Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Wednesday, 12 December 2018

அதிசயங்கள் செய்பவர் நம் அருகில்தான் - பகுதி 2


இது எங்களது வருடாந்திர  சந்திப்பு.......  எங்களுடன் வேலை செய்த தோழியின் பிறந்த நாளன்று அவர் வீட்டிற்குச் செல்வதை வழக்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் தோழி எங்களுக்கு ரொம்பவே இளையவர்..... எங்கள் வீட்டிற்கு  வந்து பேசி மகிழ்ந்து   எங்கள் வாழ்த்துக்களை பெற்று செல்லக்கூடிய ஆரோக்கியமான நபர். இருந்தும் அங்கு செல்வதின் நோக்கு தோழியின் 96 வயது அம்மா!
அந்த வயதில் அவர்கள் வேலையை அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். முகம் நிறைய சிரிப்பு. எதிர்த்தாற்போல் இருக்கும் கோயிலுக்கு நடக்க கால்களில்  வலுவில்லாவிட்டாலும் கோயிலின் ஜெபங்கள் அவரிடம் வந்து சுகப்படுத்துகின்றன
சாப்பாட்டின் அளவு  குறைந்ததே தவிர சின்ன வயசில் சாப்பிட்ட அதே ருசியான உணவை சுவைத்து உண்ணுகிறார்கள்.
வருகிறோம் என்று சொன்ன அந்த நேரத்திற்கு போகமுடியாமல் நடுவில் இன்னொரு வேலை வந்து விட எங்களுக்கு தோழியின் போன் கால். ‘நேரமாயிடுச்சேண்ணு அம்மாதான்  போன் பண்ணச்சொன்னாங்க’  எங்களுக்கு ஆச்சரியம்! இந்த வயதில் இவ்வளவு நுணுக்கமான கவனிப்பா?!
கட்டிப்பிடித்து முகமலர்ந்த வரவேற்பால் மனதைத்தொட்டுவிட்டார்கள் அம்மா!
பெண்ணிடம் ஏதாவது சாப்பிடக்கொடுக்கச்சொல்கிறார்கள். பேச்சு நடுவில் தோழி “ அம்மா இப்ப ஒரு வேல பண்ணிகிட்டு இருக்காங்க தெரியுமா? அவுங்க சின்ன வயசில சொன்ன ஒரு அழகான ஜெபத்த கையால எழுதி  கோயில்ல இன்னும் தெரிஞ்சவங்களுக்கெல்லாம் குடுக்கச்சொல்றாங்க.” சொல்லிக்கொண்டே அம்மா எழுதின பேப்பரை எங்களிடம் காட்டினார். வயதின்  நடுக்கமோ தளர்ச்சியோ இல்லாத  முத்து முத்தான தமிழ் எழுத்துக்கள்!! “ஆங்கில எழுத்து அதைத் தூக்கி அடிக்கும் அழகு! நாங்கள் அசந்து போனோம்!
“அம்மாகிட்ட ஜெராக்ஸ் எடுத்து குடுக்குறோம்ண்ணு சொன்னா கேக்கமாட்டங்கிறாங்க.... கையாலதான் எழுதிக்குடுப்பேங்கிறாங்க“தோழியின் மனக்குறை
  சூடிக்கொடுத்த சுடர்மணி போல் அம்மா இத தவமா  செய்யிராங்கம்மா...அந்த தவத்தை  கலைத்துவிட நமக்கு உரிமை இருக்கா என்னா?”
விடை பெறுகையில் “ எங்களுக்கும் உங்கள் புண்ணியத்தில் பங்கு உண்டா?”என்கிறோம்
“இண்ணைக்கி உங்களுக்காத்தானே எழுதி வைத்திருக்கிறேன்.” டயரியைத்திறந்து உள்ளிருந்த   தவத்தின் ஒரு துளியை எங்களுக்குக்கொடுக்க  அந்த 96 வயது இளைஞி அன்று நடத்திக்கொண்டிருக்கும்அதிசயத்தில் நாங்களும் பங்குதாரர்களாகத்தான் ஆகிப்போனோம்!

Wednesday, 21 November 2018

அதிசயங்கள் செய்பவர் நம் அருகில்தான்!


அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அதற்காக கடமையை விட்டு விட முடியுமா என்ன? வெளியூர் சென்றே ஆக வேண்டிய சூழ்நிலை. இந்த ஒரு வேலையை முடித்துவிட்டால் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு அவர் பக்கத்திலேயிருந்து கவனித்துக்கொள்ளலாம்.
அதற்கெல்லாம் அவசியம் இல்லை என்பதை உணர்த்த வீடு  திரும்பிய அவருக்கு அங்கு கூடியிருந்த  பெருங்கூட்டம் பிரகடனப்படுத்தியது. மனசு நிறைந்த துக்கத்தை தாங்கமுடியாமல்உள்ளே நுழைகையில்  அடித்து பிரண்டு கொண்டு வந்த குருக்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொள்ள அவர்களது தள்ளுபிடிக்குள் அவரது ஒன்பது வயதுப் பையனைக் கண்டபோது  அவர்  அதிர்ந்து போனார்!
“பார்த்தியோடா.... உன் பையன் பண்ணின அதிகப்பிரசங்கி
தனத்த? இதெல்லாம் பெரியவா எடுக்க வேண்டிய முடிவுண்ணு எவ்வளவோ சொல்லிப்பாத்தோம். தோப்பனார் வந்துருட்டுமுடாண்ணு கெஞ்சிப் பார்த்தோம். அதுக்கெல்லாம் நேரம் கெடையாதுண்ணுட்டான்   மொளச்சு மூணு எலவுடல...... எங்களையெல்லாம் எப்டி தூக்கி எரிஞ்சி பேசிட்டாங்கிற...? அவுரு முழிய நோண்டிண்ணா எடுத்துட்டான்!  நன்னா நாலு கேள்வி கேட்டு மொத்து பூச குடு.... ஆங்காரத்தின் உச்சியிலிருந்தது அந்தக்கூட்டம்!
கூட்டத்திலிருந்த பையனை கைப்பிடித்து அறைக்குக் கூட்டிப்போனார் அவர்.
“அப்பா........ தாத்தா இறந்த ஒடனே ஒன்ன காண்ட்டாக்ட் பண்ண முடியாதுண்ணு எனக்குத்தெரியும் (செல்போன் இல்லாத நாட்கள் அவை ) அதனால உன்  போன் டயரியில கண் தானத்துக்கு நீ குறிச்சி வச்சருந்த நம்பருக்கு போன் பண்ணி விவரங்கள சொன்னேன். நாலு மணி நேரத்துக்குள்ள கண்ண தானம் பண்ண குடுத்துடுணுமுண்ணு நீ எப்பயோ சொன்னது ஞாபகத்துக்கு வந்துது. சரி நீ இருந்தாலும் இதத்தான் பண்ணியிருப்பண்ணு..... அம்மாகிட்ட பேசிட்டு இந்த முடிவ நான்தான் எடுத்தேன்... தப்பாப்பா?அந்த மாமால்லாம் என்ன ரொம்பவே திட்டிபிட்டா..... பையனது கண்கள் நிறைந்து வழிந்தன!
அவர்கள் இருவரும் வெளியே வருகையில் கூடியிருந்ததவர் மத்தியில் என்ன நடக்கப்போகிறதோ என்ற பதஷ்ட்டம் அதிகமானது.
“ எவ்வளவு அருமையான காரியத்தை எம்பையன் செஞ்சிருக்கான் பாருங்க?! நானே அவன் வயசில இந்த முடிவ எடுத்துருப்பனாங்கிறது சந்தேகந்தான் ...... ரெண்டு பேருக்கு கண் குடுக்குற புண்ணியத்தல்ல இவன் செஞ்சிருக்கான்.....! அப்பாவுக்கு காத்திருப்பதுல பிரயோசனம் இல்லண்ணு அவனுக்குத் தெரிஞ்சிருந்தது பூர்வ ஜென்மத்துப்  புண்ணியந்தான். ஏண்ணா கண் தானம் எறந்த நாலு மணி நேரத்துக்குள்ள பண்ணிடணும்.” பையனை அப்படியே கட்டி அணைத்துகொண்டார் அப்பா! கசிந்து உள்ளுருகி வந்தஇச்சொற்களுக்கு கூட்டத்தாரிடையே  பதில் இல்லாமல்தான் போயிற்று! இந்தஅருமையான சம்பவம் என் காதுகளுக்கு  வந்தபோது நானும் உருகித்தான் போனேன். தந்தையும் தனயனும் நாம்  கண் கூடாகக்  தரிசிக்கும், அதியசய அபூர்வப்பிறவிகளோ!
அதே குடும்பத்தில் நடந்த இன்னொரு அதிசயமும் என்னை மூக்கில் விரல் வைக்கச்செய்தது உண்மையிலும் உண்மை.
தமிழ் நாட்டுக்கல்யாணங்களில் நேரடி அழைப்பு என்பது ஒரு முக்கியமான ஒரு பங்கு வகிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. மற்றவர்களுக்கு எப்படியோ இன்னும் சம்பந்தி முறைக்காரர்களுக்கு நிச்சயமாக மஞ்சள் குங்குமம் பணம் பாக்கு வைத்துதான் பத்திரிகை கொடுக்க வேண்டும்.. தபாலில் அனுப்பும் பத்திரிக்கைகளுக்கு பொதுவாக அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படாது. “வீடு தேடிவந்து கூப்புட்டுட்டு போயிருக்காங்க நாம போவாட்டிண்ணா மரியாத இல்ல.” என்பதே நம் வழக்கு.
அவரது அந்த ஒரே பையனுக்கு கல்யாணம். தேடித்தேடி பத்திரிகை வைத்தார்கள். இது என்ன பெரிய விஷயம்? நாம் எல்லோரும் செய்வதுதானே?  ஆனால் அவ்வீட்டு சிந்தனையிலேயோ ஒரு சிறு மாற்றம்! பத்திரிகை வந்த அன்று  முதல் பத்திரிக்கைகளாக அவர்கள் தெருவின் வேலை செய்யும்  துப்பரவாளர்கள் அனைவரையும் குடும்பமாக  சென்று சந்தித்து தாம்பாளத்தில் பணம் ஆயிரம் ரூபாய்  பாக்கும் வைத்து அழைப்பு விடுத்து நீங்கள் எங்கள் வெகு முக்கிய விருந்தாளிகள் என சொல்லாமற் சொல்லி விளம்பரம் ஏதுமின்றி ஒரு அதிசயத்தை நிகழ்த்திக்காட்டியது என் மனதை நிறைத்தது!
சின்ன சின்ன அதிசயங்கள் இன்னமும்  செய்து கொண்டே இருக்கும்  அக்குடும்பத்தில் என்றுமே மகிழ்ச்சி கூத்தாடிக்கொண்டேதான் இருக்கும்! ! வாழ்வை மாற்றிப்போட்டு சுகமாக்கும் நிறைவுதரும் அதிசயங்கள் எல்லா வளைவுகளிலும்  நமக்காக் காத்து நிற்கின்றது. சிந்தனையில் சிறு மாற்றம்? செய்ததுதான் பார்ப்போமே? நம்மாலும் முடியும்!  

