மரியாதையே கொடுக்கப்படாத ஒரு விஷயம் உண்டு எங்கள் வீட்டில் என்றால் அது காச்சலும் அதன் சொந்த பந்தங்களும்தான்.......
நமது முன்னாள் பிரதமரில் ஒருவரான நரசிம்மராவ் மாதிரி எந்த பிரச்னையையும் ரொம்ப கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் அது தானாக சரியாப்பொயிடும் என்ற கொள்கையில் எங்கள் அப்பாவுக்கு பெரிய நம்பிக்கை!மஞ்ச கலர் துணிப்பையில் நிறைத்திருக்கும் புஸ்தகங்களையும் பித்தளை டிபன் பாக்ஸையும் தூக்க முடியாமல் துவண்டு போன உடம்புடன் வீட்டுக்குள் நுழைந்து நாநா..... காச்சல் அடிக்கிதுங்கிறேன்
(அப்பாவை அப்படித்தான் கூப்பிடுவோம் அது தனிப் பெருங்கதை)....."
"அப்படியாம்மா......
அதெல்லாம் சரியாப்பொயிடும்......
போ போ.....
போய் கொஞ்ச நேரம் வெளிய வெளையாடு"
கையில் பேட்மிண்டன் மட்டையோடு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.....
ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு மூலையில் சுருள்கிறேன்.....
அம்மாவுக்கு எப்போதும் கை நிறைய வேலைகள்
"என்னாம்மா படுத்துகெடக்க...?
"அம்மா......
காச்சல் அடிக்கிது......"
"பள்ளிகூடத்துல எங்கயும் கீழ உழுந்தியோ?"
வந்து கொண்டே கேட்கிறார்கள்
"இல்லம்மா..."
தொடர்ந்து அடுத்த கேள்வி
"யாராவது குச்சி ஐஸ் வாங்கிகுடுத்தாங்களா?
தலையை வெகு பலமாக வடக்கு தெற்காகஆட்டுகிறேன்
இந்த கேள்வி உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்
"ஏன் ஒங்க அம்மா நீ வாங்கி சாப்புட்டியாண்ணு கேக்காம யாராவது வாங்கிக்குடுத்தாங்களாண்ணு கேக்குறாங்கண்ணு...?" ஒழுங்குக்கு பெயர் போன எங்கள் அம்மாவின் ஆயிரம் கட்டளைகளுள் பிள்ளக கையில காசு இருக்கக்கூடாது என்பது தலையாய ஒன்று!
பிள்ளைகள் கையில காசு பொழங்குனா அதுக கெட்டுப்போறத்துக்கு நாமே வழி வகுத்துக் குடுத்தமாதிரி ஆயிடும் என்று விருந்தாளிகளுக்கும் அறிவுறைதான்.
அசந்து மறந்து யாராவது கொடுத்துவிட்டால் அது உடனடியாக அம்மாவின் கஜானாவுக்குப்போய் சேர்ந்தே ஆகவேண்டும்!
முக்கிய கதைக்கு வந்துவிடுவோம்.
முதல் கட்டமாக மருத்துவ நிபுணர் அம்மா நெத்தியில் கைவைத்துப் பார்க்கிறார்கள். ம்ம்...... ரொம்பதான் காயுது........
அடுத்த கட்ட ஆராய்வு எனக்கு முன்னமே தெரிந்த ஒன்றாதலால் பாவாடைக்கு மேலே போட்டிருக்கிற சட்டையைத் தூக்கி என் வயிற்றை அம்மாவிடம் காட்டுகிறேன்.....
கூர்ந்து கவனித்தவர்கள்
" எப்பா...
மாதா தயவுல சின்னம்மையோ வெளயாட்டு அம்மையோ........
இல்ல......
அது வந்துச்சுண்ணா எல்லா பிள்ளைகளுக்குமில்ல தொத்திக்கும்.......
அம்மா நல்ல மூச்சு விடுகிறார்கள்.
அம்மைக்கு மூல காரணம் அஜீர்ண வயிறுதானாம்.
முத்துப்போடுவதும் அங்குதான் தொடங்குமாம்.
பாய் தலவாணி போட்டு துப்புட்டியால் போர்த்திவிட்ட அம்மா
"கொஞ்ச நேரம் தூங்கு...
