Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Saturday, 16 March 2019

வானினின்று வந்த வரம்


அன்று என் தோழியைப் பெண் பார்க்கும் படலம். ப்யுட்டி பார்லர் என்ன என்று தெரியாத  அந்த சுக நாட்களில் தோழிகள் நாங்கள்தாம் பெண்ணுக்கு அலங்காரம். உள்ளே நுழைந்த உடனேயே எங்களுக்கு பாட்டியின் எச்சரிக்கை பிரியமாகக் கிடைத்தது! "அசந்து மறந்துகூட கூடத்துக்கு வந்துராதிங்க பொண்டுகளா..... பொண்ணு பாக்கையில உள் அறையிலேயே இருங்க...... என் பேத்திய உட்டுட்டு ஒங்கள்ள ஒருத்திய  கொத்திகிட்டு பொயிடப் போறானுவ ....." எச்சரிக்கையின் வீரியத்தை மறைத்த பாட்டியின் சிரிச்ச முகம் விவரங்களை விளாவாரியாக்கியது!
பெண் பிடித்துப்போய் லவுகீக பேச்சு வார்த்தையும்  சுமுகமாக முடிந்தது.
"எங்க பக்கமேருந்து ஒரே ஒரு கண்டிசந்தாங்க...... கலியாணத்துக்கு அப்பறம் பொண்ணு வேல பாக்கக்கூடாது..... வீட்டோடதான் இருக்கோணும்....... அது புள்ள குட்டிகள நல்லா  வளக்கோணும்........ அதுகளுக்கு பாடம் படிப்பு சொல்லி குடுக்கோணுமுங்கிறத மனசுல வச்சிதான் படிச்ச பிள்ளைய பாக்க வந்திருக்கோம் .....  நீங்க ஒங்க பொண்ண வேலைக்கி அனுப்பினது ஒங்க சவுரியம் ஆனா பொண்டுக வேலைக்கிப்போனா ஊர்ல எங்க மதிப்பும் மருவாதியும் கப்பலேறிப்போயிரும்.  பாப்பா  கிட்ட கேட்டு யோஜன பண்ணி முடிவச் சொல்லுங்க........ அப்பால இத மனசுல வச்சி ஒளப்பிகிட்டு ஒருத்தருக்கொருத்த மனஸ்தாபம் வரக்கூடாது பாருங்க...." மாப்பிள்ளை பக்கம் வெகு தெளிவாக இருந்தார்கள்! பாப்பாவிடம் கேட்காமலேயே முடிவு நல்ல சொல்லப்பட்டது! எங்கள் தோழியின் கல்யாணமும் சிறப்பாகவே நடந்தது!
நானும் கும்பகோண பெண்கள் அரசு கல்லூரியில் பார்த்து வந்த வேலையைக்  கல்யாணத்தோடு விட்டவள்தான். ஆனால் என்னது நிபந்தனையற்ற ஒன்று. கணவருக்கு ராஜமுந்திரியில் வேலை. அங்கு செல்ல  வேண்டிய கட்டாயம்.
