Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Wednesday, 31 December 2014

குஜராத்தின் மாயாஜாலி

வரும் வருட குடியரசுதின உற்சவத்தில் கலந்து கொள்ளப் போவது ஒபாமா என்றசெய்தி  இந்தியன் என்னை பெருமிதம் கொள்ளச்செய்தாலும் அதைவிட பெருமகிழ்ச்சி தந்த ஒரு தகவல் குஜராத்காரர் மோடி அளிக்கும் விருந்தில் அவர் ஊரின் ஸ்பெஷாலிட்டியான டோக்ளா இடம் பெறாது, அது ஒபாமாவுக்குஒத்துக்கொள்ளாது என்ற செய்தியேதான்!
 ஒபாமாவுக்கு மட்டுமல்ல சுத்த இந்தியனாகிய என் நிலமையும் அவ்வாறேதான் என இந்த தருணத்தில் கூறி அந்த மாயாஜாலி டோக்ளாவால் நான் பெற்ற அனுபவத்தை இவ்வையகம் பெற வேண்டாம் என்ற உயர் நோக்கோடு இச்சம்பவத்தை உங்கள் முன் வைக்கிறேன்!!!
---------------------------------------------------------------------------------------------------------
சில வருடங்களுக்குமுன்  அஹமதாபாத்தில் தங்கக் கிடைத்த சில நாட்கள் ஒரு வேறுபட்ட ஒரு அனுபவம்!
 இரவில் ஒன்பது மணிக்குமேல் நள்ளிரவுமுடிய ஒளிக் கொள்ளும் லா மார்க்கட்டை சுற்றிய சுகானுபவங்கள்,
அந்த நேரத்திலும் பயமில்லாமல் உலா வரும் பெண்கள்,
 பகல் போல் இரவுத் தெருவில் பேரம் பேசிய திருப்தி,
 கண் கவரும் கண்ணாடிப் பாவாடைகள்,  விரிப்புகள், குஜராத்தின் பாந்தினிகள் (சுங்கடிகள்) இன்ன பிற  கை வினைஞர்களின் சிறப்பு பொருட்களை வாங்கிக் குவித்த கொண்டாட்டம்,
 ஒன்பது மணிக்கெல்லாம் மூடிவிடப்படும் அல்லது மூட எத்தனிக்கும் கடைகள் வாழும் சென்னை வாசியான எனக்கும் என் நண்பர்களுக்கும் ஒரு இனிய புதிய அனுபவமாகவே இருந்தது !!!!!
இவைகளையெல்லாம் தூக்கி அடித்த ஒரு விஷயம்…… ஒரு சாப்பாட்டு விஷயம்…….. குஜராத்தில் எனக்கென்றே காத்து நின்றது !!!!!
டோக்ளா………. அந்த அருமையான உணவுப்பொருள் பார்ப்பதற்கும் உண்பதற்கும் திருப்தி தரும் தின்பண்டம் ..  மஞ்சள் பச்சை வெள்ளை என கலர் கலராய், தாளித்த குட்டி குட்டி செவ்வக இட்லி போல் ஆவியில் வெந்து வெகு மிருதுவாக இருந்த அந்த அழகு டோக்ளாக்கள் என்னையும் என் நண்பர்களையும் கவர்ந்து இழுத்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை!வகைக்கு எட்டு எட்டாக தினுசு தினுசான பச்சை,கருப்பு, இன்ன பிற வானவில் நிற சட்னிகளோடு டோக்ளா  எங்கள் முன்  அமர்ந்து வசப்படுத்தியது எச்சி ஊறலை குற்றால அருவியாக்கியது . தட்டு தட்டாக  வரிசை பிடித்து வந்த அழகின்  சுகமான போதையில் நாங்கள்  இரண்டுமணி நேரம்!!!!!

