Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Friday, 29 November 2019

வேண்டாத மோகம் வேண்டாமே


வருடாந்திர திருயாத்திரையைப்போல  ஆகஸ்ட் செப்டம்பரில் இங்கிலாந்துக்குப் போவது எங்கள் வழக்கமாகிவிட்டது. புதுசு புதுசாக இந்திய இதிகாசக் கதைகளை நாட்டிய நாடகமாக்கி  நார்விச்சின் இந்தியக்கலை ரசிகர்களுக்கு ஒவ்வொரு செப்டம்பரிலும் அர்ப்பணமாக்குவது எங்கள் பெண்ணின்  பிரியமான பொழுதுபோக்கு! 'ப்ளே ஹவுஸ்' என்ற அந்த அரங்கம் ரசிகர் கூட்டத்தால் நிரம்பி வழிகையிலே பொங்கி வரும் ஆனந்தக் கண்ணீர் எங்கள் பெருஞ்சொத்து !
இதைத் தவிர இந்த வருடம் இன்னொரு ஜோலியும் இருந்தது. லண்டனில் இருக்கும் இவர் தங்கை பெண்ணிற்கு குழந்தை பிறந்து எட்டு மாதம் ஆகியிருந்தது. ஊருக்குக் கிளம்புமுன்  பிள்ளையைப் பார்க்க வேண்டும் கொஞ்சி விளையாட வேண்டும் என  திட்டமிட்டு அவள் வீட்டிற்குப் போனோம். கதவைத்திறந்த அவள் எங்களைக் கட்டிப்பிடித்தபோது கையிலிருந்த சின்னப்பெண்  மலைத்துப்போய் அம்மாவிடம் ஒட்டிக்கொண்டது. "பாப்பா ஆச்சியும் தாத்தாவும் நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க கைதட்டு பாக்கலாம்" என்று தமிழில் சொல்ல  சிரித்த முகத்தோடு வந்த அவளது பலமான கைதட்டு எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! எட்டுமாசத்துக்குழந்தை....... இதில் என்ன ஆச்சரியம்? என நமக்குத் தோன்றலாம்.
ஆங்கிலேயரை மணந்தவள் அந்தப்பெண். அவரது பிரியமான பெரிய குடும்பம் அந்த ஊரிலேயே சுற்றி இருக்க அவ்வப்போது  அந்த சின்ன பாப்பாவை  வளைய வளைய  வந்து ஆங்கிலத்தில் அவர்கள் கொஞ்சிக் குலாவ தமிழுக்கு அங்கு என்னதான் அவசியம்?! ஆனால் அந்தக் குடும்பம் வினோதமான ஒன்று! "நீ கட்டாயம் பாப்பாவோடு தமிழில் நிறைய பேசு  இன்னொரு மொழி இருந்தால்தான் அவள் வளர்ச்சி வளமானதாக இருக்கும்." என்ற கோட்பாட்டில் மகிழ்ந்து போனோம்!
உள்ளூரை சற்றே யோசிக்கிறேன். தமிழன் தமிழனோடு பேசுகையில் கூட  தனது ஆங்கிலப்புலமையைக் காட்டிக்கொள்ள ஆங்கிலத்தில் பிளந்து தள்ளுகிறான். சுற்றிக் கொஞ்சம் கும்பல் இருந்தால் கேட்கவே வேண்டியதில்லை. விருந்தாளிகள் வீட்டிற்கு வருகையில் 'ஆண்டிக்கி ஒரு ரைம் சொல்லு பாக்கலாம்.' என நம் பிள்ளைகளைக் கழைக் கூத்தாடியாக மாற்றிப்  பெருமைப்படுகிறோம்!
இந்த ஆங்கில மோகம் தொன்று தொட்டு நமக்குள் தொத்திக்கொண்டே நிற்கிறதா? எங்கள் அப்பா தமாஷாக எங்களுக்குச் சொன்ன ஒரு சம்பவம்  இதற்கு ஒரு அருமையான உதாரணம்!
எங்கள் கிராமத்து பள்ளிக் கூடத்தில் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பு கிடையாது. முதல் ஆம்பிளப்பிள்ளை ஆங்கிலத்தோடு நல்ல படிப்பு படிக்க வேண்டும் என முடிவு செய்த தாத்தா பெண்ணைக் கட்டிக்கொடுத்த ஊரின் டவுண் பள்ளிக்கூடத்திற்கு அப்பாவை அனுப்புகிறார். அக்கா அத்தானின் கவனிப்பில் சுகமாகவே பள்ளி சென்று வந்தார் அவர். அக்காக்காரி பொறந்த வீட்டிலிருந்து அள்ளிக்கொண்டு வருவதில் கில்லாடி! தம்பி வந்த சாக்கில்  ஒரு கறவை மாட்டை தன்  வீட்டிற்குக் கொண்டு வந்துவிட  மனசுக்குள் ஒரு திட்டம். நச்சியமாக தம்பியிடம் பேச்சு கொடுத்தது அக்கா.
"தம்பி நல்ல பாலு குடிச்சா ஒனக்கு நல்ல படிப்பு வரும்ப்பா.... அங்கனதான் மாடு நெறையா நிக்கிதே. ஆஞாருக்கு ஒரு கடுதாசி போடேன்."
அக்கா சொல்லைத்தட்டாமல் தம்பி போஸ்ட் கார்டில் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். விநோதமான அந்த கடிதத்தில் ஒத்தை வாக்கியம்தான். அந்த வாக்கியத்திலும் ஒரு விநோதம் இருந்தது!
தபால்காரர் கடுதாசியைத் தாத்தாவிடம் குடுக்கையில் தாத்தா மலைத்துப்போய் அதை திருப்பித் திருப்பிபார்த்தாராம். "வெலாசம் சரியாத்தான் இருக்கு. ஆனா என்னா கருமாந்திரத்த எழுதி இருக்காண்ணு பிரியிலியே."
கடுதாசியை தபால்காரரிடமே கொடுத்த தாத்தா கடுதாசியில் இருப்பது அவருக்குப் புரிகிறதா என்று கேட்டார். அதைப்படித்த  அவர் "ஆஞா டவுணுலேருந்து நம்ம தம்பிதான் கடுதாசி போட்ருக்காப்பில.... பிள்ள இங்கிலீஷ்லல்ல எழுதியிருக்கு."
 தாத்தாவுக்கு தலையும் புரியில காலும் புரியில ! இங்கிலிபூஸுலியா!! இங்கிலிபூஸுலியா!!! ஆச்சரியத்தால் தவித்துப்போய்விட்டார்.
"பராசரம்..... இங்குட்டு திண்ணையில ஏறி குந்து. பிள்ள கடுதாசிய வெவரமா படி பாக்கலாம்." என்றுமில்லாத அனுசரணையான உபசரிப்பு தபால்காரருக்கு! படிக்க ஆரம்பித்தார் பராசரம்
" I want a  cow."  Your obedient son Michealsamy.  "அதாவது ஆஞா... தம்பிக்கி  ஒரு பசுமாடு வேணுமாம். கீழ்ப்படிதலுள்ள உங்கள் மகன் மிக்கேல்சாமி."ண்ணு எழுதியிருக்கு.
" அம்புட்டையும் இங்கிலிபூஸுல எழுதியிருக்குதா எம்பையன்?" பூரித்துப்போய்விட்டார் தாத்தா. இம்புட்டு இங்கிலிபூஸு தெரிஞ்சும் எம்புள்ளைக்கி எத்த மட்டிக்கி பணிவு இருந்தா எனக்கு கீள்ப்படிஞ்சு இருக்குறதா எழுதி இருக்கும்?!!
தபால்காரருக்கு அந்த இங்கிலிபூஸு கடுதாசியை திரும்பத்திரும்ப படித்து வாயே வலி கண்டு போய்விட்டது. இருந்தாலும் ஒரு மாகாணி நெல்லு அவர் துண்டில் வந்து விழுந்ததில் வந்த வலியெல்லாம் பஞ்சாப்பறந்து போயிருச்சு!
ஒடனடியா ஒருகாராம் பசுவும் கண்ணுகுட்டியும் ரெண்டு ஆளுக வழியா டவுணுக்கு அனுப்பப்பட்டது!
இந்த ஆங்கில மோகம் பரம்பரையாகத்தான் நம்மை ஆட்டிப்படைக்கிறது!
அம்மா அப்பாவை மம்மி டாடியாக்கி பாட்டி தாத்தாவை கிராண்ட்மா கிராண்ட்பாவாக மாற்றி சுகம் காண்கிறோம். இந்த வேண்டாத வேலையில் நானும்தான் சேர்த்தி. இன்று இந்த காரியத்தால் மனசுக்குள் ஒரு வருத்தம் இருந்தாலும் கூட மம்மி டாடியோடு மட்டும் நிறுத்திக்கொண்டேனே என்ற சின்ன ஒரு ஆறுதல்!
"மூணு வயசுதான் ஆவுது அதுக்குள்ள ஏ பி சி டி சின்ன எழுத்து பெரிய எழுத்து எல்லாத்தையும் முத்து மாதிரி எழுதித் தள்ளுது பாருங்க அந்த ஸ்கூல்ல அப்டி ஒரு ட்ரெயினிங்!!" பூரித்துப் போகும் பெற்றோர்
ஆமா...... ஆனா ஆவன்னா........ ஒங்க கணக்கில இருக்கா.....?
 அனாவசிய கேள்வி கேட்டு அவங்க மனச நோகடிப்பானேன்?!
மனித வள மேம்பாட்டுத்துறையில் நான் இருக்கையில் சின்ன பிரச்சனைகளை  பாரமாக சுமந்து வரும் மக்களுக்கு நான் வடிகால்.
" மேம்  பையன் ரொம்ப பிரச்ன பண்றாங்க. எனக்கு என்னா செய்யுறதுண்ணு புரியில...."
" சுட்டியான  வாண்டாம்மா..? நான் சிரித்துக்கொண்டேகேட்டேன்.
" அதெல்லாம் இல்ல மேம்.... எழுதவே மாட்டங்கிறாங்க..... வீட்ல  ஹோம் ஒர்க் எழுத வக்கிறதுக்ககுள்ள ஒன்னப்புடி என்னப்புடிண்ணு ஆயிப்போவுது... பேசாம எதுத்த வீட்டு பையனாட்டம் ட்யூஷனுக்கு அனுப்பிச்சி வச்சிடலாமாண்ணு பாக்குறேன்.
" பச்சப்பாலகனுக்கு ட்யூஷனா...? என்ன சொல்றம்மா நீ? விதிர்த்துபோனேன்!
" ஆமா மேம்..... ஸ்கூல்லருந்து வந்த ஒடனே என் ப்ரண்டு டிபனக்குடுத்து ட்யூஷனுக்கு அனுப்பிச்சிடும். அங்கேருந்து வந்த ஒடனே ட்யூஷன்ல என்னா சொல்லிக்குத்தாங்கண்ணு  ஒரு இன்ஸ்பெக்ஷனும் பண்ணிடும்"
"அதெல்லாம் கெடக்கட்டும் அந்த பையன் சந்தோஷமா இருக்கானா?"
"கண்ணீரும் கம்பலையுந்தான்...மேம்  ஆனா பிள்ள முன்னுக்கு வரணுமுண்ணா......."இடை மறித்தேன் நான்  "ஒம்பையனும் அதே மாதிரி இருக்கணுமா...."
"இல்ல மேம் அவன் சந்தோஷமா இருக்கணும்... அதே சமயம் எழுதணும்."
" இதுக்கு ஒரு வழி இருக்கு..... செய்வியா?"
"சொல்லுங்க மேம்."
ஓன் கை எழுத்து எப்படி இருக்கும்...?
" நல்லா இருக்கும் ப்ரைஸ் கூட வாங்கியிருக்கேன்."
" அப்ப அத கொஞ்சம் கோணலாக்கு...... பிள்ள கையப்புடிச்சிகிட்டு நீ ஹோம் ஒர்க்க எழுது...."
" மேம் நீங்களா சொல்றிங்க?!"
"ஆமாம்மா நானேதான்...... ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? சின்னக் கொழந்தைகளின் வெரல்கள் ஒழுங்கு முறையாக எழுதுவதற்கு இன்னும் நெறைய......... நெறைய... நாட்கள் இருக்கு....... இத நான் சொல்லுலம்மா...... குழந்தை நிபுணர்கள் சொல்லுறாங்க. இப்பக்கி அவனுக்கு வேண்டியது அம்மா அப்பாவோட சுகமான நேரம் மட்டுந்தான். நீங்க ரெண்டு பெரும் அய்யோ எம்புள்ள எழுத மாட்டங்கிறானேண்ணு ஆதங்கப்பட்டு ஒங்களுக்குத் தெரியாமலேயே அந்த ஆதங்கத்தை  அவனுக்குள்ளயும் திணிக்கிறிங்க. இன்னொரு  விஷயத்த நீ கேள்வி பட்டுருக்கியா........... ஒலகத்திலேயே ஃபின்லாண்டு நாட்டுலதான் பிரமாதமான கல்வி. அங்க பிள்ளைய ஸ்கூல்ல சேக்கிறது எப்ப தெரியுமா? ஏழு வயசுலதான்! பித்து புடிச்ச நாம என்னா பண்றோம்? ரெண்டர வயசு  பச்ச பிள்ளைய விஜய தசமி அண்ணைக்கே கொண்டு போய் ஸ்கூல்ல தள்ளிவிட்டுட்டு வந்துடுறோம்....... அடுத்த வருஷ எல்கேஜி க்கி அத இப்பயே பழக்குறோமாம்!! அருமையான ஒரு சாக்கும் நம்  கைவசம் ... என்ன கொடுமடா இது!! 
இங்கிலாந்துக்கு  நான் போயிருந்த ஒரு சமயம்  என் பெண்ணிற்கு இந்திய கலாச்சாரத்தைப் பற்றிப் பேச ஒரு தொடக்கப்பள்ளியிலிருந்து அழைப்பு வந்திருந்தது. நானும் கூடவே சேர்ந்து கொண்டேன். கூடியிருந்த அறைக்கு முன்னால் நாங்கள் அலங்கரித்த பூக்கோலத்தில் மயங்கி நின்றது அந்த சிறு வயசுக் குழுமம்! உள்ளே சென்று அவர்கள் உதவியோடேயே அறையைச்சுற்றி தோரணம் கட்டினோம்.இந்தியாவைப் பற்றிய போஸ்டர்களை ஏற்றினோம். மைக்கோடு இருந்த மேடையில் ஏறிப்போய் இந்தியாவைப்பற்றி இப்போது பேசப்போகிறார்கள் என  கூட்டம் நினைத்துக்கொண்டிருக்கையில் வட்டம் போட்டு அவர்கள் நடுவே அவள் அமர்கையில் ஆஹா இந்தியாவை அனுபவிக்கவல்லவா போகிறோம் என்ற  மகிழ்ச்சியால் அரங்கம்  நிரம்பிப்போனது! பிரபஞ்ச வேண்டுதலோடு தொடங்கி சுலபமான யோகபயிற்சிக்குள் நுழைந்து பாரத நாட்டிய தொடக்க அடிகளில் கால் பதித்து  இதிகாச கதைக்குள் கண் விரித்து அவர்களோடு வெளியே வந்த அவள் ராஜஸ்தானின் ஒட்டுப்போட்ட ஒரு அழகான விரிப்பை நான்கு பிள்ளைகளை விரித்துப்பிடிக்கச்செய்து   வட்டத்தைச் சுற்றி காட்ட வைத்தபின் ராஜஸ்தானைப் பற்றியும்  இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களைப்பற்றியும்  போஸ்டர்களை சுற்றிகாட்டி விவரிக்க கடைசியாக வந்த சரமாரி கேள்விகளும் சற்றே நேரத்தில் கலர் கலரான துண்டு பேப்பர்களில் அவர்கள் மனதுக்கு உகந்த டிசைன்களை வரைந்து துண்டுகளை சேர்த்து ஒட்டி எங்கள் ராஜஸ்தான் விரிப்பைப்பார்த்தீர்களா என அவர்கள் கண்விரித்த போது மனசுக்குள் பெரியதொரு திருப்தி எங்களுக்கு!   இதைஎல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவள் "எனக்கு இப்ப புரிஞ்சிடுச்சு மேம்." என சிரித்த முகத்துடன் எனக்குக்  கை கொடுத்தாள்
ஆயுள் பூராவுக்கும் எழுதப் போகும் அந்த சின்ன வாண்டு இப்போதைக்கு சுதந்திரப்பறவையாக வலம் வருவான்.  அம்மா அப்பாவோடு  பீச் பார்க் ஜு பிளானட்டேரியம் சுற்றி வந்து சுகம் பெறுவான் அவன் படைப்பாற்றல் விரிந்து பறந்து செழிக்கும் என்ற நம்பிக்கை அந்த கை குலுக்கல் வழியே எனக்குக் வந்து சேர்ந்தது உண்மை!
எங்கள் நண்பர் ஒருவர் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர். திருச்சியில் வீட்டுக்கு வந்திருந்த போது நம் பள்ளியைப்பற்றியும் அவ்வப்போது அவதியாக கை உடைந்து கால் முறிந்து அவரிடம் தூக்கிக்கொண்டு ஓடும் மாணவர்களிப்பற்றியும் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தோம்.
" இதையும் நீங்க கேட்டாகணுங்க" என்ற மருத்துவர் " ஒரு நாள் ஒரு அப்பா அம்மா அவுங்களோட மூணு  வயசுப்பொண்ண தூக்கிகிட்டு வந்தாங்க. கொஞ்ச நாளா அவளோட வலது கை மொடங்கிப் போயே இருக்காம். சாப்பிட முடியில நாலு பேரோட சேந்து வெளையாட முடியில.....ஸ்கூல்ல எழுத முடியில..... பொட்ட பிள்ளைங்க... நாளைக்கி அவளுக்கும்  ஒரு நல்லது நடக்குணுமுல்லங்கண்ணு  பொலம்பித் தீத்துட்டாங்க. டெஸ்ட் பண்ணி பாத்தத்தில் எலும்புல எந்தக்கோளாரும் இல்லண்ணு தெளிவாத்தெரிஞ்சிது.
அவங்களோட இன்னுங்கொஞ்சம் விளாவாரியாப்பேசினேன். தூங்கும் போது கை சாதாரணமா இருக்குங்கிற விவரத்த அப்பத்தான் சொன்னாங்க. எனக்கு பொறி தட்டுன மாதிரி இருந்துச்சு. மக எந்த ஸ்கூல்ல படிக்கிறாங்கண்ணு கேட்டேன்.அவங்க ஸ்கூல்பேர சொன்னப்ப எனக்கு விதுக்குண்ணு இருந்துச்சு. அந்த ஸ்கூல் நம்முளுது மாதிரியில்லாம் இல்லாம ஒரு மாதிரியானதுண்ணு கேள்விப்பட்டுருக்கேன்.  'மனப்பாடம் பண்ணு கக்கு மார்க்க வாங்கு' ங்கிற ப்ராய்லர் ஸ்கூலாம் அது! அங்க பிள்ளையோட வேறெந்த தெறமைக்கும்  பொட்டு எடம் கூட கெடையாதாம். அதனால அட்ட கிளாசிலேர்ந்தே எழுது எழுதுண்ணு பிள்ள பிராணன எடுத்துருவாங்களாம்...... சின்னவளின் கை மொடக்கு உடம்பளவில் கிடையாது மனத்தளவில் என்ற தெளிவு இப்போது எனக்குக் கிடைத்தது.
நான் இந்த விவரங்கள அவங்ககிட்ட சொல்லாம பள்ளிக்கூடத்த ஒடனடியா மாத்துங்க. பிள்ளைய எழுதுரத்துக்கு கட்டாயப்படுத்தாதிங்க...... சாய்ங்காலத்தில ஓடி வெளையாட உடுங்க..... இதுக்கு மேல கையில எதாவது பிரச்சன இருந்தா முட்டும் எங்கிட்ட வாங்க..... நல்லாயிட்டா ஒரு போன் பண்ணி சொல்லுங்கண்ணேன்.
'நல்ல சேதிங்க ஐயா நீங்க சொன்ன மாதிரியே பள்ளிகூடத்த மாத்திப்புட்டோம்....மக சந்தோஷமா ஓடியாடி வெளையாடுது கையாலஅள்ளி சாப்புடுது ஐயாவ நாங்க ரெண்டு பேரும் கையெடுத்து கும்புடுறோங்க."ண்ணு' அவங்க ஒரு நா போன் பண்ணுனப்ப  ஏதோ நம்மளால முடிஞ்ச நல்ல காரியத்த செஞ்சிருக்கோம்ங்கிற திருப்தி எனக்கு'"
"அருமையான விஷயங்க நீங்க பண்ணினது" என்றோம் நாங்கள் ஒரே குரலாய்!
இனி சின்ன குழந்தையின் சின்ன படிப்பு பிரச்னையை பாரமாக சுமந்து என்னிடம் வரும் பெற்றோருக்கு எங்கள் நண்பரின் அநுபவமும் என் பகிர்தலின் ஒரு மையக்கருத்தாக இருக்கும் என்பது உறுதி!

