அந்த கல்லூரி ஆடிட்டோரியம் அன்று காலையில் சுறு சுறுப்பாய் இருந்தது. சயின்ஸ் கிளப் பிரசிடெண்டும் செக்ரட்டெரியும் ஓடியாடி எல்லாம் சரியாக இருக்கிறதா என செக் பண்ணிக்கொண்டிருந்தனர். “இண்ணைக்கி லெக்சருக்கு யுகே லிருந்து ஒரு லேடி வர்ராங்கப்பா.... காலமகாட்டியும் என்னா போர் அடிக்கப்போறாங்கண்ணு தெரியில........
நாந்தான் நன்றி உரை.. கடைசிமுட்டும் கண் குத்திப் பாம்பா கவனமா இருக்கணும்....... இந்த சாரிய கட்டறத்துக்குண்ணு வேற காலம காட்டியும் எழுந்திருச்சாச்சு” கைகளைத்தூக்கி சோம்பல் முறித்தாள் ஒருத்தி
"
கவலப்பாடாதே.. நான் பக்கத்தில இருக்கேன்ல...... அப்புடி இல்லாட்டியும் அங்க பாரு மொத வரிசயில யாரோ ஒரு ‘என்த்து’ ஜூனியர் பென்னும் கையுமா ஆளுக்கு முன்னாடி ஆஜர் குடுத்துருக்கு ..... வேண்டியத அதுகிட்டேருந்து அபேஸ் பண்ணிடுவோம்.......”
சிரிப்பும் கும்மாளமுமாக இருவரும் விருந்தாளியை வரவேற்க ரிசப்ஷனை நோக்கி நடந்தனர்.
விருந்தினரை வரவேற்றார் சயின்ஸ் டிபார்ட்மெண்டின் தலமை
"அன்பு நண்பர்களே மாணவிகளே இன்றைய விருந்தினர் நம் கல்லூரியின் பழைய மாணவி என்பதில் எனக்கு பெருமை. இவரது தனது பிஜி ரிசர்ச் ப்ராஜெக்ட்டின் ஒரு கண்டுபிடிப்பு இவருக்கு தமிழ் நாட்டின் இளைய விஞ்ஞானி விருதை வாங்கித்தந்தது. கல்லூரியின் அந்த வருடத்திய சிறந்த வெளி செல்லும் மாணவி விருதையும் அவர் வென்றிருக்கிறார். இதற்கு கிரீடம் வைத்தாற் போல இங்கிலாந்தில் தொடர்ந்து ரிசர்ச் செய்ய ஆங்கில அரசு அவருக்கு ஒரு ஸ்காலர்ஷிப்பையும் வழங்கியது. இன்று நம்முன் அவர் தனது வேலையைப்பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்ள வந்திருப்பது நாம் செய்த அதிர்ஷ்டமே. இவர் பேச்சு நம் மாணவியர் பலரை கட்டாயம் ஊக்குவிக்கும். என் அருமை மாணவியே உங்கள் உரையை இப்போது தொடங்குங்கள்” மலர்ந்து கூறினார் அவர்!
விருந்தாளி பேசத்தொடங்கினார் “ இவ்வளவு புகழ்ச்சிக்கு எனக்குத்தகுதி இருக்கிறதா என்று எனக்குப்புரியவில்லை. எனினும் என் கல்லூரி மேடையிலேயே நான் பேசுவது எனக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் உரையைத்தொடங்குமுன் என் மாணவ நண்பர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பேசப்போகும் கருத்து விஞ்ஞான பூர்வமானதுதான்…. சிரிப்பொலி நிகழ்ச்சி அல்ல…… ஆனாலும் உங்களை நிச்சயமாக போர் அடிக்கமாட்டேன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்று சொன்னவர் நம் பெண்கள் பக்கம் லேசாகத்திரும்பி கண்ணடித்தார்.
விருந்தாளியைக்காணோம் என்று சிலர் வெளியே காத்திருக்க உள்ளே வந்தவர்களோ “அட இங்கேல்ல இருக்காங்க” என்று சொல்லவும் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த அந்த சின்னப்பெண்ணை ப்ரபெசர்களும் மற்றவரும் ஓடி வந்து அணைத்து மேடைக்கு அழைத்துச்சென்ற போதே பிரசிடெண்ட் செக்ரெட்டரி இருவரின் நாடி நரம்பெல்லாம் ஒடுங்கிப்போனது! இப்போது இந்த கண்ணடிப்பும் சேர்ந்த கொண்டாட்டத்தில் அவர்கள் பிழைப்பு கோலாகாலமாகத்தான் ஆகிப்போயிற்று!!
"
என்னுடய காலேஜ் என்னுடைய ஆடிட்டோரியம்” என்ற உரிமையிலே நேரத்திற்கு முன்னேயே வந்த விருந்தாளி காலை ஆட்டிக்கொண்டு முன்னிருக்கையில் அமருவது நல்லதொரு விருந்தாளியின் பாங்கு இல்லை என்பது ஊரரிந்த ஒரு உண்மையே...! பாவம் அந்த பெண்கள்... இப்படிப்பட்ட ஒரு விருந்தாளியிடமா அவர்கள் மாட்ட வேண்டும்?......ஆனால் பகலிலும்பக்கம் பார்த்துப்பேசணும்ங்கிற பழமொழியை அன்று மறக்காமல் இருந்திருக்கலாம்......!
எப்படியோ அவர்களுடன் தனியாகப்பேச ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திகொண்டவர்கள் காலில் விழாத குறையாய் மன்னிப்பை வேண்டினார்கள். “கவலப்படாதீங்க ஒங்க எடத்துல நாங்கூட அப்படி பேசியிருக்கலாம்...... நம்ம சைஸ் எண்ணைக்குமே ஸ்டுடெண்ட் மாரி இளம வரமில்ல வாங்கிகிட்டு வந்திருக்கு....!” சிரிப்புடன் அவர்களை தட்டிக்கொடுத்து அனுப்பி வைத்தார் அந்த அபூர்வ விருந்தாளி!
No comments :
Post a Comment