இன்றைக்கு நீங்கள் படிக்க இருப்பது என் அருமை அக்காவின் ஒரு சீரிய கருத்தின் வடிவாக்கம். அக்காவின் எழுத்துக்கள் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும். “கம்ப்யூட்டரில் ஒண்ணு போடுறியாம்மா?” என்ற அவர்கள் விருப்பம்தான் அவர்களது 80வது பிறந்த நாளில் (ஆகஸ்ட்5) உங்கள் முன்!
அடிப்பாவி மகளே........ நாளிதழ் வாசித்துக்கொண்டிருந்த மாமனாரின் சத்தம் கேட்டு என்னமோ ஏதோ என
ஓட்டமாய் வந்தாள் மருமகள் “இந்த அநியாயத்தை கேட்டியா அம்மா, 10வது பரிட்சையில
500க்கு 450 வருமுண்ணு பாத்திருக்கா ஒரு பொண்ணு! 371ண்ணுதான் வாங்கியிருக்காங்கறதப்பாத்துட்டு
தூக்குல தொங்கிட்டாளாம். அறிவு வேணாம்.....? இன்னொருத்தன பாரு அவங்கேட்ட குரூப்பு
கெடக்கிலண்ணு தற்கொல பண்ணிகிட்டு
இருக்கான்…….. தன்னம்பிக்கை குடுக்காத இந்த படிப்பு
எதுக்கும்மா...... பரிட்ச எதுக்கும்மா....... மார்க்குதான் எதுக்கும்மா....?
மார்க் நெறயா வாங்கிபுட்டா அவன் பெரிய
கெட்டிக்காரனா சொல்லு...... மனப்பாடம் பண்ணினத போய் கக்கி பிட்டு வர்ரானுக.
பிள்ளைகளுக்கு படிக்கிறத புரிய வைக்கறதுதான் வாத்தியாருகளுடைய மொத வேல.... அதுக
மனசுக்குள்ள கருத்துகளெல்லாம் பசு மரத்துஆணியாப் பதியணும்.அத உட்டுபுட்டு காலையில
பெசல் கிளாஸ் சாய்ங்காலம் பெசல்கிளாசு இல்ல பொட்டி படுக்கையோட பள்ளிக்கூடத்து வா
படிச்சி படிச்சி ஒப்புச்சுக்கிட்டுக்கெட... நம்ம பள்ளிகூடத்துல இண்ணைக்கி நடக்குற
கண்றாவிக்கூத்து இதுதான்”
”தத்துவம் வேண்ணா நீங்க பேசலாம் மாமா. இண்ணைக்கி எங்கயும் மார்க்தானே பேசுது.
நல்லா படிச்சாண்ணா அப்பா இல்லாத இந்த புள்ளய கடன் ஒடன வாங்கி இல்ல நிலம் நீச்சல
வித்து கொண்டு மேல படிக்க வச்சி கம்பூய்ட்டர் எஞ்சினியரா ... ஆக்கி........
அவன் கை நெறய சம்பளம் வாங்குறத
பாக்கலாம்ணு நம்ம நெனச்சா... இந்த கழுத கொறச்சலாவுல்ல மார்க் வாங்கி
தொலச்சிருக்கு....
சரி அந்த பரிச்சையெல்லாம் திரும்ப
எழுதிப்பாருடா... நெறயா மார்க்
வருமில்லண்ணு சொன்னா அவன் காதுலய வாங்க மாட்டேங்குறான்.”
