பொன் விழாக் கொண்டாட்டம் கன ஜோராகப்போய்க்கொண்டிருந்தது.
பழங்காலத்து மண மகளைப்போல கால் பார்த்து தடம் பதித்த 70வயதிற்குமேற்பட்ட அந்த எஞ்சினியர்கள்
கும்பல் வாடா போடா என இளமையோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்க “முட்டி லொட லொடண்ணு வலி
உயிரு போவுது, உள்ள போவச்சொல்லுராங்க....ஆனா அங்க கெடக்குற கொஞ்ச சேர்ல நம்மள மாரி
முடியாதவங்கதான் ஏற்கனவே உக்காந்திருக்காங்க” அலுத்துக்கொண்டே 70ஐ எட்ட முயலும் எஞ்சினியர்கள்
மனைவிமார் கூட்டம் செடிக்குக் கட்டியிருந்த
வரப்பில் நெட்டி நெருக்கி உட்கார்ந்திருந்தது.
பதிவு பண்ண நின்ற அந்த சிறிது
நேரம் கூட முடியாத ஒன்றாய் ஆகிப்போன வயசு........ ஏர்கண்டிஷன் ஹாலுக்குள் சுடச்சுட
கிடைத்த மசாலா டீயிலும் பஜ்ஜி போண்டாவிலும் தொடக்க நேர அலுப்பெல்லாம் போய் சிரிப்பும்
விசாரணையுமாய் அந்த இடமே சொவுஜன்னியமாய் ஆகிப் போயிற்று.சாயங்காலமாய் பாட்டுக்கச்சேரி
சூப்பர் சிங்கர்ஸ் குழு.அவர்கள் மேடைக்கு வந்ததுதான் தாமதம் ஏகப்பட்ட விசில்கள் ஓஹோவென்று பெரிய சத்தம்........ 70 வயசு பையங்களா
இவ்வளவு சத்தம்.....திரும்பிப்பார்த்தால் பெண்
பிள்ளைகள் கூட்டம்...... வருங்கால பெண் எஞ்சினியர்கள்...........!!
இரவு விருந்தின்போது இந்த பெண்கள்தான்
தலைப்புச்செய்தியாக பேசப்பட்டனர்
“கூத்தப்பாருங்களேன்... பொதுவா பையனுகதான் விசில்
அடிப்பானுக........ சத்தம் போடுவானுக... இண்ணைக்கி காலேஜில இந்த பொம்பள பிள்ளைக அடிக்கிற
கொட்டத்த பாருங்க.....
“ஆமா அவுங்க ராஜ்ஜியம் மாதிரில்ல
இருக்கு...இது கோ எஜுகேஷன் தானா இல்ல பொம்பள பிள்ளைக் காலேஜாண்ணு பாக்கிற எடமெல்லாம்
அதுகதான் மெஜார்ட்டியா நடை பழகுதுக.”
“ஆமா ஆண்ட்டி நாங்க இல்லாமா ஒரு
மேட்ச் இங்க நடக்கமுடியுமா இல்ல ஒரு ஃபங்க்ஷனத்தான் நடக்கவுடுவமா.... இந்த எடம் கள
கட்ட வேணாமா சொல்லுங்க?“
எங்கள் நடுவில் அமர்ந்து தாத்தா
படித்த காலேஜிலேயே படிக்கும் ஒரு பேத்தி வெகு
தெளிவுபடச் சொன்னாள்!!
“குடுத்து வச்சவங்க நீங்கள்ளாம்”
ஒரு பெரு மூச்சுவிட்டேன் நான்
“எங்க ஊர்ல இருந்த ஒத்த காலேஜுல பொம்பள பிள்ளைங்க
நாங்கள்ளாம் ஜெயில் கைதிகள்தான்........ நம்பர்
ஒண்ணு குடுக்காத ஒரே குறைதான்......”. என் பெரு மூச்சு இன்னும் நீண்டு போனது..... என் சோகக் கதையைக் கேட்க காதை தீட்டியவர்கள் என்னைச்சுற்றி......... நானும் தொடர்ந்தேன்
“பேரு பெத்த பேரு எங்க காலேஜுக்கு...........