நான் போய் கஷாயம் போட்டுகிட்டு வந்திர்ரேன்"
ஓடுகிறார்கள்....
பிள்ளைகளுக்கு வேற ராத்திரி சாப்பாடு தயார் பண்ணுணுமே....
வானவில் எப்படி பலாகலருல இருக்கோ அப்படித்தான் அம்மாவோட கிஷாயமும்........
வானவில் வயலட் கலர் மாதிரி கசப்பு தூக்கலாக இன்னபல குமட்டு ருசியோடு நம்முன் நிற்கும்.......
வாந்தி கீந்தி எடுத்தோமோ அழிஞ்சோம்......
காச்சல்ணு கூட பாக்காம ப்.....பளார்தான்......
அத தயார் பண்றது சுலபமான காரியமா என்ன...?
காச்சல்காரங்களுக்கு வீட்ல குடுக்கப்படுற ஒரே கன்செஷென் ஒரு மணி நேரம் போகக்கூடிய ராத்திரி ஜெபத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் கிடையாது.
"படுத்துகிட்டே பக்தியா கேளு சரியா...?"
சாதாரண சமயங்களிள் தூங்கி விழுந்தோமென்றால் கண்கொத்திப்பாம்பாய் பார்த்துக்கொண்டிருக்கும் பெரிய உடன் பிறப்புகள் சர்வாதிகத்தோடு நம்மை ஒரு வழி பண்ணிவிடும்!
பொதுவாக வட மொழியை வெறுக்கும் தமிழர்கள்
"லங்கணம் பரம அவுஷ்தம்"என்ற அம்மொழியின் சொலவடையில் மட்டும் அசைக்கமுடியாத பெரும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
உதாரணத்திற்கு காச்சல்காரங்களுக்கு பொனப்பாகத்தத் தவித்து
(குக்கர் இல்லாத அந்த நாட்கள்ல சாதத்த ஒரு தடவ வேவ வச்சு திரும்ப இன்னொரு தடவ வேவ வச்சு வடிகட்டி லேசா உப்பு போட்டு குடுக்குற நோயாளி கஞ்சிதான் பொனப்பாகம்) வேற ஒண்ணையும் கண்ணுல காட்ட மாட்டாங்க. மத்த நேரங்கள்ள வெறகு அடுப்புல கொதிக்க வச்ச பொக நாத்தம் நாறுற ஆறுன தண்ணிதான்.......
நம்ம இதோட படுற அவதி பத்தாதுண்ணு
"என்னாம்மா...
நாளைக்கி பள்ளிகூடத்துக்கு பொயிடுலாமுல்லண்ணு"
நாநா வேற அநியாயத்துக்கு குசலம் விசாரிப்பாங்க.
ஆக மொத்தத்துல இந்த காச்சல சாம தான பேத தண்ட மொறையில வெரட்டிட்டுதான் மறு வேலண்ணு வீடேசொல்லாம கொள்ளாம வரிஞ்சு கட்டியிருக்கும்!
விருந்தும் மருந்தும் மூணு நாளைக்கிங்கிற நம்ம பழமொழிப்படி அம்மா கிஷாயம் மூணு நாளைக்கிதான்......
அதுக்கு மசியாம இந்த காச்சல் அடம் பண்ணுச்சுண்ணா அப்பறம் டாக்டர் கிட்டதான்.
ஃபேமிலி டாக்டர் ஃபேமிலி டாக்டர்ணு நெறயா பேரு பேசும்போதெல்லாம் சொல்லுவாங்க ஆனா எங்க டாக்டர எப்டி கூப்புடுறதுண்ணு எனக்குத்தெரியில அவர் எதுலயும் ஸ்பெஷலிஸ்ட் இல்ல...
எம்.பி.பி.எஸ்.
கூட இல்ல ஏதோ ஒரு லைசன்ஸ் வச்சிருந்தாங்கண்ணு நெனைக்கிறேன்.....
கருப்பா குண்டா அஞ்சடி ஒயரந்தான் இருப்பாங்க.