Thursday, 7 November 2019

மதிப்பீடுகளும் வினோத சந்திப்புகளும்



இந்த பதிப்பு என் தம்பியின் வார்த்தைகள் வழியே உங்களுக்கு வருகிறது. மதிப்பீடுகள் மிக்க இந்த ஆசிரியர் கும்பகோணத்தில் வசிக்கிறார். ஒரு மாதம் கழித்து ஊரிலிருந்து வந்த எங்களுக்கு அவரது போன் வழிப் பகிர்வு ஒரு வித்தியாசமான முற்றிலும் எதிர்பாராத அனுபவம் ஒன்றை அளித்தது உண்மையிலும் உண்மை!! 
"கும்பகோணத்தில் நடக்கும் கல்யாணங்களுக்குப் போகையில் நான்கைந்து நண்பர்கள் சந்திப்பு கட்டாயம் இருக்கும். சமயங்களில்  பழைய மாணவர்களை அவர்கள் குடும்பத்தோடு சந்திக்கும் வாய்ப்பும் உண்டு. அவர்கள் வளர்ச்சியை உரிமையோடு பகிர்ந்து கொள்கையில் என் மகிழ்வு இரட்டித்துப்போய்விடும்!
அன்றும் அப்படித்தான். என் மாணவரின் திருமணம். அப்பாவும் எனது நெருங்கிய நண்பர். நண்பர்களின் கூட்டம் அன்று பெரிதாக இருக்க பேச்சும் சிரிப்பும் களைகட்டி இருந்தது அங்கு. அப்போது ஜம்மென்று டிரஸ் பண்ணியிருந்த ஒருவர் என்னை நோக்கி வந்தார்.. " சார் ஓங்கள எங்கயோ பாத்தமாதிரி இருக்கு...... எங்கண்ணுதான் பட்டுண்ணு புடிபட மாட்டங்குது" மனசுக்குள் தேடிப்பார்ப்பது அவரது தோரணையில் எனக்குப்புரிந்தது. " நானும் ஒங்கள எங்கேயோ பார்த்திருக்க மாதிரிதான் தோணுது." என்றேன் நானும்.
"சந்தோஷம் சார்..... வயசாக ஆக ஞாபக மறதிதான் போங்க..." கைகுலுக்கிய அவர் கலியாணத்தில் கலந்து போக எங்களது நண்பர் குழு திரும்பவும் களைகட்டியது.
அருமையான சாப்பாட்டை முடித்துவிட்டு வெளியே வருகிறேன். திரும்பவும் அவர்!
"சாருக்கு ஒங்க சொந்த ஊர் எதுங்க?" என்றார்     
" பக்கத்துல எடங்கண்ணிதாங்க " என்றேன் நான்.
"என் ஊரும் அதுதாங்க......".  கையை கெட்டியாகப்  பிடித்துக்கொண்டார் அவர்
" ஓங்களயெல்லாம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. என்னோட அப்பா பெரியப்பா சித்தப்பா ஒங்க அம்மா அப்பாவுக்கு நெலத்துக்கு நீராணிக்கம் பாத்தவங்க. அவுங்க பேரச்சொன்னா நீங்க பட்டுண்ணு புடுச்சிருவிங்க. பொன்னன் மருதன் குட்டாரு. மருதன்தான் எங்கப்பா."
"என் மனதுக்குள் உடனடியாக வந்தது பொன்னன்தான். லீவு தொடங்கிய உடன் இடங்கண்ணி வருவதற்கு ரெட்டை மாட்டு வண்டியோடு கும்பகோணம் வீட்டிற்கு முன் பொன்னன் ஆஜர் கொடுத்து கண் மண் தெரியாமல் எங்களைக்  துள்ளிக்குதிக்க வைக்கும் பொன்னன், லீவு முடிந்த துக்கத்தில் தோய்ந்து போய் கிடக்கும் எங்களை கும்பகோணம் வீட்டில் கொண்டு வந்து சேர்க்கும்   பொன்னன் சந்தோஷத்தையும் வருத்தத்தையும் கலவையாக கொடுக்கும் ஒரு கில்லாடி. இப்ப ஞாபகம் வருதுங்க" என்றேன் நான்
"அந்த காலத்திலேயே உங்கம்மா அதான் பெரிய ஆச்சி புரட்சிகாரங்களாம் சார். ஆம்பளைகதான் நில புலன பாக்க முடியுமுண்ணு வீராப்பா நிண்ணப்ப பொம்பளைகளாலயும் தெறமையா செய்ய முடியுமுண்ணு செஞ்சு காட்டினது ஆச்சிதாண்ணு பெரியப்பா சித்தப்பா அப்பா சொல்லி கேட்டிருக்கேன். நெல்லை ஆச்சி அளந்து போட்டா ஒரு மாகாணி கூடதான் உழுவுமே தவிர கொறையாவே இருக்காதாம்! இதைத்தவிர ஆச்சிக்கு மனசுக்குள்ள இன்னொரு ஆச தங்கிட்ட வேலை செய்யிறவங்க பட்டறிவு மட்டுமில்லாம படிப்பறிவோடும் இருக்குணும்முண்ணு. இத அண்ணன் தம்பிகள் கிட்ட சொன்னாங்களாம். "படிக்கிற வயசா இது!!!!" அவுங்க மூணு பேரும் பரிகாசமா சிரிச்சாங்களாம். ஆச்சிக்கி வருத்தமா இருந்தாலும்  இன்னொண்ணு சொன்னாங்களாம்  "படிக்கதான் ஒடம்பு வளையாதுங்கிறிங்க ஒங்க கையெழுத்தயாவது  போட நீங்க கட்டாயம் கத்துக்குணும். கைநாட்டு வைக்கும் தற்குறியா இனிமே இருக்கக் கூடாதுண்ணு மூணு பேருக்கும் அவுங்க பேர எழுத கத்துக்குடுத்தாங்களாம்.
வீட்டுக்கு வந்த அவுங்க ஆச்சி குடுத்த துண்டு பேப்பர்ல தங்க பேர எழுதிக்காட்டினப்ப வீடே பிரமிச்சு போயிடுச்சாம்!
பிள்ளைகள எல்லாம் நீங்க நல்லா படிக்க வைக்கணும் படிப்புதான் ஒங்கள தூக்கிவுடும்ணு ஆச்சி திரும்பத் திரும்ப சொல்லிகிட்டே இருப்பாங்களாம். நான் இண்ணைக்கி கவர்மெண்ட்ட்ல பெரிய வேலையில இருந்து ரிட்டையர் ஆயிருக்கேன் நல்ல எடத்துல கல்யாணம் முடிச்சேன். எம் பிள்ளக நெறையா படிச்சிருக்குக. இத்தினிக்கும் மூல காரணம்  உங்கம்மாதான் சார்."
என் இரண்டு கையையும் உருகிப்பிடித்த அவர் ஒரு தேங்க்யூ  வோடு காரை நோக்கி நடக்க டிரைவர் பணிவாகக் கதவைத் திறந்து நின்றார்.
"இன்னொரு கல்யாணம். பையனின் கல்யாணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க நண்பர்  ஒருவர்  வீட்டிற்கு வந்தபோது நான் வீட்டில் இல்லை. என் மனைவியிடம் அவர் "அருமையான பெரிய வாத்தியாரை எனக்குத்தெரியும்மா..... அவுரு பையன் ஒங்க வீட்டுக்கார ரையும் நல்லாத் தெரியும்.தங்கமான மனுஷன். ஒங்க பிள்ளைகளையும் எனக்குத்தெரியும். ஆக இந்த கலியாணப்பத்திரிக்கை மூணு தலமுறைக்கும் சேத்துக்குடுக்குறேன் எல்லாரும் வந்திருந்து எம்பையன ஆசீர்வாதம் பண்ணணும்."முண்ணு சொல்லி பழம் பாக்கோடு பத்திரிக்கை வைத்திருக்கிறார்.
பல் வேறு காரணங்களால் கல்யாணத்திற்கு அன்று நான் மட்டும்தான் போகிறேன். வரிசை வரிசையாய் நின்ற  கார்களுக்கிடையே ஸ்கூட்டருக்கு இடம் பிடிக்கிறேன். படியேறுகையில் ஓடி வந்து என் கையைப்பிடித்த நண்பர் நேராக என்னை மணவறைக்கு இட்டுச் செல்கிறார்.
கூடியிருந்த சுற்றம் உறவு காத்திருக்க பெண் மாப்பிள்ளையை  என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளுமாறு சொன்னார் நண்பர். என்னைப்பற்றிய விவரங்களை நான் எடுத்துச்சொல்ல ஆரம்பித்தபோது அவரது பையன் " நீங்க ஒண்ணுமே சொல்ல வேண்டாம் அங்கிள். ஒங்கள பத்தியும் ஒங்க அப்பா பத்தியும் தெனமும்  ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல எங்க அப்பாவால பேசாம  இருக்க முடியாது . ஒங்கள இண்ணைக்கி நேர்ல பாத்தது  சந்தோஷமா இருக்கு." என்றான்.
" முதல் ஆசிர்வாதம் உங்களுடையதாய் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அது போலவே ஆனதில் மனசு திருப்தியாக இருக்கிறது" என்றவர் "விலை மதிக்க முடியாத ஒண்ண ஒங்குளுக்கு இண்ணைக்கி காட்டியே ஆவணும்." சொல்லிக்கொண்டே சில்க் சட்டையின் பைக்குள் கையை விட்டு என்னிடம் காட்டிய  அந்த பொருளைக் கண்டவுடன் நான் அதிர்ந்து போய்த்தான் நின்றேன்!! லேமினேட் பண்ணிய என் அப்பாவின் சின்ன போட்டோ!! கண்கள் இரண்டும் முட்டிக்கொண்டு நின்றன!!
" இண்ணக்கி பட்டு வேட்டியும் சட்டையும் போட்ட கையோட ஐயாவோட போட்டோவைத்தான் மொத காரியமா பைக்குள்ள வச்சேன். ஐயா ஆசீர்வாதத்தோடதான் சடங்குகள் எல்லாம் ஆரம்பிச்சுது. இண்ணைக்கி மட்டுமில்ல தெனமும் குளிச்சிட்டு சட்ட மாத்தும்போது ஐயா என் இருதயத்துக்கு பக்கத்தில ஒக்காந்துருவாரு. அவுரு என் பக்கத்துல  இருந்தாத்தாங்க எனக்குத்  தெம்பு."
உணர்ச்சி மேலிட்டு நின்ற அவர்  என் கைகளை கண்களில் ஒத்திக்கொண்டார்!"
தம்பியின் போன் வழிப் பகிர்வு ஒரு வித்தியாசமான முற்றிலும் எதிர்பாராத அனுபவம் ஒன்றை அளித்தது உண்மையிலும் உண்மை!!
 ஐம்பது அறுபது வருடம் கழித்து  தன் அப்பாவுக்கு கையெழுத்துப்போட சொல்லிக்கொடுத்த அந்த மங்கையின் நினைப்பு மகனிடம்  இன்னும் பசுமையாக இருப்பானேன்?!
 அப்பா பள்ளியின் தலைமையில் இருந்தபோது தாயமும் பல்லாங்குழியுமே வாழ்க்கை என்றிருந்த அந்த ஊருக்கு  படிப்பறிவு கொடுத்த அம்மாவின் மதிப்பீடுகள் இன்றும் பசுமையாக உலா வருதல் எவ்வண்ணம்?!! அப்பப்பா......!! 
சாதாரண ஒரு ஆசிரியர் எந்த வகையில் நண்பரைத் தொட்டிருக்க வேண்டும்?! அவரைத் தன் கூடவே தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு என்ன மந்திரம் செய்தார் அந்த மனிதர்?!
அவர் திண்ணை வகுப்பின் இலவசக் கல்வி மாணாக்கரில் அவர் ஒருவரோ?
வயிறு நிறைந்திருந்தால்தான் பாடம் மனசுக்குள் நிற்கும் என்பதைக் குறிப்பறிந்த அம்மாவின் உணவைப்பகிர்ந்து கொண்டவராய் இருப்பாரோ?!
ரயில்வே ஆபிசர்களோடு பேட்மிண்ட்டன் விளையாடிவிட்டு ஸ்டேஷனுக்கு வருகையில் அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து வரும் பையன்கள் ரயிலுக்குக்காத்து நிற்கும் அந்த வேளையிலும் கடினமான கணக்கு முறைகளை பாட்டாகப் பாடி சுலமாக்கிக் ஸ்டேஷனில் நின்றவாறே  மனசில் ஏற்றிக்கொண்ட மாணவர்களில் ஒருவராக இருந்திருப்பாரோ?!
அப்பா அம்மா பிணக்குகளை சுமுகமாக்கி அமைதி கொடுத்த பல் வேறு வீடுகளில் இவரதும் ஒன்றாக இருந்திருக்குமோ?!
அப்பாவின் பரிந்துரையால் இவருக்கு நல்ல வேலை கிடைத்திருக்குமோ?
அப்பாவின் மதிப்பீடுகள் நிறைந்த வாழ்வு அவருக்கு ஒரு எடுத்தக்காட்டாக இருந்திருக்குமோ?
இப்படியாக என் நினைவுகள் நோக்கி ஓடியது.
நினைவுகள் ஒரு பக்கம் இருக்க இந்த இரண்டு திருமணங்கள் வழியாக இவ்வளவு வருடங்கள் கழிந்து எங்களுக்கு விநோதமான ஒரு அனுபத்தையல்லவா முன் வைத்திருக்கிறார்கள் பெற்றோர்! என்ன விதமான  சங்கேதங்களை பிள்ளைகள் எங்களுக்கு  அவர்கள் கொடுக்க விரும்புகிறார்கள்? நாங்கள் மக்களுக்குக் கொடுப்பது இன்னும் அதிகமாகலாம் என்பதைச் சொல்லுகிறார்களோ? செய்வதை உங்களால் இன்னும் சிறக்கச்செய்ய முடியும் முயன்று பாருங்களேன் என சவால் விடுகிறார்களோ?!
இந்த அனுபவத்தை எங்கள் சந்ததிகளோடு கட்டாயம் பகிர்ந்து கொள்ளுவோம். அவர்கள் மதிப்பீடுகள் என்றுமே சிறந்து உயர அவர்கள் நல்ல எண்ண அலைகள் விரிந்து பறந்து சமுதாயத்தைத் தொட்டுக்கொண்டே இருக்க எங்களால் ஆனது என்றுமே எப்போதுமே!       

