Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Saturday, 9 February 2019

சொந்தமும் வந்ததும் ஒவ்வொன்றும் ஒருவிதம்


தாத்தாவுக்கு ஒரே சந்தோஷம்! பேத்தியும் அவள் வெள்ளைக்கார கணவனும் முதல் முறையாக மெட்ராஸ் வருகிறார்கள். பேத்தியின் செலக்ஷனில் ஒரு சின்ன நெருடல் இருந்தாலும் இந்த காலத்துல  நாமதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப்போக வேண்டும் என்ற தத்துவத்தில் மனசைப்  பக்குவப்படுத்திக்கொண்டு சுறு சுறுப்பாக ஆகிவிட்டார்கள்! முந்தின நாளே அருமையான பிரட் வெண்ணை ஜாம் வீட்டிற்கு வந்துவிட்டது.
அடுத்த நாள் காலை குசல விசாரிப்பெல்லாம் முடிந்த பின் தாத்தா முதல் வேலையாக  பிரட்டை டோஸ்ட்செய்து உப்பு போட்ட அமுல் பட்டரோடு கிஸ்ஸான் ஜாமையும்  தடவி  மரு பேரனின் தட்டில் வைத்தவர்கள் மெட்ராசின் மிக உயர்ந்த ரொட்டியின் குணாதிசயங்களையும்  பெண்கள் கூட்டுறவு  சங்கத்தால் தயாரிக்கப்படும் அமுல் வெண்ணை பற்றியும்  ஆதி முதல் இந்தியாவில் விற்கப்படும் கிஸ்ஸான் ஜாமின் பெருமையையும் விளாவாரியாக எடுத்துரைக்க ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க  விழித்த அந்தப்பையன்(நூற்றுக் கணக்கில் பிரட் வகைகளும் ஜாமும் பட்டரும் குவிந்திருக்கும் ஊர்க்காரன் அவன்!!) எதற்கு அவர் சாப்பிட வேண்டிய  சான்ட்விச்சை என் தட்டில் வைக்கிறார் ..... வைத்தது மட்டுமல்ல அதைப்பற்றி  கதை வேறே சொல்லுகிறாரே.....  இது அவர்கள் சம்பிரதாயமோ?" எனப்புரியாமல்  "தோசையும் சாம்பாரும் எனக்கு குடுப்பிங்களா?" என்றான்
ஏமாற்றம் ஒரு பக்கம் என்றாலும் அவன் நம்ம ஊரு தோசையைக் கேட்டதில் தாத்தாவுக்கு பெருமையான பெருமை.....என்ன இருந்தாலும் நம்ம இட்லி தோச மாதிரி வருமா என்னா?!
உடனடியாக  கிச்சனுக்கு ஓடிய அவர்
"என்னம்மா  தோச கல்ல அடுப்புல போட்டுட்டிங்களா?"
"போட்டாச்சுப்பா." சமையல் செய்பவர்கள்  பதில் சொன்னார்கள்.
"தோசைய எடுத்து வைக்கிற தட்டுல ரெண்டு சொட்டு எண்ணை ரெண்டு சொட்டு தண்ணிய தடவி வுட்டுடுங்க...... அப்பத்தான் தட்டுல ஒட்டிக்காம தோச பளிச்சிண்ணு வரும்.
சமையல் செய்பவர்கள் மிகுந்த பொறுமை சாலி!
இந்த உபதேசத்தை ஆயிரம் முறை கேட்டிருந்தாலும். அப்பதான் புதுசா கேக்குறமாதிரி பவ்யமாக தலையை  ஆட்டி "சரிங்கப்பா..." என்றார்கள்.
"தோச  முருவணும்.... ஆனா அடிப்பக்கம் கறுத்து போவக்கூடாது........ அத கொஞ்சம் பாத்துக்குங்க...."
"சரிங்கப்பா...." அதே பவ்யம்!
 முறுகல் தோசை போட்டு சாம்பாரையும் கிண்ணத்தில் வைத்து சமயல் அறையிலிருந்து தாத்தாவே மேஜைக்கு கொண்டு வந்து பையனுக்குப் பிரியமாகக் கொடுத்தார்.
