Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Friday, 12 April 2019

யாமார்க்கும் குடியல்லோம்


அந்த ஆஸ்பத்திரியில் பார்வையாளர் நேரம் ரொம்பவும் கண்டிப்பானது. அதுவும் ஐசியுவைப்பற்றி கேட்கவே வேண்டியதில்லை. ஆயுள்தண்டனை சிறைக்கைதியைப் பார்க்கக்கூட இவ்வளவு கண்டிஷன்கள் இருக்காது. கால் செருப்பை அவிழ்த்துவிட்டு அவர்கள் தரும் சாக்ஸை மாட்டி முகத்தில் வேடு கட்டி அந்த சின்னோண்டு இடத்தில் நர்சின் குரலுக்குக் கட்டியம் கட்டி காத்திருந்து உள்ளே நுழைந்த  அந்த இரு நிமிட நேரம்..... உடம்பு முழுவதும் ஓடும் ட்யூப்களும் இரு கைகளிலும் தினுசு தினுசான உள் செல்லும் திரவங்களும் தலையில் ஹெல்மட்டும் "இவரையா.....  இந்த குழாய் மனிதரையா?  நாம் காண வந்தோம்......" விதிர்த்துப்போகிறேன். இரண்டு நிமிஷம் யுகமாக ஆகிறது.
முகம் நிறைந்த  புன்சிரிப்பும்  "வாம்மா வாம்மா நல்லா இருக்கியாடா" என்ற அன்பு வார்த்தைகளும் அந்த வீட்டுக்குள் நுழையும் சுகத்தை இருமடங்காக்கிவிடும்! "அவர்களுக்கா அவர்களுக்கா இப்படி?"மனம் துவண்டு பலமிழந்து குன்றிப்போகிறது.
பிள்ளைகளிடம் பணம் இருக்கிறது.கூடவே எப்படியாவது அப்பாவைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற உத்வேகம். ஆனால் எனக்கு எங்கேயோ உதைக்கிறது. இந்த மருத்துவமனை அவரை பணம் பண்ணும் கருவியாக உபயோகிக்கிறதோ?  காலையில் ஸ்கேன் எடுத்தார்களாம்..... கொஞ்சம் இம்ப்ப்ரூவ்மென்ட் தெரிகிறதாம்...... ரத்த யூரின் டெஸ்ட் சரியாக இல்லையாம் திரும்பவும் எடுக்கவேண்டுமாம்..... திரவ சாப்பாடு மூக்கிலிருக்கும் ரைல்ஸ் ட்யூப் வழியாக நேரே குடலுக்குப் போகிறதாம். இன்னும் நிறைய டெஸ்டுகள் நாளைக்கு இருக்கிறதாம். "அப்பாவுக்கு வேண்டிக்கிங்க." வெளியே நின்று கொண்டிருந்த பிள்ளைகள் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினார்கள்.
எனக்கென்னவோ இந்த மருத்துவமனை  இவர்கள்  பாசத்தை இயலாமையை  முதலாக வைத்து லாபத்தை அள்ளி கொட்டிக்கொள்ளுகிறார்களோ என்றே தோன்றியது. வாங்கி வைத்திருக்கும் பல்வேறு ஒசத்தியான கருவிகளுக்கும் லட்ச லட்சமாய் வாங்கும் மருத்துவர்களுக்கும் வேறே எப்படி தீனி போடுவது?
இது ஒரு பக்கம் என்றால் நிறைய மருத்துவமனைகள்  தொடர்பு சாதனங்கள் வழியே தங்களது ஈர்க்கும் விளம்பரங்களால் வயதானவர்களை மயக்கிவிடுகின்றன. சக்கரவண்டியில் உதவியாளரால் தள்ளப்படும் காட்சி முதலில் இருக்க  அடுத்த ஒன்றில் மனைவியோடு கை கோர்த்து ஆற்றங்கரை சிலு சிலுப்பில் ஜாம் என்று நடந்து போகும் காட்சியில் மனதைப்  பறிகொடுக்கும் வர்க்கங்கள் நன்றாகவே வலையில் மாட்டிக்கொள்கின்றன.
"இளமைக்குத் திரும்பவும் நீங்கள்.....!!!! நாங்க...... நாங்க இருக்கோம்....." என்று நெஞ்சில் அடித்துச்சொல்லப்படும் பசப்பு வார்த்தைகளில் வலியிலிருந்து எப்படா மீட்பு வரும் என ஏங்கும் உள்ளங்கள்  மயங்கி மாட்டிக்கொள்வது உண்மையிலும் உண்மை!