Tuesday, 30 October 2018

பணி ஓய்வும் பக்க விளைவுகளளும்


ஜாலியாத்தான் இருக்கு, மொள்ள எந்திரிச்சு மொள்ள டிக்காக்ஷன் காப்பிய உறிஞ்சி  எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா  பகவான எழுப்புற விடியக்காலத்துல கொறட்ட வுட்டுட்டு  நேரங்கெட்ட நேரத்துல சுப்ரபாதம் கேக்குறது...என்னா இருந்தாலும் சமஸ்கிருதத்துல இருக்க கொழவு தமிழ்ல பாடும்போது இல்லண்ணு நொட்டசொல்லிகிட்டு  நம்ம கிட்ட ராகம் இல்லியா மெட்டு இல்லியா இந்த இளையராஜா மேற்கித்தி மெட்டுல திருவாசகத்த ஏன் பாடித்தொலச்சிருக்காருண்ணு பொலம்பினாலும் அதயும் விடாம கேக்குறது இப்பிடியா...... ரிட்டையர் ஆகி இருக்குறதும்  சுகானுபவந்தான்... 'இதுற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.' அவர்  மனசு துள்ளிக்குதித்தது.
"ஐயா பேன நிறுத்துறங்க,.ஊடு பெருக்கோணும்" பதிலொண்ணுக்கும் காத்து கெடக்காம  டொக்குண்ணு ஒரு சத்தம் மட்டுந்தான்! பொத்துக்கொண்டு வந்தது அவருக்கு !!
"என் ஆபீஸ்ல முட்டும் இது நடந்திருந்துச்சுண்ணா அவன் சீட்டு அண்ணைக்கே கிழிபட்டுருக்கும்.
என்ன மரியாத எனக்கு, என்ன பவ்யம்!  எத்தன கொள்ள சலாம் காலமற காட்டியும்!! என்னா பணிவா டிரைவர் கார் கதவ தொறந்து வச்சிகிட்டு நிப்பான்!!  அட்டாச்சி கேச தூக்குற பவுசு என்ன? லிப்ட்ல நான் நொழஞ்சா  ஒரு பய ஏற மாட்டான் அவ்வளவு மரியாத  எவ்வளவு பெரிய எடத்துக்கும் நான்  ஒரு வார்த்த போட்டா  போதும்,. காரியம் முடிஞ்ச மாதிரிதான்.   இண்ணைக்கி?  வேல செய்யுற பொம்பள அநாவசியமா என்னத் தூக்கில்ல  எறியுது? இவருக்கு புசு புசுண்ணு வந்துச்சு எல்லாம் இந்த வீட்டம்மா  குடுக்குற எடம், அததுகள வைக்க வேண்டிய  எடத்துல வைக்கணும்.. 
"அந்த பொம்பளைக்கி மத்தியான சாப்பாடு குடுக்குறத நிறுத்து... ரெண்டு பேரும் ரிட்டையர் ஆயிட்டோம்.. இனிமே வரவு செலவ பாத்து பண்ணணும்"
"ம்ம்ம்ம்" பொதுவான ஒரு பதில் அந்த பக்கமிருந்தது!! இப்ப போயி இவரு கிட்ட "நம்பிக்கையான ஆளு  கெடைக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம்ப்பாண்ணு கேக்க முடியுமா என்ன? நேரம் வரும்போது மொள்ளதான்அவுத்து வைக்கணும்” சாணக்கியத்தனம் சாதாரண விஷயத்துக்கூட தேவையாத்தான் இருக்கு!! 
இப்படி சின்ன சின்ன விஷயங்களெல்லாம் அவரை மட்டம் தட்டுவதாகவே  மனசுநிறைய  கூத்தாட அவருக்கு எல்லாமே சப்பிட்டுப்போயிற்று எம்.எஸ். சுப்புலஷ்மியும் இளையராஜாவும் கூட அலுத்துப்போனார்கள்.
தாத்தா காலத்து கடிகாரங்களுக்கு தினப்படி சாவி கொடுக்காவிட்டால் ஸ்பிரிங்தொளதொளத்துப்போவது போல.... 
காத்துபோன டயர் தார் ரோட்டோடு ஒன்றித்து போவதைப்போல அவர் மனசுக்குள் உளச்சல்!
"அம்மா ஒங்கிட்ட தனியா பேசணும்மா." தெருவின் சலவைக்காரர் ஜனா
"ஐயா குளிக்கிறாருப்பா வேல செய்யுறவங்களும் இன்னம் வருல."
"அம்மா ஐயாவ மார்கெட்டுக்கு அனுப்பாதம்மா."
"ஏம்ப்பா ஐயா ரிடையர் ஆயிட்டாங்க... மார்கெட்டுக்கு நடந்து போறதெல்லாம் ஒரு எக்சர்சைஸ்தானே?
"அம்மா கூடத்தான் ரிட்டையர் ஆயிட்ட  இன்னா  நான் சொல்றது.கரிட்டா? நீ போயம்மா மார்கெட்டுக்கு"
"ஜனா அண்ணைக்கி பாரு. ஐயா மொளக்கீர கட்டு எட்டு ரூவாய்க்கு வாங்கிகிட்டு வர்றாரு... நான்  போனா கட்டு பத்து ரூவாய்க்கு கொறைய மாட்டங்குறாங்க."
 சிக்கலே அங்கதாயம்மா யம்மா இந்த ரெண்டு ரூவாகாசு  இன்னா பொறும். நீயி சொல்லு பாக்கலாம்... பிச்சக்காரங்கூட நம்மள மதிக்கமாட்டான்...  இத்த வாங்கற்த்துக்கு ஐயா இன்னான்னா சொல்றாரு தெரியுமா உன்க்கு?
இவுரு பதவி பவுஷல்லாம் பேசுறாரு யம்மா .... நான் ஒரு போன் போட்டா இந்த எட்த்துல உங்கடையே காணாப்பூடும்ங்கிராரு யம்மா! ஏற்கனவே போலிசு கெடுபுடி அத்தோட இது வேறையாண்ணு மனசு காஞ்சி போயித்தான்  கறிகாய குடுக்குதுக. பேசாம ஐயாவ பெசன்ட் நகர் பீச்சுக்கு அனுப்பி வுட்டுடு யம்மா  ஐயா மாதிரி பெரிய மனுசாளுக வர்ற எடம் அவுருக்கு தோதா இருக்கும்." 
"அவுரு வீரப்பிரதாபங்கள கேட்டு கேட்டு அலுத்துப்போன  அந்த பீச் குருப்பு அவுர  ஓரங்கட்டிடுச்சு"ண்ணா ஜனா கிட்ட சொல்ல முடியும்?!      
"சரிப்பா... நான் பாத்துக்கிறேன்" பொதுவில் சொல்லிவிட்டு அந்த அம்மா உள்ளே போய்விட்டார்கள்.
"சார் நல்லாருக்கிங்களா? பொண்ணுக்கு கலியாணம் கூடி வந்திருக்கு.... சாரும் அம்மாவும் வந்து கொழந்தகள ஆசிர்வதிக்கணும்." ஆபிசில் வேலை பார்க்கும் சக ஊழியர்
"வாப்பா வாப்பா. நல்லாருக்கியா? வாங்கம்மா" ஆபிசில் அவருக்குக்கீழே வேலை பார்த்தவர். தம்பதி சமேதரராய் பத்திரிக்கை வக்க வந்திருக்கிறார்கள்....
"என்னப்பா ஆபீசெல்லாம் நல்லபடியா போவுதா?"
"என்னமோ போவுது சார்.... ஆனாலும் நீங்க இருந்தமாதிரி இல்ல சார்"
ரிட்டையர் ஆனவருக்கு ஆறுதலாக ஏதாவது சொல்ல வேண்டுமே!!
மனசு குளிர்ந்து போய் பத்திரிக்கையைப் பிரித்தவருக்கு
"ஆஹா இவன் எப்படி டவரி குடுக்கப்போகிறான்.?" என்ற உதைப்பு
பொண்ணு மாப்பிள்ளை பின்னாடி ஒரு டிகிரியையுங்காணாம். இவனுக்கும் பெரிய சம்பளம் இல்ல  ஓய்பும் வீட்டோட இருக் கவங்கதான். நாங்க ரெண்டு பேர் சம்பாரிச்சே பொண்ணு கல்யாணத்துக்கு முழி பிதுங்கிப்போனோம்
என்னப்பா பொண்ண படிக்க வச்சிரிக்கியா..?
ஆமா சார் அமெரிக்கன் கம்பனியில வேல பாக்குறா
நான் கூட அமெரிக்காவுக்கு டெபுடேஷன்ல போனனே ஞாபகம் இருக்கா..? 
என்ன சார் அப்புடி கேட்டுட்டிங்க? நாங்கள்ளாம் உங்கள வழி அனுப்ப ஏர்போர்ட்டுக்கு வந்தமே..?
"யப்பப்பா அமெரிக்காவுல என்னா உபசரணஎன்னா கவனிப்பு  5 ஸ்டார் ஹோட்டல்ல தங்க வச்சு... நம்ம இங்கிலிஷ்ல அவனுக அசந்துதான் போயிட்டானுக.... "
"ஒங்க கெட்டிக்காரத்தனம் யாருக்கு வரும் சார்?"
"பொண்ணை நல்லா படிக்க வச்சிருக்கலாமேப்பா பத்திரிக்கையில பேருக்கு பின்னாடி டிகிரி     ஒண்ணையும் காணாமே... ம்ம்?"
