Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Wednesday, 3 July 2019

கலாச்சாரத்தின் கோணங்கள்


எனக்கு அந்த விளம்பரம் இன்னமும் ஒரு புரியாத புதிர்தான்!
ஒரு பிரபல ஹிந்தி நடிகர் கிரிக்கெட் பேட்டால் ஆரஞ்சு கலர் புழுதியால் தூள் கிளப்பிக்கொண்டே 'நாக்கிலே குங்குமப்பூ மனதிலே உற்சாகமும் இருந்தால்' கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி நமதே  என்பார். மனதிலே உற்சாகத்திற்கு குறை ஒன்றும் இல்லை. எண்பத்தியொரு வயது என் அக்கா பதினாறு வயது  பேரப்பிள்ளைகளுடன் நடுச்சாமம் தாண்டி குதித்து கும்மாளமிட்டு பார்க்கும் உற்சாகம்  இந்தியா முழுமைக்கும் நடக்கும் இந்த விஷயத்தின் ஒரு சின்ன சாம்பிள்தான்! இது ஒரு பக்கம் என்றால் நேற்று இங்கிலாந்தின் பர்மிங்காம் ஸ்டேடியத்தில் 87 வயதான ஒரு பெண்மணி நம் இந்திய அணி  ரன் எடுக்கும் ஒவ்வொரு தடவையும் காகிதக்குழல் ஊதலால் பீப்பீ.. சத்தம் எழுப்பி நம் அணியை உற்சாகப்படுத்திகொண்டே  இருந்தது மட்டுமல்லாமல்   பக்கத்தில் இருந்த எல்லோரையும் மகிழ்வித்து கொண்டிருந்தார்
 நம்முடைய பிரச்னை இந்த 'நாக்கிலே குங்குமப்பூ' விஷயம்தான்.  ஆயிரம் முறை பார்த்தாலும் அது புரிவேனா என்கிறது. நம்ம தமிழ்க் கலாச்சாரத்தில் 'சென்று வா வென்று வா' சரித்திர சினிமாக்களில் நெத்தியில வக்கிற குங்குமந்தான் நமக்கு தெரிஞ்ச ஒண்ணு. அதப் போயி நாக்குல வைப்பாங்களா என்ன? நெத்தியே வெந்து போம்போது நாக்கு என்னா கதியாவுறது? திங்கக் கூடிய   குங்குமப்பூங்குற வஸ்து என்னா மாதிரி இருக்குமுண்ணு முன்ன பின்ன  தெரியாதவங்கதான் நாம நெறைய பேர் இருப்போம்.
ஆனா இண்ணைக்கு பாத்திங்கண்ணா டிவியில காட்டுற தமிழ் நாட்டு சாப்பாட்டு சமாச்சாரங்களில 'கொஞ்சம் குங்குமப் பூவ ஊற வச்சி பாயாசத்துல கடைசில போட்டு எறக்குங்கண்ணு' ரொம்ப பதனமா என்னுமோ நம்ம இந்த குங்குமப் பூவோடயே பொறந்து வளந்த மாதிரி சொல்றாங்க. ஒரு ஏலக்காய தட்டி போட்டு எறக்கறத  வுட்டுட்டு ஆரஞ்சு கலர்ல சிறு சிறு  நாரா இருக்க சாமானக்காட்டி நமக்கு புதுக்கத சொல்றாங்க.  
" ஏங்க இந்த டப்பா செட்டி நாட்டு மருந்து கடையில போயி குங்குமப்பூ ஒரு டப்பா வாங்கிகிட்டு வாங்க. மகாவுக்கு இப்ப இருந்தே பாலுல போட்டு கலக்கிக் குடுத்தாத்தான் பொறக்கப்போற பிள்ள வெள்ளை வெளேர்ணு இருக்கும். மசக்கையில் பிறந்த வீட்டிற்கு பெண்ணுக்காக அம்மா தன்  கணவரிடம் சொல்லுகிறாள்.
