அகண்ட தனது சாம்ராஜ்யத்தையும் மக்களையும்
பாதுகாக்க அன்றைய அரசர்கள் கோட்டைகள் பல கட்டினார்கள். அகழிகள் இழு பாலம் மற்றும்
யானைப்படைகளாலும் உடைக்க முடியாத கதவுகளால் அவைகளின் பலத்தைக்கூட்டினார்கள்.
இன்றோ இந்த கோட்டைகள் ஊர் சுற்றிப்பார்க்க
வரும் டுரிஸ்ட்டு கும்பலின் ஒரு அயிட்டமாக மாறிப்போய் நிற்கின்றன. ஒன்றிரண்டு
ஆத்மாக்களைத் தவிர்த்து மற்றவர்கள் ஷாப்பிங் பண்ணும் ஆர்வத்தில் தீம்
பார்க்குகளுக்கு செல்லும்
உற்சாகத்தில் ஒரு சின்ன சதம் கூட இந்த கோட்டை சமாச்சாரங்களில் காட்டுவதில்லை. கைடுகளாக இருப்பவர்களிலும்
ஒன்றிரண்டு ஆத்மாக்களைத் மற்றவர்கள் ஏனோ தானோ யாருக்கு வந்த விருந்தோ என்று கடமையை
முடித்துவிடுகிறார்கள். ஆயிரமாயிரம் தடவை சொன்னதை எத்தனை தடவை திரும்பித் திரும்பி
சொல்லுவது?
சொந்தமாக கொஞ்சம் ரீல் விட்டு அந்த நேரத்தை சுவாரசியமாக
ஆக்குபவர்களும் இருக்கிறார்கள்!
அன்றைய ராஜாக்களின் கோட்டைகட்டி
பாதுகாக்கும் மரபணு நமக்குள்ளும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது. வீடுகளுக்கு
காம்பவுண்டுகள் கேட்டுகள் கதவுகள் அதற்கு இரண்டு மூன்று தினுசு பூட்டுகள்.
கோத்ரேஜ் பத்தாது என்று உலகப் பிரசித்தி
பெற்ற திண்டுக்கல் பூட்டுகளும் நமது கைவசம்.
ஒவ்வொரு வீடுகளில் வெளியே கிளம்பு முன்னால்
ஒவ்வொரு கதவுகளின் பூட்டை இழுத்திழுத்துப்பார்த்து திரும்பவும் கடைசியாய்
இன்னொரு முறை சரிபார்த்து சாமி புறப்பாடு மாதிரிதான் இந்த சாங்கியங்கள் நடைபெறும்.
எங்களைப்பொறுத்த வரையில் வீடு பூட்டுதல் ஒரு சடங்கே தவிர அதற்கு பெரிய
முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. திருடன் எவனும் உள்ளே வந்தால் ஷோ கேஸ்கள்
தொடங்கி ஷெல்ஃ ஷெல்ஃபாக அடைந்து கிடக்கும் புத்தகங்களை பழைய பேப்பர்காரர்
செல்லாக்காசாக தூசாக மதிக்கும் அந்த செல்வத்தை சுமந்து கொண்டு போன தோள்வலி மட்டுமே
அவருக்கு மிச்சமாய் இருக்கும்!
ஆனாலும் நானும் என் வீட்டிற்கு கோட்டை கட்டுவதில் வல்லவளாகத்தான் இருக்கிறேன்.
வருடத்திற்கு ஒரு முறை அக்டோபர் மாதத்தில் அந்த கோட்டை சரி பார்ப்பு
ஆரம்பமாகிவிடும். திருடனுக்கும் கொள்ளை அடிப்பவருக்கும் எதிரான ஒரு கட்டுமானம்
இல்லை அது. மாறாக அது நம்மோடு பிரியமாய்
ஒட்டி உறவாடி வாழ விரும்பும் ஒரு வேண்டாத விருந்தாளிக்காகவேதான்! நம்
சொத்து சுகங்களை விரும்பாத ஒரு ஜீவிதான் அது. ஆனால் 'சோழியன்
குடுமி சும்மா ஆடாது' என்ற மொழிக்கேற்ப கழுத்தில் கைவைக்கும் கந்து வட்டிக்காரன் போல நம் மோடு ஒட்டி உறவாடி நம் ரத்தத்தைமட்டுமே
உறிஞ்ச விரும்பும் இன்றைய டிராக்குலாக்கள்
நண்பர் கொசுவார்தான் வேண்டாத அந்த விருந்தாளி!!
