Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Wednesday, 30 January 2019

அந்த போதி மரம்



கேட்டுக்குள் நுழையும் போதே கொட்டிக்கிடந்த மரமல்லிப்பூக்களின் வாசனை பள்ளி வளாகத்தை நிறைத்திருந்தது. சின்னஞ் சிறுசுகள் அந்த பூக்களைப் பொறுக்கி ஒண்ணு ரெண்டு மூணு என்ற  சின்னக்கணக்கில் ஈடுபட்டிருந்தனர். மர நிழல்களில் திறக்கப்பட்ட டிபன் பாக்ஸ்களின் கலவை  மணங்கள் மரமல்லியுடன்  கை கோர்த்து புதியதொரு நறுமணத்தை அங்கு உருவாக்கிக் கொண்டிருந்தது!
சலசலத்துக்கொண்டிருந்த அரசமர நிழலடியிலும் ஒரு நண்பர் குழாம் பள்ளியின் ஆர்.ஓ.பிளாண்ட் தண்ணீர் சகிதமாய் மதிய உணவைத்....திறந்தது........
"டேய் ஆண்ட்டி மிஸ் வர்றாங்கடா ......." உற்சாகத்தின் உச்சியில் ஒரு பையன்.
"ஆண்ட்டி மிஸ்...  ஆண்ட்டி மிஸ்... எங்க மரத்த பாத்திங்களா ..... கொஞ்சம் நிமிந்து பாருங்களேன்...." எச்சிக்கையை ஒரு பொருட்டாக்காமல்  அத்தனை கைகளும் மேல் நோக்கின. சிவந்து போன தளிர்கள் மிஸ்ஸின்  வருகைக்கு கட்டியம் கூறுவதுபோல் இன்னும் கொஞ்சம் தலையை ஆட்டிக்காட்டின!  ரசிகையாக கவிஞராக மாறி நின்ற   ஆண்ட்டி மிஸ் என்ற பட்டம் கொண்ட அந்த மாது   அந்தப் பள்ளியையும் அதன் மதிப்பீடுகளையும் உருவாக்கிய சிற்பி!
"என்னா...... சாப்பாட்டோட எல்லாரும் எதாச்சும் சுண்டல் காய்கறி கீர கொண்டாந்திருக்கிங்களா?"
இப்போது ஆண்ட்டி மிஸ்  ந்யுட்ரஷினிஸ்ட்!
"நித்யா சிப்ஸ் கொண்டாந்திருக்கு மிஸ்."
எதோ ஒரு கோள் மூட்டி!!!
"எண்ணைக்கோ ஒரு நாள் சிப்ஸ் தப்பில்லை..... சரியா நித்யா?"
"மிஸ் அம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல மிஸ்...... சளியும் இருமலும்......ஒடம்பு  கணகணண்ணு இருக்குண்ணாங்க... அதனாலதான்.... "
"அப்புடியா நித்யா நீ  ஒண்ணு பண்ணு......... சார் கிட்ட கேட்டுகிட்டு  நம்ம பச்சல தோட்டத்திலேருந்து ஆடாதொடா எல பறிச்சிகிட்டு போ...... கஷாயத்தில பனங்கல்கண்டு சேத்து அம்மாவ ஒரு நாளைக்கி மூணு தடவ குடிக்கச்சொல்லு....... ரெண்டு மூணு நாளுல நல்லா ஆயிருவாங்க..... அம்மாவை கேட்டதா சொல்லு."
"கட்டாயம் சொல்றேன் மிஸ்......."
ஆண்ட்டி மிஸ்ஸின் பல அவதாரங்களில் அன்பு நிறை வைத்திய அவதாரமும் உண்டு!
நூற்றுக் கணக்கான மரங்களைக்கொண்ட அந்த பள்ளி வளாகத்தில்  நம் அரச மரமும் ஒன்று......ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதன் நிழலில் அமர்ந்து பாடம் கற்பித்தலில்  கற்பதில் சுகமே! யோகா கற்றுக்கொடுக்கும் ஆசிரியைக்கும் அது உகந்த இடமே! மரங்களிலேயே அதிக ஆக்சிஜனை அள்ளிக்கொடுக்கும் மரம் அதுவல்லவா! அதனால்தான் அது அரச மரமோ?!!
எப்போதும் போலத்தான் அந்த இலை உதிர்வு காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்துக்கொண்டிருந்தன.. நம் அரச மரமும் கூடத்தான்.... ஆனால் இந்த முறை கொட்டுதல் ரொம்பவும்  வித்தியாசமாக இருந்தது...... இலைகள் சட சட என்று ஒரே சமயத்தில் கொட்டி முடித்த மாதிரி அங்கு மதிய உணவு சாப்பிடும் குழாமிற்குத் தோன்றியது. பக்கத்து மர  நிழலுக்கு இடம் பெயர்ந்த அவர்கள் அரச மரத்தின் சிவந்த துளிர்களை எதிர்பார்த்து  எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள். மரம் ஒல்லிப்பிச்சானாய் ஆனது மட்டுமே மிச்சம்!