வயதாவதை மறுப்பது இயற்கையான ஒன்றோ?! உறவு தவிர யாராவது பாட்டி தாத்தா என கூப்பிட்டால் கோபம் மனசை அடைக்கிறது. கல்யாண போட்டோவைப்பார்த்துவிட்டு "அப்ப என்னா அழகா இருந்திருக்கிங்க!" என்று உசுப்பேத்திவிடும் இன்னொரு கட்சியும்  திரும்பவும் இளமையாகும்  பேராசையைத் தூண்டி விடுகின்றன. போட்டாக்ஸ் பண்ணிக்கொண்டு சதைகளையும் நரம்புகளையும் இழுத்துக்கட்டி பழைய ஆளாய் ஆகிவிடுவோமா மனசில் சின்ன சபலம்! எதுக்குத்தான் பணம் வச்சிருக்கோம்? இந்த சபலத்துக்கு தூபம்போடும் எண்ணகுவியல்களின்ஆட்டங்கள் வேறு....... ஆனால் இந்த  இளமை கூட்டும் சில்லறை வழி ஆறு மாதத்திற்குதான் தாக்குப்பிடிக்கும்..... திரும்பவும் பணத்தைக் கொட்டி அவ்வப்போது மருத்தவரிடம்   செல்லாவிட்டால் நாடி நரம்பெல்லாம் தொங்கிப்  போகும் என்ற  உண்மை  மனசில் பதிவேனா என அழுத்தமாகவே நிற்கிறது. 
நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கும்போது  சீக்காய் கிடக்கும் பெரியவர்களை வீட்டிற்குப் பின்னாலிருக்கும் கொட்டாயில் போட்டுவிடுவார்கள். அவருக்கு ஒத்தாசையாக ஒரு எடுபிடிஆள் கூடவே இருப்பான். ராத்திரிக்கு தெரு ஆட்கள் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் காவலுக்கு இருப்பார்கள். பழைய கதை எல்லாம் பேசிப் பேசி  அந்த இடத்தை தெருக்கூத்தாக ஆக்கி விடுவார்கள். நாங்களும் தூக்கம் வரும் வரையிலும் எச்சி ஒழுகுவது கூடத்தெரியாமல் கதைகளில் ஐக்கியமாகி விடுவோம். வாழ்க்கைப்பயணம்  பல்வேறு கட்டங்களைக் கொண்ட ஒரு அழகான நெடிய பாதை...இறப்பும் அந்த பாதையின் ஒரு கட்டமே என்பதை என்ன அழகாக உணர்ந்து அன்று  வாழ்ந்திருக்கிறார்கள்! 
கிராமத்தில் இருக்கும் என் மாமா பையனுக்கு வயசு எண்பதுக்கு மேல் இருக்கும். ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவருக்கு ஒரே தலை சுற்றல். அப்படியே பக்கத்தில் இருந்த தூணைப் பிடித்துக்கொண்டு கொஞ்ச நேரம் நின்ற அவர்  தோட்டத்துப் பக்கம் போய் தலையோடு தண்ணியை ஊற்றிக்கொண்டு தன் துணிகளையும் ஒரு தப்பு தப்பிப் போட்டுவிட்டு  டம்ளர் டீயைக்குடித்துவிட்டு  ட்ராக்டரில் ஏறி உட்கார்ந்தவர் ராஜா மாதிரி வயலைப்பார்க்கக் கிளம்பிவிட்டார்! உழவனுக்குத்தான் ரிட்டையர்மெண்ட் என்ற பேச்சே கிடையாதே. "இருக்கமுட்டும் உழைப்போம்... போறப்ப போய்ச்சேருவோம்" என்ற மன உளைச்சல் தராத இந்த சுலபமான சித்தாந்தம்தான் எவ்வளவு அழகானது!
இன்றைக்கும் எங்கள் ஊரின் சுலபமான இப்படிப்பட்ட சித்தாந்தங்கள் உலாவருகின்றன. "பாப்பா கொளத்துதண்ணியில ஒரு தரம் முழுவி எந்திரிச்சோம்ணு வச்சிகிங்க அக்கா..... காச்ச தலவலி எல்லாம் பஞ்சாப் பறந்துபோயிரும். மருதங்குட்ட தண்ணியும் அப்புடித்தான்." நம்பிக்கையின் உச்ச கட்டத்தில் எங்கள் மக்கள் வாழ்வது மனசை குளுமையாகத்தான் ஆக்குகிறது!  
