Pages


For the English translation of Blog posts done by the author from her Tamil blog, Please go to the following link.
Thoughts from Inner Experience
Please read and enjoy.
Your comments are most welcome.

Wednesday, 26 November 2014

மாமாவுக்கு ஒரு ஸ்பெஷல் அனுபவம்

இன்றைக்கு விமானத்தில் பறப்பது ரொம்ப சாதாரணமாய் நடக்கிறது. ஆனால் அறுபதுகளில் மத்தியாஸ் மாமா ரோமுக்கு போனப்ப கப்பல்தான்...... வீட்டுக்கு போன்......?. ரோமிலேயே மாணவனா போன அவுங்களுக்கு அந்த வசதிகள் கிடைக்காது அப்படியே கிடைச்சாலும் வீட்டில ஒரு போன் இருக்குணுமில்ல!? எழுபதுகளில் மாமா அகில உலக இளம் கிறிஸ்தவ தொழிலாளர்களின் இயக்கத்திற்குத் தலைவர். இந்த ரீதியில் அவுங்க எம்ஜியாரை ஓரங்கட்டும் உலகம் சுற்றும் வாலிபனாக ஊர் சுற்றிக்கொண்டிருந்தார்கள்! விமானப்பயணம் ரொம்ப அதிகமில்லாத அந்த நாட்களிலும் அவுங்க சுத்தலுக்குக் கொறச்சலேஇல்ல.

இண்ணைக்கு பிளேன்ல போனா, ஏறி உக்காந்தமா, குடுக்குறத திங்கிறமா, நல்ல படம் எதும் இருந்தா பாக்குறமா, இல்ல ஒரு புஸ்தகத்த படிச்சுகிட்டே தூங்கிப்பொயிர்ரமா, அப்பறம் பாத்ரூம் கட்டாயம் போவ வேண்டிய நெலயில இந்த துக்குணியோண்டு கதவத்தொறந்து எப்புடி மூச்சு உடப் போறமோண்ணு பயத்தோட க்யூவுல நிக்கிறமாண்ணு முடிஞ்சுபொயிரும். ஆனா நம்ப மாமாவுக்கு ஒரு ஸ்பெஷல் அனுபவம்! மாமா சொல்றாங்க ‘இந்தசம்பவத்தை நான் ஒங்குளுக்கு சொல்லும் போது இந்த மனுஷனுக்கு கல்பனா சக்தி ஜாஸ்தியோ,நெறயா கத வுடுறாரோண்ணு நீங்க நெனைக்கலாம். இண்ணைக்கு அத தமாஷாக சொல்றேன்.... ஆனா அண்ணைக்கு என்னைக்கவ்விகிட்டு கெடந்த பயம்.....யப்பா!!!" கதய கேளுங்க மாமாவுக்கு மாலிங்கிற ஆப்பிரிக்க நாட்டுத்தொழிலார்களோட ஒரு கருத்தரங்கு. அங்குள்ள தொழிலாளர்களொடு தொடர்பு கொள்ள, அவர்களது பிரச்சனைகளை உணர உதவும் சந்திப்பு இது. அதுக்காக அவுங்க அங்க போறத்துக்கு பாரீஸ்லேருந்து கெளம்புறாங்க.

இதே இயக்கத்துல இருக்க இன்னொரு பிரஞ்சு சாமியாருயும் அவுங்க கூட. ஆப்பிரிக்காவின் வட மேற்கின் அழகான நாடு மாலி. பாமகோ அதன் தலைநகர். ‘எல்லா விமானங்களிலயும் டிக்கெட் வெல ஜாஸ்தியா இருக்கு ஏர் மாலியிலதான் கொறச்ச, அதுல பண்ணிடட்டுமாண்ணு’ அவங்களோட கூட வர்ர பிரஞ்சு சாமியாருகேட்டப்ப மாமா ஒடனே தலய ஆட்டிடாங்க. தொழிலார்களுக்கு ஒழைக்கும் போது நமக்குண்ணு இருக்க செலவ கட்டுக்குள்ளதான வச்சுக்கணும். சாமியார் வேறயாச்சா.... ? மொத வார்த்தப்பாடு தரித்திர மாச்சே!!!! பாரிஸ்லேருந்து பாமகோ போறத்துக்கு விமானத்துல ஆறுமணி நேரம். பாரிஸ் ஏர்போர்ட்லேருந்து மத்தியானம் ஒரு மணிக்கி விமானம் கரக்ட்டா கெளம்பிடுச்சு. அவுங்க போனது 707விமானம் ஒரு பக்கம் 2சீட்டும் இன்னொரு பக்கம் 3 சீட்டும் நடுவுல நட பாதையும். பெட்ரோல் குடிக்கிறதில கில்லாடி இந்த 707 விமானங்கள்! (சரி அதனால நமக்கென்னா? வாங்குன காசுக்கு போவ வேண்டிய எடத்துல கொண்டுகிட்டு போய் வுட்டா சரிதான்.) மாமா சன்னல் பக்கத்துல உக்காந்து வேடிக்க பாத்துகிட்டே வந்தாங்க. எல்லாரும் சீட்பெல்ட்ட மாட்டிகிட்டு சவகாசமா உக்காந்துருக்காங்க. கொஞ்ச நேரம் ஆச்சு. அப்பறமும் விமானம் ஒ யரத்துக்கே போவக்காணாம். என்னுமோ மீன் புடிக்கிற கொளத்த பிராந்து வட்டம் அடிக்கிறமாரி வண்டி சுத்தி சுத்தி வருது. இது என்னடா இது நம்மதான் கற்பன பண்றமாண்ணு ஜன்னல் வழியா எட்டி பாத்தாக்க. பாரிஸ்ல பிரசித்தியான ஈஃபல் டவர் தெரியுது.....! அட இதன்னா வம்புண்ணு கூட வந்த பிரஞ்சு பிரண்டு கிட்ட விஷயத்த சொல்றாங்க. நம்பா தோமையாரு..... அவுரு! எந்திரிச்சு நிண்ணு மாமாவ முட்டியடிச்சிகிட்டு ஜன்னல்லபாத்துட்டு... "அட நம்ம ஊர்லயதான் இருக்கோம் மத்தியாசு" அப்புடிங்கிறாரு. ‘அதத்தானய்யா நான் மின்னாடி சொன்னேன்.’ மாமா மனசுக்குள்ளயே சொல்லிகிட்டு இருக்கையில கேப்டன் ஒரு அனவுன்ஸ் மென்ட் பண்றாரு. “ரொம்ப சாரிங்க வண்டியில டெக்னிக்கல் ஃபால்ட் இருக்குறதினால நாம பாரிஸ் ஏர்போர்ட்டுக்கே திரும்ப போறோம். சரி செஞ்ச ஒடனே கெளம்பிடலாம். இப்ப வேஸ்ட் பண்ணுன நேரத்தயெல்லாம் சரிகட்டிடுவொம். ரொம்ப தேங்க்ஸ்ணு” சொல்லிட்டு வண்டிய கீழ கொண்டாந்திட்டாரு. மத்தி யானம் வண்டியில நல்லா சாப்பாடு கெடைக்கும்னு நெனச்சு ஏறுன நாங்க ஏர்போர்ட்டுல என்னா கெடச்சுதோ அத வாங்கி வாயில போட்டுகிட்டு ஒக்காந்திருந்தோம். (இந்த காலமாட்டம் ஏர்போர்ட் நெறயா ரெஸ்டாரண்ட்ஸ் அப்பல்லாம் கெடையாது.) ரெண்டு ரெண்ர மணி நேரங்கழிச்சு வண்டிய எடுத்துட்டாங்க. பழுதுண்ணா என்னாப் பண்ணித்தொலயிறது. பொறுத்து போவ வேண்டியதுதான். அப்பாடாண்ணு சீட் பெல்ட்ட வரிஞ்சுட்டு ஒக்காந்துகிட்டோம். பாமகோ போறத்துக்கு எப்புடியும் நடுச்சாமம் ஆயிப்பொயிரும். இந்த தடவ வண்டி மேல ஏறுனது நல்லாவே தெரிஞ்சிச்சு. அப்பாடாண்ணு சீட்பெல்ட்ட அவுத்து வுட்டுட்டு குட்டியா ஒரு தூக்கம் போடுலாம்னு மனசுக்குள்ள ஒரு நெனப்பு எட்டிப்பாத்தப்ப, என்னுமோ வண்டி கீழ எறங்குறமாரி ஒரு நெனப்பு மத்தியாசுக்கு. ‘ச்ச்சீ ண்ணு ‘அந்த நெனப்ப எட்டி தள்ளி வுட்டுபுட்டு இருக்கும்போது வண்டி தரையயே தொட்டுபுடிச்சு!! திரும்ப பாரிஸ் விமான நெலயம். இந்த மொற யாரும் உட்டுக்குடுக்கிறதா இல்ல. ஆளுக்காளு கச்சா முச்சாசண்ணு சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க. உள்ளூர்காரங்க நெறய பேரு ‘நீயும் வேண்டாம் ஒன் வண்டியும் வேண்டாம்ணு’ டிக்கெட்டை திருப்பி குடுத்துட்டு வீட்டபாக்க போய் சேந்துட்டாங்க. மாமாவுக்கு அங்க போவ வேண்டிய கட்டாயம். இனிமே இந்த டிக்கெட்ட கான்சல் பண்ணி வேற ஃப்ளைட் எண்ணைக்கி போவுதுண்ணு பாக்கறதுக்குள்ள மீட்டிங் கெடுவே முடிஞ்சு பொயிரும். சரி, இப்ப என்னாத்துக்கு வண்டிய கீழ கொண்டாந்தாங்க...? நம்மள கீழயும் எறங்க சொல்லுலண்ணு யோஜன பண்ணிகிட்டு இருக்கும் போது பெரிய பைலட் ஒவ்வொருத்தர் கிட்டயும் வந்து ‘100 டாலர் பணம் குடுங்க,பாமகோ போனவொடன நிச்சயமா திருப்பி தந்துடுறோம்ங்கண்ணார்.’ என்னா கூத்துக்கு பைசா? அது ஒரு பெரிய கத. இந்த ஏர்மாலி ஏர்வேஸ் பாரிஸ் விமான நெலயத்துல ரொம்ப நாளா கடனுக்கே பெட்ரோல் போட்டுகிட்டு இருந்துருக்காங்க. இதா இண்ணைக்கி தரேன் நாளைக்கி தரேண்ணு சால்சாப்பு.இண்ணைக்கி வண்டி எடுக்கறப்பயும் அதே கடன்லதான் பெட்ரோல் போட்டிருக்காங்க. திரும்ப வந்து பெட்ரோல் கேட்டா அவனுக்கு கோவம் வராமயா இருக்கும் சொல்லுங்க. “விமானத்துல பழுது இருக்கறது தெரிஞ்சா கீழயே பாத்துட்டு வண்டிய எடுக்கணும். வண்டிய சும்மா பம்மாத்துக்கு நேரத்தோட எடுக்கிறேன் பேர்வழிண்ணி போட்ட பெட்ரோலயெல்லாம் பயணிகளுக்கு பாரிசை சுத்தி காமிச்சி தீத்துபுட்டு இப்ப திரும்ப வந்து நிக்கிறியே, இப்ப பணத்த நீ கீழ வக்காட்டி பெட்ரோல நீ மறந்துடுண்ணு திட்டவட்டமா சொல்லிட்டானாம் அவன்”. இப்ப அந்த பெட்ரோல் காசுக்குத்தான் உண்டியல் குலுக்குறாங்க. என்னத்த பண்றதுண்ணு தெரியாம ஆளாளுக்கு கையில என்னா இருந்துச்சோ எல்லாத்தையும் குடுத்தோம் எல்லா கணக்கையும் பின்னால வந்த ஏர் ஹொஸ்டஸ் கரக்டா எழுதி கையெழுத்து வாங்கிட்டாங்க.கையெழுத்து போடுறப்பயும் கட்டாயம் திருப்பி குடுத்துடுறோங்கண்ணு ஒரு புன்சிரிப்போட சொல்லிட்டுதான் போனாங்க. ஒரு வழியா வசூல் வேட்ட முடிஞ்சிருச்சு.பெட்ரோலையும் ரொப்பியாச்சு. வண்டி பாமகோவப்பாத்து கெளம்பிடுச்சு.மணி இதுக்குள்ள ஆறு ஆயிப்போச்சு. எல்லா அம்சயும் அடக்கனப்பறம் சாப்பாடு குடுத்தாங்க நல்லாதான் இருந்துச்சு. சின்னதா ஒரு தூக்கம் போடலாமாண்ணு யோஜன பண்ணிகிட்டு இருக்கும்போதே காக்பிட்ல ஒக்காந்துருந்த பெரிய பயலட் அவுரு தொணைக எல்லாம் வெளிய வந்தாங்க. ‘எதுக்கு வெளிய வ ர்ராங்க இப்ப? என்னா காரியம்ணு தெரியிலியேண்ணு நாங்க சந்தேகமா பாக்குறப்ப’ அவுங்க ஒவ்வொரு சீட்டா போயி பயணிக ஒவ்வொருத்தருக்கா நன்றி சொல்லிகிட்டே வர்ராங்க. பாவம்....நல்ல மனுசங்கதான்..... நன்றி உணர்வு இருக்கு பாருங்க!!! காலத்தினால் செஞ்ச ஒதவியில்ல..... அது ஞாலத்தின்(ஒலகத்திலயே) மாணப்பெருசில்ல!!!! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இப்புடி அவுங்க நன்றி துதியில ஈடுபட்டு இருக்கப்ப திடீர்ணு ஒரு ஏர் பாக்கெட்ல மாட்டிகிட்ட வண்டி ஒரு நிமிஷம் அப்புடியே அதல பாதாளத்துக்கு போயி மேல வந்துச்சு. அதது அடிவயிரு கலங்கி போயி.... குய்யோ முறேண்ணு சத்தம்போடுதுக. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்க்கதையால்ல எங்க பொழப்பு அண்ணைக்கி இருந்துச்சு. நாங்க கத்துனது ஒரு பக்கம்ணா பெரிய பயலட்டும்எங்களோட சேந்துல்ல குய்யோ முறேங்கிறாரு! உழுந்த வேகத்தில காக்பிட் கதவு படால்னு சாத்திகிச்சு. ஹை ஜாக் பண்றவங்கள தடுத்து நிறுத்துற கதவு அது; வெளியேருந்து யாரும் தொறக்க முடியாது உள்ள இருக்கவங்கதான் தொறக்கமுடியும். இப்ப உள்ளதான் யாருமேஇல்லியே. எங்க மூஞ்சியில ஈ ஆடுல. வண்டி ஓட்டுரவனுக ஏர்ஹோஸ்டஸ் எல்லாரும் அங்கயும் இங்கயும் ஓடுறாங்க கதவ பலங்கொண்ட வரையிலயும் மொத்தமா சேந்து இழுக்குறாங்க.... எங்காயாச்சும் கடப்பார எதும் கெடைக்குமாண்ணு கேக்குறாங்க.. அப்பறமா எமர்ஜென்சி டைம்ல தீ அணைக்கிற கருவியத்தொறக்கறத்துக்கு வச்சிருந்த கடப்பபார மாதிரியான ஒரு வஸ்துவால போடு போடுண்ணு போட்டு ஒரு வழியா ஒடச்சு எடுத்து உள்ள போனவங்கதான் அப்பறம் அங்கேருந்து மூச்சு பேச்சு ..? ம்ஹூம்.....!! நடுச்சாமம் இருக்கும் . மாமா வாச்ச திருப்பி பாக்குறாங்க. பாமாகோவுல எறங்க வேண்டிய நேர ந்தான். சரிண்ணு வெளிய எட்டி பாக்குறாங்க. ஏர்போர்ட் லைட்டு ஒண்ணையும் காணாம் கொறஞ்ச பட்சம் தலைநகரத்து லைட்டுகளாவது தென் படுணுமே? ஒரே இருட்டால்ல கெடக்கு. ஆனா வண்டிமுட்டும் கீழ வர்ரது தெரியுது. பயலட் வாயத்தொறந்து எதும் சொல்லப்போறாரா... வண்டி மரத்துல எல்லாம் ஒரசரது காதுல வுழுவுது.... ட்ணாங் டணாங்குண்ணு வண்டி தரையில தட்டி தட்டி எம்புது..... சேசுவே சேசுவேண்ணு மனசு படக்படக்குண்ணு துடிச்சுகிட்டு கெடக்கு. கடவுள் புண்ணியத்தில டணாங்கெல்லாம் நிண்ணு போயி வண்டி ஒருவழியா நெல கொண்டுடுச்சு. இப்பயும் பயலட்டும் அவுரு தொணைகளும் வெளிய வந்தாங்க. வந்த எடத்துலயே பாய விரிச்சிசாங்க. ஒரு அரமணி நேரம் அல்லாவுக்கு நன்றி சொன்னாங்க. அப்பறமா பயலட் சொன்னாரு, இன்னம் பாமகோ போவருதுக்கு எறநூறு மைல் இருக்காம். வண்டியில பெட்ரோல் தீந்து போனதுனால இங்க எறங்க வேண்டியதாப் போச்சாம். நல்ல வேள ரெண்டாம் ஒலகப் போர் சமயத்தில அவுரு சின்னப்பயனா ஏர் போர்ட்ல வேல செஞ்சதுனால இந்த மிலிட்டிரி ஏர்போர்ட் அவுருக்கு தெரிஞ்ச எடமாப் போனதுனால நம்ம எல்லாத்தையும் பத்திரமா தரை எறக்கிட்டாராம். பாமகோவிலேருந்து இன்னொரு ‘வண்டி’ வந்து நம்மளயெல்லாம் காலம காட்டியும் கூட்டிகிட்டு போயிடுமாம். "இப்பைக்கு எமர்ஜென்சி ச்சூட் வழியா நாம ஒவ்வொருத்தரா கீழ எறங்குவோம்." ண்ணு சொன்னவரு " தயவு செய்து ஒங்க செருப்பு ஷூ எல்லாத்தையும் அவுத்துருங்க ச்சூட் கிழிஞ்சி போச்சுண்ணா எறங்கறது கஷ்டமாயிரும்."ண்ணாரு வேதாந்தத்தின் உச்ச கட்டத்தில் இருந்த பயணிகள் தலைக்கு மேல போனா சாணென்னா மொழமென்னாண்ணு தவ நிலையில் இருந்தார்கள்.ஒரு வழியா எல்லாரும் கீழ வந்தாச்சு. எறங்கினவங்க தவ நெலய கொலைக்கறத்துக்குண்ணே பலாவிஷயங்கள் அங்க வரவேற்பா நிண்ணுகிட்டு இருந்துச்சுதுக. சூடான மாலி நாட்டுக்குண்ணு காட்டன் சொக்காயில வந்திருந்த அந்த விமான லோடும் நடுச்சாமத்து பாலைவனக் குளூர்ல வெட வெடத்துப்போச்சு. அது பத்தாதுன்னு கட்டெறும்பு சைஸ் கொசு ஆளுகள சுத்தி சுத்தி அடிக்கிது. குளூருக்கு அடக்கமா ஒக்கார ஒரு எடம் கெடயாது ஒரு பாழடஞ்சு போன பழய ஷெட்டு. அங்க எல்லாரும் நெரிக்கியடிச்சு ஒக்காந்துருந்தோம். விடியுணுமில்ல.... காலையிலமணி ஒம்போதாச்சு பத்தாச்சி விமானம் வர்ர அறிகுறியே இல்ல. பசி மயக்கம்... தூக்க மயக்கம் அப்பா.... என்னுமோ வர்ர சத்தம் பெருசா கேக்குது பட்டாளமும் ஆகாசத்த அண்ணாந்து பாக்குது. ஒண்ணுமே தெரியிலியே? திடீர்னு மண்ணு கெளப்பிகிட்டு அடிக்கிறத எல்லாரும் பாக்குறோம். ‘மண்ணு பொயல் வேற சேந்துகிச்சா நம்ம கலியாணத்துலண்ணு’ நெனச்சுகிடே இருக்கும் போது ரெண்டு மிலிட்டரி ட்ரக்குக அங்க வந்து நிக்கிதுக. ட்ரக்கோட பின்னாடி கதவ தொறந்தவங்க அதே வேகத்துல எங்க ஒவ்வொருத்தரையும் இழுத்து உள்ள போட்டு கதவ மூடுனாங்க. இன்னொரு ட்ரக்குல எங்க சாமான அள்ளி எறிஞ்சாங்க. “புழுதியோட புழுதியா எங்க விமானம் (‘வண்டி’!!!!!) பாமகோவுக்குக்கெளம்பிடுச்சு!! கடவுளுக்கு நன்றி!!!!”


