Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Thursday, 6 February 2020

ஜீரணிக்க இயலா மாற்றங்கள் சில எப்போதும்


"சார் பி.காம். பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணியிருக்கேன் சார்" வேலை தேடி வந்திருக்கும் அந்த இளைஞன் சர்டிபிகேட் ஃ பைலை  கம்பெனியின் நிதித்துறை நிர்வாகியின் முன் வைத்துவிட்டு பவ்யமாக  கை கட்டி நின்றான்.
எஸ் எஸ் எல் சி யில கணக்கு மார்க் எவ்வளவு?
நூத்துக்கு தொண்ணுத்தி எட்டு சார் .......
ரெண்டு மார்க்க பசியில தின்னு புட்டியோ.....?
சார் ...... ஒரு சின்ன மிஸ்டேக் சார்......
கிளாஸ்ல மனக்கணக்கு சுறு சுறுப்பா போட்டிருந்தீண்ணா முழுசா வாங்கியிருப்ப.....
அவன் குறுகிப் போனான்.....
எந்த ஸ்கூல்ல படிச்ச..?
அவன் பெயரைச்சொன்னான்.
ஒன் கணக்கு வாத்தியார் யாரு?
அவர் பெயரைச் சொன்ன அந்த நொடியில் அவர் முகம் மலர்ந்து போனது.... கணக்கின் அடிப்படை சரக்குகளை உள்ளே ஏற்றுவதில் அவர் கில்லாடி!!
டைப்பிங் ஸ்பீடு எப்டி.... ?
நிமிஷத்துக்கு எழுவதிலேர்ந்து எண்பதுக்குள்ள சார்...
ஜீரோ எரர்...?
எப்பயாவது தப்பு பண்ணிடுவேன் சார் .......
இங்க பாரு தம்பி..... எங்கிட்ட வேல பாக்குணுமுண்ணா தப்பு பண்ணி ஒத்த பேப்பர கூட வேஸ்ட் பண்ணுற வேலயே வச்சிக்குக்ககூடாது.... டைப் ரைட்டர ரொம்ப நிதானமா சின்ன புள்ள மாதிரி கையாளணும்....... லொட்டு லொடக்குண்ணு அடிச்சி தூக்குறதெல்லாம் இங்க ஆவாது.......
சார் நிதானமா பண்ணுவேன் சார்........
இவ்வளவு முன்னுரைக்குப் பிறகுதான் அவர் அவன் ஃபைலையே திறந்தார்.  வேலைக்கான விண்ணப்பம் டைப் பண்ணி கையெழுத்து போடப்பட்டிருந்தது. அவன் அத கையால எழுதியிருந்தா கையெழுத்து எப்படி இருக்குமுண்ணு கணிச்சிருக்கலாம்......காக்கா கிறுக்கலாட்டம் இருந்தா வேலைக்கி ஆவாதே.......முத்து முத்தான கையெழுத்தா இருந்தாக்கூட இந்த காலத்துல எவனையும் நம்ம முடியாது வேற யாரையாச்சையும் உட்டு எழுதச் சொல்லி இவன் கையெழுத்து போட்டிருக்கலாம்......   யோசனை செய்த அவர்
 " அந்த ஷெல்ஃபில இருந்து எதாச்சும் ஒரு புஸ்தகத்த எடுத்து மொத பாராவ எழுதிகிட்டு வா.... மூல டேபுள்ள ஒரு ஃ போல்டருக்குள்ள ஒன் சைடு பேப்பர் இருக்கு பாரு."என்றார்
கையெழுத்து பரவாயில்லை..... கணக்கில் அவன் சுறு சுறுப்பையும் பார்த்துவிட வேண்டும்.
"கணக்குல இன்னம் கொஞ்சம் சூட்சமமா இருக்கணும். கூட்டிக் கழிக்கிறதுல ஒரு புள்ளி வித்தியாசமானாக் கூட கம்பெனியோட லாப நஷ்டம் கணக்கு லட்சங்களில  போய் நிக்கும்.......தெறம எப்பயும் ஏறு மொகத்திலதான்....... புரியுதா .....?"
" கட்டாயம் மொயற்சி பண்றேன் சார்."
