நாங்கள் சின்ன பிள்ளைகளாக விடுமுறைக்கு கிராமத்திற்குச் செல்கையில் ஊரில்
உள்ள நொணா மரங்களும் எங்கள் ஆட்டங்களில் சேர்ந்து
கொள்ளும். வீடுகட்டி விளையாடுகையில் செங்காமட்டியோடு சேர்ந்து பாப்பா கொளத்து தண்ணியோடு
கொட்டாங்குச்சி நிறையா சாம்பாராக நேவு மணலோடு சேர்ந்து பொரியலாக, நசுக்கி நசுக்கி செங்காமட்டையில்
ஊறி கறிப்பொரியலாக.... இந்த நொணாக்காய்கள் உருவெடுக்கும். பாயசத்துக்கு பதிலாக வரும் கருப்பான
நொணாப்பழம் மட்டுந்தான் வீட்டிற்கு வருகின்ற விருந்தாளிகள் சாப்பிடக்கூடிய அயிட்டம். மற்றதெல்லாம் பாவலாவோடு நின்று போய்விடும்! இப்படி
ஒவ்வொரு வீட்டு விருந்திலும் வயிறு முட்டச்சாப்பிடும்
நொணாப்பழங்கள் நோனி ஜுஸ் என இன்று ஸ்டைலாக
விற்கப்படும் சத்து நிறைந்த அந்தப்பொருள் சின்ன வயசில் சத்தென்று தெரியாமலேயே எங்களது ஊட்டச்சத்தை பெருக்கிக் கொடுத்திருக்கின்றன!
அன்றைய விளையாட்டு நாடகமா? நொணாவின் வளைந்தகிளை அரசனின் அரியாசனமாக
மாறிவிடும்!
தென்னங்குச்சியின் ஒரு முனையில் இந்த நொணாக் காயை ஆங்கமாகக்குத்தி
சுத்தியல் வீச்சு பந்தயமும் எங்கள் நொணா ஒட்டுதலை வீரியமாக்கினது உண்மை.
நிலா வெளிச்சத்தில் நடுச்சாமம் மட்டும் பெரியவர்கள் சொல்வதை ஓரங்கட்டிவிட்டு
விளையாடும் ' கொறிச்சு முறிச்சு' 'வெயிலாநெழலா' ' ஆடுபிடிப்பேன் கோனாரே' ஆட்டங்களிலும்
இந்த நொணாமரம் எங்கள் பங்காளிதான்! மரம் நிறைய
நட்சத்திரங்களாக பூத்து நிற்கும் நொணாப்பூ தலையை கிறு கிறுக்க வைக்கும் வாசனையோடு எங்கள் கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாகிப் போகும்!!
இப்போதும் கிராமத்திற்குப்
போகிறோம். " கம்புளிப் பூச்சி வருது, கொட்டுற எலய அள்ளி மாளுல." மரங்களைப்பற்றி
அங்கு எக்கச்சக்க எரிச்சல்கள். நம்ம ஊரு மரங்களின் அருமையைப்பத்தி சொல்லுகிறேன் பூவரச
மரம் 24 மணி நேரமும் நம்ம சுவாசிக்கிற ஆக்சிஜன நம்மளுக்கு குடுத்துகிட்டே இருக்குது.
நொணாப்பழத்தில ஒரு வண்டி சத்து இருக்கு. எதோ பெரியவ சொல்றனேண்ணு உக்காந்து கேட்டுகிட்டாங்க.
மத்தபடி பழைய குருடி கதைதான்!
" என் வீட்ல மட்டும்
இன்னும் கொஞ்சம் எடம் இருந்தா என்னோட குட்டி தோட்டத்த அழகா ஆக்கிடுவேன்." ஏங்கியமனசோடு தண்ணி பிடித்துக்கொண்டு இருக்கையில் புதுசா ரெண்டு
சின்ன செடிகள் துளிரான நீட்டு இலைகளோடு நிற்கின்றன. குனிந்து பார்க்கிறேன்..... என்
கண்ணை என்னால் நம்பமுடியவில்லை. இரண்டு நொணாக்கன்றுகள்! இது எப்படி..... எப்படி........சாத்தியம்? மனசுக்குள் குடைச்சல்! சுத்துப்புறத்தில் வாகைமரம் புங்கமரம் வேப்பமரம் சிவப்பு மஞ்சள் பூ மரங்கள் கொன்னை மரமல்லி ஒன்றிரண்டு
பூவரச மரங்கள்தான் இருக்கும் நொணா மரத்தை பார்த்தது அக்கா வீட்டிற்குப்போனபோது பெரம்பூர்
இன்டக்ரல் கோஸ் பேக்டரி பின்னால் காடாம்பரமாய் வளர்ந்து கிடக்கும் மரங்களின் நடுவேதான்.அவ்வளவு
தூரத்திலிருந்தா அதுவும் இங்கு என் சின்னத்தோட்டத்திற்கா குடியிருக்க
வந்திருக்க முடியும்? ஆச்சரியத்தின் எல்லையில் நான்!! செல் போனில் அன்று என்னைக்
கூப்பிட்டவர்கள் எல்லோருக்கும் இந்த அதிசயம் விருந்தான செய்தி ஆனது!
" ஒங்க எடங்கண்ணியிலேர்ந்து வந்துருக்கலாம்."
" நீங்க நொணா இங்க வருணுமுண்ணு மனசோட ஆசப்பட்டிருக்கிங்க."
இப்படியாக தினுசுவாரியாகக் கருத்துக்கள்
எல்லாக்கருத்துகளும் என்னை சுகவாசியாக ஆக்கியதென்னவோ உண்மை!!
அன்று அக்டோபர் ஒன்பது. எப்போதும் போல மாடியில் யோகா முடித்துவிட்டு
தோட்டத்தை நோட்டமிட வருகிறேன். வந்த அந்த கணம் நான் நடுங்கிப் போய்விட்டேன். உடம்பு
என் வசம் இல்லை. இது என்ன இது இப்படிக் கூட
நடக்குமாஎன்ன? உறைந்து போனேன். என் நொணாக்கன்றிலிருந்து ஒற்றைப்பூ மயக்கும் வாசனையோடு
எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி மகிழ்ந்தது! அன்று வாழ்த்துக் கூறிய அனைவரும்
எனது அன்றைய செய்தியில் செய்தியின் அதிசயத்தில் உளம் மகிழ்ந்தனர்! நானோ உருகிப்பெருகி
உளங்குளிர மகிழ்ந்து பருகற்கினிய பரங்கருகருணைத்தடங்கடலின் அதிசயங்கள் என்றும் நம்
அருகில்தான் என்பதினை மறுபடியும் மறுபடியும் உணர்ந்தெழுந்தேன்!
No comments :
Post a Comment