பின் குறிப்பு:" எத காப்பாத்துனாங்களோ இல்லியோ,அவுங்க சொன்ன வார்த்தய காப்பாத்திட்டாங்க. பாமகோ போன ஒடனே ஏர்போர்ட்ல பெட்ரோல் ரொப்புறத்துக்கு வாங்கின பணத்த திருப்பி குடுத்துட்டாங்க!!!"

பட்டம்

எல்லோருக்கும் வந்த அந்த அரிப்பு தட்சிணாமூர்த்திக்கு வ‌ந்ததில் நான் ஆச்சரியப் படவில்லை. அந்த மலேசியா அம்மா வந்தாலும் வந்தார்கள், ஒண்ணு கிடக்க ஒண்ணு மலேசியா வருகிறாயா என அவரிடம் பேசிவிட்டுப்போனாலும் போனார்கள், அதிலிருந்து தெட்சிணாவுக்குத்(அவரை செல்லமாக இப்படித்தான் நாங்கள் கூப்பிடும் பழக்கம்) தரையில் கால் பாவவில்லை.
கதை இப்படித்தான் தொடங்கியது.
மலேசியாவிலிருந்து வந்த ஒரு அம்மா தெட்சிணாவின் கடையைத்தேடி வந்து இரண்டு டஜன் ப்ளவுஸ் தைத்துக் கொடுக்கச்சொன்னார்.லோக்கல்களாகிய எங்களுக்கு ஆறு மாசம், அதற்கு மேலே சிரிப்போடு சாக்குப்போக்கு என்று சமாளிக்கும் தெட்சிணா ஆறே நாட்களில அவ்வளவு ப்ளவுஸ்களையும் அச்சாகத் தைத்து அவர்களுக்கு டெலிவரி பண்ணி விட்டார். அந்த அம்மாவுக்கு தெட்சிணாவின் பிட்டிங் ரொம்பவே பிடித்துப்போயிற்று.(அதிலென்ன குறை?. அதனால் தானே நாங்கள் அவ்ரிடம் ஆறு மாசங்கூட தவமிருக்கத் தயாராக இருக்கிறோம்!!!) சூரிதார் செட்டு அரை டஜன் கொடுத்து தைக்கச்சொன்னார்கள்.அதே ஸபீட்! அதே பிட்டிங்!! இவ்வளவு அழகான கட்டிங்கா!! அந்த அம்மா அசந்துதான் போனார்கள்.
மலேசியாவில் செல்வாக்குள்ள குடும்பமாம் அவர்களது. அவர்களுக்கு ஒரு யோஜனை... தெட்சிணாவை மலேசியாவிற்கு அழைத்துக்கொண்டால் என்ன? தனக்கும் பிஸினஸ் செய்ய ஒரு சந்தர்ப்பம். ஒரு நல்ல டெய்லருக்கும் வெளிநாட்டில் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தமாதிரி இருக்கும். தெட்சிணாவின் கைத்திறனை சிலாகித்த பிறகு மெள்ள இந்த வாய்ப்பைப்பற்றி அவரிடம் கூறினார்களம். தெட்சிணாவுக்குத்தலைகால் புரியவில்லை. அந்தம்மா பார்க்கத நேரமாய் அழுத்திக்கிள்ளிப்பார்த்துக்கொண்டார்.உடம்பு பூரா சிலிர்த்தது. யாரும் பார்க்கமுடியாத மனசு மட்டும் வானத்திற்கும் பூமிக்கும் ஸ்பிரிங் குதியாய் குதித்துக்கொண்டிருந்தது.இவ்வளவு சுலபமாய் வெளிநாட்டுக்குப்போகமுடியுமா என்ன? வியந்து போய்விட்டார் தெட்சிணா!!! முதல் வேலையாக பாஸ்போர்ட்டை ரெடிபண்ணியாகவேண்டும். "ந்ம்ம கஸ்டமர் ஒரு அம்மா பாஸ்போர்ட் ஆபீஸிலே பொஸிஷன்ல இருக்காங்க. கட்டாயம் நமக்கு சட்டுணு வாங்கிக் குடுத்திருவாங்க" மனசு கணக்குப் போட்டது.
மலேசியா போனவுடன் பேப்பரெல்லாம் ரெடி பண்ணி டிக்கெட வாங்கி அனுப்புவதாக சொல்லிவிட்டு அவர்கள் போனாலும் போனார்கள்,தெட்சிணாவின் காலைத்தூக்கம் கெட்டுப்போய்விட்டது." ரெண்டரை மணி நேர வித்தியாசமாமில்லமெட்ராசுக்கும் கோலாலம்பூருக்கும்…….? காலமறயே எந்திரிச்சு பளகிக்கணும் இல்லாட்டி வேலையில ஜால்ஜாப்பு ஆயிப்போயிரும்." ஆறரைமணிக்கு வீட்டு அம்மாவின் சுப்ரபாதத்தோடு
கண்விழிக்கும் நம்ம தெட்சிணா காலை நாலு மணிக்கெல்லாம் கோலாலம்பூர் வாசியாகி விட்டார்.
கனவவெல்லாங்கூட மலேசியப்பெண்களுக்கு ப்ளவுஸ் தைப்பதாகவும் அந்த அழகில்அவர்கள் உருகிப்போய் நிற்பதாகவும் ஆகிப்போயிற்று.
மலேசியாவுக்கு அம்மா போய் நாட்கள் ஆகிவிட்டன. இவருடைய பாஸ்போர்ட்டும் கைவசம் வ்ந்தாயிற்று.தெட்சிணாவுக்குஇருப்பு கொள்ளவில்லை. தைக்கிறதில் ஈடுபாடு இல்லை. எல்லா சாமியையும் வேண்டிக்கொண்டார். மலேசியா முஸ்லிம் ஊராமே.... எதற்கும் இருக்கட்டும் என்று ஹிக்கின்ஸ்பாதத்திற்கு பக்கத்தில் இருக்கும் தர்காவிலும் வேண்டிவிட்டு வந்தார்.நேர்த்திக் கடன் செய்ய சத்தியம் பண்ணிக்கொடுத்தார்.
நாங்கள் கடைக்குப்போகும்போதெல்லாம் மலேசியாவையும், அம்மாவையும் பத்திய பேச்சுத்தான்."என்ன தெட்சிணா எங்கள அம்போண்ணு உடுறிங்கள்ளே" ண்ணு யாராவது கேட்டால் "தம்பி கடையைப்பாத்துக்குவான் அம்மா." ண்ணு மப்பாக பதில் கொடுத்தார். தெட்சிணாவின் தம்பி கடையில் காஜாப்பையன் அதிலும் ஒரு சோம்பேறி காஜாப்பையன் என்பது எங்களுக்கும் தெட்சிணாவுக்கும் தெரிந்த விஷயந்தான். இவருடைய மலேசியாக் கனவில் காஜாப்பையன மாஸ்டர் டெய்ல‌ராக ப்ரமோஷன் ஆகிவிட்டார்!!
கண் பார்த்தால் கை செய்ய வேண்டியதுதானே என்று அவர் நினைத்திருக்கலாம். கட‌ல்ல தூக்கி உட்டெறிஞ்சா களுத நீஞ்ச‌ கத்துக்க வேண்டியதுனே. நால தப்பா தச்சா அஞ்சாவது சரிப்பட்டுதானே வரணும்.
“படு… நல்லா படு… தனியா கெடந்து அல்லாடினாத்தான் காசோட அரும தெரியும் ஒனக்கு” கத்துகாத சோம்பேறி தம்பி மேல என்ற ஒரு பாசமான எரிச்சலாகவும் இருக்கலாம். எதுவாயிருந்தாலும் மொத்தத்தில் தெட்சிணா எங்களைப்பலியாடாக ஆக்குவதற்கு ஒரு க்ஷணம் கூட தயங்கவிலை.