அட நீ வேற சும்மா... கெடம்மா......... எவனப்பாரு...... நான் கம்பூய்ட்டர்
எஞ்சினியராஆவப்போறேன்...... கம்பூய்ட்டர் எஞ்சினியரா ஆவப்போறேங்கிறான் எவனோ
ஒருத்தன் சூடு போட்டுகிட்டாண்ணா இங்கிட்டு
ஊரே இழுத்து இழுத்துல்ல சூடு போட்டுகிது .......... ஏண்ணா காசு..... காச அங்குட்டு
கொட்டிக்குடுக்குறானாம்..... கம்பூய்ட்டர்ல ஒனக்கு தெறம இருந்தா...... அத
எடுத்துப்படி... காசு வருதேண்ணு அதுலப்போயி உழுவதே. நாம செய்யுற தொழில்ல சந்தோஷம் வேணாமா...... ஒந்தெறம என்னா.... அதுல
முழுமூச்சாப்போ... பணம் ஒன்பின்னாடியே வரும். பணத்தமுன் வச்சு படிக்காதே.... அத
யஜமானனா ஆக்கவே ஆக்காதே “
“அப்ப ஒங்க பேரன் இந்த
நெலத்தோடதான் மாரடிச்சுகிட்டு
கெடக்கணுமமுண்ணு ஆசப்படுறிங்களாக்கும்.........ஒழச்சவன் கணக்குப்பாத்தா ஒழக்கு கூட
மிஞ்சாதுண்ணு..... வாழ்ந்து அனுபவிச்சதுதானே...... அந்த அடுத்த தெருவுல ஒரு
பைத்தியக்காரபுள்ள ஆனந்து வெளி நாட்டு வேலய உட்டுபுட்டு வருசக்கணக்கில வந்து குந்தி
கெடக்கே அது பண்ற வேல இதெல்லாம்......”வாங்கடா தம்பிகளா... இயற்க வெவசாயித்தில
எறங்குங்கடாண்ணு ஊர் பூரால்ல சொல்லிகிட்டு திரியுது....
எதுத்த ஊட்டு குருமணி இருக்கானே........
அந்த ஊட்டுக்கே அது ஒத்த புள்ள.... அவன் ஆயியும் அப்பனும் மேல படிடா படிடாண்ணு தல
வள அடிச்சுக்கிறாங்க. மார்க்கும் நெறயாத்தான் வாங்கி வச்சிருக்கான். ஆனா அந்த பய கல்லுளி
மங்கனாட்டம் ஆனந்து அண்ணன் சொல்றதுதான் சரிண்ணு ஒத்த காலுல நிண்ணுகிட்டுகெடக்கு
ம்...ம்ம்ம். தலயெழுத்த ஆரு மாத்த முடியும்.......? அம்மாக்காரி அலுத்துக்கொண்டாள்
மாமனாரோ “ நல்ல காரியம் பண்றாம்மா குருமணிப் பய........ அவனோட தாத்தாவப்பத்தி
ஒனக்கு ரொம்பத்தெரியாது. எல்லாரும் 50 மூட்ட அறுக்குற வெடத்தில அவன் இன்னம் 10
மூட்ட கூடத்தான் மகசூல் பண்ணுவான்..... அப்புடி ஒரு கையி...... அப்புடி ஒரு
ஈடுபாடு... புலி எட்டடி தாண்டுனா புலிக்குட்டி பதினாறு தாண்ட வேணாமா......
அந்த ஆனந்து பையன் சொன்ன ஒரு அருமையான வெசயத்தை கேளேன்..... நெறயா வெளி நாடுகள்ள படிப்பு முடிஞ்சவொடனே 18
வயசுக்கு மேம்பட்ட
ஆம்புளப்பிள்ளைகளெல்லாம் ஒரு வருசத்துக்கு கட்டாயமா ராணுவத்தில
வேல செய்யுணுமுண்ணு சட்டமே இருக்காம். ஆனந்து சொல்லுது அது மாதிரியே நம்மளப்போல வெவசாய
நாட்டுல படிப்பு முடிச்ச ஒடனே ஆம்புள பொம்பளண்ணு வித்தியாசம் இல்லாம எல்லாப்பிள்ளைகளும்
ஒரு வருஷம் கட்டாயம் வெவசாயம் பண்ணுறதுக்கு ஒரு சட்டம் வந்துச்சுண்ணா நம்ம நாடு இங்க இருக்கவங்களுக்கு மாத்திரம் இல்ல இந்த ஒலகத்துக்கே சோறு போடும் தாத்தாங்குது.”
“வாப்பா ஆனந்து.. வா வா.... ஒனக்கு நூறு வயசுதான் போ....... ஒங்க தாத்தா
இப்பதான் ஒன்னப்பத்தி பேசிக்கிட்டு இருந்துதாக...... நீ வந்து நிக்கிற
“ நல்லா இருக்கிங்களா அத்திங்களோ இந்த கற்பூரவல்லி சீப்ப அம்மா ஒங்குளுக்கு
குடுத்துட்டு வரசொல்லிச்சு... தேன் மாதிரி
ருசி...... நம்ம நத்தத்து பழம்”
“ஆமா லோகா மாதிரி படிச்ச பிள்ளைகளுக்கு
அம்புட்டு கொள்ள படிச்ச நீயி நல்ல
புத்திமதி சொல்லுவண்ணு பாத்தாக்க இதுகள இங்கனயெ வளச்சு போடுறதுக்கே பாத்துகிட்டு
கெடக்கியே .....நம்ம பிள்ளைகல்லாம் மின்னுக்கு வர வேணாமா?