"கேவுருல நெய் ஒழுவுதுண்ணா கேப்பாருக்கு மதி எங்க போச்சுங்கிறேன்....  காக்கா  குஞ்சு வெள்ளையா பொறக்குமா  என்னா? எவனோ காசு பண்ணுறதுக்கு கத உடுறானுவ..." முணு முணுத்துகிட்டே கடைக்கிப்போன வீட்டுக்காரர் வெலயக் கேட்டு அசந்துதான் பொயிட்டாரு!
" இம்புட்டோண்டு டப்பாவுக்கு அம்புட்டு கொள்ள சொல்றான் அந்த ஆளு! என்னா......  நொம்ப அள்ளி கிள்ளிபோட்டுடாம பாத்து ஆளு." அறிவுரையுடன் டப்பா கை மாறுகிறது. மசக்கை மருந்து சாமான்களோடு இந்த குங்குமப்பூ டப்பாவும் குடியேறுகிறது! 
" குங்குமப் பூவ பாலில போட்டு தெனமும் ராத்திரி பொண்ணுக்கு குடுக்கக் குடுடியம்மா. பிள்ளை செவப்பா பொறக்கும்" வர்றவங்க போரவங்கல்லாம் குடுக்குற இந்த அறிவுக்கு ஒவ்வாத அட்வைஸ்ல வாந்தியான
வாந்தியோடு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப்  போராடிக்கொண்டிருக்கும் அந்த மசக்கைப்பெண் குங்குமப்பூ பாலோடும்  தினமும் மல்லுகட்டப்போவது  உண்மையிலும் உண்மை!      

இப்படியான தமிழ்க்கலாச்சாரத்திலே தினப்படிக்கு  விடாப்பிடியாக நடுச்சாமம் தாண்டியும்  கிரிக்கெட் மேட்சுகள் பார்க்கும் வெறியர்களான ரசிகர்களுக்கு அப்பப்போது வந்து எரிச்சலாக தாக்கும்  இந்த "நாக்குல குங்குமப்பூ'விஷயம்   நம்ம 'நாக்கில எச்சி ஒழுவ' வைத்து  நம்ம ஆளுக ஆட்டம்   நம்மை மகிழ்விப்பது என்னமோ சூப்பர்தான் ! 
சில விளம்பரங்கள் எனக்குத்  திகிலை உண்டாக்குகிறது. அழகான அல் ஃ போன்சா மாம்பழங்கள் ....... பாக்கும்போதே நாக்கில் எச்சி ஊறுகிறது. அவ்வளவு பழமும் அடுத்த வினாடி பாட்டிலில் திரவமாக மாறுகிறது. "யப்பா இவ்வளவு மாம்பழங்களும் இந்த பாட்டிலுக்குள்ளையா?! எவ்வளவு சத்து?!அருமையான ஜுஸ்தான்?! மனம் மகிழ்ந்து போகிறது!! ஒரு நாளைக்கி பிள்ளைகளுக்கு வாங்கி குடுக்கணும். விளம்பரம் நல்ல பொருளுக்கு வந்தா மனசு சந்தோஷமாகத்தானே இருக்கு.
 " இதோட மூலம் தெரிஞ்சா நீங்க அந்த பக்கம் தல வச்சி கூட படுக்க மாட்டிங்க." என்றார் என் நண்பர் ஒருவர். 
விவரம் தெரிந்தவர் அவர். "அதுல பாதிக்குப்பாதி சக்கர பாகும் மாம்பழ எசன்ஸும்  பிரிசெர்வேட்டிவுந்தான்!!"
இதைக்கேட்டவுடன் இனம் தெரியாத கோபம் என் மனசுக்குள். சாதாரண மக்கள் நாம் எப்படியெல்லாம் மயக்கப்பட்டு விளம்பரங்களின் மாய வலையால் ஏமாற்றப்படுகிறோம்?!  
