Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Monday, 21 November 2016

மனிதனாய் மருத்துவனாய்

ஜூலை 15 2013 பேப்பரைப் பிரித்தவுடன் கண்ட செய்தி என் கண்களில் நீரை நிரப்பியது. 40 வருடங்களுக்கு முன் ரங்கா கிளினிக்கில் எனக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்.ரங்கபாஷ்யம்  இன்று இல்லை என்ற செய்தியை என்னால் சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரிடம் சிகிச்சை பெற்ற ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒரு நபராக இருக்கலாம். ஆனால் அவருக்கென்று அந்த நேரத்தில் என் உள்ளம் அதிர்ந்து நின்றது உண்மை!
உடம்பு முடியவில்லை என வருத்தோடு என்னிடம் வரும் எனது நண்பர்களிடம்  இந்த உயரிய நபர் என் வாழ்க்கையைத்தொட்ட சம்பவத்தை பகிர்ந்து கொண்டு உற்சாகப்படுத்துவேன்.
அதையே இன்று உங்களோடும்......
கல்கத்தாவிலிருந்து மெட்ராஸில் இருக்கும் ஆஞ்சிம்மா தாத்தா வீட்டிற்கு போகப்போகிறோம் அதுவும் ஸ்கூலுக்கு லீவ் போட்டுவிட்டு என சந்தோஷமாக வீட்டைச்சுற்றிச்சுற்றி வந்து அண்டை அடுத்த வீட்டார்க்கெல்லாம் "அமீ.... மெட்........ராஸ் ஜாச்சி"( நான் மெட்ராசுக்குப்போறேனே!) என மகிழ்ச்சி ததும்ப சொன்ன என் அருமை யூகேஜி பெண்ணையும் சின்ன சம்மனசு மாதிரி சிரித்துக்கொண்டு தவழ்ந்த அவளது தம்பியையும் தவிர்த்து நாங்கள் இருவரும் மனசில் கலவரத்தோடு தான் மெட்ராஸ் செல்ல தயாராகிக் கொண்டிருந்தோம்.
எனக்கு நெஞ்சுக்கு மேல் இடது தோள் பக்கம் ஒரு கட்டி... சமயத்தில் வலிக்கிறது பெருசாவது போலவும் ஒரு உணர்வு... கல்கத்தாவில் எந்த
டாக்டரைப் பார்ப்பது சுத்தமாக எங்களுக்குத்தெரியவில்லை....... அன்றைக்குமட்டுமென்ன இன்றைக்கும் கூட நிறைய பெங்காலிகள்  நல்ல மருத்துவத்திற்குச் சென்னையை நோக்கித்தானே வருகிறார்கள்! கட்டு சோறெல்லாம் கட்டிக்கொண்டு ஹவுரா மெயிலில் இரண்டு நாள் பயணம். எனது அண்ணன் ஒரு மருத்துவர். அவருடைய நண்பர் ஒரு பிரபல சர்ஜன். அப்பாயிண்ட்மெண்ட் பிரச்னை இல்லாமல் நேரடியாக வந்த அன்றே கூட்டிபோய்விட்டார்கள். அவரது ஆலோசனை அறையிலேயே என்னைப் படுக்க வைத்து சோதனை செய்தார். நாங்கள் இருவரும் வெளியே வந்தவுடன் இருக்கையில் அமர்ந்த அவர் " டாக்டர் ஒங்க தங்கச்சிக்கி கேன்சர் கட்டிங்க . ஒடனடியா ஆப்பரேஷன் பண்ணிட்டு ரேடியேஷன்..... அப்பறம்...... டெஸ்ட்....கீமோ..... அவர் பாட்டுக்கு போய்கிட்டே இருந்தார்.... என்னா சொல்றாரு இவரு....... சரியாத்தான் காதுல வாங்குறமா... இது  நிஜம்தானா....... அண்ணன் திரும்ப விவரம் கேக்குறாங்க... டாக்டர் தெளிவாத்தான் இருக்கார்... நாமதான் கொழம்பி போய் கெடக்கோம் என்ற பிரக்ஞ்சை எல்லோருக்கும் வர நேரந்தான் ஆயிற்று...... 29 வயதில் கேன்சரா...? நம்ம வீட்ல யாருக்கும் இல்லியே....... 1971களில் கேன்சர் பயங்கரமானது..... இறப்பும் நிச்சயமான ஒன்று.
எப்படித்தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தோமோ........ அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்..... அந்த சமயத்தில் கும்பகோணத்திலிருந்து எங்கள் மருத்துவ நண்பரும் வீட்டிற்கு வந்திருந்தார். எல்லோரும் சேர்ந்து ஆலோசனை செய்தோம். என்னதான் என் நண்பராயிருந்தாலும் அவரும் மனிதன் தானே, பரிசோதனை எதுவும் செய்யாமல் அவர் எப்படி ஒரு முடிவுக்கு வர முயும் என்ற அண்ணனின் வாதம் ஜெயிக்க இன்னொரு மருத்துவரின் ஆலோசனையையும் கேட்கலாம் என முடிவு செய்யப்பட்டது.டாக்டர் ரங்கபாஷ்யமும் கை தேர்ந்த சர்ஜந்தான் அவர் வயிற்று சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறப்பு பெற்றிருந்தாலும் பொதுவாகவும் பார்ப்பாராம்.
