Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Tuesday, 15 January 2019

பேனை பெருச்சாளி ஆக்கி


“கொஞ்சம் ஃப்ரீயா இருந்திங்கண்ணா நீங்க ரெண்டு பேரும் வீட்டு பக்கம் வந்துட்டு போமுடியுமா?" நண்பர் கிருஷ்ணாவின் மனைவி
அந்த வேண்டுதலின் வீரியம் எங்களை உடனடியாக கிருஷ்ணாவின் வீட்டிற்கு இட்டுச் சென்றது.
கிருஷ்ணா ஜாலியான ஆள்! நாலு பேர் ஒண்ணாகச் சேர்ந்தால் அவனுடைய  ஜோக்குகள் வயிற்றைய் புண்ணாக்கி விடும் வலிமை கொண்டது. அன்றைக்கு அவன் 'வாங்க' என்று கூப்பிட்ட  தொனியே சுரத்தற்றுக் கிடந்தது.
"என்ன கிருஷ்ணா ஒடம்பு சரியா இல்லியா என்னா?" நான் கேட்டேன்
"அந்த கதைய ஏன் கேக்கிறிங்க போங்க" ...." பதில் சொன்னது கிருஷ்ணாவின் மனைவிதான். "ஆறு மாசத்துக்கு ஒருக்க எப்பயும் நாங்களா பண்ணிக்கிற  மாதிரிதான் அண்ணைக்கும் மெடிக்கல் செக்கப் பண்ணிகிட்டோம். அவுரு ரிப்போர்ட்டப் பாத்தா சுகர் ஜாஸ்தியாயிக்கெடக்கு. உடனடியா டாக்டர பாத்தோம்."
"டாக்டர் தெனமும் நான் மூணு கிலோமீட்டர் நடக்குறேன். எனக்கு எப்டி இந்த சக்கர வியாதி.....? இன்னோரு தடவண்ணா டெஸ்ட் பண்ணி பாக்கலாமா?" இவுரு டாக்டர கேட்டாரு
"ஃபர்ஸ்ட் கிளாஸ் லேபுங்க அது...... தப்பல்லாம் பண்ண சான்ஸ் இல்ல.... வீட்ல யாருக்காச்சும் சுகர் இருக்கா....?
"தாத்தாவுக்கு இருந்துச்சு ஆனா அப்பாவுக்கு இல்ல.."
"இது வழி வழியா வர்றத்துக்கு வாய்ப்புகள் இருக்கு.. அப்பாவத்தாண்டி ஒங்குளுக்கு அது வரலாம்... இன்னொண்ணு நம்ம மனஅழுத்தம் காரணமாவும் சுகர் அதிகரிக்கலாம். வீட்டுக்கவலைகள் சொந்தபந்த தொந்தரவுகள் ஆபிஸ் பிரச்சனைகள்,.." டாக்டர் சொல்லிகிட்டே போனாரு.
"அவுருக்கு மன அழுத்தமே வராது டாக்டர். வாயத் தொறந்தா ஜோக்குதான்." நாந்தான் (கிருஷ்ணாவின் மனைவி) டாக்டர் கிட்ட சொன்னேன்
"வெளிய ஜோக்கடிக்கிறவங்களுக்கும் உள் மனசுண்ணு ஒண்ணு இருக்கும்மா...... அது எப்பயும் குஸ்தி போட்டுகிட்டே  இருந்துதுண்ணு வச்சிகிங்க.... சுகர் வரதுக்கு சான்ஸ் நெறயவே இருக்கு." எனக்கு பதில் சொன்னவரு இவுரு பக்கம் திரும்பி
"கிருஷ்ணா மனசுக்குள்ள சந்தோஷமா இருங்க எதையும் உள்ள வச்சு மருவாதிங்க....... சக்கர பக்கம் தலைய வைக்காதிங்க உப்பை கொறைங்க...ஊறுகா ம்ஹும்...... கெழங்கு வகையறாவ ரொம்ப சாப்பிடாதிங்க. சக்கரவள்ளிக் கெழங்கு ஓகே...... மாத்தர  குடுக்குறேன் சாப்பிடுங்க. ஒங்க தெனப்படி ஓட்டத்த எந்த காரணம் கொண்டும் நிறுத்தாதிங்க.அதுதான் ஒங்க ஒடம்புக்கு நீங்க குடுக்குற பெரிய டானிக். எண்ணைக்கும்போல ஜாலியாவே இருங்க" ண்ணு சொல்லிகிட்டே மருந்த எழுதிக்குடுத்தாரு.