"அந்த கூத்த ஏன் சார் கேக்குறிங்க சார்? அப்பா அம்மா கஷ்டப்பட்டு  கடன ஒடன வாங்கிபடிக்க வச்சா  இந்த காலத்து பசங்க " படிப்பெல்லாம் பின்னாடி போட்டுகிட்டா அசிங்கம்பாங்குதுக... அதப்போட்டா அம்மா அப்பாவுக்கு பெரும இல்லியா சார்?"
சரி சரி வுடு பொண்ணு அமெரிக்கன் கம்பெனியில என்னா வேல பாக்குறா..?
"டெக்னிக்கல் கோஆர்டினேட்டரா இருக்கா சார். மாசம் ஒரு தடவ அமெரிக்காவுக்கு பறந்தே ஆகணும்... ஹில்டன் ஹோட்டல்ல  ஒரு ரூம் அவளுக்கு எப்பயுமே ரிசர்வ்டாம்."
சார் மூஞ்சியில் ஈ ஆடவில்லை. தாத்தா காலத்து சாவி தீர்ந்த கடிகாரமாக பங்கச்சர் ஆன கார் டயராக அமுங்கித்தான் போய்விட்டார்! காபி குடுத்து  உடல்நலம் விசாரித்து கல்யாண கதை கேட்டு சூழ்நிலையை சுமுகமாக்கினது  வீட்டுக்கார அம்மாவின் பொறுப்பாகிப்போனது உண்மை ! 
அவ்வப்போது  அவருக்கு  அழைப்பிதழ்கள் வருகையில் கோட்சூட் டை சகிதம் ஜம்மென்றுதான் கிளம்புவார். அன்றும் அப்படித்தான் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்க இருந்த விழாவிற்கு லிப்டிற்கு காத்திருக்கையில் அரைக்கால் டிரவுசரோடு பசங்க அவனுகளோடு கூட   பொம்பள பிள்ளைகள் ஏகத்துக்கும் சத்தம் போட்டுகிட்டு கூத்தும் கும்மாளமுமா பெரிய கூட்டம். முட்டியடிச்சி என்னோட லிப்ட்ல ஏறுதுக....நாசூக்கான ஹோட்டல்ண்ணு ஒரு விவஸ்தயே இல்லாம .... இது தெருவோர டீக்கடையா என்ன.?
எல்லாம் இந்த ஐடி கம்பெனிகாரனுக குடுக்கிற எடம் வேலையில சேந்த ஒடனே அஞ்சு லக்கத்துல  சம்பளம். அதெல்லாம் நான் பாக்கறதுக்கு ஜென்மமாச்சு ... ம்ம்....   பெருமூச்சுமட்டுந்தான்   அவருக்கு மிச்சமாச்சு.
"குட் மார்னிங் சார்..? சௌக்கியமா.. வாங்க வாங்க உள்ள வாங்க." நம் ஹீரோதான் அவர்
வீட்டு கேட்டில்.
"குட் மார்னிங் சார் ...நல்லா இருக்கிங்களா?  அவசரமா பேங்க் முட்டும் போகணும்."
"சார் பேங்க்காரன் நமக்காகத்தான் சார்  இருக்கான் அவனுக்காக நாம இல்ல. அப்படித்தான் ஒரு தடவ பாருங்க." 
வந்தவருக்கு என்னடா இது காலமகாட்டியும் இவர் கிட்ட வசமா மாட்டிகிட்டமேண்ணு ஒதப்பு. இவர் வெற்றி சரித்திரங்களை கேட்டு முடிக்க கொறஞ்சது அர மணி நேரமாவது ஆவும். அடுத்த தடவையிலிருந்து பக்கத்து தெரு வழியா போயிரணும்... கொஞ்சம் சுத்தானாகூட  பரவாயில்ல
ஒரு நாள் கோவிலுக்கு போயிட்டு வேப்பமரத்து காத்து வாங்கிக்கொண்டு ரெண்டு பேரும் திரும்ப வருகையில் "சார் சௌக்கியமா இருக்கிங்களா... நான் ஏர்போர்ட் ராஜதுரை. அப்பல்லாம் ஐயாவ ஸூட் கோட்டோட பாக்கும்போது இங்கிலீஷ் தொரமாதிரி கம்பீரமா நடையில  போவிங்க. நாங்க பவ்யமா ஒதுங்கி நிப்போம். எப்பிடியாச்சும் ஒரு தரம் ஐயா கைய  குலுக்குமுண்ணு பெரிய ஆச.... ஒரு நா மனச தெடப்படுத்திகிட்டு ஒங்குளுக்கு குட் மார்னிங் சொல்லி   கை குடுத்தேன்... சிரிச்சுகிட்டே ஐயா எனக்கு கை குடுத்தது என்னோட பெரிய பாக்கியம் சார்...
"சந்தோஷம் ராஜதொர... ஒங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம் வாங்க வீட்டுக்கு வாங்க .... நிதானமா பேசலாம்." பர்சிலிருந்த 500 ரூபா நோட்டு  ராஜதுரைக்கு  அன்பளிப்பாய் ஆகிப்போனது
"தேங்க்ஸ் சார்.. கட்டாயம் வர்றேன் சார்"  சொல்லிக்கொண்டே ராஜதுரை ஸ்டார்ட்டிங்கிலிருந்த  பஸ்ஸைப்  பிடித்தார்!
"திருடன் சார்.. சரியான திருடன் சார். அந்த ஆளு.  கத உடுறதில கில்லாடி.  கொழயடிதான் .... கொஞ்சம் மின்னாடி வந்திருந்தா அந்த ஆள நாலு கேள்வி கேட்டிருப்பேன்...  ரூபா கை மாறினப்பதான் அவன அடையாளம் கண்டுகிட்டேன்.  
நானும் ஒருதடவ இவன்கிட்ட வசமா மாட்டிகிட்டேன் சார்சாமி புண்ணியத்துல எம் பர்சிலஅண்ணைக்கி இருந்தது பத்தே ரூபாதான்... தப்பிச்சேன் போங்க...
பேச்சில மயங்கின அவமானம் ஒரு பக்கம். பொண்டாட்டிக்கு முன்னாடி 500 ரூபாய கோட்டவுட்டது அத விடப்  பெரிய மூக்குடைப்பு!!
மனசுல பாரம் ஏற ஏற ஒடம்புக்குள்ள ஆயிரம் நோவுகள் ஒரு கட்டத்தில் அவர் நடையும் குறைந்து போய் வீல் சேர் அவர் ஆசனமாகியது வீடே நிரந்தரமாகிப் போயிற்று..
அவரது வங்கி கணக்கில் ஏதோ தகராறாம்... அவர் நேரடியாக வந்தால்தான் ஒழுங்கு பண்ண முடியுமாம். பேங்க் மேனேஜர்  பணம் எடுக்கப்போன வீட்டுக்கார அம்மாவிடம் சொல்லி அனுப்பி இருந்தார்.
"மரியாத தெரியாத மடப்பசங்க சீனியர் சிட்டிசன எவ்வளவு நேரம் காக்க வப்பானுக... உள்ள போன அவளும் காணாப் பொயிட்டா... எல்லா பாமும்தான்அப்பயே பில் அப் பண்ணி குடுத்தாச்சே " எரிச்சலோடு வீல் சேரில் உட்கார்ந்திருந்தார் அவர்!
"இல்ல நீங்க வந்து சொல்லுங்க.... நான் சொன்னா கோவிச்சுக்குவாரு ." வீட்டுக்காரம்மா பேங்க் மேனேஜரோட தர்க்கம் பண்ணிக்கொண்டே இவரிடம்  வந்தார்.
"வணக்கம் சார்சார் தப்பா எடுத்துக்கக் கூடாது.... சார் கையெழுத்து மாறிப்போயிருக்கு ...
சார் கைநாட்டுவச்சிட்டிங்கண்ணா எங்குளுக்கு ரொம்ப சௌரியமா இருக்கும்”
என்னத்த சொல்றான் இவன். ஒண்ணும் புரியிலையே....
"திரும்பச்சொல்லு.”      
மேனேஜர் கிளிப்பிள்ளையான அந்த நொடியில் அவர் துர்வாசமுனியானார்.
"எவண்டா நீ....  என் கையெழுத்த சரிபார்க்கிறவன்.? நான் என்னா படிச்சிருக்கேண்ணு தெரியுமாடா?   பழைய எஸ். எஸ்.எல்.சி யாக்கும்
நாண்ணு ஜனங்க காலர தூக்கிவுட்டுகிட்டு திரிஞ்ச அந்த காலத்துலேயே நான் எம்.ஏ. படிச்சவண்டா  ஆயிரமாயிரம் கையெழுத்த போட்டவண்டா நானு.... என்னப்போயி கைநாட்டு வைக்க சொல்றியா நீ? ஒன்ன கோர்ட்டுக்கு இழுத்து கிட்டு போய் சீப்பட வைக்கில.. 
இப்படியாக ரிட்டயர்டு வாழ்க்கையை சிக்குக்கோலமாய் ஆக்கித் தடுமாறுபவர்களை உங்கள் வாழ்க்கையிலும் பார்த்திருக்கலாம் 
"என் கடன் பணி செய்து கிடப்பதே." என் பணியில் இன்று  ஒரு மாற்றம் என் நோக்கில் மாற்றம் எதுவும் இல்லை.வாழ்க்கையிலேயே கிடைத்தற்கரிய போனஸ் இன்று என் கைவசம்! அணுஅணுவாய் இதை சுகிக்க வேண்டும்." என் எண்ணும் சுகவாசிகள் அதிர்ஷ்ட்டக்காரர்களே!           