சமயத்தில் "அந்த அம்மா சும்மா பம்மாத்துக்ககாவது சொல்லியிருக்குமோ?"ண்ணு தெட்சிணா மனசுக்குள்ளே ஒரு பிடுங்கல் வந்துவிடும், ஆறு மாசங்கள் ஆகியும் தெட்சிணாவின் மலேசியப்பயணம் கெணத்தில் போட்ட கல் மாதிரிதான் கெடந்தது.
சரி கட‌வுள் வுட்ட வழியென்று பழயபடிக்கு எங்கள் ப்ளவுசுகளையெல்லாம் பொறுப்போடு தைக்க ஆரம்பித்தார். மலேசியா, மலேசியா அம்மா பேச்சு அறவே நின்று போய்விட்டது. " களுத ஒண்ணுமில்லாததுக்கு விடியலக்கால தூக்கத்த வேற கெடுத்துக்கிட்டு கெடந்தேன் பாரு. என் புத்திய சோட்டால அடிக்கிணுமுண்ணு பழயபடிக்கு இழுத்து போர்த்திகிட்டு தூங்கவும் ஆரம்பிச்சிட்டாரு. வீட்டுக்கார அம்மாவின் சுரபாதத்திற்க்குக்கூட இப்ப அசஞ்சு குடுப்பதில்லைண்ணு காத்துல எங்களுக்கு சேதி வந்துச்சு. இப்போது அவர் எரிச்சல் பூரா தம்பி மேல்தான் துப்புகெட்டவனா கெடக்கியே என்று கன்னாபின்னவெண்று எங்கள் எதிரிலேயே கத்த ஆரம்பித்துவிட்டார், இது எவ்வளவு தூரம் போய்விட்டது என்றால் "பாவம் தெட்சிணா... சரிதான் உடுங்க.... கொஞ்ச நாள் ஆனா கத்துக்குவான்... ஒங்க தம்பிதானே ஒங்க கைத்தெறன் அவருகிட்டயும் இருக்காதா என்ன?" என்று நாங்கள் தம்பிக்காக வக்காலத்து வாங்க வேண்டிய நிலமயாய் ஆகிவிட்டது.
இப்படியாக எங்கள் தையல் வாழ்க்கை சுமுகமாக ஓடிக்கொண்டிருந்த பொழுதில் அடித்தது யோகம் தெட்சிணாவுக்கு. ஆமாம் உங்கள் நினைப்பு சரிதான். அந்த மலேசியா அம்மா சென்னைக்கு வந்திருக்கிறார்களாம் . பிஸினசைத்தொவங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய இவ்வளவவு நாள் ஆகிவிட்டதாம். வந்தவர்கள் தேவையான பேப்பர்கள் ஒர்க் விசா எல்லாவற்றையும் கையோடு கொண்டு வந்திருந்தார்கள்.தெட்சிணாவுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஒரே வாரத்தில் விமானப்பயணம்.அந்த அம்மாவும் அவரோடே பயணம் செய்கிறார்களாம்.முதல் முறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு விமான நிலையத்தில் போய் என்ன செய்ய வேண்டும், விமானத்தில் என்ன செய்ய வேண்டும்,எந்த பேப்பரையெல்லாம் பில்அப் செய்யவேண்டும்,எப்படி சீட்பெல்ட் போடவேண்டும் என்ற கிலியே முதல் பயணத்தின் சந்தோஷத்தையெல்லாம் தின்றுவிடும். “இந்த தொந்தரவெல்லாம் இல்லாமல் துரும்பு ஒன்றைக்கூட நகர்த்தாமல் சுகவாசியாய் இவர் போறார் பாரு" ப்ளவுஸ் அளவில் பாதிக்கப்பட்ட நாங்கள் பாதி விரக்தியும் பாதி கோபமுமாய் பொருமித்தள்ளி விட்டோம்.
தெருவிலே அக்கம் பக்கத்திலே தெட்சிணா இல்லாமலேயே கலியாணங்கள், காட்சிகள் நடந்து முடிந்தன. கிறிஸ்மஸ் நடுச்சாம பூசை முடிந்து இரண்டு மணிக்கு வீட்டிற்கு வருகையில் ஒரு அப்பாலஜி கலந்த சிரிப்போடும் தைத்த துணிமூட்டையோடும் யாரும் காத்துக்கிடக்கவில்லை.புது ச்சட்டை போட்டுக்கொண்டு கோயிலுக்குப் போகமுடியவில்லையே என்று பிள்ளைகளுக்கு இருந்த வருத்தம் தெட்சிணாவைப் பார்த்தவுடன் சாண்டாகிளாசே தரிசனம் தந்துவிட்டதாக போட்ட அந்த குதியாளம் இப்போது இல்லை
அப்படி இப்படியாக வருடங்கள் ஓடிவிட்டன. ஒரு நாள் மைலாப்பூரின் கொடுக்கி போடும் பூ விற்பவ‌ர்களைக் கடந்து ராசி அருகே செல்லுகையில் "அம்மா சவுக்கியங்களா?" என்ற தெட்சிணாவின் குரல் என்னை அழைத்தது.
"என்ன தெட்சிணா லீவுக்கு வந்திருக்கிங்களா? நல்லா இருக்கிங்களா? "ஒங்க புண்ணியத்துல நல்லாருக்கமா. அந்த அம்மா என்ன கூட்டிகிட்டு போய் கோலாலம்பூருல நம்ம மக்க இருக்க பக்கம் நடு செண்டரா கட போட்டாங்கம்மா . கொஞ்ச கொஞ்சமா கடைக்கு நல்ல கூட்டம் வர ஆரம்பிடுசிம்மா.
"ஒங்க தையல் மாதிரி எங்க கெடைக்குங்க? சரி,சரி போய் நல்லா படியா சம்பாரிச்சுகிட்டு சீக்கிரம் ஊர் பக்கம் வந்து சேருங்க" என்றேன் நான்.
“அம்மாகிட்ட இன்னொண்ணும் சொல்லுணும்மா. வரும்படி நல்லாத்தான் வருது. ஆனா ரெண்டு பேரு பங்கிட்டுக்கறதில கையில கணிசமா தொக நிக்கமாட்டங்குது. அம்மாகிட்ட சொல்றதல என்னா? இங்க சம்பாரிச்சதுகூட அங்க இல்ல. இதுக்குண்ணு ஊடு வாசல் மக்க மனுசருண்ணு எல்லாத்தையும் உட்டுபுட்டு அங்க கெடக்கணுமா?
தெட்சிணா பேசிக் கொண்டிருகையிலேயே மனசு, "ஆகா திரும்ப நம்ம டெய்லரே துணி தைக்கப்போறாருண்ணு"மனசு கணக்குப் போட்டது.
"ஒர்க் விசாவும் முடிஞ்சு போச்சும்மா.அங்குட்டு இப்ப நெறயா தமிழ் ஆளுங்க நமக்குப் பள‌க்கமாயிட்டாங்க. திரும்ப இந்தியாவுக்குப் போயி தனிப்பட்ட மொறையில சொந்தமா கட வைக்க பேப்பரெல்லாம் ரெடி பண்ணிகிட்டு வர்ரதுக்கு விவரெமல்லாம் சொல்லியிருக்காங்க. பட்டப்படிப்பு படிச்சிருந்தா டெய்லருக்கு ஒடனடியா பேப்பரு குடுத்துறாங்க அம்மா. அப்புடி நெறய டெய்லருங்க அங்க கட போட்டுருக்காங்கம்மா.”
ரொம்ப சீக்கிரம் தப்புக்கணக்குப்போட்ட என் மனசைத்திட்டிக்கொண்டே "அட நீங்க காலேஜ் படிச்சிருக்கிங்களா தெட்சிணா?" என்று கேட்டேன்.

"இல்லம்மா அம்மாகிட்ட சொல்றதில என்னா இருக்கு? தற்குறிதாம்மா. கையெளுத்து தமிழ்லயும் இங்கிலீஸ்லயும் போடுவேன் அம்புட்டுதான். அதுக்கெல்லாம் ஏஜண்ட்டுகள் இருக்கங்கம்மா. அவுங்க அனுப்புன ஆளுங்கள்ளாம் ஓகோண்ணு அங்க இருக்காங்க. எல்லாத்தையும் ரெடிபண்ணிக்குடுத்திருவாங்க. நான் கட‌ போட்டுட்டா மொள்ள இந்த பயலையும் இளுத்துப்போட்டுக்கலாம்ணு பாக்குறேன்.”

உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்று நான் நினத்தாலும் "சரி தெட்சிணா சந்தோஷமா பொயிட்டு வாங்க" அவரை வழி அனுப்பி வைத்தேன்.

கிறிஸ்மஸ் நெருங்குகையில்தான் நான் திரும்பவும் தெட்சிணாவின் தம்பிக்கடை பக்கம் போனேன். மெஷினில் தெட்சிணாவை பார்க்கவும் எனக்கு ஒரே ஆசசரியம்!
"என்ன தெட்சிணா இன்னம் இங்க என்னா பண்ணிகிட்டு இருக்கிங்க?"
“கெழக்க போனாலும் தெக்க போனாலும் நம்ப ஊரு மாதிரி ஆவாதும்மா" வேதாந்தமாக பேசினார் தெட்சிணா.
"அண்ணைக்கு கபாலி கோயில்கிட்ட என்ன பாத்தப்ப மலேசியாவுல சொந்தமா பிசினெஸ் போடப்போற விஷயங்கெள்ளாம் சொன்னிங்களே?"
"ஆமாம்மா ஆனா ஒரு சின்ன கடுபடு ஆயிருச்சும்மா. அம்மாகிட்ட சொல்றதில என்னா இருக்கு? என்ற அவருடைய‌ வழக்கமான முன்னுரையோடு ஆரம்பித்தவர் சொன்ன கதை இதுதான்.
மலேசியா எம்பசியில அண்ணைக்கு அவுருக்கு நேரடி இன்டர்வியூ. ஏஜண்ட்டுகள் தயார் பண்ணிக்குடுத்த எல்லா பேப்பரும் ஒரு அட்டாச்சி கேசுக்குள்ள நீட்டா வச்சிக்கிட்டாரு தெட்சிணா. நல்லா வெள்ளையுஞ் சொள்ளௌமாத்தான் டீக்கா போயிருக்காரு. அவுரு பேர கூப்பிடவொடனே உள்ள போனாரு. பேப்பரெல்லாத்தையும் காட்டினாரு. அவுருகூட பேசிகிட்டுருந்த அந்த ஆபிசரு எங்க பி.ஏ. பண்ணினிங்கண்ணு கேட்டிருக்காரு. கொஞ்சம் யோசன பண்ணி மெட்ராஸ் யுனிவசிட்டியிலங்கண்ணு சொல்லியிருக்காரு. பாரிஸ் கார்னர் போயி தையல் சாமான் வாங்க 21 N பஸ்ஸில ஏறுனா யுனிவர்சிட்டி ஸ்டாப் வரும். தெட்சிணா மனசுல பதிஞ்சு நிண்ணது அது ஒண்ணுதான். திரும்பவும் கேட்டிருக்காங்க. திரும்பவும் அழுத்தந்திருத்தமா அதையே சொல்லியிருக்காரு. மெட்ராஸ் யுனிவர்சிட்டி மாதிரி ஆயிரக்கணக்கில இந்தியாவுல இருக்குண்ணு என்னத்தத் தெரியும் தெட்சிணாவுக்கு!


ஆபீசரு "ஆனா ஒங்க சர்ட்டிபிகேட்ல கர்னாடகா யுனிவர்சிட்டிண்ணு போட்டிருக்கே”ண்ணு சொல்லிட்டு அவுரு மேலே கொடயவும் மனுசன் தொங்கிப்பொயிட்டாரு. நெலம போலீசக்கூப்புடுற அளவுக்குப்பொயிடுச்சாம். “அம்மா அந்த ஆபீசரு கால்ல நெடுஞ்சாங்கடயா வுளுந்து கால கெட்டியாப்புடுச்சுகிட்டேன். அய்யா…. என் பொளப்புல மண்ணவாரிப்போட்டுடாதிங்க அய்யா…… இப்பத்தான் கலியாணம் பண்ணியிருக்கேன். பெரிய குடும்பமுங்க பொலீசு கீலீசுண்ணு போச்சுண்ணா மொத்த குடும்பமும் நாண்டுகிட்டு செத்து போவுமுங்க‌. அய்யா தயவு பண்ணுங்க. எங்கம்மா மேல சத்தியங்க‌ இனி ஒங்க ஊரு பக்கம் தலய வச்சு படுக்கமாட்டன். என்ன உட்டுடுங்க சாமிண்ணு கெஞ்சிக்கூத்தாடி தப்பிச்சோம் பொளச்சோம்முண்ணு இண்ணைக்கு இந்த வெடத்துல உக்காந்திருக்கம்மா. இல்லாட்டி எங்கயாச்சும் கம்பி எண்ணிகிட்டு கெடந்திருப்பேன்" என்றார் எங்கள் பிரிய தெட்சிணா.