இன்னொரு கதையும்  இருக்கு இந்த விளம்பரத்துல! 
மாம்பழங்கள் எல்லாம் பாட்டிலுக்குள் ஜுஸாக மாறிய அந்த கணத்தில் ஸ்டைலான ஒருபெண் அந்த  பாட்டிலோடு தரை குஷனில்(பீன் பேக்) குதித்து உட்காரும்  அந்த நொடியில்   குஷணுக்குள்ளேயிருந்து வெள்ளை வெளேரென்ற தெர்மாகோல் உருண்டைகள்  பிய்த்துக்கொண்டு பொங்கி எழுந்து பனித்துளிகளாக பொழிகின்றது  அந்த வெண் பொழியலில் அந்தப்பெண் துள்ளிக்குதித்தாடி மாம்பழ சாற்றை குடிக்க  இந்த காட்சியைப்பார்க்கும் ஒவ்வொரு தடவையும்  "யப்பா சட்டுண்ணு நிறுத்துங்கடா...... இந்த பறக்குற உருண்டைகள் அந்த பொண்ணு தொண்டைக்குள்ள போயி அடைச்சிகிட்டு  ஆம்புலன்ஸ கூப்பிட வேண்டியதா ஆயிறப்போவுது." அலறல் ஒன்று என் உள்ளே கட்டாயமாக வந்து தொலைக்கிறது!
இதைப்போலவே சந்தோஷத்தைத் தவிர எரிச்சலான  சமாச்சாரங்களை கிளப்பி விடும்  பல வகை விளம்பரங்கள் நம் முன்னே இருக்கின்றன.
வருடக் கடைசி.... பாங்க் மேனேஜரும் துணை பதவியில் இருப்பவரும் முக்கியமான கஸ்டமர்களை கண்டு கொண்டு தங்களோடு தக்க வைத்துக்கொள்ளும் நேரம். ஆதிகாலத்து அலங்கார மாளிகை ஜவுளிக்கடை மாதிரி காலகாலம் தொட்டே அவர்களோடு புழங்கி வரும் நாங்களும் இந்த லிஸ்டில் சேர்த்தி! வீட்டிற்கு வந்து டயரியும் காலண்டரும் பிரியமாகக் கொடுத்து பாங்கிற்கு விளம்பரம் தேடிய  மகிழ்ச்சியோடு விடை பெற்றுச்சென்றார்கள். காலண்டர் சுருளைப்பிரிக்கிறேன். இரண்டு காலண்டர்கள்.  அழகான தாள்கள் அருமையான காட்சிகள் 12 மாதத்திற்கும் 12 காட்சிகள்!! அந்த மனசுக்கு நிறைவு தந்த காலண்டரில் நான் மயங்கிப்போனது உண்மை! இதெற்கெல்லாம் ஆசைப்படும் எங்கள் பூக்காரருக்கு ஒன்றைப் பரிசாக அளிக்கிறேன்.
அடுத்த நாள் பூ கொடுத்துக்கொண்டே "யக்கா ஒங்கிட்ட ஒரு விஷயம் சொல்ணுமே அக்கா கோச்சுக்கபுடாது."
 எதற்காக இவ்வளவு பெரிய பீடிகை ? எனக்குப்புரியாமலே "சொல்லுங்கப்பா" என்றேன்.
"யக்கா காலண்டர் நல்லாத்தான் வடிவா ஆடம்பரமா இருக்கு என் வீட்டு மருமவளப்போல...... ஆனா ரெண்டுமே கவைக்கு ஒதவாது .... ஒரு அமாவாச பவுருணமி போட மாட்டானுக அதுல? அத்த கூட வுடுக்கா   நாங்கதான் பழ்ய பஞ்சாங்கம்...... இத்தயல்லாம் தேடிக்கிணு கெடக்கோம்.
