1970களின் கடை வருடங்கள்.......... சரி...... நீச்சல் போட்டுத்தான் பார்ப்போமே என்ற துணிச்சலுடன் கல்கத்தாவின் நல்ல வேலையை விட்டு விட்டு மெட்ராசுக்கு ஒரு வழியாய் வந்து சேர்ந்தாயிற்று. வீடு பார்க்கும் படலம்.
"கல்கத்தாவுல எப்டிண்ணு எங்களுக்குத்தெரியாது. ஆனா மெட்ராஸ் வீட்டுக்காரங்க கில்லாடிங்க....... எழுதி வாங்கறது கொஞ்சம் ஆனா எழுதாத சட்டங்கள் கை நிறையா வச்சிருப்பாங்க. ஈபி காரன் மீட்டருக்கு ஒண்ணு போட்டாண்ணா இவுங்க ரெண்டாக்கிதான் ஒனக்குக்கணக்கு சொல்லுவாங்க. பொது லைட்டால்லாம் ஒம்மீட்டர்லதான் ஜாயின் பண்ணியிருப்பாங்க. அப்படி அவுங்க கை வசம் இருந்தா ஒம்பது மணிக்கெலாம் நிறுத்திபுடுவோங்கண்ணு கண்டஷனா சொல்லிருவாங்க. பொது கேட்டும் அந்த கணக்குலதான். பத்து மணிக்கி மேல வந்தா தெருவுலதான் நிக்கிணும். எண்னைக்காவது லேட்டா வருவிங்கண்ணு தெரிஞ்சா அவுங்கள தாஜா பண்ணி முன்னாடியே சொல்லி வச்சிரணும். விருந்தாளிக எண்ணைக்கி போவாங்கண்ணு கண்ணு கொத்தி பாம்பா கணக்கு வச்சிருப்பாங்க. அவுங்க போன ஓடனே விருந்தாளிக எத்தன பேரு வரலாம் எத்தன நாளு தங்கலாம்ணு வரையறுத்து சொல்லிருவாங்க.......அதனால எழுதின பேப்பரு முட்டும் போதும்ணு கணக்கு பண்ணிடாதே. எழுதாத சட்டங்கள் அவுங்க கைவசம்... நெறயா அட்ஜஸ்ட்
பண்ண வேண்டியிருக்கும் ஜாக்கிறத....... ஜாக்கிறத......" மெட்ராஸ் நண்பர்கள் ஒரு முகமாய் மொழிந்தனர்!
பெரிய அக்கா பம்மலில் சொந்த வீடு கட்டும் வரை இந்த மெட்ராஸ் குடியிருப்புகளில் 12 வீடுகள் மாறி பழம் தின்று கொட்டை போட்ட கில்லாடி!
"அம்மா நேர்மையாத்தான் நான் எல்லாம் செய்யிறேன் ஆனா ஒண்ணுமில்லாததுக்கெலாம் வம்புக்கு வர்ராங்களேண்ணு ஆத்திரப்படாதே. மெட்ராஸ் பாஷையில சொல்லுணுமுண்ணா நாம அவுங்களோட 'அட்ஜீஸ்ட் பண்ணிகிணுத்தான்' போகுணும்!
