எல்லோருக்கும் வந்த அந்த அரிப்பு தட்சிணாமூர்த்திக்கு
வந்ததில் நான் ஆச்சரியப் படவில்லை. அந்த மலேசியா அம்மா வந்தாலும் வந்தார்கள், ஒண்ணு
கிடக்க ஒண்ணு மலேசியா வருகிறாயா என அவரிடம் பேசிவிட்டுப்போனாலும் போனார்கள், அதிலிருந்து
தெட்சிணாவுக்குத்(அவரை செல்லமாக இப்படித்தான் நாங்கள் கூப்பிடும் பழக்கம்) தரையில்
கால் பாவவில்லை.
கதை இப்படித்தான் தொடங்கியது.
மலேசியாவிலிருந்து வந்த ஒரு அம்மா தெட்சிணாவின்
கடையைத்தேடி வந்து இரண்டு டஜன் ப்ளவுஸ் தைத்துக் கொடுக்கச்சொன்னார்.லோக்கல்களாகிய எங்களுக்கு
ஆறு மாசம், அதற்கு மேலே சிரிப்போடு சாக்குப்போக்கு என்று சமாளிக்கும் தெட்சிணா ஆறே
நாட்களில அவ்வளவு ப்ளவுஸ்களையும் அச்சாகத் தைத்து அவர்களுக்கு டெலிவரி பண்ணி விட்டார்.
அந்த அம்மாவுக்கு தெட்சிணாவின் பிட்டிங் ரொம்பவே பிடித்துப்போயிற்று.(அதிலென்ன குறை?.
அதனால் தானே நாங்கள் அவ்ரிடம் ஆறு மாசங்கூட தவமிருக்கத் தயாராக இருக்கிறோம்!!!) சூரிதார்
செட்டு அரை டஜன் கொடுத்து தைக்கச்சொன்னார்கள்.அதே ஸபீட்! அதே பிட்டிங்!! இவ்வளவு அழகான
கட்டிங்கா!! அந்த அம்மா அசந்துதான் போனார்கள்.
மலேசியாவில் செல்வாக்குள்ள குடும்பமாம் அவர்களது.
அவர்களுக்கு ஒரு யோஜனை... தெட்சிணாவை மலேசியாவிற்கு அழைத்துக்கொண்டால் என்ன? தனக்கும்
பிஸினஸ் செய்ய ஒரு சந்தர்ப்பம். ஒரு நல்ல டெய்லருக்கும் வெளிநாட்டில் சம்பாதிக்க ஒரு
வாய்ப்பு கொடுத்தமாதிரி இருக்கும். தெட்சிணாவின் கைத்திறனை சிலாகித்த பிறகு மெள்ள இந்த
வாய்ப்பைப்பற்றி அவரிடம் கூறினார்களம். தெட்சிணாவுக்குத்தலைகால் புரியவில்லை. அந்தம்மா
பார்க்கத நேரமாய் அழுத்திக்கிள்ளிப்பார்த்துக்கொண்டார்.உடம்பு பூரா சிலிர்த்தது. யாரும்
பார்க்கமுடியாத மனசு மட்டும் வானத்திற்கும் பூமிக்கும் ஸ்பிரிங் குதியாய் குதித்துக்கொண்டிருந்தது.இவ்வளவு
சுலபமாய் வெளிநாட்டுக்குப்போகமுடியுமா என்ன? வியந்து போய்விட்டார் தெட்சிணா!!! முதல்
வேலையாக பாஸ்போர்ட்டை ரெடிபண்ணியாகவேண்டும். "ந்ம்ம கஸ்டமர் ஒரு அம்மா பாஸ்போர்ட்
ஆபீஸிலே பொஸிஷன்ல இருக்காங்க. கட்டாயம் நமக்கு சட்டுணு வாங்கிக் குடுத்திருவாங்க"
மனசு கணக்குப் போட்டது.
மலேசியா போனவுடன் பேப்பரெல்லாம் ரெடி பண்ணி டிக்கெட
வாங்கி அனுப்புவதாக சொல்லிவிட்டு அவர்கள் போனாலும் போனார்கள்,தெட்சிணாவின் காலைத்தூக்கம்
கெட்டுப்போய்விட்டது." ரெண்டரை மணி நேர வித்தியாசமாமில்லமெட்ராசுக்கும் கோலாலம்பூருக்கும்…….?
