ரொம்ப உன்னிப்பாக
கவனமாக கேட்பது போல் ஒரு பாவனை. மனசுக்குள்ளே எப்படா நிறுத்தித் தொலையும் இந்த
கெழம் என்ற அங்கலாய்ப்பு.
கை நிறைய நேரம்......
செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த ரிட்டையர்மெண்ட் வயசை இந்தியாவில் பேசாமல்
எண்பதுக்குக் கொண்டு போய்விடலாம்.
"இந்த மனுஷனிடம் வசமாக
மாட்டிக்கொண்டோமோ?" அந்த பெரியஷோ ரூமின் சேல்ஸ்மேன் ஒரு
உதைப்போடுதான் நின்றான்.
" அந்த காலத்துல
எங்கப்பா மளிகைக்கடையில பொட்டணம் கட்டிவரும் சணல் நூலையெல்லாம் கூட சேர்த்து
வச்சுடுவார்."
" அப்படிங்களா?"
பவ்யமான பதில்
அந்த குப்பையை இவுரு என்னா பண்ணப்போறாரு?
அவனது பவ்யம் அவர்
மனசைத்தொட்டிருக்க வேண்டும்.
" நான்
சின்னப்பையனா இருந்தப்ப வாங்கின பிலிப்ஸ் ரேடியோ இன்னம் வேல பண்ணுதுப்பா."
லண்டன் நடுவுல இருக்கிற
ஓலகப் பெரிய கடை ஹெராட்ஸ் கூட இண்ணைக்கி " ஹெராட்ஸ்ஸுக்காக சீனாவில்
பண்ணினது" என்ற லேபிளோடுதான் விக்கிறான்! "உபயோகி விட்டுக்கடாசு"
என்பதே இன்றைய தத்துவம் என்பதை இவருக்கு எப்படி உணர்த்தித் தொலைவது?
ஆனாலும் " இந்த
மனுஷன் இண்ணைக்கி பெரிய வியாபாரத்தை
கொடுக்கறவரா இருந்தா? வாழ்க்கையே
நம்பிக்கையிலேதான் ஓடுது. இவரப் பகைச்சிகிட்டு அனாவசியமாக என் ஊக்கத்தொகையை
இழப்பானேன்? ஆமாஞ் சாமி போடுறதுல நஷ்டம் ஒண்ணுமில்ல"
என்ற கணக்கில் சேல்ஸ்மேனின் 'அப்படிங்களா' இன்னும் உற்சாகத்தோடு வெளிக்கிளம்ப அவர் இன்னும் சுறுசுறுப்பாகிவிட்டார்.
" ஒரு ப்ளேட
எத்தன நாளைக்கி உபயோகிக்கலாமுண்ணு நீ சொல்லு பாக்கலாம்" ராப்பூரா செல்ல
நோண்டிகிட்டு கிடக்கும் அவனுக்கு செல் அலாரத்துக்கு அப்பாற்பட்டு அம்மாவுடைய கடைசி
நிமிண்டலுக்கு மட்டும் கீழ்ப்படியும் அவன் ஜிப்ஜிப் என்று பிளேடு என்ன என்று
அறியாத கில்லெட் ஷேவிங் மற்றும் குளியல் வேலைகளை முடிக்கும் அவன் தெரியாத பிளேடு
என்ற ஐயிட்டத்தைப்பற்றி எதற்காக நின்று நிலைத்து யோசிக்க வேண்டும்?
" தெரியிலிங்களே
சார்"
" நல்லா
கேளுப்பா ஒரு பிளேட நான் ஆறு மாசத்துக்கு உபயோகப்படுத்துறேன்...."
பையன் ஆச்சரியப்பட்டுப்
போன பவாலாவோடு போஸ் கொடுத்தான்.
" இதுல ஒரு
சின்ன சூட்சமம் இருக்குப்பா. அத ஒனக்கு சொல்லி குடுத்தேண்ணு வச்சிக்க நீ உட மாட்ட
போ..... ஒரு பிரமிட் மாதிரி கொஞ்சம் மொத்தமான பேப்பர்ல பண்ணி தண்ணி படாத எடத்துல
வச்சிடு. காலையில ஷேவ் பண்ணுன ஒடனே துண்டால பிளேட நல்லா தொடச்சிட்டு அந்த
பிரமிடுக்குள்ள வச்சிரு. ஆறு மாசத்துக்கும் பளபளண்ணு புதுப்பொண்ணாட்டம் இருக்கும்.