ஹோட்டலுக்குத்திரும்பி வந்து ஊர்செல்ல மூட்டைகட்ட ஆரம்பித்த அந்த நேரம் ………….. அந்த வினோத நேரம்   இப்படித்தான்  ஆரம்பித்தது.
மெரினா பீச்சில் விற்கும் சின்ன கிலுகிலுப்பை பலூனை  நீங்கள் வாங்கியிருப்பீர்கள் அல்லது பார்த்தாவது இருப்பீர்கள். அந்த பலூன் வயிற்றுக்குள் நுழைந்ததைபோல என் வயிறு கொஞ்ச உப்புசத்தோடு கடாமுடா என்று கிலுகிலுப்பை ஆட்ட ஆரம்பித்தது. ஆரம்பமான கொஞ்ச நேரத்திலேயே அது ஆகாசத்தில் பறக்கும் அட்வர்டைஸ்மென்ட் பலூன் ஆகி  வங்காள விரிகுடாவின் காற்றழுத்தப்பகுதி போல் வயிற்றில் மையம் கொண்டு மூச்சு விட முடியா அழுத்தமாய் ஆகிப்போனது........ குப்புற‌ப் படுத்து பலூனை   முயன்றமட்டும் அமுக்கி அமுக்கி எடுக்கமுய‌ல்கிறேன் . கீழே படுத்து உருண்டு பிரண்டு அங்கப் பிரதட்சிணம்   பண்ணிப்பார்ர்க்கிறேன்........ என்ன ஆகிப்போனது எனக்கு..?! யோஜனை செய்ததில் முன்னே வந்து நின்றது வண்ண வண்ண டோக்ளாக்களே! அட ..... மல்லிகைப்பூ இட்லியைவிட சாந்த சொரூபியாய் இட்டிலியைப்போலவே ஆவியில் வெந்துபோன வஸ்துவாய் சட்டினி சாம்பார் துணையின்றியே நாக்கில் கரைந்து  போகும் இந்த அயிட்டத்தை நான் இட்லி என்ற எண்ணத்திலேயே ஒரு வெட்டு வெட்டி விட்டேனோ. இது குஜராத்தின் மாயையோ?! டோக்ளா மங்கையவள் உள்ளொன்று வைத்துப்புறமொன்று காட்டும் குஜராத்தின் மாயா ஜாலியோ?
அவஸ்தையின் நடுவேயும் எண்ணங்கள் சிதறின
என்னுடைய இயலாமையில் தவிப்புற்ற நண்பர்கள் த‌ம் நாற்கரங்களின்  பல‌மான உலக்கை குத்தலால் என் முதுகில் நர்த்தனம் பண்ணிப்பார்த்தார்கள். மூடிமூடியாய் ஜெலுசை என்னுள் செலுத்திப்பார்தார்கள்; வெது வெது தண்ணீர் வைத்தியம் என ஒன்று மாற்றி ஒன்று சிசுரக்ஷை செய்து பார்த்தார்கள்  என்னை நிமிடத்திற்கு ஒருதரம் டாய்லட்டில் அட்டடென்டன்ஸ் கொடுக்க வைத்ததுதான் கண்ட பலனாயிற்று. தலை வெடிக்கும்வலி, பலமிழந்து நிற்கும் தசைகள்  ………… நான்…….. நானாகவே இல்லை…… அவளோ அசைந்து கொடுப்பதாய் இல்லை!!!

மணிக்கணக்கின் அவஸ்தையோடு ர‌யில் நிலையத்திற்கு ஆட்டோவில் மூட்டை முடிச்சுகள் நடுவில் இடுக்கி முடிக்கி உட்கார்ந்துகொண்டு செல்கிறோம். எலும்புகளை உடைக்கும் ஆச்சல் கொண்ட ரோடு……….. அதில் ரேஸ் கார் மாதிரிப் பறந்த  ஆட்டோ……..
 இந்த முக்கூட்டு சங்கமம்:முட்டும் மூட்டைகள், முதுகு பிளக்கும் ரோடுகள் அ எங்கள் ஆட்டோக்காரரின் சாகசங்கள்,  என் நண்பர்கள் அன்போடு செய்த அத்தனையையும் விட எனக்கு ஆச்சரியமான அருமருந்தானது!!
ஆட்டோவிலிருந்து வெளியே தலையை நீட்டி ஓ ஓ வென்று பெருங்குரலெடுதது அந்த மாயாஜாலியைக் கக்கிக் கக்கி........கக்கிக் கக்கி........ நிமிடங்கள் யுகமான உணர்வோடு வெளித்தள்ளுகிறேன்.
அவள் குஜராத்தின் மங்கை...!
அவள் குஜராத்தின் மாயாஜாலி.!!