ஆண்ட்டி மிஸ்ஸை அரசமரக்குழு அவர்கள்  அறையிலிருந்து கையைப்பிடித்து இழுக்காத குறையாக தங்கள் இடத்திற்கு கூட்டி வந்தது ! மரத்தைப்  பார்த்த அவர்களுக்கும் அதிர்ச்சிதான்...... எலும்பும் தோலுமாய் அது நின்று கொண்டிருந்தது!
"மிஸ் மரத்துக்கு டீபி வந்துருக்கு போல இருக்கு மிஸ். எங்க   தாத்தாவுக்கு டீபி  வந்தப்ப அவுரு இப்பிடித்தான் எளச்சு போய் இருந்தாரு. அப்பா ஆறு மாசம் மருந்து வாங்கிக்குடுத்துல இப்ப நல்லா இருக்காரு மிஸ்... அப்பாவக்கேட்டு அந்த மருந்த நான் வாங்கிகிட்டு வருட்டா மிஸ்......?"
குழாமின் எக்கத்தாள சிரிப்பில் அவனுக்குப் பெருங்கோபம்!
"ரசாயன உரம் போட்டுப்பார்ப்போமா?"
"அது வேணாம் சாணி ஓரந்தான் போடணும் அதான் சத்து. "
"அதுல செவப்பு மண்ண  நல்லா  கலக்கணும்."
"நம்ம ஸ்கூல்ல செய்யுற வெர்மிகம்போஸ்ட்ட போட்டுப்பாப்பமா?" பலாவிதமான  யோஜனைகள்...
அடுத்த நாள் காலை  பள்ளிக்கு ஒரு மாட்டு வண்டி வந்தபோது எல்லோருக்கும் ஆச்சரியம்.ஓட்டிக்கொண்டு வந்தவர் ஒரு பெற்றோர்!
"நச்சரிச்சி தள்ளிட்டாங்க இந்த பய ...  என் அரச மரத்துக்கு ஒரம் வேணும்ப்பா ஒரம் வேணும்ப்பாண்ணு ராப்பூரா  வம்பு....... கொண்டாந்திட்டேன் தாயி! புல்லரித்துப்போனார் ஆண்ட்டி மிஸ்!
யோசனைகள் சிறிது சிறிதாக செயலாக்கம் கொண்டன. சத்துமிகு பஞ்ச காவியமும் ஒரு பெற்றோரின் உபயமாயிற்று. அதோடு கூட மரத்தைச் சுற்றி வட்டமிட்டு கைகோர்த்த உள்ளார்ந்த வேண்டுதல்கள்!
இந்த தவத்தைக் கண்ட ஆசிரியர்களும் ஆண்ட்டி மிஸ்ஸும் மனம் நெகிழ்ந்து போயினர். இவ்வளவு நல்லெண்ணெத்தையும் உள் வாங்கிய இந்த மரம் பேசாமலேயே நிற்கிறதே என்ற ஆதங்கம் வேறே!
" மேம்..... இந்த கோடை விடுமுறை தொடங்கும் போதே அதே இடத்தில் ஒரு அரசங்கன்றை நட்டுவிடுவோம்..... பிள்ளைகள் திரும்ப வருகையில் ஒரு சின்ன செடியாவது அவர்களை சந்தோஷப்படுத்தட்டும்..." ஒரு ஆசிரியையின் யோசனை.
வேலையின் பொருட்டு நாங்கள் பள்ளி செல்கிறோம். உள் சென்று அமர்ந்த போது ஆண்ட்டி மிஸ் என அழைக்கப்படும் என் தங்கை ஆங்கிலத்தின் ஒரு அழகான பொருள் செறிந்த வாக்கியத்தை  எங்கள் முன் வைத்தாள்.
"More things are wrought by prayer than the world dreams of." எவ்வளவு அருமையான வார்த்தைகள் இல்லியா?"
எந்த நிகழ்வைக்குறித்து இதைச் சொல்லுகிறாள் என்பதை உணர முடியாமல் பாக்கியாக நிறையவே நிற்கும் ஸ்கூல் பீஸ் கலக்ஷன் வேண்டுதல் வழியாக வந்து சேர்ந்து விட்டது போலும்  என்று ஒரு யூகம்  கொண்டோம்.
" ஒரே நிமிஷம்  வெளியே போய்விட்டு வந்து மீட்டிங்கிற்கு உட்கார்ந்து கொள்வோம்." என்றவள்  பள்ளி வளாகத்தில் துளிர் விட்டு நின்ற அரசமரத்தைச்சுட்டிக்காட்டி  அதன் பின்  நின்ற பெருங்கதையை எங்களுக்கு சொன்னபோது நாங்கள் நெகிழ்ந்துதான் போனோம் ......