Sunday, 14 October 2018

என்று தணியும் இந்த பாலிதீன் மோகம்


பப்பாளி பழத்துக்கு நான் துணிப்பையை நீட்டுகையில் என்னை அதிசயமாகப்பார்த்தார் பழக்கடைக்காரர். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சுதாகரித்துக்கொண்ட அவர்   
"அம்மா....... வாங்குறவங்க எல்லாம் ஒங்களாட்டமே இருந்துட்டா ஒரு நாளைக்கி எனக்கு ஐநூறு ரூவா மிச்சம்." கை எடுத்துக் கும்பிட்டார்.
"பப்பாளிக்கி ஒண்ணு கொய்யாவுக்கு ஒண்ணு சப்போட்டாவுக்கு ஒண்ணு வாழைப்பழத்துக்கு  ஒண்ணு இது பத்தாதுண்ணு இதெல்லாத்தையும்  உள்ள போட்டுக்க இன்னொரு பையி .......இப்படித்தான் தாயி இன்னைய கத ஓடுது .....
 ஆனாலும்  அம்மா..... இந்த பாலிதின்னு பையி முட்டும் இல்லண்ணு வச்சிகிங்க என் வியாரம் முட்டும் இல்ல........ காய் கட அரிசி மளிகக்கட சொச்ச மிச்ச வியாவாரமும் படுத்துதான் போயிரும்." யதார்த்தத்தை விளம்பினார் அவர்.
அவர் சொல்லுவதும் சரிதான். பாலிதீன்பையில் ஒரு முடிச்சு போட்டு வைத்து விட்டால் சிப்ஸோ வற்றலோ எப்போதும் மொற மொறதான். மாளிகையும் அதற்குள் இருக்கும்போது எப்பவும் புதுசுதான்!
ஆனால் வைர ஊசி என்றால்  கண்ணைக் குத்திகொள்ள முடியுமா என்ன?
சுற்றுப்புற சூழ்நிலையை,பூமியை சமுத்திரங்களை  நீர்நிலைகளை மாசு படுத்திக்கொண்டே இருக்கும் இந்த வஸ்துவை நாம் தவிர்க்க வேண்டாமா என்ன?  
சூப்பர்மார்கட்டுகளை முடிந்த வரையில் தவிர்த்து  துணிப்பைகளை தூக்கிக்கொண்டு சாதாரண மளிகைக்கடைக்குப்  போகும் நான்  அங்கு மளிகை வாங்க வரும் மக்களுக்கு ஒரு விநோதப்பொருளே! "கடைக்காரர்தான் வேண்டிய பை குடுக்க தயாரா இருக்காரே..... நீங்க எதுக்கு வேல மெனக்கெட்டு வீட்லேருந்து பைய தூக்கிகிட்டுவர்ரிங்க?" பக்கத்தில் நின்று கொண்டு என் பை விளையாட்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அம்மா வினாவினார்கள்.  பேச்சுப்போக்கில் அவர்கள் சென்னை புற நகர் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணி புரிகிறார் எனத்தெரிந்து கொண்டேன். ஆகவே பிளாஸ்டிக் குறித்து என் கருத்துக்கள் அழுத்தமாகவே வெளியே வந்தது."நாம  சாப்புடுற சாப்பாடு ஆறு மணிலேருந்து எட்டு மணி நேரத்துக்குள்ள செரிச்சுப்போயிருது ஆனா நாம தூக்கி  எரியிற பிளாஸ்டிக் பைக பூமியில மக்கிப்போறத்துக்கு 400லேருந்து  1000 வருஷங்கள் ஆவுது. பூ வாங்குனா பையி காய் வாங்கினா
பையிண்ணு ஒரு நாளைக்கி எவ்வளவு பைகள நாம விட்டெறியுறோம்?" என்னுடைய செய்தியின் வேகம் ஓங்க ஓங்க அவர்களின் கிரகிப்பு அதிகமாவதை என்னால் உணர முடிந்தது. என் கையை இறுகப்பிடித்து "மேடம் எங்க இஸ்கூல் பசங்களுக்கு ஒரு நா இதப்பத்தி பேசுவிங்களா?" என்றார்கள்
"கூப்பிடுங்கள் கட்டாயம் வருகிறேன்."
செல் நம்பரை வாங்கிக்கொண்டவர்கள் வேலைப் பளுவில் என்னை மறந்துதான் போயிருக்க வேண்டும். ஆயினும் என் மனசுக்குள் ஒரு நப்பாசை.  பிளாஸ்டிக் தவிர்த்தலைப் பற்றி அவர்கள் மாணவருக்கு எடுத்துக்கூறி அவர்கள் பள்ளி வளாகத்தை பிளாஸ்டிக் இல்லா  பூமியாக மாற்றியிருப்பார்களோ?!!
தடபுடலான வரவேற்பு! சென்னையிலேயே வெகு பிரபலமான மட்டன் பிரியாணி, சிக்கன்65!
சைவ சமயலும் வெகு தடபுடல்!
நெய் ஒழுகும் இனிப்புகள் இரு வகை! ஒசத்தியான ஐஸ்கிரீம்.
அதிருசியான சமையல்தான்!! குறை ஒன்றும் இல்லை!
பச்சைப்பசேலேன்ற இலைதான்! ஆனால் அது வாழை இலை அல்ல! பிளாஸ்டிக் இலை!  வெள்ளை வெளேரென்ற கிண்ணிகளில்தான் சிக்கன்......  ஆனால் அது நிஜக்கோப்பை அல்ல... தெர்மகோல் கிண்ணிகள்! இரு பிளாஸ்டிக் கிண்ணிகளில் நெய்யொழுகும் இனிப்புகள்! இன்னும் பெரிய தெர்மகோல் கிண்ணிகளில் பழத்துண்டுகளோடு  ஐஸ்கிரீம்!! இதோடு கூட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் அணிவகுப்பும்! 
எங்களுக்கு விருந்து படைத்தவர்களின் நிலைப் பாடுதான் விளங்கவில்லை. இந்த விருந்திற்கு லட்சக்கணக்கில் செலவு செய்தவர்களுக்கு நூற்றில்  ஒரு பங்கு இல்லை.... இல்லை...... ஆயிரத்தில் ஒரு பங்கு செலவு செய்து தலை வாழை இலை பாக்குக்  கிண்ணிகள் சகிதம் விருந்தளிக்க முடியாமல் போயிற்றா...? இல்லை பிளாஸ்டிக்கின் பின் விளைவு பற்றிய  அறியாமையா...? இல்லை எதில் கொடுத்தாலென்ன  சாப்பாடு அருமையாக இருந்ததா என்ற ஒருதலைக்  கோட்பாடா.....?
நண்பர்கள்தாம்..... விருந்து உபசரணை செய்து கொண்டே அவர்கள் எங்கள் இலைக்கு வந்தபோது பலமாக தலையாட்டிவிட்டு வந்தோமே தவிர  அந்த குதூகலமான நேரத்தில் இதைப்பற்றி சொல்லும் தைரியம் வரவில்லை.... ஆனால் இன்னொரு கல்யாண பத்திரிக்கையோடு  அவர்கள் வீட்டிற்கு வந்தபோது  அவர்களைத் தெளிவு படுத்தினேன்.
 "ஆகா இந்த நல்ல விஷயம் எங்களுக்கு அன்று விளங்காமல் போயிற்றே...... இந்த கல்யாணத்தில் பாருங்கள்.... கட்டாயம் ஜமாய்த்து விடுகிறோம்... அதுமட்டுமில்ல......  எங்கள் சுற்றங்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த செய்தி போய் சேரத்தான் போகிறது......."
என் காதில் தேன் பாய்ந்தது!!
அந்த திருமண வரவேற்பில் தாம்பூலப்பைக்கு பதிலாக மண்டபத்திற்கு வெளியே மரக்கன்றுகள்!!
 "வேண்டிய கன்றுகளை எடுத்துக்கொள்ளுங்கள்." கைகூப்பி அவர்கள் செடிகளை தூக்கிக்கொடுத்த பாங்கு அந்த கல்யாணத்திற்கே கிரீடம் வைத்தாற்போல் இருந்தது!!   
நண்பர்கள் எங்களை அசத்திதான் விட்டார்கள்!
வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் பாலிதீன் பையில்  அன்போடு எங்களுக்குப் பூவும் பழங்களும்  கொண்டு வருகையில் அவர்கள் பிரியத்தை சுகிர்த்தாலும் மனதுக்குள் கூசிப்போவேன். அந்தபைகள் சேர்த்து வைக்கப்பட்டு  ஒரு முறை இரு முறை  பல முறை  உபயோகித்தில் இருந்து கொண்டேததான் இருக்கும். குப்பை போடும் கூடையில் கறுப்பு பாலிதீன் அணைகட்டி குப்பை வண்டியில் கொண்டு போய் கடாசும் பழக்கமும் என் வீட்டில் இல்லை. காய்கறி மற்ற உணவு சம்மந்தப்பட்ட கழிவுகள் என் சின்னத்தோட்டத்திற்கு எருவாகி விடுகிறது. வீட்டில் வேலை செய்பவர்களும் இந்த கோட்பாட்டுக்கு உட்பட்டு செயல் படுவதுமட்டுமில்லை அவர்கள் வீடுகளிலும் இதைப்பின் பற்றுவது என் மனதிற்கு இதமான விஷயம். சிறு துளி பெரு வெள்ளம்தானே?! 
