
"சாமான் ஏதும் பிரச்ன குடுத்ததுண்ணு வச்சிக்குங்க... நேரா....... நம்ம கடைக்கி எடுத்துட்டு வந்துருங்க..... இல்ல இந்த நம்பருல கூப்புட்டா அவுங்களே நேரா வந்து ஒங்க வீட்டுக்கு வந்து சரி பண்ணி குடுத்துடுவாங்க.. கவலையே படாதிங்க....."
இதுக்கு மேல வாழ்க்கையில என்ன உத்திரவாதம்
வேண்டிக்கெடக்கு?!! சந்தோஷமாக வீட்டிற்கு வந்தோம்...

"நான் சொல்லியிருக்க மாட்டேனே....?
நாங்கள் இரண்டு பேர் பத்து நாட்களுக்கு
முன் காது கொடுத்துக்கேட்டதை இல்லை என முழுப்
பூசணிக்காயை சோற்றுக்குள்ளே திணிக்கிறாள்!
"பொருளை எப்படியாவது விற்க வேண்டும்.
எனக்கு வர வேண்டிய ஊக்கத்தொகையை நான் அடைய
வேண்டும்" என்ற உந்துதலில் அவள் அந்த வார்த்தையை கோர்த்திருப்பாளோ? அவள் ஞானம் அவ்வளவுதான்.....
"நீங்க இந்த நம்பருக்கு போன்பண்ணுங்க......
டோல் ஃ ப்ரீதான்." எனக்கு சமாதானமாய் ஒரு நம்பரை நீட்டினாள்.
இந்த டோல் ஃ ப்ரீஎன்கிற சிக்குகோலத்திற்குள் நம்மில் பலர் பல் வேறு விஷயங்களுக்காக மாட்டியிருப்போம். நம்பரை
அமுக்கியவுடன் நமக்கு வணக்கம் கூறி நாம் அவர்களுக்கு
எவ்வளவு முக்கியமான ஒரு வாடிக்கையாளர் என ஐஸ்
வைத்தபின் நம் மொழித்திறனை ஆராயும் பொருட்டு 1,2,3,4 அமுக்கி விளையாடச்சொல்வார்கள்.
"நீங்கள் வரிசையில் நிற்கிறீர்கள் தயவு செய்து காத்திருங்கள்." என்ற குரல்
கேட்டவுடன் விருப்போ வெறுப்போ இன்றி விட்டேத்தியாய் மேற்கித்திய இசையிலும், 'காத்திருங்கள்'
என்ற அறிவுரையிலும் நாம் காத்துக்கிடந்தபின்
"உங்க கம்ப்ளென்ட்ட சொல்லுங்க." என்ற குரல் ஒலிக்கிறது. விவரமெல்லாம் சொல்லி
"நீங்கள் வீட்டிற்கு உடனடியா ஆள் அனுப்பி வைத்தால் நல்லா இருக்கும்... அட்ரஸ்
தரட்டுமா?" என்கிறேன்.
"இதுக்கெல்லாம் ஆள் அனுப்பமாட்டோம்
மேடம். நீங்க நேரா எங்க ரிப்பேர் சென்டருக்குத்தான் எடுத்து கிட்டு போகணும்."
பொய்யிலே பிறந்த அந்த பெண் இன்னொரு பொய்யோடு என் கண்ணுக்கு முன்.... இந்தக் கடையில் இன்னொரு நாள் காலெடுத்து வைக்கிறனா
பாரு..." மனசுக்குள் கங்கணம்
"அந்த ரிப்பேர் சென்டர் எங்க இருக்கு?"
எரிச்சலான கேள்வியை போனில் எழுப்புகிறேன். விவரம் சொல்லுகிறது அந்தக்குரல்
"உங்கள் பேர் சொல்லுங்க குறிச்சு
வச்சுக்கிறேன்."
"பேர் வேண்டியதில்லை மேடம் இதே
நம்பர மட்டும் உபயோகிச்சுக்குங்க."
சிக்கு கோலத்தில் நம்மை மாட்டி விட்ட அந்தக்குரல் என்ன அழகாக தப்பித்துக்
கொள்கிறது பாருங்கள்?!
ரிப்பேர் சென்டரின் கதவு எண்ணை தெருவின்
இருபுறமும் எண்ணி எண்ணி அந்த துக்குளியோண்டு கடையைக் கண்டு பிடித்தது பிரம்ம ப்ரயத்னம்தான்!
ஆனால் அங்கு மனிதர்கள் முகம் பார்த்து நமது குறைகளைக் கேட்டது மனதுக்கு இதமாக இருந்தது!!