 அன்று  நவம்பர் 15.  2018.  கஜா புயல் தமிழ் நாட்டின் காவேரி டெல்டா பகுதிகளில் கோர தாண்டவம் ஆடிய நாள்.... . மறு நாள் செய்தித்தாட்களும் தொலைத்தொடர்பும்  அழிவின் கோரத்தால் நம்மைக்கலங்க வைத்தன.
தங்கையை அழைக்கிறேன்." திருச்சி அவ்வளவாக பாதிக்கப்படவில்லை என்றுதான் செய்தி இருக்கிறது. பத்திரமாய் இருக்கிறீர்களா?"
"ஸ்கூலில் தான் இருக்கிறோம்........ முப்பது மரங்கள் சாஞ்சு போய் கெடக்கு...... அரச மரமும் கூட." பேசிய குரல்  அவள் உடைந்து போய் நிற்பதை வெளிப்படுத்தியது.......
அந்த பள்ளிக்கு அழகே அங்கு நிற்கும் மரங்கள்தாம். ஞாயிறு விடுமுறை தினத்தை பள்ளியிலேயே செலவழித்து புது மரங்களை உருவாக்கி உள்ள மரங்களை ஈடுபாட்டோடு உயர்த்துவதில் சுகம் காணும்  பள்ளி நிர்வாகியுடன் (தங்கையின் கணவர்) பேசுகிறேன். குரலில் உயிரில்லை. ஒரு மரம் வளர்ந்து ஆளாவதற்கு எத்தனை ஆண்டாண்டுகள் ஆகின்றன என்ற  உண்மையை இருவரும் அறிவோம்.
புயல் விடுமுறை முடிந்து பள்ளி அன்று தொடங்கியது. ஆண்ட்டி மிஸ் காலை அசெம்பிளியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றி  வீட்டை இழந்து பயிர்களை இழந்து உண்ண உணவின்றி உடுக்கத் துணியின்றி நிற்கும் அவலத்தை உணர்வு பூர்வமாக எடுத்துரைத்தார்கள். 
"இதையெல்லாம் பார்க்கையில் அரச மரம் சேர்த்து நாம் இழந்து நிற்கும் முப்பது மரங்கள் ஒரு பொருட்டே இல்லை. நம்மால் முடிந்ததை உடைந்து நிற்கும் மக்களுக்குச் செய்வோமா?" என கேட்டுக்கொண்ட அந்த நேரம் தொடங்கி அந்த பள்ளி மாணவரும்  பெற்றோரும் ஆசிரியர்களும்  அரிசியாக பருப்பாக உடைகளாக பள்ளியை நிறைத்தனர்.
அது ஒரு பணக்காரப்பள்ளி அல்ல...... ஆயினும் மதிப்பீடுகளை முன் வைக்கும் ஒரு ஆலயம்! உள்ளதை  பகிர்ந்து வாழ்வதில்தான் மனமகிழ்ச்சி என்ற தத்துவத்தை மனதில் பதித்து வாழும் ஒரு இடம். ஒரு லாரி நிறைத்த பொருட்களை இடர் பட்டு நிற்போருக்கு அனுப்பி சுகம் கண்டனர் பள்ளி மக்கள்!
"ஆண்ட்டி மிஸ்...... ஆண்ட்டி மிஸ்..... நம்ம அரச மரத்த நிக்க வைக்கபாப்பமா?"
இந்த குரலைக்கேட்டு அவர்கள் திகைத்துத்தான் போனார்கள்!  வேரோடு சாய்ந்த ஒரு மரத்திற்கு எப்படி உயிர் கொடுப்பது?
ஒலித்த ஒரு குரல் பெருங்குரலாய் உருவெடுத்த கணத்தில் சரி சரி அவர்கள் மகிழ்ச்சியைக்கெடுப்பானேன் என உத்தரவு கொடுக்க பலங்கொண்ட இளைஞர் பெற்றோர் கொண்டு வந்த வடகயிறு கொண்டு மெள்ள மெள்ள மரத்தை நிலைக்குக் கொண்டுவந்து அதைச்சுற்றி பாதுகாப்பாய் அரண் கொடுத்தனர்.
ஒரு பத்து நாள் கழித்து முகப் புத்தகதைத் திறக்கையில் நான் ஆச்சரித்தின் உச்சியில்!! சிரித்த முகத்தோடு என் தங்கை! அவளுக்குப் பின்னால் அரசமர இலைகள் சிலவும் அந்த சிரிப்புக்கு உயிர் கொடுத்து நின்றன.
தங்கைக்கு போன் பண்ணுகிறேன். அவள் குரல் கமருகிறது.  "மாகி அது அரசமரமே இல்ல...... இல்லவே இல்ல........  என் குழந்தைகள் எனக்கு அன்பளிப்பாய் கொடுத்த போதிமரம்! 'நம்பிக்கையோடு முயலுவோம்..... முயன்று கொண்டே இருப்போம்' என்ற வாழ்க்கைத் தத்துவத்தை அளித்த புத்தர்கள் என் குழந்தைகள்!!" அவளது உணர்ச்சி பூர்வ பேச்சில் நானும் இரண்டறத்தான் கலந்து போனேன்!!      