சாப்பிட ஆரம்பித்தவனைப்பார்த்த அவருக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை .... "ரெட்டை விரலால்  தோசய புட்டுத்திங்கிறான் பாரு..... சொல்லிக்குடுக்குலாமா......?" மனசுக்குள் உந்தல்..... ஆனாலும் கொஞ்சம் அடக்கிக்கொண்டவர் " இந்தப் பையன் கையால சாப்புடுறதே பெரிய காரியம். இண்ணைக்கி பசியா இருப்பான்.... ஊருக்குப்போறதுக்குள்ள எல்லாம் சரி பண்ணிடலாம்." தன்னையே ஆற்றிக்கொண்டார் அவர்! ரெண்டாவது தோசையும் அடுத்ததும் அவர்கள் கண்காணிப்பிலேயேதான் சுடப்பட்டது!!
"ஒன் தாத்தாவுக்கு ஒடம்பு  நல்லா இருக்கா? நான்
மெல்லுறதையும் முழுங்குறதையும் உத்து உத்து பாத்துகிட்டே
இருக்காங்க ...... எனக்கு மரண தண்டன கைதியாட்டம் இருக்கு...." இவன் சந்தேகமாக மனைவியைக்கேட்க
கைகொட்டி சிரித்த அவள்  "எங்க ஊரு விருந்து உபசாரம் இப்பிடித்தான்...... விருந்துக்கு வந்தவர்கள் எங்குளுக்குக் கடவுள் மாதிரி. சாப்புட்டு முடிக்கிறமுட்டும் அவங்கள கவனிச்சிக்க வேண்டியது எங்க கடம........ ஒக்காரவே மாட்டோம்..... அவுங்க ரசிச்சு சாப்புடுற அயிட்டம் என்னாண்ணு கண் கொத்தி பாம்பா பாத்துருந்து  போதும் போதும்ணு அவங்க சொல்ற வரையிலயும் வச்சுகிட்டே இருப்போம். இப்பதான் இதெல்லாம் கொஞ்சங் கொஞ்சமா மாறிகிட்டு வருது....... "
இந்த இந்திய கலாச்சாரத்தின் ஒவ்வாமை அவரிடத்தில் கோபமாக விரக்தியாக உருக்கொள்ள இந்த விருந்து உபசரிப்பு வேண்டாம் என்று சாங்கோ பாங்கமாக முதல் நாள் காலையிலேயே தாத்தாவிடம்  எடுத்துச் சொல்லி புரிய வைத்தது பேத்தியின் கடமை ஆகிப்போயிற்று!
வக்கணையாக காலை டிபன்  மதிய சாப்பாடு சாயங்காலம் டிபன் காபி இரவு சாப்பாடு...... ! அசந்துதான்  போனார்  அவர்!  " எப்படி இவர்களால்  இத்தனை தடவை சாப்பிட முடிகிறது? அதுவும் இவ்வளவு கார்போஹைட்ரேட்டை! சாதம் போட்டு கொழம்பு திரும்ப சாதம் போட்டு ரசம் திரும்பவும் சாதம் போட்டு தயிர்!! இவர்  வியப்பு  இப்படிப்போக எங்களதோ வேறு தினுசில் ஓடிக்கொண்டிருந்தது.
இவரைப் பொறுத்த வரை  சாதம் என்கிற  ஒரு அயிட்டம் எங்கள்
 ஃபாக்டரியில் எலக்ட்ரானிக் உதிரி பாகங்களை பிசி போர்டில் ஒன்று சேர்க்க எங்கள் மக்கள் உபயோகிக்கும் சோல்டரிங் அயர்ன் போல ஒரு மீடியமே! தட்டின் நடுவே ரெண்டு ஸ்பூன் சாதம் அதன் மேலே கேரட் பீன்ஸ் பொரியல், பொடலங்காய் கூட்டு  அதற்கு மேலே மீன் கொழம்பு அதன் உச்சியில் சிகரமாய்  எராப் பொரியல்! அருமையான அயிட்டங்களை தனித்தனியே சுவைத்து சாப்பிடும் நமக்கு கூட்டாஞ்சோறாக இந்த மனுஷன் அள்ளி சாப்பிடுவதை (பலா கலாச்சாரங்களையும் கண்ட எங்களுக்கூட) ஜீரணிக்கத்தான்  முடியவில்லை! இந்த காட்சி மட்டும் (எங்கள் வீட்டு சாப்பிடும் முறைக்கு இலக்கணம் வகுத்த) தாத்தாவின்  கண்ணில்  பட்டுவிட்டால் இவருக்கு தீர்க்கமான அறிவுரைகள் வியாக்கியானங்கள்  நிச்சயம் உண்டு என்று உணர்ந்த பேத்தி பாகிஸ்தான் இந்திய எல்லைக்கோடு போல தாத்தாவை சாப்பாட்டு அறை அருகில் கூட  அண்ட விடவில்லை!!