ட்டாலி ஆரக்கிள் ஜோஹோ ஹோரைஜான் சேஜ்ண்ணு பலா கலர்ல இன்றைய நிதித்தொதொறைகள் ஜெகஜோதியா நிக்கையில எந்த திரேதாயுகத்து  இன்டெர்வியூங்க இது என்று  நீங்க நெனைக்கிறது சரிதான். ஆனா எல்லா காரிய காரணங்களுக்கும் மூலம்ண்ணு ஒண்ணு இருக்கணும் இல்லியா? எந்த உச்சிக்குப்  நாம போனாலும் இந்த மூல சரித்திரத்த,பொறந்த எடத்த தெரிஞ்சிகிறது அவசியமான ஒண்ணுதானே?. இண்ணைக்கி அந்தக் சுவையான கதையிலிருந்து ஆரம்பிச்சி கொஞ்ச கொஞ்சமா முன்னே றித்தான் பார்ப்போமே!!
இன்டெர்வியூவுக்கு வந்த நம்ம பையன் செலக்ட் ஆன மொத நாள் அது.
 நீட்டு நோட்டு........ கோடு எதுவும் இல்லாத வெத்து நோட்டு........ அதுல  செவப்பு இங்க் கோடு போட்டு எடுத்துகிட்டு வந்து  பெரியவர்கிட்ட அந்தப்பையன் கொடுக்கிறான். அதப்பாத்தவுடன் அவுர் மூஞ்சி மாறிப்போவுது.... "ஒன்ன கோடு போடச்சொன்னனா இல்ல டார்ஜிலிங் ரயில்வே லைன வரையச்சொன்னனா? என்னா மாதிரி வேல இது? ஒங்கம்மா தெருவுல போடுற கோலத்த முன்ன பின்ன பாத்திருக்கியா....? வட்டம் சதுரம் நெட்டுக்கோடு வளவுண்ணு அச்சு அச்சா நாளுக்கொண்ணா தெருவ அலங்காரம் பண்ணுற அவுங்க கையில ஸ்கேல் இருக்கா  இல்ல ரூலர் ஜாமென்ட்ரி பாக்ஸ் இருக்கா ....போ.... போயி.... கத்து கிட்டு வா". அவர் விட்டெறிந்த நோட்டைப் பிடிக்கக் கூட முடியாத நடுக்கம் அவனுக்குள்...
"நான் சொல்றத இப்ப கவனமா கேக்குறியா என்னா?"
கைகட்டி நின்ற பையன் தலையை ஆட்டினான்.
"நோட்டு பேப்பர வீணாக்குற கத இண்ணையோட முடிஞ்சி போவணும். கோடு போடுறதுக்கு முன்னாடி ஸ்கேல வச்சு சரியான அளவு எடுத்து பென்சிலால கீழையும் மேலயும் குறிச்சிக்கணும். முன்னாடி நான் சொல்லிக்குடுத்த மாதிரி  சீரியல் நம்பருக்கு அர இன்ச் தேதிக்கி ஒண்ர இன்ச் விவரத்துக்கு மூணு இன்ச் மீதி வரவு செலவு மிச்சத்துக்கு மூணு பாகமா பிரிச்சிப்போடு புரியுதா?
"இனிமே தப்பு வராது சார்"
'ம்ம்' என்ற கர்ஜனை மட்டுமே அவரிடமிருந்து பதிலாக வந்தது!!
எந்த காரியத்தையும் சுத்தற பண்றத கைவசம் வச்சிருக்க அந்த  கில்லாடி மனுஷன் அவுரு கிட்ட வர்ற எல்லாரும் தன்ன மாதிரியே இருக்குணுமுண்ணு நெனைக்கிறவர்.! அது வரைக்கும் அந்த ஆள பொடம் போட்டுத்தான் எடுப்பார் !
அவருடைய ரெமிங்டன் டைப் ரைட்டர் எண்ணைக்கும் புதுப்பொண்ணுதான்! எவ்வளவு வேகமாக அடிச்சாலும் அத பூ மாதிரிதான் தட்டுவார்!! அக்கவுண்ட்ஸ் நோட்டெல்லாம் இல்லாத அந்த நாட்கள்ல கோடு போடாத நோட்டு வாங்கி அதுல கோடு போட்டுதான் வரவு செலவு கணக்கு வச்சிக்கணும். வெறுங்கையாலாயே அத்தன கோடுகளையும் நீட்டா போடுறவர் அவர்!