ஆண்டாண்டுகளுக்கு அழியாமல் நிற்கும் எகிப்திய மம்மிகள்தாம் அவன் முன் ஆஜர் கொடுத்தன!
சின்ன சின்ன துண்டு
ரின் சோப்ப சேத்துவச்சு ஒரு வெள்ளதுணியில முடிஞ்சு அதால துணி தொவைக்கிற அம்மாவ
அவன் அப்பா அந்த ஓட்டு ஓட்டுவார். இவுர்
பிரதாபங்களைக் நான் இண்ணைக்கி சொன்னேண்ணு வச்சிகிங்க உழுந்து பொரண்டுதான்
சிரிக்கப் போகிறார்.
ஏகத்துக்கு கத
கேட்டுட்டோம் எப்பதான் இவுரு வாங்க வந்த சாமானப்பத்தி பேசப்போறாரோ தெரியிலியே...... என்ன யுக்தியால
இவுர வந்த காரியத்துக்கு இழுத்து கொண்டாறதுண்ணு இவன் மண்ட காஞ்சி நிக்கும்போது "என்னோட டிவி ரிமோட் வேல செய்ய
மாட்டங்குதுப்பா" சொல்லிகிட்டே அவரோட சோல்னா பையிலேர்ந்து மொழுக்கையான ஒரு வஸ்துவை அவனிடம்
எடுத்துக்காட்டினார்.
"ஒங்க கடையில டிவி
வாங்கும்போது நீங்க குடுத்ததுதான்."
குறிகாட்டும் பெயிண்ட்
எல்லாம் போயிருந்த அந்த புராதனப் பொருளில்
அவன் அசந்துதான் போய்விட்டான். இந்த அல்ப பொருளுக்காகத்தான் இந்த மனுஷன் இவ்வளவு
பீடிகை போட்டாரா?
"இந்த ரிமோட்டுக் கூட ஒரு
பிரமிட் பண்ணி வச்சு பாத்தேன். பருப்பு வேவ மாட்டங்குது போ"
"சார் எப்ப டிவி
வாங்குனிங்க?"
" அஞ்சு
வருஷமும் இருபது நாளும் ஆவுது." என்றவர் அவர் பர்சுக்குள் பத்திரமாக மடித்து
வைத்திருந்த பில்லை எடுத்துக்காட்டினார். அவன் பிரமிப்பு உச்சாணிக்கிளையில்!!
பொதுவாக டிவிக்கு வாரண்ட்டி ஒரு வருஷம் தான்.
ஸ்பெஷல் வாரண்ட்டி ரெண்டு வருஷம் தாக்கு பிடிக்கும். இந்த வாரண்ட்டி கார்டிலேயே
சுத்தமா "எம்பொறுப்பு இதுக்கெல்லாம் கெடையாது என்று ஏகப்பட்ட அயிட்டங்கள
பிரிண்ட் பண்ணியிருப்பார்கள்." இவுர மாதிரி ஆட்கள் கம்பெனிய கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு இழுக்காம இருக்க ஒரு டிப்பார்ட்மெண்ட்டே வேல செய்யுது. இவ்வளவு
நாள் இவர் டிவி சொகமா வேல செய்யறதே பெருசு... இதுல என்னாண்ணா ரிமோட்ட தூக்கிகிட்டு வந்து
நிக்கிறாரு.
தொண்டையை
கனைத்துக்கொண்டே
" சார்
ரிமோட்டுக்கெல்லாம் வாரண்ட்டி கெடையாது சார்" என்றான்.
"என்னாத்த
வாரண்ட்டி குடுத்து கிழிச்சிங்க போங்க...... பொடிப் பொடி எழுத்துல.... மனுஷன்
பூதக்கண்ணாடிய வச்சு பாத்தாக்கூட ஒங்க வாரண்ட்டி என்னாண்ணு வெளங்கமாட்டங்குது ...
உண்மையா நீங்க வாரண்ட்டி குடுக்குற ஆளுகளா இருந்தா பெரிய எழுத்துல தெளிவா பிரிண்ட்
பண்ணுங்க... ஒனக்கு இண்ணைக்கி ஒரு சவால் உடுறேன். இந்த நிமிஷம் என் வீட்டுக்கு
வா... அங்க ஒரு கடிகாரம் அறுவது வருஷமா ஓடுது. அதுக்கு வாரண்ட்டி எவ்வளவு தெரியுமா
ஒனக்கு ...? நான் சொல்றத நீ நம்பணும்.... அம்பது வருஷம்.....