Monday, 21 October 2019

விருந்துகள் பல விதம்

காரில் நெடுந்தூர பயணமென்றால் எங்கள் டிரைவர் எஃஎம்  ரேடியோவை திருவி விட்டு விடுவார். பழைய மாவை அரைக்கும் கதையைத்தான் டி ஜேக்கள் புதுசுபோல அள்ளி விடுவார்கள் என்றாலும்   அமையா சமயத்தில்  ஜன ரஞ்சகமான சில விஷயங்களும் அதில் அகப்படும். அன்றும் அப்படித்தான். கல்யாண மகால்களில் அழையா விருந்தாளியாக சென்று சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு   வெற்றிலை பாக்கு பை சகிதம் வெளியே வரும் ஒருவர் டி ஜேயுடன் பேசிக்கொண்டிருந்தார்.
"அழைப்பு இல்லாத ஒரு  விருந்தாளியாய் கல்யாண ஹாலுக்குள் நுழைவதில் மனசுக்குள்ள ஒரு பயம் இருக்காதா?
"என்னங்க நீங்க.....? சட்ட வேட்டி வெள்ளையும் சொள்ளையுமா இருக்கையில ஒரு பய வாயில பல்லபோட்டு ஒரு வார்த்த சொல்ல முடியுமா என்னா? பயம் என்னாங்க வேண்டியிருக்கு. எல்லாம் நாம போற தோரணையிலில்ல இருக்கு....
உள்ள நொழஞ்ச ஒடனே சந்தனத்த நெத்தியில வச்சிட்டேன்னா அது வேட்டி சட்டைக்கி கச்சிதமா அமஞ்சு போயிரும்.அப்பறம் என்னா அங்கங்க கைய கும்புட்டு வாங்க வாங்கண்ணு கூப்புடுறவங்களுக்கு பிரியமா வணக்கம் வச்சுட்டு மேடையில் ஏறி மாப்பிள்ளைக்கி கை குலுக்கி பொண்ணுக்கு பிரியமா வணக்கம் போட்டு கீழ எறங்கும்போது  கைய புடுச்சுல்ல  டைனிங் ஹாலுக்கு கூட்டிகிட்டு போய் கவனிச்சிக்குவாங்க! திருப்தியா சாப்புட்டுட்டு வெத்தல பாக்கு இல்ல பீடாவ மெண்ணுட்டு தேங்கா பையி இல்ல இண்ணைய   ஃபேஷன்ல நல்ல செடியா ஒண்ண  பொறுக்கி எடுத்துகிட்டு  நீட்டா வெளிய  வர வேண்டியதுதான்.
என்னோட டேஸ்ட் அண்ணைக்கி எப்புடி இருக்கோ அதுக்கு தக்கன ஹால ச்சூஸ் பண்ணிக்குவேன். இண்ணைக்கி சுத்தமான சைவ சாப்பாடா இல்ல மொகலாய் பிரியாணியா இல்ல வடக்கித்திய சாப்பாடாண்ணு மனசுக்குள்ள ஒரு கணக்கு ஓடிகிட்டு இருக்கும்.
என்ன இருந்தாலும் ஓசியில சாப்புடுறோமேண்ணு ஒரு உறுத்தல்?
ஆயிரம் பேர் சாப்புடுறாங்க ஐயா..... நான் என்ன திருடுறேனா என்னா இல்ல யாரையும் கண்ணடிக்கிறேனா? சின்ன வயசிலேர்ந்தே இந்த வாழ எலையில சாப்புடுறதுக்கு மனசுக்குள்ள எப்பவும் ஒரு ஏக்கம். எங்க வீட்டுல ஆளுக்கொரு கோப்பை தட்டுதான். சின்ன பிள்ளையா இருக்கப்ப அம்மா அப்பா அவுங்க போற கலியாண வீட்டுக்கெல்லாம் என்ன கூட்டிகிட்டு போமாட்டாங்களான்னு ஏங்கிப்போயி நிப்பேன். பத்து பிள்ளக இருக்க எங்க வீட்ல ஜனங்க கண்ணு போட்டுடுவாங்களேண்ணு மொற வச்சுதான் பிள்ளைகள கலியாணம் காச்சிக்கி கூட்டிகிட்டு போவாங்க......
 இப்ப எனக்கு ரொம்ப நெறைவா இருக்குங்க. சந்தோஷமா இருக்கேன்.
டி ஜே யின் சம்பாஷணை  இப்படி ஜாலியாக முடிகிற போது இங்கிலாந்தில் நடந்த எங்கள் நண்பர் ஒருவரின் கல்யாணம் மனசுக்குள் எட்டிப்பார்த்தது!
கோயிலில் கல்யாணம் முடிந்து வெளியே வந்தவுடன் பொங்கி பூத்து நின்ற ஷாம்பெயினோடு பொண்ணு மாப்பிள்ளையின்  வாழ்வு  பொங்கி வளர வேண்டும் என்ற வாழ்த்துக்களோடு  கிறிஸ்டல் கிளாசை தூக்கிப்பிடித்து எல்லோரும் அருந்திய பின்  பொண்ணு மாப்பிள்ளை அலங்கார காரில் ஒரு ரவுண்டுக்குக் கிளம்பிவிட மற்றவர்களை  சாப்பாட்டிற்கு செல்லும்படி அழைப்பு விடுத்தனர். பொதுவாக நம்மூர் கிறிஸ்தவ கல்யாணங்களில் கோயிலுக்குள் நெருங்கிய சொந்த பந்தந்தான் குழுமியிருக்கும். ரிசப்ஷன் கூட்டந்தான் சொல்லி மாளாது! இங்கேயும் அதே பழக்கந்தான் இருக்கும் என்று மனசுக்குள்ளே நினைத்துக் கொண்டேன். ஹாலுக்கு எவ்வளவு தூரம் தெரியவில்லையே என்ற யோசனையில் இருக்கையில் கலியாணத்துக்கு வந்த ஜனங்கள் பேசி சிரித்துக்கொண்டே பக்கத்திலிருந்த வெள்ளை ஷாமியான   கூடாரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். கிடையாடு  போல நாங்களும் அவர்கள் பின்னாலே நடந்து போனோம். அழகு சிந்த அலங்ககரிக்கப்பட்ட அந்த வெள்ளைக்  கூடாரத்தில் நுழைந்த உடன்  ஒரு வெண் பலகை.  மக்கள் அதை நின்று படிக்க  நாங்களும் பொண்ணு  மாப்பிள்ளைக்கி  வாழ்த்துதலாய் இருக்குமோ  என்ற எண்ணத்தோடு  அவர்கள் பின் சென்றோம். ஆனால் அந்த வெண் பலகையில் எழுதியிருந்ததை ஜீரணிக்க முடியாமல் நான் திணறிப்போனது உண்மை!! பலகையில்  மேஜை வாரியாய் விருந்தினர் பெயர்களை எழுதியிருந்தார்கள்!! முதல் மேஜையில் பொண்ணு மாப்பிள்ளை அவர்கள் அப்பா அம்மாவோடு எங்கள் பெயரும் இருந்தது. அது போலவே வந்திருந்த விருந்தாளிகளுக்கெல்லாம் மேஜை ஒதுக்கப்பட்டிருந்தது. இதிலும் ஒரு சூட்சமம் இருப்பதை நண்பர் சொல்லி நான் தெரிந்து கொண்டேன்.அதாவது விருந்துக்கு வந்திருக்கிற ஒவ்வொருவரும் சந்தோஷமாக பேசி சிரித்து கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன்  நண்பர்களாக உறவுகளாக பார்த்தே மேஜைகளை ஒதுக்குவார்களாம்.எங்களுக்கு நண்பர் மட்டுமே தெரிந்தவர் ஆகையால் அவர் மேஜையில் எங்களுக்கு இடம்!!  
கூடாரத்துக்குள்ளேயே அடங்கிப்போன விருந்துகளில் நான் திகைத்துப்போனேன். அவ்வளவுதானா?!!  அவ்வளவுதானா?!!  இல்லை இது போல நிறைய கூடாரங்கள் இருக்குமோ?! வந்திருக்கும் விருந்துகளே அவ்வளவுதான் என மாப்பிள்ளை வந்தவர்களை வரவேற்றுப் பேசுகையில் உணர்ந்துகொண்டேன்!
பந்தி போய்க்கொண்டிருக்கும் போதே நாற்காலியின் பின்னே நின்று கொண்டு அடுத்த பந்திக்கு நாங்கள் ரெடி நீங்கள் மட மட வென்று வேலையை முடியுங்கள் என சொல்லாமல் சொல்லி நிற்கும் நம் இந்திய பெருங் கூட்டம் எங்கே? ஒவ்வொருவரும் மகிழ வேண்டும் என்ற நோக்கில் இட ஒதுக்கம் செய்யப்படும் முறைப்பாடு எங்கே?
இந்த ஒரு சூழ்நிலையில் நம் வெள்ளை வேட்டிக்காரர் அழையா விருந்தாளியாய் நுழையத்தான் முடியுமா என்ன?!!   
குட்டி கூட்டத்திற்கு விருந்தளிக்கும் இங்கிலாந்து முறை ஒரு பக்கமென்றால் ஆயிரம் பேருக்கு விருந்தளிக்கும் நம் இந்தியாவிலும் அந்த மாதிரியான ஒரு சூழல் ஏற்படும் என்று நாம் கனவில் கூட நினைத்திருக்கமாட்டோம்! அது 1976ம் ஆண்டு. இந்திரா காந்தி எமர்ஜென்சியை நாட்டில்  அமுலுக்குக் கொண்டு வந்த சமயத்தில் விருந்தினர் கட்டுப்பாடு என்ற ஒரு சட்டத்தையும் கூட சேர்த்துவிட்டிருந்தார். லட்சக்கணக்கான ஏழை மக்கள் பசியால் வாடுகையில்  கலியாணம் என்ற பெயரில் படோபடமான செலவுகள் வீணாக்கப்படும் உணவு வகைகளை தடுக்கும் நோக்கத்தோடேயே கொண்டு வரப்பட்ட சட்டந்தான் என்றாலும்  தொன்றுதொட்டு வரும் பழக்கங்களின் அடிமடியில் அரசாங்கம்  கையை வைக்க அசந்துதான் போய் நின்றது  இந்திய கலாச்சாரம்! கலியாணம் காச்சிகளுக்கு 150 பேரைத்தான் கூப்பிபிட வேண்டும் அவர்களுக்கு 150 அரிசி கோதுமை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்பது சட்டமாகிப்போயிற்று!  
150 பேரைக் கூப்பிட்டு என்ன  கலியாணத்தைப் எப்படி பண்ணுவது  என்ற ஒரு பெரிய கேள்விக்குறி அந்த வருடம் எங்கள் வீட்டின் வாசற்கதவைத் தட்டியது.என் சின்ன தங்கைக்கு நிச்சயமாயிருந்தது.  சொந்த பந்தங்கள் நிறைந்த உறவுகள் எங்களது.
150ல் யாரை அடக்குவது?