"கிருஷ்ணா இதுக்கா குடி முழுவுன மாரி ஓக்காந்திருக்க....? சக்கர வியாதி சுலபமா மேனேஜ் பண்ணக் கூடிய ஒண்ணுப்பா . கொஞ்சங் கொஞ்சமா அப்பப்ப சாப்பிடு. எப்பயும் போல வாக்கிங் போ.... எப்பயும் போல சிரிக்க சிரிக்க பேசு." இவர் சொன்னதை நானும் ஆமோதித்தேன்.
"ரொம்ப சுலமா சொல்லிட்டிங்க அண்ணா.... இவுர எப்புடி மேனேஜ் பண்ணப்போறேண்ணு நான்ல  மண்டைய பிச்சுகிட்டு கெடக்கேன்....... அவுங்க வீட்டுப்பக்கம் எல்லாரும் சக்கரமண்டி ஜாதி போங்க...... மத்தியானம் சாப்பிட்ட ஒடனே ஒரு ஸ்வீட்ட உள்ள தள்ளிடணும்..... ராத்திரி பாடும் அதே மாதிரிதான்...... அமையா சமயத்துல சாய்ங்காலம் டீ குடிக்கிறப்ப ஸ்வீட் இருந்தாக்க ரெட்டிப்பு சந்தோஷந்தான். திருச்சியிலேருந்து விருந்தாளிக வந்துட்டா அந்த சந்தோஷத்துக்கு எல்லையே கெடையாது....... மயில் மார்க் கடையிலேருந்து ஒரு கிலோ லட்டுல்ல அவுங்க கூட வரும்!! "ஊறுகா இல்லாம மனுஷன் சொத்த திங்க முடியுமாண்ணு." பொலம்பித்தள்ளிடுராரு..... உண்ணா வெரதம் மாதிரிதான் தட்டுக்கு முன்னாடி அடம் பண்ணிகிட்டு ஒக்காந்திருக்காரு." மனசில இருந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்தவர்களை நான் ஆறுதலாகத் தடவிக்கொடுத்தேன்.
"நாலு நாளு பழகிட்டா எல்லாம் சரியாப் போயிரும் கிருஷ்ணா...... மாகியோட பெரிய அக்காவப்பாரேன்..... அவுங்க வீட்ல எல்லாருமே ஒங்களாட்டம் சக்கரையப்பாத்தாவே ஜொள்ளு உடுற பார்ட்டிதான். ஜனவரி மொதநா  சாமிக்கி ஏசுண்ணு பேர் வக்கிற திருநா. அண்ணிக்கி வீட்டுக்கு வீடு அர அண்டாவுலதான் காப்பரிசி கிண்டுவாங்க...... வீட்ல திங்கிறது பத்தாதுண்ணு மொத நா சிலுவபோட்டு ஆசிர்வாதம் வாங்கப்போற  எல்லா வீட்லயும் வாய் நெறையா காப்பரிசியத்தான்  கொட்டுவாங்க.... அவுங்க வீட்ல தெனப்படி காலையில ரெண்டு இட்லியையாவது நெய் நாட்டு சக்கரைய தொட்டு தின்னுடணும் அப்பறந்தான் சட்னி படலம் ஆரம்பிக்கும்! சாய்ங்காலம் சக்கரவள்ளிக் கெழங்கோட நல்ல வெல்லமும் தேங்காயும் போட்டு பெரிய பெரிய உருண்ட, இல்ல வறுத்த கள்ளயோட ஒரு கட்டி அச்சு வெல்லம்...... ஊர வச்ச அவுலுல வெல்லம் தேங்கா....... இப்பிடியே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வளருற  இந்த சக்கர கிறிஸ்மஸ்ல அதிரசமா மைசூர்பாக்கா கொலுசாவா  உச்ச கட்டத்த எட்டிப்பிடிக்கும்..... இண்ணைக்கி அவுங்க.....அதான் மாகியோட அக்கா  டீயில சக்கர இல்லாம  குடிக்கிறது நல்லாதான்  இருக்குப்பாண்ணு சந்தோஷப்படுறாங்க... வயசான அவுங்களே சுலமா வெளிய வர்றப்ப ஒனக்கு என்னா கிருஷ்ணா ? தூக்கி கடாச வேண்டிய ஒண்ண தலை மேல சொமந்துகிட்டு  குத்துதே கொடையுதேங்கிற பாரு." நல்லதொரு உதாரணத்துடன் அறிவுரை இவரிடமிருந்து!