அடுக்கு மாடி கட்டிடங்கள் அறியாத அந்த எழுபதுகளில் கீழே வீட்டுக்காரர் மேலே குடித்தனக்காரர் என்பதுதான் முறையாய் இருந்தது. "அம்மாவுக்கு 'அரிமையான' வூடு ஒண்ணு பாத்துகுடுக்குறது என் 'பொர்ப்பு' சார்" எனப் 'பொர்ப்'பேற்றார் ஒரு ப்ரோக்கர்! காலையில் இட்டிலியை முழுங்கிவிட்டு சாந்தோம் ஏரியாவின்(பிள்ளைகள் இருவரின் பள்ளி இந்த ஏரியாதான்) சந்து பொந்தெல்லாம் நுழைந்து வேர்த்து விறுவிறுத்துப்போய் அம்மா தாயே என்று வீட்டுக்கதவுகளைத் தட்டி "ப்ராஃமின்ஸ்க்குதான் வீடு" என்ற அகராதியான பதில் "கெவிர்மெண்ட்டு வேலயா?" வாடகையை உறுதிப்படுத்தும் கேள்வி "சைவமா இருந்தா குடுக்க ரெடியா இருக்கோம்மா" பவ்யமான சம்பாஷணை இன்ன பல பதில்களை எதிர்கொண்டு அன்றைய பொழுதில் இளைத்துபோனபின் தலையை சொறிந்து நின்ற ப்ரோக்கர் நோக்கம் அறியாமல் திகைத்து நின்ற கல்கத்தா வாசியான நான் பின்னர் புரிந்து அவருடைய தினப்படி கோட்டாவை கையில் திணித்தவுடன் " நாளிக்கி வெடிக்காலம்பரையே பூட்டு வந்துடலாம்மா.... ஒரு ஷோக்கான எட்த்துக்கு அம்மாவ இட்டுகிணு போப்போறேன்." வெகு குஷியோடு அவர் அன்றைய பாட்டிலுக்கு உற்சாகமாகிவிடுவார்! இப்படி இவர் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது அலுத்துப்போய் "வேற ஒரு ப்ரோக்கர் வர்ரண்ணு இருக்காருப்பா." சும்மா ஒரு போடு போட்டேன்
"......வேற ஆள மாத்றது அம்மாவோட சவுரியம்....... ஆனா நான் விசுவாசிம்மா .. பால் மாறமாட்டன்....... வாய்க்கையில துட்டாம்மா பெர்சு.....? மனுசனுக்கு வார்த்தான் பெர்சு.....
நாளிக்கி புச்சா கட்ன வூட்டுக்கு ஒன்னிய இட்டுகிணு போலாம்ணு ப்ளான் பண்ணிரிக்கேன்..... நீ இன்னாண்ணா...... அந்த வூட்டபாத்தண்ணு வச்சிக்க... அசந்து பூடுவ நீயி..........!
புது வீடுதான்.. பெரிய பதவியிலிருந்து ரிட்டையர் ஆனதை ஈடு கட்டவே மேலே கட்டியிருந்தார்கள். 11 மாதத்திற்கு ஒப்பந்தம் 10 மாத அட்வான்ஸ். மாதம் பிறந்ததும் 5ம் தேதிக்குள் வாடகைப்பணத்தை செலுத்திவிட வேண்டும். கையெழுத்துப்போட்டுவிட்டு சாமான்களை ஓரளவு சரிப்படுத்திய அன்றைய இரவு அசந்த தூக்கம்! தூக்கத்தின் நடுவில் எங்கோ மணியடிக்கும் சத்தம்... நமக்கில்லை என்று பிரண்டு குப்புற படுத்தாலும் அது நின்ற பாடாகத்தெரியவில்லை.வாரி சுருட்டி எழுந்து எட்டிப்பார்க்கிறேன்... வீட்டுக்காரம்மா... ஆகா எங்கே என்ன தப்பாகிவிட்டது எனப்புரியாமல் இரு ந்தது இருக்கட்டும் என்று ப்ரைட்டாக ஒரு குட்மார்னிங் வைத்தேன்.
" அம்மா ரொம்ப அசதியா இருப்பிங்க.. காலைக்கு ஒண்ணும் செய்யாதே" சட்னி சாம்பார் துணை நிற்க சூடான இட்லிகளின் தூக்க முடியாத பாத்திரத்தோடு அவர்கள் புன்சிரிப்பு! உருகிப்போனது மனசு!
அசந்து போன வாடகை வீட்டாருக்கு காலை சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பது இந்த வீட்டின் எழுதப்படாத ஒரு சட்டமோ?!
இந்த மாதிரியான எழுதப்படாத சட்டங்கள் நிறைய..! நிறையவே!!
வீட்டை சுற்றியுள்ள மரங்களில் தேங்காய் பறிக்கையில் முதல் பங்கு எனதானது! கீழே ஆப்பம் சுட்டால் தேங்காய்ப்பால் சகிதம் அது மேலே வந்தது!
அப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும் டிவி இருப்பது அரிது...தூர் தர்ஷன் ஞாயிறு மாலை காட்டும் ஒத்தை படத்திற்கு தமிழ் நாடே ஏங்கிப் போய் இன்று யார் வீட்டிற்குப்போய் ஓசியில் படம் பார்க்கலாம் என்ற யோசனையில் இருந்த நாட்கள் அது. ஞாயிறு பிறக்குமுன்னரே "கீழே வந்து விடுங்கள் சேர்ந்து படம் பார்க்கலாம்." என்ற அழைப்பு வந்து விட்டது எங்களுக்கு!
