கூட்டுக்
குடும்பத்தின் தாத்தாவுக்கு முன் கைகட்டி சேதி வாங்கிய என் அப்பா
சித்தப்பாக்கள் இன்றும் என் கண் எதிரே.
நாங்கள் அப்பாவை எதிர்த்துப் பேசிய நாட்கள்
உண்டு. ஆனால் அவர்கள் குரல் உயர்ந்தது என்றால் மூஞ்சியை
எட்டு முழத்துக்கு தூக்கி வைத்துக்கொண்டு போவோமே தவிர எதிர்த்துப்பேசினதாக
சரித்திரம் இல்லை.
பெரியவர்களைப்
பார்த்தால் சடக் என்று எழுந்து நிற்கும் முறைமையே
அற்றுப்போன அடுத்த தலைமுறை கால் மேல் கால் போட்டு செல் நோண்டுதலில் ஈடு பட்டுக்கிடக்கும் பாணி 'என்
வாழ்வில் உன் தலையீடு அவசியமற்ற ஒன்று' என்பதன் குறிபாடாக
ஆகிப்போயிருக்கிறது.
கைவிட்டு
எண்ணும் அளவுகோலைத் தவிர்த்து இன்று கூட்டுக்குடும்பம் அழிந்தொழிந்து
சிதைந்து போன மொஹஞ்சதாரோ ஹரப்பாஆகிவிட வாழும் இடம் சிறுத்துப்போய் குழந்தைகளும்
குறைந்து போன புரட்சியோடு கூட இந்த ஐ.டி. புரட்சியும் சேர்ந்து கொண்டு எல்லாவற்றையும் தலை
கீழாய் புரட்டிப்போட்டு உலகத்தில் எங்கிருந்தாலும் செய்யும் தொழில் ஒன்றே என
ஆக்கிவிட்டநிலையில் திரிசங்கு சொர்க்கத்தில் நிற்பவர்கள் இந்த பாவப்பட்ட அப்பா
அம்மாக்களே!
என்னை
சுற்றிப்பார்க்கிறேன்...... வயதான தம்பதியர் வசிக்கும் வீடுகளே இன்று எங்கும்
நிறைந்து கிடக்கிறது. சில ஜோடிகளுக்கு பையனோடு போய் வெளி
நாட்டில் இருக்க ஆசைதான். ஆனால் அங்கே புருஷன் பொண்டாட்டிக்குள்ளையே எக்கச்சக்கமாக ஒவ்வாமை. இதில் நம்ம போய் எங்க குப்பை கொட்டுறது என்ற ஏக்கம். இன்னும்
சில அதிர்ஷ்ட ஜோடிகள் காடாறு மாசம் வீடாறு மாசம் என்ற கணக்கில் கோடையை பிள்ளைகளோடு
அனுபவித்து விட்டு வேடந்தாங்கல் பறவைகள் போல அந்த ஊர் பனியையும் குளிரையும்
தவிர்த்து இந்தியா வந்து சேர்ந்து விடுகிறார்கள்.
இந்த
மாதிரியான ஒரு சூழ்நிலையில்தான் நமக்குத் தெரிந்த பையன் வெளி
நாட்டில் வாழ்பவன் அப்பா அம்மாவைத் தன்னோடு நிரந்தரமாக வைத்துக்கொள்ள
ஆசைப்படுகிறான். எவ்வளவு கஷ்டங்களுக்கிடையே வாயைக்கட்டி
வயிற்றைக் கட்டி தன்னைப்படிக்க வைத்தார்கள் என்பதை உணர்ந்த பிள்ளை அவன். மனைவிக்கும் இவனது அப்பா அம்மா மீது ரொம்ப பிரியம். அவர்களைக் கூட வைத்துக்கொள்வதில் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு இல்லாதது
பெரும் புண்ணியமே.
வீட்டுக்குள்
நுழைந்ததும் பெரிய வெல்கம் கேக் வைத்துக்கொண்டு பேரப்பிள்ளைகள் வரவேற்றதில்
பெற்றோர் புளங்காகிதம் அடைந்து போனார்கள். கட்டிப்பிடித்து உச்சி மோந்து ...........
