டம்ளர்கள் சாப்பிட்ட தட்டுகள் சாம்பார் சுட வைத்த சட்டி சட்டியிலிருந்து
ஊற்றி மேசைக்கு எடுத்து வந்த பாத்திரம் அதனுடைய மூடி கரண்டிகள் இத்யாதி அங்கு நீக்கமற
நிறைந்திருந்தன. சட்னி ஒன்று அன்று அரைத்திருந்தால்....! மலைப்பாய் இருந்தது.
இந்தியாவுக்கென்று அதுவும் தமிழ் நாட்டுக்கென்று அண்டா
குண்டா பாத்திரங்களை உள்ளே தள்ளும் வகையில் ஒரு டிஷ் வாஷரைக் எவன் என்றைக்கு கண்டுபிடிக்கப்போகிறான்......?
“இட்லிக்கு ஒரு வழியாய் தலை
முழுவிடுங்களேன்”
ஸ்கைப்பில் வந்தது எனது பெண்ணின் அறிவுரை.
விவரம் தெரிஞ்சதிலிருந்து இட்டிலியைக்கண்டு அலண்ட ஜாதி
என் பெண்.....! ஒரு தரம் வீட்டிற்கு வந்த வெளி
நாட்டு நண்பர் ஒருவர் நம் இட்டிலியை' ' 'ஆவி விடும்வெள்ளை பூதம்' என தான் பயந்து போனதை கவிதையாக
வடித்து ஊருக்குக் கிளம்பு முன் எங்களுக்கு
படித்துக்காட்டினார்.... மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஒரு மாதிரியாய் நாங்கள் ஒப்புக்கு சிரிக்க ஹிப் ஹிப் ஹுரேயோடு அப்ளாஸ்
கொடுத்து அக்கவிதையை ரசித்தவள். என் பெண்!!
இன்றைக்கும் அவளிடம் மாற்றம் ஒன்றும் இல்லை.
"இவ்வளவு வேல வாங்குற இட்லிய
சுட்டே ஆவுணுமாம்மா?" அழுத்தமா கேள்வி
“பொறந்த பிள்ளைக்கி பால நிறுத்திடுங்களேன்” ணு
எந்த முட்டாளாச்சும் சொல்லுமாம்மா? ஒரு தமிழ் பெண்ணிற்கு ஒரு சட்டி இட்லி மாவு ஃபிரிஜ்ஜில்
உட்கார்ந்திருப்பது எவ்வளவு பெரிய ஆறுதல்! அது எடுக்கும் அவதாரத்துக்கு கணக்கு உண்டா
என்ன?! இட்டிலியாய்,கல் தோசையாய், இரட்டை தோசையாய், மசால் தோசையாய், பேப்பர் ரோஸ்ட்டாய், பணியாரமாய் தினுசுதினுசான
ஊத்தப்பங்களாய் உருக்கொண்டு பரிமளிக்கும் மந்திரக்கோலும்மா அது...! இன்னம் கேளு உலக
சுகாதார நிறுவனம் உலகத்திலேயே இட்டிலியைப் போல் சத்தான எளிதான உணவு வேறெதுவுமில்லைண்ணு
சொல்லியிருக்கு... இப்பயாச்சும் அது மகிமைய புரிஞ்சிக்க”
ஒங்கள இனிமே கையில புடிக்கமுடியாதே.... அந்த இட்டிலி மாவையாவது
சுலபமாக்கிக்கொள்ளுங்களேன். இப்பதான் ரெடி மேட் மாவு கடைகள்ள விக்கிது. பாக்கெட் பாக்கெட்டா
வாங்கி அடுக்கிகிட்டு ஒரு வேளை என்னா மூணு வேளையுமே இட்லி சாப்புடுங்க..”
நக்கலாய் வந்தது ஸ்கைப்!
எனக்கு ரோசம் வந்தது.....
பாலிதின் பாக்கெட்டுகள்.... ! “எவ்வெளவுக்கு எவ்வளவு பாலித்தினைக்
கொறைக்கலாமுண்ணு நான் பாடு படுறேன்.. நீ என்னாண்ணா என் வீட்டுக்குள்ளயே அத சேத்து வச்சுக்கடிங்கிற.... அது ஒரு பக்கம்ணா அந்த மாவ சுத்தமா தர்றாங்களா அதுல
சோடா மாவு போட்டுருக்காங்களா இல்ல புளிப்பு ஏறாம இருக்க போரிக் பவுடர் சேக்கிறாங்களாண்ணு
யாரு நமக்கு உத்தரவாதம் தர்ராங்க?