Tuesday, 25 November 2014

மாப்பிள்ளை

மொத மொத சாமியாரா அம்மாங்களா போனது எடங்கண்ணியில எந்த வீட்லண்ணு கேட்டா அறியாத பிள்ள கூட மெத்த ஊட்லதான்னு டக்குண்ணு பதில் சொல்லும். தார்ச்சீசு, மத்தியாசு, சுசான்னா, சபினா, ரோஸ் இப்டிண்ணு வரிசையா அடுக்கிகிட்டே போவாக அந்த கதயே கெடயாது நான் கேட்ட கேள்வி இதான்..
மொதம் மொத……….
மொதம் மொத அம்மாங்களா போனது எங்க ஆஞிம்மா வீட்லதான். எங்க பெரிய அத்த, கொழந்தசாமி பிள்ளையோட தலச்சன் பொண்ணு, எங்க நாநாவோட பெரிய அக்கா. பிரகாசிதான் நம்ம ஊர் தேவ அழைத்தலுக்கு அஸ்திவாரம். இது நடந்த காலம் 1920 கள்ள இருக்கலாம்ணு என்னுடைய யூகம். ஏண்ணா அந்த சமயத்தில நாநாவே வெடப்பையந்தானாம்.
பிரகாசி அத்தை ரொம்ப சாதுவான ரொம்பரொம்ப பக்தியான பொண்ணாம். சின்ன வயசிலருந்தே அச்சிட்டவங்க சரித்திரத்தையெல்லாம் படிச்சு எல்லாருக்கும் சொல்லுவாங்களாம். அவுங்க செவம் படிச்சா இண்ணைக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாமாம். அந்த மாதிரியான அத்தை அம்மாங்களா போவுணும்முண்ணு ஆசப்பட்டதுல தப்பு ஒண்ணும் இல்ல. அந்த ஆச அவுக ஆஞா காதுல உழுந்தப்பதான் வெடிச்சது பூகம்பம். வடிவேல் ஸ்டைலில " எவ அவ அம்மாங்களாப்போறது? என்னா இது நம்ம சாதி சனத்தில இல்லாத புதுப்பளக்கம்? இங்க என்னா சோத்துக்குக்கொறச்சலா, தண்ணிக்குக் கொறச்சலா ஊரான் ஊட்டு சோத்துக்கு எதுக்கு போய் கை கட்டி ஊளியம் பண்றது? சோத்துக்கும் தண்ணிக்கும் வக்கில்லாதவகளத்தான்(இது தாத்தாவோட சொந்த தாத்பர்யம்) இந்த வெள்ளக்கார கன்னியாஸ்திரிங்க இளுத்து உள்ள போட்டுக்கிறாளுக. ஊருக்கு ஊரு மடம் கட்டுறாளுக. இந்த வெறுமனத்தாகளுக்குத்தான் பொளப்பு இல்லண்ணா மத்த சாதி சனங்களும் எதுக்கு புத்தி கெட்டு அலையுதுக? இனி.... இந்த ஊட்ல........ இந்த பேச்சு....... வரப்புடாது. இண்ணைக்கு சொல்றதுதான் கணக்கு….. கித்தேரி…. இத எல்லார்கிட்டயும் சொல்லி வை.
இந்த கத்தலோட தாத்தா வயலுக்குக் கெளம்பிப் பொயிட்டாரு.
தாத்தா நேரிடையாக எந்த விஷயத்தையும் சொல்லமாட்டார் எல்லாமே கித்தேரி வழியாகத்தான்.
அத்த மீரா பாயி டைப்பு. சொந்தம் சொகம் எல்லாத்தையும் தொறக்க அவுங்க அஞ்சல. ஆஞாவின் மெரட்டல் எல்லாம் செவிடன் காதுல ஊதுன சங்குமாரி ஆயிப்போச்சு அவுங்களுக்கு.
கொஞ்ச நா கழிச்சு திரும்பவும் ஆஞிம்மா "என்னாங்க"ண்ணு தாத்தா முன்னாடி ஆஜர் ஆனார்கள்.
விஷயத்த கேட்டஒடன வீட்ல ஒரே களேபாரம். கச்சா முச்சாண்ணு தாத்தா போட்ட எர‌ச்சலில மாமன் மச்சான் பங்காளிங்க எல்லாம் தாத்தா ஊட்டுத்திண்ணையில:
எல்லாருமா சேந்து தாத்தாவ அம்ச அடக்கி பிள்ளய உள் ஊட்லேருந்து வெளிய வரச்சொல்லி ஆளாளுக்கு புத்திமதி சொன்னாக “பெரவாசி நம்மெள்ளாம் சம்சாரிவம்மா; நம்ம பிள்ளைவளெல்லாம் குடியுங் குடித்த‌னமுமா பிள்ளகுட்டிவளோட வாழணும்; அப்பதான ஊடு நெறையும் வாசல் நெறையும்? நீயி சாமி பொஸ்தவம் எல்லாம் படிக்கிறல்ல, எங்குட்டாச்சும் சாமி நீ அம்மாங்களா போண்ணு சொல்லியிருக்காரா சொல்லு. அவுரு சொன்ன ஒரு வார்த்தய கேளு; மானத்தில இருக்க நச்சத்திரங்களப்போல பெருகுங்க, சமுத்திரத்து மணலப்போலபெருகுங்கண்ணுதான சொன்னாரு நீயி மடத்துக்கு போயி என்னாத்த கிளிக்கப்போற? அங்க சொல்ற செவங்கள இங்குட்டு, நீயி போற ஊட்ல சொல்லு. அப்ப ஒன் பிள்ளவ நல்ல பிள்ளைவளா வளரும். ஊருக்கு நாட்டாமையா வரும் அத விட பெரும எங்குளுக்கு என்னாஇருக்கு?"
“ஆமாம்மா, நம்மெள்ளாம்வெவசாயக் குடும்பம்; ஒன்னால ஒரு ஊடு வெளங்கணும். சாதி சனங்க சந்தோசப்படணும் ஒன்ன கட்டி குடுத்த ஊருக்கு வந்தமா பிள‌ள குட்டிவளோடஒரு வேள பேசி சிரிச்சுப்புட்டு ஒரு வா சோத்த‌ சந்தோசமா தின்னுபுட்டு வந்தமாண்ணுதான் நம்ம பொண்ணு வாளணும். இத உட்டுபுட்டு மடத்தில போயி நிண்ணுகிட்டு கண்டவளுகிட்டல்லாம் நம்ம பொண்ணப்பாக்க உத்தரவு வாங்கிகிட்டு நீ கறுப்பும் வெள்ளையுமா சவ பொட்டியாட்டம் காது மூக்கெல்லாம் மூளியா வார கோலத்த பாத்துட்டு நாங்க வவுறு எரிஞ்சு போயி ஊடு வார தக்கனயும் பொலம்பிகிட்டேவருணுமா? பிள்ள எப்டி இருக்குதுண்ணு ஒன் ஆயி கேட்டா எந்த கோலத்த நான் எடுத்துச் சொல்லுவேண்ணு நீயி சொல்லு பாக்கலாம்?”
“ஆயா பிரகாசி மனத்த போட்டு ஒளப்பிக்காத….. நாங்க பெரியவங்க ஒனக்கு தீது நெனப்பமா... அத்தான் இத நம்ம தள்ளிப்போடப்புடாது..... வெரசலா காரியத்த முடிப்போம்.”
ரத்தினசாமி பிள்ள முடிவாச்சொல்லிட்டாரு. அவுரு பேச்சில எப்பயும் கண்ணியம் இருக்கும். பஞ்சாயத்துல அவுரு தீர்ப்பு சொன்னாக்க ஊரு கட்டுப்பட்டு நிக்கும்.
அத்தையோட கண்ணீருங்கம்பலையும் எங்குட்டும் எடுபடுல. மொனஞ்சு மாப்ள தேடியாச்சு. மாப்ள நாகப்பட்டினம் பக்கம்; நெலம் நீச்சு ஊடு எதுக்கும் கொறைவில்ல; எடங்கண்ணி வந்து பொண்ணப்பாத்தவொடனயே கைய நனச்சிட்டாங்க... ஊரே பேசிக்கிச்சு "பெரவாசி அதட்டக்காரி தான்"
மாப்ள ஊட்டு சனங்க பொண்ணு ஊட்டுகாரகளை அவுங்க ஊருக்கு ஒரு எட்டு வந்து கைய நனச்சுடுணுமுண்ணு ஒரே புடியா இருந்தாக. ஒரு எட்டா அது....? அம்புட்டு தொலவு…..! வேளாங்கண்ணிக்கும் நாவப்பட்ணத்துக்கும் நடுவுல இருக்காமில்ல, எம்புட்டுகொள்ள செலவாவப்போவுதோ ஊட்டுக்கு ஊடு ஒரு ஆள் கூப்புட்டாக்கூட அள்ளிகிட்டு பொயித்திருமே? தாத்தா மனசுல பெரிய கணக்கு ஓடிக்கொண்டிருந்தது. ஆனா இந்த பெரிய பிள்ள வெசயத்துல கணக்கு பாக்கறது பெரயொசனம் இல்ல;மடமடண்ணு காரியத்துல எறங்கிட்டாரு தாத்தா. ஊட்டுக்கு ஒரு ஆம்ள ஆளு மட்டுந்தான். பொண்டுவ கண்ணாலத்தோட மாப்ள ஊடு பாத்துக்கலாம். அடுத்த பொதன் நாளு நல்லாருக்கு.எல்லாரும் இதுக்கு ஒத்துக்கொள்ள‌ மாப்ள ஊட்டு சனங்களும் சந்தோசமா தாத்தா ஊட்டு கூட்டு வண்டியில ஏறி கெளம்பிப்போயிட்டாக‌.