"என்ன தவம் செய்தோம் நாம்" உணர்ச்சிப்பெருக்கின்
உச்சத்தில் இருவரும்!
" நல்ல வாக் அப்பா..... ஜெட் லாகை எல்லாம் கலச்சி
வுட்டுடுச்சு போ...... இந்த ஊரு பிளாட்பாரத்தில எவ்வளவு கொள்ள மரங்க... ஒன் அம்மாவ புடிக்க முடியில ...."
வந்த இரண்டு நாள்கழித்து வேலையிலிருந்து வந்த பையனிடம் அப்பா சந்தோஷமாக பகிர்ந்து
கொண்டார்.
இதை
சொன்ன மாத்திரத்தில் பையன் பேயரைந்தது போல திகைத்துப் போய் நின்றான்.
" அப்பா என்னா காரியம் பண்ணினிங்க நீங்க....... ஒத்த காசுக்கு துப்பாக்கிய நீட்டுற ஊருப்பா இது... ஏதோ
ஒங்க அதிர்ஷ்டம் உருப்படியா வந்து சேந்துட்டிங்க....
சனி ஞாயிறு ஒங்கள பெரிய காட்டுக்கே கூட்டிகிட்டு போறேன்... ஆச
தீர ரெண்டு பேரும் நடங்க...... அது வரைக்கும் வீட்டைவுட்டு வெளியே கெளம்பி கிளம்பி
வுடாதிங்க ஓகேவா " சுருக்கென்று குத்து வேலம்
முள் போல உள்ளுக்குள் ஒரு சுரீர். காலையிலும் மாலையிலும்
பெசன்ட் நகர் பீச்சில் காலாற கதை
பேசிக்கொண்டு நண்பர் குழாமோடு நடந்தது
பொங்கல் திருநாளில் அங்கு நடக்கும் டி.எம். கிருஷ்ணாவின் கச்சேரிகள்
ஒயிலாட்டம் மயிலாட்டம் பொய்க்கால் குதிரையாட்டங்களை அதே கூட்டத்தோடு கண்டு கைதட்டி
கலாய்த்து மகிழ்ந்தது முன்னே வந்து நின்றது. இனம் தெரியாத உரிமை ஒன்று
தங்களிடமிருந்து பறிக்கப்பட்டதோ?
" என்னம்மா ஊர் புடிச்சு போச்சா.......? ஒடம்பு நல்லா இருக்கா....?." பிரியமுடன் பக்கத்தில் அமர்ந்தாள் மருமகள். கூடவே
பையனும். "பெருசா ஒண்ணும் இல்லம்மா அப்பப்ப வர்ர மூட்டு வலி கழுத்து
வலிதான் அப்பாவுக்கு கொஞ்சம் ப்ராஸ்ட்ரேட் ப்ராப்ளம் அதெல்லாம் நாங்க மேனேஜ்
பண்ணிக்குவோம். நீங்க கவலைப்படாதிங்க."
"அப்புடி சொல்லாதிங்க அம்மா சின்னதா
இருக்கறதுதான் பெருசுல போயி நிக்கும். நம்ம ஊரு மாதிரி
ஒடனடியா டாக்டர் கிட்ட வைத்தியம் பாக்குறது இங்க முடியாத காரியம். ஏதோ ஆத்திர அவசரத்துக்குத்தான் இங்க சூட்டோட
சூடா வேல நடக்கும். மத்தபடி க்யூவிலதான் போவமுடியும். ஒங்க
யூட்டரஸ் ஆப்பரேஷன் ரெண்டே நாள்ல ஃபிக்ஸ் பண்ணி நடந்தமாதிரி இங்க சட்டு புட்டுண்ணு
நடக்குமுண்ணு கனவுல கூட நெனைக்கமுடியாது. அப்பறம் பார்மசிக்காரர்கிட்ட
கேட்டு மருந்து வாங்கி திங்கறதெல்லாம் இங்க முடியாது. எல்லாத்துக்கும்
டாக்டர் சீட்டு வேணும்... அதனால சின்னதோ பெருசோ நம்ம ஒரு லிஸ்ட் போட்டு
வச்சிக்கிட்டோமுண்ணா முன் கூட்டியே நாம பிளான் பண்ண சவுரியமா இருக்கும். எதாவது பிரச்னைண்ணா
தயங்காம ரெண்டு பேரும் சொல்லிடுங்க....."