 அவள் இங்கெயே இருப்பதுதான் சரியானது என என் உடம்பு  அமைதி கொள்ள அதோடு சேர்ந்து என் மனமும் எக்காளமிட்டு தெற்கு நோக்கி செல்லும் ரயிலை நோக்கி ஓட்டமெடுத்தது!!!!

Tuesday, 23 December 2014

மேசை விரிப்பு - சந்திப்பின் சங்கமம்

இளம் தம்பதியர். கிறிஸ்துக்கு சேவை செய்யும் பணி அவர்களது. பெரிய கோயில் இல்லையென்றாலும் நகரத்துக்கு பக்கமான ஒரு இடத்திற்குத்தான் அவர்கள் அனுப்பப்பட்டிருந்தனர். பெரிய எதிர்பார்ப்புடன் அங்கு சென்றவர்களுக்கு பெரும் ஏமாற்றந்தான் காத்திருந்தது. பழுதடைந்து சிதிலமடைந்த  கோயில்...... ம்ம்ம்....இங்குதான் நம் சேவையா.... மனதிலே வருதத‌ம் இருந்தாலும் அவர்களுக்குள்ளே தளர்வு இல்லை. சரி சரி இது அக்டோபர் மாதந்தான் நமது முதல் செபக்கூட்டத்தை கிறிஸ்மஸ் இரவு தொடங்கும்படியாக ஒரு திட்டம் போட்டுக்கொள்வோம் என இருவரும் முடிவு செய்தனர்.
 சுவர்களையெல்லாம் பட்டி பார்த்து, சுண்ணாம்பு அடித்து உடந்து கிடந்த இருக்கைகள் முழங்கால் படியிடு முன் சாய்வுகள் நேரம் காலம் பார்க்காத அவர்கள் உழைப்பு
கெடு வைத்த டிசம்பர் 21ம் தேதிக்கு முன்னதாகவே கோயில் பளிச்சென்று ஆக்கியிருந்தது. 18ம் தேதி கோயிலை மூடிவிட்டுச்சென்ற அவர்கள் மனதில் மகிழ்ச்சி!! எல்லாம் கடவுள் கிருபைதான்!!

19ம் தேதி
அந்த ஊரில் ஆரம்பித்த‌ பயங்கர சூராவளிக்காற்றுக்கும் மழைக்கும் இரண்டு நாட்களுக்கு ஓயவேயில்லை
21ம் தேதி
கோயிலைத்திறந்த பாதிரியாருக்குப் பெரும் அதிர்ச்சி காத்துக்கிடந்தது. பீடத்திற்குப்பின்னால் இருந்த சுவர் உடைந்து கிடந்தது. ஓட்டை கிட்டத்தட்ட இருபதுக்கு எட்டு அடி இருக்கும். பிளாஸ்டர் எல்லாம் பிய்த்துக்கொண்டு குப்பை மலையாய் கீழே; தரையில் கிடந்தவற்றையெல்லாம்கூட்டி சுத்தம் பண்ணிய அவருக்கு மேலே என்ன செய்யமுடியும் என்பதே புரியவில்லை. தெளிவானது ஒன்றே ஒன்றுதான். முதல் செபக்கூட்டம் கிறிஸ்மஸ் அன்று இரவு தொடங்க முடியாது என்பது மட்டுந்தான்.