காலமறயே எந்திரிச்சு பளகிக்கணும் இல்லாட்டி வேலையில ஜால்ஜாப்பு ஆயிப்போயிரும்."
ஆறரைமணிக்கு வீட்டு அம்மாவின் சுப்ரபாதத்தோடு
கண்விழிக்கும் நம்ம தெட்சிணா காலை நாலு மணிக்கெல்லாம்
கோலாலம்பூர் வாசியாகி விட்டார்.
கனவவெல்லாங்கூட மலேசியப்பெண்களுக்கு ப்ளவுஸ் தைப்பதாகவும்
அந்த அழகில்அவர்கள் உருகிப்போய் நிற்பதாகவும் ஆகிப்போயிற்று.
மலேசியாவுக்கு அம்மா போய் நாட்கள் ஆகிவிட்டன. இவருடைய
பாஸ்போர்ட்டும் கைவசம் வ்ந்தாயிற்று.தெட்சிணாவுக்குஇருப்பு கொள்ளவில்லை. தைக்கிறதில்
ஈடுபாடு இல்லை. எல்லா சாமியையும் வேண்டிக்கொண்டார். மலேசியா முஸ்லிம் ஊராமே.... எதற்கும்
இருக்கட்டும் என்று ஹிக்கின்ஸ்பாதத்திற்கு பக்கத்தில் இருக்கும் தர்காவிலும் வேண்டிவிட்டு
வந்தார்.நேர்த்திக் கடன் செய்ய சத்தியம் பண்ணிக்கொடுத்தார்.
நாங்கள் கடைக்குப்போகும்போதெல்லாம் மலேசியாவையும்,
அம்மாவையும் பத்திய பேச்சுத்தான்."என்ன தெட்சிணா எங்கள அம்போண்ணு உடுறிங்கள்ளே"
ண்ணு யாராவது கேட்டால் "தம்பி கடையைப்பாத்துக்குவான் அம்மா." ண்ணு மப்பாக
பதில் கொடுத்தார். தெட்சிணாவின் தம்பி கடையில் காஜாப்பையன் அதிலும் ஒரு சோம்பேறி காஜாப்பையன்
என்பது எங்களுக்கும் தெட்சிணாவுக்கும் தெரிந்த விஷயந்தான். இவருடைய மலேசியாக் கனவில்
காஜாப்பையன மாஸ்டர் டெய்லராக ப்ரமோஷன் ஆகிவிட்டார்!!
கண் பார்த்தால் கை செய்ய வேண்டியதுதானே என்று அவர்
நினைத்திருக்கலாம். கடல்ல தூக்கி உட்டெறிஞ்சா களுத நீஞ்ச கத்துக்க வேண்டியதுனே. நால
தப்பா தச்சா அஞ்சாவது சரிப்பட்டுதானே வரணும்.
“படு… நல்லா படு… தனியா கெடந்து அல்லாடினாத்தான்
காசோட அரும தெரியும் ஒனக்கு” கத்துகாத சோம்பேறி தம்பி மேல என்ற ஒரு பாசமான எரிச்சலாகவும்
இருக்கலாம். எதுவாயிருந்தாலும் மொத்தத்தில் தெட்சிணா எங்களைப்பலியாடாக ஆக்குவதற்கு
ஒரு க்ஷணம் கூட தயங்கவிலை.
சமயத்தில் "அந்த அம்மா சும்மா பம்மாத்துக்ககாவது
சொல்லியிருக்குமோ?"ண்ணு தெட்சிணா மனசுக்குள்ளே ஒரு பிடுங்கல் வந்துவிடும், ஆறு
மாசங்கள் ஆகியும் தெட்சிணாவின் மலேசியப்பயணம் கெணத்தில் போட்ட கல் மாதிரிதான் கெடந்தது.