“கேம்பிரிட்ஜ்ஆஃப் சவுத் இந்தியா”
ஏண்ணா கேம்பிரிட்ஜ்ல கேம் நதி
ஓடுறது மாதிரி எங்க காலேஜுக்கு முன்னாடி காவேரி ஆறு பெருக்கெடுத்து ஓடும்....... கேம்பிரிட்ஜ்ல
நடக்கிறமாதிரியே வருஷா வருஷம் படகுப்போட்டி இங்கயும் உண்டு. காவேரிக்கரை பூரா பெரிய
பெரிய மரங்கள்!! ஆனா தண்ணிய தொட்டு வெளையாடுற
அந்த மரங்கள்ளாம் பையங்களுக்குமட்டுந்தான் சொந்தம்....... அங்க அவங்க உக்காந்து படிக்கலாம்..... வெட்டியா
கதை அடிக்கலாம்...... மத்தியான கட்டு சோத்த ஜாலியா திங்கலாம்..........
ஆனா ஆள் நடக்குற அந்த காவேரிப் பாலத்துல தலைய குனிஞ்சுகிட்டு நடக்கறப்ப
பாக்குறமே அந்த காவேரிதான் எங்குளுக்கு சொந்தம். பாலத்த உட்டு காலேஜுக்குள்ள நொழஞ்சிட்டா
பிரிட்டிஷ்காரங்கட்டிய அத்தே பெரிய இடத்தில அக்கம் பக்கம் பாக்காம நேரா பெண்கள் அறைக்குள்ள போய் நொழஞ்சுக்க வேண்டியதுதான்
எங்க கடம. அந்த அறை கரக்டா பிரின்சிபால் அறையிலருந்து ரெண்டாவது. அதுக்கு மொத அறை தப்பித்தவறி
இந்த காலேஜுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி வரும் பெண் விரிவுரையாளர்களுக்கு......
இப்படியா காலேஜுல நொழஞ்ச ஒடனே
மொதல் பாதுகாப்பு வளையம் கெட்டியா போட்டுடுவாங்க!
“ஆண்ட்டி நிஜம்மாவே கைதிகள் மாரித்தான் இருந்திருக்கிங்க..”
இன்னும் கதய முழுசாக் கேளும்மா......
அசெம்பிளி நடக்கிறப்ப..... இல்ல கொடியேத்துறப்ப பையங்க
மட்டுந்தான் வரிசயில......... நாங்க எங்க ரூமுக்கு வெளியே இருக்குற வெராண்டாவுல
யாருக்கு வந்த விருந்தோண்ணு நிப்போம்....... அப்புடி நிக்காம உள்ளயே உக்காந்திருந்தாக்
கூட யாரும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க........
பத்து மணிக்குக் க்ளாஸ் தொடங்குறப்ப
பொம்பள பிள்ளைக வகுப்பறைக்கு வெளியே கும்பலா நிண்ணு பேசிக்கிட்டு இருப்போம்........
உள்ள போவாம என்னாத்துக்கு வெளிய நிண்ணு”.......ஒங்க மனசுக்குள்ள இந்தக் கேள்வி கட்டாயம்
வரும்.ஆனா விதி முறையே அதானுங்க....! லெக்சரர் வகுப்புக்குள்ள நொழயிறமுட்டும் பொம்பள
பிள்ளைக நாங்க வெளியதான் நிண்ணாவுணும்.ஏண்ணா கிளாசுக்குள்ள பசங்கள்ள இருக்காங்கள்ள...!!
இது ரெண்டாவது பாதுகாப்பு வளையம்...... பொம்பள பிள்ளைக சீட்டு கதவுக்குப்பக்கத்துலயே
இருக்கும். அந்த வரிசையில பின்னாடி காலி சீட்டு இருந்தாக் கூட பையங்க அங்க உக்காரக்கூடாது.