அப்பாயிண்ட்மெண்ட் மூன்றாவது நாள் சாயங்காலம் எட்டு மணிக்குக்கிடைத்தது
"தயவு செய்து லேட்டாக வந்துராதிங்க.... தவற உட்டுட்டிங்கண்ணா அப்பறம் வெயிட்லிஸ்ட்லதான் போவணும்" நர்ஸ் கண்டிஷனாக சொல்லிவிட்டார்கள்
7 மணிக்கு நாங்கள் போனபோது டாக்டர் ரூமிற்குள் ஒருவர் நுழைந்து கொண்டிருந்தார்... எங்களுக்கு முன்னால் ஒருவர் காத்திருந்தார்...... ஒருத்தர்தானே மட மட என்று முடிஞ்சிடும் என நினைத்துக்கொண்டிருக்கையில் உள்ளே போன மனுஷன் ஏழரை மணிக்குத்தான் வெளியே வருகிறார். அடுத்தவர் 8 மணிக்குத்தான் வெளியே வருவார் என எங்களுக்குத் தீர்மானமாகத் தெரிந்தது. கல்கத்தாவின் எஸ்.பி முகர்ஜி ரோட்டின் டாக்டர் பானர்ஜி இந்நேரம் பத்துபன்னிரெண்டு பேரை பார்த்து முடித்துவிடும் கலாச்சாரத்தில்  ஊறிய எங்களுக்கு இந்த அரை மணி நேர ஆலோசனை ஒரு புதுமையாகத்தான் இருந்தது!
என்னுடைய முறை....... பலிகெடா  மாதிரி உள்ளே செல்கிறேன்...படுக்க வைத்து என்னன்னெமோ சோதனைகள்... முடித்தவர் " ஒண்ணுமில்லம்மா ஒரு சின்ன ஆப்பரேஷன் தான்........ பண்ணிருவமா....? நாளைக்கே கூட பண்ணிரலாம்....... நீங்க முடிவு செஞ்சிகிட்டு வாங்க...
"சின்ன ஆப்பரேஷன்தான்" என்ற அவரது வாக்கு எங்கள் காதில் தேனாய் இனித்தது.... நாளைக்கே வைத்துக்கொள்ளலாம் என அங்கேயே முடிவு பண்ணி அவருக்குத் தெரிவித்துவிட்டோம். ஆப்பரேஷன் முடிந்தது. பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட கட்டியின் விவரங்களை எடுத்துக்கொண்டு டாக்டர் என் அறைக்கு வருகிறார். "ஏம்மா நீங்க எங்கயாவது பலமா இடிச்சிகிட்டிங்களா இல்ல யாராவது ஒங்கள வேகமா குத்தினாங்களா......? இல்ல கீழ உழுந்துட்டிங்களா......?
தயங்கித் தயங்கித்தான் ஆரம்பிதேன்..... டாக்டர்... எம்பையன மூணு மாசத்துபிள்ளையா தூக்கிகிட்டு கும்பகோணத்திலேருந்து கல்கத்தா போனோம். ஹவுரா மெயில்ல பிள்ள பத்திரமா இருக்குணுமுண்ணு மிடில் பெர்த்ல படுத்துக்க முடிவு பண்ணினேன். திடீர்னு நைட்ல ஐய்யோ....... பிள்ள கீழ உழுந்துருச்சோண்ணு அலண்டு அடிச்சு சடார்ணு திரும்புறேன் திரும்புன வேகத்துல அந்த படுக்கப் பலகைய மாட்டுற இரும்புக்கம்பியில பலமா இடிச்சுகிட்டேன். ஆனா புள்ள உள் பக்கமா பத்திரமாத்தான் தூங்கிகிட்டு இருக்கு...... அதுவே சந்தோஷமா ஆயிருச்சு....  வீட்டுக்குப்போனப்பறந்தான் பாக்குறேன்....  தோள்பக்கம் என்னுமோ கட்டியா இருக்கு....  தைலம் தடவிப்பாத்தோம்... சுடுதண்ணி ஒத்தரம் குடுத்துப்பார்தோம்......... ஒண்ணுக்கும் கேக்குல......
"ஆமா..... இண்ணைக்கி இவ்வளவு கத சொல்றிங்களே...... மொத நா ஒங்களோட அவ்வளவு கொள்ள பேசினேனினல்ல... ஏன் இந்த விவரத்த எங்கிட்ட  சொல்லுல....?
என்னத்த இனிமே மறைக்கிறதுண்ணு டாக்டர் பேர மட்டும் சொல்லாம மொதல்ல போன டாக்டர்கிட்ட இந்த விவரங்களையெல்லாம் சொன்ன போது அதனாலெல்லாம் இப்பிடி ஆவாது இது நிச்சயமா கேன்சர் கட்டிதாண்ணு முடிவாசொல்லிட்டாரு.
"இந்த அனாவசிய விவரங்கள ஒங்க கிட்ட திரும்ப சொல்ல வேணாம்ணுதான்...." நான் இழுத்தேன்
"வைத்தியர்கிட்டயும் வக்கீல்கிட்டயும் எதையும் மறைக்கக்கூடாதும்மா.....  ஒங்க ஒடம்புல ஒரு கொறயும் இல்ல...... இது ஒரு ரத்தக்கட்டிதான்..... சந்தோஷமா வீட்டுக்குப்போங்க..... ஹவுரா மெயில்ல ஏறி கல்கத்தா போங்க..... ரசகுல்லா சாப்பிடுங்க..... என்னா சரியா?"  கையத் தட்டிக்கொடுத்துவிட்டு சிரித்துக்கொண்டே கதவை மூடிவிட்டுச்சென்றார் எனது டாக்டர்.

