Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Monday, 18 April 2016

திக்கு முக்க வைக்கும் பயம்

வேலை செய்துகொண்டிருந்த  அந்த அவசர  நாட்களில் இங்கிலாந்துக்கு காலில் சுடுதண்ணி ஊத்திகொண்டுதான் ஓட வேண்டியிய நிலமை. சென்னய உட்டா நேரா ஹீத்ரோதான். 
ஆனா இப்ப  சென்னயிலேர்ந்து டுபாய் போய் நேஷனல் ஜியோக்ரஃபிக் சானெல்ல வந்தமாதிரி அவ்வளவு நுட்பமான ரீதியில அந்த டுபாய் ஏர்போர்ட இருக்காண்ணு அலசி ஆராஞ்சி, கடைகள வேடிக்க பாத்துட்டு, உள்ள வாதாம் பருப்பு திணிச்ச பேரீச்சம்பழ பாக்கெட் ஒண்ண வாங்கிகிட்டு(இந்த சுகத்திற்கு எங்களை புகுத்திவிட்ட எம்டிஎல் 
முருகாநிதி ஜெயக்கமலம்ஜோடி வாழ்க!)  ரெண்டு மணி நேரம் கழிச்சி இன்னொரு பிளேன்ல ஏறிப்போயி ஹாய்யா ஹீத்ரோவில எறங்கவேண்டியதுதான். 
ஆனா இக்கரைக்கி அக்கரை பச்சண்ணமாதிரி
என்னதான் சொகமாப்போயி எறங்கினாலும் இப்பல்லாம் ஹீத்ரோவில எறங்கின ஒடனேயே மனசுக்குள்ள ஒரு பதட்டம் வந்து உக்காந்துகிது. 
இண்ணைக்கி இந்த இம்மிகிரேஷன்ல என்னா பாடு படப்போறோமோ? வயித்த கலக்குது.... முன்னாடியெல்லாம் இந்த பாடே கெடையாது......
ஏதாவது கள்ள சரக்கு கைவசமோ..
அப்படில்லாம் ஒண்ணும் இல்லிங்க... ஏன் கதயே வேற 

பாஸ்போர்ட்டை ஸ்கேன் பண்ண ஒரு செகண்டு
எதுக்காக இங்கிலாந்து வந்திருக்கிங்க கேள்வி இன்னொரு செகண்டு.

அடுத்து "மேடம் ஒங்க கட்ட வெரல்கள அதுல வச்சு அழுத்துங்க"
மெஷின் ஒன்றைக்காட்டுகிறார் இம்மிகிரேஷன் ஆபிசர்.
அழுத்துகிறேன்
இன்னம் கொஞ்சம்.....
கைய எடுங்க
என் விரல்களைப் பிடித்து  பசை மாதிரி ஏதோ ஒன்றைத் தடவி விட்டு "இந்த தடவை வெற்றிதான்" என்றவர்சிரித்துக்கொண்டே
"இப்ப கைய வச்சு அமுக்குங்க பாக்கலாம்."
பிரம்ம பிரயத்னம் பண்ணுகிறேன்.
"யோகா மாதிரி ப்ரஷ்ஷர் குடேன்" பக்கத்தில இவர் அட்வைஸ்
"அதத்தான பண்ணிகிட்டு இருக்கேன்......" 
எல்லா கவுண்டரும் மட மடவென்று நகர என்னது மட்டும் கை நாட்டிலேயே ஈடுபாடய்  நின்று கொண்டிருந்தது! 

ப்ரூஸ் அரசருக்கு பதினெட்டு முறை பிஞ்சுபோன தன் வலையை திரும்பத் திரும்பக் கட்டிவேடிக்கை காட்டின சிலந்தி மாதிரி  நானும் இம்மிகிரேஷன் ஆபீசருக்கு வித்தை காட்டிக்கொண்டிருந்தேன்!!