பழைய காலத்தில் கட்டிய என் வீட்டில்
கதவுகளுக்கும் ஜன்னல்களுக்கும் குறையே கிடையாது. வீடுண்ணா காத்தோட்டமா இருக்கணும் என்ற தாத்பர்யத்தில் எழுப்பப்பட்ட
நட்பான இடம் அது. ஆக்சிஜன் உள்ளே வருவதற்கு இதுமட்டும் பத்தாது என்று நினைத்த அந்த
பழைய வீட்டுக்காரர் ஜன்னல்களுக்கு மேலே வெனிஷியன் ஜன்னல்களையும் பொருத்தி
விட்டிருக்கிறார். ஏசியில் நம்பிக்கை
இல்லாத எங்களைப் போன்ற ஜீவிகளுக்குப் இது
பொருத்தமான சாதகமான வீடாய் இருந்தால்
கூட காற்றோடு கலந்து சுகமே வந்து போகும்
கொசுக்களை வெளியிலேயே நிறுத்தி வைக்கும் உத்தி ராஜாக்கள் கட்டிய கோட்டைகளுக்கு
சமமான ஒரு பிரயத்தனமே!
சென்னையில் அக்டோபரில் தொடங்கும்
அடைமழைக்கு(!!!) முன்னால் கொசுத்திரைகளை சரி பார்ப்பது ஒரு அதிமுக்கிய செயலாகும்.
அவைகளை கழற்றி சர்ஃபில் ஊற வைத்து பிரஷ் கொண்டு தேய்த்து சுத்தம் செய்து ஒட்டும்
வெல்க்ரோக்கள் நிலைமையை ஆராய்ந்து
கொசுத்திரைகளின் ஓட்டைகளை சரிபார்த்து மாற்ற வேண்டியவைகளை குறித்து
இவ்வளவையும் கம்ப்யூட்டர் வோர்ட் ஃ
பைலில் ஏற்றி முடிந்த வேலைகளுக்கு ஒரு டிக் போட்டு ஃ பேக்டரிகளின் தரக்
கட்டுப்பாடு கணக்கில்தான் இந்த வேலைகள் நடைபெறும்.
இந்த தரக்கட்டுப்பாட்டிற்கு இரண்டு
காரணங்கள் உண்டு. ஒன்று கொசுக்கடியில் இருந்து நம் குடும்பத்தைப் பாது காப்பது.
அதை விட முக்கியமான இன்னொன்று வரும்
விருந்துகளை பாதுகாப்பது. விருந்துகளும் நம்மைப்போல் மனிதர்கள் தானே அதென்ன
ஸ்பெஷலாய் விருந்துகள் என்கிறீர்கள் என்று
நீங்கள் நினைக்கலாம். நிச்சயமாக இந்த விருந்துகள் ஸ்பெஷல்தான். இதுக்கு பின்னால ஒரு சின்ன கதை இருக்கு. அக்டோபர்
தொடங்கிடுச்சுண்ணா சென்னை உலகத்தின்
கலாச்சார மையமாக மாறத்தொடங்கும். இது கொஞ்சம் கொஞ்சமாக சூடு புடுச்சு
மார்கழியில் உச்ச நிலையை அடைகையில் என்
வீடும் கலகலப்பாகி விடும். நம் பாரம்பரிய
இசை நடன கலாச்சார விழாக்களில் ஆவலோடு பங்கெடுக்க வரும் வெளி நாட்டு நண்பர்
குழாம் நம் வீட்டிலும் குடியேறி
விடுவார்கள். இந்தியர் நாம்
ஃபாரின் சரக்குகள் மீது பித்து பிடித்து
அலைவதைப்போல நம் இந்திய கொசுக்களும் நாங்கள் இளைத்தவர்களா என்ன எங்களுக்கும்
ஃபாரின் சரக்கு என்றால் ஒஸ்தி தானாக்கும் என்ற ஒரு வெறியோடு இந்த சீசனில் நம்மை உதாசீனப்படுத்தி விட்டு
ஃபாரினர்களோடு ஒட்டி உறவாடுதில் ஆர்வம் காட்டும் போதுதான் சிக்கலே ஆரம்பிக்கும்.