அம்பது வருஷ காரண்ட்டி குடுத்திருக்கான்யா
அதுவும் ஒங்க மாதிரி தப்பிச்சிப்போற பொடிப்பொடி எழுத்துல இல்ல... அது மூஞ்சி மேலயே
தெளிவா எழுதி இருக்கான்! அந்த காரண்ட்டியத் தாண்டி அது பத்து வருஷத்துக்கு
ஓடிகிட்டு கெடக்கு..... அவன் மனுஷன்யா"
பொழிஞ்சு தள்ளுகிற இந்த காரண்ட்டியின் மொத்த உருவை என்ன செய்யுறது என்று கொழம்பிப்போன
சேல்ஸ்மேன் "பேசாம ஒரு ரிமோட்ட நாம வாங்கி அவுர் கையில குடுத்துடலாமா.....
ஊரு பூரா விரிஞ்சு கெடக்க மெர்சி எலக்ட்ரானிக்ஸ்ல சைனா ரிமோட்ட டஜன் கணக்கில விக்கிறான். ஆனா ஒரு செகண்ட் யோஜன செஞ்ச
அவன் "அந்த ரிமோட் சரியா வேல
பண்ணுலண்ணா இவுர திரும்ப சந்திக்கிற
தில்லு ஒனக்கு இருக்காண்ணு" தன்னையே கேட்டுகிட்டான். தலைவலியும் காச்சலும்
தனக்கு வந்தாத்தானே தெரியும். விக்கிரமாதித்தன் கதையில் வர்ர வேதாளம் போல இவுரு
உடும்புப்புடியில மாட்டிகிட்டு........
யப்பா வேணாஞ்சாமி என முடிவு பண்ணி பிரம்ம பிரயத்தனப்பட்டு அவுர வெளிய கெளப்பரத்துக்குள்ள அவனுக்கு தாவு தீந்து
போச்சு!
இன்னொரு சரித்திர
நாயகனை சந்திப்போம்.
வீட்டு வரவு செலவு
கணக்கு நோட்டை பேத்தியிடம் காட்டுகிறார் தாத்தா. எக்ஸலண்ட் தாத்தா...... என்னா
நீட்டா கோடு போட்டிருக்கிங்க........ (கடைகளில் விக்கிற அக்கவுண்ட்ஸ் நோட்டு வெல
ஜாஸ்தியா இருக்குண்ணு தாத்தா வாங்கமாட்டார் என்பது வீடறிந்த உண்மை!)
இதப்போய் பெருசா
சொல்றியே..... அந்த காலத்தில என்னோட அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட் நோட்டுகள
வர்ரவன் போறவன்லாம் கண்ணுலதான் ஒத்திக்குவானுக. என் பெட்டி கேஷ் ரிஜிஸ்டர நீ
பாக்குணுமே...... இப்புடி கரக்டா வச்சிருந்ததால்தான் மாசத்து பேலன்ஸ் ஷீட்டை
அவனவன் நாலஞ்சு நாள் அல்லாடுற விஷயத்த அரை நாளுலய
முடிச்சி எறிஞ்சிடுவோம்!
சி.ஏ பரிட்சையை ஒரே
மூச்சிலே அருமையான மார்க்குடன் பாஸ் பண்ணின தாத்தாவின் பேத்தி "ஃ பர்ஸ்ட் கிளாஸ் தாத்தா....."என்று
ஷொட்டு கொடுத்தாள். ஆனாலும் தாத்தாவின்
மனசை நோகடிக்காமல் அவரை கம்ப்யூட்டர் பக்கம் எப்படி இழுப்பது? மனசுக்குள் அவளுக்கு ஒரு நப்பாசை.
தாத்தாவின் கருத்தில்
கடிதம் எழுதும் அழகான கலையையே அழித்து
ஒழித்து கெக்கலிக்கும் செல்போன் மாதிரி " நேர் கோடா குறுக்குக்கோடா எத்தனை
கோடி வேண்டும் சார் எனக் கேட்காமலேயே
கோடியாய் கோடிட்டுக் காட்டும்" இந்த கம்ப்யூட்டரை நினைத்தாலே அவருக்கு
ஒரு காழ்ப்புணர்ச்சி. நம்ம கஷ்டப்பட்டு வெகு கவனத்தோடு ரூலர் வச்சி பண்ணுன ஒரு வேலைய ஒரு வெரலக் கூட நவுத்தாம எவ்வளவு அநாவசியமாய்
செஞ்சுத்தொலையுது பாரு. தன் திறமைக்கு சவால் விடும் ஒரு பெரும் எதிரியாகவே அவர்
கம்ப்யூட்டரை பாவித்தார்.