அமெரிக்காவிலிருந்து வந்த நெருங்கிய சொந்தம் குடும்பம் அனைத்தும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு  மூன்று நாட்களுக்கு ஒரு அழகான இடத்தை ரிசர்வ் செய்திருந்தது. காலை சாப்பாடு அங்கேயே கொடுத்துவிடுவார்களாம். மதியமும் இரவும் வெளியே வாங்கிக்கொள்ளலாம் என்று திட்டம்.  "ஆகா   அக்கு தொக்கு இல்லாமால் கதை பேசிக் கொண்டு  சீட்டுகட்டு விளையாட்டோடு  சினிமா பார்த்து  செல்பி எடுத்து.....மூணு  நாளைக்கி......." யோசனையே சுகமாகத்தான் இருந்தது!!
"குட்மார்னிங்....... ஒங்க பிரேக்பாஸ்ட் ரெடி மேலே அனுப்பிவிடவா.." ரிசப்ஷனின் அழகிய குரல் கூப்பிட்டது. அவசரமாக பல்லை விளக்கிய கூட்டம் டைனிங் டேபிளை சுற்றிக் கூடித்தான் போயிற்று!!
தேவதை ஒத்த வெண் ட்ரேக்களில் அதே வெண்ணிற மூடியோடு பதினைந்திற்கு மேற்பட்ட தெர்மகோல் தட்டுகள் சீர்வரிசைபோல் வந்தபோது எனக்கு தலை சுற்றியது. கேசரி வடை இட்லிக்கு  தோதாக சாம்பார் தேங்காய் சட்னி காரச்சட்னி கூடவே பொடி எண்ணெய்....... இத்யாதிகளைக் கண்ட கூட்டம்  புகுந்து விளையாட ஆரம்பித்தது. நானும் தான் கூட்டத்தோடு கூட்டமாக!! ஆனால் சின்ன ஒரு அழுத்தத்தோடு........
 அந்த சர்வீஸ் அப்பார்ட்மெண்டின் சின்ன குப்பைத்தொட்டி ரொம்பி வழிந்தது. சுத்தம் செய்யும்  ஆளைக்கூப்பிட்டால் சாயங்காலமாகத்தான் சுத்தம் செய்வார்களாம். அந்த சாயங்காலமும் கழிய  அடுத்த நாள் காலை தெர்மகோல் தட்டுகளும் சேர்ந்து கொள்ள அங்கு பழைய வாடையோடு கூடிய ஒரு தெர்மாகோல் மலை எங்கள் உபயத்தால் உருவாகி இருந்தது!
என்னுடைய தம்பி பையன் ஒரு ஐ.டி. நிபுணன். இன்றைய மதிய உணவு அவனது என்றான். 
"இந்த மாதிரி சுடான ருசியான வீட்டு சாப்பாடு .... ஆபீஸ விட்டு வெளிய வந்தோம்ணா எங்குளுக்கு தெனமும் கெடைக்கிது அத்த....." என்றான்! கூடியிருந்த குழுவின் நாவுகளில் ஊற்றுகள் கிளம்பி வழிந்தது உண்மையே!
தூக்க முடியாமல் பை நிறைய சாப்பாடு வந்தது  ஒரு சாப்பாட்டை மூன்று பேர் பகிர்ந்துகொள்ள முடிவுபண்ணி அளவாகத்தான்வாங்கிக்கொண்டோம். டைனிங் டேபிளில் பிரித்து வைக்கையில் எனக்கு ஏதோ ஒன்று சுர்ரென்று உள்ளிறங்கி குடைசல் பண்ண ஆரம்பித்தது. சாதத்துக்கு சாம்பாருக்கு வத்தல் குழம்புக்கு ரசத்திற்கு தயிருக்கு அப்பளத்திற்கு ஊறுகாய்க்கு என  பல சைஸ் பாலிதீன் பைகள்  டேபிளை அடைத்து நின்றன!! கையேந்தி பவன் சாப்பாடாம்! சுவை என்னமோ நிறைவுதான். ஆனாலும் மனசு நிறைய  குற்ற உணர்வு...?
எல்லோரும் உட்கார்ந்தபோது பாலிதீன் பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்.... அதைத்தவிர்க்க வேண்டும் என்ற கருத்தில் அங்கு யாருக்கும் வேறுபாடு இல்லை.... ஆனால் இந்த மூன்று  சாப்பாட்டை சுகானுபவமாய் மாற்றுவது எப்படி என்பதுதான் கேள்வி!  மூன்று வேளையும் வெளியே சாப்பிட்டுக்கொள்ளலாம் என்ற கருத்து மூன்று வேளையும் டிரஸ் செய்து சின்னதுகளையும் கிளப்பி... ம்ஹும்.........
சாப்பிடுவதற்காக மட்டுந்தான் இங்கு கூடியிருக்கிறோமா  ......??!!!
கேள்வி எழுந்து நிற்க ஐடியா உடனடியாகக் கிடப்பில் போடப்பட்டது. 
 கடைசியில் அமெரிக்க மருமகளின் ஐடியாதான் நிலைத்தது. அப்பாவின் நண்பர் ஒருவர் கேட்டரிங் சர்வீஸ் பண்ணுகிறாராம். போன் செய்து பார்ப்போம் என்ற முயற்சியில் வெற்றி கிடைக்க பாலிதீன் கோட்டை ஒன்றை உருவாக்காமல் பெரிய தூக்குகளில் அறுசுவை உணவும் பாக்குத்தட்டுக்களும் எங்கள் கூடலை  இனிதாக்கியது!!
மாலையில் சென்னை மக்கள் வீடு திரும்பும் வேளையில் ரயில்வே ஸ்டேஷன்களில் பஸ் ஸ்டாண்டுகளில் நாம் அனைவரும் இந்த காட்சியை கட்டாயம் பார்த்திருப்போம். சின்ன சின்ன பாலிதீன் பைகளில் தினுசு தினுசான காய்கறிகள் அடைக்கப்பட்டு ஒரு பை பத்து ரூபாய் என நம்மைக் கூவிக் கூவி அழைக்கும்.." காய்கறியே பிள்ளைக திங்கமாட்டங்குதுக" என்ற கலாச்சார சிக்கலில்  பெற்றோர்கள் மாட்டிக்கொண்டிருக்கும் இன்றைய கட்டுப்பாடான குடும்பங்களுக்கு இந்த அளவு போதுமான ஒன்றே!
அன்றன்றைக்கு தேவைப்படுவதை பச்சென்று அன்றன்றைக்கே வாங்கிக்கொள்ளலாம்....பிரிஜ்ல அடைக்க வேண்டிய அவசியமும் இல்லை! புதுசுக்கு புதுசு....... சிக்கனத்திற்கு சிக்கனமும் கூட!!
இந்த சென்னை மாநகரின் பத்து கோடி மக்களில் ஐம்பது சதம் இந்த கண்ணோட்டத்தில் பதிந்து போயிருந்தால் பூமித்தாயின் கையறு நிலையில்   நாம்தான்  பேரழிவு பாதைக்கு சென்று கொண்டிருக்கிறோம்.
நமது சிறிய நிறுவனத்தில் அனைத்து வருடக் கொண்டாட்டங்களும் 'குழுவின் வெற்றியே நமது' என்ற எண்ணத்தில் செயல்படும். பெற்றோர்களும் குடும்பங்களும் ஒன்று சேரும் அந்த ஒரு நாள் எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்த ஒன்று.
ஐநூறிலிருந்து எழுநூறு வரையான மக்களின்
கூட்டம். விழாவிற்கான திட்டம் மிக நுணுக்கமாக பாலிதீன் பொருட்களை தவிர்க்கும் பணியில் ஈடுபட்டு வெற்றியும் காணும் அந்த நேரம் ஒரு சுகானுபவமே!
பரிசுப்பொருட்கள், அவைகள் கொடுக்கப்படும்  பைகள். விருந்து உபசாரம்  எல்லாமே பாலிதீன் உறவைத் தவிர்த்தே நிற்கும்! நாடகங்களும் இயற்கைமேல்  ஈடுபாடு கொள்ள வைக்கும் சீரிய  கருத்துக்களே! 
தமிழ் நாடு அரசு 2019 ஜனவரியிலிருந்து பாலிதீன் உபயோகத்தை வெகுவாகக் குறைக்க அரசாணை பிறப்பித்துள்ளது ஒரு அருமையான விஷயம். செயல் படுத்துகையில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் அரசு திட்டமிடல் மிக அவசியம்.
நம் நண்பர்களில் அநேகர் பாலிதீனை தவிர்த்து வாழ முயற்சிக்கின்றனர். அவர்கள் தங்கள் வழிமுறைகளை இப்பதிவில் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கு அது ஒரு முன்னோடியாக இருக்கும். பகிர்ந்துதான் பாருங்களேன்.