இந்த விருந்துகள் ஸ்பெஷல்தான் இல்லையா? இதற்காகவே அவர்கள்
பாதுகாப்பை முன் வைத்தே மோயிசனின் பத்து கட்டளைகளைபோல நானும் சில கட்டளைகளை அவர்கள் வந்த கையோடு பிறப்பித்து
விடுவேன்.
உங்கள் அறைக்கதவை சாத்தியே வையுங்கள்.
உங்கள் பாத்ரூம் கதவுகளையும் சாத்தியே
வையுங்கள்
கொசுக்களை உள்ளே விடாதீர்கள்
உங்கள் அறைக்கதவை சாத்தியே வையுங்கள்.
உங்கள் பாத்ரூம் கதவுகளையும் சாத்தியே
வையுங்கள்
கொசுக்களை உள்ளே விடாதீர்கள்
உங்கள் அறைக்கதவை சாத்தியே வையுங்கள்.
உங்கள் பாத்ரூம் கதவுகளையும் சாத்தியே வையுங்கள்
கொசுக்களை உள்ளே விடாதீர்கள்
ஒரு பொய்யைசொல்லுங்கள் அதைத்
திரும்பத்திரும்ப சொல்லுங்கள் அது மெய்யாகிவிடும் என்ற வேதாந்தத்தின் நம்பிக்கை
கொண்டவள் நான். திரும்பத்திரும்பச் சொல்லி மனசிலேற்றும் இந்த அடிப்படையில்
கொடுக்கப்பட்டதுதான் என் கட்டளைகளும்!
வந்தவர்கள் இந்தக்கட்டளைகளை செவ்வனே கடைப்
பிடித்தாலும் பத்து பேருக்கு ஆக்கி அரிக்கும் ரொம்ப பிசியான இந்த காலகட்டத்தில்
ஆட்கள் கொசு வலை போர்த்திய கதவுகளைத் திறப்பதும் மூடுவதும்
அத்தியாவசிய ஒன்றாகையால்
சந்தர்ப்பவாதிகளான நம் கொசுக்கள் விரித்து பறந்து உள்ளே நுழைந்து கொள்வதில்
பெரும் கில்லாடிகளாகிவிடும். உடனடியாக எங்கள் கூடமும் மற்ற இடங்களும்
பூப்பந்து கோர்ட்டாக மாறிவிடும். அவரவர்
கைக்குக்கிடைத்த லோக்கல் மற்றும் வெளி நாட்டு கொசு பேட்டுகளை (சக்தி வாய்ந்தது!!)
தூக்கிக்கொண்டு சீன வீரர்கள் போல எகிறி
எகிறிக் குதித்து சீலிங் வரை செல்லும் கொசுக்களை டங்க் பண்ணும்
பாணியும் ஷாக் வாங்கிய கொசுவின் 'க்ரக்' சத்தமும் அவர்கள் காதில் வெற்றி முரசாய்ப் பாயும்.
நடுவில் நாம் யாராவது மாட்டிக் கொண்டோமென்றால் அதே 'க்ரக்'
ஷாக்கால் நாம் ஓலமிட்டு கல்லெறிபட்ட நாயாக ஓடுவது நிச்சயம்!!