அம்மா யோசனை பண்ணினார்கள். " இந்த கலியாணத்தில் ரெண்டு மண்டப செலவை நாம் பார்க்கக்கூடாது. அரிசி கோதுமையைத்தானே 150 கிராம் உபயோகிக்க வேண்டும்? அரிசி கோதுமையைத் தொடாத அயிட்டங்களுக்கு நாம் எவ்வளவு பேரை வேண்டுமானாலும் அழைக்கலாமில்லையா? சாயங்கால கலியாணம் முடிந்தவுடன் மெதுவடை சாம்பார்  மசால் வடை பஜ்ஜி தேங்காய் சட்னி  அசோகா அல்வா பால் கோவா ஜவ்வரிசி பாயாசம்  காபி டீ என்று கொடுத்தோமானால் நிறைய பேர் சாப்பாட்டைவிட இதைத்தான்  விரும்புவார்கள். நம்ம  கிராமத்திலிருந்து வரும் ஜனங்களுக்கு இந்த  விருந்து சரிப்படாது . கலியாணம்னா வட பாயாசத்தோடு எலச்சாப்பாடு கட்டாயம் வேணும். அதனால கிராமத்துக்கும்  நெருங்கிய சொந்த பந்தத்திற்கும்  பத்திரிக்கை வைக்கும் போதே இன்னொரு மண்டபத்தின் விலாசத்தைக்கொடுத்து விடுவோம். டிபன் வகையாரவ சாப்புட்டுட்டு  அவுங்க மொள்ள எலச்சாப்பாட்டுக்கு வருட்டும். ஆபீசர்கள் வந்தா 150 பேருக்கு கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாக்கூட சமாளிச்சிக்கிலாம். அவுங்களும் நம்ம மனுஷங்கதானே?
அம்மா எப்போதுமே சாமர்த்தியசாலி! சட்டத்தின் ஒரு ஓட்டையை கண்டுபிடித்த கெட்டிக்காரி!! இந்த ஓட்டையை உபயோகப்படுத்தி நிறைய கலியாணங்கள் வேண்டிய விருந்துகளைக் கூப்பிட்டு  புதுசு புதுசான தினுசு  தினுசான உணவுகளைக் கொடுத்து அவர்களை மகிழ்வித்தது உண்மை!
நாங்கள் சின்னப்பிள்ளைகளாய் மே மாசத்தில்  கிராமத்து வீட்டை நதம் பண்ணுகையில்  நிலாச்சாப்பாடு என்ற விருந்து அதில் முக்கிய பங்கு வகிக்கும்!
பெரியவர்களாய் எங்கள் குழந்தை குட்டிகளோடு போகையிலும் இந்த நிலாச்சாப்பாட்டு விருந்துக்கு நாக்கை தட்டிக்கொண்டுதான் போவோம்!
இந்த விருந்தில் பிரமாதமான அயிட்டங்கள் எல்லாம் கிடையாது. மத்தியானம் வைக்கும் சாம்பார் இந்த விருந்தின் பொருட்டு ரெட்டை மடங்காகும். அது போலவே உரைக்கு ஊற்றும் தயிரும் அதிகமாகவே இருக்கும். பெரிய பெரிய குண்டான்களில் சாம்பார் சாதத்தையும் தயிர் சாதத்தையும் அடுப்பாங்கரையில் பிசைந்து தூக்க முடியாமல் தூக்கி வரும் அத்தை சின்னம்மாக்கள்  வாசலில் நடுவில் உட்கார்ந்து கொள்வார்கள். நொறுக்கின அப்பளம் ஊறுகாய் ஜாடி குண்டான்களோடு துணைக்கு வந்துவிடும்.  சுத்தி உட்கார்ந்திருக்கும் சிறுசுகள் கூட்டம்  இந்த செட் அப்பை பார்க்கையிலேயே ஜொள்ளு விட ஆரம்பித்துவிடும்.
சாம்பார் சோற்று உருண்டைகளும் தூவப்படும் அப்பளமும் நீட்டிய கைகளை நிரப்புகையில் மனசு துள்ளாட்டந்தான் போடும்!! எங்கள் சிரிப்புகளோடுஅந்த  சோறும் அமுதமாய்! அது முடிந்தவுடன் தயிர்சாதமும் அதன் தலையில் ரத்தினமாய்  வீற்றிருக்கும் ஊறுகாயும்!! எல்லாவற்றையும் ஒரு கை பார்த்தவுடன்  பின்னாலே கிடக்கும் பாப்பா கொளத்திலே கை கழுவும் சாக்கில் தண்ணியை ஒரு அலம்பல் பண்ணி விட்டு வரும் அந்த நிலாச்சாப்பாட்டு சுகம் இன்றைக்கும் பசுமைதான்!!   
பிகு: இந்த நிலாச்சாப்பட்டுக்கு நாங்கள் நிலாவை எதிர்பார்ப்பதில்லை! எங்கள் நச்சரிப்பு தாங்க முடியாமல் பெரியவர்கள் எடுக்கும் முடிவிலேயே எங்கள் நிலாச்சாப்பட்டு விருந்து தொக்கி இருந்தது!
ஒண்ணுமில்லாத சாம்பார் சோற்றையும் தயிர் சாதத்தையும் விருந்தாக்கி மகிழ்ந்தது ஒரு பக்கமென்றால் ஏண்டா போனோம் என்று சொல்ல வைத்த ஒரு விருந்து அனுபவம் எங்கள் இருவருக்கும்!!
முந்தின நாள் ஒரு பிசினெஸ் மீட்டிங். நெருங்கிய நண்பரும் அதில் சேர்த்தி. மீட்டிங் முடிந்த பின் நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அவர் எங்களை அடுத்த நாள் மதியம் அவர் வீட்டிற்கு சாப்பிட அழைத்தார். எங்களோடு கூட இன்னும் மூன்று நண்பர்களுக்கும் அழைப்பு.
அழகான புராதன வீடு. கேட்டிற்கு வந்து வரவேற்றார் நண்பர். அந்த பழைய வீட்டிற்கு அதன்  சிவப்பு நிறத் தரை ரொம்பவும் பாந்தமாய் இருந்தது! புத்தகங்கள் நிறைந்திருந்த அவரது அறை அவரது படிப்பாற்றாலுக்கு கட்டியம் சொன்னது!
" வாங்க சாப்பிடப்போகலாம் " என்றவரை பின்  தொடர்ந்து சாப்பாட்டு அறைக்குச் சென்றோம். செட்டி நாட்டு ஸ்டைலில் தலை வாழை இலை எங்கள் வருகையை எதிர்பார்த்திருந்தது. வணக்கம் சொன்ன அவரது மனைவி நாங்கள் உட்கார்ந்த உடன் இலைகளுக்கு தண்ணீர் தெளித்தார். அவர் பரிமாறுகையிலே நண்பர் கிளம்பி வெளியே போய்விட்டார். இலைகள் நிரம்பி வழிந்தன. பரிமாறல் முடிந்த உடன் அவர்கள் சமையல் அறைக்குள்  நுழைந்து கொண்டார்கள்.எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நண்பர் எங்களோடு இருந்தால் பேசிக்கொண்டே சாப்பிடலாமே. அவர் சாப்பிடாவிட்டாலும் நம்மோடு பேசிக்கொண்டிருக்கலாமே. இல்லை அவரது மனைவியாவது நம்மோடு பேச்சு கொடுக்கலாமே மனசுக்குள் ஒரு ஆதங்கம். கட்டியக்கார சோறு போல நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் அவ்வப்போது சமையல் அறையிலிருந்து எட்டிப்பார்த்த அவர் மனைவி எங்கள் இலையில் காலியான இடத்தை பூர்த்தி செய்துவிட்டு மறுபடியும் உள்ளே போய் ஒளிந்து கொண்டார்! என்ன ஒரு தர்ம சங்கடம்? மறுபடியும் அவர்கள் எட்டிப்பார்ப்பதற்குள் நாங்கள் உஷாராய் கை கழுவ தயாராகிவிட்டோம். எப்படாப்பா வெளியே போவோம் என்ற அவதியோடு நன்றி சொல்லி  விடை பெற்றுக் கொண்டோம்! அமுதமே ஆனாலும் அதில் கனிவு சேராவிட்டால்....? எங்கள் வாழ்க்கைக்கு இது ஒரு பாடமோ?!
இது  போன்றே தனியாகச்சாப்பிடும் இன்னொரு சூழ்நிலை எங்களுக்கு. பிள்ளைகளையும் கட்டாயம் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என ஆங்கிலோ இந்தியன் நண்பர்கள் தங்கள் பையனின் புது நன்மை விருந்துக்கு அழைக்க வீடு வரை  வந்திருந்தனர். அந்த அன்பான அழைப்பை தட்டமுடியாமல் அங்கு சென்றிருந்தோம். தெருவில் போட்டிருந்த ஷாமியானா நாற்காலிகள் நிரம்பி இருந்தன. எங்கே சாப்பாடு போடப்போகிறார்கள் தெரியவில்லையே என நினைத்துக் கொண்டிருக்கையில் தம்பதியர் பையனை ஆசீர்வதிக்க எங்களை உள்ளே அழைத்தனர். சாமி மாடம் அழகாக ஜோடிக்கப்பட்டு பையனுக்கு  சிங்காரிக்கப்பட்ட  நாற்காலி அதன் முன் போடப்பட்டிருந்தது.
 பையனுக்கு சிலுவை போட்டுவிட்டு  கொண்டு வந்த பரிசைக்கொடுகிறோம். தம்பதியர் எங்களை ஒரு அறைக்கு அழைத்து செல்கிறார்கள். " எங்கள் மனசு போல வீடு பெரிசு இல்லை. ஹால் எடுத்துப்பண்ண பட்ஜெட் இடம் கொடுக்கவில்லை.. ஆனாலும் உங்களையெல்லாம் வரவேற்று விருந்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் எங்கள் இருவர் மனசு நிறைய. அதனால எங்கமூன்று அறைகளையும் இண்ணைக்கி டைனிங் ஹாலா  ஆக்கிட்டோம். உங்களுடைய அறை இங்கே. எல்லா உணவுவகைகளையும் மேஜையில் வைத்திருக்கிறோம். பிள்ளைகளோடு பிரியமாக திருப்தியாக சாப்பிடுங்கள் அப்பைக்கப்போது நாங்கள் வந்து  பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி கதவில்லாத அந்த அறையின் திரைச்சீலையை ஒரு புன் முறுவலோடு  இழுத்து விட்டார்கள். தனியாகத்தான் அந்த விருந்தை சாப்பிட்டோம். ஆனாலும் அன்று வயிறும் மனசும்  நிறைந்துபோய் நின்றதென்னவோ உண்மை! 