Tuesday, 15 January 2019

பேனை பெருச்சாளி ஆக்கி


“கொஞ்சம் ஃப்ரீயா இருந்திங்கண்ணா நீங்க ரெண்டு பேரும் வீட்டு பக்கம் வந்துட்டு போமுடியுமா?" நண்பர் கிருஷ்ணாவின் மனைவி
அந்த வேண்டுதலின் வீரியம் எங்களை உடனடியாக கிருஷ்ணாவின் வீட்டிற்கு இட்டுச் சென்றது.
கிருஷ்ணா ஜாலியான ஆள்! நாலு பேர் ஒண்ணாகச் சேர்ந்தால் அவனுடைய  ஜோக்குகள் வயிற்றைய் புண்ணாக்கி விடும் வலிமை கொண்டது. அன்றைக்கு அவன் 'வாங்க' என்று கூப்பிட்ட  தொனியே சுரத்தற்றுக் கிடந்தது.
"என்ன கிருஷ்ணா ஒடம்பு சரியா இல்லியா என்னா?" நான் கேட்டேன்
"அந்த கதைய ஏன் கேக்கிறிங்க போங்க" ...." பதில் சொன்னது கிருஷ்ணாவின் மனைவிதான். "ஆறு மாசத்துக்கு ஒருக்க எப்பயும் நாங்களா பண்ணிக்கிற  மாதிரிதான் அண்ணைக்கும் மெடிக்கல் செக்கப் பண்ணிகிட்டோம். அவுரு ரிப்போர்ட்டப் பாத்தா சுகர் ஜாஸ்தியாயிக்கெடக்கு. உடனடியா டாக்டர பாத்தோம்."
"டாக்டர் தெனமும் நான் மூணு கிலோமீட்டர் நடக்குறேன். எனக்கு எப்டி இந்த சக்கர வியாதி.....? இன்னோரு தடவண்ணா டெஸ்ட் பண்ணி பாக்கலாமா?" இவுரு டாக்டர கேட்டாரு
"ஃபர்ஸ்ட் கிளாஸ் லேபுங்க அது...... தப்பல்லாம் பண்ண சான்ஸ் இல்ல.... வீட்ல யாருக்காச்சும் சுகர் இருக்கா....?
"தாத்தாவுக்கு இருந்துச்சு ஆனா அப்பாவுக்கு இல்ல.."
"இது வழி வழியா வர்றத்துக்கு வாய்ப்புகள் இருக்கு.. அப்பாவத்தாண்டி ஒங்குளுக்கு அது வரலாம்... இன்னொண்ணு நம்ம மனஅழுத்தம் காரணமாவும் சுகர் அதிகரிக்கலாம். வீட்டுக்கவலைகள் சொந்தபந்த தொந்தரவுகள் ஆபிஸ் பிரச்சனைகள்,.." டாக்டர் சொல்லிகிட்டே போனாரு.
"அவுருக்கு மன அழுத்தமே வராது டாக்டர். வாயத் தொறந்தா ஜோக்குதான்." நாந்தான் (கிருஷ்ணாவின் மனைவி) டாக்டர் கிட்ட சொன்னேன்
"வெளிய ஜோக்கடிக்கிறவங்களுக்கும் உள் மனசுண்ணு ஒண்ணு இருக்கும்மா...... அது எப்பயும் குஸ்தி போட்டுகிட்டே  இருந்துதுண்ணு வச்சிகிங்க.... சுகர் வரதுக்கு சான்ஸ் நெறயவே இருக்கு." எனக்கு பதில் சொன்னவரு இவுரு பக்கம் திரும்பி
"கிருஷ்ணா மனசுக்குள்ள சந்தோஷமா இருங்க எதையும் உள்ள வச்சு மருவாதிங்க....... சக்கர பக்கம் தலைய வைக்காதிங்க உப்பை கொறைங்க...ஊறுகா ம்ஹும்...... கெழங்கு வகையறாவ ரொம்ப சாப்பிடாதிங்க. சக்கரவள்ளிக் கெழங்கு ஓகே...... மாத்தர  குடுக்குறேன் சாப்பிடுங்க. ஒங்க தெனப்படி ஓட்டத்த எந்த காரணம் கொண்டும் நிறுத்தாதிங்க.அதுதான் ஒங்க ஒடம்புக்கு நீங்க குடுக்குற பெரிய டானிக். எண்ணைக்கும்போல ஜாலியாவே இருங்க" ண்ணு சொல்லிகிட்டே மருந்த எழுதிக்குடுத்தாரு.
"கிருஷ்ணா இதுக்கா குடி முழுவுன மாரி ஓக்காந்திருக்க....? சக்கர வியாதி சுலபமா மேனேஜ் பண்ணக் கூடிய ஒண்ணுப்பா . கொஞ்சங் கொஞ்சமா அப்பப்ப சாப்பிடு. எப்பயும் போல வாக்கிங் போ.... எப்பயும் போல சிரிக்க சிரிக்க பேசு." இவர் சொன்னதை நானும் ஆமோதித்தேன்.