சரி கடவுள் வுட்ட வழியென்று பழயபடிக்கு எங்கள்
ப்ளவுசுகளையெல்லாம் பொறுப்போடு தைக்க ஆரம்பித்தார். மலேசியா, மலேசியா அம்மா பேச்சு
அறவே நின்று போய்விட்டது. " களுத ஒண்ணுமில்லாததுக்கு விடியலக்கால தூக்கத்த வேற
கெடுத்துக்கிட்டு கெடந்தேன் பாரு. என் புத்திய சோட்டால அடிக்கிணுமுண்ணு பழயபடிக்கு
இழுத்து போர்த்திகிட்டு தூங்கவும் ஆரம்பிச்சிட்டாரு. வீட்டுக்கார அம்மாவின் சுரபாதத்திற்க்குக்கூட
இப்ப அசஞ்சு குடுப்பதில்லைண்ணு காத்துல எங்களுக்கு சேதி வந்துச்சு. இப்போது அவர் எரிச்சல்
பூரா தம்பி மேல்தான் துப்புகெட்டவனா கெடக்கியே என்று கன்னாபின்னவெண்று எங்கள் எதிரிலேயே
கத்த ஆரம்பித்துவிட்டார், இது எவ்வளவு தூரம் போய்விட்டது என்றால் "பாவம் தெட்சிணா...
சரிதான் உடுங்க.... கொஞ்ச நாள் ஆனா கத்துக்குவான்... ஒங்க தம்பிதானே ஒங்க கைத்தெறன்
அவருகிட்டயும் இருக்காதா என்ன?" என்று நாங்கள் தம்பிக்காக வக்காலத்து வாங்க வேண்டிய
நிலமயாய் ஆகிவிட்டது.
இப்படியாக எங்கள் தையல் வாழ்க்கை சுமுகமாக ஓடிக்கொண்டிருந்த
பொழுதில் அடித்தது யோகம் தெட்சிணாவுக்கு. ஆமாம் உங்கள் நினைப்பு சரிதான். அந்த மலேசியா
அம்மா சென்னைக்கு வந்திருக்கிறார்களாம் . பிஸினசைத்தொவங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய
இவ்வளவவு நாள் ஆகிவிட்டதாம். வந்தவர்கள் தேவையான பேப்பர்கள் ஒர்க் விசா எல்லாவற்றையும்
கையோடு கொண்டு வந்திருந்தார்கள்.தெட்சிணாவுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஒரே
வாரத்தில் விமானப்பயணம்.அந்த அம்மாவும் அவரோடே பயணம் செய்கிறார்களாம்.முதல் முறை விமானத்தில்
பயணம் செய்பவர்களுக்கு விமான நிலையத்தில் போய் என்ன செய்ய வேண்டும், விமானத்தில் என்ன
செய்ய வேண்டும்,எந்த பேப்பரையெல்லாம் பில்அப் செய்யவேண்டும்,எப்படி சீட்பெல்ட் போடவேண்டும்
என்ற கிலியே முதல் பயணத்தின் சந்தோஷத்தையெல்லாம் தின்றுவிடும். “இந்த தொந்தரவெல்லாம்
இல்லாமல் துரும்பு ஒன்றைக்கூட நகர்த்தாமல் சுகவாசியாய் இவர் போறார் பாரு" ப்ளவுஸ்
அளவில் பாதிக்கப்பட்ட நாங்கள் பாதி விரக்தியும் பாதி கோபமுமாய் பொருமித்தள்ளி விட்டோம்.
தெருவிலே அக்கம் பக்கத்திலே தெட்சிணா இல்லாமலேயே
கலியாணங்கள், காட்சிகள் நடந்து முடிந்தன. கிறிஸ்மஸ் நடுச்சாம பூசை முடிந்து இரண்டு
மணிக்கு வீட்டிற்கு வருகையில் ஒரு அப்பாலஜி கலந்த சிரிப்போடும் தைத்த துணிமூட்டையோடும்
யாரும் காத்துக்கிடக்கவில்லை.புது ச்சட்டை போட்டுக்கொண்டு கோயிலுக்குப் போகமுடியவில்லையே
என்று பிள்ளைகளுக்கு இருந்த வருத்தம் தெட்சிணாவைப் பார்த்தவுடன் சாண்டாகிளாசே தரிசனம்
தந்துவிட்டதாக போட்ட அந்த குதியாளம் இப்போது இல்லை
அப்படி இப்படியாக வருடங்கள் ஓடிவிட்டன. ஒரு நாள்
மைலாப்பூரின் கொடுக்கி போடும் பூ விற்பவர்களைக் கடந்து ராசி அருகே செல்லுகையில்
"அம்மா சவுக்கியங்களா?" என்ற தெட்சிணாவின் குரல் என்னை அழைத்தது.