ஒரு நா பேப்பர்ல வந்த சேதியக்கேளு.... இந்த பேக் பண்ணுன
இட்லி மாவ சோதன பண்ணி பாத்ததுலஅதுல மனித மலக்கழிவு துளிகள் இருக்கறத கண்டுபுடிச்சிருக்காங்க.....
யான பசிக்கி சோளப்பொறி போட்டமாதிரி டூத் பேஸ்ட்ல
பிதுக்குற மாவு எனக்கெல்லாம் சரிப்படாதும்மா.....” அன்று கொஞ்சம் ஆத்திரத்தோடுதான்
ஸ்கைப்பை மூடினேன்.
இரண்டு வாரம்...... இருவரும் தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே.........
ஒரு நாள் “ அம்மா எனக்கு ஒரு உதவி செய்விங்களா..?.”
இட்டிலி குறித்து இருவருக்கிடையே ஏற்பட்ட இரண்டு வார விரிசல்
உறுத்த மனசு நெகிழ்ந்து “சொல்லும்மா” என்றேன்.
இட்டிலி விஷயமாகத்தான்...... நீங்க எனக்கு ஒண்ணு அனுப்பிச்சு
வைக்கணும்.” என்ற என் பெண்ணின் வார்த்தைகள் என் காதில் தேனாய்ப் பாய்ந்தது
வெகு உற்சாகமாக “சொல்லும்மா.....”என்றேன்
இட்டிலியின் மகிமை இவ்வளவு நாள் கழித்தாவது என் பெண்ணின்
மனசுக்குள் இறங்கியிருக்கிறதே.... எம் முன்னோர்கள்
சாம்பார். சட்டினி கொத்சு வகையராக்களுடன் சுவைத்து சுவைத்து வெட்டிய கோடான கோடி இட்டிலிகளின்
பூர்வ ஜென்மத்து பலன்தானோ இது...! ஒரு சின்ன கிரைண்டரும் அலுமினிய இட்லி சட்டி ஒண்ணும்
போஸ்ட் பார்சல்ல அனுப்பிச்சிடலாம்...... சீப் அண்ட்பெஸ்ட்.
“சொல்லும்மா.....” உற்சாகம்
கொப்பளித்தது
அம்மா என் ஃபிரண்டு ஒருத்தரு....... சென்னைக்கி வந்தவரு
ஒங்களமாதிரி இட்டிலிப்பிரியர் ஒருத்தர மீட் பண்ணியிருக்காரு... அந்த மனுஷன் பாரதிய
வித்யா பவன் கச்சேரியோட சேர்த்து மயிலாப்பூர் கற்பகாம்பா மெஸ் இட்லி சொகத்தையும் அவுருக்குக்
காட்டியிருக்காரு..... கண்ணால கண்டவுடன் காதல் மாதிரி ஒரு துண்டு சாம்பார்ல நனச்ச இட்டிலி
வாய்க்குள்ள போனவுடனே இந்திரா மெட்டல் ஸ்டோருக்கு படையெடுத்து இட்டிலி சட்டி ஒண்ணும்
கிரைண்டரும் வாங்கி மொதல் அயிட்டமா பேக் பண்ணிவச்சுகிட்டாரு....... இப்ப அவுரு ப்ராப்ளம்
எப்படி இட்லி சுடறதுண்ணு...... நெட்ல அந்த விவரங்கள் ஏகமா கெடச்சாலும் அனுபவப்பட்டவங்கள்
கிட்டருந்து கெடைக்கிற குறிப்புதான் பிரமாதமா இருக்கும்ணு அவுரு நம்புராரு. நீங்க அவுரு
மெயிலுக்கு இட்லி சுடுற விவரங்கள தட்டி உடுறிங்களா.......?
மனசுக்குள் பெரிய ஏமாற்றம்........ எதையோ பெருசா எதிர்பார்த்த எனக்கு சப்பென்று ஆகிப்போனது......
“சரி சரி அனுப்பிச்சு வக்கிறேன்..”
நெகிழ்வெல்லாம் எரிச்சலான பதிலாக என்னிடமிருந்து
“ஏம்மா
மெயில் அனுப்புறது கஷ்டமா இருக்கா?
“ச்ச்சீ அப்டியெல்லாம் ஒண்ணுமில்ல” சமாளித்தேன்
பூர்வ ஜென்மத்து பலன் நம்ம வீட்டுக்கதவ தட்டுமுண்ணு பார்த்தா
அது தப்பான அட்ரஸ்லல்ல போய் நிக்குது......!