இது மூணாவது வளையம்....அதே மாதிரி லெக்சர் முடிச்ச ஒடனே பொம்பள பிள்ளக கிளாச வுட்டு
லெக்சரருக்கு முன்னாடி வெளிய வந்துடணும்....... பொம்பள பிள்ளைக எல்லாம் வெளிய போயிடுச்சாண்ணு
பாத்துட்டுதான் லெக்சரர் வெளிய கெளம்பணும்......இது நாலாவது வளையம்....
இப்ப ஒங்க சிஸ்டம் எப்படிண்ணு
எனக்குத்தெரியில... அப்பல்லாம் ஸ்கூல் மாதிரி
நாங்க ஒரே வகுப்புல உக்காந்திருக்காம
ஓவ்வொரு கிளாசுக்கும் மாரி மாரி வெவ்வேற எடத்துக்கு போவோம். எப்புடி போனாலும்
இந்த சம்பிரதாயம் மட்டும் காலேஜை சுற்றி சுற்றி வந்து வளையம் வளையமா நெருக்கு போட்டுகிட்டேதான்
இருக்கும்.”
“ஒங்களையாச்சும் காலேஜுல சேத்துகிட்டாங்களே.......
அது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுங்களா ஒங்குளுக்கு..... இத்தினி பொம்பள பிள்ளகபடிக்கிற
இதே காலேஜுல நானு ஒரு எஞ்சினியரிங் சீட்டுக்கு என்னா பாடுபட்டேன் தெரியுமா........?”
இன்னொரு பெரிய பெருமூச்சு என்னுடையதைத்
தொடர்ந்தது..... கதை கேட்கும் ஆவலில் சுற்றியிருந்த கூட்டம் பெருகிப் போயிற்று......
“எல்லா பாடத்திலயும் டிஸ்டிங்ஷன்
மார்க்குங்க..... அப்ளிகேஷன் போட்டேன்.. ரிஜெக்ட் ஆகிடுச்சு...... உடுறதா இல்ல நானு.......
பிரின்சிபால பாத்தே ஆவுணும்ணு ஒரே புடியாய் நிண்ணேன்”
“இது பசங்க படிக்கிற காலேஜும்மா......
ஒனக்குத்தெரியாதா.....?”
“சார் அப்ப பொம்பளைகளுக்குண்ணு
எஞ்சினியரிங் காலேஜ் எங்க இருக்குண்ணு சொல்லுங்க... எஞ்சினியரிங் படிக்க ஆசப்படுற என்னமாதிரி
ஆளுங்க எங்க போறதுண்ணு சொல்லுங்க.......?”
“ நீ சொல்றதெல்லாம் சரிதாம்மா..... ஆனா எதுக்கும்மா ஒனக்கு இந்த எஞ்சினியரிங் படிப்பெல்லாம்......?
இன்னம் மூணு வருஷத்துல வீட்ல கலியாணம் பண்ணி வச்சுருவாங்க........ நீங்க காலேஜ் படிக்கிறதே
கலியாண மார்கெட்டுல பெரிய பதவியில இருக்கவங்க கெடைக்கிறதுக்குத்தானே....? இதுக்கு என்னாத்துக்கு எஞ்சினியரிங் படிக்கிணும்
... சொல்லு பாக்கலாம்...? இந்த பார் புதுசா ஹோம் சயின்ஸ் காலேஜெல்லாம் வந்துருக்கு
அங்க போய் நீ சேந்துக்க.. நீ கலியாணம் பண்ணி
போற எடத்துல மாமியார் மெச்சிய மருமகளா இருக்கலாம்......... ஹோம் சயின்ஸ் காலேஜில பையங்கள
சேக்கிறமா என்ன..? சொல்லு ..... அது மாரிதான் எஞ்சினியரிங் பையங்க சப்ஜெக்ட்டும்மா“
“நீங்க அவுர சும்மாவா உட்டிங்க....?” கூட்டம் அவங்களை உசுப்பேத்திவிட்டது
“நான் அவுர உட்டுருவனா என்ன...?