 சிறு வருத்தத்தோடு அவர் வெளியே கிளம்பினார். போகும் வழியில் ஒரு சந்தை; ஜன‌ங்கள் கூட்டங்கூட்டமாக நின்று கொண்டிருந்தனர் வாங்கும் எண்ணம் ஏதும் இல்லாமல் அவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கே இறங்கினார். ஏதோ ஒரு தருமத்திற்காக விற்பனை நடந்து கொண்டிருந்தது. சுற்றி வரும் போது லேஸ் மேசை விரிப்பு ஒன்று அவர் கண்ணில் படுகிறது.ரொம்ப அழகாக இருக்கிறதே என உற்று நோக்குகிறார்   சன்னமான நுண்ணிய பின்னல், தந்த நிறம்;  விரிப்பின் நட்ட நடுவே ஒரு சிலுவை அவர் மனசுக்குள் ஒரு பொறி…… பீடத்திற்குப் பின்னால் இந்த மேசை விரிப்பைத்தொங்கவிட்டால் என்ன......?   கோயிலின் ஓட்டயை அது கட்டாயம் மறைத்து விடும் …..சட்டென்று வாங்கிவிட்டார் …….

மேசை விரிப்போடு பாதிரியார் கோயிலுக்குள் வருகையில் பனி பெய்ய ஆரம்பித்துவிட்டது. அப்போது எதிர்த்திசையிலிருந்து ஒரு வயதான பெண் ஒருவர் பஸ்ஸைப்பிடிக்க ஓடிவருகிறார். ஆனால் பஸ்ஸைத் தவற விட்டுவடுகிறார் அடுத்த பஸ் வருவதற்கு இன்னும் 45 நிமிடங்கள் ஆகும். ஆகவே பாதிரியார் அவரை கோயிலுக்குள் வந்து அமருமாறு அழைக்கிறார்ர். பாதிரியாருக்கு நன்றி கூறியஅவர் அங்கிருந்த இருக்கை ஒன்றில்அமர்ந்து கொண்டார். மற்றபடி பாதிரியார் ஏணி எடுத்து வருவதையோ பீடத்திற்குப்பினால் வேலை செய்வதையோ கண்டு கொள்ளவேயில்லை. தன் நினைவிலேயே அவர் ஒன்றிப்போயிருந்திருக்கவேண்டும்! ஏணியைப் போட்டு எல்லாவற்றையும் சரி பண்ணி எட்டிப்போய் நின்ற பாதிரியாருக்கு ஒரே ஆச்சரியம் அந்த லேஸ் மேசை விரிப்பு.. என்னமோ பீடத்திற்கே அளவு எடுத்தது போல் சிக்கெனெ இருந்தது  …….விரிப்பின் அழகில் அவர் சொக்கித்தான் போனார்.. ஆகா இந்த கிறிஸ்மஸ்விழா கோயிலுக்குள்ளேயே நடக்கப்போகிறது என்ற எண்ணமே அவருக்கு உற்சாகம் ஊட்டியது. இந்த அருமையான நினைப்புகளுடன் திரும்பிப்பார்த்த அவர் அந்த வயதான மூதாட்டி பீடத்தை நோக்கி வருவதைப்பார்க்கிறார். மூதாட்டியின் முகம் பேயறைந்தது போல் இருந்தது. "அய்யா இந்த மேசை விரிப்பு எங்கிருந்து உங்களுக்குக் கிடைத்தது ?" என அவர்  கேட்க பாதிரியார் எல்லா விவரங்களையும் அவ்ருக்குச் சொன்னார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அப்பெண்மணி  அந்த மேசை விரிப்பின் வலது பக்க கீழ் மூலையில் EBG மூன்று எழுத்துக்கள் பின்னப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கச் சொன்னார். ஆம் அந்த மூன்று எழுத்துக்கள் இருக்கின்றன என பாதிரியார் சொல்லவும் அம்மூதாட்டி அந்த மேசை விரிப்பை தான் பின்னியதாகக் கூறினார். 35  வருடங்களுக்குமுன்னால் அவரும் அவர் கணவரும் ஆஸ்திரியாவில் இருந்தனர் மிகவும் வசதியாக குடும்பம். நாசிப்படைகள் ஆஸ்திரியாவுக்குள் நுழைந்த போது அவர் கணவர் அவரைக்கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பிவைத்து விட்டார். அடுத்த வாரமே அவரைப்பின்தொடர்ந்து வந்துவிடுவாதாக உறுதி கூறி.யிருந்தார் ஆனால் நடந்ததோ வேறாக இருந்தது. சில நாட்களிலேயே நாசிப்படைகள் அவரைக்கைது செய்து சிறைப்படுத்தினர். 35 வருடங்களுக்கு முன்னால் பார்த்த தன் கணவர இன்று உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற நிலையில் என்ற ரெண்டுங் கெட்டான் நிலையில் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருப்பதாகவும் சொன்ன அவர் இப்பொதைக்கு அவர் இங்கிருந்து கொஞ்சம் தூரத்தில் வசிப்பதாகவும் எப்போதாவது   இந்தப்பக்கம் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்துவிட்டு பஸ்ஸில் போய்விடுவது வழக்கம் என்றும்கூறினார்

