கேட்டுக்குள் நுழையும்
போதே கொட்டிக்கிடந்த மரமல்லிப்பூக்களின் வாசனை பள்ளி வளாகத்தை நிறைத்திருந்தது. சின்னஞ்
சிறுசுகள் அந்த பூக்களைப் பொறுக்கி ஒண்ணு ரெண்டு மூணு என்ற சின்னக்கணக்கில் ஈடுபட்டிருந்தனர். மர நிழல்களில்
திறக்கப்பட்ட டிபன் பாக்ஸ்களின் கலவை மணங்கள்
மரமல்லியுடன் கை கோர்த்து புதியதொரு நறுமணத்தை
அங்கு உருவாக்கிக் கொண்டிருந்தது!
சலசலத்துக்கொண்டிருந்த
அரசமர நிழலடியிலும் ஒரு நண்பர் குழாம் பள்ளியின் ஆர்.ஓ.பிளாண்ட் தண்ணீர் சகிதமாய் மதிய
உணவைத்....திறந்தது........
"டேய் ஆண்ட்டி
மிஸ் வர்றாங்கடா ......." உற்சாகத்தின் உச்சியில் ஒரு பையன்.
"ஆண்ட்டி மிஸ்... ஆண்ட்டி மிஸ்... எங்க மரத்த பாத்திங்களா ..... கொஞ்சம்
நிமிந்து பாருங்களேன்...." எச்சிக்கையை ஒரு பொருட்டாக்காமல் அத்தனை கைகளும் மேல் நோக்கின. சிவந்து போன தளிர்கள்
மிஸ்ஸின் வருகைக்கு கட்டியம் கூறுவதுபோல் இன்னும்
கொஞ்சம் தலையை ஆட்டிக்காட்டின! ரசிகையாக கவிஞராக
மாறி நின்ற ஆண்ட்டி மிஸ் என்ற பட்டம் கொண்ட
அந்த மாது அந்தப் பள்ளியையும் அதன் மதிப்பீடுகளையும்
உருவாக்கிய சிற்பி!
"என்னா......
சாப்பாட்டோட எல்லாரும் எதாச்சும் சுண்டல் காய்கறி கீர கொண்டாந்திருக்கிங்களா?"
இப்போது ஆண்ட்டி
மிஸ் ந்யுட்ரஷினிஸ்ட்!
"நித்யா சிப்ஸ்
கொண்டாந்திருக்கு மிஸ்."
எதோ ஒரு கோள் மூட்டி!!!
"எண்ணைக்கோ
ஒரு நாள் சிப்ஸ் தப்பில்லை..... சரியா நித்யா?"
"மிஸ் அம்மாவுக்கு
ஒடம்பு சரியில்ல மிஸ்...... சளியும் இருமலும்......ஒடம்பு கணகணண்ணு இருக்குண்ணாங்க... அதனாலதான்....
"
"அப்புடியா
நித்யா நீ ஒண்ணு பண்ணு......... சார் கிட்ட
கேட்டுகிட்டு நம்ம பச்சல தோட்டத்திலேருந்து
ஆடாதொடா எல பறிச்சிகிட்டு போ...... கஷாயத்தில பனங்கல்கண்டு சேத்து அம்மாவ ஒரு நாளைக்கி
மூணு தடவ குடிக்கச்சொல்லு....... ரெண்டு மூணு நாளுல நல்லா ஆயிருவாங்க..... அம்மாவை
கேட்டதா சொல்லு."
"கட்டாயம்
சொல்றேன் மிஸ்......."
ஆண்ட்டி மிஸ்ஸின்
பல அவதாரங்களில் அன்பு நிறை வைத்திய அவதாரமும் உண்டு!
நூற்றுக் கணக்கான
மரங்களைக்கொண்ட அந்த பள்ளி வளாகத்தில் நம்
அரச மரமும் ஒன்று......ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதன் நிழலில் அமர்ந்து பாடம்
கற்பித்தலில் கற்பதில் சுகமே! யோகா கற்றுக்கொடுக்கும்
ஆசிரியைக்கும் அது உகந்த இடமே! மரங்களிலேயே அதிக ஆக்சிஜனை அள்ளிக்கொடுக்கும் மரம் அதுவல்லவா!
அதனால்தான் அது அரச மரமோ?!!
எப்போதும் போலத்தான்
அந்த இலை உதிர்வு காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்துக்கொண்டிருந்தன.. நம் அரச மரமும்
கூடத்தான்.... ஆனால் இந்த முறை கொட்டுதல் ரொம்பவும் வித்தியாசமாக இருந்தது...... இலைகள் சட சட என்று
ஒரே சமயத்தில் கொட்டி முடித்த மாதிரி அங்கு மதிய உணவு சாப்பிடும் குழாமிற்குத் தோன்றியது.
பக்கத்து மர நிழலுக்கு இடம் பெயர்ந்த அவர்கள்
அரச மரத்தின் சிவந்த துளிர்களை எதிர்பார்த்து
எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள். மரம் ஒல்லிப்பிச்சானாய் ஆனது மட்டுமே மிச்சம்!