தலயை தெக்கேயும் வடக்கேயும் ஆட்டிய அவர் பாஸ்போர்ட்டைப் பார்க்கிறார். வாளிப்பாக மொத்தமாக இருந்தது. இங்கிலாந்து விசா பக்கம் திருப்பிப்பார்க்கிறார். 
வேறு நாடுகளையே காணாதது போல அந்த நாட்டு விசா மட்டுமே பாஸ்போர்ட்டை நீக்கமற நிறைத்திருந்தது.
 லேசான கைப்பதிவைதான் கம்ப்யூட்டர் இன்னமும் காட்டியது. ப்ரூஸ் அரசர் மாதிரி ரிஸ்க் எடுத்தாதான்யா வாழ்க்கைண்ணு, இந்த லேடி வழியா ப்ரச்சன எதுவும்ணா 
அந்த  ரிஸ்க்கை  நான் எடுத்துதான் ஆவணும்ணு  முடிவு பண்ணி  "ப்ளீஸ் கோ கோ"ண்ணு அவர் ஒருவழியாக எங்களை விடுதலை பண்ணி விரட்டி விட்டார்! 

இந்த மாதிரியான ஒரு இக்கட்டு என் சுதந்திர இந்தியாவில் எனக்கு வருமென்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.ஆனால் அதுவோ விக்கிரமன் முதுகில் ஏறிய வேதாளம் மாதிரி "விடுவேனா உன்னை" என்ற கங்கணத்தோடல்லவா பின் தொடர் ந்தது! இந்த கதையையும் கேளுங்கள்!

ஆதார் அட்டையை நாங்கள் வருடக்கணக்கில் துச்சமாய் மதித்து அதன் சங்காத்தமே வேண்டாம் என்று மதர்ப்பாய்த்தான் இருந்தோம்.
அது என்னா சுதந்திர இந்தியாவில் நமக்கு ஒருத்தன் சிறைச்சாலை மாதிரி நம்பர் குடுக்குறதாவது.....
இந்தகட்டத்தில் ப்ராய்லர் பள்ளிக்குச் சென்ற நமது பள்ளி பழைய மாணவன் ஒருவன் வந்து அழுதது ஞாபகத்திற்கு வந்தது..."பேர் சொல்லியே கூப்பிடமாட்டாங்க மேடம்... எப்பயும் எங்கயும் எனக்கு நம்பர்தான்."
 முதலில் "ஆதார் அட்டை வாங்கிவிட்டீர்களா?" என்று சாங்கோபாங்கமாய் கேட்ட நண்பர் குழாம் இப்போது லேசான பயத்தை மனசுக்குள் பதிக்க ஆரம்பித்தது

"பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டுமா?"
அந்த சான்ஸ் இனிமே எங்களுக்கு இல்லியே!
" இறப்பு சான்றிதழ்........?"

"ம்ம்ம்ம்ம்ம் அது கட்டாயம்தான்....... பிள்ளைகளுக்கு 
தொந்தரவு கொடுக்காமல் இருக்கணும் இல்லியா?

ஒரு சொத்த ரெஜிஸ்டர் பண்ணுணுமா?
அந்த பிரச்சன இருக்கா.........?
இன்னம் இது மாதிரி நெறயா விஷயங்களுக்கு ஆதார் அட்ட இண்ணைக்கி தேவைப்படுது........ டெல்லி மாநிலத்துல 90 சதம் மக்கள் ஆதார் அட்ட வச்சிருக்காங்களாம்....... இத எதுக்கு நீங்க தள்ளிப்போடணும்.......?  

நெட்டுக்குள் நுழைந்து பார்க்கிறேன். 30 கோடி இந்தியர்களிடம் மட்டுமே ஆதார் அட்டை இருப்பதாக அது சொன்னது. ஆஹா சொச்சம் 129 கோடி இந்தியர்களின் மெஜாரிட்டியிலல்லவா நாம் இருக்கிறோம்!! புளங்காகிதம் அடைந்தேன்.