"ரொம்ப சுலமா சொல்லிட்டிங்க அண்ணா.... இவுர எப்புடி மேனேஜ் பண்ணப்போறேண்ணு நான்ல  மண்டைய பிச்சுகிட்டு கெடக்கேன்....... அவுங்க வீட்டுப்பக்கம் எல்லாரும் சக்கரமண்டி ஜாதி போங்க...... மத்தியானம் சாப்பிட்ட ஒடனே ஒரு ஸ்வீட்ட உள்ள தள்ளிடணும்..... ராத்திரி பாடும் அதே மாதிரிதான்...... அமையா சமயத்துல சாய்ங்காலம் டீ குடிக்கிறப்ப ஸ்வீட் இருந்தாக்க ரெட்டிப்பு சந்தோஷந்தான். திருச்சியிலேருந்து விருந்தாளிக வந்துட்டா அந்த சந்தோஷத்துக்கு எல்லையே கெடையாது....... மயில் மார்க் கடையிலேருந்து ஒரு கிலோ லட்டுல்ல அவுங்க கூட வரும்!! "ஊறுகா இல்லாம மனுஷன் சொத்த திங்க முடியுமாண்ணு." பொலம்பித்தள்ளிடுராரு..... உண்ணா வெரதம் மாதிரிதான் தட்டுக்கு முன்னாடி அடம் பண்ணிகிட்டு ஒக்காந்திருக்காரு." மனசில இருந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்தவர்களை நான் ஆறுதலாகத் தடவிக்கொடுத்தேன்.
"நாலு நாளு பழகிட்டா எல்லாம் சரியாப் போயிரும் கிருஷ்ணா...... மாகியோட பெரிய அக்காவப்பாரேன்..... அவுங்க வீட்ல எல்லாருமே ஒங்களாட்டம் சக்கரையப்பாத்தாவே ஜொள்ளு உடுற பார்ட்டிதான். ஜனவரி மொதநா  சாமிக்கி ஏசுண்ணு பேர் வக்கிற திருநா. அண்ணிக்கி வீட்டுக்கு வீடு அர அண்டாவுலதான் காப்பரிசி கிண்டுவாங்க...... வீட்ல திங்கிறது பத்தாதுண்ணு மொத நா சிலுவபோட்டு ஆசிர்வாதம் வாங்கப்போற  எல்லா வீட்லயும் வாய் நெறையா காப்பரிசியத்தான்  கொட்டுவாங்க.... அவுங்க வீட்ல தெனப்படி காலையில ரெண்டு இட்லியையாவது நெய் நாட்டு சக்கரைய தொட்டு தின்னுடணும் அப்பறந்தான் சட்னி படலம் ஆரம்பிக்கும்! சாய்ங்காலம் சக்கரவள்ளிக் கெழங்கோட நல்ல வெல்லமும் தேங்காயும் போட்டு பெரிய பெரிய உருண்ட, இல்ல வறுத்த கள்ளயோட ஒரு கட்டி அச்சு வெல்லம்...... ஊர வச்ச அவுலுல வெல்லம் தேங்கா....... இப்பிடியே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வளருற  இந்த சக்கர கிறிஸ்மஸ்ல அதிரசமா மைசூர்பாக்கா கொலுசாவா  உச்ச கட்டத்த எட்டிப்பிடிக்கும்..... இண்ணைக்கி அவுங்க.....அதான் மாகியோட அக்கா  டீயில சக்கர இல்லாம  குடிக்கிறது நல்லாதான்  இருக்குப்பாண்ணு சந்தோஷப்படுறாங்க... வயசான அவுங்களே சுலமா வெளிய வர்றப்ப ஒனக்கு என்னா கிருஷ்ணா ? தூக்கி கடாச வேண்டிய ஒண்ண தலை மேல சொமந்துகிட்டு  குத்துதே கொடையுதேங்கிற பாரு." நல்லதொரு உதாரணத்துடன் அறிவுரை இவரிடமிருந்து!
"அவுங்களுக்கு வயசாயிருச்சு....... எனக்கு சின்ன வயசு... எவ்வளவு நாளைக்கி நான் இந்த மாதிரியே குப்ப கொட்டுறது? வார்த்தைகள் சீரலாகத்தான் வெளி வந்து விழுந்தன .