ஆண்ட்டி மிஸ்ஸை
அரசமரக்குழு அவர்கள் அறையிலிருந்து கையைப்பிடித்து
இழுக்காத குறையாக தங்கள் இடத்திற்கு கூட்டி வந்தது ! மரத்தைப் பார்த்த அவர்களுக்கும் அதிர்ச்சிதான்...... எலும்பும்
தோலுமாய் அது நின்று கொண்டிருந்தது!
"மிஸ் மரத்துக்கு
டீபி வந்துருக்கு போல இருக்கு மிஸ். எங்க
தாத்தாவுக்கு டீபி வந்தப்ப அவுரு இப்பிடித்தான்
எளச்சு போய் இருந்தாரு. அப்பா ஆறு மாசம் மருந்து வாங்கிக்குடுத்துல இப்ப நல்லா இருக்காரு
மிஸ்... அப்பாவக்கேட்டு அந்த மருந்த நான் வாங்கிகிட்டு வருட்டா மிஸ்......?"
குழாமின் எக்கத்தாள
சிரிப்பில் அவனுக்குப் பெருங்கோபம்!
"ரசாயன உரம்
போட்டுப்பார்ப்போமா?"
"அது வேணாம்
சாணி ஓரந்தான் போடணும் அதான் சத்து. "
"அதுல செவப்பு
மண்ண நல்லா கலக்கணும்."
"நம்ம ஸ்கூல்ல
செய்யுற வெர்மிகம்போஸ்ட்ட போட்டுப்பாப்பமா?" பலாவிதமான யோஜனைகள்...
அடுத்த நாள் காலை பள்ளிக்கு ஒரு மாட்டு வண்டி வந்தபோது எல்லோருக்கும்
ஆச்சரியம்.ஓட்டிக்கொண்டு வந்தவர் ஒரு பெற்றோர்!
"நச்சரிச்சி
தள்ளிட்டாங்க இந்த பய ... என் அரச மரத்துக்கு
ஒரம் வேணும்ப்பா ஒரம் வேணும்ப்பாண்ணு ராப்பூரா
வம்பு....... கொண்டாந்திட்டேன் தாயி! புல்லரித்துப்போனார் ஆண்ட்டி மிஸ்!
யோசனைகள் சிறிது
சிறிதாக செயலாக்கம் கொண்டன. சத்துமிகு பஞ்ச காவியமும் ஒரு பெற்றோரின் உபயமாயிற்று.
அதோடு கூட மரத்தைச் சுற்றி வட்டமிட்டு கைகோர்த்த உள்ளார்ந்த வேண்டுதல்கள்!
இந்த தவத்தைக் கண்ட
ஆசிரியர்களும் ஆண்ட்டி மிஸ்ஸும் மனம் நெகிழ்ந்து போயினர். இவ்வளவு நல்லெண்ணெத்தையும்
உள் வாங்கிய இந்த மரம் பேசாமலேயே நிற்கிறதே என்ற ஆதங்கம் வேறே!
" மேம்.....
இந்த கோடை விடுமுறை தொடங்கும் போதே அதே இடத்தில் ஒரு அரசங்கன்றை நட்டுவிடுவோம்.....
பிள்ளைகள் திரும்ப வருகையில் ஒரு சின்ன செடியாவது அவர்களை சந்தோஷப்படுத்தட்டும்..."
ஒரு ஆசிரியையின் யோசனை.
வேலையின் பொருட்டு
நாங்கள் பள்ளி செல்கிறோம். உள் சென்று அமர்ந்த போது ஆண்ட்டி மிஸ் என அழைக்கப்படும்
என் தங்கை ஆங்கிலத்தின் ஒரு அழகான பொருள் செறிந்த வாக்கியத்தை எங்கள் முன் வைத்தாள்.
"More
things are wrought by prayer than the world dreams of." எவ்வளவு அருமையான வார்த்தைகள்
இல்லியா?"
எந்த நிகழ்வைக்குறித்து
இதைச் சொல்லுகிறாள் என்பதை உணர முடியாமல் பாக்கியாக நிறையவே நிற்கும் ஸ்கூல் பீஸ் கலக்ஷன்
வேண்டுதல் வழியாக வந்து சேர்ந்து விட்டது போலும்
என்று ஒரு யூகம் கொண்டோம்.
" ஒரே நிமிஷம் வெளியே போய்விட்டு வந்து மீட்டிங்கிற்கு உட்கார்ந்து
கொள்வோம்." என்றவள் பள்ளி வளாகத்தில்
துளிர் விட்டு நின்ற அரசமரத்தைச்சுட்டிக்காட்டி
அதன் பின் நின்ற பெருங்கதையை எங்களுக்கு
சொன்னபோது நாங்கள் நெகிழ்ந்துதான் போனோம் ......
அன்று நவம்பர்
15. 2018. கஜா புயல் தமிழ் நாட்டின் காவேரி டெல்டா பகுதிகளில்
கோர தாண்டவம் ஆடிய நாள்.... . மறு நாள் செய்தித்தாட்களும் தொலைத்தொடர்பும் அழிவின் கோரத்தால் நம்மைக்கலங்க வைத்தன.