நிலமையை உணர்ந்த பாதிரியார் அவர்களுக்குச் சொந்தமான அந்த மேசை விரிப்பை அவருக்கே கொடுத்துவிடுவதாகச் சொன்னார்.  இல்லை இல்லை நீங்கள் அதைக் கோயிலுக்கே வைத்துக்கொள்ளுஙகள் எனக்கூறிவிட்டார் அப்பெண்மணி
 அப்படியானால் என்னோடு நீங்கள் காரில் வர வேண்டும் உங்கள் வீடு ரொம்ப தூரத்தில் அல்லவா இருக்கிறது. இந்த சின்ன உதவியையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
கிறிஸ்மஸ் அன்று இரவு அருமையான செபக்கூட்டம். கோயிலும் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது. நிறைவான பாடல்களும் அதோடு ஒன்றிப் போன மனித இதயங்களும் அந்த இரவு செபக்கூட்டத்திற்கு எழில் ஊட்டின.
கோயில் முடிந்தபின் பாதிரியாரும் அவர் மனைவியும் கோயில் முகப்பில் நின்று எல்லோருடனும் கைகுலுக்கி கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்..
"அருமையான  நிகழ்வு இந்தக் கோயிலுக்கு நாங்கள் திரும்பவும் வருவோம்.”என நிறைய பேர் அவர்களுக்கு உறுதி கூறினர்.
கூட்டம் எல்லாம் கலைந்தாகிவிட்டது. முழு திருப்தியுடன் வீடு செல்ல அவர்கள் முடிவு செய்தபோது ஒரு மனிதர் மட்டும் அங்கு வெறிச்சிட்டு  அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார்கள். பாதிரியார் சம‌யத்தில் கோயிலுக்குப் பக்கத்தில்  அவரைப் பார்திருக்கிறார் அருகில்தான்தான் அவர் வீடு இருக்கவேண்டும். பாதிரியார் பக்கத்தில் நிற்பதை உணர்ந்த அம்மனிதர்அவரைப்பார்த்து " ஒரே மாதிரியான இரு மேசை விரிப்புகள்  அதுவும் கையால் பினனப்படது சாத்தியமா என்று எனக்குத்தெரியவில்லை.
பல வருடங்களுக்கு முன்  இரண்டாம் உலகப்போருக்கு முன் நாங்கள் ஆஸ்திரியாவில் இருந்தபோது என் மனைவி இதே போல் அச்சாக ஒரு மேசை விரிப்பைப் பின்னியிருந்தாள். ஆனால் நாசிப்படைகள் ஆஸ்திரியாவை முற்றுகை இட்டபோது என் மனைவியை கட்டாயப்படுத்தி பத்திரமான இடத்திற்கு அனுப்பிவைத்தேன்..நானும் சில நாட்களில் அவள் இருந்த இடத்திற்குப் போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அதற்குள் நாசிகள் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள். என்மனைவியின் கதி என்னாஆயிற்று என்று கூட எனக்குத்தெரியவில்லை. அதெல்லாம் இருக்கட்டும் இந்த மேசை விரிப்பை நீங்கள் எங்கே வாங்கினீர்கள் என சொல்ல முடியுமா"
பாதிரியார் அவருக்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை.
 “என்னோடு கொஞ்சம் வாருங்களேன்.பேசிக்கொண்டே காரில் ஒரு சுற்று சுற்றி விட்டு வரலாம்.” என்று மட்டும் சொல்ல அவரும் உடன் ஏறிக்கொண்டார். வெகு தூரம் சென்ற பாதிரியார்  காரை விட்டு இறங்கி கைத்தாங்கலாக அவரை மூன்று மாடிகள் வரை இட்டுச் சென்று கதவின் மணியை அமுக்கினார். ஆச்சரியம் கவ்விய இதயங்கள் இரண்டு…… இருவரும் ஒருவரையொருவர் பார்க்கின்றனர் திகைத்துப்போய் நிற்கின்றனர்.அந்த நொடி நேர சந்திப்பின் உணர்வுக் குவியல்களை சங்கமத்தை எழுத்தால் எழுதிச் சொல்லமுடியுமா, இல்லை பெரும் வர்ணிப்பில்தான் அடக்க முடியுமா?!! அந்த சந்திப்பு கிறிஸ்மஸ்ஸின் மிகப்பெரிய புதுமையல்லவா?!! எல்லாக் கதவுகளும் எனக்கு மூடப்பட்டுவிடன என நாம் எண்ணுகையில் இதோ பார் கோட்டை வாசலையே உனக்குத் திற‌க்கிறேன் என சங்கெடுத்து முழங்கும் சிறப்பாளிஅல்லவா நம் இறைவன்!!!
ஆகவே “எனக்கு ஏன் இது நடக்கிறது?” எனும் கேள்வியை நம் வாழ்க்கையில் என்றும் தவிர்ப்போம்.