"என்ன தெட்சிணா லீவுக்கு வந்திருக்கிங்களா?
நல்லா இருக்கிங்களா? "ஒங்க புண்ணியத்துல நல்லாருக்கமா. அந்த அம்மா என்ன கூட்டிகிட்டு
போய் கோலாலம்பூருல நம்ம மக்க இருக்க பக்கம் நடு செண்டரா கட போட்டாங்கம்மா . கொஞ்ச கொஞ்சமா
கடைக்கு நல்ல கூட்டம் வர ஆரம்பிடுசிம்மா.
"ஒங்க தையல் மாதிரி எங்க கெடைக்குங்க? சரி,சரி
போய் நல்லா படியா சம்பாரிச்சுகிட்டு சீக்கிரம் ஊர் பக்கம் வந்து சேருங்க" என்றேன்
நான்.
“அம்மாகிட்ட இன்னொண்ணும் சொல்லுணும்மா. வரும்படி
நல்லாத்தான் வருது. ஆனா ரெண்டு பேரு பங்கிட்டுக்கறதில கையில கணிசமா தொக நிக்கமாட்டங்குது.
அம்மாகிட்ட சொல்றதல என்னா? இங்க சம்பாரிச்சதுகூட அங்க இல்ல. இதுக்குண்ணு ஊடு வாசல்
மக்க மனுசருண்ணு எல்லாத்தையும் உட்டுபுட்டு அங்க கெடக்கணுமா?
தெட்சிணா பேசிக் கொண்டிருகையிலேயே மனசு,
"ஆகா திரும்ப நம்ம டெய்லரே துணி தைக்கப்போறாருண்ணு"மனசு கணக்குப் போட்டது.
"ஒர்க் விசாவும் முடிஞ்சு போச்சும்மா.அங்குட்டு
இப்ப நெறயா தமிழ் ஆளுங்க நமக்குப் பளக்கமாயிட்டாங்க. திரும்ப இந்தியாவுக்குப் போயி
தனிப்பட்ட மொறையில சொந்தமா கட வைக்க பேப்பரெல்லாம் ரெடி பண்ணிகிட்டு வர்ரதுக்கு விவரெமல்லாம்
சொல்லியிருக்காங்க. பட்டப்படிப்பு படிச்சிருந்தா டெய்லருக்கு ஒடனடியா பேப்பரு குடுத்துறாங்க
அம்மா. அப்புடி நெறய டெய்லருங்க அங்க கட போட்டுருக்காங்கம்மா.”
ரொம்ப சீக்கிரம் தப்புக்கணக்குப்போட்ட என் மனசைத்திட்டிக்கொண்டே
"அட நீங்க காலேஜ் படிச்சிருக்கிங்களா தெட்சிணா?" என்று கேட்டேன்.
"இல்லம்மா அம்மாகிட்ட சொல்றதில என்னா இருக்கு?
தற்குறிதாம்மா. கையெளுத்து தமிழ்லயும் இங்கிலீஸ்லயும் போடுவேன் அம்புட்டுதான். அதுக்கெல்லாம்
ஏஜண்ட்டுகள் இருக்கங்கம்மா. அவுங்க அனுப்புன ஆளுங்கள்ளாம் ஓகோண்ணு அங்க இருக்காங்க.
எல்லாத்தையும் ரெடிபண்ணிக்குடுத்திருவாங்க. நான் கட போட்டுட்டா மொள்ள இந்த பயலையும்
இளுத்துப்போட்டுக்கலாம்ணு பாக்குறேன்.”
உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்று நான் நினத்தாலும்
"சரி தெட்சிணா சந்தோஷமா பொயிட்டு வாங்க" அவரை வழி அனுப்பி வைத்தேன்.
கிறிஸ்மஸ் நெருங்குகையில்தான் நான் திரும்பவும்
தெட்சிணாவின் தம்பிக்கடை பக்கம் போனேன். மெஷினில் தெட்சிணாவை பார்க்கவும் எனக்கு ஒரே
ஆசசரியம்!