தங்கையை அழைக்கிறேன்."
திருச்சி அவ்வளவாக பாதிக்கப்படவில்லை என்றுதான் செய்தி இருக்கிறது. பத்திரமாய் இருக்கிறீர்களா?"
"ஸ்கூலில்
தான் இருக்கிறோம்........ முப்பது மரங்கள் சாஞ்சு போய் கெடக்கு...... அரச மரமும் கூட."
பேசிய குரல் அவள் உடைந்து போய் நிற்பதை வெளிப்படுத்தியது.......
அந்த பள்ளிக்கு
அழகே அங்கு நிற்கும் மரங்கள்தாம். ஞாயிறு விடுமுறை தினத்தை பள்ளியிலேயே செலவழித்து
புது மரங்களை உருவாக்கி உள்ள மரங்களை ஈடுபாட்டோடு உயர்த்துவதில் சுகம் காணும் பள்ளி நிர்வாகியுடன் (தங்கையின் கணவர்) பேசுகிறேன்.
குரலில் உயிரில்லை. ஒரு மரம் வளர்ந்து ஆளாவதற்கு எத்தனை ஆண்டாண்டுகள் ஆகின்றன என்ற உண்மையை இருவரும் அறிவோம்.
புயல் விடுமுறை
முடிந்து பள்ளி அன்று தொடங்கியது. ஆண்ட்டி மிஸ் காலை அசெம்பிளியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட
மக்களைப்பற்றி வீட்டை இழந்து பயிர்களை இழந்து
உண்ண உணவின்றி உடுக்கத் துணியின்றி நிற்கும் அவலத்தை உணர்வு பூர்வமாக எடுத்துரைத்தார்கள்.
"இதையெல்லாம்
பார்க்கையில் அரச மரம் சேர்த்து நாம் இழந்து நிற்கும் முப்பது மரங்கள் ஒரு பொருட்டே
இல்லை. நம்மால் முடிந்ததை உடைந்து நிற்கும் மக்களுக்குச் செய்வோமா?" என கேட்டுக்கொண்ட
அந்த நேரம் தொடங்கி அந்த பள்ளி மாணவரும் பெற்றோரும்
ஆசிரியர்களும் அரிசியாக பருப்பாக உடைகளாக பள்ளியை
நிறைத்தனர்.
அது ஒரு பணக்காரப்பள்ளி
அல்ல...... ஆயினும் மதிப்பீடுகளை முன் வைக்கும் ஒரு ஆலயம்! உள்ளதை பகிர்ந்து வாழ்வதில்தான் மனமகிழ்ச்சி என்ற தத்துவத்தை
மனதில் பதித்து வாழும் ஒரு இடம். ஒரு லாரி நிறைத்த பொருட்களை இடர் பட்டு நிற்போருக்கு
அனுப்பி சுகம் கண்டனர் பள்ளி மக்கள்!
"ஆண்ட்டி மிஸ்......
ஆண்ட்டி மிஸ்..... நம்ம அரச மரத்த நிக்க வைக்கபாப்பமா?"
இந்த குரலைக்கேட்டு
அவர்கள் திகைத்துத்தான் போனார்கள்! வேரோடு
சாய்ந்த ஒரு மரத்திற்கு எப்படி உயிர் கொடுப்பது?
ஒலித்த ஒரு குரல்
பெருங்குரலாய் உருவெடுத்த கணத்தில் சரி சரி அவர்கள் மகிழ்ச்சியைக்கெடுப்பானேன் என உத்தரவு
கொடுக்க பலங்கொண்ட இளைஞர் பெற்றோர் கொண்டு வந்த வடகயிறு கொண்டு மெள்ள மெள்ள மரத்தை
நிலைக்குக் கொண்டுவந்து அதைச்சுற்றி பாதுகாப்பாய் அரண் கொடுத்தனர்.
ஒரு பத்து நாள்
கழித்து முகப் புத்தகதைத் திறக்கையில் நான் ஆச்சரித்தின் உச்சியில்!! சிரித்த முகத்தோடு
என் தங்கை! அவளுக்குப் பின்னால் அரசமர இலைகள் சிலவும் அந்த சிரிப்புக்கு உயிர் கொடுத்து
நின்றன.
தங்கைக்கு போன்
பண்ணுகிறேன். அவள் குரல் கமருகிறது.
"மாகி அது அரசமரமே இல்ல...... இல்லவே இல்ல........ என் குழந்தைகள் எனக்கு அன்பளிப்பாய் கொடுத்த போதிமரம்!
'நம்பிக்கையோடு முயலுவோம்..... முயன்று கொண்டே இருப்போம்' என்ற வாழ்க்கைத் தத்துவத்தை
அளித்த புத்தர்கள் என் குழந்தைகள்!!" அவளது உணர்ச்சி பூர்வ பேச்சில் நானும் இரண்டறத்தான்
கலந்து போனேன்!!
No comments :
Post a Comment