“என் இறைவன் என்னோடு இருக்கையில் என்ன பயமெனக்கு” என எந்நேரமும் எந்நொடியும் அறுதியிட்டு உறுதியாகச்சொல்வோம்

Friday, 12 December 2014

அக்கா ஜெசி கிறிஸ்மஸ் வாழ்த்து

ஒவ்வொரு வருடமும் குழந்தைகளை முன் வைத்து பெரிய அக்கா ஜெசி கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை தயாரிப்பார்கள். இந்த வருடம் அவர்கள் வேலைப்பளுவால் இதற்கு நேரம் ஒதுக்க‌ முடியவில்லை. என்னிடம் கொடுத்து கம்ப்யூட்டரில் எல்லோருக்கும் அனுப்ப முடியுமாம்மா என்று கேட்டார்கள்.
வாழ்த்து உங்கள் அனைவருக்கும்!
மகிழ்ந்து செயல் படுவோம், நம் பிள்ளைகளை செயல்படச்செய்வோம்
-------------------------------------





 ஆயிரக்கணக்கில் செலவு செய்து
ஆயத்த ஆடைகள் கொண்டு மகிழாதே
அவ்வாயிரத்தில் நான்கு உடைகள் வாங்கி
ஆடைகள் இன்றி தவிப்போருக்கு மூன்றைக் கொடு
ஆரவாரமின்றி ஒன்றை உடுத்தி
 ஆண்டவர் ஏசுவின் பிறப்பு விழாவை
 மகிழ்ந்து கொண்டாடு!
தன் காரியப்புலியாய் இராதே பிறர் காரியப் புலியாய் ஆகிவிடு!!
ஆசைஆசையாய் அனைத்து உணவுகளையும்
 ஆன‌ந்தமாய் தின்று மகிழாதே
ஆதவன் உதித்தது முதல் மறையும் வரை
ஆகாரமின்றித் தவிப்போருடன்
அனைத்தையும் பகிர்ந்து உண்டு
ஆண்டவரின் பிறப்பு விழாவைமகிழ்ந்து கொண்டாடு!
தன் காரியப்புலியாய் இராதே பிறர் காரியப் புலியாய் ஆகிவிடு!!
உலகமெங்கும் உள்ள என் பேரக்குழந்தைகள் அனைவரும்
பிறர் காரியப்புலியாய் மாறுவீர்கள் என நம்புகிறேன்!