வெள்ளை வேட்டிக்காரரோடு தொடங்கிய விருந்துத்  தொடர்கதையில்   அன்பான ஆங்கிலோ இந்திய தம்பதியருடன் முடிந்த சுகத்தில் அந்த ஒத்தை நெருடலை மட்டும் பெரிசு படுத்தாமல் இருக்கக் கற்றுக்கொள் என்றது என்மனசு!!  

Saturday, 3 August 2019

சரித்திர நாயகர்கள்


ரொம்ப உன்னிப்பாக கவனமாக கேட்பது போல் ஒரு பாவனை. மனசுக்குள்ளே எப்படா நிறுத்தித் தொலையும் இந்த கெழம் என்ற அங்கலாய்ப்பு.
கை நிறைய நேரம்...... செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த ரிட்டையர்மெண்ட் வயசை இந்தியாவில் பேசாமல் எண்பதுக்குக் கொண்டு போய்விடலாம்.
 "இந்த மனுஷனிடம் வசமாக மாட்டிக்கொண்டோமோ?" அந்த பெரியஷோ ரூமின் சேல்ஸ்மேன் ஒரு உதைப்போடுதான் நின்றான்.
" அந்த காலத்துல எங்கப்பா மளிகைக்கடையில பொட்டணம் கட்டிவரும் சணல் நூலையெல்லாம் கூட சேர்த்து வச்சுடுவார்."
" அப்படிங்களா?" பவ்யமான பதில்
 அந்த குப்பையை இவுரு என்னா பண்ணப்போறாரு?
அவனது பவ்யம் அவர் மனசைத்தொட்டிருக்க வேண்டும்.
" நான் சின்னப்பையனா இருந்தப்ப வாங்கின பிலிப்ஸ் ரேடியோ இன்னம் வேல பண்ணுதுப்பா."
லண்டன் நடுவுல இருக்கிற ஓலகப் பெரிய கடை  ஹெராட்ஸ் கூட  இண்ணைக்கி " ஹெராட்ஸ்ஸுக்காக சீனாவில் பண்ணினது" என்ற லேபிளோடுதான் விக்கிறான்! "உபயோகி விட்டுக்கடாசு" என்பதே இன்றைய தத்துவம் என்பதை இவருக்கு எப்படி உணர்த்தித் தொலைவது?
ஆனாலும் " இந்த மனுஷன் இண்ணைக்கி பெரிய வியாபாரத்தை  கொடுக்கறவரா இருந்தா? வாழ்க்கையே நம்பிக்கையிலேதான் ஓடுது. இவரப் பகைச்சிகிட்டு அனாவசியமாக என் ஊக்கத்தொகையை இழப்பானேன்? ஆமாஞ் சாமி போடுறதுல நஷ்டம் ஒண்ணுமில்ல" என்ற கணக்கில் சேல்ஸ்மேனின் 'அப்படிங்களா' இன்னும் உற்சாகத்தோடு வெளிக்கிளம்ப அவர் இன்னும் சுறுசுறுப்பாகிவிட்டார்.
" ஒரு ப்ளேட எத்தன நாளைக்கி உபயோகிக்கலாமுண்ணு நீ சொல்லு பாக்கலாம்" ராப்பூரா செல்ல நோண்டிகிட்டு கிடக்கும் அவனுக்கு செல் அலாரத்துக்கு அப்பாற்பட்டு அம்மாவுடைய கடைசி நிமிண்டலுக்கு மட்டும் கீழ்ப்படியும் அவன் ஜிப்ஜிப் என்று பிளேடு என்ன என்று அறியாத கில்லெட் ஷேவிங் மற்றும் குளியல் வேலைகளை முடிக்கும் அவன் தெரியாத பிளேடு என்ற ஐயிட்டத்தைப்பற்றி எதற்காக நின்று நிலைத்து யோசிக்க வேண்டும்?
" தெரியிலிங்களே சார்"
" நல்லா கேளுப்பா ஒரு பிளேட நான் ஆறு மாசத்துக்கு உபயோகப்படுத்துறேன்...."
பையன் ஆச்சரியப்பட்டுப் போன பவாலாவோடு போஸ் கொடுத்தான்.
" இதுல ஒரு சின்ன சூட்சமம் இருக்குப்பா. அத ஒனக்கு சொல்லி குடுத்தேண்ணு வச்சிக்க நீ உட மாட்ட போ..... ஒரு பிரமிட் மாதிரி கொஞ்சம் மொத்தமான பேப்பர்ல பண்ணி தண்ணி படாத எடத்துல வச்சிடு. காலையில ஷேவ் பண்ணுன ஒடனே துண்டால பிளேட நல்லா தொடச்சிட்டு அந்த பிரமிடுக்குள்ள வச்சிரு. ஆறு மாசத்துக்கும் பளபளண்ணு புதுப்பொண்ணாட்டம் இருக்கும். ஆண்டாண்டுகளுக்கு அழியாமல் நிற்கும் எகிப்திய மம்மிகள்தாம்  அவன் முன் ஆஜர் கொடுத்தன!
சின்ன சின்ன துண்டு ரின் சோப்ப சேத்துவச்சு ஒரு வெள்ளதுணியில முடிஞ்சு அதால துணி தொவைக்கிற அம்மாவ அவன் அப்பா அந்த ஓட்டு ஓட்டுவார். இவுர்   பிரதாபங்களைக் நான் இண்ணைக்கி சொன்னேண்ணு வச்சிகிங்க உழுந்து பொரண்டுதான் சிரிக்கப் போகிறார்.
ஏகத்துக்கு கத கேட்டுட்டோம் எப்பதான் இவுரு வாங்க வந்த சாமானப்பத்தி  பேசப்போறாரோ தெரியிலியே...... என்ன யுக்தியால இவுர வந்த காரியத்துக்கு இழுத்து கொண்டாறதுண்ணு இவன் மண்ட காஞ்சி நிக்கும்போது  "என்னோட டிவி ரிமோட் வேல செய்ய மாட்டங்குதுப்பா" சொல்லிகிட்டே அவரோட சோல்னா பையிலேர்ந்து  மொழுக்கையான ஒரு வஸ்துவை அவனிடம் எடுத்துக்காட்டினார்.
 "ஒங்க கடையில டிவி வாங்கும்போது நீங்க குடுத்ததுதான்."
குறிகாட்டும் பெயிண்ட் எல்லாம் போயிருந்த அந்த புராதனப்  பொருளில் அவன் அசந்துதான் போய்விட்டான். இந்த அல்ப பொருளுக்காகத்தான் இந்த மனுஷன் இவ்வளவு பீடிகை போட்டாரா?
 "இந்த ரிமோட்டுக் கூட ஒரு பிரமிட் பண்ணி வச்சு பாத்தேன். பருப்பு வேவ மாட்டங்குது போ"
"சார் எப்ப டிவி வாங்குனிங்க?"
" அஞ்சு வருஷமும் இருபது நாளும் ஆவுது." என்றவர் அவர் பர்சுக்குள் பத்திரமாக மடித்து வைத்திருந்த பில்லை எடுத்துக்காட்டினார். அவன் பிரமிப்பு உச்சாணிக்கிளையில்!!
 பொதுவாக டிவிக்கு வாரண்ட்டி ஒரு வருஷம் தான். ஸ்பெஷல் வாரண்ட்டி ரெண்டு வருஷம் தாக்கு பிடிக்கும். இந்த வாரண்ட்டி கார்டிலேயே சுத்தமா "எம்பொறுப்பு இதுக்கெல்லாம் கெடையாது என்று ஏகப்பட்ட அயிட்டங்கள பிரிண்ட் பண்ணியிருப்பார்கள்." இவுர மாதிரி ஆட்கள் கம்பெனிய  கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு இழுக்காம இருக்க  ஒரு டிப்பார்ட்மெண்ட்டே வேல செய்யுது. இவ்வளவு நாள் இவர் டிவி சொகமா வேல செய்யறதே பெருசு... இதுல  என்னாண்ணா ரிமோட்ட தூக்கிகிட்டு வந்து நிக்கிறாரு.
தொண்டையை கனைத்துக்கொண்டே
" சார் ரிமோட்டுக்கெல்லாம் வாரண்ட்டி கெடையாது சார்" என்றான்.
"என்னாத்த வாரண்ட்டி குடுத்து கிழிச்சிங்க போங்க...... பொடிப் பொடி எழுத்துல.... மனுஷன் பூதக்கண்ணாடிய வச்சு பாத்தாக்கூட ஒங்க வாரண்ட்டி என்னாண்ணு வெளங்கமாட்டங்குது ... உண்மையா நீங்க வாரண்ட்டி குடுக்குற ஆளுகளா இருந்தா பெரிய எழுத்துல தெளிவா பிரிண்ட் பண்ணுங்க... ஒனக்கு இண்ணைக்கி ஒரு சவால் உடுறேன். இந்த நிமிஷம் என் வீட்டுக்கு வா... அங்க ஒரு கடிகாரம் அறுவது வருஷமா ஓடுது. அதுக்கு வாரண்ட்டி எவ்வளவு தெரியுமா ஒனக்கு ...? நான் சொல்றத நீ நம்பணும்.... அம்பது வருஷம்..... அம்பது வருஷ  காரண்ட்டி குடுத்திருக்கான்யா அதுவும் ஒங்க மாதிரி தப்பிச்சிப்போற பொடிப்பொடி எழுத்துல இல்ல... அது மூஞ்சி மேலயே தெளிவா எழுதி இருக்கான்! அந்த காரண்ட்டியத் தாண்டி அது பத்து வருஷத்துக்கு ஓடிகிட்டு கெடக்கு..... அவன் மனுஷன்யா"
பொழிஞ்சு தள்ளுகிற  இந்த காரண்ட்டியின் மொத்த  உருவை என்ன செய்யுறது என்று கொழம்பிப்போன சேல்ஸ்மேன் "பேசாம ஒரு ரிமோட்ட நாம வாங்கி அவுர் கையில குடுத்துடலாமா..... ஊரு பூரா விரிஞ்சு கெடக்க மெர்சி எலக்ட்ரானிக்ஸ்ல சைனா ரிமோட்ட டஜன் கணக்கில  விக்கிறான். ஆனா ஒரு செகண்ட் யோஜன செஞ்ச அவன்  "அந்த ரிமோட் சரியா வேல பண்ணுலண்ணா இவுர திரும்ப  சந்திக்கிற தில்லு ஒனக்கு இருக்காண்ணு" தன்னையே கேட்டுகிட்டான். தலைவலியும் காச்சலும் தனக்கு வந்தாத்தானே தெரியும். விக்கிரமாதித்தன் கதையில் வர்ர வேதாளம் போல இவுரு உடும்புப்புடியில மாட்டிகிட்டு........  யப்பா வேணாஞ்சாமி என முடிவு பண்ணி பிரம்ம பிரயத்தனப்பட்டு அவுர  வெளிய கெளப்பரத்துக்குள்ள அவனுக்கு தாவு தீந்து போச்சு!     
இன்னொரு சரித்திர நாயகனை சந்திப்போம்.