“அத்திங்களோ செத்த நேரம்
என் கதயத்தான் கேக்குறிங்களா..... ஒரு மூணு வருஷம் கைக்கும் வாய்க்குமாத்தான்... அவதிப்பட்டேன்.
சுத்தி இருக்கவனெல்லாம் பண்ணின பரிகாசம்....... யப்பப்பா..... “ஏட்டுச்சொரக்கா
கறிக்கு ஒதவாது தம்பி நாங்க தலமொற தலமொறையா பண்ணி கிழிக்காதத அமே.......ரிக்காவிலேர்ந்து
ஒடியாந்து என்னத்த கிழிச்சிடப்போறண்ணாங்க.......
ரசாயன ஒரத்துல பாழ் பட்டு கெடந்த நெலத்த
சீர் பண்ணவே 3 வருஷம் ஆயிப்போச்சு. இப்ப பாருங்க எல்லாமே நமக்கு லாபமாத்தான் நிக்குது. ஒங்க பையன்
லோகநாதன். என் கால சுத்தி கிட்டேதான் கெடக்கான். மார்க்கு கெடக்கு கழுத......
அவன மாதிரி நீரோட்டம் கணிக்க இந்த சுத்து பக்கத்தில யாராச்சும் இருக்காங்களா
சொல்லுங்க்க பாக்கலாம்?
அவனுக்கு என்ன மாதிரி மொத மனுஷனா
உழுந்து எந்திரிச்சு கத்துக்க வேண்டிய அவசியமே இல்ல. என் அனுபவம் அவனுக்கு ஒரு
மொதலீடு....... நம்மளே ராஜாவா
சம்பாரிப்போம்...... நம்ம ஊரு நல்ல காத்த வாங்கிகிட்டு ஜாலியா இருப்போம். என்னா அத்திங்களோ ஒங்க
பையனுக்கு கை நெறயா பணம் அதுவும் எப்புடி...... ஒங்க பக்கத்தில ஒக்காந்துகிட்டே... என்னா
சரிதானா சொல்லுங்க.....? அவனப்பத்தி நீங்க கொஞ்ச நாள்லய தெரிஞ்சக்க போறிங்க
பாருங்க.....
தாத்தா இந்தப் பேச்சில் மயங்கித்தான் போனார்.
”ஆமா ஆனந்து இண்ணைக்கி இந்த மதிப்பெண்ணுங்கிற பூதம் நம்ம நாட்ட வளச்சிப்போட்டு
கழுத்த நெருச்சிக்கிட்டு நிக்கிது........ அது துண்டக்காணாம் துணியக்காணாம்னு எண்ணைக்கி
ஓட்டம் புடிக்குதோ அண்ணைக்கிதான் நம்ம நாட்டுக்கு விடிவு வரும்..... நெறய வாங்கறவனும் கெட்டிக்காரந்தான் கொறச்சி
வாங்கறவனும் கெட்டிதான்......நீ என்னா சொல்ற.......?
“பொடரியில பொளேர்னு ஒண்ணு
போட்டுடிங்க தாத்தா....... டிராக்டர கொஞ்சம் சரிபண்ணனும் லோகநாதன் கைய வச்சாண்ணா
அது நிமிஷத்துல கெளம்பி நிக்கும்...... அவனக்கூட்டிகிட்டு போரதுக்குதான் வந்தேன்.
அப்புடியே நிண்ணாச்சு”
ஒரு பெரிய நிம்மதியுடன் இனி அம்மாவுடைய
மார்க அரிப்பே இருக்காது என்று லோகநாதனும், புரிஞ்சமாரியும் இருக்கு கொஞ்சம்புரியாத
மாரியும் இருக்கு என்று அம்மாவும், இதைவிட நல்லது என் பேரனுக்கு ஏதுமில்லை என்று தாத்தாவும் அவரவர்
உணர்ச்சிகளில் லயித்துப்போயிருக்க நம் நாட்டுக்கு நல்லது செய்ய இன்னொரு பொக்கிஷம்
இன்று என் கைவசம் என நம் இயற்கை விவசாயி
மகிழ்ந்து போனான்!!
No comments :
Post a Comment