அதற்காக அனுதினமும் வேண்டுகிறேன்.

Tuesday, 9 December 2014

நன்றிகெட்டு நான் நின்ற நேரங்களை மன்னித்துவிடும்

முகப் புத்தகத்தில் (Facebook) ஒரு படம் அத்துடன் ஒரு சின்ன வேண்டுதலும் கோரியிருந்தாள் தம்பிப்பெண் ஆக்ஸி.

இரண்டு ஆப்பிரிக்க சின்னஞ்சிறுபெண் குழந்தைகள்; அழுக்கு சட்டை ; ஒரு பழைய பிளாஸ்டிக் கேனில்  இருந்த தண்ணீர்த்துளிகளை சின்னவளுக்கு பெரிய பெண் ஊற்றுகிறாள்.அவ்வளவுதான் படம். வார்த்தைகளோ பளீரென்று ஒரு அறை விடுகிறது
"இறைவா நன்றிகெட்டு நான் நின்ற  நேரங்களை மன்னித்துவிடும்" வார்த்தைகள் மனதில் போய் சப்பென்று ஒட்டிக்கொண்டது.
எவ்வளவுதான் நிறைகள் சூழ்ந்திருந்தாலும் மனசுக்குள் ஏதோ ஒன்று ஆசை  உட்காரகூட முடியாமால் நின்றுகொண்டே சத்தம் போடுகிறது

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி  ஆளினும்கடல்மீது ஆணை செலவே
நினைத்து நினைத்து நமக்கு
பூர்த்தி செய்ய.........
ஏங்கிப்போக.........
மனசுக்குள் ஒரு பெரும் வரிசை அல்லும் பகலுமாக நீண்டுகொண்டே போகிறது.
“இன்னம் கொஞ்சம் அழகாய் பிறந்திருக்கக் கூடாதா?”
“ம்ம்.. அழகாய் இருந்து என்னபிரயோசம், இன்னும் கொஞ்சம் செவப்பா உயரமா இருந்திருக்கக்கூடாதா..... “மனம் ஏங்குகிறது.
“ எல்லாரும் நல்லா இருக்காங்க எனக்கு மட்டும் ஒண்ணுகெடக்க ஒண்ணு வந்துகிட்டே கெடக்கு சனியன்.”
“அதே படிப்புதான் அவன் எங்க இருக்கான்...... நான் எங்க நிக்கிறேன்..... தலை எழுத்துதான்”
நம் எல்லோர் மனசும் இப்படித்தான், ஏதோ ஒன்றுக்கு ஏங்கிக்கொண்டே
ஏங்கிக்கொண்டே...................