"என்ன தெட்சிணா இன்னம் இங்க என்னா பண்ணிகிட்டு
இருக்கிங்க?"
“கெழக்க போனாலும் தெக்க போனாலும் நம்ப ஊரு மாதிரி
ஆவாதும்மா" வேதாந்தமாக பேசினார் தெட்சிணா.
"அண்ணைக்கு கபாலி கோயில்கிட்ட என்ன பாத்தப்ப
மலேசியாவுல சொந்தமா பிசினெஸ் போடப்போற விஷயங்கெள்ளாம் சொன்னிங்களே?"
"ஆமாம்மா ஆனா ஒரு சின்ன கடுபடு ஆயிருச்சும்மா.
அம்மாகிட்ட சொல்றதில என்னா இருக்கு? என்ற அவருடைய வழக்கமான முன்னுரையோடு ஆரம்பித்தவர்
சொன்ன கதை இதுதான்.
மலேசியா எம்பசியில அண்ணைக்கு அவுருக்கு நேரடி இன்டர்வியூ.
ஏஜண்ட்டுகள் தயார் பண்ணிக்குடுத்த எல்லா பேப்பரும் ஒரு அட்டாச்சி கேசுக்குள்ள நீட்டா
வச்சிக்கிட்டாரு தெட்சிணா. நல்லா வெள்ளையுஞ் சொள்ளௌமாத்தான் டீக்கா போயிருக்காரு. அவுரு
பேர கூப்பிடவொடனே உள்ள போனாரு. பேப்பரெல்லாத்தையும் காட்டினாரு. அவுருகூட பேசிகிட்டுருந்த
அந்த ஆபிசரு எங்க பி.ஏ. பண்ணினிங்கண்ணு கேட்டிருக்காரு. கொஞ்சம் யோசன பண்ணி மெட்ராஸ்
யுனிவசிட்டியிலங்கண்ணு சொல்லியிருக்காரு. பாரிஸ் கார்னர் போயி தையல் சாமான் வாங்க
21 N பஸ்ஸில ஏறுனா யுனிவர்சிட்டி ஸ்டாப் வரும். தெட்சிணா மனசுல பதிஞ்சு நிண்ணது அது
ஒண்ணுதான். திரும்பவும் கேட்டிருக்காங்க. திரும்பவும் அழுத்தந்திருத்தமா அதையே சொல்லியிருக்காரு.
மெட்ராஸ் யுனிவர்சிட்டி மாதிரி ஆயிரக்கணக்கில இந்தியாவுல இருக்குண்ணு என்னத்தத் தெரியும்
தெட்சிணாவுக்கு!
ஆபீசரு "ஆனா ஒங்க சர்ட்டிபிகேட்ல கர்னாடகா
யுனிவர்சிட்டிண்ணு போட்டிருக்கே”ண்ணு சொல்லிட்டு அவுரு மேலே கொடயவும் மனுசன் தொங்கிப்பொயிட்டாரு.
நெலம போலீசக்கூப்புடுற அளவுக்குப்பொயிடுச்சாம். “அம்மா அந்த ஆபீசரு கால்ல நெடுஞ்சாங்கடயா
வுளுந்து கால கெட்டியாப்புடுச்சுகிட்டேன். அய்யா…. என் பொளப்புல மண்ணவாரிப்போட்டுடாதிங்க
அய்யா…… இப்பத்தான் கலியாணம் பண்ணியிருக்கேன். பெரிய குடும்பமுங்க பொலீசு கீலீசுண்ணு
போச்சுண்ணா மொத்த குடும்பமும் நாண்டுகிட்டு செத்து போவுமுங்க. அய்யா தயவு பண்ணுங்க.
எங்கம்மா மேல சத்தியங்க இனி ஒங்க ஊரு பக்கம் தலய வச்சு படுக்கமாட்டன். என்ன உட்டுடுங்க
சாமிண்ணு கெஞ்சிக்கூத்தாடி தப்பிச்சோம் பொளச்சோம்முண்ணு இண்ணைக்கு இந்த வெடத்துல உக்காந்திருக்கம்மா.
இல்லாட்டி எங்கயாச்சும் கம்பி எண்ணிகிட்டு கெடந்திருப்பேன்" என்றார் எங்கள் பிரிய
தெட்சிணா.