வீட்டு வரவு செலவு கணக்கு நோட்டை பேத்தியிடம் காட்டுகிறார் தாத்தா. எக்ஸலண்ட் தாத்தா...... என்னா நீட்டா கோடு போட்டிருக்கிங்க........ (கடைகளில் விக்கிற அக்கவுண்ட்ஸ் நோட்டு வெல ஜாஸ்தியா இருக்குண்ணு தாத்தா வாங்கமாட்டார் என்பது  வீடறிந்த உண்மை!)
இதப்போய் பெருசா சொல்றியே..... அந்த காலத்தில என்னோட அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட் நோட்டுகள வர்ரவன் போறவன்லாம் கண்ணுலதான் ஒத்திக்குவானுக. என் பெட்டி கேஷ் ரிஜிஸ்டர நீ பாக்குணுமே...... இப்புடி கரக்டா வச்சிருந்ததால்தான் மாசத்து பேலன்ஸ் ஷீட்டை அவனவன் நாலஞ்சு நாள் அல்லாடுற விஷயத்த அரை நாளுலய  முடிச்சி எறிஞ்சிடுவோம்!
சி.ஏ பரிட்சையை ஒரே மூச்சிலே அருமையான மார்க்குடன் பாஸ் பண்ணின தாத்தாவின் பேத்தி  "ஃ பர்ஸ்ட் கிளாஸ் தாத்தா....."என்று ஷொட்டு கொடுத்தாள்.  ஆனாலும் தாத்தாவின் மனசை நோகடிக்காமல் அவரை கம்ப்யூட்டர் பக்கம் எப்படி இழுப்பது? மனசுக்குள் அவளுக்கு ஒரு நப்பாசை.
தாத்தாவின் கருத்தில் கடிதம் எழுதும் அழகான கலையையே  அழித்து ஒழித்து கெக்கலிக்கும் செல்போன் மாதிரி " நேர் கோடா குறுக்குக்கோடா எத்தனை கோடி வேண்டும் சார் எனக் கேட்காமலேயே  கோடியாய் கோடிட்டுக் காட்டும்" இந்த கம்ப்யூட்டரை நினைத்தாலே அவருக்கு ஒரு காழ்ப்புணர்ச்சி. நம்ம கஷ்டப்பட்டு வெகு கவனத்தோடு  ரூலர் வச்சி பண்ணுன ஒரு வேலைய  ஒரு வெரலக் கூட நவுத்தாம எவ்வளவு அநாவசியமாய் செஞ்சுத்தொலையுது பாரு. தன் திறமைக்கு சவால் விடும் ஒரு பெரும் எதிரியாகவே அவர் கம்ப்யூட்டரை பாவித்தார்.
மாசத்து பேலன்ஸ் ஷீட்டை எல்லாம் உட்கார்ந்து கணக்குப் பண்ண வேண்டிய அவசியமே இல்லாமல் தானாகவே சரிபார்த்துக் கொள்ள வல்லது இந்த கம்ப்யூட்டர். இதையெல்லாம் என் கெட்டிக்கார தாத்தாவிடம் நாசூக்காய் சொல்லவேண்டும். அவரை கம்ப்யூட்டருக்குள் எப்படியாவது புகுத்திவிட வேண்டும் என்ற கங்கணம் அவளுக்குள்ளே.
பேத்தியின் தயவில் "தெரியாத வெத்தைகளுக்கு கம்ப்யூட்டர்" (computer for dummies) என்ற புத்தகம் வீட்டிற்குள் நுழைந்தது! கம்ப்யூட்டர் ஒன்றும் தாத்தா ரூமில் உட்கார்ந்து கொண்டது. ட்யூஷனுக்கு பேத்தி ரெடி. சாமி வரங்குடுக்க தயாரா இருந்தாலும் பூசாரி ரெடியில்லியே என்னா பண்றது? ரெண்டே ரெண்டு வகுப்புக்குப்பிறகு " அடி போடி பொண்ணு" என்ற  செல்லமான தட்டுலோடு தாத்தா கம்ப்யூட்டருக்கு  மங்களம் பாடிவிட்டார்!! 
செல்லமான தட்டுதலோடு தாத்தா நிறுத்திக்கொள்ளவில்லை.
" ஒனக்குத்தெரியுமா பாப்பா? இப்பதான் ஈசல் புத்தாட்டம் ஊருக்கு ஊரு நூறு மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மொளச்சு கெடக்கு. நான் படிச்சப்ப தமிழ் நாட்லயே எண்ணி மூணே மூணு மெட்ரிக் ஸ்கூல்தான். கணக்கு எத்தினி பேப்பர் தெரியுமா? மூணு பேப்பர்!! அப்பல்லாம் பேப்பர் கரெக்ஷன் ரொம்ப ஸ்டிரிக்ட். இப்பமாதிரி அள்ளி குடுக்க மாட்டானுக.  நீ எல்லா கணக்கையும் சரியாப்போட்டிருந்தாக்கூட எதாவது ஒரு சின்ன மிஸ்டேக் இருக்கா எங்கயாச்சும் ஒரு மார்க்க கொறைக்கலாமாண்ணு கண்ணுல வெளக்கெண்ண ஊத்திகிட்டு பேப்பர துருவித்துருவி பாப்பானுக! அப்புடியும் ஐயா எரநூறுக்கு  எரநூறுதான். அதுக்கு என்னா காரணம் தெரியுமா ஒனக்கு? அப்பல்லாம் வாய்ப்பாட தெனமும் தலகீழா ஒப்பிக்கணும். கணக்கு க்ளாசில நொழஞ்ச ஒடன மனகணக்கோடதான் வாத்தியார் கிளாச தொடங்குவாரு!!
இடை மறிச்ச பேத்தி " அதனாலதான் தாத்தா நான் ஒங்கள கம்ப்ப்யூட்டர் கத்துக் சொல்றேன். இவ்ளோ பண்ணுன  ஒங்குளுக்கு கம்ப்ப்யூட்டர் ஒரு ஜுஜுபிதான்......
நான் சொல்றனேண்ணு பாரு பாப்பா  இந்த கம்ப்ப்யூட்டரால ஒலகம் பூரா  ஓதவாக்கரைகளும் சோம்பேறிகளும் மக்குகளுந்தான் பெருகப்போறானுக. பேங்குக்கு போ 'சர்வர்  டவுணு சார்.... எலக்ட்ரிசிட்டி பில் கட்ட போ அங்கயும் சர்வர் டவுணு சார்....'  கேசுதான்! ஊர் கத பேசி  பேசிகிட்டு வெட்டியால்ல ஒக்காந்து கெடக்கானுக.
அவருடைய கலை உணர்வும் பழங்காலத்திலேயே நின்று போன ஒன்று.
என்னத்தம்மா பரத நாட்டியம் ஆடுறாங்க இண்ணைக்கி? மேடையில இடது பக்கத்துல கம்பீரமா ஒக்காந்திருக்கும் பாட்டுக்காரர் நட்டுவனார் மிருதங்கம் ஃ ப்ளூட் வயலின் வாசிக்கிறவங்க காணாவே பொயிட்டாங்க. அதுக்கு பதிலா ரெக்கார்டட் ம்யுசிக் வச்சிகிட்டு பொம்ம மாதிரி ஆட்டம்! பால சரஸ்வதி ஆட்டத்த நீ பாத்திருக்கியாம்மா? இல்ல ஓங்க கம்ப்ப்யூட்டருக்குள்ளையே போய்ப்பாரு. பாட்ட பாடிகிட்டே பாவத்தையும் அபிநயத்தையும் அள்ளி அள்ளி குடுப்பாங்க பாரு சபாவே பொட்டிப்பாம்பாட்டம்  மயங்கி போய் கெடக்கும். அந்தம்மா " கிருஷ்ணா நீ பேகனே பாரோண்ணு" கொரெலேடுத்து பாடிகிட்டே ஆடும்போது அந்த கிருஷ்ணனே மேலேருந்து எறங்கி வந்து அவங்க ஆட்டத்தோட சொழண்டு சொழண்டு ஆடி  நம்மள மயக்கிடுவான்!
பேத்திக்கு தலையாட்டி வைப்பதைத்தவிர வேறு வழி உண்டா என்ன?!
வீட்டிலே விசேஷங்களுக்குக் கூடுகையில் "ஹாய் தாத்தா" வோடு பேரன் பேத்திகளின் சம்பாஷணைகள் முடிந்து போகும். அப்புறம் உறவுகள் சம்பந்தங்கள் சம்பாஷணைகள் பூரா அவரவர் செட்டுகளுடன் மட்டுமே!
 "ஒடஞ்சு போன ரெக்கார்டாட்டம் தாத்தா சொன்னதையே சொல்லிகிட்டு இருப்பாங்க எத்தினி தடவதான் அதையே கேக்கிறது?" சின்னதுகளின் ஒட்டு மொத்த அபிப்ராயம் அது!!
இருந்தாலும் சரித்திரங்கள் நம் வாழ்வின் அடிப்படை ஆதாரம் இல்லையா? தாத்தாவின் மனஉறுதியும் சிந்தனைத்தெளிவும் வேறொரு ரூபத்தில் அவர்களிடம்  வரத்தான் போகிறது. மனுஷர்களுக்குமேல் மெழுகைத்தடவி அவர்களையே பந்தங்களாக உபயோகித்து மகிழ்ந்த கொடூர மன்னன் நீரோ நமக்கு பாடம் தரவில்லையா? லட்சக்கணக்கான யூதர்களை  மிருகங்களாக நடத்தி கொன்று குவித்த ஹிட்லர் எப்படி வாழக் கூ டாது என்பதற்கு முன்னுதாரணம் இல்லையா? கத்தியின்றி ரத்தமின்றி மன உறுதி ஒன்றையே ஆயுதமாகக் கொண்ட காந்தி மகான் நம் சரித்திரம் இல்லையா? எங்கள் வீட்டிலேயே எங்கள் கொள்ளுதாத்தா பெரிய குடிகாரராம். நீரகாரத்திற்குபதில் சரக்கைத்தான் ஊற்றிக் குடிப்பாராம். எங்கள் தாத்தா அதிலிருந்து பெரியதொரு பாடத்தை கற்றுக்கொண்டார். கற்றதோடு நிற்காமல் உயர்ந்த எண்ணங்களால் திறமைகளால் அந்த கிராமத்தின் நாட்டாராக அல்லவா கொடிகட்டி பறந்தார்! சிறுசுகளே வாலிபங்களே  உதவாது என பழைய சந்ததியை ஒதுக்கி விடாதீர்கள். கற்று மகிழுங்கள். உயர்ந்து வாழுங்கள்!
பழைய சந்ததியே நாமும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே. இந்த சந்ததி இடைவெளியை ஜெனரேஷன் கேப்பை எப்படிக் குறைக்கலாம் என்பதில் குறியாய் இருப்போம். நமது மட்டுமே ஒஸ்தி என்ற குரங்குப் பிடியிலிருந்து விட்டு விடுதலையாகி புதிதையும் சிலாகிக்கும் தன்மையை நம் வாழ்வில் புகுத்த முயன்று கொண்டே இருப்போம்! சுகம் பெறுவோம்!!