Thursday, 28 June 2018

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்


"எம்பொண்ணுக்கு நல்ல வேல அமைஞ்சு போச்சு. ஆசுபத்திரி செலவல்லாங் கூட கம்பனிகாரன் குடுத்துடுரானாம். மவராசனா இருக்குட்டும். வயசான காலத்துல  இடுக்கு முடுக்கு இல்லாத ஏசி ரூம்பு    சொகமானபடுக்க, சிரிச்சுகிட்டே மருந்து குடுக்கும் நர்சு. மகளை படிக்க வச்சு அது பிரதி உபகாரமா என்னா சொகம் குடுக்குது பாரு! கல்லு  ரொம்பிப்போன பித்தப்பைய எடுக்க கேவுர்மேண்ட்டு ஆசுபத்திரியில நாத்தத்துக்கு நடுவுல கூட்டத்தோடு கூட்டமா அல்லாடிப்போயில்ல கெடந்தேன்."
மெடிக்கல் இன்சுரன்சுக்கு இப்படியும் சுகமான ஒரு முகமா!? மார்கெட் போன சமயம் காற்றில் வந்து காதில் விழுந்ததில் நான் சிலிர்த்தேன்.
 அன்றைக்கு முகப்புத்தகத்தைத் திறக்கையில்  இதே விஷயத்தைக்குறித்து  நெருங்கிய சொந்தம் ஒன்று எழுதிருந்தது."இடுப்பு எலும்பு மாற்று ஆப்பரேஷன் நல்ல படியாக நடந்தது. டாக்டர்களும் திறமைசாலிகள் அருமையான கவனிப்பு. மெடிக்கல் இன்ஸ்சூரன்சு கைவசம். வலி வேதனைக்களுக் கிடையே இவை நன்றாக அமைவது ஆறுதல் தரும் விஷயங்கள். டாக்டர் பச்சைக்கொடி காட்டிவிட்டார். வீட்டிற்குப் போக வேண்டியதுதான். ஆனால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக பெரியதொரு  இன்ஸ்சூரன்சு தொகையையும் தாண்டி  செலவாகி ஐம்பது சதம் துண்டு விழுகிறது! இந்த சிக்குகளை அவிழ்க்க பலா  திசைகளிலும் பேசிப்பேசி தொண்டை தண்ணி வீணாகியது ஒரு பக்கமென்றால் மணிக்கணக்கில் கிளம்புவோமா  மாட்டோமா  என்ற திரிசங்கு சொர்க்கத்தில் கிடந்தது இன்னொரு அவஸ்தை. மேலே ஐம்பது சதத்தைக்கட்டிய பிறகே நான் கட்டவிழ்க்கப்பட்டு விடுதலையானேன்!! ஆஸ்பத்திரியும் இன்ஸ்சூரன்சும் இதில் கூட்டுக்களவாணிகளா? இல்லை.....இது எனக்கு மட்டும் நடந்த ஒன்றா?  என்ற கேள்வியோடு முடித்திருந்தார்
"என் அருமை நண்பரே  நீங்கள் கூறியிருப்பது உண்மையிலும் உண்மை. இந்த இன்ஸ்சூரன்சில்  ஒரு தினுசில் இல்லை பலா வகையில் மாட்டிக்கொண்டு  தவித்தவர்கள், தவித்துக் கொண்டிருப்பவர்கள்  அனுபவங்களில் உங்களதையும்  பத்தோடு பதினொன்றாக சேர்த்துக்கொள்ளுங்கள்.சிக்காமல் வெளியே வருபவர்கள் வெகு சொற்பமே!!"
வியாபாரத் தொடர்பில் வந்த நட்பு இது.சென்னையில் செல்வாக்குபெற்ற குடும்பம். ஒரு பிரதான சாலை கூட அவர்கள் மூதாதையர் பேரில் இருக்கிறது.  ஆப்பரேஷன் ஆகி வீட்டில் இருக்கும் அந்த நண்பரின்  நலம் விசாரிக்கச் சென்றிருந்தோம்.
" எல்லாம் நல்லபடியா நடக்கணுமுண்ணு ப்ரே பண்ணிகிட்டோங்க. ஆஸ்பத்திரியும்  பேர் போனதாச்சே." அனுசரணையுடன் சொன்னோம்
"ரொம்ப நன்றிம்மா..." என்றவர் "கொண்ட நெறைய மல்லியப்பூ....... உள்ள இருக்குமாம் ஈரும் பேனும்." என்று சொல்லி விரக்தியாகச் சிரித்தார்.
வினாக்குறியுடன் பார்த்தோம். "அது ஒண்ணும் இல்லம்மா.." என்ற அவர் மனைவி " ஆப்பரேஷன்  எல்லாம் நல்லபடியாத்தான் நடந்துச்சு.... கவனிப்பில எல்லாம் கொற ஒண்ணும் இல்ல. "இனிமே நீங்க வீட்ல போய் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான்... ஆஸ்பத்திரி பக்கம் தலை வச்சே படுக்கவேணாம்."   டாக்டர் சிரிச்சுகிட்டே சொல்லவும் பணத்தையெல்லாம் கட்டி முடிச்சிட்டு நிக்கிறோம். "பெரிய ஆக்சிடென்ட் பக்கத்துல ஆகிஇருக்குங்க....... ஐயாவுக்கு ஆம்புலன்சே கெடக்கில. ஒண்ணு பண்ணுங்க நீங்க..... நைட்டு இங்கயே தூங்கிட்டு  காலமற காட்டியும் ஐயா கெளம்பட்டும்  ரோட்லயும் அப்ப கூட்டம்  இருக்காது." டாக்டர் சொன்னார் 
அதுவும் நல்ல யோசன தாண்ணு மூட்ட முடிச்சு எல்லாத்தையும் அள்ளி வண்டியில போட்டுகிட்டு இவுருக்கு ஒத்தாசையா இருந்த ஆள  முட்டும் தொணைக்கு வச்சிட்டு நாங்கள்ளாம் வீட்டுக்கு கெளம்பிட்டோம்.
அடுத்த நா காலையில ஆஸ்பத்திரி ஆபீஸ்லருந்து ஒருபில்ல தொணைக்கி இருந்த பையன் கிட்டகுடுத்து பணத்த கட்டிடுங்க,  ஆம்புலன்ஸ் தயாரா இருக்குங்கிறாராங்ளாம். அவனுக்கு என்னாண்ணே புரியில.அம்மாதான் தெளிவா பணம் எல்லாம் கட்டியாச்சுப்பா.....  ஐயாவ கூட்டிகிட்டு வர வேண்டியதுமட்டுந்தான்  ஓன் வேலண்ணு சொன்னங்களே. அவன் கையில மொதல்ல அவ்வளவு காசும்  இல்ல. வீட்டுக்கு பொயிட்டு பணம் எடுத்துக்கிட்டு வர்ரங்கண்ணு சொல்லிபாத்துருக்கான் பணத்த கட்டிபிட்டு பேஷண்ட்ட கூட்டிகிட்டு போங்கண்ணு கறாரா சொல்றாங்களாம்.இவனும் ஆஸ்பத்திரி போன்லேருந்து வீட்டுக்கு அடிச்சி அடிச்சி பாக்குறான் லைனே கிடைக்கிலியாம்.(உங்கள் ஞாபகத்திற்கு வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் செல்போனை நோண்டாமல் முகம் பார்த்துப்பேசிய  "செல்போன் இல்லாத" சுகக் காலம்அது!") ஐயா பேர அவுரு செல்வாக்க எல்லாம் சொல்லியிருக்கான். ம்ஹூம்.... அவுங்க எதுக்கும்  மசியில. இதுக்கு நடுவுல இவுரு காத்தில்லாத வெராண்டாவுல  ஆம்புலன்சுக்காக காத்துகிட்டு ஸ்டெச்சர்ல படுத்துகெடக்காரு. இந்த பய இவ்வளவு நேரம் என்னாத்ததான் பண்றான்? சமயத்துல மக்கு மாரிதான் இருக்கான். இவுருக்கு எரிச்சலான எரிச்சல். பசி ஒரு பக்கம் காத்து இல்லாத டஞ்சன் வேற. ஐயாகிட்ட விஷயத்த எப்படி சொல்றதுண்ணு அவன் தயங்கி தயங்கி  விவரத்த  சொல்றான். லட்ச லட்சமா கொட்டிகுடுத்திருக்கோம்... இந்த சொல்ப காசு பொறமாட்டமா இல்ல குடுக்கமாட்டமா? கத்தன கத்துல இவுருக்கு  பிரஷர் ஏறிப்போச்சு.. எமர்ஜென்சி டாக்டரருக ஓடியாராங்களாம். இவுரு தொட உடுலியாம். அதுக்குள்ளே தெரிஞ்சவர் ஒருத்தர் அங்க வந்தவரு ஐயாவ சமாதானப்படுத்தி எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு வழியில இன்னொரு ஆஸ்பத்திரியில கொண்டு போய் சேத்து ..... ஒரே கூத்துதான் போங்க"  அவங்க சொன்னதைக்கேட்டு இப்டி கூட நடக்குமாண்ணு அசந்துதான் போனோம்!
பணந்தான் முக்கியம் என்று மருத்துவமனைகள் செயல் படுவதை  நாங்கள் கண்கூடாகக்  கண்ட ஒரு சம்பவம் நம்ப முடியாத ஒன்றாக இன்றும் மனசுக்குள் நிற்கிறது. ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர். எங்கள் தெருவில். அவரது புத்தகங்களை எனக்கு பரிசளித்த நண்பர். ஒரு நாள் கார் ஒட்டிக்கொண்டு போகையில் ஒரு விபத்தில் மாட்டி  ரத்தக்காயங்களுடன்  மயக்கமாகிவிட்டார். போலிஸ் வருவதற்குள் அவர் பர்ஸ் காணாமல் போக விவரம் ஒன்றும் அறியாமலேயே பக்கத்தில் இருந்த கார்ப்பரேட் மருத்துவ மனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்த நிறுவனங்களில் மனித உயிரைவிட அப்ளிகேஷன் பூர்த்தி செய்வதுதனே வெகு முக்கியமான விஷயம்!  அதற்கான விவரங்கள் கிடைக்காமல் காமா சோமா வைத்தியத்தோடு அவர் ரத்த வெள்ளத்திலேயே கிடக்க  விஷயம் அறிந்து சொந்த பந்தங்கள்  மருத்துமனைக்கு வருவதற்குள்உயிர் பிரிந்து போனது. வலுத்துப்போன சண்டையில் மருத்துவமனை பக்கமிருந்து வந்த பதிலின் சாராம்சம் இதுதான். "அட்ரஸ் இல்லாத இவருக்கு எப்படி ஆப்பரேஷன் செய்வது? மருத்துவ செலவை யார் கொடுப்பார்கள்?"
" என் ராஜாவ அநாதப்பொணமா போட்டு வச்சிருந்தானுகளே..................." பல் வேறு வார்த்தைகளால் அவர்கள் மனைவி மருத்துவ மனைக்குக் கொடுத்த வசவு ஜென்மத்துக்குப் போதுமானது.
தங்கை மருத்துவ மனையில்.அவளது பையன் நல்லவேலையில் இருந்ததால் மருத்துவ இன்சுரன்சும் பலமாகவே. "பெரியம்மா..... அம்மா தினமும் மூணு வேளை போட வேண்டிய மாத்திரை ஆஸ்பத்திரி பார்மசியில் ஸ்டாக் இல்லையாம். நீங்க வெளியேருந்து வாங்கிட்டு வரமுடியுமா?" பையன் செல்லில் கூப்பிட்டான். மாத்திரையோடு போனேன்.
"ஜாலியா வெல போட்டுருப்பானுகளே?" சொல்லிக்கொண்டே என் கையிலிருந்து பில்லை  வாங்கிப்பார்த்தவன் அசந்து போய்விட்டான். அதே மாத்திரை அவன் பில்லில் மூன்று மடங்கு விலை!
மருத்துவ இன்சுரன்சு கையில் இருப்பதை அறிந்தால் " பைசா நீயா குடுக்குற? சொகமாக்கி  வீட்டுக்கு அனுப்புறமா? அத முட்டும் பாரு." இது மருத்துவ மனை சொல்லாமல் சொல்லும் மூதுரை!
முப்பது ஆண்டுகளுக்கு முன்னேயே  மனைவி/கணவன் குழந்தைகள் என்ற சின்ன வட்டத்திற்கு மட்டும் இந்த மருத்துவ இன்சுரன்சு பண்ணாமல் தாய் தந்தையரையும் இதற்கடியில் கொண்டு வந்த ஒரு மனிதாபிமான நிறுவனத்தின்   மனித வளத்துறையில் நான் இருந்தபோது இன்சுரன்சு கம்பனி நேரிடையாக  மருத்துவ மனைக்கு பணம் செலுத்தாது. வேலை செய்யும் நிறுவனத்தின் வழியாகவே செக்காக உரியவரை வந்து அடையும் 
இன்சுரன்சு  இருக்கிறது என்று அறிந்தால் மருத்துவமனைகள் அதிகமாக கணக்கு காட்டி விடுவார்கள். இந்த பணம் பிடுங்கும் வித்தையில் மாட்டிக்கொண்டு முழித்த நாங்கள்  இதை எப்படி முறியடிப்பது என யோசனை செய்தோம். மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுபருக்கு வேண்டிய தொகையை  முன்பணமாகக் கொடுத்துவிடுவது மருத்துமனையில் இன்சுரன்சு இருப்பதாகவே காட்டிக்கொள்ளக்கூடாது  எல்லா பில்லையும் கொடுத்தால் சரிவர மருத்துவ மனையில் வாங்கி  வேலை செய்யும் நிறுவனத்தில் கொடுத்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தோம், இந்த பில்களை இன்சுரன்சு நிறுவனத்திற்கு அனுப்பி அந்த நபருக்கு தொகை வருகையில்  அவர் முன் பணத் தொகையை நிறுவனத்திற்கு கொடுத்து விடுவார்.  பேராசைக்கரர்களின் பிடியிலிருந்து எங்கள் மருத்துவ இன்சுரன்சு சுகமே சென்றது!  ஆனால் இப்போது இன்சுரன்சு முறையே வேறு வகையாக இருக்கிறது 
இன்னொரு கொடுமையும் சில மருத்துமனைகளில் நடை பெறுகிறதாம். இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் இருக்கும் வயதானவர்களை, பெரிய தொகை மருத்துவ இன்சுரன்சு வைத்திருப்பவர்களை  மருத்துவர்கள்  குடும்பத்தினரிடம் அருமையான மருத்துவ  மொழிகளில் திறம் படப்பேசி கண்ட கண்ட மெஷின்களில் ஏற்றி இன்சுரன்சு தொகை தீரும்வரை முதியோரை  பணம் பண்ணும் கருவிகளாய்..........!! மனிதாபிமானம் எங்கேதான் போயிற்று?
 "கையில கொள்ளைக்காசு வாயில தோசை"  எல்லா ஆஸ்பத்திரிகளுக்கும் உரித்தாகும் ஒற்றைப் பொன்மொழி. இன்சுரன்சு தவிரவும் கை கவசம் பணம் வைத்துக்கொள்வது எரிச்சலை நீக்கவல்ல அருமருந்து.
என்னதைப்படிக்கும் ஒவ்வொருவர் கைவசமும் இந்த சுழலில் சிக்கிக்கொண்ட அனுபவம்கட்டாயம் என்னதைவிட சிக்கலானதாகக் கூட இருக்கலாம். ஆனாலும் இப்போது நான் பகிர்ந்து கொள்ளப்போகும் வெளி நாட்டு அனுபவம்  இந்தியர் நம்மை
"சொர்க்கமே ஆனாலும் அது நம்ம ஊர போல ஆகுமா?" என்று பாடவைக்க வல்லது!
முதுகு வலியால்  அவதிப்பட்டுகொண்டிருந்த நண்பர் ஒருவரை இங்கிலாந்தில் சந்திக்க நேர்ந்தது. "ஏன் ஆஸ்பத்திரிக்கு போகவில்லையா? நவீன மருத்துவம் எல்லாம் உங்களிடம்  இலவசமாகவல்லவா இருக்கிறது?" என்றோம் 
முதுகை தலையணையில் முட்டுக்கொடுத்த அவர்  "நீங்கள் சொல்வது சரிதான்....... NHS என்ற முறை எங்கள்  அனைவருக்கும் எவ்வளவு பெரிய பிரச்னையானாலும் மருத்துவ  வசதிகளைக்  இலவசமாகத்தான்  அளிக்கிறது. ஆனால் அவசர சிகிச்சையைத்தவிர மற்றதுக்கெல்லாம் நீங்கள் க்யூவில்தான் காத்துதான்  நிற்க வேண்டியிருக்கும்.  நானும் அந்த க்யூவில் நிற்கும் ஒரு பேர்வழிதான் ஒங்க ஊரு எவ்வளவோ பரவாயில்லை ."என்றார்.   
  "வெளி நாட்டிலெல்லாம் அருமையான சிகிச்சை என்னத்த இங்க பண்றாங்க?" என்று அங்கலாய்த்துக்கொள்ளாதிர்கள். " இக்கரைக்கு அக்கரை  பச்சை." அதே கதைதான் அங்கேயும்! முதுகு வலியால் முட்டி வலியால்  அவஸ்தைப்பட்டுக்கொண்டு எண்ணைக்கி நம்மள கூப்புடப்போறானோ தெரியிலியே என்ற திரிசங்கு சொர்க்கத்தில்  உளைந்து போகாமல் இன்றைக்கு முடிவு பண்ணி மறுநாளே  மருத்துவ மனையில் ஆஜராகி விடலாம் நம்ம ஊரிலே!!
"சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல ஆகுமா?" 
சரிதானே!!?