மாசத்து பேலன்ஸ் ஷீட்டை
எல்லாம் உட்கார்ந்து கணக்குப் பண்ண வேண்டிய அவசியமே இல்லாமல் தானாகவே சரிபார்த்துக்
கொள்ள வல்லது இந்த கம்ப்யூட்டர். இதையெல்லாம் என் கெட்டிக்கார தாத்தாவிடம்
நாசூக்காய் சொல்லவேண்டும். அவரை கம்ப்யூட்டருக்குள் எப்படியாவது புகுத்திவிட
வேண்டும் என்ற கங்கணம் அவளுக்குள்ளே.
பேத்தியின் தயவில்
"தெரியாத வெத்தைகளுக்கு கம்ப்யூட்டர்" (computer for
dummies) என்ற புத்தகம் வீட்டிற்குள் நுழைந்தது! கம்ப்யூட்டர்
ஒன்றும் தாத்தா ரூமில் உட்கார்ந்து கொண்டது. ட்யூஷனுக்கு பேத்தி ரெடி. சாமி
வரங்குடுக்க தயாரா இருந்தாலும் பூசாரி ரெடியில்லியே என்னா பண்றது? ரெண்டே ரெண்டு வகுப்புக்குப்பிறகு " அடி போடி பொண்ணு" என்ற செல்லமான தட்டுலோடு தாத்தா
கம்ப்யூட்டருக்கு மங்களம்
பாடிவிட்டார்!!
செல்லமான தட்டுதலோடு
தாத்தா நிறுத்திக்கொள்ளவில்லை.
" ஒனக்குத்தெரியுமா
பாப்பா? இப்பதான் ஈசல் புத்தாட்டம் ஊருக்கு ஊரு நூறு
மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மொளச்சு கெடக்கு. நான் படிச்சப்ப தமிழ் நாட்லயே எண்ணி மூணே
மூணு மெட்ரிக் ஸ்கூல்தான். கணக்கு எத்தினி பேப்பர் தெரியுமா? மூணு பேப்பர்!! அப்பல்லாம் பேப்பர் கரெக்ஷன் ரொம்ப ஸ்டிரிக்ட். இப்பமாதிரி
அள்ளி குடுக்க மாட்டானுக. நீ எல்லா
கணக்கையும் சரியாப்போட்டிருந்தாக்கூட எதாவது ஒரு சின்ன மிஸ்டேக் இருக்கா எங்கயாச்சும்
ஒரு மார்க்க கொறைக்கலாமாண்ணு கண்ணுல வெளக்கெண்ண ஊத்திகிட்டு பேப்பர துருவித்துருவி
பாப்பானுக! அப்புடியும் ஐயா எரநூறுக்கு
எரநூறுதான். அதுக்கு என்னா காரணம் தெரியுமா ஒனக்கு? அப்பல்லாம்
வாய்ப்பாட தெனமும் தலகீழா ஒப்பிக்கணும். கணக்கு க்ளாசில நொழஞ்ச ஒடன மனகணக்கோடதான்
வாத்தியார் கிளாச தொடங்குவாரு!!
இடை மறிச்ச பேத்தி
" அதனாலதான் தாத்தா நான் ஒங்கள கம்ப்ப்யூட்டர் கத்துக் சொல்றேன். இவ்ளோ
பண்ணுன ஒங்குளுக்கு கம்ப்ப்யூட்டர் ஒரு
ஜுஜுபிதான்......
நான் சொல்றனேண்ணு பாரு
பாப்பா இந்த கம்ப்ப்யூட்டரால ஒலகம்
பூரா ஓதவாக்கரைகளும் சோம்பேறிகளும்
மக்குகளுந்தான் பெருகப்போறானுக. பேங்குக்கு போ 'சர்வர் டவுணு சார்.... எலக்ட்ரிசிட்டி பில் கட்ட போ
அங்கயும் சர்வர் டவுணு சார்....' கேசுதான்! ஊர் கத பேசி பேசிகிட்டு
வெட்டியால்ல ஒக்காந்து கெடக்கானுக.
அவருடைய கலை உணர்வும்
பழங்காலத்திலேயே நின்று போன ஒன்று.