பொதன் கெழம கரிச்சான் கத்துற நேரத்துக்கெல்லாம் எல்லாரும் கோயில் மாப்புல கூடிட்டாக‌.எடங்கண்ணியிலேர்ந்து மதனத்தூருக்கு கூட்டு வண்டி.ஆச்சல்ல வண்டி உளுந்து எந்திரிக்கையில வண்டி பிளாச்சி மண்டயப்பதம் பாத்துடும். அங்குட்டு எறங்கி மதனத்தூரு எலந்தக்காட்டத் தாண்டி கொள்ளடக்கரைக்குப்போவணும்.பரிசுல ஏறிப்போனா அந்தக் கரையில நீலத்தநல்லூரு. அங்கேருந்து பொடி நடையா உட்டா கும்மாணம் டேசனு வந்துரும். வழிக்கு பலமா கட்டுசோறு. வர மொளவா கிள்ளிப் போட்டு நல்லெண்ணயில தாளிச்ச புளி சோறு. நாலு நாளு கெடந்தாலும் கெட்டுப்போவாது. அந்த சோத்துக்கு தனியா கடுச்சுக்க‌ வேண்டியதில்ல. புளியில ஊறிக்கெடக்குற அந்த மொளவாயே அமுர்தமா இருக்கும். டேசன்ல குந்தியிருக்கையில செல பேரு மனசுக்குள்ள பயம். ஏதோ வெளிய போவலாம்ங்கிற ஆசையில கெளம்பிட்டாலும் பொக கக்கிகிட்டு வார அந்த கறுப்பு பூதத்தோட கிலி அவுங்க எல்லாரையும் தொத்திகிட்டுக் கெடந்துச்சு. ரத்தின சாமி பிள்ள நாலுந்தெரிஞ்சவரு. ரயிலுல‌ அவுரு பக்கத்தில குந்திக்கிலாம்ணு முடிவு செஞ்சவங்க நெறய... ஆச்சு நாவப்பட்டினம் டேசன்ல எறங்கி ஊரு போயி சேந்தாச்சு. நல்ல மனுசருங்க. டேசனுக்கு வண்டி அனுப்பிச்சிருந்தாக‌. பெரிய ஊடு, மெத்த ஊடு வேற, பொண்ணூட்டாளுக வருதுண்ணு சுண்ணாம்பல்லாம் அடிச்சிருந்தாக. திண்ணையில குந்தி கொசலம் எல்லாம் சாரிச்சசு. ரெண்டுநாளா கட்டு சோத்தயே திண்ண நாக்கு சுடு சோத்துக்கு ஏங்கிகிட்டு இருந்துச்சு. மூஞ்சிகைகால களுவிபிட்டு பந்தியில குந்தியாச்சு. நல்ல தாட்டு எலதான் போட்டிருக்காக... பந்தியில மொதஆளா ஒக்காந்திருந்தவரு கடகாரபிள்ள.
கடகாரபிள்ள வயலுக்கு பொயிட்டு, மதியம் கொளத்தில உளுந்து எந்திரிச்சு, சிண்ட ஒரு ஒதரு ஒதறி உச்சந்தலயில கொண்டயப் போட்டுகிட்டு ஊட்டுக்குள்ள நொளஞ்சாரோ இல்லியோ கோப்பயில சுடச்சுட சோறு உளுந்தாவுணும்; கிண்ணத்தில கொளம்பும் கடுச்சுக்க தட்ல கடுச்சுக்கையும் தயாரா இருக்கணும்; செத்த நேரம் ஆயிப்போச்சுண்ணாக் கூட அவுரு வாயில என்னா வருதுண்ணு அவுருக்கே தெரியாது. அதனால கடகார ஊட்டுப்பொண்டுக எந்த வேல எக்கேடு கெட்டுப்போனாலும் சோறாக்கிறதுல மட்டும் தாமசமே பண்ணமாட்டாங்க. எலயில சோறு போட்டாச்சு. பின்னாடி ஒரு ஆளு கொளம்பு குண்டானோட.தொபக்குண்ணு கொளம்போட காய் ஒண்ணு பெருசா உளுவுது. கத்திரிகாய அப்புடியே முளுசாப்போட்டு கொளம்பு வச்சிருப்பாகளோ. ஆனா கத்திரிக்காய்க்கு கால் மொளசசது எப்டி? கடகாரப்பிள்ள சுத்த சைவம். அவுங்க வீட்ல மீன் கொளம்புக்கு தனியாவே ஒரு சட்டி கெடக்கும். ஒரு நாத்தம் அண்டப்புடாது அவுருக்கு. அவுரு எலய உத்துப்பாக்குறாரு.. இது என்னா எளவு இது? கொளம்புல கெடக்குது தவுக்காள. சுத்து முத்தி பாக்கிறாரு. பந்தியில பக்கத்துல கொழந்தசாமிப்பிள்ளதான்; "அண்ண அவசரமா கொல்லைக்கு வருது, தப்புடியில வந்திர்ரேன்" சொன்னவரு பதிலுக்குக்கூட பாக்காம தோட்டத்துக்கதவு வழியா ஒரே பாச்சலு......"இவனுக்கு அறிவு வாணாம், நம்ம ஊர்ல முன்ன பின்ன கெடக்கலாம். மாப்ள ஊடு பாக்க வந்தவெடத்துல இப்பிடியா பந்திய உட்டு எந்திரிச்சு அசிங்கம் பண்ணுவான்? மருவாதியில்லாத களுதப்பய?” இப்பிடி அவர மனசுக்குள்ள வஞ்சுகிட்டிருந்த கொழந்தசாமிப்பிள்ள தான் எலயையே கவனிக்கில.அவுருக்கு இந்தப்பக்கம் ஒக்காந்திருந்தது அவுரு சொந்தத்தம்பி “அண்ண தா போயி கடகாரப்பிள்ளய கூட்டிகிட்டு வந்திர்ரேன் அவுரும் பாச்சல்லதான் கெளம்பிட்டாரு. அவுருக்குப்பின்னால ஆரும் அவுருகிட்ட‌ சொல்லிக்கிறதா இல்ல எல்லாம் நாலுகால் பாச்சல்தான். கொழந்தசாமி பிளளைக்கு என்னாண்ணே பிரியில. "அடே நில்லுங்கடா கூறு கெட்டகுந்தாணிகளா” ண்ணு மொத்தத்தில எல்லாரையும் வஞ்சுகிட்டே அவுரும் ஓடுறாரு. என்னா ஏதுண்ணு புரியாத மாப்ல ஊட்டாளுக அவுர தொரத்திகிட்டே ஓடுறாங்க. மாரத்தான் கடசி நிமிசங்கள் மாரி ஒரே ஸ்பீடுதான். "நில்லுங்க நில்லுங்க வந்து சாப்பிடுங்க என்னாவாருந்தாலும் பேசித் தீத்துக்குவோம்.” குதிங்கால் பொடரியில பட எடங்கண்ணியானுக ஓடுன ஓட்டத்துக்கு ஈடு குடுக்கமுடியாம மாப்ள ஊட்டாளுக பின் தங்கிப்போயாச்சு. ஓடினவங்க நாவப்பட்டினம் டேசன்ல ரயில்ல ஏறி குந்தினப்பறந்தான் வாயத் தொறந்தாகளாம். தவுக்காளக்கதைய எல்லாம் விளாவாரியா கொழந்தசாமிப்பிள்ளைக்கு அவர்கள் எடுத்து சொன்னாங்க‌.
எடங்கண்ணி ஆளுக ஆட்டுத்தல,ஆட்டுக்காலு ஆட்டுக்கொடலுண்ணு எல்லாத்த‌யும்ஒரு கை பாக்கிறவங்கதான். ஆனா கடல் மீன கண்ணாலகூட பாக்கமாட்டாக. கொள்ளடத்து வெராலு ஆரா கொரவ இல்ல வருசத்துக்கு ஒரு தடவ பாப்பா கொளம் வத்தயில புடிக்கிற கொளுப்புக் கெண்ட இம்புட்டுதான் அவுக மீனுங்க‌ தவுக்காளயக்கூட மனுசன் திம்பானாண்ணு கேக்குற சாதி இது. அப்புடியாப்பட்ட ஆளுகளுக்கு கை நனைக்க வந்த வெடத்தில என்னா கூத்து பண்ணிபுட்டானுக சாமி!!
“நம்ம பொண்ண இந்த வெடத்துல கட்டி வச்சிருந்தா சாமிக்குத்தம் ஆயிருக்குமுண்ணெ ஏதோ அவுராப்பாத்து பொண்ண என் ஊளியத்துக்கு குடுங்கடாண்ணு சொன்ன மாரி இருக்கு எனக்கு" தம்பிக்காரர் ஒருத்தர் சொன்னார். “என்னாமித்தானுகளோ அவனுக பிரியில. நம்ம மிக்கேல்புட்டி, மோளத்தூரு, திருப்பந்துருத்தி ண்ணு மாப்ள பாக்காம இங்குட்டு வந்து ஊரு கெட்ட ஊர்ல நம்ம‌ பிள்ளைக்கு எட‌ம் பாத்தமே, நம்ம புத்திய சோட்டால அடிக்கணும்; கைநனைக்க வந்தவகளுக்கு கவுச்சி சோறு போடப் புடாதுண்ணு தெரியாத‌ வெவஸ்த கெட்டவனுக.” தன் வயித்துப்பசியையும் ஒரு வழியாச் சொல்லி ஆத்திகொண்டார் கட‌கார‌புள்ள.
“தலைக்கு வந்தது தலப்‍பாயோட போச்சுண்ணு நெனச்சுக்குவோம் அத்தான், நம்ம பொண்ணு தப்பிச்சது இந்த வேளாங்கண்ணி மாதா புண்ணியந்தான்.” தன் பங்குக்கு ரத்தினசாமி பிள்ளை.
“எடங்கண்ணி ஆளுகள அம்மா கைவுடவே மாட்டா இந்த எடத்த சொன்னவன் என் கையில ஆம்புட்டாண்ணா தொலஞ்சான் அவன்……….. துப்பாக்கி பாலீஸ் எல்லாம் ஏறி தயாராத்தான் இருக்கு" தாத்தாவின் தம்பி சின்னப்பா பிள்ளை எடங்கண்ணியிலேயே துப்பாக்கி வைத்திருக்கும் வேட்டை துரை!
ஊரு வந்து சேந்தாச்சு.
பொண்டுவ எல்லாம் என்னா சேதி கொண்டு வரப் போறாகண்ணு ஆவலா காத்துகெடக்குக; அப்பசியிலய கண்ணால தேதி குறிச்சிடுவாகளா இல்ல தைக்குத் தள்ளிப்போவுமாண்ணு பட்டி மன்றம் கோயில் மாப்புல.
‘அவுக கைநனச்ச வேகத்தப்பாத்தா அப்பசியிலயே எல்லாம் முடிஞ்சிரும்.
கண்ணாலத்துக்குப்போவையில வேளாங்கண்ணிக்கும் ஒரு நட பொயித்து வந்துரணும்’ இப்டியா அங்குட்டு பலா பேச்சுகளா இருந்துச்சு.
கொழந்தசாமிப்பிள்ள நேரா பாப்பா கொளத்துல தலய முளுவிட்டுத்தான் ஊட்டுக்குள்ள நொழஞ்சாரு. இண்ணைக்கு அவரு நடுஆளா நிக்கிறதுக்கு கித்தேரியக் கூப்புடுல.


"ஆயா பிரவாசி அடுத்தவாரம் கும்மாணம் மடத்து முட்டும் பொயித்து வந்திருவோம்" தன் மகளிடம் நேரடி சேதி சொன்னார் கொழந்தசாமிப்பிள்ள.

புதுப் பாட்டு ஒண்ணு கேட்டோமே!

கல்லேரியில் அம்மா நாநா மக்கள் நலனில் எவ்வளவு ஈடுபாடு கொண்டு உழைத்தார்கள்,ஒவ்வொருவர் வாழ்விலும் எவ்வளவு மாற்றங்களையும், நல் எண்ணங்களையும் உருவாக்கினார்கள் என்று வெகு அருமையாக எங்கள் (பாப்பாத்தி அக்கா), ஸிஸ்டர் கொன்ராத் மேரி, ஜெசி அக்கா_அமல்ராஜ் அத்தான் 50வது திருமண பொன் விழா மலரில் விரிவாக அழகாக எழுதியிருந்தார்கள். சென்ற மாதத்தில் அம்மலரைப் புரட்டுகையில் எனக்கு சிலிர்த்து விட்டது.பெரிய படிப்பு ஒன்றும் இல்லாத எங்கள் அம்மா இவ்வளவு செய்திருக்கிறார்களே என அசந்து போய்விட்டேன்!

கல்லேரியைவிட்டு நாங்கள் கூண்டு வண்டியில் ஏறி வந்தது சின்னப்பிள்ளையாய் இருந்தாலும் எனக்குத்தெளிவாய் ஞாபகம் இருக்கிறது. ஜெசி அக்கா ஜோஸ்பின் அக்கா இவர்கள் தோழிகள் எல்லோரும் தேம்பித்தேம்பி அழுதார்கள். அய்யோரோட (அப்படித்தான் கல்லேரியில் நாநாவைக்கூப்பிடுவார்கள்.) வண்டியைத் தடுத்து நிறுத்திவிடும் உத்வேகத்தில் பலர்….. “என்ன வேணும அய்யோருக்கு ......? எல்லாத்தையும் நம்ம அய்யோருக்கு பண்ணி குடுப்போம்..”. என ஊரே கூடி நின்று சூளுரைத்தனர். “வண்டிமாட்ட அவுருங்கடா” என்று வேறே கூச்சல்……. நாநா வண்டியை விட்டு இறங்கி எல்லோருக்கும் நடுவில் வந்து கையெடுத்துக் கும்பிட்டு “பிள்ளைகள் படிப்புக்காகத்தான் இந்த முடிவு எடுத்தோம் என்று உங்களுக்குத்தெரியும். இந்த அன்பும் பாசமும் வேறெங்கேபோனாலும் எங்களுக்குக் கிடைக்காது” என கண்ணீரோடுசொல்லிக்கொண்டே “தயவு செய்து எங்களைப்போகவிடுங்கள் நான் டவுணுக்குப்போவது உங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்திற்கு கட்டாயம் உதவும் இன்னம் சொல்லப்போனால் இப்போது ட‌வுணில உங்களுக்கென்றே ஒரு வீடு இருக்கிறதே. அது உங்களுக்கென்று எப்போதும் தொறந்தே இருக்கும்” என்று கும்பிட்ட கை மாறாமல் அவர் சொன்னது மக்களைத் தொட்டிருக்க வேண்டும். வண்டி கிளம்பியது. மாடுகள் கும்பகோணம் டவுணை நோக்கி நடயப்போட்டன.
கல்லேரியில் பள்ளிக்கூடமே நாநாவுதுதான். நாநாதான் ஹெட்மாஸ்டர். பிள்ளைகள் பள்ளிகூடத்துக்கு வருணும்கிறத்துக்காக விடியக்காலம் எழுந்திருச்சு சைக்கிள எடுத்துகிட்டு சுத்தியிருக்க கிராமங்களுக் கெல்லாம் போயி பையங்களயும் பொம்பள பிள்ளைகளையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறதுக்கு அம்மா அப்பாகிட்ட வேண்டி கேட்டுக்குவாங்க‌. படிப்பு எப்படி அவுங்களுக்கு அவசியம்னு எடுத்துச் சொல்லுவாங்க.

இந்த சூழ்நிலையில வளந்த எங்களுக்கு ஜெசி அக்காவுக்கும் ஜொஸ்பின் அக்காவுக்கும் கும்பகோணம் அம்மாங்க ஸ்கூலில எடங்கிடக்கிலண்ணு நாநா திரும்பி வந்ததுதில ஒரே ஆச்சரியம். ஸ்கூல் தொடங்கனதுக்கப்பறம் சேக்க மாட்டாகளாம்.
எப்ப வந்தாலும் சேத்துக்குற பள்ளிகூடக்காரங்களுக்கு இத புரிஞ்சிக்கவே முடியில.

"அடுத்த வருஷம் நேரத்தோடு வந்தா சேத்துக்குவாங்களாம்."
"அப்ப இந்த வருஷம் பூரா என்னத்த பண்றது....?" வீட்டிலே பெரிய கேள்விக்குறி....
ஊரெயெல்லாம் உட்டு இவ்வளவு தூரம் பள்ளிக்கூடத்துக்காக அடிச்சி புடிச்சு வந்து..........பிள்ளகை ரெண்டும் ஒரு வருஷத்த வீணாக்குறதா என்ன...?

வேற ஸ்கூல்ல மொயற்சி பண்ணினப்ப சீத்தாலட்சுமி பாடாசாலாங்கிற பள்ளிகூடத்தில ரெண்டு அக்காவையும் சேத்துக்கறதா சொன்னாங்களாம்... ஆனா ஒண்ணு……. அது இந்து பள்ளிக்கூடம்...... அம்மாவும் நாநாவும் ரொம்ப யோசன பண்ணுனாங்க.
அம்மா சொன்னாங்க “கொஞ்ச நாளைக்கு கஷ்டமாத்தான் இருக்கும்.இந்த ஒரு வருஷத்துக்கு பல்ல கடிச்சுகிட்டு இந்த பள்ளி கூடத்துக்கு பொயிட்டு வந்திருங்க. அடுத்த வருஷம் அம்மாங்க பள்ளி கூடத்துக்கு பொயிடலாம். “என்னா...... அவுங்க ஜெபம் சொல்றப்ப சேசுவயும் மாதாவையும் நெனச்சுக்குங்க;அவுங்க சாமி பாட்டுப்பாடும் போது நம்ம சாமிய மனசுக்குள்ள நெனச்சுக்குஙக.... எல்லாம் சரியாயிடும்.”

நாநாவுக்கு எப்பயும் எதையாவது பாடிக்கிட்டே இருக்கணும். வாய் சும்மாவேஇருக்காது. அம்மாவுக்கும் பாட்டு மேல பிரியம். வாய்க்குள்ளயே தேம்பாவணி சொல்லிக்குவாங்க. சமயத்தில நேரங்கெடைக்கும் போது அம்மாவ ஒக்காரவச்சு எடங்கண்ணி ஞான சவுந்தரி டிராமா பாட்டெல்லாம் பாடச் சொல்லிக்கேட்போம். அம்மா ஆக்ஷனோட "அடி எங்கே ...என்னரும் புதல்வி.. ஞான சுந்தரி இருக்குமிடம்எங்கெ....?"ண்ணு பாடுனாங்கண்ணா டிராமா பாக்குற மாரியே இருக்கும்.