இன்னொரு தோழியின் நிலைமை இன்னும் வித்தியாசமானது...... அவள் வேலை பார்த்த பள்ளியில் கல்யாணப் பத்திரிக்கையை  பள்ளி நிர்வாகியிடம் கொடுக்கையில் கூடவே வேலையிலிருந்து விலகும் தாளையும் கொடுத்துவிட வேண்டும் என்பது  அம்மாங்கள் நடத்தும் அந்தப்பள்ளியின் எழுதப்படாத ஒரு சட்டம்! "மெய்விவாகம் மிகவும் உயர்ந்த தேவ திரவிய அனுமானம் ....... வேலையில் இருக்கும் ஒரு பெண் இரண்டு  கடமைகளையும்  சரிவரச் செய்ய முடியாது என்பது அங்கத்தைய முடிவான கருத்து!!  கலியாணம் பண்ணிக்கிட்டு பிள்ளகுட்டிகளா பெத்துகிட்டு அப்பப்ப பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டுகிட்டு... இதுகள வச்சிக்கிட்டு பள்ளிக்கூடத்த ஒழுங்கா நடத்த முடியுமா என்ன? அம்மாங்களின் ஒற்றை நோக்கு இதுதான் என்பது தெரிந்தாலும் " ஒரு மனிதன் இரண்டு எஜமானனுக்கு வேலை செய்வது சாத்தியம் அல்ல." என்ற  விவிலிய வார்த்தைகளை இவர்கள் சும்மாதான் எடுத்து விடுகிறார்கள் என்பது  புரிந்தாலும் அதுதான் உண்மை என நிரூபிக்கும் வகையிலேதான் கல்யாணப்பொண்ணாகப் போகும்  டீச்சருக்கு அவர்கள் தரும் உருக்கமானஅறிவுரைகள் இருக்கும்!
இப்படிப்பட்ட அந்தப்பள்ளியிலே அம்மாங்களும் அவர்களைப்போலவே  கல்யாணமே வேண்டாம் என வைராக்கியமாக இருக்கும் பெண்களுமே மெஜாரிட்டியாக கொடிகட்டிப்பறந்தார்கள்! மற்றதெல்லாம் வந்து போகும் நிலையற்ற ஜீவிகளே!
கல்யாணம் ஆகின்ற பெண்களில் வம்பு எதற்கு என வேலையை விட்ட பெண்கள் ஒருபக்கம் என்றால் ஒன்றிரெண்டு  அராத்துகள்(அம்மாங்கள் பாஷையிலே! )
"இது அரசாங்க சட்டமா என்னா? கவர்மென்ட்ல வேல பாக்கிறவங்க எல்லாம் கலியாணத்தோட வேலைய உட்டுடுறாங்களா என்னா ? தந்திரக்காரங்க இந்த அம்மாங்க! இவுங்கள ஒரு வழி பண்ணியே ஆவணும்." என போர்க்கொடி  உயர்த்திய சிறு பான்மைப்பெண்களின் கை கொஞ்சங் கொஞ்சமாக வலுப்பெற அந்தப்பள்ளியின் எழுதப்படாத சட்டம் உடைந்து விழுந்தது!  இந்த அராத்துகளின் கூட்டத்திலே என் தோழியும் சேர்த்தி!
பள்ளி சட்டத்திலிருந்து சுதந்திரம் பெற்றாலும் சொந்த வீட்டில் அவள் ஒரு அடிமைதான்.
ஆறுதல் தரும் கணவனின் தோளுக்கு அவளுக்குக் கொடுப்பினை இல்லை."கல்யாணம் ஆன அண்ணைக்கே  எங்க வீட்டு நெலமைய தெளிவாச்சொல்லி இந்த சூழ் நெலையில வேலக்கி போறதும் போவாததும் ஒன்  இஷ்டம்ங்கிறத சொல்லிட்டேன். வழியில கெடந்த கோடாலியத்தூக்கி நீயா காலுல தூக்கி  போட்டுக்கிட்டு இண்ணைக்கி குத்துதே கொடையுதேண்ணா அதுக்கு நான் என்னா செய்றது? ஒண்ணே ஒண்ணு சொல்றேன் இப்ப கூட இண்ணைக்கே இந்த க்ஷணமே ஒன்வேலைய உட்றதானா உட்டுடு!!" விட்டேத்தியான இந்த பதிலில் தனது படிப்பும் அதற்குகந்த வேலையும் அது தரும் நிறைவும் கால் தூசியாக ஆணாதிக்கத்தின் ஆணவத்தால் மிதிக்கப்பட்டது. 