மாதாந்திர பேலன்ஸ் ஷீட்டைவைத்துக்கொண்டு மண்டையைப் பிய்த்து கொள்ளுபவர்கள் மத்தியில் அவர் அரை மணி நேரத்திலேயே சரி பார்த்துவிடும் மனுஷன்!!
அவனவன் அகர வரிசையில் இருக்கும் ஃ போன் டயரியைப்போட்டு ஒரு போன் நம்பருக்குக்காக குடாய்ந்து கொண்டு கிடைக்கையில் நூற்றுக்கணக்கான நம்பர்களை மனசுக்குள் பதியம் போட்டிருப்பவர்!
வீட்டுக்கணக்கு வழக்கை அவர் வைத்திருக்கும் பாணியே அலாதி! அவர் வீட்டின் மரக் கப்போர்டின் மேல் ஷெல்ஃபில்  சின்ன சின்ன பாகங்களாகப் பிரித்த பல அறைகள் இருக்கும்.(அப்படி ப்ளான் பண்ணி செய்யச் சொல்லியிருப்பாரோ?!) சம்பளம் வாங்கிய அன்று அந்த அறைகளில் இருக்கும் மொத்தமான நீட்டு கவர்களை வெளியே எடுப்பார். பிள்ளைகள் படிப்பு தொடங்கி மளிகை காய்கறி வகையராக்களுக்குப்போய் கடைசியாக அவசர ஆத்திரங்கள் கவரில் பணம் போட்டு முடிந்தபின்தான் அதன் கதவை பூட்டுவார். அதிகமாக செலவு ஆகிவிட்டால் அவசர ஆத்திரங்கள் கவரிலிருந்து அவசியமான கவருக்குபணம்செல்லும். அதே போல் எந்தக்கவரிலும் மீதமானாலும் அது அவசர ஆத்திர கவருக்கு சேமிப்பாய் போய்ச்சேரும். அமயா சமயங்களில் அந்த சேமிப்பு உருண்டு திரண்டு  வருடத்திற்கு ஒரு முறை பிள்ளைகளை சுற்றுலாவாக கூட்டிச்செல்லும் வாய்ப்புகளையும் கொடுக்க வல்லது! 
இந்த மாதிரி திட்ட வட்டமான தீட்சண்ய மனிதரிடம் குப்பை கொட்ட முடியாமல் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என பிச்சுகிட்டு ஓடிப்போன கேஸ்கள் நிறையவே!!
மாற்றங்கள் மெள்ள மெள்ள ஆபீசிற்குள் நுழைய ஆரம்பித்தன. பெருசும் சின்னதுமா  குட்டையும் நெட்டையுமா  தேவைக்கேற்ற கோடுகள் போட்ட அக்கவுண்ட் நோட்டுகள் உள்ளே நுழைந்த அந்த வேளையில்  ஸ்கேல்களும் உருட்டு ரூலர்களும் உப்புக்கு சப்பாணிகளாய் ஆகிப்போயின!  
"யப்பா இந்த  கோடு சனியன் நம்மள உட்டு போய்த் தொலஞ்சுதுப்பா என்று இளசுகள் பெருமூச்சுவிட நம்மவரோ பசங்கள சோம்பேறிகளாத்தான் ஆக்குறானுக" என முணுமுணுத்தார்! 
இன்னொரு நாள் அவர் அறைக்குள் நுழைந்த மேனேஜிங் டைரக்டர் " ஒங்க வேலை எல்லாம் இனிமே ரொம்ப சுலபமாகப்போகுது." என்று சொல்லிக்கொண்டே ஒரு கையலக மெஷினை அவரிடம் கொடுத்தார். கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் அதில் அவர் பண்ணிப்பார்த்தார். இவ்வளவு சீக்கிரமா.....? நம்ப முடியாமல் தன் முறையில் கணக்குப் போட்டுப் பார்த்தார் இரண்டு வழி விடையும் ஒன்றாகவே இருந்தது!!
"இப்புடியே போச்சுண்ணா மூளைண்ணு ஒரு அயிட்டத்துக்கு  வேலையே இல்லாம அது காணாமத்தான் போவப்போவுது.எங்க போய் யாரை நொந்து கொள்றது...........புரியிலியே........" மனுஷன்  நொந்துதான் போய்விட்டார்!
மெள்ள மெள்ள அக்கவுண்ட் நோட்டுகளும் கால்குலேட்டரும் நிதித் துறையில்  ஏக போகமாக கோலோச்சத் தொடங்கின!