இப்படி இருக்கும்போது அக்கா ரெண்டு பேருக்கும் சீத்தாலட்சுமி பாடாசாலா பாட்டுக்கள் வாய் நெறயா ரொம்பி வழிஞ்சு அது எங்க எல்லார் வாயிலயும் நொழஞ்சுகிட்டதில ஆச்சரியம் ஒண்ணுமே இல்லண்ணுதான் சொல்லணும். இதுல இன்னொரு காரியமும் வேற இருக்கு. பொறந்ததிலேர்ந்து அண்ணய முட்டும் நாங்க கல்லேரிங்கிற தெலுங்கு ஊர்ல இருந்தாலும் தமிழ் பாட்டுகள் மட்டுந்தான் கேட்டிருக்கோம். அதுவும் அம்மா பாட்ட நெறையவே கேட்டிருக்கோம். (அம்மா ஊர்ல இருக்க சின்ன பிளளைக‌ளுக்கெல்லாம் சொல்லி குடுக்கிற மொத‌ பாட்டக் கேளுங்க.. "சிரிக்கும் ரோஜா.. சின்ன சேசு பார சிலுவையத் தோளில் சுமந்து முன்னே சென்றார். பாலர் நாமும் பாடசாலைக்குப் போகும் நம் சிலுவையைத் தோளில் சுமந்து பின்னே செல்வோம்.... கல கலா கல கலா கல கலா")
கல்லேரித் தாக்கம் எங்கள் ஆஞாவை நாநா என்று மாற்றியது மட்டுந்தான்.. சொல்லப் போனா கல்லேரித் தெலுங்குல பாட்டே கிடையாது அக்காக்கள் இப்ப பாடுவதோ நம்ம முன்ன பின்ன கேக்காத ஒரு மொழி!!!
எல்லோருக்கும் பேர் வைக்கும் இருதய அண்ணனுக்கு இந்த பாட்டுகள் வெறும் வாய மெல்றவனுக்கு அவுல்கெடச்ச‌மாதிரி ஆயிடுச்சு. (அழகான மார்கரீத் ரொசாரியோ என்ற என்பெயர் மாடுகடித்த டொடா புடா என்று உரு மாறி நிற்கும் எங்கள் அண்ணனிடம்!!!) அண்ணன் இந்த புதுமொழிப்பாட்டை ஓயாமல் கலாட்டாவுக்காக அழுத்தமாய் ‘கத்தம் கத்தம்’ என்று பாடிக் கொண்டேயிருந்தது சின்னதுகள் எங்கள் மனசில் நன்றாகவே பதிந்து போயிற்று. இந்த பாட்டுகளை இன்றைய தினம் ஞாபகப்படுத்தி எல்லோரையும் மகிழ்விக்கலாம் என எண்ணிய நான்
ஜெசி அக்கா ஜொஸ்பின் அக்கா இவற்றை முழுசாக ஞாபகம் வைத்திருக்கிறார்களா என முய‌ற்சி பண்ணினேன். ஆனால் எனக்கு ஞாபகம் இருப்பதுதான் மெஜாரிட்டியாய் தெரிந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்குப் பெரும் மகிழ்வே.

கதம‌ கதம் படாயதா
குஷி அதி உடாயதா
ஜிந்தகி கி சொமுகி
யே சவும‌ பயிலுடாயதா
அந்நேசெபார்புடாயதா (கதம் கதம்)

மனதில் நிற்கும் இன்னொரு சீத்தாலக்ஷ்மி பாடசாலா கொஞ்சம் பாட்டு

ஜெயத்தி ஜெயத்தி ஜெயத்தி பாரத மாதா
புதகீதா நிகிலமதா
வனநிறதா
நதஜன சுகிர்தா (ஜெயத்தி)

அகளிதகுணசீலா
அதிதயாளவாலா
ப்ரகடித்தசுபலோலா
பரமானந்த சமுதித்தா. (ஜெயத்தி)

அம்மா நாநா இருக்கும் போது அப்பாட்டுகள் அவ்வளவு சத்தமாய் வெளியேவராது.ஏற்கனவேதான் அம்மா சொல்லியிருக்கிறார்களே.....
அந்த சாமி பாட்ட பாடுவதாவது……. என ஏதாவது சொல்லிவிட்டார்கள் என்றால்...

ஹிந்தியெல்லாம் படித்தபிறகுதான் எங்களுக்குத்தெரிய வந்தது இதெல்லாம் சாமி பாட்டு அல்ல. மாறாக பாரத மாதா வணக்கம் என்று! இதே மெட்டில் இப்பாட்டுக்கள் தமிழில் வந்திருப்பதைப் பற்றி தம்பி பனி சொன்னது.


இந்த பாரத மாதா பாட்டுக்களையே இவ்விளம் தம்பதியரின் 50வது திருமண‌பொன்னாள் விழாவிற்கு என் எளிய பரிசாக சமர்ப்பிக்கிறேன்!

முன்னோடி

நான் ஓல்ட் எஸ்.எஸ்.எல்.சி யாக்கும்" என பெருமை பேசும் பெருசுகள் வாழ்ந்த காலத்திய கதை இது.
ஒரு சின்னப்பெண்ணின் உண்மைக்கதை!
1957ம் வருடம். அந்தப்பெண் எஸ்.எஸ்.எல்.சி அதாவது பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தது. (சிருசுகளுக்கு ஒரு சேதி: அன்றைய பதினோராம் வகுப்பு இன்றைய +ஒன்னுக்கு சமமல்ல.இந்த பதினோராம் வகுப்போடு பள்ளிப்படிப்பு முடிந்துவிடும்.அதற்கு மேலே படிக்கவேண்டுமென்றால் காலேஜில் போய் ப்ரீயுனிவர்சிட்டி எனப்படும் ஒருவருடப்படிப்பை முடிக்கவேண்டும்.அதை முடித்த பிறகுதான் எந்த பட்டப்படிப்புக்கும் செல்ல முடியும்.)

செலக்சன் இல்லாமலேயே கவர்ன்மென்ட பரிட்சைக்குப் போகும் இந்தக் காலமிலை அது. அதுவும் அம்மாங்க பள்ளிக்கூடத்தில படிக்கும் பொம்பள பிள்ளைக வயித்தில நெருப்பக்கட்டிகிட்டுதான் இருக்கணும். ஒட்ட வடிகட்டி நெறய மார்க் வாங்கும் பிள்ளைகளைமட்டும் அனுப்பி பள்ளிக்கூடத்தோட‌ நல்லபேர தக்க வச்சுக்கறது அவுங்களுக்கு கை வந்த கலை.அரை வருடபரிட்சையில் வாங்கும் மார்க்கை வைத்துதான் இந்த செலக்சன் கிடைக்கும்.
15வயதுப்பெண் ஜாலியானது. படிப்புக்காக அலட்டாத அப்பா அம்மா. "என்னாம்மா எல்லாத்திலயும் பாஸ் பண்ணிட்டியா?"
"பண்ணிட்டன் நாநா ஆனா கணக்கில மட்டுந்தான் 48 மார்க்."
"மத்ததெல்லாம் நல்ல மார்க்கா?"
"ஊம்….. நல்ல மார்க் நாநா."
"சரி சரி கணக்கில முட்டும் 35 வாங்கி பாஸ் பண்ணிடு. மத்ததெல்லாம் நல்லாப் பண்ணனும் சரியா?" இவ்வளவுதான் படிப்புகான அறிவுரை! இன்றைய தார் குச்சிகளையெல்லாம் அக்காலத்துப்பெற்றோர் அறிந்திருக்கவில்லை!! (கணக்குக்கு பயந்தே காலேஜுக்குப்போகாத அப்பா.... கணக்கில்லாமலும் காலேஜ் படிப்பு படிக்கலாம் என்றுசொல்லத்தெரியாத‌ சந்தோஷமான மக்கள்!)
அரைப் பரிட்சை எழுதி முடித்து கன ஜோராய் கிறிஸ்மஸ் கொண்டாடியாயிற்று. எடங்கண்ணியில் போய் ஜனவரி காப்பரிசியெல்லாம் தின்று தீர்த்தாகிவிட்டது.
லீவு முடிந்து பள்ளி திறந்த முதல்நாள் பதினோராம் வகுப்பு A செக்சன் விதுக் ... விதுக் கென்று ஒரேகும்பலாய் உட்கார்ந்திருந்தது. கீழே ஹெட்மிஸட்ரஸ் ரூமுக்கு போய்வரும் சந்தோஷ முகங்கள், கண்ணைக் கசக்கிக்கொண்டு வரும் முகங்கள் என‌ கலப்படியாக ஒரு அரங்கேறறம் அங்கு நடந்துகொண்டிருந்தது. லலிதாம்பிகை சிரித்த முத்தோடு வந்தாயிற்று. அகர வரிசைப்படி அடுத்தது அவள் டர்ன். அந்தோணியார் அண்ணனைத் துணைக்குக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டாள். மாடிப்படியில் எப்படி இறங்கி வந்தாள் என அவளுக்கே தெரியாது.
"குட்மார்னிங் ஸிஸ்டர்..." என்றைய விடவும் இன்று கொஞ்சம் கூடுதல் அழுத்தம்
ம்.. ம்... என்ற இரண்டு எழுத்தில் குட்மார்னிங் திரும்ப வந்ததில் அவள் கால்கள் பாதாளத்தை நோக்கி சர்ரென்று பாய்ந்தது... கைகள் இரண்டும் வெடவெடத்துப் போய்விட்டது.. நிச்சயமாக கணக்கில அவுட்டு என அவளுக்குத் தெரிந்து போயிற்று.
“என்ன மேத்ட்ஸ் பேப்பர் எப்படி பண்ணின?"
"நல்லா பண்ணியிருக்கேன் ஸிஸ்டர்" வார்த்தைகளின் தெம்பு மனசில் கடுகளவு கூட இல்லை. அவர்கள் முகத்தை லேசாக நிமிர்ந்து பார்க்கிறாள்..............ஒரு ஏளனச் சிரிப்போ?
ஏதோ யோசனையில் கொஞ்ச நேரம் இருந்த அவ்ர்கள்
"முடிச்சிட்டு என்னா பண்றதா உத்தேசம்..?" என்றார்கள்
தயக்கம் எதுவுமில்லாமல் கன கச்சிதமாக சொன்னாள் "டீச்சர்ஸ் ட்ரெயினிங் பண்ணப்போறேன் ஸிஸ்டர்".
"என்னா டீச்சர்ஸ் ட்ரெயினிங்கா …………..? ஒனக்கு அறிவிருக்கா என்ன..? மேல படிக்கமாட்டியா?"
"இல்ல ஸிஸ்டர் ட்ரெயினிங்தான் போவப்போறேன்.”

அந்த அம்மாவுக்கு சீத்பூத் என்று வாங்கியது. பெரிய கோபம் வருவதற்கு அது அறிகுறி என்று எல்லோருக்கும் தெரியும்.