அன்று ஒரு நாள் நாங்கள் தட்டுகளில் சாதம் போட்டுக் கொண்டிருக் கையில் நம் பையன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தார். . வயிறு எதுவும் சரியில்லையோ? காரசாரமான நம்ம கொழம்புக் தக்கன சாதம் போட்டு  சாப்பிடுணுமுண்ணு இவர் கிட்ட ஒரு நாளைக்கி பக்குவமா சொல்லிடணும் என்று  நான் யோசனை பண்ணிக்கொண்டிருக்கையில் "தட்டு ஈரமா இருக்கு  எனக்கு ஒரு கைத்துண்டு வேணுமே?" என்றார் 
சாப்பிட்ட தட்டை கழுவி வைத்திருந்தாலும் மறுபடியும்  சாப்பிடும் முன் "தட்ட கழுவிட்டியா?" என சின்னப்பிள்ளையிலேயே எங்கள் மனசுக்குள் பதிந்துவிட்ட சுகாதார அறிவுரை இன்றும் பளிச்சென்று குடியிருப்பதால் தட்டைக் கழுவுதல் நமக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் அவரது கலாச்சாரம் அதற்கு எதிர் மாறான ஒன்று என்பதை முதல் முறை இங்கிலாந்து போனபோதுதான் புரிந்து கொண்டேன்.
சோப்புத்தண்ணீரில் பாத்திரங்களை முக்கி வைத்திருக்கும்  அந்த மக்களுக்கு பாத்திரங்களை தண்ணீரில் காட்டி கழுவும் பழக்கமே  கிடையாது (எல்லா வீட்டிலும் அதே  அதே!!)  நேரடியாக ஒரு கைத்துண்டால் அவைகளைத்  துடைத்து.... து..டை..த்..து..... து...டை...த்...து......... உள்ளே வைத்துவிடுகிறார்கள்........ நமக்கோ இது என்ன கூத்துடா சாமி  என்று மனசு. அடித்துக்கொள்கிறது. சாப்பிட உட்காருமுன் இந்த தட்டுகளையாவது ஒரு அலசு அலசிவிடலாமா? கை துடிக்கிறது!
என்னுடைய இந்த மன உளைச்சலை தீர்க்கும் வகையில் டிஷ் வாஷர் என்ற இயந்திரம் அழகாக சோப்பு தெளித்து தண்ணீர் அடித்து கழுவி துடைத்துக்கொடுக்கும் அந்த பிரியமான தோழி அந்த  வீட்டிற்குள் வந்ததில் என் மகிழ்ச்சி கரை புரண்டது!!
என் கலாச்சாரத்தில் ஈரம் வேண்டும்  அவனதில் ஈரமே கூடாது! இந்த ஈரமில்லா தத்துவம் அவர்கள் பாத்ரூமுக்கும் பொருந்தும்!. கம்பளம் விரித்த பாத்ரூமில் , ஃப்ளஷில் மட்டுமே தண்ணீர் வரும் அந்த இடம் இந்தியர் நமக்கு புரியாத ஒரு புதிர்தான்! காலைக் கடன்களை முடித்த நாம் கால்கள் இரண்டையும் ஒன்றுக்கு மேல் ஒன்றைப்போட்டு தேய்த்துக்  கழுவிய பிறகுதான் வெளியே வருவோம். அங்கேயோ ஒரு சுற்று பேப்பர்தான் தொங்குகிறது!