இது ஒரு பக்கம் என்றால்  பெண்களுக்குப் பெண்கள்தாம் எதிரி என்ற வாக்கு அவள் விஷயத்தில் கண் கூடான காட்சியானது.  கைக்குழந்தை, பிழிந்தெடுக்கும் அம்மாங்கள் பள்ளி. மிக்ஸி கிரைண்டர் குக்கர் வாஷிங் மெஷின் இல்லாத காலகட்டத்தில் அந்த பெரிய  கூட்டுக்குடும்பத்தில் இடுப்பு கழண்டு போகும் வீட்டு வேலைகள் ஓர்ப்படிகளின் பொறாமை போட்டா போட்டிகள் பரிகாசப்பேச்சுகள், "என்னா பெரிசா வேலைக்குப்போய் கிழிச்சா? அவ சம்பாரிச்சுதான் இந்த  குடித்தனம் நடக்குதாக்கும். புள்ளைக்கி ஆளு வச்சிட்டா சரியாப்போச்சா? அந்த பொம்பள  ஆடி அசஞ்சு வர்றதுக்குள்ள பிள்ளயோட  .... மூ............த நாங்கதான அள்ளுறோம்......... மகாராணி  காலமகாட்டியும்  சீவி சிங்காரிச்சிகிட்டு பையி  ஒண்ண மாட்டிகிட்டு சிச்சீ.... இதுவும் ஒரு பொழப்பா என்னா?" தினப்பாடாக குத்தி குத்தியே ரணமாக்குவதில் சுகம் காணும் மாமியார்.  அவளுக்கு போராட்டமே வாழ்க்கையாக  ஆகிப்போனது உண்மை.
கால சுழற்சியில் அவள் பையனுக்கு பெண் பார்க்கும் படலமும் வந்துவிட்டது. பெண்ணிற்கு நல்ல படிப்பு......நல்ல வேலை  நல்ல குடும்பம், அருமையான மதிப்பீடுகள், சேர்ந்து வாழ்வதில் தான் சுகம் என்ற கோட்பாடு!
அதிர்ஷ்டந்தான் பையனுக்கு.... இது வானத்திலிருந்து வந்த வரம்தான்  நமக்கு...... மகிழ்ந்து போயினர் பெற்றோர் இருவரும்! வீட்டிற்கு வந்த பெண் என்னைப்போல அவதி படக்கூடாது மனசு நோகக்கூடாது. அவள் வேலைக்குப்  போகும் நேரம்  சுகமானதாய் இருக்க வேண்டும்  என்பதில் என் தோழி உறுதியாய் இருந்தாள்.
ரொம்ப நாளைக்குப்பிறகு அவள்  செல் சிணுங்கிய போது அவள் குரலும் சுணங்கித்தான் இருந்தது.
"நம்ம ஒண்ணு நெனச்சா அந்த சாமி ஒண்ணு நினைக்குது பாரு."  அவள் தொடரட்டும் என ம்ம் மட்டும் கொட்டினேன்.
"ஒரு நா ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்த மருமக வெளி நாட்ல பிரமோஷனோட அதுக்கு வந்திருக்கும் வேலைய பத்தி சொல்லுச்சு."
"நீ என்ன சொன்ன?"
"சொல்றதாவது கொள்றதாவது. தூக்கி வாரிப்போட்டுச்சு எனக்கு. விஷயத்தைதான் எங்க கிட்ட சொல்லுச்சு .... எங்க கருத்தயா  கேட்டுச்சு? பையன பரணியிலேருந்து சூட்கேஸ் எடுக்கச்சொன்னப்பதான்... ஆஹா விஷயம் முடிவாகிப்போச்சுடாண்ணு புரிஞ்சி கிட்டோம்."
"பையன் என்னா சொன்னான்?"
"சுதந்திரம்னா சுதந்திரம் அப்படி ஒரு சுதந்திரம் குடுத்துருக்கான் அவன். தஞ்சாவூரு தலையாட்டி பொம்மதான்! இவராட்டம் இந்த க்ஷணமே ஒன்வேலைய உட்டுடுண்ணு சொல்ல முடியுமா என்ன? முடிவெடுக்குறது தன்னோட பிறப்புரிமண்ணுல்ல அந்த பொண்ணோட நடவடிக்க இருக்கு."