"அவுங்களுக்கு வயசாயிருச்சு....... எனக்கு சின்ன வயசு... எவ்வளவு நாளைக்கி நான் இந்த மாதிரியே குப்ப கொட்டுறது? வார்த்தைகள் சீரலாகத்தான் வெளி வந்து விழுந்தன .
என் மனசுக்குள்ளே வேறொரு சிந்தனை ஓட்டம். ஒரு சில பேரை நாம் பார்த்திருக்கிறோம் வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டே வந்துவிடுவார்கள். எந்த ஒரு காரியத்தைத்தொட்டாலும் 360 கோணத்தையும்  முடித்துவிட்டுத்தான் அவர்களுக்கு மறு வேலை! அப்படிப்பட்ட ஒரு  அதிசய தம்பதியருக்கும் ஒரு பெருஞ்சோதனை! நன்றாய் இருந்த நண்பரின் மனைவி ஒரு நாள் வயிற்று வழியால் துடிக்க  மருத்துவ மனையில்சேர்த்த போது ஆடிப்போய்விட்டார் கணவர்! கல்லைத்தின்னாலும் செரிமானம் செய்யும் குணம்  கொண்ட அவர் மனைவியின் உடல் நலம் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை.கணையத்தில் பிரச்சனை என மருத்துவர்கள் சொன்னபோது அவரால் நம்பத்தான்  முடியவில்லை. கணையம் மிகவும் நாசூக்கான ஒரு அவயம். குறை ஏற்பட்டால் மீண்டுவருவது சுலபமல்ல. வாழ்வின் எல்லையையே தொட்டுவிட்ட அந்த கணத்தில் வெளி நாடுகளில் வசிக்கும் குழந்தைகள் ஓடோடி வந்து அம்மாவை சூழ்ந்து அள்ளி அள்ளிக் கொடுத்த  அன்பும் சுற்றி நின்ற நட்பும் உறவும் கொடுத்துக்கொண்டே இருந்த நல்ல எண்ண அலைகளுமே உயிர்த்துளியை அவருக்கு திரும்ப அளித்தன. கணயத்தையே இழந்த இன்றைய நிலையிலும் ஒரு நாளைக்கு மூன்றுமுறை இன்சுலின் ஏற்றிகொள்ள வேண்டிய வலியிலும்  உப்பு சப்பில்லாத உணவு சாப்பிட வேண்டிய கட்டாயத்திலும் 'குறை ஒன்றும் இல்லை இறைவா இறைவா எனசொல்லிக்கொண்டே இருக்கும் அவர்  குசலம் விசாரிக்கும் ஒவ்வொரு நேரத்திலும் “ நல்லா இருக்கேன் மேடம் ... அவரும் நல்லா இருக்கார்...... ரெண்டு சமையலா... அப்படில்லாம் ஒண்ணுமில்ல என் சாப்பாட்டையே அவரும் சாப்பிட்டுக்கிறார்... எண்ண இல்லாம சாப்புடறதும் எங்களுக்கு நல்லாத்தான் இருக்கு.....”என்ற பதிலில்  ஆக்க பூர்வமான சிந்தனை அவர்களுக்குள் அச்சாணி வேர் ஊன்றி தழைத்து நிற்பதை என்னால் உணர முடிந்தது! சில பேரை நாம் பார்த்திருக்கிறோம்.
நண்பரிடம் இருந்து அன்று காலை ஒரு போன். செக் அப்பிற்கு நாளை சென்னை வருவதாகவும் அப்படியே வீட்டிற்கு வருவதாகவும் சொன்னார். " அவுங்க இப்ப எப்டி இருக்காங்க? நல்லா ரெஸ்ட் எடுக்குறாங்களா?" நான் கேட்டேன் அவர் சிரித்துக்கொண்டே " அவுங்களாவது படுக்கறதாவது....! இயற்கை விவசாயத்த பழயபடிக்கி ஆரம்பிச்சிட்டாங்க... ஓங்குளுக்குக்கூட கேரட் பீன்ஸ் அவகேடோ வகையறா பறிச்சாவுது..... மேடம் இப்ப புதுசா கொஞ்சம் நெலம் வாங்கி அத டெவலப் பண்ணிகிட்டு இருக்கோம் அதனால ரெண்டு பேரும் காலையிலே சாப்பாட்ட கட்டிகிட்டு சைட்டுக்கே பொயிடுறோம்... மலைக்கும் மரத்துக்கும் நடுவுல உக்காந்துகிட்டு சாப்புடறது தனி சொகந்தான்."