இது இன்னொரு கடை.... "போன் ஒரே
கமரலா இருக்குப்பா பேசறது ஒண்ணும் புரியில ஒரே எரச்சலா இருக்கு ... மாத்தி குடுப்பிங்களா?" அதிர்ஷ்டவசமாக கடை ஓனரின் பெர்சனல் நம்பர் என் வசம்...
"மேடம் இப்ப வர்ற போனெல்லாம் 'யூஸ்
அண்ட் த்ரோதாங்க'
ஒரு காலத்தில் வீட்டிலே சுகமே வசித்துவந்த ரேடியோ, ஈசிச்சேர், ஃ பேன் மாதிரி இந்த போனும்
சுகவாசியாய்த்தான் வெகு நாள் வசித்து வந்தது.
"கை நெறையா ... ..." ங்கிற மாதிரி இப்ப வீட்டிலே வேண்டாத போன் நாலஞ்சு.....! இதையெல்லாம்
தூக்கி எறிவதா.....? எறிந்தால் பிளாஸ்டிக்
மாதிரி இதுவும் பூமியை மாசு படுத்தி விடுமோ என்ற மன உதைச்சலில் என் வீட்டு ஷெல்ஃபின்
ஒரு ஓரத்தில் காவல்தெய்வங்களாய் இவை கட்டியம் கூறுகின்றன!
வீட்டிற்கு வந்த நண்பர் இந்த சம்பவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
வயதான அம்மா...... வெளி நாட்டில் குடி கொண்ட மக்களோடு வாழுவதை விரும்பாத சென்னையின் சுகவாசி! அவ்வப்போது பிள்ளைகள் சென்னை வருகையில்
அம்மாவின் வசதிகளை நவீனமாக்கி விடுவார்கள்.
இந்ததடவையும் அப்படித்தான் ஒருபுது வரவு
40" டி.வி. ஆனால் அம்மாவுக்கு இதிலெல்லாம் அவ்வளவு ஆர்வமில்லை. அவர்களுக்கு பென்ஸ் காரும் பழைய அம்பாசிடர் காரும் ஒண்ணுதான்.......
பிரச்சினை இல்லாமல் சேர வேண்டிய இடத்திற்கு கூட்டிக்கொண்டு போகும் காரியத்தை அது செய்கிறதா? அவ்வளவுதான் வேண்டியது என்று நினைக்கும்
பழமைவாதி!
ஒரு நாள் அவர்கள் டி.வி பார்த்துக் கொண்டிருக்கையில்
படால் என்ற சத்தத்தோடு டிவி நின்று போனது! வயசான அவர்கள் சிக்குக்கோலத்திற்குள் மாட்டிக்கொண்டு
டோல் ஃப்ரீ நம்பர்களோடு விளையாடி அலுத்துப்போய் உளைச்சல் அற்ற ஒரு சிறப்பான காரியத்தை
செய்தார்களாம்.
"வாங்கினவர்கள் வந்து கணக்கு தீர்த்துக்
கொள்ளட்டும்" என புது டிவியைத் தூக்கி எட்ட வைத்துவிட்டு தூசி தட்டிய பழசில் எப்போதும் போல தனக்குப் பிடித்ததை ரசிக்க ஆரம்பித்து
விட்டார்களாம்!
தண்ணீர் விஷயத்திற்கு வருவோம் சென்னையின்
போர் தண்ணீர் கசக்கும் உப்பாக இருந்தாலும்
நல்ல தண்ணீராய் மாற்றி அற்புதம் செய்யும் இந்த
ஆர்.ஓ. ப்ளாண்ட் என்னும் சீரிய கருவி நகரத்தார் நமக்கு அரும்பெரும் சொத்து! ஆனாலும்
அதனிடமும் ஒரு குறை....... வீட்டிலே ஒத்தை விருந்தாளி நுழைந்ததைக் கண்ட மாத்திரத்தில்
மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொள்ளும் சென்னை
வீட்டு ஓனர்கள் போன்ற அற்ப குணத்தைக்கொண்டது!
முந்தின நாள் வரை 70 சதவிகித தண்ணீரைத்
துப்பிவிட்டு 30 சதவிகிதத்தை நந்நீர் அமுதமாய்
தொட்டியை நிரப்பிக்கொண்டிருந்த அந்தக் கருவி கூட்டத்தைக்கண்ட மாத்திரத்தில்
99 சதவிகிதத்தை துப்பித்தொலைத்துவிட்டு மிச்சமிருந்த அந்த ஒரு சதத்தை மருத்துவ மனையின்
ஏற்றும் ட்ரிப்ஸ் மாதிரி சொட்டு சொட்டாய் இறக்கிக் கொண்டிருந்தது!