"ஒங்குளுக்கு பக்கத்தில இருக்க கார்ப்பரேஷன் ஆபீஸ்ல ஒரு மாசத்துக்கு அட்ட போடுறாங்களாம். கூட்டமும் ஜாஸ்தி இல்லியாம்..... போய் அத முடிக்கிற வேலயப்பாருங்க." 
உரிமையிடன் உத்தரவு வந்தது மற்றொரு நண்பரிடமிருந்து.  இந்த தினசரி நச்சரிப்பிலிருந்து  வெளி வரும் முடிவுடன் ஒரு நாள் இந்த ஆதாருக்காக கிளம்பியே விட்டோம்!(இடைச்சொருகல் ஒன்று: எங்கள் வீட்டில் வேலை செய்பவர் இந்த அட்டைக்கு அழகான தமிழ் மொழிபெயர்ப்பைக் கொடுத்திருக்கிறார்.
" அம்மா  நாளைக்கி லீவு வேணும்மா..."
"என்னா ஆச்சும்மா..."
" இண்ணையிலேர்ந்து எங்க பக்கத்தில 'ஆதாயம்' அட்ட போடுறாங்களாம்மா..!!") 

அப்ளிகேஷன் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயத்தில் நெருக்கியடித்து கட்டங்களைப் பூர்த்தி செய்து சுமாரான சின்ன வரிசையில் நின்று அப்ளிகேஷனைக் கொடுத்தொம். அங்கு செவுத்தோரமாய் மலைபோல் நின்ற அப்ளிகேஷன் குமியலில் எம்மதுவும் ஐக்கியமானது! போட்டோ எடுத்தார்கள். பயோ மெட்ரிக் கண் எடுத்தார்கள்....... எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தது " மேடம் கட்டை வெரல்கள வச்சு அமுக்குங்க" என்று சொல்லும் வரை.,...
"என்னா சரியா வருலியே......."
"மேடம் வலி தாங்குவிங்களா?"
"என்னா பண்ணப்போறீங்க?"
ஹோம் ஒர்க் சரியாபண்ணாதவனுக்கு வாத்தியார் குடுக்குற மாதிரி குச்சியால ஒண்ணு போடப்போறானோ?
" இல்ல ஒங்க வெரல் மேல என் கைய வச்சு அழுத்துட்டுமா?"
" பயோ மெட்ரிக்கைப்பொறுத்தவரை "எதைத்தின்னா பித்தம் தெளியும்"ங்கிற நெல என்னுது
"அமுக்குங்க அமுக்குங்க... வலியெல்லாந் தாங்குவேன்." தைரிய லட்சுமி!!!
இரு விரல்கள் அமுக்கல்..... இரு கைகள் அமுக்கல்.........
ம்ம்ம்..... கம்ப்யூட்டர் பதிவு மசிவதாக இல்லை.... அது பாட்டுக்கு லேசு பாசாய்த்தான் நின்றது.
"மேடம் இன்னொண்ணு பண்ணுங்க....... தலையில் வெரல்கள வச்சு கொஞ்சம் எண்ண பிசுக்கு ஆக்குங்க......
" தலையில எண்ணயே இல்லியேப்பா."
என்ன செய்வது என்று தலையைப்பிராண்டிக்கொண்ட அவன் எனக்குப்பக்கத்தில் நின்ற பெண்மணியைப்பார்த்தான்.
"அக்கா ஒரு ஒதவி பண்ணுவீங்களா..."
அக்கா சந்தேகமாக அவனைப்பார்த்தது.
"அக்கா மேடம் தல குளிச்சிருக்காங்க..... ஒங்க தலய காட்டினிங்கன்னா........" 
அக்கா என விளிக்கப்பட்ட பெண்ணை உட்கார்ந்த வாக்கிலேயே பார்க்கிறேன். இன்னும் சென்னையின் கலப்படமில்லாமல் கும்பகோணம் தஞ்சாவூர் பாணியில் தேங்காண்ணெய் வைத்து படியப்படிய சீவி இறுக்கி பின்னப்பட்டிருந்த சடை.