முகப்புத்தக தகவல் நல்லமனுஷி ஒருத்தியை  என்னில்  ஞாபகப்படுத்திவிட்டது
பீச் பக்கம் வாக்கிங் போய் வீடு திரும்புகிறேன். வீட்டு மொகனையில் இருக்கும் ஒரு சின்ன பள்ளிக்கூடத்தின் வாசலில் அழகான ஒரு ரங்கோலி கண்ணை நிறைத்தது. ரோஸ்கலர் தாமரைப்பூக்கள் அங்கங்கே சிதறி ஓடும் வண்டுகள் சிறு பறவைகள்.... நின்று ரசித்தேன்
"என்னம்மா பாக்குறிங்க.....?”
"பாரு என்னா அழகா இருக்கு........ இந்த ரங்கோலிய நீ  போட்டியா? “
“ஆமாம்மா ரங்கோலி வரையரது கோலம் போடுறதுல ரொம்ப ஆசம்மா. பேப்பர்ல வர்ரத எல்லாம் என் நோட்ல வரஞ்சு வச்சுக்குவேன்! இண்ணைக்கி எங்க ஸ்கூல்ல பெற்றோர் தினம் அதுக்குத்தான் பெசலா.....” நாணிச்சிரித்தாள்
கையக்குடு என்று கைநீட்டினேன். கைகொடுக்கும் கலைக்கு அவள் இன்னும் பழகவில்லை. சத்தில்லாத ஒரு கைகுலுக்கல் அவளிடமிருந்து!
அன்று ஒரு நாள் முன் வாசலைக்கூட்டிக்கொண்டிருந்தேன்.காய்ந்துபோன வில்வ இலைகளும் பழுத்துப்போன வேப்ப இலைகளும் கோலம் போட்டிருந்தன. தூக்க முடியாமல் ஒரு பையைத்தூக்கிக்கொண்டு ரோட்டில் போய்க்கொண்டிருந்த அதே பெண் நான் கூட்டிகொண்டிருப்பதைப்பார்த்து
"அம்மா நாண்ணா  பெருக்கட்டுமா? எங்க அந்த அம்மா இண்ணைக்கி வருலியா?" என்றாள்
 “ஆமாம்மா ஒரு நாளைக்கி லீவு வேணுண்ணுச்சு”
“அப்ப குடுங்கம்மா தொடப்பத்த”
 “வேணாம்பா இதுவும் ஒரு எக்சர்ஸைஸ் தானே” என்று சொல்லி சிரித்தேன்.
 கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்த அவள் “தூக்கிகிட்டு வந்தது கையெல்லாம் நோவுதும்மா” என்றாள்.
“கைய மாத்தி எடுத்துகிட்டு போம்மா” என்றேன்.
அப்போது அவள் செய்த ஒரு காரியம் என்னை அதிர வைத்தது. சோத்து கையால் தன் புடவையை உயர்த்திய அவள் “பாருங்கம்மா” என்று துண்டு பட்ட அரைக் இடக்கையை என் முன் நீட்டினாள்.

“கிராமத்துல வெட பிள்ளயா இருந்தப்ப இந்த ஆளு (ஸ்கூல் வாட்ச் மேன்) மேல பிரியமாயிட்டேன். சேதி அப்பா காது வரைக்கும் போயிருச்சு. அவுருக்கு அவமானம் தாங்குல. என்னா ஏதுண்ணு தெரியரதுக்குள்ள வெட்டருவாளால ஒண்ணு போட்டாரு பாருங்க, துண்டிச்சு உழுந்து போச்சு பாதி கையி!”
கதை சொல்லுவது போல இன்று அவளால் இந்த சம்பவத்தை சொல்ல முடிந்தது!
அதிலிருந்து ஸ்கூல் பக்கம் செல்லும் போதெல்லாம் அவள் எனக்கு வணக்கம் சொல்லுவாள். எனக்கு மட்டுமல்ல பிள்ளைகளை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர்களுக்கும் அதே மலர்ச்சிதான் பெரும்பாலான பெற்றோர் அதிகம் படிக்காதவர்கள். ஆனால் பள்ளிப்பொறுப்பில் இருக்கும் ஒருவர் அவர்களிடம் அன்பாக அரவணைத்துப்பேசுகையில் பூரித்துப் போய்விடுகிறார்கள். இவள் பள்ளிப்படிப்பை கூட முடித்திருப்பாளா என்பது சந்தேகம்தான். மனித வளத்துறை படிப்பையெல்லாம் அறிந்திருக்கமாட்டாள். ஆனால் அவள் அந்த சிறு பள்ளிக்குச் செய்யும் சேவை மகத்தானது. பெரிய சொத்து ஒன்றை நான் இவர்களுக்கு நான் கொடுக்கிறேன் என்ற உணர்வு மனதிற்குள் இல்லாமலேயே அநாவசியமாக கொடுக்கிறாள். பெருங்குறை ஒண்று அவள் வாழ்வில் இருக்கிறது என்ற நினைவைக் கடந்து அவள் உயர்ந்து நிற்கிறாள். தன்னை நாடுபவர்களின் உணர்வுகளைப் புரிந்து  கொள்ளும் பெருந் திறன் அவள் வசம்!!

நிதானமாய் சிந்திப்போமா?!