அம்மாவுக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது. டாக்டர் கிட்ட ஒடம்பு வலி தாங்காம வந்த ஒருத்தருக்கு "நான் குடுக்குற இந்த மருந்த தெனமும் மூணு வேள ஒரு வாரத்துக்கு
சாப்புடுங்க. எப்பயும் போறமாதிரி வாக்கிங் போங்க
எக்சர்சைஸ் பண்ணுங்க. எல்லாம் சரியாப்போயிரும்." முண்ணு
சொல்லி மருந்து குடுத்தாராம். எட்டு நா கழிச்சு வந்த மனுஷன் "அது என்னா மருந்து குடுத்திங்க
டாக்டர்? ஒடம்பு அருமையா ஆயிருச்சுண்ணு சந்தோஷமா சொன்னாராம். டாக்டர்
சிரிச்சிகிட்டே அது மாத்தரையே இல்லங்க..... சக்கர வில்ல மாதிரி ஒண்ணு........ இங்கிலிஷ்ல 'ப்ளாசிபோ'ண்ணு சொல்லுவாங்க அததான் ஒங்குளுக்கு குடுத்தேன் அப்படிண்ணாராம். பத்து நா கழிச்சி திரும்ப வந்தவரு நல்ல மாத்தரயா குடுங்க டாக்டர் ஒடம்பு வலி தாளுளண்ணாராம். அது மாதிரி லேசு
பாசா இருக்குற நம்ம மூட்டு வலிக்கும் கழுத்து வலிக்கும் அவுங்க லிஸ்ட்டுக்குள்ள ஏறுர மவுசு
கெடச்சு போச்சுசுண்ணா நம்ம மனசு பூரா எப்ப என்னா நடக்குமோண்ணு ஒரு
ஒதப்பாவே கெடக்கும். கெடக்கு கழுதண்ணு உட்டுட்டு ஒரு
தைலத்த தடவிகிட்டு போவாம என்னா வேல பண்ணுதுக இதுக? அவுங்க ரெண்டு பேரையும் நோண்டி நோண்டி லிஸ்ட் ரெடியாயிருச்சு.
"வலி
ரொம்ப போறமுட்டும் பேசாம இருக்காதிங்கப்பா முன் கூட்டியே சொல்லிடுங்க அப்பதான் புக் பண்ண சரியா இருக்கும். அம்மா நீங்களுந்தான்."
மெல்லவும்
முடியாம முழுங்கவும் முடியாம ரெண்டு பேரும் அவுங்க ரூமுக்குள்ள போய் அடைஞ்சிட்டாங்க.
" அம்மாவுக்கு சேப்பங்கிழங்கு வறுவல் ரொம்ப புடிக்கும். அப்பாவோட
ஃ பேவரிட் ஏழு காய் அவியல். சரிதானே அப்பா நான் சொல்றது?"
மருமகள் பிரியத்தோடு கேட்டாள்.
" கரக்ட்டா என் மருமக ஞாபகம் வச்சிருக்கு பாரு." மருமகளை பிரியமாக தடவிக்கொண்டே பையனிடம் அம்மா
சொன்னார்கள்..
"ஃ பர்ஸ்ட் கிளாஸ்
சமையல்மா என் வொய்ஃபுது. ஒங்குளுக்கு வெயிட் போடப்போறத நாங்க பாக்கத்தானே
போறோம். சரி கெளம்புங்க ஹைப்பர் மார்கெட்டுக்கு பொயிட்டு
வந்துடுவோம்."
அது
என்னா ஹைப்பர்மார்கெட்டு? போய்தான் பாப்பமேண்ணா நம்ம ஊரு சூப்பர்
மார்கெட்ட தூக்கி அதோட ஒரு மூலையில உக்கார வச்சிடலாம்!ஒரு
நகரமே கடையும் கண்ணியுமா இருந்தா எப்புடி இருக்கும்? அவ்வளோ
பெரிய எடம்அது ...... ஒரு மைல் நீளத்துக்கு பாலிலேயே
ஆயிரம் தினுசுல்ல வச்சிருக்கானுக.... மூணே வகைக்குள்ள அடங்கிப்போகிற
ஆவின் பால் அவங்க கண் முன்னாடி பாவமா ய் நின்றது உண்மை!!