Wednesday, 3 July 2019

கலாச்சாரத்தின் கோணங்கள்


எனக்கு அந்த விளம்பரம் இன்னமும் ஒரு புரியாத புதிர்தான்!
ஒரு பிரபல ஹிந்தி நடிகர் கிரிக்கெட் பேட்டால் ஆரஞ்சு கலர் புழுதியால் தூள் கிளப்பிக்கொண்டே 'நாக்கிலே குங்குமப்பூ மனதிலே உற்சாகமும் இருந்தால்' கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி நமதே  என்பார். மனதிலே உற்சாகத்திற்கு குறை ஒன்றும் இல்லை. எண்பத்தியொரு வயது என் அக்கா பதினாறு வயது  பேரப்பிள்ளைகளுடன் நடுச்சாமம் தாண்டி குதித்து கும்மாளமிட்டு பார்க்கும் உற்சாகம்  இந்தியா முழுமைக்கும் நடக்கும் இந்த விஷயத்தின் ஒரு சின்ன சாம்பிள்தான்! இது ஒரு பக்கம் என்றால் நேற்று இங்கிலாந்தின் பர்மிங்காம் ஸ்டேடியத்தில் 87 வயதான ஒரு பெண்மணி நம் இந்திய அணி  ரன் எடுக்கும் ஒவ்வொரு தடவையும் காகிதக்குழல் ஊதலால் பீப்பீ.. சத்தம் எழுப்பி நம் அணியை உற்சாகப்படுத்திகொண்டே  இருந்தது மட்டுமல்லாமல்   பக்கத்தில் இருந்த எல்லோரையும் மகிழ்வித்து கொண்டிருந்தார்
 நம்முடைய பிரச்னை இந்த 'நாக்கிலே குங்குமப்பூ' விஷயம்தான்.  ஆயிரம் முறை பார்த்தாலும் அது புரிவேனா என்கிறது. நம்ம தமிழ்க் கலாச்சாரத்தில் 'சென்று வா வென்று வா' சரித்திர சினிமாக்களில் நெத்தியில வக்கிற குங்குமந்தான் நமக்கு தெரிஞ்ச ஒண்ணு. அதப் போயி நாக்குல வைப்பாங்களா என்ன? நெத்தியே வெந்து போம்போது நாக்கு என்னா கதியாவுறது? திங்கக் கூடிய   குங்குமப்பூங்குற வஸ்து என்னா மாதிரி இருக்குமுண்ணு முன்ன பின்ன  தெரியாதவங்கதான் நாம நெறைய பேர் இருப்போம்.
ஆனா இண்ணைக்கு பாத்திங்கண்ணா டிவியில காட்டுற தமிழ் நாட்டு சாப்பாட்டு சமாச்சாரங்களில 'கொஞ்சம் குங்குமப் பூவ ஊற வச்சி பாயாசத்துல கடைசில போட்டு எறக்குங்கண்ணு' ரொம்ப பதனமா என்னுமோ நம்ம இந்த குங்குமப் பூவோடயே பொறந்து வளந்த மாதிரி சொல்றாங்க. ஒரு ஏலக்காய தட்டி போட்டு எறக்கறத  வுட்டுட்டு ஆரஞ்சு கலர்ல சிறு சிறு  நாரா இருக்க சாமானக்காட்டி நமக்கு புதுக்கத சொல்றாங்க.  
" ஏங்க இந்த டப்பா செட்டி நாட்டு மருந்து கடையில போயி குங்குமப்பூ ஒரு டப்பா வாங்கிகிட்டு வாங்க. மகாவுக்கு இப்ப இருந்தே பாலுல போட்டு கலக்கிக் குடுத்தாத்தான் பொறக்கப்போற பிள்ள வெள்ளை வெளேர்ணு இருக்கும். மசக்கையில் பிறந்த வீட்டிற்கு பெண்ணுக்காக அம்மா தன்  கணவரிடம் சொல்லுகிறாள்.
"கேவுருல நெய் ஒழுவுதுண்ணா கேப்பாருக்கு மதி எங்க போச்சுங்கிறேன்....  காக்கா  குஞ்சு வெள்ளையா பொறக்குமா  என்னா? எவனோ காசு பண்ணுறதுக்கு கத உடுறானுவ..." முணு முணுத்துகிட்டே கடைக்கிப்போன வீட்டுக்காரர் வெலயக் கேட்டு அசந்துதான் பொயிட்டாரு!
" இம்புட்டோண்டு டப்பாவுக்கு அம்புட்டு கொள்ள சொல்றான் அந்த ஆளு! என்னா......  நொம்ப அள்ளி கிள்ளிபோட்டுடாம பாத்து ஆளு." அறிவுரையுடன் டப்பா கை மாறுகிறது. மசக்கை மருந்து சாமான்களோடு இந்த குங்குமப்பூ டப்பாவும் குடியேறுகிறது! 
" குங்குமப் பூவ பாலில போட்டு தெனமும் ராத்திரி பொண்ணுக்கு குடுக்கக் குடுடியம்மா. பிள்ளை செவப்பா பொறக்கும்" வர்றவங்க போரவங்கல்லாம் குடுக்குற இந்த அறிவுக்கு ஒவ்வாத அட்வைஸ்ல வாந்தியான
வாந்தியோடு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப்  போராடிக்கொண்டிருக்கும் அந்த மசக்கைப்பெண் குங்குமப்பூ பாலோடும்  தினமும் மல்லுகட்டப்போவது  உண்மையிலும் உண்மை!      

