முதல் முதலாக குழந்தைக்கு சோறு ஊட்டுதல் நம்
நாட்டின் அழகான ஒரு உற்சவம். அன்னப்பிரசன்னம் சோறுட்டூ முக்கே பாத் என இதற்கு பல பெயர்கள்.
பருப்பு சாதத்தை பெரியவர்கள் குழந்தையை சுவைக்க வைக்கும் அந்த நேரம் ஆண்டாண்டு காலமும்
அக்குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டும் வளம் பெற வேண்டும் என்ற பெரும் ஆசீர்வாதத்துடன்
கூடி மகிழும் சுக நேரம். ஆனால் ஆண்டுகள் பல கடந்தாலும் இந்த அன்னப்பிரசன்னம் பல வீடுகளில்
தொடர்கதையாகவே போய் பிள்ளைகளின் பள்ளிப்படிப்பு முடியும் வரை நீள்கிறது! அவசரம் அவசரமாக
இட்லியையோ இல்லை தோசையையோ வாயில் திணித்து செடிக்குத் தண்ணி ஊத்துவதுபோல இதற்கு மேலே
பூஸ்ட்டையோ இல்லை ஹார்லிக்ஸையோ கரைத்து ஊற்றி பள்ளிக்கு அனுப்பும் காலைப்படலம் எல்லா
வீடுகளின் முழு முதல் அட்டவணையாகவே இன்றும் இருக்கிறது!
சில குழந்தைகள் இயற்கையாகவே சாப்பாட்டிற்கு
வம்பு பண்ண மாட்டார்கள். என் அருமைப்பெண் போல!
அன்று 1969 ஜுலை 20ம் நாள் மாலை. கல்கத்தாவின்
மாசுமருவுக்கு மத்தியில் ஆக்சிஜனை அள்ளித்தரும் ரபீந்திர சரோபர் பார்க்கிற்கு நானும்
என் பெண்ணும் சாயங்காலம் செல்வது எங்களது அன்றாடத்தில் ஒன்று. தத்தித் தத்திய அவளது சின்னஞ்சிறு ஓட்டத்திற்கு
நானும் ஈடு கொடுத்து விளையாடி இரண்டு பேரும் சுகமாக களைத்துப்போயிருந்தோம். ஒரு குளியல்
முடித்து சாப்பாட்டுடன் வீட்டின் முற்றத்தில் என் பெண்ணுடன் உட்கார்ந்து கொண்டு அவளுக்கு
மேற்கே தோன்றியிருந்த ஐந்தாம் நாள் அரி நிலாவைக்காட்டி அந்த நெலாவப் பாத்தியாப்பா.......
அந்த நெலாவுல.....தான் இண்ணைக்கி மனுஷங்க போயி
எறங்கி இருக்காங்க ஒனக்குத்தெரியுமா......என்று கதை ஒன்று சொன்னேன். என்னுடைய உற்சாகமான
பேச்சிற்கு ஈடு கொடுக்கும் அவள் கைதட்டி நிலா
நிலா என மழலை சொன்னாள்!
நிலா காட்டி சோறுட்டும் பழக்கம் நம்மில் ஊறிப்போன
ஒன்று! வானத்தில் நிலா இருந்தாலும் இல்லாவிட்டலும் வானம் மூடிக்கிடந்தாலும் மழை பெய்தாலும்
அந்த முற்றத்து சாப்பாடு நிலாச்சோறுதான்!
பிரியமாக சாப்பிடும் பிள்ளைகள் ஒரு வகை என்றால்
ஓடியாடி சந்தோஷமாக விளையாண்ட பிள்ளை சாப்பாட்டைக்கண்டவுடன் வாய் திறவா மௌன சாமியாராய்
ஆகி விடும் காட்சியும் நம் வாழ்க்கையில் இன்னொரு பகுதி! இந்தமாதிரி ஆசாமிகள்தான்
மோடி கட்சி மாதிரி மெஜாரிட்டியான ஒன்று!! அம்மாக்கள் அதுகளுக்கு சோறு ஊட்டுவதற்குள்
படும் பாடு சொல்லி மாளாது!
"பூச்சாண்டி வாரான் பாரு நீ சாப்பிடாட்டிண்ணா
ஒன்ன புடிச்சுகிட்டு போயிடுவான்."
" நீ அழிச்சாட்டியம் பண்ணினா அதோ பாரு
அந்த குண்டு பயில்வான் ஒன்ன அப்புடியே லபக்கண்ணு
முழுங்கிட போறாரு. வாயத்தொறந்து காட்டிப்புடு..."