ஒரு காலுல கும்பகோணத்து ஸ்பெஷலான லைட்டான யானக்கால்...... பளிச்சிண்ணு வெள்ள வேஷ்டி வெள்ள சட்ட அங்கவஸ்திரம் போட்டிருப்பாங்க......ஆனா அவுங்களப்பாக்கும்போது எங்குளுக்கெல்லாம் ஒரு ராஜாவப்பாக்குறமாதிரி இருக்கும்...
வாய் நெறயா சிரிப்பு.... டாக்டர் ஐயா கிட்ட போனா ஒடம்பு சொகமாயிடும்கிற ஜனங்க நெரிசல் எப்பைக்கும்...கிளினிக்கில.....
தூரத்து வகையில எங்களுக்கு சொந்தமும் கூட
..... அதனால அவுங்கள டாக்டர் தாத்தாண்ணுதான் கூப்பிடுவோம்.
தாத்தா தெனமும் எங்க வீட்லேருந்து ரெண்டு தெரு தள்ளியிருக்க ஒரு கிளினிக்கிக்கு காலையில வருவாங்க.
எங்க தெரு மொன திரும்பும் போதே தாத்தாவின் வில் வண்டி வர்ரது ஜலங் ஜலங்குண்ணு கேக்கும்.எட்டி பாத்து தாத்தாவுக்கு கை காட்டுவோம்.
அவுங்களும் சிரிச்சிக்கிட்டே கைகாட்டுவாங்க.
எண்ணைக்காவது ஒரு நா வண்டிய நிறுத்தச்சொல்லி எறங்கி வருவாங்க...
ஸ்கூலுக்கு போறதுக்கு அரகொறையா டிரஸ் பண்ணிகிட்டு இருக்க நாங்க உள்ள ஓடிப்போய் சட்டய மாட்டிகிட்டு வருவோம்.....
அம்மா அப்பா நாங்க எல்லாரும் மொழங்கால்ல இருந்து தாத்தாகிட்ட சிலுவ போட்டுக்குவோம்.
எல்லாருடைய படிப்பையும் விசாரிப்பாங்க இப்ப மாதிரி அனாவசியமா மார்க்கு ரேங்கு விசாரணையெல்லாம் பண்ணமாட்டாங்க.
"சாப்பிட்டு போங்க ஆஞா
"
"இல்லம்மா நேரமாச்சு...... இன்னொரு நாளைக்கி வர்ரேன்".
கிறிஸ்மஸ் சமயத்துல வந்தா அம்மாவோட நெய்யுருண்டைய பிரியமா ஆஹா ஓஹோண்ணு சாப்பிடுவாங்க.
டாக்டர் தாத்தாவோட கிளினிக் ரெண்டு தெரு தள்ளியிருந்தா கூட அங்க போக மாட்டோம்.
டவுண் மத்தியில இருக்க அவுங்க வீட்டு கிளினிக்குக்குத்தான் போவோம்.
இந்த கிளினிக் வேற டாக்டருது போல.........
அங்க தாத்தா காலையில கொஞ்ச நேரம் வந்துட்டு போறாங்கண்ணு நெனைக்கிறேன்.
தாத்தா கிளினிக் கும்பேஸ்வரன் கோயில் கிட்ட.....
நாங்க இந்த கடைசியில மோதிலால் தெரு.
சின்ன பிள்ளைகளா இருந்த எங்கள நாநா அவுங்க ஹெர்குலிஸ் சைக்கிள்ள கூட்டிகிட்டுப்போறதே அலாதிதான்.
பின் சீட்ல உக்கார வச்சு ரெண்டு காலையும் குறுக்க போட்டு ஒரு துண்டால முன் பாரோட சேத்து லேசா கட்டிடுவாங்க......
தூங்கிட்டாக்கூட கீழ உழுந்துற மாட்டோம் பாருங்க.....
வழி பூரா ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசிகிட்டு வர்ரதும் அந்த நோக்கோடதான்.
தாத்தா கிளினிக்கில எப்பயும் கூட்டந்தான்.... இஞ்செக்ஷன் ஊசியெல்லாம் ஒரு பக்கம் கொதிச்சிகிட்டு கெடக்கும்(
தூக்கி எறியிற ஊசியெல்லாம் அப்ப இல்ல)பெரிய பெரிய பாட்டில்கள்ல கலர்கலரா மருந்து இருக்கும்.