"இந்த ஹைப்பர் மார்கெட்ட சும்மா வேடிக்க
பாத்ததே மனுஷனுக்கு அசந்து போயிருச்சு...... எதாச்சும் குடிக்கிறதுக்கு எடுத்துகிட்டு வாயேன்." மனைவியுடன் கணவர் சொல்ல "ஆமாப்பா..... நம்ம ஒத்த சாமான கூட
தொட்டு நவுத்துல இந்த கட கண்ணிகளப் சுத்தி
பாத்ததிலேயே இடுப்பு உட்டு போச்சு." சமையலறையை
நோக்கிப்போன அவுங்களுக்கு புருஷனும்
பொண்டாட்டியும் அங்க ரொம்ப பிசியா இருக்கறதா பாத்துட்டு "என்னாப்பா
விருந்தா? யாரையும் கூப்புட்டு இருக்கிங்களா என்னா?" என்றார்கள்.
அம்மாவை செல்லமாக கட்டிப்பிடித்த பையன் " ஒரு வாரத்து சமையல
இண்ணைக்கி முடிச்சாதாம்மா உண்டு....... ரெண்டு பேருக்கும் வாரம் பூரா ரொம்ப டைட்டா இருக்கும்.... பிள்ளைகள
கிட்டார் கிளாஸ் பாலே கிளாஸ்ண்ணு
சாய்ங்காலத்திலயும் பிசியாத்தான் இருப்போம்...... சமயலப்பத்தி
நினைக்கக்கூட நேரம் இருக்காது. தனியா சாப்பாட்டுக்குண்ணு ஃ ப்ரீசரே வச்சிருக்கோம்
அம்மா..... அஞ்சு நாள் சாப்பாடும் வரிசையா வரிசையா உள்ள இருக்கும். அத வெளிய எடுத்து மைக்ரோ வேவுக்குள்ள வக்க வேண்டியதுதான் ஒங்க
ஒரே வேல. சுடச்சுட எல்லாம் ஒங்குளுக்கு முன்னால! சனி ஞாயிறுல வெளிய
சாப்பிட்டுக்குவோம் சரியாம்மா?" உற்சாகமாக
பையன் சொன்னது அவர்கள் காதுக்குள் ஏறவேயில்லை. தனது
சின்னத்தோட்டத்திலிருந்து பசலைக்கீரையைப் பறித்த கையோடு அதை சிறு பருப்போடு ஆக்கி சாதத்தோடு
சுடச்சுட பிசைந்து சாப்பிடும் ருசி நாக்கில் எச்சில் ஊற வைத்தது. வந்த
வேலையை மறந்த அம்மா தலையை பலமாக ஆட்டிக்கொண்டே ரூமை நோக்கி நடந்தார்கள். சமையல் பண்ணின அரை மணி நேரத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டும்
என்ற இந்திய தத்துவம் பழைய பந்தாயமோ?