ஒரு நல்ல நாளு பெரிய நாளுகள காலண்டருல குறிக்க மாட்டானுக மனுஷனுக?   ஏம்  பேராண்டி அடுத்த வருசம்   எண்ணைக்கு தீவாளி எத்தினி நாளு பொங்கலுக்கு லீவு அது சனி நாயிரோட சேத்தாப்புல வருதாண்ணு கணக்கு பண்ண வீட்டுக்கு வந்த அந்த மொத  காலண்டர என் கையிலேர்ந்து புடுங்கிக்கிட்டு ஒடுனவன் "தாத்தா நீயே ஒன்  காலண்டர வச்சிக்கோண்ணு" தூக்கிப்போட்டுட்டு பொயிட்டான் யக்கா. ஓசில கெடச்சுதா இல்ல வெல குட்த்து வாங்கினியா?"
பொதுவாக காலண்டர்களை ஜனவரி 1 ந்தேதி ஊரே கூத்தும் கும்மாளமுமாய் வெடி சத்தத்தோடு புது வருஷத்தைக் கூப்பிடும் அந்த விடியற்காலைதான்  பிரித்து மாட்டுவேன். பூக்காரர் புலம்பலை ஊர்ஜிதப்படுத்த சுருளைப் பிரித்துப் பார்க்கிறேன். பூக்காரர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். அமாவாசை பவுர்ணமி நல்ல நாள் பெரிய நாளைக்கூட விட்டுத்தள்ளுங்கள் பேங்க் விடுமுறை நாட்கள் பற்றிய விவரத்தை கூடவா  அதில் குறிப்பிட மாட்டார்கள்? பின்னே எதற்காக அதற்கு காலண்டர் என்று ஒரு பெயர் வேண்டியிருக்கிறது?!
ஒரு சமயம் நாங்கள் பேங்க் மேனேஜரை சந்திக்க வேண்டிய அவசரம்.  சந்தடி சாக்கில் என் காலண்டர் முறையீட்டையும் முன் வைக்கிறேன். ஒரு அசட்டு சிரிப்போடு " இது ஹெட்ஆஃபிஸ் எடுக்குற முடிவுங்க மேடம்." என்றார். நான் விடவில்லை."ஒங்கள மாதிரி  லோக்கல்ல ஹெட்டா இருக்கவங்க நாலு பேரு இத கஸ்டமர் காம்ப்ளன்ட்டா கூட முன்னுக்கு வச்சி பாக்குலாமே." வலி குறைத்த வார்த்தைகளாய் என்னிடமிருந்து. " நல்ல சஜஷன் மேடம் கட்டாயம் இதப்பண்றோம்." டயரியில் குறித்துக்கொண்டார். மனசு நிறைந்த மகிழ்ச்சி எனக்கு!
ஆனாலும் வருட வருடமாய் அதே பாணியில்தான் இருக்கிறது எங்கள் பரிசு!! 
திரும்பவும் மேனேஜருக்கு காலண்டரைக் குறித்து ஞாபகப்படுத்துவதில் எனக்கு சங்கோஜம் ஒன்றும் இல்லாவிட்டாலும் அடிக்கடி அங்கு தலைமை மாறுகையில் எத்தனை பேரிடம்  முட்டிகொள்வது எனப் புரியாமல் கழுதை கிடக்கட்டும் என்று விட்டு விடுதலையாகி
விட்டேன். இன்று வரையும்  அந்தப் பரிசு எங்களுக்கு ஒரு சம்பிரதாய சடங்காக வந்து கொண்டேதான் இருக்கிறது!
ஆனால் என்னால் முடிந்த வருடாந்திர நல்ல காரியத்தை மட்டும் நான் செயல் படுத்த மறப்பதில்லை. காலண்டர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அசந்து மறந்து கூட என் பிரிய பூக்காரருக்கு அதை நிச்சயமாகக் கொடுப்பதில்லை!   

No comments :

Post a Comment