என் மனசுக்குள்ளே வேறொரு சிந்தனை ஓட்டம். ஒரு சில பேரை நாம் பார்த்திருக்கிறோம் வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டே வந்துவிடுவார்கள். எந்த ஒரு காரியத்தைத்தொட்டாலும் 360 கோணத்தையும்  முடித்துவிட்டுத்தான் அவர்களுக்கு மறு வேலை! அப்படிப்பட்ட ஒரு  அதிசய தம்பதியருக்கும் ஒரு பெருஞ்சோதனை! நன்றாய் இருந்த நண்பரின் மனைவி ஒரு நாள் வயிற்று வழியால் துடிக்க  மருத்துவ மனையில்சேர்த்த போது ஆடிப்போய்விட்டார் கணவர்! கல்லைத்தின்னாலும் செரிமானம் செய்யும் குணம்  கொண்ட அவர் மனைவியின் உடல் நலம் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை.கணையத்தில் பிரச்சனை என மருத்துவர்கள் சொன்னபோது அவரால் நம்பத்தான்  முடியவில்லை. கணையம் மிகவும் நாசூக்கான ஒரு அவயம். குறை ஏற்பட்டால் மீண்டுவருவது சுலபமல்ல. வாழ்வின் எல்லையையே தொட்டுவிட்ட அந்த கணத்தில் வெளி நாடுகளில் வசிக்கும் குழந்தைகள் ஓடோடி வந்து அம்மாவை சூழ்ந்து அள்ளி அள்ளிக் கொடுத்த  அன்பும் சுற்றி நின்ற நட்பும் உறவும் கொடுத்துக்கொண்டே இருந்த நல்ல எண்ண அலைகளுமே உயிர்த்துளியை அவருக்கு திரும்ப அளித்தன. கணயத்தையே இழந்த இன்றைய நிலையிலும் ஒரு நாளைக்கு மூன்றுமுறை இன்சுலின் ஏற்றிகொள்ள வேண்டிய வலியிலும்  உப்பு சப்பில்லாத உணவு சாப்பிட வேண்டிய கட்டாயத்திலும் 'குறை ஒன்றும் இல்லை இறைவா இறைவா எனசொல்லிக்கொண்டே இருக்கும் அவர்  குசலம் விசாரிக்கும் ஒவ்வொரு நேரத்திலும் “ நல்லா இருக்கேன் மேடம் ... அவரும் நல்லா இருக்கார்...... ரெண்டு சமையலா... அப்படில்லாம் ஒண்ணுமில்ல என் சாப்பாட்டையே அவரும் சாப்பிட்டுக்கிறார்... எண்ண இல்லாம சாப்புடறதும் எங்களுக்கு நல்லாத்தான் இருக்கு.....”என்ற பதிலில்  ஆக்க பூர்வமான சிந்தனை அவர்களுக்குள் அச்சாணி வேர் ஊன்றி தழைத்து நிற்பதை என்னால் உணர முடிந்தது! சில பேரை நாம் பார்த்திருக்கிறோம்.
நண்பரிடம் இருந்து அன்று காலை ஒரு போன். செக் அப்பிற்கு நாளை சென்னை வருவதாகவும் அப்படியே வீட்டிற்கு வருவதாகவும் சொன்னார். " அவுங்க இப்ப எப்டி இருக்காங்க? நல்லா ரெஸ்ட் எடுக்குறாங்களா?" நான் கேட்டேன் அவர் சிரித்துக்கொண்டே " அவுங்களாவது படுக்கறதாவது....! இயற்கை விவசாயத்த பழயபடிக்கி ஆரம்பிச்சிட்டாங்க... ஓங்குளுக்குக்கூட கேரட் பீன்ஸ் அவகேடோ வகையறா பறிச்சாவுது..... மேடம் இப்ப புதுசா கொஞ்சம் நெலம் வாங்கி அத டெவலப் பண்ணிகிட்டு இருக்கோம் அதனால ரெண்டு பேரும் காலையிலே சாப்பாட்ட கட்டிகிட்டு சைட்டுக்கே பொயிடுறோம்... மலைக்கும் மரத்துக்கும் நடுவுல உக்காந்துகிட்டு சாப்புடறது தனி சொகந்தான்."
"என்ன சமையல் பண்ணணும் அவுங்களுக்கு?" நான் கேட்கிறேன்
"எல்லா காயும் வெவிச்சு வைங்க. மத்தபடி கொஞ்சம் சாதமும் மோரும்." நண்பரின் பதில் என்னைத் திகைக்க வைத்தது. வார்த்தை வர வெளி வர மறுத்தது.
"என்ன மேடம் பேச மாட்டேங்குறிங்க...... சாப்பாடு சிம்பிள் ஆயிட்டா நம்ம சாரோட தத்துவ ஞான உரையாடலுக்கு நமக்கு நிறையா நேரம் கிடைக்குமே?
"சரிப்பா நாளைக்கி பாக்கலாம்." போனை வைக்கிறேன். இந்த ஞானத்துக்கு  முன்னால் நாம் அனாவசியமாக  உப்பு பத்துல புளி ஜாஸ்தி ஒரே காரம் என்று சாப்பாட்டில் குற்றம் கண்டு பிடித்தே மனசை வருத்திக் கொள்கிறோமோ? நேரத்தை  வீணடிக்கிறோமோ? என்னையே கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்த நாள் எங்கள் மதிய சாப்பாட்டிற்கு இன்னும் இரண்டு விருந்தாளிகள். உங்கள் யூகம் சரிதான். கிருஷ்ணாவும் அவர் மனைவியும். சாதாரண தமிழ் நாட்டு சமையல் ...