இப்படியான தமிழ்க்கலாச்சாரத்திலே தினப்படிக்கு  விடாப்பிடியாக நடுச்சாமம் தாண்டியும்  கிரிக்கெட் மேட்சுகள் பார்க்கும் வெறியர்களான ரசிகர்களுக்கு அப்பப்போது வந்து எரிச்சலாக தாக்கும்  இந்த "நாக்குல குங்குமப்பூ'விஷயம்   நம்ம 'நாக்கில எச்சி ஒழுவ' வைத்து  நம்ம ஆளுக ஆட்டம்   நம்மை மகிழ்விப்பது என்னமோ சூப்பர்தான் ! 
சில விளம்பரங்கள் எனக்குத்  திகிலை உண்டாக்குகிறது. அழகான அல் ஃ போன்சா மாம்பழங்கள் ....... பாக்கும்போதே நாக்கில் எச்சி ஊறுகிறது. அவ்வளவு பழமும் அடுத்த வினாடி பாட்டிலில் திரவமாக மாறுகிறது. "யப்பா இவ்வளவு மாம்பழங்களும் இந்த பாட்டிலுக்குள்ளையா?! எவ்வளவு சத்து?!அருமையான ஜுஸ்தான்?! மனம் மகிழ்ந்து போகிறது!! ஒரு நாளைக்கி பிள்ளைகளுக்கு வாங்கி குடுக்கணும். விளம்பரம் நல்ல பொருளுக்கு வந்தா மனசு சந்தோஷமாகத்தானே இருக்கு.
 " இதோட மூலம் தெரிஞ்சா நீங்க அந்த பக்கம் தல வச்சி கூட படுக்க மாட்டிங்க." என்றார் என் நண்பர் ஒருவர். 
விவரம் தெரிந்தவர் அவர். "அதுல பாதிக்குப்பாதி சக்கர பாகும் மாம்பழ எசன்ஸும்  பிரிசெர்வேட்டிவுந்தான்!!"
இதைக்கேட்டவுடன் இனம் தெரியாத கோபம் என் மனசுக்குள். சாதாரண மக்கள் நாம் எப்படியெல்லாம் மயக்கப்பட்டு விளம்பரங்களின் மாய வலையால் ஏமாற்றப்படுகிறோம்?!  
இன்னொரு கதையும்  இருக்கு இந்த விளம்பரத்துல! 
மாம்பழங்கள் எல்லாம் பாட்டிலுக்குள் ஜுஸாக மாறிய அந்த கணத்தில் ஸ்டைலான ஒருபெண் அந்த  பாட்டிலோடு தரை குஷனில்(பீன் பேக்) குதித்து உட்காரும்  அந்த நொடியில்   குஷணுக்குள்ளேயிருந்து வெள்ளை வெளேரென்ற தெர்மாகோல் உருண்டைகள்  பிய்த்துக்கொண்டு பொங்கி எழுந்து பனித்துளிகளாக பொழிகின்றது  அந்த வெண் பொழியலில் அந்தப்பெண் துள்ளிக்குதித்தாடி மாம்பழ சாற்றை குடிக்க  இந்த காட்சியைப்பார்க்கும் ஒவ்வொரு தடவையும்  "யப்பா சட்டுண்ணு நிறுத்துங்கடா...... இந்த பறக்குற உருண்டைகள் அந்த பொண்ணு தொண்டைக்குள்ள போயி அடைச்சிகிட்டு  ஆம்புலன்ஸ கூப்பிட வேண்டியதா ஆயிறப்போவுது." அலறல் ஒன்று என் உள்ளே கட்டாயமாக வந்து தொலைக்கிறது!
இதைப்போலவே சந்தோஷத்தைத் தவிர எரிச்சலான  சமாச்சாரங்களை கிளப்பி விடும்  பல வகை விளம்பரங்கள் நம் முன்னே இருக்கின்றன.
வருடக் கடைசி.... பாங்க் மேனேஜரும் துணை பதவியில் இருப்பவரும் முக்கியமான கஸ்டமர்களை கண்டு கொண்டு தங்களோடு தக்க வைத்துக்கொள்ளும் நேரம். ஆதிகாலத்து அலங்கார மாளிகை ஜவுளிக்கடை மாதிரி காலகாலம் தொட்டே அவர்களோடு புழங்கி வரும் நாங்களும் இந்த லிஸ்டில் சேர்த்தி! வீட்டிற்கு வந்து டயரியும் காலண்டரும் பிரியமாகக் கொடுத்து பாங்கிற்கு விளம்பரம் தேடிய  மகிழ்ச்சியோடு விடை பெற்றுச்சென்றார்கள். காலண்டர் சுருளைப்பிரிக்கிறேன். இரண்டு காலண்டர்கள்.  அழகான தாள்கள் அருமையான காட்சிகள் 12 மாதத்திற்கும் 12 காட்சிகள்!! அந்த மனசுக்கு நிறைவு தந்த காலண்டரில் நான் மயங்கிப்போனது உண்மை! இதெற்கெல்லாம் ஆசைப்படும் எங்கள் பூக்காரருக்கு ஒன்றைப் பரிசாக அளிக்கிறேன்.
அடுத்த நாள் பூ கொடுத்துக்கொண்டே "யக்கா ஒங்கிட்ட ஒரு விஷயம் சொல்ணுமே அக்கா கோச்சுக்கபுடாது."
 எதற்காக இவ்வளவு பெரிய பீடிகை ? எனக்குப்புரியாமலே "சொல்லுங்கப்பா" என்றேன்.
"யக்கா காலண்டர் நல்லாத்தான் வடிவா ஆடம்பரமா இருக்கு என் வீட்டு மருமவளப்போல...... ஆனா ரெண்டுமே கவைக்கு ஒதவாது .... ஒரு அமாவாச பவுருணமி போட மாட்டானுக அதுல? அத்த கூட வுடுக்கா   நாங்கதான் பழ்ய பஞ்சாங்கம்...... இத்தயல்லாம் தேடிக்கிணு கெடக்கோம்.
ஒரு நல்ல நாளு பெரிய நாளுகள காலண்டருல குறிக்க மாட்டானுக மனுஷனுக?   ஏம்  பேராண்டி அடுத்த வருசம்   எண்ணைக்கு தீவாளி எத்தினி நாளு பொங்கலுக்கு லீவு அது சனி நாயிரோட சேத்தாப்புல வருதாண்ணு கணக்கு பண்ண வீட்டுக்கு வந்த அந்த மொத  காலண்டர என் கையிலேர்ந்து புடுங்கிக்கிட்டு ஒடுனவன் "தாத்தா நீயே ஒன்  காலண்டர வச்சிக்கோண்ணு" தூக்கிப்போட்டுட்டு பொயிட்டான் யக்கா. ஓசில கெடச்சுதா இல்ல வெல குட்த்து வாங்கினியா?"
பொதுவாக காலண்டர்களை ஜனவரி 1 ந்தேதி ஊரே கூத்தும் கும்மாளமுமாய் வெடி சத்தத்தோடு புது வருஷத்தைக் கூப்பிடும் அந்த விடியற்காலைதான்  பிரித்து மாட்டுவேன். பூக்காரர் புலம்பலை ஊர்ஜிதப்படுத்த சுருளைப் பிரித்துப் பார்க்கிறேன். பூக்காரர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். அமாவாசை பவுர்ணமி நல்ல நாள் பெரிய நாளைக்கூட விட்டுத்தள்ளுங்கள் பேங்க் விடுமுறை நாட்கள் பற்றிய விவரத்தை கூடவா  அதில் குறிப்பிட மாட்டார்கள்? பின்னே எதற்காக அதற்கு காலண்டர் என்று ஒரு பெயர் வேண்டியிருக்கிறது?!
ஒரு சமயம் நாங்கள் பேங்க் மேனேஜரை சந்திக்க வேண்டிய அவசரம்.  சந்தடி சாக்கில் என் காலண்டர் முறையீட்டையும் முன் வைக்கிறேன். ஒரு அசட்டு சிரிப்போடு " இது ஹெட்ஆஃபிஸ் எடுக்குற முடிவுங்க மேடம்." என்றார். நான் விடவில்லை."ஒங்கள மாதிரி  லோக்கல்ல ஹெட்டா இருக்கவங்க நாலு பேரு இத கஸ்டமர் காம்ப்ளன்ட்டா கூட முன்னுக்கு வச்சி பாக்குலாமே." வலி குறைத்த வார்த்தைகளாய் என்னிடமிருந்து. " நல்ல சஜஷன் மேடம் கட்டாயம் இதப்பண்றோம்." டயரியில் குறித்துக்கொண்டார். மனசு நிறைந்த மகிழ்ச்சி எனக்கு!
ஆனாலும் வருட வருடமாய் அதே பாணியில்தான் இருக்கிறது எங்கள் பரிசு!! 
திரும்பவும் மேனேஜருக்கு காலண்டரைக் குறித்து ஞாபகப்படுத்துவதில் எனக்கு சங்கோஜம் ஒன்றும் இல்லாவிட்டாலும் அடிக்கடி அங்கு தலைமை மாறுகையில் எத்தனை பேரிடம்  முட்டிகொள்வது எனப் புரியாமல் கழுதை கிடக்கட்டும் என்று விட்டு விடுதலையாகி
விட்டேன். இன்று வரையும்  அந்தப் பரிசு எங்களுக்கு ஒரு சம்பிரதாய சடங்காக வந்து கொண்டேதான் இருக்கிறது!
ஆனால் என்னால் முடிந்த வருடாந்திர நல்ல காரியத்தை மட்டும் நான் செயல் படுத்த மறப்பதில்லை. காலண்டர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அசந்து மறந்து கூட என் பிரிய பூக்காரருக்கு அதை நிச்சயமாகக் கொடுப்பதில்லை!