சேர்ந்து படம் பார்த்த பல நாட்கள் சேர்ந்த கூட்டான் சோறாய் ஆகிப்போனது இன்னொரு சுகமான கிளைக்கதை!
இப்படி ஆரம்பித்த இரு வீட்டு பிள்ளைகளின் அந்நியோன்யம் இன்றும் பல்கிப்பெருகி நிற்பதுவும் இன்னொரு சுகானுபவந்தான்!
சொந்தமாய் டிவி வாங்கியவுடன் சேர்ந்து பார்த்த அந்த ஞாயிறுகளுக்காக ரெண்டு பக்க மனசுகளும் ஏங்கி நின்றது உண்மையிலும் உண்மை!
ஏழு பெண்களையும் ஒரு பையனையும் கொண்ட அங்கிள் குடும்பத்தின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நான் எட்டாவது பெண்ணாகவே அறிமுகப்படுத்தப்பட்டேன்!
ஞாயிறு மதிய தூக்கத்திற்குப்பிறகு எங்கள் வீடே யேசு பாடல்களால் ரொம்பிப்போய் ததும்பி நிற்கும்! அதுவும் கறுப்பின பாடகர்களின் உத்வேகமான படைப்புகளை ஒரு வாரத்திற்கு உடைந்த ரெக்கார்டு போல ஒருத்தர் மாற்றி ஒருவர் முதல் இரண்டு வரிகளை மனப்பாடமாக பாடிக்கொண்டு கிடப்போம்.
அங்கிள் ஹெ எச் எம் வியில்(( His Masters
Voice the gramophone record company) பெரிய பதவியில் இருந்தார்கள். அந்த நாட்களில் தமிழ் கிறிஸ்துவ பாடல்களை
முதன் முதலாக ரெக்கார்டில் பதிவு செய்ய அவர்கள் எடுத்த முயற்சி மிகப்பெரியது! அவர்கள் உயிர் நாடி பாட்டு.... பாட்டு.... பாட்டு மட்டுமே!!
டானி கே என்ற பெரிய ஒரு அமெரிக்க சிரிப்பு நடிகர் குழந்தைகளுக்கு கதை சொல்லும் ஒரு ரெக்கார்ட் அங்கிளிடம் இருந்தது. அதை அவர்கள் போட்ட நாளிலிருந்து ஆன் அவர்களுக்குப்பெரும் விசிறி! வருடங்கள் பலப்பல கடந்தும் அந்தக் கதைகளை அதே டானி கேயின் பாவத்தொடு சொல்ல வல்லது அந்தப்பெண்!
ஆகமன கால முதல் ஞாயிறு மாலையே எங்கள் வீட்டில் கிறிஸ்மஸ் தொடங்கிவிடும்! கிறிஸ்மஸ் பாடல்களில் தனிப்பாடகர்கள் மற்றும் குழுப்பாடகர்களின் அரிய குரல்களும் வாத்திய இசைகளும் ஆகா நாம் இப்படிப்பாடமாட்டோமா என ஏங்கவைக்கும்!
கிறிஸ்மஸ் அன்று இரவு அங்கிளும் அவர்களது மகன் மருமகன்களும் கோட் சூட் போட்டுக்கொண்டு கோயிலுக்குக் கிளம்பும் பாணியை நாங்கள் நின்று ரசித்துள்ளோம்!
கிறிஸ்மஸ்- இரு குடும்பமும் சேரும் பெருவிழா! எங்கள் பெரிய குடும்பத்தின் திறமைகளும் அங்கிள் குடும்பத்தின் அபரிமித ஆற்றல்களும் சேர்ந்து பாட்டுகளாக நாடகங்களாக விளையாட்டுப்போட்டிகளாக உருக்கொண்டு அந்த மூன்று மணிப்பொழுதை வெகு சுகமான நேரமாய் ஆக்கிவிடும்!அருமையான இரவு உணவும் இந்த மகிழ்வில் தொற்றிக்கொள்ளும்!
தற்பெருமை பேசாத ஒரு மாமனிதர் தங்கையா அங்கிள். இவர்கள் போட்டோ ஆல்பத்தில் இருப்பவர்களைப்பார்த்தால் நாம் அசந்து போய்விடுவோம்! காமராஜ் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் எம்ஜியார் ஜெயலலிதா சரோஜா தேவி டி.எம் சவுந்தரராஜன் பி. சுசீலா சித்தார் மேதை பண்டிட் ரவி சங்கர் கிரிக்கெட் வீரர் பரூக் எஞ்சினியர் என பட்டியல் அனுமார் வாலாகத்தான் நீண்டு கிடக்கிறது!!
பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஆகும் பலர் "ஆகா எவ்வளவு அதிகாரம் நம் கையில்கிடந்தது,எவ்வளவு பேர் என் கண்ணசைவுக்குக்காத்துக்கிடந்தனர் என சரித்திரம் பேசிபேசி ஏங்குபவர்களாக வலி கொண்டு நிற்கையில் அங்கிள் அதை அழகான ஒரு அனுபவமாய் ஆக்கிக் கொண்டார்கள். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளி நாட்டிலிருந்தும் அவர்களுக்கு அழைப்புகள்
வந்தாலும் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என உணர்ந்த அவர்கள் கோயில் உண்டு அங்குள்ள ஆர்கனை இசைக்கும் திறன் உண்டு அருகிலே மதி மிக்க துணை உண்டு மக்களின் அன்பு உண்டு என வாழ்வை சுலமாக்கிக்கொண்ட தத்துவர் அவர்கள்! மதிய சாப்பாடு முடிந்ததும் அங்கிளும் ஆண்ட்டி ஸ்டெல்லாவும் தினப்படி தள்ளு வண்டியில் வேர்க்கடலை கொண்டு வரும் பையனின் வரவுக்கு காத்து நிற்கும் அழகாகட்டும் கடலை போட்டபின் வெற்றிலை மெல்லும் நேரமாகட்டும் அவர்கள் சாதாரண வாழ்வையும் வெற்றி கண்ட வாழ்வையும் ஒரே தராசிலேயே நிற்க வைத்து மகிழ்வு கண்ட உயரிய மனித இனத்தை சார்ந்தவர்கள் என நமக்கு அறுதியிட்டுக் கூறுகிறது!
2008ல் அங்கிளுக்கு 92 வயது. முதுமை நோய்.. உடம்பு படுத்துவிட்டது. நினைவு தப்புகிறது, பேசும் மொழியில் தெளிவில்லை. ஆயினும் அவர்கள் விரல்கள் மட்டும் ஏன் தப்பாமல் தாளமிடுகின்றன? "எது போனாலும் கவலைப்படாதே நான் உன் உள்ளிருந்து இசைத்துக்கொண்டேதான் இருப்பேன் நீ உள்ளளவும் நானும் உன்னோடே" என அந்த தேவ இசை அவர்களில் இணைந்து பிணைந்து ஒலித்துக்கொண்டே இருந்த ஒரே காரணந்தான்.
அவர்கள் எங்களுக்குத்தந்த மகிழ்வு வலுப்பெற வேண்டும் பலப்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடே அந்த வீட்டின் ஒரு பெண்ணை எங்களோடு இணைத்துக்கொண்டோம். எதிர்கால சந்ததியினர் இந்த மதிப்பீடுகளை முன் வைத்தே வாழ அவர்கள் என்றும் வழிகாட்டிக்கொண்டே இருப்பார்கள் என்பது எங்கள் உறுதி!
ஜூன் 5ம் நாள் தங்கையாஅங்கிளின் நூறாவது பிறந்த நாளை ஒட்டி இந்து நாளிழதில் ஸ்டெல்லா ஆண்ட்டி தங்கையாஅங்கிளின் போட்டோவை பார்த்த அந்த கணத்தில் மடை திறந்த வெள்ளமாய் பாய்ந்த நினைவுகளின் சங்கமமே இத்தொகுப்பு!
Super..
ReplyDeleteபொதுவாக வீட்டுக்கு சொந்தக்காரர்களால் துன்பப்பட்ட கதைகள்தான் அதிகம் .உங்கள் அனுபவமோ முற்றிலும் வேறு. வீட்டுச் சொந்தக்காரர் குடும்பச்சொந்தக்கரர் ஆன கதை ரொம்பவே நெகிழவைத்தது .உங்கள் இருவர் மனம் போல மற்ற எல்லாம் அமைவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்.
ReplyDeleteநன்றி ஜான்
ReplyDeleteஆல்பிரட் சந்தோஷமான பதிவு. நல்லதுகளை தக்க வைத்துக் கொளவதும் ஒரு கலைதானே! நன்றி பல அன்புடன்செ
ReplyDelete