" மேடம் வீட்டுக்கு சாப்பாடுக்கு வந்தால்  அவங்களோட பால் பாயாசம் தான் சூப்பரான அயிட்டம்..... அத இண்ணைக்கி மிஸ் பண்ணுறேன்....... இந்த  நாசமாப்போற ஷுகர்  வந்து காரியத்தெல்லாம் கெடுக்குது பாரு  " கிருஷ்ணா வருத்தத்துடன் சொன்னான்    
 "எனக்கும் அப்படித்தான் நாங்க வர்றோம்னா மேடம் காரக்கொழம்பு பண்ணிடுவாங்க... அதுல நல்லெண்ண ஊத்தி சாப்புட்டா.. ஆஹா ."
"அதான் ஒங்க முன்னாடியே காரக் கொழம்பு இருக்கே...... சாப்பிட வேண்டியதுதானே...... எதுக்கு அவிச்ச காய்கறிய தட்டுல வச்சிருக்கிங்க மேடம்? டயட்ல இருக்கிங்களோ?"
"இதுவும் ஒரு மாதிரி டயட்தான்." சிரித்துக்கொண்டே சொன்னாள்
 என் அருமைத்தோழி!!
ட்ரெயின் பிடிக்க நேரமாயிற்று என மலை வாழ் நண்பர்கள் கிளம்பிவிட  நாங்கள் நால்வரும் பேசிக்கொண்டிருந்தோம்.
"ஜாலியான ஜோடி...... வேதாந்தமும் பேசுறாங்க ஜோக்கும் அடிக்கிறாங்க."
சொன்னது கிருஷ்ணாதான்
"இன்னும்  கொஞ்சம் அவுங்களைப்பத்தி தெரிஞ்சி கிட்டா கிருஷ்ணா....... நீ அசந்தே போயிருவ." என்று ஆரம்பித்த நான்  ஆதி முதல் தோழியின் கதையை விளாவாரியாக சொன்னேன். 
"நெஜம்மாவா சொல்றிங்க மேடம்? நெஜம்மாவா " என்ற கிருஷ்ணா
"அவங்களுக்கும் கிட்டத்தட்ட என் வயசுதான் இருக்கும் இல்ல ........ம்....ம்...என்னா சந்தோஷமா அந்த காய்கறிய சிரிச்சி பேசிகிட்டு சாப்புட்டாங்க! வாழ்க்க முழுசும் இதே சாப்பாடு......  தெனமும்மூணு மொற  இன்சுலின்...!அவுங்க பண்ற வேலைகளைப்பத்தி எவ்வளவு உற்சாகமா சொல்றாங்க! எவ்வளவு சுலபமா எடுத்துக்கிறாங்க!! எனக்கு நம்பவே முடியுலியே!"  
தன்னிடம்  தினசரி வந்து சேரும்  நன்மைகளை கிருஷ்ணா இப்போதே  எண்ண ஆரம்பித்தது என்னுள் தேனாய்ப்பாய்ந்தது! இந்த எண்ணலில்    அவன் கட்டாயம் தன்  வாழ்வை மாற்றி அமைப்பான் சுகமே காண்பான் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை!

Monday, 7 January 2019

மனதுக்குகந்தவர் அருளிய அந்த அதிசயம்


நாங்கள் சின்ன பிள்ளைகளாக  விடுமுறைக்கு கிராமத்திற்குச் செல்கையில் ஊரில் உள்ள  நொணா மரங்களும் எங்கள் ஆட்டங்களில் சேர்ந்து கொள்ளும். வீடுகட்டி விளையாடுகையில் செங்காமட்டியோடு சேர்ந்து பாப்பா கொளத்து தண்ணியோடு கொட்டாங்குச்சி நிறையா சாம்பாராக நேவு மணலோடு சேர்ந்து பொரியலாக, நசுக்கி நசுக்கி செங்காமட்டையில் ஊறி கறிப்பொரியலாக.... இந்த  நொணாக்காய்கள்  உருவெடுக்கும். பாயசத்துக்கு பதிலாக வரும் கருப்பான நொணாப்பழம் மட்டுந்தான் வீட்டிற்கு வருகின்ற விருந்தாளிகள் சாப்பிடக்கூடிய அயிட்டம்.  மற்றதெல்லாம் பாவலாவோடு நின்று போய்விடும்! இப்படி ஒவ்வொரு வீட்டு விருந்திலும்  வயிறு முட்டச்சாப்பிடும் நொணாப்பழங்கள்  நோனி ஜுஸ் என இன்று ஸ்டைலாக விற்கப்படும் சத்து நிறைந்த அந்தப்பொருள் சின்ன வயசில்  சத்தென்று தெரியாமலேயே எங்களது  ஊட்டச்சத்தை பெருக்கிக் கொடுத்திருக்கின்றன!
அன்றைய விளையாட்டு நாடகமா? நொணாவின் வளைந்தகிளை அரசனின் அரியாசனமாக மாறிவிடும்!