ஒரு நாள் காலை தோழி ஒருத்தி பரிதாமாய்
உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு முன்னால் டீபாயில் தினுசு தினுசான பாட்டில்கள்.
வயிறு சரியில்லையோ?
தண்ணி ஒத்துக்கிலையோ?
பல் விளக்கக்கூட ஆர்ஓ தண்ணிதானே பாத்ரூமில்
வைத்திருக்கிறோம். பலா நினைப்பாக குசலம் விசாரிக்கிறேன். கையை நீட்டுகிறாள் கொசு
கடித்த சிவப்பு தடிப்புகள். கால் தடிப்புகளிளிருந்து சீழ் போல தண்ணிர் வடிந்து
கொண்டிருந்தது.
என் கட்டளைகளை எங்கே திரும்ப
ஒப்பிக்கப்போகிறேனோ என்று பயத்தில் அவள் முன் எச்சரிக்கையாக தான் கதவுகளை மூடியே
வைத்திருப்பதை உறுதிப்படுத்தினாள். அப்போதுதான் நான் டீபாயை உற்று நோக்குகிறேன். ஃ
பேப் இந்தியா ஹிமாலயா கொசு காப்பான்களிலிருந்து ஆல் அவுட் மார்ட்டின் குட் நைட்
மற்றும் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த பல்வேறு லோஷன்களும் ஸ்ப்ரேக்களும் அங்கு
கொலு கொண்டிருந்தன! கையில் விடைப்பசங்கள் ஒரு காலத்தில் வெறியாய்க்கட்டிக் கொண்டு
திரிந்த ஃபிரண்ட்ஷிப் பேண்டுகளைப்போல அவள்
கையில் ஒரு வளையல். "இதுவும் ஒரு கொசு விரட்டிதான் ரொம்ப சக்தியுள்ள கொசுத்
தடுப்பான் ." என்றாள் அவள். அவளது ரூம் கதவைச்சாத்திவிட்டு குனிந்து ஆராய்ந்து
பார்க்கிறேன். தரைக்கும் கதவுக்கும் இடையே கொசு போவதற்கான இடைவெளி அங்கு!
யோஜனை செய்கிறேன். சென்னையின் கலாசேத்திரா
மனசுக்குள் வந்து போனது. அங்குள்ள ரசனையான இரு பக்கம் திறந்த அரங்கு மார்கழி
மாத்ததில் களைகட்டி நிற்கும். நேர்த்தியாக
தொங்கும் தென்னைத்தோரணங்களும் தரையில் வரைந்திருந்த கோலங்களும் அதன் அழகைக்
கூட்டிக்கொடுக்கும். திறந்த வெளி அரங்கென்றால் கொசு இல்லாமல் இருக்குமா என்ன? அதற்கும்
ஒரு வழி வைத்திருந்தார்கள் அந்த கில்லாடிகள்! நிறைய மண் சட்டிகளில் கரி
நெருப்பு உண்டாக்கி அதில் நொச்சி
இலைகளையும் வேப்ப இலைகளையும் போட்டு புகை மூட்டம் ஆக்கி அதை அரங்கம் முழுவதும் அறுபத்தி மூவர் தேர்
பவனியைப்போல எடுத்துச்செல்வார்கள். அப்புறம் என்ன? பட்டுப்புடவையால்
உடம்பைப்போர்த்திக்கொண்டு அருமையான உலகத்தரம் வாய்ந்த நாட்டிய நாடகங்களை சுகமாக ரசிக்க வேண்டியதுதான்
நம் வேலை! இந்த உத்தியை நம் வீட்டில் பண்ணினால் என்ன?
சுறு சுறுப்பாக திருவான்மியூர் மார்கெட்
அருகே சட்டிகள் வாங்கி அடுத்த தெருவில்
வளர்ந்து நிற்கும் மரத்தில் நொச்சி பறித்து வீட்டை சுற்றி நிற்கும் குறைவில்லா
வேப்ப இலைகளைப்பறித்து எங்கள் தெரு சலவைக்காரரிடம் கரி இரவல் வாங்கி தூபக்கோல்
ரெடியாகிவிட என் வீடே மணமும் புகையுமாய்!!
