இது எங்களது வருடாந்திர சந்திப்பு....... எங்களுடன் வேலை செய்த தோழியின் பிறந்த நாளன்று அவர்
வீட்டிற்குச் செல்வதை வழக்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் தோழி எங்களுக்கு
ரொம்பவே இளையவர்..... எங்கள் வீட்டிற்கு வந்து
பேசி மகிழ்ந்து எங்கள் வாழ்த்துக்களை பெற்று
செல்லக்கூடிய ஆரோக்கியமான நபர். இருந்தும் அங்கு செல்வதின் நோக்கு தோழியின் 96 வயது அம்மா!
அந்த வயதில் அவர்கள் வேலையை
அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். முகம் நிறைய சிரிப்பு. எதிர்த்தாற்போல் இருக்கும்
கோயிலுக்கு நடக்க கால்களில் வலுவில்லாவிட்டாலும்
கோயிலின் ஜெபங்கள் அவரிடம் வந்து சுகப்படுத்துகின்றன
சாப்பாட்டின் அளவு குறைந்ததே தவிர சின்ன வயசில் சாப்பிட்ட அதே ருசியான
உணவை சுவைத்து உண்ணுகிறார்கள்.
வருகிறோம் என்று சொன்ன
அந்த நேரத்திற்கு போகமுடியாமல் நடுவில் இன்னொரு வேலை வந்து விட எங்களுக்கு தோழியின்
போன் கால். ‘நேரமாயிடுச்சேண்ணு அம்மாதான் போன்
பண்ணச்சொன்னாங்க’ எங்களுக்கு ஆச்சரியம்! இந்த
வயதில் இவ்வளவு நுணுக்கமான கவனிப்பா?!
கட்டிப்பிடித்து முகமலர்ந்த
வரவேற்பால் மனதைத்தொட்டுவிட்டார்கள் அம்மா!
பெண்ணிடம் ஏதாவது சாப்பிடக்கொடுக்கச்சொல்கிறார்கள்.
பேச்சு நடுவில் தோழி “ அம்மா இப்ப ஒரு வேல பண்ணிகிட்டு இருக்காங்க தெரியுமா? அவுங்க
சின்ன வயசில சொன்ன ஒரு அழகான ஜெபத்த கையால எழுதி
கோயில்ல இன்னும் தெரிஞ்சவங்களுக்கெல்லாம் குடுக்கச்சொல்றாங்க.” சொல்லிக்கொண்டே
அம்மா எழுதின பேப்பரை எங்களிடம் காட்டினார். வயதின் நடுக்கமோ தளர்ச்சியோ இல்லாத முத்து முத்தான தமிழ் எழுத்துக்கள்!! “ஆங்கில எழுத்து
அதைத் தூக்கி அடிக்கும் அழகு! நாங்கள் அசந்து போனோம்!
“அம்மாகிட்ட ஜெராக்ஸ் எடுத்து
குடுக்குறோம்ண்ணு சொன்னா கேக்கமாட்டங்கிறாங்க.... கையாலதான் எழுதிக்குடுப்பேங்கிறாங்க“தோழியின்
மனக்குறை
“ சூடிக்கொடுத்த சுடர்மணி போல் அம்மா இத தவமா செய்யிராங்கம்மா...அந்த தவத்தை கலைத்துவிட நமக்கு உரிமை இருக்கா என்னா?”
விடை பெறுகையில் “ எங்களுக்கும்
உங்கள் புண்ணியத்தில் பங்கு உண்டா?”என்கிறோம்
“இண்ணைக்கி உங்களுக்காத்தானே
எழுதி வைத்திருக்கிறேன்.” டயரியைத்திறந்து உள்ளிருந்த தவத்தின் ஒரு துளியை எங்களுக்குக்கொடுக்க அந்த 96 வயது இளைஞி அன்று நடத்திக்கொண்டிருக்கும்அதிசயத்தில்
நாங்களும் பங்குதாரர்களாகத்தான் ஆகிப்போனோம்!
No comments :
Post a Comment