ஏர்
கண்டிஷன் வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு சாப்பாட்டை மைக்ரோ வேவில் சுட வைத்து
சாப்பிடும் பாணி மனசுக்கு சுகமாகவில்லை தமிழ் சானல்களுக்குக் குறைவில்லை. படம் பார்க்க ஃபையர்
ஸ்டிக் மற்றும் நெட் ஃ பிளிக்ஸ்ஸிற்கும் குறைவில்லை. சாப்பிட்டு
சாப்பிட்டு உட்கார்ந்திருக்கவும் எப்போது என் வலிகள் வெடித்து உருக்கொள்ளப் போகிறதோ என்ற காத்திருப்பிலும் நமது நாட்கள்
கழியப்போகிறதோ என்ற சலிப்பு இருவருக்கும். பையனும்
மருமகளும் பேரன் பேத்தியும் தெனமும் ரெக்க கட்டிகிட்டுல்ல பறக்கிறாங்க வீட்டு வேலைக்காரி
கூட அவுங்கள மாதிரியே ஹாய் பய்தான் சொல்லுகிறது. ஒவ்வொரு
நிமிஷமும் அந்த பெண்ணுக்கு காசாகும் போது நிண்ணு பேச அதுக்கு ஏது நேரம்? நாம் போய் கதவு திறந்து விட வேண்டிய அவசியம் கூட இல்லாமல்
தன் சாவியாலேயே
கதவைத்திறந்து வந்த நேரத்திற்கு பட்டனை அமுத்தி போகும் நேரத்திற்கும் பட்டனை
அமுத்திவிட்டுப் போய்விடுகிறது. ஊர்க்கதையையும் வீட்டுப் பிரச்சினைகளையும்
பகிர்ந்து கொண்டு " அம்மா முருங்கக்கா ரெண்டு கொண்டாந்திருக்கேன்
சாம்பார்ல போடுண்ணு"
உரிமையோடு உத்தரவு பிறப்பிக்கும் வேலைக்காரம்மா அவர்கள் முன் வந்து
போனார்கள். இந்த முருங்கைக்காயை நினைத்தால் அவர்கள் இருவருக்கும் பெரிய
ஆச்சரியம்தான். அது எப்படி குடிசைப் பகுதியில்
இருக்கும் மரங்களில் மட்டும் அது சடைசடையாய்க்காய்க்கிறது? க்யுபாவின் முன்னாள் அதிபர்
ஃபிடல்
காஸ்ட்ரோ முருங்கையின் அதிசய குணங்களை அறிந்த ஒரு மனிதர். அவர்
தென்னிந்தியாவிற்கு ஒரு பிரதிநிதியை அனுப்பி இங்கிருந்து முருங்கை விதைகளையும்
செடிகளையும் எடுத்து வரச்செய்து தன் நாடு முழுவதும் முருங்கையை பரவச்செய்தாராம். விட்டமின்களும் மினலர்களையும் உள்ளடக்கிய இந்தக் காய் 'ஏழைகளின் நண்பன்' என
அறிமுகப்படுத்தினாராம். அதனால்தான் என்னவோ இலை தெரியாமல் மரம் முழுவதும்
காயாய் இந்த முருங்கைமரம் ஏழைகள் வாழும் பகுதியில் அருள் பாலிக்கிறதோ?
" இதுவே வேற கலாச்சாரங்க
நம்முதோட ஒப்பு வச்சு நாம பம்மி போவக் கூடாது. கட்டி போட்டு தீனி போடுற
வெள்ளை யானை மாதிரி நம்ம ஒண்ணுக்கும் உபயோகமில்லாம அவுங்களுக்கு வீண் செலவுதான் வக்கப்
போறோம். நம்மள இங்க பர்மநெண்ட்டா கொண்டு வர்ரத்துக்கு கொள்ள செலவு
. நமக்கு மெடிக்கல் இன்சுரன்சு இன்னொரு மல முழுங்கி....... நாங்க பிள்ளையோட வெளிநாட்டில செட்ட்டில்
ஆவப்போறோம் என்பத நாலுபேருக்கு சொல்லிக்கிறது வேணுண்ணா பெருமையா இருக்கலாம். ஆனா தங்க
கூண்டுண்ணாலும் உள்ள இருக்க கிளிக்கு அது ஜெயிலுதானே. "
அம்மா தனது ஆதங்கத்தை வெளியே கொட்டித்
தீர்த்துக்கொண்டார்கள்.
பீச்சில் ஒரு பெரிய கோஷ்டியே நடை பழகிக்கொண்டிருந்தது.
அதில் நம்ம ஜோடியும் சேர்த்தி. "இவுரு பாட்டுக்கு நாலு மொழ வேஷ்டிய மடிச்சி கட்டி கிட்டு ஜாலியா
இருக்கலாம். இந்த ஸ்வெட்டர எல்லாம் வுட்டெறிஞ்சிட்டு நாம் ஃ ப்ரீயா
இருக்கலாம்." என்பதில் தொடங்கி
தங்கள் வெளிநாட்டு அனுபவங்களால் அந்தக் கூட்டத்தையே விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது அன்று அவர்கள் உபயமாகிப்போனது!
No comments :
Post a Comment