"இந்த பாரு தபால்கார மாமா........அவரோட
பைய பாத்தியா....... எத்தே பெருசு இருக்கு! நீ இப்ப சாப்புடலண்ணு வச்சிக்கயேன். அப்புடியே
அவுரு பைக்குள்ள தூக்கி போட்டுக்கிட்டு போயிருவாரு.
அமையா சமயங்களில் அந்த நேரம் வீட்டிற்கு வந்து
சேரும் தபால்காரர் மாமா இந்த பயங்காட்டும்
விளையாட்டில் உற்சாகமாகவே சேர்ந்து கொள்வார் .
இந்த ஒத்து ஊதலில் போலீஸ்காரர் நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது சொல்லும் பூம்பூம் மாட்டுக்காரன்
பிச்சைக்காரன் இன்னும் பலதரப்பட்டவர் சேர்த்தி!
சில அம்மாக்கள் பிள்ளை சாப்பிடும் வரை சாப்பாட்டை
உப்பு கூட பார்க்கமாட்டார்கள். நாம மொதல்ல சாப்புட்டுட்டா புள்ள பசிய அறியமாட்டோம்
என்ற தாய்ப்பாசம்!!
இந்த வழக்குகளெல்லாம் அழிந்தொழிந்து பல காலம்
ஆகின்றன. இப்போது அம்மாக்கள் கையில் பெரியதொரு மந்திரக்கோல்உண்டு. அதுதான் விஞ்ஞான
வளர்ச்சியால் வீட்டின் மத்தியில் அமர்ந்து அட்டகாசமாகக் கோலோச்சும் டிவி!! அதை ஆன்
பண்ணிவிட்டு காட்சிகளை ஆரம்பித்து வைத்து விட்டால் வைத்தகண் வாங்காமல் பிள்ளைகள் மோன
நிலைக்குப்போய் அம்மாவின் சோற்றுக்கு அடிமையாகிப் போகிறார்கள்! அத்தே பெரிய டிவி வேண்டாம்
பிள்ளைகள் கைக்கு வசதியாக செல் போனே இருக்கிறதே என இன்று இந்த அம்மாக்களுக்கு ஏக திருப்தி. எதிர்ப்புகள் எதுவுமின்றி வேண்டிய அளவுக்கு சோற்றை
அவர்கள் வாயில் திணித்துக்கொண்டே இருக்க இதை விட சுகமான வழி என்ன இருக்கிறது?! என்
கடமை எவ்வளவு சுலபமாகி விட்டது என்ற பரிபூரண நிலைக்குப் போய்விடுகிறார்கள் இவர்கள்!!
நொறுங்கத்தின்றால் நூறு வயசு என்பதை இந்த அம்மாக்கள்
இன்று அறவே மறந்து போய் நிற்கிறார்கள்! பிள்ளைமென்று சாப்பிட வேண்டும் அதன் எச்சிலில்
இருக்கும் ஏகப்பட்டஎன்சைம்கள் உணவோடு சேர வேண்டும் அதன் ஜீரணம் சுகமாக இருக்கும். ஜீரணம்
சுகமாக இருந்தால்தான் வயிறு எப்போதும் சுமாக இருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
அந்த உலக மகாப்பெரிய வைத்தியர் மருத்துவர் ஹிப்போகிரேட்டஸ் நூறு சதவிகித வியாதிகள் வயிற்றில்இருந்ததுதான் கிளம்புகிறது அதுதான்
மூலகாரணி என சொன்னதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய்.உள்ளே அனுப்பி விட்டால் என் கடமை முடிந்து
விட்டது என்ற நிலையிலிருந்து வெளி வந்து உணவு ஊட்டும் பழக்கத்தில் ஒரு புரட்சிகரமான
ஒரு மாறுதலைக் கொண்டு வருவதே குழந்தையின் சுகத்திற்கு வளர்ச்சிக்கு அடித்தளம் என நினைக்கிறார்களோ
அன்றுதான் ஒரு தாய் முழுமை பெறுகிறாள்.
அந்த புரட்சிதான் என்ன என்று சொல்லுங்களேன்
என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. உங்கள் குழந்தைக்கு சோறு ஊட்டுவதைத் தவிர்த்து
சோற்றில் கை வைக்கக் பழக்குங்கள். முடிகிற காரியமா அது என்று நீங்கள் சிரிக்கலாம்.
சமீபத்தில் எனக்குக் கிடைத்த அனுபவம் இந்த கருத்தை
அழுத்திச் சொல்லும் ஒரு தைரியத்தை அதிகமாகவே
கொடுத்திருக்கிறது!