“நான எதும் தப்பா சொல்லிட்டனா... ஒண்ணும் சொல்லிலியே... ட்ரெயினிங் போறேண்ணு தான சொன்னேன். டீச்சரா போனா நெறய பேருக்கு பாடம் சொல்லிகுடுக்குலாமுல்ல....” அவள் மனசுக்குள்சொல்லிக்கொண்டாள்
.. “ Unambitious ……. unambitious … these catholic girls are unambitious….”ஸிஸ்டர் இங்கிலீஷுக்கு மாறிவிட்டார்களானால் அவர்கள் கோபம் உச்சஸ்தாயியை அடைந்துவிட்டதாகப் பொருள். ஆனால் டீச்சர்ஸ் ட்ரெயினிஙகைப்பற்றி அவ‌ள் ரொம்பவே தெளிவாய் இருந்தாள்.
1. டீச்சர்ஸ் ட்ரெயினிங. ஸ்கூல்...... அப்போது திருச்சியில்தான் இருந்தது. அப்பைக்கப்போது கும்பகோணத்தில் இருந்து ஜாலியா திருச்சிக்குப் போகலாம். வ‌ருடத்தில் ஒரு தடவை கும்பகோணத்திலிருந்து நாலாவது ஸ்டேஷனான பாவனாசம் செபஸ்தியார் திருநாளுக்குப் போகும் போது " அடடா இன்னும் ஒரு ஸ்டேஷ‌ன் தள்ளி செபஸ்தியார் கோயில் இருக்கக்கூடாதா என்று மனம் ஏங்கும்..திருச்சி போவதற்கு கொறஞ்சது பத்து பதினாறு ஸ்டேஷன்கள் இருக்கும். என்னா ஜாலி....!
2.அவள் அக்கா அங்குதான் டீச்சர்ஸ் ட்ரெயினிங படித்தார்கள். தோழிகளோடு மலைக்கோட்டை சுற்றுலா, கல்லணை சுற்றுலா... இன்னும் பல அவுட்டிங்களைப்பற்றி அவர்கள் சொல்லும் கதை இவள் மனசுக்குள் ‘இது நமக்கும் வேண்டும்’ என்ற உறுதியை ஏற்படுத்தி விட்டிருந்தது.
3. மாமா வீடு திருச்சியில்…… மாமா பெண்கள் சுச்சி, பிபி இருவரும் ட்ரெயினிங் ஸ்கூலை ஒட்டிய பள்ளியிதான் படித்துக் கொண்டிருந்தார்கள். வெள்ளிக்கிழமை சாயங்காலமானால் ரெண்டு பேரும் ட்ரெயினிங. ஸ்கூல் கேட்டருகில் இவர்களை வீட்டிற்குக் கூட்டிப்போவதற்கு காத்துகிட்டு நிப்பாங்களாம். சனிக்கிழமை அக்கா தலை முழுகினவுடன் அத்தை பேன் பார்த்து தலை சீவி விடுவார்களாம். சொந்தகாரர்கள் வீட்டில் கலியாணம் என்றால் அத்தைதான் கலியாணப் பெண்களுக்கு அழ காக கை மேக் அப், கொண்டை எல்லாம் போட்டுவிடுவார்கள். பொண்ணறைக்குப் போய் அத்தை செய்யும் அந்த‌ வித்தையை வாயைப்பிளந்து கொண்டுபார்க்கும் கூட்டத்தில் இவளும் சேர்த்தி. அப்ப அக்காவுக்கு என்னா அழகா தல சீவி உடுவாங்க அவுங்க‌! ராத்திரியில் அக்கா பக்கத்தில் படுத்துக்கொள்ள மாமா பெண்களுக்கு நடுவில் (ரெண்டுமட்டுமல்ல, சின்னதுகளும் நெறய வீட்ல இருந்துச்சு) போட்டா போட்டியாய் இருக்குமாம். ஆ….. எவ்வளவு ஜாலி... ட்ரெயினிங்குக்கு ட்ரெயினிங்கும் ஆச்சு…… ஜாலியா ரெண்டு வருடம்.... இதவிட என்னா வேணும்...... இந்த சந்தடியிலும் அவள் மனசு இப்படி பட்டியல்போடுவதை நிறுத்தவில்லை.........
“ Go call your sister at once” “ ஒன் அக்காவப்போய் ஒடனே‌ கூட்டிகிட்டு வா”...... என்ற அதட்டல் கேட்டு ஒரே தாவில் அக்கா வகுப்பில் போய் நின்றாள் அவள். வெளியேயிருந்து சமிக்சையில
அவர்களைக் கூப்பிட்டாள். க்ளாஸ் பீப்பிள் லீடரிடம் வகுப்பை ஒப்படைத்து விட்டு வந்த அவர்களிடம் ஹெட்மிஸ்ட்ரஸ் அவர்களைக் கூப்பிட்ட விஷயத்தை எடுத்துச்சொன்னாள். "கணக்கில எதுவும் பெயில் ஆயிட்டியா?" கோபம் கலந்த வருத்தம்.
அக்கா கணக்கில் சூரப்புலி.
“பெயில் ஆவுற அளவுக்கு மோசமா நான்? “ அவள் ஒன்றும் பேசவில்லை
"குட்மார்னிங் ஸிஸ்டர்”
"குட்மார்னிங் …….ஒன் தங்கச்சிய அடுத்த வருஷம் என்னா படிக்க வைக்கறதா இருக்க‌?”
."இன்னம் ஒண்ணும் யோசன பண்ணுல ஸிஸ்டர் .....”
"ஆனா ஒன் தங்கச்சிக்கு ப்ளானெல்லாம் ரெடியா இருக்கே. ட்ரெயினிங் பண்ணப்போவுதாமே ட்ரெயினிங்…… ம்….. நீ என்னா பண்ற.. அவள காலேஜில சேக்கிற…...மேல படிக்க வைக்கிற..அவ நல்ல கெட்டிக்காரி என்னா... நம்ம கிறிஸ்துவ பிள்ளைகளெலாம் படிச்சு மேல வர வேண்டாமா...?”
“ கட்டாயம் ஸிஸ்டர் .. அப்பாவோட பேசிட்டு ஒங்க கிட்ட வந்து சொல்றேன் ஸிஸ்டர் “
நாநா அம்மா சொன்னர்கள் “ஸிஸ்டரே படிக்கவைக்க சொல்லிட்டாங்க இத காலேஜிலேயே சேத்துடலாம்.” அம்மாவுக்கும் இதில் ஏகமான சந்தோஷம், தான் படிக்காத படிப்பையெல்லாம் தன் பெண் பிள்ளைகள் படிக்கிறதே என்று.
இப்படியாக ஒரு சாதரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் கல்லூரிப்படிப்பு இருவரின் உந்துதலால் ஆரம்பமானது.
அந்த சின்னப்பெண் அடியேன்தான்! (மாகி) அந்த கட்டத்தில் சென்ட் ஜோசப்ஸ் பள்ளியில் வேலை பார்த்தது அக்கா அக்கா ஜொஸ்பின் தான்!

அந்த சந்தர்ப்பத்தில இறைவன் அவர்களை அங்கு வைத்து வீட்டின், இடங்கண்ணியின் முதல் பெண் பட்டாதாரியை உருக்கொள்ளவைத்தார். இளநிலை பட்டம் மட்டும் அன்று, பல கஷ்டங்களுக்கிடையே என்னை முதுநிலைப்பட்டம்வரை இட்டுச்சென்ற அருமை அம்மாவை,நாநாவை அன்போடு நினைத்துப்பார்க்கிறேன்.

என் பிரிய முன்னோடி அக்கா ஜொஸ்பின் தன் 50ம்தாவது கல்யாண நாளைக் கொண்டாடும் இவ்வருடத்தில் அவர்களுக்க்கு இதை பிரியமுடனும் நன்றியுடனும் உரித்தாக்குகிறேன். எங்கள் வீட்டுச்செல்வி மனக்கவலையெல்லாம் நீங்கி மகிழ்ச்சியில் திளைக்க எங்கள் உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியோடு வேண்டுதல்களும்!

Monday, 24 November 2014

எடங்கண்ணி எங்க எடங்கண்ணி

எடங்கண்ணி சனங்களுக்கு இனிப்பு மேல ஒரு தனி ஈடுபாடு! அதைக்கண்டவுடனேயே நாக்கிலே எச்சில் ஊறிப்போவும்…..

வெந்த சக்கரவள்ளிக்கிழங்கில நாட்டுசக்கரையையும் தேங்காப்பூவையும் சேத்துப் பெசஞ்சு உருட்டிக்குடுக்கிறது, அவுல ஊற வச்சு தேங்கா சகக‌ர போட்டு … இல்ல முழு பச்ச பயிர வறுத்து வேவ வச்சு வெல்லம் தேங்கா போட்டு இடிச்சு பயருருண்ட பண்றது.. இப்படியா சாயங்காலத் தீனிக்கு வெல்லத்திலயும் நாட்டு சக்கரயிலயும் பொரளல். இதெல்லாம் பண்ண முடியிலண்ணா இருக்கவே இருக்கு வறுத்த கள்ளையும் ஒரு துண்டு நல்ல வெல்லம் இல்ல பாதி கட்டி அச்சு வெல்லம்!

இந்த இனிப்பு பித்துக்கு ஒரு காரணமா இருக்கிறது சாமிக்குப்பேர் வக்கிற‌ சனவரித் திருநாளா கூட இருக்கலாம். அச்சிஷ்டவங்க பேரெல்லாம் போட்டு வரும் புது வருஷ காலண்டர்ல சனவரி ஒண்ணாந் தேதிக்குக் கீழ விருத்தசேதன திருநாள் என்று எழுதியிருக்கும். இன்னமுங்கூட இதன் உண்மையான அர்த்தம் பிடிபடுவதிலலை.ஆனா காப்பரிசித் திருநாள் என்றால் எல்லமே விளங்கிப்போகிறது.சாமிக்குப்பேர் வைக்கும் அந்த சனவரித் திருநாளுக்கு எடங்கண்ணியில பாத்திங்கண்ணா தினுசு தினுசா காப்பரிசி!

வீட்டுக்கு வீடு குண்டான்களில் கோயிலுக்குப் போவது மட்டுந்தான் சாமிக்கு! மற்றபடி மரக்கால் மரக்காலாய் கிளறப்படும் அரிசி வர்ரவக போறவக, அப்புறம் பிள்ளைவளுக் குத்தான். பச்சரிசி, பல்லு பல்லா பொரிச்ச தேங்கா, பொரிச்ச எள்ளு, பொட்டுக்கள்ள ஏலக்கா இதுகள முதிந்த வெல்லப்பாவுல போட்டு அர அண்டாவுல கெளறுறப்ப வர்ர வாசன இருக்கே… ம்ம்ம்.. இப்பவும் நாக்கில தண்ணி ஊறுது…… இந்த‌ காப்பரிசி கடக்கு மொடக்குண்ணு தனி ருசியாக இருக்கும். இத ஒரு வாரம் பத்து நா வச்சு கூட திங்கலாம்.. ஆனா அம்புட்டு நா பிள்ள குட்டி நாம உட்டு வச்சுருப்பமா என்னா?!……. இந்த காப்பரிசிய தூக்கி அடிக்கிற மாரி அம்மாச்சி பிள்ளைவளுக்குண்ணே ஒரு ஸ்பெஷல் காப்பரிசி பண்ணுவாங்க… புது நெல்லக் குத்தி அந்த அரிசிய ஊற வச்சு அதுல பல்லு பல்லா தேங்கா வெள்ள சக்கர போட்டு……. அதுல ஒரு வாய் அள்ளிப்போடு ஜிவ்வுண்ணு இழுத்தா.. தேங்கா பால் குடிச்ச மாரி அந்த வெள்ள சக்கர, புது பச்சரிசி ருசி….அடடாடா…!!!.

இப்டி வருஷ மொத நாளே வெல்லத்துல முழுவி எழுந்திருச்சோம்ணா வருஷம் முழுவதையும் பத்தி என்னத்த சொல்றது….. வருஷ கடசில வரும் கிறிஸ்மஸ்ஸப்பத்தி கேக்கவே வேணாம்…. இப்பைக்கு கிறிஸ்மஸ்ஸிற்கும் பேர் வக்கற திருநாளுக்கும் எடயில வர்ர பாயாசப் பாயாசப் பண்டிகையைப்பத்தி சொல்றேன் கேளுங்க‌

ஒங்களுக்கு கொஞ்சம் பைபிள் தெரிஞ்சிருந்ததுண்ணா இந்தக்கதயும் கட்டாயம் தெரிஞ்சிருக்கும். மூன்று ராசாக்கள் ஏரொது ராசா கிட்ட போயி சாமி பொறந்திருக்க வெஷயத்த சொல்லிட்டு சாமியப்பாக்க‌ கெளம்பி பொயிடுறாங்க. ஏரோது அரசனுக்கு ஒரே பொறாம. எனக்கு மேல ஒரு அரசன் பொறக்கிறதா………… ம்ஹூம் கூடவே கூடாது… இத மொளையிலயே கிள்ளி எறிஞ்சிரணும்ணு முடிவு பண்ணி தன் படை வீரர்களுக்கு ஒரு உத்தரவு போடுறான். நாடு பூராவும் இருக்கிற மூணுவயசுக்கு உட்பட்ட எல்லா ஆண் கொழந்தைகளையும் கொண்ணு போடணும்ணு சொல்லிப் புட்டான் அந்த………இதுக்குள்ள சாமிக்கு சம்மனசு சேதி சொல்லி மாதா சூசையப்பரு சேசு எல்லாரும் தப்பி ஓடிப்பொயிடுறாங்க. இந்த கொழந்தைக… ஞாபகமா கொண்டாடுற திருநா தான் மாசில்லா கொழந்தைக திருநா.

சென்னையிலெல்லாம் அண்ணைக்கு கோயில்ல கொழந்தைகளுக்குண்ணு பூசையெல்லாம் வக்கிறாங்க‌ மந்திரிக்கிறாங்க.. போட்டியெல்லம் வச்சு ப்ரைசெல்லாம் குடுக்கிறாங்க.. ஆனா எடங்கண்ணி ஸ்டைலே தனிதான். அதுலயும் இத கொண்டாடுர‌து அம்மாச்சி வீட்லமட்டுந்தான். டிசம்பர் 28ந் தேதி சாயங்காலம் அம்மாச்சி வீடு களை கட்டிவிடும். கூடத்தில போடுர சாம்பிராணிப் பொக வீட்டையே ரொப்பியிருக்கும்.திரு இருதய படத்துக்கு பாப்பாத்தி அத்தை, வீட்ல பூத்திருக்க அரளிப்பூவ கட்டிப் போட்டிருப்பாங்க. அம்மாச்சி பக்தியா மெழுகுவத்திய கொளுத்தி வச்சுட்டு திரு இருதய ஜெபம் சொல்லி முடிச்சுட்டு மாசில்லா கொழந்தைக பிரார்த்தன சொல்லும் போது கண்ணில தண்ணி வந்துடும்… … அம்மாச்சி அவ்வளவு உருக்கமா ஜெபம் சொல்லுவாங்க. ஜெபத்தின் ஏற்ற இறக்கம் என்னை மயக்கிடும்.”சகல….ஜாதி….. ஜனங்களுக்கும்… தேவரீர்………. ராஜாவாய்…….. இருப்பீராக” ண்ணு அவங்க சொல்லும் போது அப்புடியே அம்மாச்சிய கட்டிப்புடிச்சுகிட்டு கண்ண மூடிக்கிணும் மாதிரி இருக்கும்… ஜெபம் முடிஞ்ச ஒடன பீடத்துக்கு கீழ இருக்கும் பாயாசப்பானய அம்மாச்சி தொறப்பாங்க. சுண்ணாம்பால பான வெளிய பூரா சிலுவையும் ரோஜாப்பூவும் மாத்தி மாத்தி போட்டிருப்பாங்க. அடுப்பில வெந்து போன சிலுவ இளங்கருப்பா சூடா கெட்டியா இருக்கும். பக்கத்தில போய் நிண்ணு யாரும் பாக்காத மாதிரி தொட்டுப்பாப்பது ஒரு சுகமாத்தான் இருக்கும். நம்ம அம்மாச்சி செஞ்ச அரிசிப்பாயசத்த ஊர்ல இருக்க எல்லாரும் குடிக்கப்போறாங்க என்பதிலும் ஒரு சின்ன பெருமை கலந்த சுகம்தான்!!. தெருவில இருக்கறவங்க கொண்டார பித்தள தூக்கு பறங்கி லோட்டா, ஈயச், சொம்பு. சட்டி எல்லாத்திலயும் அம்மாச்சி பாயாசத்த‌ சரியா பங்கிடு பண்ணுவாங்க‌.

பச்சரிசிய திருவையில ரவா பதத்தில ஒடச்சு அண்டாவுல தண்ணிய கொதிக்கவுட்டு அதில இந்த அரிசி ரவாவ போட்டுக்கிண்டி வெந்தவொடன வெல்லத்தயும் போட்டு அப்பறம் பல்லு தேங்கா ஏலக்கா தட்டிப்போட்டு எறக்கி வப்பாங்க. சின்ன பிள்ளைக கூட இத சந்தோஷமா குடிக்கலாம். மாசில்லாக் கொழந்தக பாயாசந்தான்இது ! சட்டுணு செரிமானம் ஆயிடும்.