கோவம் எனக்குத்தலைக்கு மேல ஏறிடுச்சு ஆனாலும் காரியத்த சாதிக்கிணுமே.... இன்னொரு தினுசில
தர்க்கத்த ஆரம்பிச்சேன்”
“ நான் அந்த மாதிரி ஆளுகள்ள சேத்தி
இல்ல சார்...... மெடிசன் மாதிரி எஞ்சினியரிங்கும் ஒரு ப்ரொபெஷனல் கோர்ஸ்தானே? அங்க
ஆம்பளக பொம்பளைக எல்லாம் சேந்துதான படிக்கிறாங்க அவங்கவங்களுக்கு பொறுப்புண்ணு ஒண்ணு
இருக்குல்ல சார். என்னோட வெறி எஞ்சினியரா ஆவுணும்கிறதுதான். தயவு பண்ணுங்க சார்.......”
“சரியாத்தான் அவுர மாட்டிஉட்டுட்டிங்க.......”
“நீங்க வேற போங்க... நான் விடாக்
கண்டண்ணா அவுரு கொடாக்கண்டனா இருந்தாரு.”
“ஒன்னோட பேசி என்னால ஜெயிக்க முடியாதும்மா......
ஆனா என் நெலமய நீ கொஞ்சம் யோஜன பண்ணிப்பாரு......... ஒனக்குண்ணு
நான் ஒரு டாய்லெட் மொதல்ல கட்டியாவுணும்... ஒன்னோட பேச கொள்ள ஒரு பொண் விரிவுரையாளர்
கூட இங்க இல்லம்மா......முக்கியமான இன்னொண்ணு இருக்கு......... இந்த 200 வெடப்பசங்கமத்தியில
ஒன்ன கண்காணிக்க நான் ஒரு செக்யூரிட்டில்ல போடணும்.......எனக்கு மேல இருக்குற நிர்வாகக்
குழுவ நான் என்ன சொல்லி சமாளிக்கிறது?”
சொல்லிகிட்டே இருந்தவரு ரெண்டு
கையையும் சேர்த்து எனக்கு ஒரு கும்புடு போட்டு “அம்மா தயவுசெய்து இந்த இக்கட்டிலருந்து
என்ன காப்பாத்தும்மாண்ணுட்டாரு”
“எனக்கு என்னா பண்றதுண்ணே தெரியில........
இப்பயா இருந்தா பேப்பர்ல இல்ல டிவியில போட்டு கிழி கிழிண்ணு கிழிச்சிருக்கலாம்,”
“அப்பறம் என்னா பண்ணினிங்க?”
“என்ன கலியாணம் பண்ணிகிட்டு போறத்துக்கு ஒனக்கு ஏன்
பெரிய படிப்புண்ணு” கேட்ட அந்த ஒரு வார்த்த என்ன சீண்டி உட்டுடுச்சு........... என்னத்தையோயோ
படிச்சு படிச்சு பாங்க்ல பெரிய பொறுப்புல......... இண்ணைக்கு கூட அங்க கன்சல்டண்டாத்தான்
இருக்கேன்......
“அந்த ஆளு ஒங்குளுக்கு எடம் குடுக்காதது
ஒரு வகையில நல்லதுதாங்க என்ஜினியராகி மெஷின்கள கட்டிகிட்டு மாரடிக்கிறதுக்கு பதிலா
மனுஷங்களுக்குல்ல நீங்க சேவை செஞ்சிருக்கிங்க....சந்தோஷப்படுங்க...” மெஷினோடு மெஷினாய்
ஊர் ஊராகச் சுற்றிய அலுத்துப்போன ஒரு என்ஜினியர்
பெண்டாட்டி அழகாக ஒரு முத்தாய்ப்பு வைத்தார்!
ஒரு அனுபவத்திற்குள் இன்னொரு உள் அனுபவம், அட்டகாசம் மேடம் .
ReplyDeleteஅன்பு ஆல்பிரட் படித்து மகிழ்ந்ததற்கும் பகிர்வுக்கும் நன்றி
ReplyDelete