தென்னங்குச்சியின் ஒரு முனையில் இந்த நொணாக் காயை ஆங்கமாகக்குத்தி சுத்தியல் வீச்சு பந்தயமும் எங்கள் நொணா ஒட்டுதலை வீரியமாக்கினது உண்மை.
நிலா வெளிச்சத்தில் நடுச்சாமம் மட்டும் பெரியவர்கள் சொல்வதை ஓரங்கட்டிவிட்டு விளையாடும் ' கொறிச்சு முறிச்சு' 'வெயிலாநெழலா' ' ஆடுபிடிப்பேன் கோனாரே' ஆட்டங்களிலும் இந்த நொணாமரம்  எங்கள் பங்காளிதான்! மரம் நிறைய நட்சத்திரங்களாக பூத்து நிற்கும் நொணாப்பூ தலையை கிறு கிறுக்க வைக்கும் வாசனையோடு  எங்கள் கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாகிப் போகும்!!
இப்போதும்  கிராமத்திற்குப் போகிறோம். " கம்புளிப் பூச்சி வருது, கொட்டுற எலய அள்ளி மாளுல." மரங்களைப்பற்றி அங்கு எக்கச்சக்க எரிச்சல்கள். நம்ம ஊரு மரங்களின் அருமையைப்பத்தி சொல்லுகிறேன் பூவரச மரம் 24 மணி நேரமும் நம்ம சுவாசிக்கிற ஆக்சிஜன நம்மளுக்கு குடுத்துகிட்டே இருக்குது. நொணாப்பழத்தில ஒரு வண்டி சத்து இருக்கு. எதோ பெரியவ சொல்றனேண்ணு உக்காந்து கேட்டுகிட்டாங்க. மத்தபடி பழைய குருடி கதைதான்!          
" என் வீட்ல  மட்டும் இன்னும் கொஞ்சம் எடம் இருந்தா என்னோட குட்டி தோட்டத்த அழகா ஆக்கிடுவேன்." ஏங்கியமனசோடு  தண்ணி பிடித்துக்கொண்டு இருக்கையில் புதுசா ரெண்டு சின்ன செடிகள் துளிரான நீட்டு இலைகளோடு நிற்கின்றன. குனிந்து பார்க்கிறேன்..... என் கண்ணை என்னால் நம்பமுடியவில்லை. இரண்டு நொணாக்கன்றுகள்! இது எப்படி..... எப்படி........சாத்தியம்?  மனசுக்குள் குடைச்சல்! சுத்துப்புறத்தில்  வாகைமரம் புங்கமரம் வேப்பமரம்   சிவப்பு மஞ்சள் பூ மரங்கள் கொன்னை மரமல்லி ஒன்றிரண்டு பூவரச மரங்கள்தான் இருக்கும் நொணா மரத்தை பார்த்தது அக்கா வீட்டிற்குப்போனபோது பெரம்பூர் இன்டக்ரல் கோஸ் பேக்டரி பின்னால் காடாம்பரமாய் வளர்ந்து கிடக்கும் மரங்களின் நடுவேதான்.அவ்வளவு தூரத்திலிருந்தா அதுவும் இங்கு என் சின்னத்தோட்டத்திற்கா  குடியிருக்க  வந்திருக்க முடியும்? ஆச்சரியத்தின் எல்லையில் நான்!! செல் போனில் அன்று என்னைக் கூப்பிட்டவர்கள் எல்லோருக்கும் இந்த அதிசயம் விருந்தான செய்தி ஆனது!
" ஒங்க எடங்கண்ணியிலேர்ந்து வந்துருக்கலாம்."
" நீங்க நொணா இங்க வருணுமுண்ணு மனசோட ஆசப்பட்டிருக்கிங்க."
இப்படியாக தினுசுவாரியாகக் கருத்துக்கள்
எல்லாக்கருத்துகளும் என்னை சுகவாசியாக ஆக்கியதென்னவோ உண்மை!!   
அன்று அக்டோபர் ஒன்பது. எப்போதும் போல மாடியில் யோகா முடித்துவிட்டு தோட்டத்தை நோட்டமிட வருகிறேன். வந்த அந்த கணம் நான் நடுங்கிப் போய்விட்டேன். உடம்பு என் வசம் இல்லை.  இது என்ன இது இப்படிக் கூட நடக்குமாஎன்ன? உறைந்து போனேன். என் நொணாக்கன்றிலிருந்து ஒற்றைப்பூ மயக்கும் வாசனையோடு எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி மகிழ்ந்தது! அன்று வாழ்த்துக் கூறிய அனைவரும் எனது அன்றைய செய்தியில் செய்தியின் அதிசயத்தில் உளம் மகிழ்ந்தனர்! நானோ உருகிப்பெருகி உளங்குளிர மகிழ்ந்து பருகற்கினிய பரங்கருகருணைத்தடங்கடலின் அதிசயங்கள் என்றும் நம் அருகில்தான் என்பதினை மறுபடியும் மறுபடியும் உணர்ந்தெழுந்தேன்!