Thursday, 26 April 2018

என் கல்லூரிக் கதை

 ரோட்டு மேல நடந்துதான் சின்ன பள்ளிக்கூடத்திற்குப்போயிருக்கிறேன்.
வேற ஒரு ரோட்டு மேல நடந்துதான் பெரிய பள்ளிக்கூடத்திற்கும் போயிருக்கிறேன்.
கல்லூரிக்கும் ரோட்டு மேலதான் நடக்கணும்...... ஆனால்   காலேஜுக்குள்ள நொழயணுமுண்ணா தண்ணி மேலே நடந்தேதான் ஆகணும்  ரெண்டே நிமிட அந்த நடை இருக்கிறதே அது அந்த நாளையே ஒரு சுகானுபவமாய் ஆக்கிவிடும் ஜல நடை ! நாலு பேர்  மட்டுமே நடக்ககூடிய அந்தப் காவேரிப் பாலம்  காலேஜ் மக்களாகிய எங்களுக்கு மட்டுமே சொந்தமானது!
"பொம்பள பிள்ளக நீங்க....... தல நிமிராம நடக்கணும் "
காலையில் அவதியாக கிளம்பிக்கொண்டிருக்கிற அந்த நேரத்தில்  கோஎடுகேஷனில் படிக்கும் பெண்கள் எங்களுக்கு வீட்டில் வழங்கப்படும் இந்த தினசரி  ஞானபதேசம் எரிச்சலைமூட்டிவிடுகையில் "என்னைப் பார்...... என் அழகைப் பார்  .....  தலையை நிமிர்த்தாமல் பார்" என்று பாலத்திற்குக்கீழே ஓடும்   சிலு சிலு காவேரித்தண்ணீரின்  ஞானபதேசமோ  மனசைக் கனிய வைத்துவிடும்!
தண்ணியைத்தொட்டுக்கொண்டு விளையாடும் அந்தக் கரையின்  மரங்கள் மனசைக் குளிர்விச்சாலும்  அதையெல்லாம் அனுபவிக்க முடியாத ஏக்கந்தான் மனசு பூராவும்.
"எதுக்காக ஏக்கப்படணும்? போய் உக்காந்து  அனுபவிக்க வேண்டியதுதானே?" 
"ம்ம்ம்ம் ........ சுலபமா நீங்க சொல்லிட்டிங்க........1959 கதய நான் இன்னைக்கி சொன்னா ஒங்களுக்கெல்லாம் பித்து புடிச்சி போயிரும்!"
"அதென்னா சினிமாக்காரியாட்டம் ஒட்ட தாவணி? தாவணிய சோத்துக்கை பக்கம் இழுத்து ரெண்டு கொசவத்த வச்சு கட்டு. ஒன்  அண்ணன் படிச்சிருக்கானே தவிர ஞானம் ரொம்பகொரச்சல். சல்லாத்   துணியில பொம்பள பிள்ளைக்கி தாவணி  வாங்கிகிட்டு வருவானா என்னா? இந்த தையக்காரன் வேற இன்னொரு  பக்கம்........ துணிய கெஜம் கெஜமா  வாங்கிக்குடுத்து  சுருக்கம் நெறையா வச்சி பாவாடை தையுடாண்ணு அவன் பாதித்துணிய தின்னுபுட்டு கெவுனு மாதிரி தச்சு குடுத்துருக்கான் பாரு ...... முந்தாணிய இழுத்து சொருவு.
எவன் என்னா கேட்டாலும் வாயத்தொறக்கப்புடாது. காலேஜுக்கு போனமா வந்தமாண்ணு இருக்கணும். மாகி கூடயே பொயிட்டு அது கூடவே திரும்ப வந்துருணும்....." என் தெருத்தோழி அம்மாவுடைய  தினப்படி அறிவுரை ! 
அந்த வாத்தியார் பெண் தப்பு தண்டாவுக்குப்போகாது என்ற பெரும் நம்பிக்கையின் காரணமாக காவேரிப்பாலம் வரை அந்தப் பெண்ணிற்கு நான்தான்  காவல் தெய்வம்! இதற்கு மேலே அவள் வேறே நான் வேறே. அவள் வேறு படிப்பு,எனது வேறு. சாயங்காலம் என்னோடு
வீட்டிற்குத்திரும்பாவிட்டால் அவள் அம்மா  தவித்துப்போய்விடுவார்கள்
"அது வேற கிளாஸ் அத்த........ இன்னும் முடிஞ்சிருக்காது..... இப்ப வந்துரும் பாருங்க." நடந்து கொண்டே என்னிடமிருந்து வரும் அந்த ஆறுதல் வார்த்தையை அவர்கள் எதிர்பார்த்து வச்ச கண் வாங்காம  தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாலும்  " என்னத்த கெளாசா போ....... சட்டு புட்டுண்ணு பொம்பள பிள்ளைங்கள ...... ஊட்டுக்கு அனுப்ப மாட்டானுவளா?" என்ற ஆயாசந்தான் பெருமூச்சாக  வெளியே வரும்.
அண்ணனும் தங்கையுமான அந்த வீட்டில் தங்கையும் தன்னைப்போல் படிக்க வேண்டும் என்ற அண்ணன் உயர் நோக்கு கொண்டிருந்தாலும்   கும்பகோணத்தின் ஒத்தை கோஎடுகேஷன் காலேஜிற்கு பெண்ணை அனுப்பிவிட்டு நெஞ்சு வலியால் அவஸ்தைப்படும் அம்மாவின்  நிலமையைக்கருதி  அந்த அண்ணன் என் தோழி பிழியப்பிழிய அழுததையும் பொருட்படுத்தாது  நன்கு படித்த மாப்பிள்ளையைப்பார்த்து உடனடியாக கல்யாணத்தை முடித்து வைத்து பொறுப்பை கை மாற்றி விட்டு விட்டார்!
அந்த மாதிரியான கவலை புரட்சிக்காரியான என் அம்மா இருக்கையில் எனக்கு எள்ளளவும் கிடையாது. என் பையன்களைப்போலவே என் பெண் பிள்ளைகளும் படித்தே ஆக வேண்டும் என்று சூளுரைத்த சீமாட்டி அல்லவா அவள் !!
நிறைய வருடங்களுக்கு முன்னே நான் எழுதிய ஒரு பதிவில்  கேம்பிரிட்ஜ் ஆஃப் சவுத் இந்தியா எனப்படும் எனது கல்லூரியைப்பற்றி சொல்லியிருக்கிறேன்  இரண்டு காரணங்களுக்காக என் கல்லூரி கேம்பிரிட்ஜ் ஆஃப் சவுத் இந்தியா என்ற  பெயரால் பிரசித்தி பெற்றிருக்கிறது.
ஒன்று இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் கல்லூரி 'கேம்' நதிக்கரையில் குடி கொண்டிருப்பது  போல எங்கள் கல்லூரி காவேரிக்கரையின் மடியில் தவழ்ந்து கிடந்தது! அங்கு நடக்கும் படகுப்போட்டிகளைப்போல எங்கள் கல்லூரியிலும் பொங்கி ஓடும் காவேரியில் போட்டிகள் தூள் பறக்கும்,  
இரண்டாவதாக  கேம்பிரிட்ஜ் எப்படி வல்லுனர்களைக்கொண்டிருக்கிறதோ அது போலவே பிரசித்தி பெற்ற அறிஞர்கள்  இங்கு மாணவராகவும் சொல்லித்தரும் ஆசிரிய பெருமக்களாகவும் இருந்திருக்கின்றனர். உதாரணத்திற்கு  உலகப்பிரசித்தி பெற்ற கணித மேதை ராமானுஜம் இங்கத்தைய மாணவரே, தமிழ்த்  தாத்தா உ.வே. சாமிநாத ஐயர்  இங்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசான்!
1864ல் தொடங்கப்பட்ட எங்கள் கல்லூரிக்கட்டிடம் தாராளமாக பெரிய பெரிய வெராண்டாக்களோடு காற்றோட்டமாய் அரண்மனை போல் இருக்கும். இதோடு கூட காவேரிக் காற்றும் சேர்ந்து கொண்டு காலேஜ்  நுழைவை சுகானுபவமாக ஆக்கிவிடும். எப்படி விமானப்பயணத்தில் முதல் வகுப்பு பயணிகளிக்கு அதிக அளவு ஆக்சிஜன் அளிக்கப்படுகிறதோ அது போலவே கற்பவர்க்கு இவ்வளவு காற்றும் பற்றாது நம் மாணவர் செறிவாகக் கற்க வேண்டிய வசதிகளை நாம் செய்துகொடுக்கவேண்டும் என எண்ணிய நிர்வாகம் வகுப்புக்கு வகுப்பு பங்க்கா எனப்படும் பெரும் துணி  விசிறியை பொருத்தி இருந்தது. வகுப்பின் ஒரு மணி நேரமும் பங்க்கா வாலா விடாமல்  கயிற்றை இழுத்து இழுத்து விசிறிக்கொண்டே இருப்பாராம். வாத்தியார்கள் தூக்கத்தை வர வழைக்கும் கட்டங்களில் தூங்கி விழுந்து கொண்டே கயிரிழுக்கும் பங்க்கா வாலா அருளும் காமடியை வேடிக்கைப் பார்த்து சுகமடையலாமாம்! 
இதெல்லாம் எங்களது  முன்னவர் விட்டுச்சென்ற  தொன்று தொட்ட கதை! ஏனெனில்  நான்  கல்லூரிக்கு சென்ற சமயம் வகுப்புகளில் அழுக்கேறிய பங்கக்காக்களை மட்டுமே கண்டேன். அப்ரேய்சலில் பங்க்க்கா வாலாக்கள் அடிபட்டுப்போய் விட்டார்களோ?!
ஐம்பது கடைசிகளில் இந்த கேம்பிரிட்ஜ் ஆஃப் சவுத் இந்தியா என்ற கோ எடுகேஷன் கல்லூரியில்  பெண்களாகிய எங்கள் நிலமையைப்பற்றி  முன்னொரு பதிவிலும் சொல்லியிருக்கிறேன்
முதலில் படகுப்போட்டியை எடுத்துக்கொள்ளுவோம். பெண் மக்கள் நாங்கள் அந்தப் போட்டியின் அன்றுதான் "ஆஹா நம் கல்லூரியில் படகுகளும் இருக்கிறது." என்பதை உணர்ந்திருப்போம். போனால் போகிறதென்று அந்த ஒரு நாள் மட்டும் காவேரிக்கரையின் நீரைத் தொட்டு ஓடும் மரங்களுக்குக் கீழே  நாங்கள் கூடி நின்று வேடிக்கைப் பார்க்க நிர்வாகம் அனுமதி தரும்..
மற்ற 364 நாட்களும்  மாணவர்கள் அட்டா அடிக்க, அரசியல் பேச, மற்றும் கருமமமே கண்ணாகக் கொண்டு நொட்ரு அடிக்கும்அறிவு ஜீவிகள் படிக்க  இத்யாதிகளுக்கே  அந்தக்கரையோரக் கவிதைகள் காத்துக் கிடக்கும் !