1987ம் ஆண்டில் எங்கள் ஆபிசில் பெரியதொரு புரட்சி......... எம்டியின் அறைக்குள் கம்ப்யூட்டர் என்ற பெயர் கொண்ட ஒரு அதிசயப் பொருள் உள்ளே நுழைந்தது! உள்ளே போன அது மேஜையின் நடு மத்தியில் இடம் பிடித்துக் கொண்டது!!  எம்டி ரூமுக்கு போகிறோமே என்ற மரியாதை துளியும் இல்லாமல் பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்த்தது போல நாங்கள்  முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்து அந்த கம்ப்யூட்டரை  பவ்யமாக திவ்ய தரிசனம் செய்தோம்!
பொதுவாக மீட்டிங்கிற்கெல்லாம் தலைமை தாங்கும் எங்கள் எம்டி அன்று எங்களோடு கூட பார்வையாளராக அமர்ந்திருக்க  கம்ப்யூட்டர் ஸ்பெஷலிஸ்ட் மந்திரவாதிபோல்  தன் மெஷின் செய்யக்கூடிய வித்தைகளை வரிசைப்படுத்த ஆரம்பித்தார்.
இனிமேல் உங்கள் கையெழுத்து தலை எழுத்தாட்டம்  இருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது. இவ்வளவு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா? ஒரு செண்ட்டன்சை உருப்படியாக எழுதத்தெரிகிறதா? என்ற வசவும் இனி உங்களுக்கு இல்லை. உங்கள் மெஷின் தானாக திருத்திக்கொடுத்துவிடும்! நீங்களாகவே டைப் பண்ணிக்கொள்ளலாம் இதற்கு டைப்பிங் கற்றிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தப்பு பண்ணுகிறோம் என்று தெரிந்தால் அழிப்பதற்கு ரப்பரோ இல்லை ஒய்ட்னரோ தேட வேண்டியதில்லை.நம்ம ஃ பிரண்டே தப்பு இருந்தா சுட்டிக்காட்டிவிட்டு சரியும் செய்துவிடுவார். அக்கவுண்ட் நோட்டுகளில் இருக்கும் குறைந்த அளவு இடங்களில் மல்லாடாமல்  ஆயிரமாயிரமாய் கோடுகள் உங்களுக்கு வேண்டும் என்று  கேட்டால்  "எந்த சைசுலங்க வேணும்?" என்று வெட்டிட்டு வா என்றால் கட்டிகிட்டே வரும் வித்தைக்காரி அது! பென்சில் ரப்பர் ஸ்கேல் கலர்
பேனாக்களோடு கூட உங்கள் கால்குலேட்டரும் அருங்காட்சியகத்துக்குப் போய்விடும். ஃபைல்கள் அடுக்கிவைக்க இடம் இல்லாமல் இந்த கார்பெண்டர் மனுஷன கூப்பிடறத்துக்குள்ள தாவு தீந்து போயிடுமுண்ணு  இனி நீங்கள்  புலம்பத்தேவையில்லை. ஒரு சின்ன சுருக்கு பைக்குள்ள நூராயிரம் ஃபைல்களை கம்ப்யூட்டர் சேர்த்து வச்சிகிட்டு தேவையானப்ப எடுத்து நம்ம கையில குடுக்கும்!!
என்னன்னமோ அடுக்கிக்கொண்டே போனவர் கடைசியில் உங்கள் ஆஃபிஸ் பேப்பரே இல்லாத இடமாய் மாறத்தான் போகிறது என்று சொன்னபோது நம் குழுவே துள்ளிக்குதிக்க நம்மவர் பலா உணர்சிகளின் கலவையாய் உறைந்து போயிருந்தார்.
பழைய நினைப்புகள் அவருள் கூடி வந்தன. கிராமத்து வீட்டுத்திண்ணையில்  சிறியதொரு சாய்வு டெஸ்க்கிற்கு முன்னால் சம்மணமிட்டு கட்டைப் பேனா மைக்கூடு  சகிதம் கணக்கெழுதும் அப்பாவின் முகம் முன் வந்தது.  நேவு மணலே தங்கள் நோட்டாகக் கொண்ட பக்கத்திலிருந்த பள்ளியின் மாணவர் கூட்டம் இந்த அரும் பெரும் காட்சியை கண் அகல தினம் தினம் வேடிக்கைப்பார்க்கும்! அன்று சிலேட்டு பலகையும் சிலேட்டுக் குச்சியும்கூட  பலருக்கு கைக்கெட்டாத  ஒரு சமாச்சாரம்!