என்னத்தம்மா பரத
நாட்டியம் ஆடுறாங்க இண்ணைக்கி? மேடையில இடது
பக்கத்துல கம்பீரமா ஒக்காந்திருக்கும் பாட்டுக்காரர் நட்டுவனார் மிருதங்கம் ஃ
ப்ளூட் வயலின் வாசிக்கிறவங்க காணாவே பொயிட்டாங்க. அதுக்கு பதிலா ரெக்கார்டட்
ம்யுசிக் வச்சிகிட்டு பொம்ம மாதிரி ஆட்டம்! பால சரஸ்வதி ஆட்டத்த நீ
பாத்திருக்கியாம்மா? இல்ல ஓங்க கம்ப்ப்யூட்டருக்குள்ளையே
போய்ப்பாரு. பாட்ட பாடிகிட்டே பாவத்தையும் அபிநயத்தையும் அள்ளி அள்ளி குடுப்பாங்க
பாரு சபாவே பொட்டிப்பாம்பாட்டம் மயங்கி
போய் கெடக்கும். அந்தம்மா " கிருஷ்ணா நீ பேகனே பாரோண்ணு" கொரெலேடுத்து
பாடிகிட்டே ஆடும்போது அந்த கிருஷ்ணனே மேலேருந்து எறங்கி வந்து அவங்க ஆட்டத்தோட
சொழண்டு சொழண்டு ஆடி நம்மள மயக்கிடுவான்!
பேத்திக்கு தலையாட்டி
வைப்பதைத்தவிர வேறு வழி உண்டா என்ன?!
வீட்டிலே
விசேஷங்களுக்குக் கூடுகையில் "ஹாய் தாத்தா" வோடு பேரன் பேத்திகளின்
சம்பாஷணைகள் முடிந்து போகும். அப்புறம் உறவுகள் சம்பந்தங்கள் சம்பாஷணைகள் பூரா
அவரவர் செட்டுகளுடன் மட்டுமே!
"ஒடஞ்சு போன ரெக்கார்டாட்டம்
தாத்தா சொன்னதையே சொல்லிகிட்டு இருப்பாங்க எத்தினி தடவதான் அதையே கேக்கிறது?"
சின்னதுகளின் ஒட்டு மொத்த அபிப்ராயம் அது!!
இருந்தாலும்
சரித்திரங்கள் நம் வாழ்வின் அடிப்படை ஆதாரம் இல்லையா? தாத்தாவின் மனஉறுதியும் சிந்தனைத்தெளிவும் வேறொரு ரூபத்தில்
அவர்களிடம் வரத்தான் போகிறது.
மனுஷர்களுக்குமேல் மெழுகைத்தடவி அவர்களையே பந்தங்களாக உபயோகித்து மகிழ்ந்த கொடூர
மன்னன் நீரோ நமக்கு பாடம் தரவில்லையா? லட்சக்கணக்கான
யூதர்களை மிருகங்களாக நடத்தி கொன்று
குவித்த ஹிட்லர் எப்படி வாழக் கூ டாது என்பதற்கு முன்னுதாரணம் இல்லையா? கத்தியின்றி ரத்தமின்றி மன உறுதி ஒன்றையே ஆயுதமாகக் கொண்ட காந்தி மகான்
நம் சரித்திரம் இல்லையா? எங்கள் வீட்டிலேயே எங்கள்
கொள்ளுதாத்தா பெரிய குடிகாரராம். நீரகாரத்திற்குபதில் சரக்கைத்தான் ஊற்றிக்
குடிப்பாராம். எங்கள் தாத்தா அதிலிருந்து பெரியதொரு பாடத்தை கற்றுக்கொண்டார்.
கற்றதோடு நிற்காமல் உயர்ந்த எண்ணங்களால் திறமைகளால் அந்த கிராமத்தின் நாட்டாராக
அல்லவா கொடிகட்டி பறந்தார்! சிறுசுகளே வாலிபங்களே
உதவாது என பழைய சந்ததியை ஒதுக்கி விடாதீர்கள். கற்று மகிழுங்கள். உயர்ந்து
வாழுங்கள்!
பழைய சந்ததியே நாமும்
கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே. இந்த சந்ததி இடைவெளியை ஜெனரேஷன் கேப்பை எப்படிக்
குறைக்கலாம் என்பதில் குறியாய் இருப்போம். நமது மட்டுமே ஒஸ்தி என்ற குரங்குப்
பிடியிலிருந்து விட்டு விடுதலையாகி புதிதையும் சிலாகிக்கும் தன்மையை நம் வாழ்வில்
புகுத்த முயன்று கொண்டே இருப்போம்! சுகம் பெறுவோம்!!
No comments :
Post a Comment