"ஆமா தெரியாமத்தான் கேக்குறேன்....அவுங்க தல குளிச்சிருக்கறதுக்கும் நான் ஒங்கிட்ட தலய காட்டறதுக்கும் என்னா.... சம்பந்தம்?" வேகமான கேள்வி
"ஒண்ணும் இல்லக்கா....  அவுங்க ஒங்க தலயிலருந்து கொஞ்சம் எண்ண பிசுக்கை தொட்டாங்கண்ணா அவுங்க வெரல் இம்ப்ரெஷன் கம்ப்யூட்டர்ல நல்லா வரும்....... முடிஞ்சா பண்ணுங்க........ இல்லாட்டி உட்டுடுங்கக்கா........
அக்கா சிரித்துக்கொண்டே தலை குனிந்து நிற்க நான் ஒரு தேங்க்யுவை கொடுத்துவிட்டு என் இரண்டு கட்டை விரலையும் எண்ணெயில் தொய்த்தெடுத்து மெஷின் மேல் வைக்க அதற்குமேலே என் மெட்ரிக் மனிதன் அவன் கைகளை வைத்து அமுக்க எனது லோக்கல் பயோ மெட்ரிக் வைபவம்  சுபமே முடிந்தது!!!
 இனி வரப்போகும் பயோ மெட்ரிக் இடஞ்சல்கள்......?  

ப்ரூஸ் அரசர் பார்த்த சிலந்தி மாதிரி முயன்று ......முயன்று கொண்டேதாங்க!!

3 comments :

  1. அக்கா ,இத படிச்சிட்டு வயிர் புண்ணாயிடுச்சு .அனுபவங்களை நகைச்சுவை ஆக்கும் கலை உங்கள் சமையல் கலையையும் விஞ்சி விட்டது.
    நிற்க , இதுவரை பாஸ்போர்ட் ஆதார் கார்ட் நானும் என் மனைவியும் எடுக்கவில்லை.. உங்கள் ஹீத்ரோ அனுபவத்தை படித்தபின் பாஸ்போர்ட் எடுக்கவேண்டாம் என்ற முடிவுக்கு மேலும் பல மதிப்பெண் கொடுத்து கொண்டோம் .
    யார் எடுத்தாலும் யாம் எடுக்கமாட்டோம் அந்த ஆதாரை என்ற கட்சி சேர்ந்தவன் யாம் . கட்சி மாறாமல் இருக்க வேண்டுங்கள்

    ReplyDelete
  2. அக்கா ,இத படிச்சிட்டு வயிர் புண்ணாயிடுச்சு .அனுபவங்களை நகைச்சுவை ஆக்கும் கலை உங்கள் சமையல் கலையையும் விஞ்சி விட்டது.
    நிற்க , இதுவரை பாஸ்போர்ட் ஆதார் கார்ட் நானும் என் மனைவியும் எடுக்கவில்லை.. உங்கள் ஹீத்ரோ அனுபவத்தை படித்தபின் பாஸ்போர்ட் எடுக்கவேண்டாம் என்ற முடிவுக்கு மேலும் பல மதிப்பெண் கொடுத்து கொண்டோம் .
    யார் எடுத்தாலும் யாம் எடுக்கமாட்டோம் அந்த ஆதாரை என்ற கட்சி சேர்ந்தவன் யாம் . கட்சி மாறாமல் இருக்க வேண்டுங்கள்

    ReplyDelete
  3. அட எம்பாடுதாந் தம்பி இந்த கூத்து!!!!இந்த ஆதார பொறுத்தமட்டும் எடுக்கறதும் ஒண்ணுதான் எடுக்காததும் ஒண்ணுதான்!! குப்பையாதான் கெடக்கு நம்ம விண்ணப்பங்கள்! ப்ளாக் படிச்சிட்டு ஜாலியா இருங்க.....ஒங்க மருமகளும் ஒரே அப்ரிசியேஷன்தான்!!

    ReplyDelete