"டாய்லட் பேப்பராவது மண்ணாங்கட்டியாவது?" நமக்கு அதெல்லாம் ஒத்து வராத காரியம்!  நம்ம ஹெல்த் ஃ பாசட் எங்க? கொறஞ்ச பட்சம் ஒரு மக்.....?" ஆற்றாமையால்  மனசு என்னைக்கேட்கிறது அதை ஆசுவாசப்படுத்த குளிக்கும் அறையிலிருந்து ஒரு மக் தண்ணீரை எடுத்து வந்து சிந்தாமல் சிதறாமல் அந்த கம்பள டாய்லெட்டில் உபயோகிப்பதற்குள் தாவு தீர்ந்து போகும்!
இந்த பிரச்னையை தீர்க்கும் வகையில் மருமகன் வீட்டை விரிவாக்கையில்  எங்களுக்கென்றே ஒரு டாய்லெட் அமைத்து இந்தியா வந்த போது அவர்  வாங்கிச்சென்ற ஹெல்த் ஃ பாசட்டையும் அங்கு பொருத்தி நாங்கள் அங்கு தங்கும் நாட்களை சுகமாகத்தான் ஆக்கிவிட்டார்!
இப்போதெல்லாம்  அவர்  இந்தியா வருகையில் ஈரமில்லாத் தட்டுமட்டுமே அவர் முன் வைத்து சுகம் தர வேண்டும் என்பதில் கருத்தாய் இருக்கிறோம்!! எங்களுக்கு ஈர டாய்லெட் கொடுத்த அவருக்கு ஈரமில்லாத்தட்டு கொடுப்பது ஒன்றும் பெரிய காரியமில்லையே!"
வெளிநாட்டுக்காரர்கள் காபி குடிக்கும் கோப்பையை  காஃபி மக் என்றும் டீ குடிக்கும் கோப்பையை டீ கப் என்றும் சொல்வார்கள். டிக்காஷன் காப்பி குடிக்கும் நமக்கோ டவரா டம்ளர்தான் சுகமானது. யாராவது வீட்டிற்கு வருகிறவர்கள் டீ கேட்டால் டவராவைத் தவிர்த்து டம்ளரில் அதைக்கொடுப்போம். எங்கள் வீட்டிற்குப்பக்கத்தில் இருக்கும் ஒரு ஹோட்டல் அவருடைய பிரியமான ஒரு இடம் ! அங்கைய காப்பி வீட்டுக்காப்பியைவிட அவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது.  அதெல்லாம் சரிதான், ஆனால் இவர் ஒரே சமயத்தில் மூன்று காப்பிகளுக்கு ஆர்டர் கொடுப்பதுதான் எங்கேயோ நமக்கு உதைக்கும் !!  வயிறு கெட்டுப்போகாதா? சிறிது நேரம் யோசனை செய்கிறேன். அவர் வீட்டில் வைத்திருக்கும் காஃபி மக் நமது பறங்கி லோட்டா சைசில் இருக்கும். நமது டவரா டம்ளரோ மூன்றே மொடக்கு குட்டிப் பாத்திரம்! ஆக மூன்றும் ஒன்றும் சமனாகித்தான் போகிறது என்னை நான் தேற்றிக்கொண்டேன். ஆனால் இந்திய கலாச்சாரத்தில் மூழ்கிக் கிடக்கும் சர்வர்களுக்கும் அக்கம்பக்கத்து டேபிள்காரர்களுக்கும்   இந்த 'மூன்று காப்பி ஆர்டர்' 'முழ நீள லாவக ஆற்றுதல்' உலகப் பெரிய ஆச்சரியம்தான்!!
தொட்டு தொட்டுப்பார்த்தால் இந்த மாதிரி எதிரும் புதிரும் நிறையவே...!!  எடுத்துச்சொல்லலாமா?..... மாற்றிவிடலாமா?  துடிக்கின்றன உள்ளூர் மனசுகள்!!
 ஆனாலும் இதற்கெல்லாம்  அப்பாற்பட்டு அவர் இந்தியா மேல் கொண்டிருக்கும் அளவறுக்க முடியா பற்றில் இந்தியக் கலைகள்
மீது கொண்டுள்ள ஈடுபாட்டில்  பாசம் நிறைந்த இந்தியக் குடும்பத்தை பெற்றிருப்பதின் மகிழ்வில்  இந்த சில்லறை  விஷயங்கள் மாயமாக மறைந்துபோகின்றன! பனியாய் விலகிப்போகின்றன! ஆனந்தம் நிறைவாகக்  குடி கொள்கிறது !!     

No comments :

Post a Comment