கம்பெனியோடு நேரடியாகப்பேசினாலாவது சந்தர்ப்ப
சூழ் நிலையை முன் வைத்து யாராவது உதவி பண்ணுவார்கள்.
மனசு ஏங்கியது.ஆனால் இப்போது சிக்குக்கோலத்தின் குரல்களுக்குள்ளே அல்லவா மாட்டிக்கொள்ள
வேண்டும்? எல்லாவற்றையும் கடந்து கடைசி நிலைக்கு வந்து என்னுடைய பிரச்னையை சொல்லுகிறேன்.
"AMC வைத்திருக்கிறீர்களா......
இல்லாவிட்டால் பழுதான உதிரிக்கும் சர்விசிற்கும் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்...."
AMC யா......?
"ஆன்யுவல் மெயின்டெநன்ஸ் காண்ட்ராக்ட்
மேடம்....."
மக்கு பிள்ளைக்கு சொல்வது போல் விளக்கம்!
ஃபைல் (File) இவர் வசம். ஒடிப்போய் கண்டுபிடிக்கிறேன்.
நல்ல வேளை அந்த AMC கையில் இருந்தது. ஆனால் அந்த AMC தொகையைப்பார்த்து அசந்து போனேன்.
தமிழில் ஒரு அழகான பழமொழி இருக்கிறது."பெத்த பிள்ளசோறு போடாட்டினாலும் வச்ச பிள்ள
கஞ்சி ஊத்தும்ணு" தென்ன மரத்தின் வள்ளல் தன்மையைக் குறித்தே இந்த பழமொழி. அது
போல ஆர்.ஓ. ப்ளாண்ட் எப்படி இருந்தாலும் இந்த கொண்டேமுட்டியான் AMC தொகை அந்த ஆர்.ஓ.
கம்பெனியை நிச்சமாய் காப்பாற்றிவிடும்!!
கதைக்கு வருவோம். சிக்கு கோலத்தில் திரும்பவும் நுழைந்து கடைசிக்கட்டத்தைப் ஒரு வழியாகப்பிடித்து
என்னுடைய AMC நம்பரைக்கொடுக்கிறேன்.
" தேங்க்ஸ் மேடம் இன்னும்
24 மணி நேரத்திற்குள் உங்கள் மெஷின் சரி செய்யப்பட்டுவிடும்."
வீடு பத்திகிட்டு எரியுதுண்ணா இவன் குளிச்சு முழுவி
சந்தானம் பூசிகிட்டுல்ல வர்றேங்கிறான். என்னையும் மீறி போனில் கத்துகிறேன். "அப்செட்
ஆவாதிங்க மேடம் எவ்வளவு சீக்கிரம் அனுப்பமுடியும்ணு பார்க்கிறேன்" எப்போது அந்த நேரம் என்ற நிபந்தனையற்ற ஒரு பதில் கேட்டு ஆத்திரமாய்
செல்லை அமுக்கி மூடுகிறேன். பாட்டில் பாட்டிலாக தண்ணீர் வாங்கி கேசை கரியாக்கி
தண்ணீரைக் கொதிக்க வைத்து வெளி நாட்டு விருந்தாளிகளின் வயிற்று சுகத்தைக் ஒரு வழியாய்க்
காப்பாற்றினேன்!
எல்லாமே உங்களுக்கு இவ்வளவு தொந்தரவு
கொடுத்ததா? புலம்பித்தள்ளுகிறீர்களே..... சில அதிர்ஷ்டக்காரர்கள் கேட்கலாம்.
கம்பெனிகள் ஒரு காலத்தில் தங்கள் பொருட்களை
தாங்களாகவே உற்பத்தி செய்து தரக்கட்டுப்பாட்டை முன் வைத்தனர். இன்றைக்கு எந்தெந்த வகைகளில் லாபத்தைப்பெருக்க முடியும்
என்ற ஒரே சிந்தனை மட்டுமே எங்கும் நிலவுகிறது.பொருட்களை குறைந்த விலையில் தயாரிக்க
வெளி நாடுகளுக்குக்கூட சப் காண்ட்ரக்கில் விட்டு விட்டு அவர்கள் பெயரை மட்டும் பொருட்கள்
மீது போட்டுக்கொள்கிறார்கள். தரம் இரண்டாம் பட்சமாகிப்போகிறது. யூஸ் அண்ட் த்ரோ கலாச்சார
காலம் இது! காரண்டி வேண்டுமா? பேசாமல் AMC
போய்விடுங்கள் என்கிறார்கள்!