யான் பெற்ற பேற்றை எவரேவாயினும் பெற்றுப்போகட்டும் என்ற
பெருந்தன்மையோடு மெயிலை அனுப்பிவிட்டேன்.
அடுத்த வார ஸ்கைப் இப்படித்தான் தொடங்கியது
“அம்மா
என்னா மெயிலும்மா என் பிரண்டுக்கு அனுப்பிச்சிங்க?” சிரித்துக்கொண்டே என் பெண்
எனக்கு ஒன்றும் புரியவில்லை “ஏம்மா நம்ம வீட்ல சுடுற இட்லி
மாவு பதத்ததான் எழுதி அனுப்புனேன்.... என்னா ஆச்சு? இட்டிலி சரியா வருலியா...?
“கதய
கேளுங்கம்மா.” ஒரு நா வீட்டுக்கு வந்த அவருகிட்ட என்னா எங்க ஊரு இட்லிய
சுவச்சு சாப்பிட்டியாண்ணேன். அவுரு பரிதாமா
“ஒங்க அம்மா சொன்னபடிதான் எல்லாம் செஞ்சேன் ஆன்.... ஆனா இட்டிலிதான் சரியா வருல...
அதுக்கு ஷேப்பே இல்ல.....மாவெல்லாம் கொழ கொழண்ணு...... தட்டுலயே ஒட்டிக்கிச்சு... கிச்சன்
பூரா ஒரே நாத்தம் வேற.......... குளூருனாலும் பரவாயில்லண்ணு ஜன்னல் கதவு எல்லாத்தையும்
புல்லா தொறந்து வுட்டுட்டேன்......... கற்பகாம்பா மெஸ் கிச்சன் கூட இப்படித்தான் நாறுமோ....” பரிதாபமாக
கேட்டாரு......
"அவுரப்பாக்கறதுக்கு எனக்குப்
பாவமா இருந்துச்சு"
“மாவ
தண்ணியா கரச்சு வச்சுட்டாரோ?”
“முழுசா கேளுங்கம்மா....“
“ஸ்டீவ்......... நீ என்னா
பண்ணுனண்ணு ஒவ்வொரு ஸ்டெப்பா சொல்லு”
“உளுந்தயும் வெந்தயத்தையும்
ஊறவச்சேன்”
“சரி”
“அரிசிய வேவ வச்சுகிட்டேன்”
“அரிசிய.......... வேவ.....
வச்சியா!!!?”
“ஆமா ஆன்..... ஒங்கம்மா பாயில்ட்
ரைஸ்ணுதான் சொல்லியிருந்தாங்க”
“எனக்கு சிரிப்ப அடக்க முடியில.......நம்ம
இந்திய ஆங்கில மொழிபெயர்ப்புல பாயில்டு ரைஸ்ணா புழுங்கலரிசி...... ஆனா நெஜ ஆங்கிலத்துல அது சோறு... இங்க புழுங்கலரிசிய
பரா பாயில்டு ரைஸ்ம்பாங்க.....இத அவுருக்கு நான் வெளக்கி சொல்ல ரெண்டு பேரும் சேந்து
ஒங்க இட்டிலியால உழுந்து உழுந்து சிரிச்சோம்....”
“அப்பறம்..... அவுருக்கு
புழுங்கலரிசி வாங்கிக்குடுத்தியா......?”
“கற்பகாம்பா மெஸ்லயே மார்கழி
சீசன்லயே வருஷத்திய இட்லி கோட்டாவ அவுரு சொகமா சாப்பிட்டுக்லாம்ணு கூட்டா முடிவெடுத்துட்டோம்....
இட்டிலி சட்டியையும் அவுங்க சொந்தக்காரங்க எல்லாரையும் பரணியில ஏத்திப்புட்டோம்மா..!!”
எதையோ சாதித்துவிட்ட
நமுட்டு சிரிப்பு என் ஸ்கைப்பில் எதிரொலித்தது!
இங்கிலீஷ் காரன் நம்மை அடிமையாக்கி கொடுமை படுத்தின வகையில் அவனுக்கு இந்த பரிகாரம் தேவை தான்
ReplyDeleteஇந்த கொடுமை ஒரு பக்கம்.... ஆங்கிலேயன் அடிமைப்படுத்திய பல நாடுகளின் அகதிகள் அந்த துளி நாட்டுக்குள்ளே அமர்ந்து கொண்டு சொந்த கலாச்சாரத்தால் உள்ளூர்க்காரர்களையே அடிமைப்படுத்திக்கொண்டிருப்பதை காணக் கண் கோடி வேண்டும்!!
ReplyDelete