பிரின்சிபால் ரூமுக்கு அடுத்து பூட்டியே கிடக்கும் ஒரு அறை. தட்டுகெட்டுப்போய் ஆடிக்கொருதரம் அமாவாசைக்கு ஒரு தரம் ட்ரான்ஸ்பரில் வரும் ஒன்றிரண்டு பெண் விரிவுரையாளர்களின் சொத்து. அப்படியே அவர்கள் வந்தாலும் ஆட்டைத்த தூக்கி மாட்டிலேபோட்டு மாட்டைத்தூக்கி மனுஷனில் போட்டாவது இரண்டு மாசத்திற்குள்ளேயே கழன்று கொள்வதையே நோக்காகக்கொண்டே நாட்களைக்கடத்துவார்கள் ! அதற்கு அடுத்த இரண்டு அறைகளும் மாணவிகள் எங்களுக்கே சொந்தமானது. ஏக்கரா ஏக்கராவாகக் கிடக்கும் அவ்வளவு இடத்தில்  நாங்கள் 'இரு ரூம் கைதிகள்'!! கொடி ஏற்றுகையில் ரூமுக்கு முன்னிருக்கும் அந்த   வெராண்டாவில் இருந்துதான் பாரதத்தாய்க்கு எங்கள் வணக்கங்கள் மிதந்து செல்லும்!! 
"கேம்ஸ் வகையறாக்கள் ஏதும் வசப்படவில்லையோ ?"
"நீங்கவேற ஆத்திரத்தை மூட்டாதிங்க." 
பெரிய குளத்தில் நடக்கும் தினசரி படகுப்பயிற்சியும், ஆசிரியர்களும் மாணவர்களும் விளையாடும் லான் டென்னிசும் புட் பால் பாஸ்கட் பால் வகையராவும்  மைதானங்களை மறைக்க, பெண்கள் நாங்கள் காவேரிப்பாலம் நோக்கி நடை போட வேண்டியதுதான்!
 இது ஒரு பக்கம் என்றால் வகுப்பிலும் எங்களுக்குக் க்வாரண்டைன்தான்!! அப்போதெல்லாம் ஒரே வகுப்பில் அமர்ந்து பாடம் கேட்கும்  பழக்கம் கிடையாது.  ஒரு வகுப்பு முடிந்தவுடன் அடுத்த பாடத்திற்கு வேறே ஒரு வகுப்பிற்குச்செல்ல வேண்டும். கை காலை முறித்து அடுத்த வகுப்பிற்கு ஃபிரஷாக செல்ல வைக்கும்  ஒரு அழகான முறைதான் இது . ஆனால் மாணவர்கள் மட்டும் புது வகுப்பில் இஷ்டமான இடத்தில் போய் அமர்ந்துகொண்டு   இஷ்டத்துக்கு  கதையடிக்கையில்  நாங்கள் மட்டும்  லெக்சரர் வரும் மட்டும் கதவுக்கு வெளியே நின்று தவம் புரிய வேண்டும். வகுப்பின் முதல் இரண்டு பெஞ்ச் 'கைதிகள்' எங்களுக்கு ரிசர்வேஷன் செய்யப்பட்ட ஒன்று!!
எங்களுக்கு அரசியல் எடுத்த விரிவுரையாளர் அவருக்குரிய மேடையிலிருந்து பாடம் எடுக்கமாட்டார். கீழே இறங்கி வந்து பாடத்திற்குள் லயித்துப் போய்தான் வகுப்பு எடுப்பார். பையன்கள் உஷாராக 'துஷ்டனைக்கண்டால் தூர விலகு' என்ற சொலவடையைப் புரிந்தவர்களாய் முன்  இரண்டு வரிசையை அவருக்கு குத்தகைக்கு விட்டு விட்டு பின்னாலே போய் இடித்து பிடித்துக்கொண்டு அமர்ந்து கொள்வார்கள். எங்களுக்கோ பின்னே செல்லும் வாய்ப்பே கிடையாது எங்களுக்கும் பையன்களுக்கும் இரண்டு பெஞ்சு இடைவெளி இருக்க வேண்டும் என்ற ஒரு பொது நியதி இருக்கிறதே!
அப்பைக்கப்போது உணர்ச்சி வசப்பட்டு  பேசும் அந்த மனிதர் கல்யாண வரவேற்பில் பூதாகாரமான உருவங்கள் பன்னீர் தெளிப்பது போல வாயிலிருந்து வரும் அரசியல் நிர்ணய சட்டங்களுக்கிடையில் தூவானம் போட்டுக்கொண்டேதான் எங்களுக்குபாடங்களை  அளிப்பார். 'ரெயின் மேன்' என்று நாங்கள் புனைப்பெயரிட்டிருக்கும் அவரது  மழையில்   நனைந்து போகாதிருக்க புத்தகங்களை குடையாக்கி நெட்டுக்கு நிறுத்திவைத்துகொள்வோம்.   
இப்படியாக எங்கள் கல்லூரி நிர்வாகம் கல்லூரிப் பெண்கள் எங்களது  மானத்தையும் மரியாதையையும் செவ்வனே காப்பாற்றி மகிழ்ந்தது!!
பக்தபுரி அக்ரகாரத்தைத் தாண்டிதான் கல்லூரிக்குள்  போகமுடியும் என்பதால் அக்ரஹாரத்தில் வசிக்கும்  வகுப்புத்தோழிகள் காந்தி நகர் மோதிலால் தெரு வாசிகள் நாங்கள் வரும் வரை எங்களுக்காக காத்து நிற்பார்கள்  அவர்களோடு சேர்ந்து ஒரே கூட்டமாய்த்தான்  கல்லூரிப்  பாலத்தைக் கடப்போம்.ஒரே ஒரு மாணவன் மட்டும் பாலத்தில் போனாலும் சரி  இல்லை தலை போகிற வேலை காலேஜில் காத்துக்கிடந்தாலும் சரி  அவன் அக்கரையை அடையும் மட்டும் பாலத்தைத் தொடமாட்டோம். எதுக்கு வீணா வம்பு?        
வருடத்தொடக்கத்தில் கல்லூரி பிரசிடென்ட்  தேர்தலுக்கு பெரிய அளவில் நடக்கும் போட்டிகள் அடிதடி வரை போய்கூட நிற்க வல்லது. மூக்கில் வேர்த்த பெண்களின் அப்பாக்கள் அந்த நேரங்களில் எல்.கேஜி யூ.கேஜி பசங்களை ஸ்கூலில் கொண்டு போய்விடுவது போல  கை பிடிக்காத குறையாய் பாலம் கடந்து பெண்களைக்கொண்டு போய் விடுவார்கள்! பாலத்தின் தொடக்க முகனையில் போட்டியிடும் மாணவரின் கும்பல்  தாம்பாளம் நிறைய  பன்னீர் ரோஸ்களை மணக்க மணக்க கொட்டி வைத்துக்கொண்டு நோட்டிசோடு ஓட்டு கேட்பார்கள். வாசனை மட்டுமே எங்களுக்கு உரியது..... பூக்கள் மற்றும் நோட்டீஸ் ஓரக்கண்களுக்கு மட்டுமே சொந்தம்!!
பள்ளியில் எனக்கு ஒன்றிரண்டு முஸ்லிம் தோழிகள் உண்டு. பர்தா போட்டுக்கொண்டு அவர்கள் வெளியே வந்தாலும் வீட்டின் முன்னறையை அவர்கள் தாண்டிவிட்டால் அது பொண்டுகள் சாம்ராஜ்ஜியந்தான்! கூத்தும் கும்மாளமாக  அவர்கள் பொழுது ரொம்ப ஜாலியாகப் போகும். சமயத்தில் எங்கள் காலேஜ் வாழ்க்கையும் ஒரு பர்தா வாழ்க்கைதானோ தானோ என என்னை எண்ண வைக்கும். இண்ணைக்கி ஸ்பெஷல் கிளாஸ் கொஞ்சம் லேட்டாகும் என்று வீட்டில் சொல்லி விட்டு கொலு சமயங்களில் தோழிகள் வீடுகளில் ஸ்பெஷல் நெய் புட்டு  போளி வகையறாக்களை ஒரு கை பார்ப்பதும் ஸ்பெஷலாய் ரெண்டாவது டிபன் பாக்ஸ் போட்டு தோழிகளுடன் பகிர்ந்து உண்ணுவதும் தினுசு தினுசான மல்லிகையையும் டிசம்பர் பூக்களையும் பார்த்துப்பார்த்து சூடிக்கொள்வதும் அந்த சிறைக்கூடத்திலும்  கிசு கிசு கதை அடிப்பதும் ஒரு தனி அனுபவமே!
 'ரெயின் மேன்' எங்களுக்கு எழுதப்படாத ஆங்கில அரசியல் நிர்ணயசட்டத்தை சொல்லிக்கொடுத்த்துக்கொண்டிருந்த கால கட்டத்தில்  இரண்டாம் எலிசபெத் அரசி சென்னை வருவதாவும்  அந்த உயர்ந்த மனுஷியைப்பார்க்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என அந்த அரசியின் விசிறி  எங்களை உசுப்பேத்திவிட்டதில் பெண்களாகிய நாங்கள்  ஆண்களே இல்லாத ஒரு கூட்டமாய் திட்டம் வகுத்து(அப்பா அம்மாவின் பெருந் திட்டுகளுக்கிடையில்) ட்ரெயின்  ஏறி சென்னை வந்து ஊர் சுற்றி, ராணி பார்த்து வகுப்புப்பையன்களை பொறாமைப் பட வைத்துப் பார்த்தது எங்களது குழுவின்  ஒரு பெரும் வெற்றி என்றே கருதினோம்!! 
இப்படியாக அன்னியோன்னியமாக வளர்ந்து கொண்டிருந்த எங்கள் தோழமை  ஒரு கட்டத்தில் மனசை நோக வைத்தது உண்மை.
அந்தத் தோழியின் வீடு கல்லூரிக்கு அருகாமையில்தான். அவள் அக்காவின்   குழந்தைக்கு புண்ணியாதானம் செய்த அன்று மதிய விருந்திற்கு எங்களை அழைத்திருந்தாள், நான்கு பெண்கள் இருக்கும் அந்த வீட்டில் ஆண் பிள்ளை  பிறந்திருப்பதில் பெரும்மகிழ்ச்சி. லஞ்ச் இடைவெளியில் சாப்பிட்டடு விட்டு திரும்ப வகுப்பிற்கு வந்துவிடலாம் என்றும் சொன்னாள்.. எங்கள் கலக்ஷன் தொகையில் பையனுக்கு ஒரு பரிசு வாங்கிக்கொண்டு வீட்டிற்குப் போனோம். பழைய காலத்து சுத்துக்கட்டு வீடு.வெயிலில் இருந்து திண்ணை தாண்டி போனால் இருளாய் இருந்தது அப்போது திடீரென ஐயோ மடி....... மடி....... எட்டப்போ...... எட்டப்போ  என்ற குரலில் பயமெடுக்க திண்ணையை நோக்கி ஓட ஆரம்பித்தோம். சத்தம் கேட்ட தோழி ஓடிவந்து "சாரிப்பா பாட்டி அவ துணிய ஓலத்தியிருக்கா. அவ அப்படித்தான்  வாங்க வாங்க நாம ரூமுக்குள்ள பொயிரலாம்."
"பிள்ளைக்கி  ஒரு கிஃப்ட் வாங்கிகிட்டு வந்திருக்கோம். எப்ப குடுக்கறது?
" ஒங்குளுக்கு கிளாசுக்கு நாழியாயிரும்....... நாம ரூமுக்குள்ள பொயிரலாம்....எங்கிட்டேகுடுத்துடுங்கோ.... கொழந்த தூங்கறான்  "
வீடே மடி மயமோ.......? ரூமுக்குள்ள போறதுக்கு ஏன் இவ்வளவு குறியாக இருக்கிறாளே தோழி என லேசாக புரிய ஆரம்பிக்க  அலங்கமலங்காத ஆடுகளைப்போல அவள் பின்னே போனோம். கொல்லைப்பக்கமாக கைகால் 'அலம்பி' விட்டு அறைக்குள் நுழைந்தோம் . சித்திரான்னம் தயாராக இருந்தது. தோழி மட்டுமே பரிமாறினாள். அருமையான சாப்பாடு.
ஆனால் சிக்கல் சிந்தனையில் அல்லவா குடிகொண்டிருந்தது?
இதுவே என் வீடாயிருந்தால்......
அம்மா அங்கு ஒரு கோலாகலத்தையே உருவாக்கி இருப்பார்கள்.வந்தவரின்  உள்ளமும் உடலும் அந்த விருந்தோம்பலில் பூரித்துதான் போய்விடும்.....!!
"சரிப்பா நல்ல சாப்பாடு போட்ட .... அம்மா அப்பா அக்கா  எல்லாருக்கும் தேங்ஸ்  சொல்லிடு... நேரமாச்சு கெளம்புறோம்." 
இந்த விடைபெறுதலை நாங்கள் சொல்லிக்கூட  முடிக்கவில்லை.
"சாணம் தயாரா இருக்காடி ...? ஒடனே தெளி...... தீட்டு ...... தீட்டு.." உள்ளிருந்து ஒரு குரல்
"உள்ளே போன அருஞ்சுவை எல்லாம்  வெளியே வந்து அக்ரகார ரோட்டை நிரப்பிவிடுமோ? "
தீண்டாமையை எங்கள் வாழ்வில் நேரடியாகவே சந்தித்து மனசளவில் மடிந்து போனது கல்லூரி  நாட்களின் மறக்க முடியாத வாழ்க்கை அனுபவம்!!
கொஞ்ச நாட்களுக்கு முன் கும்பகோணம் செல்லும் வாய்ப்பு.. காலேஜ்வழியே வண்டி செல்கிறது. இந்தக்கரை பூராவும் செம்புழுதி படிந்த ஓணான் பூச்செடிகள். காவேரி பூரா பிளாஸ்டிக்கின் குடியிருப்பு. அவற்றின் ஊடே சிறு  சிறு சாக்கடைகளின் சங்கமம்வேறு! 
சின்னத்தேரும் கட்டுசோறுமாய்  காவேரித்துறைகளை அலங்கரிக்கும் மக்கள் கூட்டத்திற்கு, பொங்கி பூத்து வரும் நீரில் தம்பட்டம் அடித்து விளையாடி மகிழும் அந்த ஆடிப்பெருக்கு தினத்தன்று  காவேரி மணலின்  குழி பறித்த நீர் நிலைகளில்  சாங்கியக்குளியல் மட்டுமே அந்த வருடக்கொடுப்பினை ஆகிப்போனதாம். கும்பகோண நண்பர் வருத்தமான விவரம் சொன்னார்.
அக்ரகாரமே மாறிப்போய்க் கிடந்தது. சுத்துக்கட்டு வீடுகளில் கடைகளும் ஆபீஸ் வகையறாக்களும் குடியேறிவிட்டன. ஆனாலும் துள்ளலான ஒரு சின்ன சந்தோஷம் எனக்குள்!!
'மடி.....மடி.... எட்டப்போ.......'  என்ற அன்றைய பயமுறுத்தல் இன்றி திறந்து விடப்பட்ட அக்ரகார வீடுகளில் சுதந்திரமாக சுற்றி வரலாமே?!!