அப்பா அம்மாவை அனாவசியமாக மருத்துமனையின் மெஷின்களுக்கு பலியாடாக ஆக்க வேண்டாம் என்ற நினைப்பு நம்மிடையேயும் இன்று நிலவுகிறது. எங்கள் சொந்தத்தில் பதினொரு பிள்ளைகள் கொண்ட வளமையான வீட்டில் அம்மாவுக்கு கிட்னி சரிவர வேலை செய்யாமல் இருந்த கட்டத்தில்  டயாலிசிஸ்தான்  உய்வு என டாக்டர்கள் கூறிய போது பிள்ளைகளின் குடும்பங்கள் இதைக் குறித்து முடிவு எடுக்கக் கூடியிருந்தனர். கருத்துகள் பல்வேறாகத்தான் இருந்தது. ஆயினும் அவ்வப்போது செய்ய வேண்டிய இந்த டயாலிசிஸ் மருத்துவம் எவ்வளவு  கொடுமையானது என்ற கருத்து மேலோங்க மருந்துகளோடு அம்மா வீட்டில் நம்மோடு இருக்கட்டும் அவர்களோடு நாம் மாறி மாறி இருந்து சந்தோஷம்  கொடுப்போம் என முடிவு செய்தனர் மக்கள். இதில் வெளிநாடுகளில் வசிப்பவரும்  சேர்த்தி. 
"அம்மாவுக்கு ஸ்வீட்ணா உயிரு மேடம்.... அவுங்க இஷ்டப்பட்டத குடுக்குறோம். அவுங்களும் சந்தோஷமா வீட்டோட இருக்காங்க.. அவுங்களுக்கு ஹார்ட் ப்ராப்ளம் அதோட ஷுகரும் தொணக்கி இருக்கு.. அதனால அவுங்களுக்கு கீமோதெரபி முடியாதுங்கிறாங்க டாக்டர்ஸ். வீட்டுக்கு வந்தப்பறம் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்கண்ணா "நீ எதுக்காக இங்க இருக்க? சென்னைக்குப் போய் வேலைகளைப் பாருங்கிறாங்க!" என்ன.... பேத்திய பாக்கணுமுண்ணு ஆச..... ஒருதடவ கூட்டிகிட்டு போய் காட்டிட்டு வரணும் ... இல்ல அவுங்களையே சென்னைக்கி கூட கூட்டிகிட்டு வரலாம். எல்லா வருத்தத்திலும் அம்மாவை ஆஸ்பத்தரியில் போட்டு தொந்தரவு பண்ணாம அவுங்களுக்குப் புடிச்ச எடத்தில வச்சிருக்கமேங்கிற திருப்தி இருக்கு மேடம்." 
"அதுதாம்மா நெஜமான அன்பு" முழு மனசுடன் அருமையான அந்த கருத்தை ஏற்றுக்கொண்டேன்.
நண்பர் ஒருவருக்கு  அருமையான அரசாங்க வேலை...... சம்பளத்திற்குக் குறைவில்லை.... பின் எதற்கு விஆர்எஸ் வாங்குகிறார்?  தனியார்துறையில் நல்ல வேலையாகக் கிடைத்திருக்கிறதோ?" அவரது திறமைக்கு எங்கே வேண்டுமானாலும்  இன்னும் அதிக சம்பளத்திற்கு சுலபமாக வேலை கிடைத்துவிடும்.
குசலம் விசாரித்தபின்  வேலையைப்பற்றி விசாரித்தேன். "அருமையான வேல கெடச்சிருக்கு மேடம்..... வயசான அம்மாவ கூடவே இருந்து பாத்துக்கிறேன்...." பொங்கும் மகிழ்ச்சியுடன் அவர் சொன்ன வார்த்தைகள் என் மனதை நெகிழ வைத்தது உண்மையிலும் உண்மை!
பலாவித தைலங்களோடு கஷாய மருந்துகள் சகிதம்  அன்புப்பையனின் அரவணைப்பில்  சுகமாகவே இருக்கிறேன் என அந்த அம்மாவின் புன்சிரிப்பு எனக்குத் தெளிவாக்கிய விஷயங்கள் ஆயிரமாயிரம்.
கற்றது கைம்மண்ணளவுதான் என உணர்த்தும்  வாழ்க்கைப்பாடங்கள் என்றன்றுமே நம் அருகில்  வந்து கொண்டேதான் இருக்கின்றன. கண்களை விர உற்று நோக்கி வாழ்வது நமது தலையாய கடமை அல்லவா?

No comments :

Post a Comment