‌ஆஞிம்மா வீட்டிலும் சக்கர வெல்லத்துக்கு கொற கெடயாது. ஆஞிம்மா வீடும் அம்மாச்சி விடும் ரெண்டு தப்படி தூரந்தான்.அதனால ரெண்டு வீட்டு தீனியும் எங்களுக்கு அத்துப்படி!! ஆஞிம்மா வீட்ல பெசலா பிள்ளைவளுக்கு தீனியென்றால் புழுங்கலரிசியைத் தேங்காயோடு சேர்த்து மைய ஆட்டி, ஒண்ணுக்கு நாலு தண்ணிய கொதிக்க வச்சு மாவ அதில கொட்டிக் கெளரி வெந்தவொடனே வெல்லத்த போட்டுக் கிண்டி கெட்டியா வரும்போது தட்டுல‌ ஊத்தி வச்சிட்டு செத்த நேரங் கழிச்சு தோசைத்திருப்பி காம்பாலா கோடு போட்டு பாளம் பாளமா பேத்து எடுத்து திங்க குடுப்பாங்க. வெண்ணெய்புட்டு என்று நாங்கள் சொல்லும் இந்த தீனியை எங்கள் மெக்கேல்பட்டி சொந்தங்கள் கொஞ்சங்கூட கூச்ச நாச்சமில்லாமல் “அரிசி அளுவா” என்று அழகான இந்த அயிட்டத்தை கொலை செய்துவிடும்!!! “வாலப்பலத்தோல்ல வலுக்கிவிட்டு உலுந்து பில்ல வாலு வாலுன்னு கத்துதுண்ணு”சந்தோசமா சொல்றவங்க அவுங்க! லானா ளாணாவைக் கொலை செய்யும் அவுங்க கோடையில எடங்ஙண்ணிக்கி வரும்போது உண்டு இல்லண்ணு ஆக்கிடுவோம்… மொழித்திமிரு.அதுக வாய் தொறக்கும் போதெல்லாம் நக்கலா எங்க கிட்ட இருந்து கர பொறளும்!!!அதுகளும் எடங்கண்ணியில‌ கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கும். ஆனா சும்மா சொல்லக்கூடாது ….. மெக்கேல்பட்டி ஆளுக வேலயில சூரிக…! நாங்கள்ளாம் சாமான் வெளக்கறது கொள்ரதுண்ணா டிமிக்கி எப்டிடா குடுக்கலாம்ணு யோஜன பண்ணுவோம். மட்டியூராயிய தாஜா பண்ணி அது தலயில கட்டி விடலாமாண்ணு புத்தி குறுக்கு வழியில போவும். ஆனா சிந்தாத்திரி அத்த பொண்ணு டில்லி அத்தாச்சி இருக்கே ஒரே சுரு சுருதான்!!!! அழகான லில்லிங்கிற பேர யார் கொல பண்ணுனதுண்ணு தெரியில… நிச்சயமா நாங்க எடங்கண்ணி காரங்க பண்ணுல!!! அது கெடக்குட்டும் பேர்ல என்னா இருக்கு.. ?! டில்லி அத்தாச்சி எல்லாரயும் விட எங்க மேல ரொம்ப பாசமா இருக்கும். சாமான்கள அள்ளிப்போட்டு. நிமிஷத்தில பள பளண்ணு தேச்சிடும். அப்ப எல்லாமே பித்தள பாத்திரந்தான். அதுல ஈயம் பூசித்தான் பொழங்குவாங்க..( கொழம்பெலாம் மண்ணு சட்டியில) நாம அந்த குண்டான்கள ஏனோதானோ யாருக்கு வந்த விருந்தோண்ணு அரச பொரசலா தேச்சு வச்சுட்டு எப்படா சமயம் கெடக்குமுண்ணு சொங்கு ஆட, பல்லாங்குழி ஆட, பாண்டி ஆட, இல்ல கொறஞ்ச பட்சம் கொளத்தில கும்மாளம் போட கெளம்பிடுவோம். ஆனா அத்தாச்சி செய்யிற வேலயெல்லம் நரூசா இருக்கும். யாரையும் எதிர்பார்க்காது. பித்தள பாத்திரமெல்லாம் பவுனுமாதிரி பள பளண்ணு மின்னும்..எப்பயும் ஒரு சிரிச்ச மூஞ்சி…..கொழைவுப்பேச்சு.. எங்களுக்கெல்லாம் அது பெரிய பிரண்டு…..

அந்த அன்புக்காத்தான் ஜொஸ்பின் அக்கா சேவியர் அத்தான் தங்கள் பெண் ரீத்தாவை டில்லி அத்தாச்சி பையன் பெனடிக்கு கல்யாணம் செய்து வைத்தார்களோ! பெனடிக்கும் அச்சாய் அம்மாவின் சிரிப்பு.அருமை அம்ரீஷும் ஸ்டெஃபியும் வழிவாரிசாக அந்த அருமையான பண்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்!! வாழ்க வளர்க!!!.

லீவு முடிஞ்சு ஊருக்கு கெளம்பறப்ப ஆஞிம்மா பொருவிளாங்காய் உருண்டை புடிப்பார்கள்.அரிசிய வறுத்து பொரியரிசியாக்கி அத திருவையில அரைச்சு, வெல்லம் முதிர் பாவுபதம் வரும்போது அந்த மாவைக்கொட்டி கெளரி உருண்டை பிடிப்பார்கள். இந்த உருண்டையில பொதுவா பொட்டுக்கள்ள இல்ல வறுத்த தேங்காப்பல்லு போட்டு உருட்டுவாங்க.ஆனா கடல மண்டிகெடக்கும் எடங்கண்ணியில மணலப்போட்டு கடலய முந்திரி பருப்பு பதத்தில வறுத்து தோலு, மொள போவ (மொள அம்புட்டும் பித்தம்!) அடிச்சி பொடச்சி பிடிக்கும் இந்த உருண்டையின் ருசி… இப்பகூட நாக்கில எச்சிதான் ஒழுவுது…! ஆனா இந்த பொருவிளாங்கா உருண்ட நம்ம பல்லுக்கு மிலிட்டரி ட்ரெயினிங் மாதிரி………..! இத ஒரே கடியில யாராச்சும் ரெண்டா ஆக்கிட்டா பல்லுக்குண்ணு ஒரு ஒலிம்பிக் இருந்துதுண்ணு வச்சுகுங்க அவுங்களுக்கு தங்க‌ மெடல் தான். மொள்ள நாக்கில ஊற வச்சு சின்ன சின்ன சில்லா கடிச்சு சொவச்சு சாப்பிடறதுதான் மொற. இதுக்கே வாயில கொரக்கு வலி கண்டு போயிடும் ஆனா இந்த பொரிவிளாங்காய் உருண்ட மோகினிப் பிசாசு மாதிரி… ருசி கண்டவங்கள லேசில உட்டுடாது…!!

மொசப்பந்துண்ணு ஒரு பலகாரம். இதுல எங்க சின்னம்மாவ யாரும் அடிச்சிக்க முடியாது.உளுந்த ஊற வச்சு கொஞ்சம் உப்பு போட்டு பூக்க பூக்க ஆட்டி அத எண்ணையில கிள்ளி போட்டு பொரிச்சு எடுத்து வச்சுகிட்டு ஆட்டுக்கலில தேங்காப்பூவைபோட்டு ஆட்டி பாலப்புழுஞ்சு, வெள்ள சக்கரய போட்டு அரிச்சு வச்சுருக்க கிள்ளுகள அதில அள்ளிப்போட்டு ஊற வச்சா வெள்ளவெளேர்னு மொசலாட்டம் கெளம்பி நிக்கும். இந்த பலகாரத்தோட இயற்பெயர் சுழியம். அது யாரோட கற்பனையிலோ உருக்கொண்டு எடக்கண்ணி வீடுகளில அழகான மொசப்பந்தாகி நிக்குது.

அம்மா அருமையா தோப்பம் சுடுவார்கள். தோப்பத்துக்குள்ள இருக்கும் கடலப்பருப்பு பிசின் மாதிரி ஆவாம கரெக்டா வெந்திருக்கும். வெல்லம் கொறயாவும் இருக்காது கூடவும் போவாது. இதோட தேங்காப்பூவையும் சேத்து பெசஞ்சு, மைதா மாவைத் தண்ணியா கரச்சுகிட்டு இந்த உருண்டய நனச்சுப் போட்டா தோப்பம் தட்டு நெறயா செத்த நேரத்துல குமிஞ்சிடும்.

அரிசி உளுத்தம்பருப்பு கொஞ்சம் துவ‌ரம் பருப்பு இதுகள ஊற வச்சு வெல்லம் தேங்கா பெரிய ஆட்டுக்கல்ல போட்டு ராமசாமி (அம்மாச்சி வீட்டு ஆஸ்தான சமயல் அசிஸ்டெண்ட்!) வேர்வையும் விருவிருப்புமா ஆட்டுவாரு.என்னா பலகாரம்ணு பாக்கிறிகளா. எடங்கண்ணியில எல்லார் வீட்லயும் சுடுற குழி பணியாரத்துக்குத்தான்.

‘என்னா மாகி நல்லாருக்கியாண்ணு ‘சிரிச்சுகிட்டே கேப்பாரு… ‘ம்..நல்லாருக்கேன் ராமசாமிண்ணண்ணு’ சொல்லிக்கிட்டே ஆட்டுகல்லுல கெடக்கிற மாவ லேசுபாசா நக்குறது, போவ வர உப்பு பாக்கிறது (வெல்லத்தில என்னா உப்பு பாக்கிறது!!!) கண்டுகாணாம இப்டி மாவ அபேஸ் பண்ணுவோம். அம்மாச்சி வீட்ல பாப்பாத்தி அத்தை இதெல்லாம் கண்டுகவே மாட்டாங்க. மாவாத்தின்னாலும் பிள்ளைகதான்….. பணியாரமா தின்னாலும் அதுகதான். பிள்ளக தின்னு மீதிய சுட்டா போதும். அம்மாவுக்கு அதெல்லாம் ஆவாது. எதுலயும் ஒழுங்கு வேணும் அவுங்களுக்கு. எல்லாத்தயும் சுட்டு எல்லாருக்கும் சமமா பங்கு வைக்கிறதில அம்மா கில்லாடி! அதுலயும் நாங்க கீழ்க்கண்ணால பாத்துக்குவோம் யார் யாருக்கு பெரிசா போயிருக்குண்ணு…..

வெல்லம் போடாம ஒரு அயிட்டத்த சுட்டு குழிப்பணியாரம் சாப்பிடுங்கண்ணு சென்னையில ஒருவிருந்தில குடுத்தாங்க; எனக்கு ரொம்ப ஏமாத்தமா போச்சு. வெல்லம் போட்டு சுடுறதுதான் குழிப்பணியாரம். வேற பேச்சே கெடயாது.(இது எடங்கண்ணி ஜனங்களின் மாற்ற முடியாத தீர்ப்பாக்கும் !)

வீட்ல ஜெசி அக்காவுக்கும் ஜொஸ்பின் அக்காவுக்கும் பாபபாத்தி அத்தண்ணா உயிரு. ஏண்ணா பிள்ளைக மேல அவுங்களுக்குப் பித்து. அக்கா ரெண்டு பேரும் சமயல் கட்டுக்கு வந்துட்டா போதுமாம்.. வாய் நெறயா ஓவல் அள்ளி கொட்டிடுவாங்களாம். எடங்கண்ணியில அந்த காலத்தில ஓவல்டின்னாண்ணு நீங்க ஆச்சரியப்படலாம். அம்மாச்சி வீட்ல மாமாக்களுக்காக எப்பயும் அது இருக்குமாம். ஜெசி அக்காவும் ஜொஸ்பின அக்காவும் தான் அம்மாச்சி வீட்டுச் செல்லப்பிள்ளைகள். பின்னால வந்த இருதய அண்ணனும் நானுங்கூடத்தான். ஜனவரி அண்ணைக்கு அம்மாச்சி வீட்டு சட்ட பாவாடதான் எங்களுக்கெல்லாம். டெய்லர் பால கிருஷ்ணனுக்கு எங்க அளவெல்லாம் அத்துப்படி. ஜனவரி அண்ணைக்கு முந்தின நாள் வளயக்காரர் அம்மாச்சி வீட்டுத் திண்ணையில வந்து உக்காந்துக்குவார்.

தாத்தா எங்களையெல்லாம் வரச்சொன்னதா ஆஞிம்மா வீட்டுக்கு ஆள் வரும். அம்மா, வீட்லேர்ந்து போம்போதே, ‘ரொம்பல்லாம் போட்டுக்காதிங்கண்ணு’ ஒரு எச்ச‌ரிகை பண்ணித்தான் அனுப்புவாங்க.

‘பிள்ளக அனாவசியமா எதுக்கும் அவலாதியா பறக்கக்கூடாது’ எதுலயும் நிதானம் வேணும் (அம்மாவின் பாலிசி நம்பர்1)

ஆனா தாத்தா அம்மாச்சி செல்லத்தில அம்மாவின் வார்த்தைகள் செல்லுபடியாகமப்போயிடும்! தாத்தா அந்த சின்ன திண்ணையில உக்காந்துகிட்டு “என்னா வளயல் புடிக்குதோ அத எல்லாத்தயும் போட்டுக்குங்கண்ணு” சொல்லுவாங்க. அப்பறம் எங்கள யார் புடிக்க முடியும் சொல்லுங்க‌?!

இன்னம் நெறய பலகாரங்கள் இருக்கு. எங்களப்பத்தி ஒரு வார்த்த கூட சொல்லுலியேண்ணு அதுக‌ சொல்றது காதில கேக்குது. இன்னொரு சமயம் இன்னும் நெறய பலகாரங்களோட இன்னும் சுவாரசியமான‌ நெறய கதைகளோட‌ சந்திப்போமே.

ஜொஸ்பின் அக்கா அத்தான் அவர்களது 50வது ஆண்டு விழாவில் இந்த அருமையான சந்தோஷமான விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி!


வாழ்க தம்பதியர்..!வளர்க அவர் தம் மக்களும் சுற்றமும்!!!!