அன்று ஒரு நாள் எங்களது பழைய ஆபிசில்
வேலை பார்த்த ஒரு பெண் குடும்பத்தோடு வீட்டிற்கு வந்திருந்தது. பெரிய பையன் முதன் முறையாக
அரசாங்கத்தேர்வு எழுதுவதால் ஆசீர்வாதம் வேண்டி வந்திருந்தார்கள். பேசிக்கொண்டிருக்கையில்
" மேடம் எங்க கல்யாணத்திற்கு நீங்கள் வாங்கிக்கொடுத்த மிக்சி இன்னும் அருமையாக
வேலை பண்ணுகிறது" என்ற அவளது வார்த்தை
என்னைப் புல்லரிக்க வைத்தது . எங்கோ ஒரு கம்பனி தங்கள் தரத்தை முன் வைத்து 16 வருடங்களுக்குப்பின்னும் நம்மை மகிழ்விக்கிறார்களே!!
நமக்கு நெருங்கிய உறவினர் ஒருவரை விசேஷம் ஒன்றில் சந்தித்தபோது பேச்சு வாக்கில் அவரது அப்பா 50 வருட கேரண்டியுடன் வாங்கிய ஒரு கடிகாரத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். 1960ல் வாங்கிய அந்த
கடிகாரம் 2018ல் இன்றும் அருமையாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்! வருடங்களை எண்ணிப் பார்க்கிறேன். 2010ல் 50க் கொண்டாடி
முடித்து இன்னும் ஆளுமையோடு உழைக்கும் அக்கருவி எங்கே? பத்தே நாளில் பல்லிளிக்கும்
இன்றைய பொருட்கள் எங்கே?
"எப்டி சொல்றிங்க 50 வருஷம்ண்ணு...
கேரண்டி பேப்பரை பத்திரமாக வைத்து இருக்கிறீர்களோ?" அவர் சிரித்துக்கொண்டே "மாகி...... அந்த உத்திரவாதத்தை கடிகாரத்தின் மேலேயே தெளிவாக எழுதியிருக்காங்க." என்றார்
"நம்பமுடியவில்லை...... நம்பமுடியவில்லை..."
சிவாஜி மாதிரி மனசு கத்திப் பாடியது......!
"வாரண்டி கார்டுக்குள் பொடிசு பொடிசான
எழுத்துக்களில் நமக்கு அளிக்கப்படும்
உத்திரவாதமும் 'நிபந்தனைகளுக்கு உட்பட்டது'
என என்ன நிபந்தனை என்று தெரியாத பாமர மக்களாகிய நம்மிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்
இன்றைய கலாச்சாரம் எங்கே? தலைமேலேயே உத்தரவாதத்தை தூக்கிக்கொண்டு திரியும் அந்த கடிகாரத்தின்
உச்ச கலாச்சாரம் எங்கே?
"அப்பா அத ரொம்ப பத்திரமா பாத்துக்குவார்.....
மாகி தினப்படி அந்த கடிகாரத்துக்கு அவர் மட்டுந்தான்
சாவி குடுக்கணும். ரொம்ப ஒடம்பு முடியாதப்பதான் எங்கிட்ட அந்த பொறுப்பக்குடுத்தார்."
ஒரு காரைக்கூட அக்கு அக்காய் எடுத்து
திரும்ப பூட்டிவிடும் திறன் கொண்ட இந்த வல்லவர் இந்த கடிகாரத்தில் வரும் சின்ன சின்ன
ரிப்பேர்களை தானே சரி பண்ணி சிக்குக்கோலத்திற்குள்
நுழையும் அவசியம் ஏதுமின்றி இன்றும் அழகாக ஓடவைத்துக் கொண்டிகிறார்.
அந்த கலாச்சாரத்தின் பிரதிநிதியான அந்த
கடிகாரத்தையும் அதை அன்புடனே பராமரித்துக் காக்கும் அருமை நண்பரையும் இன்றைய பிளாக்கின் ஹீரோயினாய்...... ஹீரோவாய்.....
ஆக்குவதில் மகிழ்வடைகிறேன்!!!
VERY NICE AND PRACTICAL MAGI. OUR MEDIA YOUNGSTERS WILL THEY LISTEN TO US?
ReplyDeleteThank you and let us hope for the best!
Deleteamazing style!!!
ReplyDeleteThank you
Delete