"பையன் தனியா இருக்காண்ணு அவதிப்படுறியோ?"
"பொண்ணு படு கெட்டி  ... போன கொஞ்ச நாளையிலேயே பையனயே எங்ககிட்டேருந்து பிரிச்சிடுச்சுப்பா ...... பிரிச்சிடுச்சு." அழுகையும் ஆத்திரமும் பொங்குகிறது  இதுல வேற அது சொல்லுது  "அத்த நீங்க ரெண்டு பேரும் ஒரு ஆறு மாசத்துக்கு இங்க வாங்க...... அருமையான ஊரு...... சென்னையோட பொகக்காத்து வாங்காம அருமையான பச்ச மரக்காத்த வாங்குங்க."ண்ணு.  எல்லாம் பம்மாத்து பேச்சுப்பா
"எல்லா சொகமும் அந்தப் பொண்ணு ஒனக்கு குடுக்க தயாரா இருக்கும்போது இன்னம் என்னா வேணும் ஒனக்கு?"
"என்னாப்பா இப்பிடி சொல்லிட்ட? நான் எவ்வளவு அனுசரணையா பிரியமா சுதந்தரத்தோட அந்த பொண்ண வச்சிருந்தேன்? ஒரு வேலையாவது அத செய்யச் சொல்லியிருப்பேனா? இங்க அதுக்கு என்னா கொற? வீடு இல்லியா வாசல் இல்லியா?  இவ்வளவு சொகத்தையும் அனுபவிச்சது  எனக்கு பத்தாதுடிண்ணுதானே என் ஒத்த பையன எங்கிட்டே இருந்து பிரிச்சி கூட்டிகிட்டு போயிருச்சு ... அங்க வரச்சொல்றதெல்லாம் நாய்க்கி எலும்பு போடுற கததான்." தழு தழுத்து கம்மிப்போனது குரல். 
தோழியின் பேச்சில சிரிக்கிறதா அழுவுறதாண்ணு எனக்குப்புரியில. அவள் காலத்தில் அவள் வேலைக்குப்போன அந்த புரட்சியில் அவள் மாமியாருக்கு எவ்வளவு எரிச்சல் இருந்ததோ அதே எரிச்சல் இவள் மனசுக்குள்ளே இண்ணைக்கி பிள்ள பாசத்த முன் வச்சு ஒடிகிட்டிருக்கு... நாடகங்கள்தான்  வேறே ......எதையோ தான் இழக்கிறோம் என்ற உட்கருத்து எப்போதும்  ஒன்றாகவேதான் இருக்கிறது. பெண்களுக்குப் பெண்கள்தாம் எதிரி என்ற வாக்கு நிறைவேறிக் கொண்டுதான் இருக்கிறது!
 "தோழி நீ வரையறுத்து வைத்திருக்கும்  மாற்றங்கள் அளவு கோல்கள் மட்டுமே சரியானது  சொச்சமிச்சமெல்லாம் கவைக்கு உதவாதவை என தள்ளிவிடாதே எல்லா வகை மாற்றங்களுந்தான் வாழ்க்கை.... அளவுகோல்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறுபட்டே நிற்கும் என்ற  உண்மையை புத்திசாலியான உனக்கு உருண்டோடிடும் நாட்கள் கட்டாயம் புரிய வைக்கும். புரட்சிக்காரியான உன் போன் அடுத்த முறை வருகையில் "நாங்க ரெண்டு பேரும் வர்ற மாசம் ஊருக்கு பிள்ளைகளைப் பாக்க போறோம்ப்பா....... " என்ற உன்  உற்சாகக்குரல் என்னைத்  தாக்க வேண்டும் என்பதே என் மாபெரும் விண்ணப்பம்!

No comments :

Post a Comment