இந்த கட்டைப்பேனா மைக்கூடு மையால் நனைந்த சராய் சட்டையிலிருந்து விடுதலை பெற்று ஃபவுண்ட்டன் பேனாவுக்கு வந்த நேரம் ஒரு உலகப்புரட்சிதான்!
டவுண் படிப்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்த பையன் வெகு பெருமையோடு இந்த அதிசயத்தை கிராமம் முழுவதற்கும் காட்டினான். "வேலைக்குப் போன கையோடு முதல் அப்பாவிற்கு ஒன்று வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்....அவரை சந்தோஷத்தில் மூழகடிக்க வேண்டும் ." என்று அவன் மனசுக்குள் ஒரு கங்கணம்! 
அந்த நல்ல நாளும் வந்தது! சம்பளப் பணத்தையும் பேனாவையும் அப்பா அம்மா காலில் வைத்து வணங்கி அவன் ஆசீர்வாதம் வாங்கினான். பணத்தை எடுத்து அம்மா கையில் கொடுத்த அவர் பேனாவைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். திருப்பித்திருப்பி பார்த்த அவர் "தம்பி தப்பா நெனச்சுக்காத....... நான் எழுதுற எழுத்துக்கும் செய்யுற சின்ன  வேலைக்கும் பழகிப்போன அந்த சாமானிலிருந்து  எதுக்கு நான் வெளிய வரணும்  இதுவே தோதா இருக்கும்ப்பா. வெல குடுத்து வாங்கியிருக்க....... பத்தரமா வச்சிருந்து இத வாங்க முடியாத ஒரு ஏழ பையனுக்கு குடு." பாசத்துடன் முதுகைத் தடவிக்கொடுத்தார் அப்பா!
கொஞ்சம் கொஞ்சமாக ஆ ஃ பீஸில் பெரும் மாறுதல்கள்........ சின்ன சின்ன அறைகள் ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு கம்ப்யூட்டர்... கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது அவருக்கு!  ஐம்பது  வருஷங்களாய் ஒட்டி உறவாடிய உறவு ஒன்று கை நழுவிப் போகிறதோ?
வேலையை உதறித்தள்ளி விட்டு வெளியே வந்தபோது அவருக்குப் பெரும் விடுதலை கிடைத்த உணர்வு!
" தாத்தா ரிட்டயர் ஆனதுக்கு உங்களுக்கு ஒரு கிஃப்ட்" என்ற படியே ஒரு கம்ப்யூட்டரை வீட்டில் இறக்கினான் பேரன்.
"அதெல்லாம் வேணாமுன்னு தானே ஐயா வீட்டுக்கு வந்திட்டேன்."
" ஒங்க மூளைக்கி இந்த கம்ப்யூட்டரெல்லாம் ஒரு ஜுஜுபி தாத்தா...... ரெண்டே நாளுல நான் ஒங்குளுக்கு சொல்லி குடுத்துட முடியும்."
" ஐயா ... இனிமே நான் என்னா கணக்க எழுதப்போறேன்? சொந்த செலவும் வீட்டு வரவு செலவு கணக்குந்தானே. அதையெல்லாம் பேப்பர்லயே கோடு போட்டு பாத்துக்குவேன். கம்ப்யூட்டர் விக்கிற வெலையில என் பேரச்சொல்லி அத  ஒரு ஏழப்பையனுக்கு குடு" பாசமாக பேரனின் முதுகைத்தடவிக் கொடுத்தார்  தாத்தா.
பரம்பரையின்  மரபணுக்கள் அச்சு பிசகாமல்அங்கு!!  
கூரிய அறிவு படைத்த அந்த மனிதர் என் கணவரின் தந்தைதான். அரசாங்க வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பின் மகன் தனியே தொடங்கிய ஒரு தொழில் நுட்ப முயற்சிக்கு நிதித் துறையைப்பற்றிய கவலையே உனக்கு ஏதும் வேண்டாம் என ஊன்று கோலாய் நின்று எங்களை உயர்த்தியவர்!  
தனது  முயற்சி பயனற்றுப்போனதில்  பேரனுக்கு பெரியதொரு ஏமாற்றந்தான்!    

No comments :

Post a Comment