மனதிற்குள் தெம்பையும் நம்பிக்கையையும் "இந்தா பிடித்துக்கொள்........ பிடித்துக்கொள்.......". என்று   ஊட்டுவது ஒரு மருத்துவனுக்கு அழகு சேர்க்கும் உயரிய கலை. பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் எதிரே உட்கார்ந் திருப்பவர்களை தன் நிபுணத்துவத்தால் திறமைசாலிதனத்தால் ..... என வியக்க வைக்க வேண்டும் நிரூபிக்க  வேண்டும் என்ற நோக்கோடு  பல மருத்துவர்கள் இடம் பொருள் ஏவல் தெரியாமல் கடவுளாகவே நம்பி வந்திருக்கும் மக்கள் மனதில் பீதியைக்  கிளப்பி விட்டு மனசளவிலும் உடலளவிலும் அவர்களைக் கோழையாக்கி விடுகிறார்கள். ஆனால் இந்தியாவின் உயரிய பட்டமான பத்ம பூஷன் விருதைப்பெற்றிருந்த எனதருமை டாக்டர் ரங்கபாஷ்யம் மக்களின் மனதைத் தொடத்தெரிந்த  அருமை மனிதன்! அவரது வழியில் மருத்துவர்கள் மட்டும் அல்ல  நம்மைத் தொடும் ஒவ்வொருவருக்கும் நாமும் நல்ல எண்ண அலைகளையும் மென் உணர்வுகளையும் கொடுக்க முயன்று பார்ப்போமே!

No comments :

Post a Comment