எதற்கும் இருக்கட்டும் என்று இந்த
சட்டிகளை ஒவ்வொரு அறைக்கு முன்னாலும் காவல் தெய்வமாய் குடியேற்றி விட்டேன்!!
காலையில் எழுந்த என் கணவர் "இதென்ன
பித்துக்குளி தனமான வேலை?
இருட்டில் யாராவது தடுக்கி விட்டு விழுந்தால் என்ன ஆகும் என்று
யோசனை பண்ணினாயா? ஃ
பயர் சர்விஸ்தான் நம்ம வீட்டுக்குள்ள குடியிருக்கும் ... நாம விருந்தாளிகளோடு
தெருவில பிச்சதான் எடுக்கணும்." கோபமே வராத அவர் குரல் துர்வாச முனிவராய்
உச்சஸ்தாயியில்!
என் முட்டாள் தனத்தை நானே நொந்துகொண்டேன்.
எல்லா கதைக்கும் ஒரு க்ளைமேக்ஸ் இருப்பதைப்போல
என் கொசுக்கதைக்கும் ஒன்று இருந்தது.
சாயங்காலமானால் மைலாப்பூர் கற்பாகாம்பாள் மெஸ்ஸில் டிபனை ஒரு பிடி
பிடித்துவிட்டு சுடச்சுட காப்பியையும் உள்ளே ஊற்றி கச்சேரிகளில் உட்காருவதே தனி
சுகம்தான்! அதுவும் ஒரு கூட்டமாக கண்டதையும் பேசி சிரித்துக்கொண்டு...... சுகமோ
சுகந்தான்!!
அப்படித்தான் ஒரு நாள் நடனக்கச்சேரியை கண்டு களித்து ரசித்துவிட்டு
அரங்கை விட்டு வெளியே வருகிறோம். பொதுவாக வெளியே வரும் கூட்டத்தின் அபிப்ராயங்கள்
வெகு ரசனையாக காதில் வந்து விழும். இவைகளை ரசிப்பதும் ஒரு கலைதானே?! அன்று
ஒரு மாமியும் அவர் தோழியும் சத்தமாக பேசிக்கொண்டே போனாதுஎன் காதில் விழுகிறது.
" மாமி பொதுவா இவாளெல்லாம் நடந்து போனாக்க நன்னா ஒரு ஸ்மெல் வரும்..... ஃ பாரின் சென்ட் வாசன மூக்க
தொளைக்கும்......... நேக்கு அது ரொம்ப பிடிக்கும். இப்பல்லாம் ஒரு ஒடோமாஸ்
நாத்தம்ண்ணா அவாகிட்டேருந்து வர்றது? கிட்ட போரத்துக்கே
அருவருப்பா இருக்கு."
சிரிப்பை அடக்கமுடியாமல் வீட்டில் வந்து
இதைப்பகிர்ந்து கொள்கிறேன்.
வெளியே கிளம்புகையில் சளும்பர கொசு
லோஷன்களையே பர் ஃ புயமாக அள்ளி
அப்பிக்கொண்டு கிளம்பும் என் கோஷ்டியை நொந்து கொள்வதா?
ஒடோமாஸ் செய்தவரை நொந்து கொள்வதா?
கலாச்சார ரீதியில் ஒரு இனத்தைப் பற்றிய
கருத்தையே மாற்றிப்போட்ட என் கொசுக்களை
நொந்து கொள்வதா?
மாமியின் ஃபாரின் மோகத்தை நொந்து கொள்வதா?
பிஹெச்டி ஆராய்ச்சிக்கான ஒரு தலைப்பை மாமி
நமக்குக்கொடுத்திருக்கிறார். யோசித்துத்தான் பார்ப்போமே!
No comments :
Post a Comment