கம்பவுண்டர் மருந்து உரல்ல மாத்திரய இடிச்சிகிட்டு இருப்பார்.
உள்ள நொழையும் போதே பயம் ஒதரும்...
கூட்டமா இருந்தா உள்ள போங்க கொஞ்ச நேரங்கழிச்சு கூப்புடுறேன்ம்பாங்க.
தாத்தாவோட வீடு ரொம்ப.....
பெருசு எங்க வீட்டெல்லாம் தூக்கி உள்ள வச்சுரலாம்.
தாத்தாவோட மனைவிய நாங்க அம்மாச்சிண்ணு கூப்பிடுவோம்...
மூஞ்சி நெறயா சிரிப்போடு வாங்க வாங்கம்பாங்க.
தாத்தாவுக்கு பொருத்தமான ஜோடிஅவுங்க!
ரெண்டு பேருக்கும் எங்க வீட்ல காணக்கிடைக்காத......
ஒஸ்தியான.......
ஓவல்டின் கரைச்சு குடுப்பாங்க........
கூட்டம் கொஞ்சம் கொறஞ்சவொடனே உள்ள போவோம்.
ஸ்டெதெஸ்கோப்ப தாத்தா மாட்டும்போதே நடுங்கிப்பொயிருவேன்.
"
பாப்பாவுக்கு ஒரு இஞ்செக்ஷன் போட்டுருலாமா.."
மின்னல் வேகத்தில் நான் நாநாவுக்குப்பின்னால்
"சும்மா சொன்னம்மா...
வா இங்க வா.."
நவுருர ஆளா நானு
!!
கம்பவுண்டர் பாட்டில்ல மிக்சர் கலந்து கொடுக்கிறார்.
அம்மா கிஷாயம் ஒரு தினுசு என்றால் தாத்தாவுடையதும் அழிச்சாட்டியமானதுதான்.
கசப்பு இல்லாட்டி கூட கிட்ட வரும்போதே ஒமட்டிகிட்டு வரும்.
அந்த மருந்து பூரா உள்ள இறக்குனாதான் அம்மா நிம்மதி ஆவாங்க.....
அப்பறம் பழையபடிக்கி மஞ்ச பைதான்......
பித்தள டிபன் பாக்ஸ்தான்......!
இந்த கதைக்கு நம்ப முடியாத ஆனா அழகான முடிவ நான் ஒங்குளுக்கு நான் சொல்லியே ஆவணும்.
சில வருடங்களுக்கு முன் பாண்டிச்சேரிக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தோம்.
ஊரெல்லாம் சுத்தி கித்தி நீச்சல்லாம் போட்டு முடிச்சு இப்பதான் நிதானமா இந்த மாதிரி நிகழ்வுகள்ள கலந்துகிறோம்.
"மாகிக்கா என்ன தெரியிதா ஒங்களுக்கு?"
திருட்டு முழி.......
அசட்டு சிரிப்பு
"
நான் பாக்கியம் பிள்ள தாத்தா பேரன்....
இது என் ஒய்ஃப்..... என் பையன்"
பழசெல்லாம் கெளம்பி வெளிய வருது.......
பஃபே
உணவ உக்காந்து சாப்பிட ஒரு டேபிள புடிச்சிடுறோம்...
என் வாய் மட்டும் ஓயவில்லை.......
"
எங்க ஒம்பையனக் காணோம்?"
பையன் ரெண்டு கிண்ணங்களில் சூப்போடு வருகிறான்.
பிள்ளைக்கி பசி போல
"இந்தாங்க ஒங்க ரெண்டு பேருக்கும்...."
சிரித்துகொண்டே மேஜையில் வைக்கிறான்.....
எனக்கு ஒன்றுமே புரியவில்லை......
பித்து பிடிக்கிறதோ......?
டாக்டர் தாத்தாவின் அதே சிரிப்பு அதே கனிவு என் கண்ணேதிரே!!!
அற்புதங்களையும் அதிசயங்களையும் நான் தேடிப்போகவில்லை..
என்னை
தேடிவந்த அந்த சுகத்தை விவரிக்க முயாமல் திணறித்தான் போனேன்!!
No comments :
Post a Comment