அவளுக்குக் குழந்தை பிறந்தபோது கிடைத்தது ஒரு
வருட விடுமுறை. குழந்தைக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம் என்று டாக்டர் சொன்ன நாளிலிருந்து அவளுக்குள் வந்த ஒரு முடிவு என் பிள்ளையை முதல்
நாளிலிருந்து சாப்பிடப் பழக்குவேன் இந்திய அம்மாக்கள் குழந்தைகளோடும் சோற்றோடும் படும்
பாட்டை கண் கூடாகக் கண்டிருக்கிற நான் அந்த வலைக்குள் சிக்கவே கூடாது என்பதுதான்.
முதல் படியாக பிள்ளைக்குத்தகுந்த மாதிரி நாற்காலி சேர் பிப் வாங்கப்பட்டது. சாப்பாடு தொடங்கிய
அன்று பருப்புசாதத்தில் நெய் எளிதில் ஜீரணமாகும் வேகவைத்த காய்கறிகளைசேர்த்து பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாய் உருட்டி முன்னிருந்த தட்டில்
அவள் வைத்தாள். எதை எடுத்தாலும் நேராக வாய்க்கு கொண்டு போகும் பருவம் அது! அவள் முன்னால்
இருந்த சாப்பாட்டை அம்மாவின் கொஞ்சலோடு அன்று உள்ளே எடுத்துச் செல்ல எடுத்த நேரம் இரண்டரை
மணி! இதைவிட முக்கியமான ஜோலி எனக்கு என்ன இருக்கிறது நான் இந்த நோக்கிலிருந்து சோராமல்
கொள்ளாமல் பொறுமையாக தொடர்ந்து போவேன் என்பதை மனதிற்குள் திரும்பத் திரும்ப சொல்லி
உறுதியாக்கிக் கொண்டாள். ஒரு நாளைய பருப்பு
சோறு அடுத்த நாள் மீன் சோறு கறி சோறு என மாறியது. பச்சைக்காய்கறிகள் துண்டுகளாக வேக வைக்கப்பட்டு சோறு முடிந்தபின் கொடுக்கப்பட்டது.
இப்படியாக தொடங்கப்பட்ட பயணம் அழகாகவே முன்னேறியது. முன்னால் பிரசாதம் மாதிரி அள்ளி
நாலா பக்கமும் கொடுக்கப்பட்ட(இறைக்கப்பட்ட) பாணியை குழந்தை மறந்துதான் போனது!
கொஞ்ச நாளைக்கு முன்னால் வாட்ஸ் அப்பில் அங்கிருந்து
ஒரு விடியோ க்ளிப் எங்களை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்தது! சாப்பாட்டை முடித்துவிட்ட
அந்த சின்ன செல்லம் இந்திய பாணியில் கையில் தட்டைத்தூக்கி நக்க ஆரம்பித்தது. சுத்தமாக
நக்கி முடித்தபின் என்ன செய்யப்போகிறது தட்டை கீழே வைக்கப்போகிறதோ என்று நாங்கள் யோசனை
பண்ணிக்கொண்டு இருக்கையிலேயே ஒரு பெரிய சத்தத்தோடு
அழுகை!! இன்னும் கொஞ்சம்........ இன்னும் கொஞ்சம்..... குடேன் அம்மா..... என அந்த சின்னஞ்சிறுசு
'என் வயிறு எனதே' என் அறுதியிட்டுக் கூறிய அந்த நேரம் பலமணி நேர பல நாட்களின் என் உழைப்பு பல கனிகளை இன்று சுமந்து
நிற்பது எனக்கு எவ்வளவு பெரிய சுகம்! என அந்த இளம் அம்மா என் கணவரின் தங்கை மகள் பூரித்துப்போய்
நின்றதில் நாங்களும் சுகம் அடைந்தது உண்மையிலும் உண்மை!
என்னருமை இளம் அம்மாக்களே டிவி செல்போன் மந்திரக்கோல்களை தலையை சுற்றித் தூக்கிப் போடுங்கள். பிள்ளைகளுக்கு
உங்கள் நேரத்தைக்கொடுங்கள். வாழ்நாள் பாடத்தைத் தொடங்கி வைத்த பெருமையில் சுகம் பெறுங்கள்!!
என் பிள்ளை ஆரம்பத்தலிருந்து தானாகவேதான் சாப்பிடுகிறது என்று கூறும் அம்மாக்களே மகிழ்ச்சியுடன்
பெருமை கொள்ளுங்கள்!!
No comments :
Post a Comment