"என்ன சமையல் பண்ணணும் அவுங்களுக்கு?" நான் கேட்கிறேன்
"எல்லா காயும் வெவிச்சு வைங்க. மத்தபடி கொஞ்சம் சாதமும் மோரும்." நண்பரின் பதில் என்னைத் திகைக்க வைத்தது. வார்த்தை வர வெளி வர மறுத்தது.
"என்ன மேடம் பேச மாட்டேங்குறிங்க...... சாப்பாடு சிம்பிள் ஆயிட்டா நம்ம சாரோட தத்துவ ஞான உரையாடலுக்கு நமக்கு நிறையா நேரம் கிடைக்குமே?
"சரிப்பா நாளைக்கி பாக்கலாம்." போனை வைக்கிறேன். இந்த ஞானத்துக்கு  முன்னால் நாம் அனாவசியமாக  உப்பு பத்துல புளி ஜாஸ்தி ஒரே காரம் என்று சாப்பாட்டில் குற்றம் கண்டு பிடித்தே மனசை வருத்திக் கொள்கிறோமோ? நேரத்தை  வீணடிக்கிறோமோ? என்னையே கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்த நாள் எங்கள் மதிய சாப்பாட்டிற்கு இன்னும் இரண்டு விருந்தாளிகள். உங்கள் யூகம் சரிதான். கிருஷ்ணாவும் அவர் மனைவியும். சாதாரண தமிழ் நாட்டு சமையல் ...
" மேடம் வீட்டுக்கு சாப்பாடுக்கு வந்தால்  அவங்களோட பால் பாயாசம் தான் சூப்பரான அயிட்டம்..... அத இண்ணைக்கி மிஸ் பண்ணுறேன்....... இந்த  நாசமாப்போற ஷுகர்  வந்து காரியத்தெல்லாம் கெடுக்குது பாரு  " கிருஷ்ணா வருத்தத்துடன் சொன்னான்    
 "எனக்கும் அப்படித்தான் நாங்க வர்றோம்னா மேடம் காரக்கொழம்பு பண்ணிடுவாங்க... அதுல நல்லெண்ண ஊத்தி சாப்புட்டா.. ஆஹா ."
"அதான் ஒங்க முன்னாடியே காரக் கொழம்பு இருக்கே...... சாப்பிட வேண்டியதுதானே...... எதுக்கு அவிச்ச காய்கறிய தட்டுல வச்சிருக்கிங்க மேடம்? டயட்ல இருக்கிங்களோ?"
"இதுவும் ஒரு மாதிரி டயட்தான்." சிரித்துக்கொண்டே சொன்னாள்
 என் அருமைத்தோழி!!
ட்ரெயின் பிடிக்க நேரமாயிற்று என மலை வாழ் நண்பர்கள் கிளம்பிவிட  நாங்கள் நால்வரும் பேசிக்கொண்டிருந்தோம்.
"ஜாலியான ஜோடி...... வேதாந்தமும் பேசுறாங்க ஜோக்கும் அடிக்கிறாங்க."
சொன்னது கிருஷ்ணாதான்
"இன்னும்  கொஞ்சம் அவுங்களைப்பத்தி தெரிஞ்சி கிட்டா கிருஷ்ணா....... நீ அசந்தே போயிருவ." என்று ஆரம்பித்த நான்  ஆதி முதல் தோழியின் கதையை விளாவாரியாக சொன்னேன். 
"நெஜம்மாவா சொல்றிங்க மேடம்? நெஜம்மாவா " என்ற கிருஷ்ணா
"அவங்களுக்கும் கிட்டத்தட்ட என் வயசுதான் இருக்கும் இல்ல ........ம்....ம்...என்னா சந்தோஷமா அந்த காய்கறிய சிரிச்சி பேசிகிட்டு சாப்புட்டாங்க! வாழ்க்க முழுசும் இதே சாப்பாடு......  தெனமும்மூணு மொற  இன்சுலின்...!அவுங்க பண்ற வேலைகளைப்பத்தி எவ்வளவு உற்சாகமா சொல்றாங்க! எவ்வளவு சுலபமா எடுத்துக்கிறாங்க!! எனக்கு நம்பவே முடியுலியே!"  
தன்னிடம்  தினசரி வந்து சேரும்  நன்மைகளை கிருஷ்ணா இப்போதே  எண்ண ஆரம்பித்தது என்னுள் தேனாய்ப்பாய்ந்தது! இந்த எண்ணலில்    அவன் கட்டாயம் தன்  வாழ்வை மாற்றி அமைப்பான் சுகமே காண்பான் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை!

No comments :

Post a Comment